எனக்கு மனோதிடம் அதிகம் என்று சொல்வதற்கு தைரியம் வேண்டும். ஜெயலலிதாவுக்கு அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அதை உறுதிபடுத்திக் கொண்டே வாழ வேண்டியதாக இருந்தது. அதற்கான எல்லா முயற்சிகளையும் அவர் எடுத்தார். தனிமையில் வளர்ந்த ஒரு பெண்ணாக, அம்மாவால் சினிமாவுக்குள் அழைத்துக் கொண்டு வரப்பட்டு, நில் என்றால் நின்றும், ஆடு என்றால் ஆடியும் பாடியும் வந்த ஒரு பெண்ணாக இருந்தார். இப்படி இருந்தவர் தனக்கென சுய அடையாளத்தைத் தேடத் தொடங்கவும் தவறவில்லை. அதற்காக அவர் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அவர் தன்னை இறுக்கிக் கொள்கிறார். பொது வாழ்க்கைக்கு வந்தாக வேண்டும் என்கிற வாய்ப்புகளும் கட்டாயமும் ஏற்படுகிறபோது அவர் மேலும் தன்னை மேலும் சுருக்கிக் கொள்கிறார்.
அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவம் என்பது அவருக்கு எல்லோரிடமும் நிஜ முகத்தைக் காட்டக்கூடாது என்று கற்றுத் தந்திருக்கலாம். அதனால் கடைசி வரை அவர் ஒரு புதிராகவே வாழ்ந்து மறைந்தும் போனார். தான் ஒரு கருணையே இல்லாத ஒரு முரட்டுத்தனமான பெண் என்ற முகமூடியை அவர் விரும்பியே அணிந்து கொண்டிருந்தார்.
அது அவரது மரணம் வரைத் தொடர்ந்தது தான் பரிதாபம். அவரது மரணமும் கூட விசாரணைக் கமிஷன் அறிக்கை வெளிவந்தபிறகும் மர்மமாகவே நீடிக்கிறது. ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியான ஜெயலலிதாவின் மரணத்தை வைத்துக்கூட அவர் கட்சியினரே அரசியல் செய்வது காலத்தின் கோலமே.
அவரது நினைவு நாள் இது தானா என்று அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மக்களும் யோசிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.
இப்படி இறுக்கமாக இருந்து ஜெயலலிதா எதை சாதித்தார்? தைரியமான பெண்மணி என்கிற பெயரை, இரும்புப் பெண்மணி என்கிற பட்டத்தை; அச்சமூட்டும் ஒரு தலைவர் என்கிற பெயரை; சர்வாதிகாரி என்ற பிம்பத்தை;
ஒரு ஆளுமைக்கு இப்படியான இமேஜ் மிகத் தேவை. அலையற்றதாய் தெரியும் கடலின் அடியாழத்தில் தான் சுறாமீன்கள் நீந்தும். அவை எப்போது வேண்டுமானாலும் தனது ராட்சத பல் கொண்டு தாக்க வரலாம் எனும்போது கையில் ஆயுதத்துடன் தான் வலைவீசுபவன் படகில் நிற்க முடியும். அப்படியான ஆயுதம் தான் ஜெயலலிதா எப்போதும் வைத்துக் கொண்டிருந்த இரும்புப் பெண்மணி என்கிற கவசம். அது அவருக்கு சரியாய்ப் பொருந்தியும் போனது.
அது சற்று மிதமிஞ்சியபோது தமிழ்நாடு அதன் பலனை அனுபவித்தது. யாராலும் நெருங்க முடியாத ஒரு கோட்டைக்குள் உட்கார்ந்து கொண்டு இரும்புக் கவசத்தை அணிந்திருக்கும் ஒருவரை யாராலும் நெருங்க முடியாமல் போனது. அதனால் தமிழ்நாடு தெரிந்தும் தெரியாமலும் பட்ட இன்னல்கள் அதிகம்.
