வாழ்க்கை நமக்கு தொடர்ந்து கற்றுத் தந்தபடி இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும் என்று எப்போது நினைக்கிறோமோ, அப்போது நாம் கற்பதை நிறுத்தி விடுகிறோம்.
எனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் எனக்கு வாழ்க்கையில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களின் பட்டியல் மிகப் பெரிது.
அந்த வகையில் நான் மிக அதிகமாக கற்றுக் கொண்ட ஒரு ஆசிரியர் டி.எஸ்.பி சி.பி.விஸ்வநாதன்.
செங்கல்பட்டு பரமசிவம் விஸ்வநாதன் தான் சிபி.விஸ்வநாதன். மதுரையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிந்து சென்னைக்கு வந்தபோது, அவர் இறந்து விட்டார் என்று என் தாயார் சொன்னபோது குற்ற உணர்ச்சி மிகுந்தது. என் வீட்டில் இருந்து முக்கால் கிலோமீட்டர் தான் அவர் வீடு. எனக்கு இருக்கும் மிகுதியான வேலைகள் காரணமாக என்னால் அவரோடு நேரம் செலவிட முடியாமல் போனது என்பதுதான் உண்மை. அவர் ஜனவரி மாதமே இறந்து விட்டார் என்பதை இப்போது தெரிந்து கொண்டது எனது குற்ற உணர்வுக்கு காரணம்.
நான் அவரோடு அமர்ந்து பேச வேண்டும் என்று விரும்புவார். எனக்கோ அதிக நேரம் செலவிட முடியவில்லை.
அமைச்சுப் பணியாளர்களுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தடுப்பு பெர்லினின் சுவர் போன்றது. ஒன்றாக பழகினாலும் கூட அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற எண்ணம் இரு தரப்புக்குமே இருக்கும். இப்போதும் அப்படித்தான்.
எனது சக அமைச்சுப் பணியாளர்களோடு நான் நெருக்கமாக இருந்தாலும் காவல்துறையினரோடான எனது நட்புக்கு எந்த குறைவும் இல்லை. நெருக்கமாகவே இருப்பேன்.
1995ம் ஆண்டுதான் என்று நினைவு. என்னை சென்னையின் புலனாய்வு பிரிவுக்கு முகாம் உதவியாளராக அனுப்பினார்கள். எனக்கு அப்போது 20 வயது.
அந்த கட்டிடம் ஒரு பழைய வெள்ளைக்கார கட்டிடம். க்ரீம்ஸ் சாலை அருகே, வாலஸ் தோட்டத்தில் உள்ளது. இப்போது அந்த கட்டிடம் மணி மகால் என்று அழைக்கப்பட்டு, சினிமா ஷூட்டிங்குகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
1995ல் நான் நகர பிரிவுக்கு மாற்றப்பட்டபோது, பலருக்கு இவன் தாக்குபிடிப்பானா என்று சந்தேகம். ஏனெனில், அந்த பிரிவில் ஒரே அமைச்சுப் பணியாளர் நான் தான். காவல் துறை அதிகாரிகள் மட்டுமே இருப்பார்கள்.
இரண்டு டி.எஸ்.பிக்கள். ஒருவர் நல்லம்ம நாயுடு. மற்றொருவர் கணேசன். இருவருமே கண்டிப்பானவர்கள். ஒரு வருடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். வேலையைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டார் கணேசன். நல்லம்மா நாயுடுவுக்கு வேறு கேம்ப் க்ளர்க் இருந்ததால் அவரோடு உரையாடும் வாய்ப்பு குறைவு. எப்போதாவது “சங்கர் இங்க வாப்பா” என்று அழைத்து வேலை கொடுப்பார். சூழல் இறுக்கமாகத்தான் இருந்தது.
ஆறே மாதத்தில் கணேசன், நல்லமா நாயுடு இருவரும் கூடுதல் எஸ்பி பதவி உயர்வில் வேறு பிரிவுக்கு சென்று விட்டார்கள்.
விஸ்வநாதன் எனக்கு டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இவரோடு அறிமுகம் உண்டு என்றாலும், எனக்கு உயர் அதிகாரி என்பதால் சற்று நடுக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் “சங்கர் வாங்க” என்று காலையில் வந்ததும் அழைத்து என்னை எதிரில் உட்கார வைத்து அவர் உதவி ஆய்வாளராக இருந்தது முதல் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் என்று பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்.
