எடுத்தவுடனேயே சொல்லி விடுகிறேன். I missed you all. And you gave me strength. This is to each and everyone who read this piece.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு கசடற எழுதுவது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் நன்றிகள். உச்சநீதிமன்றத்தில் எனக்காக வாதாடிய வழக்கறிஞர் ரோமில் பதக். வழக்கு ஆவணங்களை தயார் செய்வது முதல், அனைத்து வேலைகளையும் செய்த வழக்கறிஞர் அரவிந்த். எனது பிரியமான எதிரிகள் குழந்தைத்தனமாக 4 வழக்குகளை பதிவு செய்தபோது, உரிய நேரத்தில், திறம்பட, எழும்பூர் நீதிமன்றத்தில் வாதாடி, அவ்வழக்குகளில் பிணை பெற்றுத்தந்த, வழக்கறிஞரும் எனது நண்பரும் ஆன ரமேஷ், ப்ராங்க்ளின், முக்கியமாக எழும்பூர் வழக்கறிஞர் சண்முகம், அன்பழகன் வீரப்பன், இந்த பட்டியல் பெரியது.
எனது நண்பர்கள். அவர்களில் ஒருவரும் தங்களை அடையாளம் காண விரும்பமாட்டார்கள். ஒரு சின்ன சம்பவம் மட்டும். எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும், எனது நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரு வாட்ஸப் குழு தொடங்கி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வந்துள்ளனர். வழக்கு செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. 10 நிமிடத்தில் தேவையான தொகை சேர்ந்து விட்டது. ஒரு மாதச் சம்பளக்கார நண்பன், வழக்கு முடியும் தருவாயில், சம்பளம் வந்ததும் 25 ஆயிரம் கொடுத்துள்ளான்.
நீங்கள் அனைவருமே என்னை ஒரு குடும்ப உறுப்பினராகவே நினைக்கிறீர்கள் என்று தெரியும். குடும்ப உறுப்பினர் சிறை செல்வது ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம் போலவே, நீங்கள் அனைவரும் அந்த 63 நாட்களும் என்னை விவாதித்தீர்கள். ஆளும் வர்க்கத்தினரை கண்டித்தீர்கள். ஆளும் வர்க்கத்தினரை திரும்பிப் பார்க்க வைத்தீர்கள்.
சிறையில் மூன்றாவது நாள் உண்ணாவிரதம் இருக்கையில், சாகட்டும் விடுங்கள் என்று ஒரு காவல் துறை அதிகாரி சொல்லியதை மீறி, தகவலை வெளியே சொல்லி, நள்ளிரவில் லாக்கப் திறக்கப்பட்டு, எனக்கு IV fluid ஏற்றப்பட்டு என் உயிரை காப்பாற்றிய அதிகாரிக்கு வெளிப்படையாகத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் உறுதியாக மறுத்து விட்டார்.
என் மீது குண்டர் சட்டத்தில் கையெழுத்திட சங்கர் ஜிவால் முடிவு செய்தபோது, ஊரே சேர்ந்து வேலை செய்தது. எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டனர். ஒவ்வொருவரும், அவரவர்க்கு தெரிந்தவர்களிடம் பேசியிருக்கிறார்கள். குடும்பத்தில் பேசியிருக்கிறார்கள். தமிழகத்தின் உயர் உயர் அதிகாரிகள் அனைவரிடமும் பேசியிருக்கிறார்கள். பல நீதியரசர்கள் பேசியிருக்கிறார்கள். குடும்பம் பின் வாங்கியது.
சுருக்கமாக முடித்து விடுகிறேன். இன்று அல்ல. இவர்களின் நம்பிக்கையிலிருந்து சாகும் வரை வீழக்கூடாது என்ற முடிவை நான் என்றோ எடுத்து விட்டேன். அன்று ஸ்பேசஸில் பேசியதை மீண்டும் கூறுகிறேன்.
உங்கள் அனைவருக்கும் குடும்பம் உண்டு. வேலை உண்டு. உங்களால் என்னை போல சிறை செல்ல முடியாது. உங்களால் அதிகார வர்க்கத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. ஆனால் எனக்கு சமூக இழிவுகள் மீது இருக்கும் அறச்சீற்றம் உங்களிடமும் இருக்கிறது. உங்கள் சார்பாக நான் பேசுகையில் என்னை கொண்டாடுகிறீர்கள். உச்சி முகர்கிறீர்கள். அன்பை பொழிகிறீர்கள். நெகிழ வைக்கிறீர்கள். ஆக, உங்களின் பிரதிநிதிதானே நான். அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரும் போர் நடத்தி வெற்றி கண்டிருக்கிறோம். இது எளிய விஷயம் அல்ல. இது இதுதான் என்று தர்க்கவியல் அறிஞர்கள் போல என்னால் இதை வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. But, ஆளும் வர்க்கத்தை ஒண்டியாளா ஒத்திக்கு ஒத்தி வர்றியா என்று கேட்பது ‘செம்மயா இல்ல’. சம்பவம் செய்வோம்.
தோழர்களே, சிறையில் சிந்திப்பதற்கு நேரம் ஏராளமாக இருக்கும். சிறையில் பீடிக்கு தட்டுப்பாடு இருந்தாலும் எனக்கு குறைவின்றி கிடைத்த பீடியை வைத்துக் கொண்டு விடிய விடிய சிந்திக்கலாம். பகலிலும் சிந்திக்கலாம். சிந்தனையாகவே மாறலாம். நான் அதைத்தான் செய்தேன். ஏறக்குறைய 60 நூல்கள் படித்தேன். செல்போன், இதர பணிகள் எதுவுமே இல்லாமல் சிந்திக்க 2 மாதம். எனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, என்னை கூர்மைப்படுத்தவும், செழுமைப் படுத்தவும் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தேன். சிந்தித்து சிந்தித்து, சிறைக்குள்ளேயே எனது பார்வை கூர்மைப்பட்டிருப்பதை நன்றாகவே உணர்கிறேன். என் எதிரிகள் எனக்கு அற்பமானவர்களாக தெரிகிறார்கள். ஒரு மிகப் பெரிய தெளிவு கிடைத்திருப்பதாக உணர்கிறேன். அதுதான் சவுக்கு 2.0.
வீழ்வேனென்று நினைத்தவர்கள் மத்தியில் ஆயிரம் கரங்களோடு நிற்கிறேன். இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எனது கரங்களே.
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
மற்றவை
அடுத்த ஞாயிறு.