ஒரு தலைவருக்கு பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அது அவரது அதிகார ஆளுமையை பாதிப்பதாக இருந்து விடக்கூடாது. ஜெயலலிதாவின் பாதுகாப்பின்மை என்கிற உணர்வு (insecurity) அவரை வெளிப்படைத்தன்மையற்ற ஒருவராய் மாற்றிவிட்டது. ஒரு தலைமைக்கு இருக்க வேண்டிய தைரியம், முடிவெடுக்கும் குணம், புத்திசாலித்தனம் எல்லாம் இருந்தும் அவரது பாதுகாப்பின்மை மனநிலையால் அவரும் நாடும் சேர்ந்து சிக்கலை எதிர்கொண்டோம் என்பது தான் உண்மை.
அதனால் தான் அவருக்கு அடுத்த தலைமையை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் போனது. அப்படி அவர் எவரையேனும் நினைத்திருந்தாலும் அவர்களால் சரியான தலைமையை ஏற்க முடியவில்லை. நிரந்தர பொதுச்செயலாளர் என மற்றவர்கள் துதி பாடும்போது அவர் அதை உள்ளம் குளிர்ந்து எற்றுக்கொண்டார் அவர் இறந்த பின் சில வருடங்களில் அந்தப் பதவியே இல்லாமல் ஆனது. எதுவும் நிரந்தரமில்லை என்பது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.
அவர் இறந்தபிறகு இங்கு நடந்த கூத்துகள் எல்லாம் இறந்த பின்பும் கூட அவர் மீது கோபத்தையே ஏற்படுத்தியது. கட்சியும் ஆட்சியும் ஏலத்துக்கு விடப்பட்டபோது, கட்டுகோப்பாக இருந்ததாக சொல்லப்பட்ட கட்சியின் இலட்சணம் இது தானா என்ற கேள்வி எழுந்தது. தன்னையும், தன் இமேஜையும் தான் பெண் என்பதால் இரும்பாக இருக்க வேண்டிய அவசியத்தையும் மறுபடி மறுபடி அவர் உணர்த்திக் கொண்டு இருந்ததாலேயே கட்சியின் எதிர்காலத்தை அவர் தவறவிட்டிருந்தார்.
அவர் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் குறித்து இத்தனை வருத்தப்பட்டு பேச வேண்டிய அவசியத்தை வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அடுத்த தலைமையை உருவாக்காமல் போன காரணத்தால், சரியான தலைமை இன்றி தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக தத்தளிக்கிறது. குடும்பத்துக்குள் நடக்கும் சொத்துத் தகராறு போல கட்சியின் செயல்பாடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன. எதிர்கட்சி கேள்வி கேட்காமல் இருந்தால் ஆளுங்கட்சி தேன் குடத்தில் கைவிட்டு ருசி பார்க்கும் கதையாக மாறும். அப்படித் தான் மாறிக் கொண்டிருக்கிறது இங்கு.
மரணமடைந்தவர் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது என்பதெல்லாம் தலைமையில் இருந்தவர்களுக்கு பொருந்தாது. ஏனென்றால் அவர்கள் தனி மனிதர்கள் அல்ல, அவர்கள் ஒரு இயக்கத்தின் பிரதிநிதி. வழிகாட்டிகள். அவர்கள் இறக்கும்போது நாடே கதறியழும் அளவுக்கு மனங்களை ஆட்கொண்டவர்கள். அந்தக் கண்ணீருக்கு பொருள் இருக்க வேண்டும். அவர் பெண்ணாக இருந்தார். தலைவராக இருந்தார். இரண்டையும் ஒன்றாக சில நேரங்களில் குழப்பிக் கொண்டார். அதை அவர் செய்திருக்கக் வேண்டியதில்லை. ஜெயலலிதாவுக்கு ஒரு அடையாளச் சிக்கல் இருந்தது.
பெண்களை பெண்களாக பயன்படுத்துகிற ஒரு தொழிலில் இருந்து அவர் அரசியலுக்கு வருகிறார். அவர் வருகிறபோதே விமர்சனங்களையும் எடுத்துக் கொண்டே வருகிறார். இனியும் இப்படியான விமர்சனம் வரும் என்று அவருக்குத் தெரியும். பொது வாழ்க்கைக்கு வரத் தயங்கும் எவரும் அச்சப்படும் ஒரே எதிரி விமர்சனங்கள் தான். குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள்.
இதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் எவரையும் பொதுவாழ்வு கைவிட்டதில்லை. ஜெயலலிதாவின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை அவரது சமகால நடிகர்கள் எவரும் கண்டிருக்க மாட்டார்கள். அப்படியே எதிர்கொண்டாலும் ஆவர்கள் அழுவதற்கும், சொல்லி ஆற்றுவதற்கும் அவர்களைச் சுற்றி சொந்தங்கள் இருந்தார்கள். அப்படி அல்லாத நடிகைகளும், நடிகர்களும் என்ன கதிக்கு ஆனார்கள் என்பதை சரித்திரம் சொல்லிவிட்டது. சிலர் வாழ்க்கையின் இருட்டுக்கு சென்றார்கள், சிலர் காணாமல் போனார்கள். சிலர் மதிப்பிழந்தார்கள். சிலர் மதியிழந்தார்கள்.
ஜெயலலிதாவுக்கு தன் மீது வீசப்பட்ட வார்த்தைகளை எங்கு போய் சொல்லித் தீர்த்திருக்க முடியும்? யாருமற்ற அவர் ‘இனி எவர் வேண்டும் ?” என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடுதான் கடைசி வரை தன்னை நோக்கி ஒரு சுட்டு விரல் நீளும்போதேல்லாம் அதனை புறந்தள்ளவோ, வெட்டி எறியவோ முடிந்திருக்கிறது.
ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும் ? ஜெயலலிதாவுக்கு
புகழ், பணம் இருந்தது. ஆனால் அங்கீகாரம். அவருக்கு வேண்டியிருந்தது அதுதான். அதை ஆவர் அதிகாரமாக பெற நினைத்திருக்கலாம். கதாநாயகியாக ஒரு கட்டம்வரைக்கும் நடிக்கலாம். எம்ஜிஆருக்கு மஞ்சுளாவும் லக்ஷ்மியும் லதாவும் வந்தபிறகு ஜெயலலிதாவின் நிலை? எல்லாம் போகட்டும்; ஓய்வெடுப்போம். அமைதியாக வாழ்வோம், என விட்டுச் செல்ல அவருக்கென ஒரு குடும்பமும் இல்லை. உறவினர்களும் இல்லை. ஜெயலலிதாவோடு இறுதி வரை இருந்ததெல்லாம், தனிமை, தனிமை, தனிமை மட்டுமே.
பலர் கருதுவது போல, ஜெயலலிதா தன்னை பொதுவாழ்வில் வளர்த்துக் கொள்வதற்கு எம்.ஜி.ஆரின் நட்பு உதவியிருக்கலாமே ஒழிய, தனிப்பட்ட வாழ்வில் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆரால் கிடைத்தது துன்பம் மட்டுமே.
எம்ஜிஆரின் ஆதரவில் இருந்தவர் என்பது அவருக்கு எத்தனை தூரம் உதவியது என்பதை விடவும் அதானல் அவருக்கு இழப்புகளும் ஏற்பட்டிருக்கும். அதனை ஈடு செய்வதற்கும் கூட அவர் அரசியலில் இறங்கியிருக்கலாம்.
எம்.ஜி.ஆரோடு நட்பாக இருந்து, அவரோடு கதாநாயகிகளாக நடித்த, சரோஜாதேவி, மஞ்சுளா, நிர்மலா, லதா உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் அழைத்திருந்தால் அதிமுகவில் சேர்ந்திருப்பார்கள். சிலர் சேரவும் செய்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் ஜெயலலிதாவாக ஆகியிருக்க முடியாது.
பின் ஏன் ஜெயலலிதா ஜெயலலிதாவாக ஆனார் ? ஏனென்றால், ஜெயலலிதா தன்னை உலகம் ஒரு நடிகை என வரையறை செய்ததை மீறியவர். கட்டுகளை உடைத்தவர். தடைகளை மீறியவர்.
எந்த விதிகளுக்கும் அடங்காதவர். எந்த அணைகளும் கட்டுப்படுத்த முடியாத ஒரு காட்டாறு. அதனால்தான் ஜெயலலிதா ஒரு Enigma. She will ever remain one.
– அன்றில்