விஸ்வநாதனின் தந்தையார் அந்த காலத்தில் சிறையின் ஜெயிலர். பெயர் “டைகர் பரமசிவம்” அவர் பெயரை சொன்னால் சிறை நடுங்கும். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவரோடு உடன் பிறந்தவர்கள் 8 அல்லது 9 பேர் என்று நினைவு. 2 தம்பிகள். மற்றவர்கள் தமக்கைகள்.
விஸ்வநாதன் சிறுவனாக இருந்தபோதே, அவர் தந்தை இறந்து விட்டார். இவரது பெரிய தமக்கைதான் இவர்களை வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி, திருமணம் செய்து வைத்தார்கள் ஒரு தம்பி உதவி ஆய்வாளராகி, பின்னர் அதை ராஜினாமா செய்து விட்டு வங்கி அதிகாரியாக ஆனார்.
மற்றொரு தம்பியின் பெயர் சிபி.நந்தகுமார். அவர் என்ன வேலை செய்தார் என்று நினைவில்லை. அவருக்கு அந்த காலத்திலேயே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து இறந்து போனார்.
இப்போது போல காவல் துறை அதிகாரிகளுக்கு முறையான வாகனம் கிடையாது. ஒரு ஓட்டை ஜீப்பை கொடுப்பார்கள். அது பாதி நாள் பழுதாகி நின்று கொண்டிருக்கும். வண்டியே இருக்காது. நான் அப்போது ஒரு பஜாஜ் கப் ஸ்கூட்டர் வைத்திருந்தேன். என் அப்பா வாங்கி வைத்து ஓட்டாமலேயே இறந்து விட்டார். நான் 18 வயது ஆனதும் லைசென்ஸ் எடுத்த பிறகு அதில்தான் அலுவலகம் செல்வேன்.
டி.எஸ்.பிக்கு வண்டி இல்லாத நாட்களில் அவரை எனது ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று கீழ்ப்பாக்கத்தில் அவர் வீட்டில் இறக்கி விடுவேன். அவர் என்னை அப்படியே அனுப்பாமல் வீட்டுக்குள் அழைத்து டீ கொடுப்பார்.
டிஎஸ்பியின் மனைவி பெயர் ரமணீஸ்வரி. அவர் அரசுப் பள்ளி ஆசிரியை. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
குழந்தை இல்லாத ஏக்கம் டிஎஸ்பிக்கும் அவரது மனைவிக்கும் இருந்தது. ஒரு கட்டத்தில் டிஎஸ்பி விஸ்வநாதனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் பழக்கமானேன்.
அவரும் நானும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமானோம். அவர் என்னை அவரது மகனாகவே நினைத்திருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. அவர் இல்லத் திருமணங்களில் நான் சென்று வேலை செய்வேன். அவர் தனது மனந்திறந்து பலவற்றை என்னோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
அவர் போலீஸில் சேரும் முன், Industries & Commerce துறையில் இளநிலை உதவியாளராக பணியில் இருக்கையில், அவருக்கு ஏற்பட்ட காதல். குடும்ப வறுமை காரணமாக அவரால் திருமணம் செய்ய முடியாமை. தனது 55வது வயதில் அவர் அந்தப் பெண்ணை சாலையில் சந்தித்து, காரில் இருந்து இறங்கி ஓடி அந்த பெண்ணை சந்தித்தது. அந்தப் பெண்ணின் க்ணவர் ஒரு மூத்த அரசு அதிகாரியாக இருந்தது, அவர்கள் மகள் அமெரிக்காவுக்கு படிக்க சென்றது என அத்தனையையும் எனக்கு சொல்வார்.
நேரடியாகவே கேட்டேன். “சார் Do you feel the same love you had 30 years ago” என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் அவரது அந்தரங்கமாக இருக்கட்டுமே.
எனது காதல்களையும் பகிர்ந்து கொள்வேன். ஒரு break upன் போது என்னை தேற்றியிருக்கிறார். காதல் என்றால் கல்யாணத்தில்தான் முடிய வேண்டும் என்று முட்டாள்தனமாக கருதிக் கொண்டிருந்த காலம் அது.
எனது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கிண்டல் செய்வார். உங்க வயசு கம்யூனிசம் பேசறீங்க என்பார். 18 வயசுல நாத்தீகமும், 20 வயசுல கம்யூனிசமும் பேசாதவன் மனுசனே இல்லை என்று அவர்தான் என்னிடம் சொன்னார்.
விஸ்வநாதன் அப்போது D2 அண்ணா சாலை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்லியிருக்கிறார். இப்போது பத்து காவல் நிலையங்கள் ஒரு காவல் எல்லைக்குள் வரும். அன்று ஒரு காவல் நிலையமே பத்து காவல்நிலையத்தின் பணியைச் செய்யும். அதனால் அந்தப் பகுதியை தினமும் ரோந்து செய்ய வேண்டும். இரவு பத்தி மணிக்கு விஸ்வநாதன் அவருடைய இன்ஸ்பெக்டர் பட் என்பவரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும். இப்போது அண்ணா சாலை சுகுண விலாஸ் கிளப் இருக்கிற இடத்தில் முன்பு ஒரு தியேட்டர் இருந்தது. பெயர் நினைவில்லை.
அந்த தியேட்டரின் பால்கணியில் இன்ஸ்பெக்டர் பட் தினமும் தியேட்டர் ஓனரோடு மது அருந்துவார். ஒருமுறை அந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர் கே.ஆர் விஜயா நடித்த படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் கே.ஆர் விஜயா கிணற்றில் வாளி இறைத்து குளிக்கும் காட்சி ஒன்று உண்டு..
விஸ்வநாதன் இன்ஸ்பெக்டர் பட்டிடம் தினமும் இந்தத் தியேட்டரில் வந்து தான் இரவு ரோந்து விபரங்களை ரிப்போர்ட் செய்வார். விஸ்வநாதன் கே.ஆர்.விஜயாவின் விசிறி. அதனால் அந்த குளியல் காட்சி வரும் நேரத்துக்கு ரிப்போர்ட் செய்ய போய்விடுவாராம். ஒருநாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை, தினமும் இவன் இந்த நேரத்துக்கு வருகிறானே என்று இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்துவிட்டார். “Mr. Vishwanathan, I am able to see why you report to me during night rounds in this particular time. I understand your problem. You are very welcome to come and have a drinking with me while ravishing your dream girl. But do not pay a visit to the gutters of Kodambakkam” என்று கூறியதாக சொன்னார். இப்படி அவரது மேலதிகாரிகள் அவரிடம் நடந்து கொண்ட விதத்தை முன்வைத்தே அவர் என்னிடம் நடந்து கொண்டார் என்பதை புரிந்து கொள்கிறேன்.
எனக்கு ஆங்கில அறிவு வளர்ந்ததில் அவரின் பங்கு பெரிது. ஒரு வழக்கின் புலனாய்வில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் கையால்தான் எழுத வேண்டும். அப்போதெல்லாம் டைப் அடித்த வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
புகார்தாரர், முதல் சாட்சி மற்றும் இரண்டாம் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் 40 பக்கங்கள் வரும். என் கையெழுத்து அழகாக இருக்கும் என்று அவர் கருதியதால், 1+3 வாக்குமூலங்களை கார்பன் வைத்து எழுத வைப்பார். கை வலிக்கும். அவர் அதை உரிய நேரத்தில் புரிந்து கொண்டு, “சங்கர் போயி ஒரு சிகரெட் பிடிச்சிட்டு வாங்க” என்று ப்ரேக் குடுப்பார்.
“நானும் உங்களை மாதிரிதான். சார்மினார் சிகரெட் புடிப்பேன். டைனமைட்னு அதுக்கு பேரு. 1.1.1987. சிகரெட்டை விட்டுட்டேன். நீங்களும் விட்டுடுங்க” என்பார்.
மிக மிக விரைவாக அவர் தனது இறுதி அறிக்கைகளை சமர்ப்பிப்பார். அப்போது வளசராஜன், பி.எஸ்.சேதுராமன் என இரண்டு ஆய்வாளர்கள் இருந்தனர்.
சேதுராமன் கலைஞரின் தூரத்து உறவினர். 89-90 ஆட்சியில் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பார். கலைஞர் பற்றி பல கதைகளை சொல்லுவார். காலை அலுவலகம் தொடங்கும் முன்னரே, ஆய்வாளர்கள், காவலர்கள், நான், டி.எஸ்.பி, மற்றொரு டி.எஸ்.பி மேத்யூஸ் என்று உலக ரகசியங்களையெல்லாம் பேசுவோம். இந்த வானத்தின் கீழ் இருக்கும் யாவற்றையும் குறித்து பேசுவோம், இதர அதிகாரிகள் , ஜெயலலிதா, கருணாநிதி என எங்கள் விவாதம் மிக சுவையாக இருக்கும். மாதம் ஒரு முறை பெரிய ஹோட்டல்களுக்கு லன்ச் அழைத்து செல்வார்கள்.
ஒரு குடும்பம் போலத்தான் அது இருந்தது.
டி.எஸ்.பி வாக்கிங் போகும்போது நடராஜன் என்பவர் பழக்கமானார். அவரும் கே.பாலச்சந்தரும் ஒன்றாக ஏ.ஜி அலுவலகத்தில் பணியாற்றியவர்கள். அவர்கள் மேடை நாடகங்களை அரங்கேற்றுவார்கள். கேபி பின்னாளில் சினிமாவுக்கு சென்றார். அவரும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும் contemporaries. Friends. டி.எஸ்.பி வேலை நாளில் அவரை சந்திக்க சென்றால், என்னையும் அழைத்துச் செல்வார்.
அப்போது ஒரு தி.நகர் கிளப்பில் சந்தியா சீட்டாடுகையில் தன் 12 வயது மகள் ஜெயலலிதாவை அழைத்து வந்ததையெல்லாம் அவர் சொல்லுவார். அப்போது ஜெயலலிதா என்ற குழந்தைக்கு நடந்ததை சொல்லியிருக்கிறார். அந்த சம்பவங்கள், பின்னாளில் ஜெயலலிதா ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதை எனக்கு புரிய வைத்திருக்கிறது.
1995ல் என் தாய்க்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எருக்கஞ்சேரியில் உள்ள பவித்ரா மருத்துவமனையில் செய்ய வேண்டும். 12 ஆயிரம் ஆகும் என்றனர். என்னிடம் அன்றும், இன்றும் சேமிக்கும் பழக்கம் கிடையாது. 10 வருடம் கழித்து ஒரு FD mature ஆகும், அதை செலவு செய்யலாம் என்பது, 10 வருடம் உயிரோடு இருப்போம் என நம்பும் ஒரு மூடநம்பிக்கை என்பதே எனது பார்வை.
அப்போது ஒரு நாள் காலை விஸ்வநாதன் அழைத்தார்.
“சங்கர். உங்க அம்மா சர்ஜரிக்கு செலவுக்கு என்ன பண்ண போறீங்க” என்றார்.
“Friends கிட்ட வாங்கணும் சார்”
“நான் குடுத்தா எப்படி திருப்பி குடுப்பீங்க”
“அடுத்த மாசம் GPF லோன் போடுவேன் சார். அதுக்கு அடுத்த மாசம் சரண்டர் லீவ் வரும்” சார் என்றேன்.
“ஈவ்னிங் வீட்டுக்கு வாங்க” என்று வீட்டுக்கு வரச் சொல்லி 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.
எனது வேலைகள் என்னை அவரோடும், இன்னும் எனக்கு நெருக்கமானவர்களோடும் நேரம் செலவழிக்க விடுவதில்லை.
எனது பணிகள் முக்கியம் என்பதும் புரிகிறது. அவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லையே என்ற வருத்தமும் மேலோங்குகிறது.
இதுதான் வாழ்க்கை. கண் இமைக்கும் நொடியில் காணாமல் போய் விடும். இந்த வாழ்க்கையை சரியாக புரிந்து கொண்டால் அதுதான் salvation. அதுதான் தம்மம். அதுதான் பவுத்தம். அதுதான் தத்துவம். அது ஒன்றே தத்துவம்.
வாழ்வின் புதிய கோணங்களையும், புதிய மனிதர்களையும், புதிய புரிதலையும் எனக்கு அளித்த டிஎஸ்பி விஸ்வநாதனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
சென்று வாருங்கள் அய்யா.