அரசியல்வாதி வேறு. தலைவர் வேறு. தலைவர் பொறுப்புக்கு வராமல் போகலாம். பதவியைத் தொடாமல் இருக்கலாம். அவர் தலைவராக வாழ்ந்து காட்டிவிட்டே நீங்குவார். ஒரு தலைவர் வாழும் காலத்தை விட மரித்த பின் இன்னும் கொண்டாடப்படுவார். பல தலைமுறைகளுக்கு அவருடைய சிந்தனையைத் தந்துவிட்டுப் போவார். அந்த சிந்தனை ஒவ்வொருவராலும் எந்தப்பட்டு அடுத்தத் தலைமுறைக்குப் பரவும். இதற்கு இன்றைய தினத்தின் உதாரணம் டாக்டர். பி.ஆர் அம்பேத்கர். வாழம் காலத்தில் அவர் ஏமாற்றப்பட்டார், தேர்தலில் தோல்வி கண்டார், வஞ்சிக்கப்பட்டார், போராடினார், அயராது எழுந்து நின்றார். இதற்கெல்லாம் எப்படி அவர் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் என்பது அவசியமானது.
நவீன இந்தியா இதோ பிறந்துவிட்டது. அதிகாலை 3.30 மணிக்கு உதித்துவிட்டது, கருப்பு பணம் ஒழியும்போது நவ இந்தியா பிரசவமானது என்று வெற்று ஆருடங்கள் சொல்லிக் கொண்டிருப்பது அல்ல நவீன இந்தியாவை உருவாக்குவது என்பது. அதற்கு ஒரு கனவு வேண்டும். ஆங்கிலத்தில் அதனை Vision என்பார்கள். தொலைதூரப் பார்வை வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மீது மாறாத அன்பு வேண்டும். தன்னை நம்புகிற தொண்டர்கள் மீது மரியாதை வேண்டும். இதற்கெல்லாம் அடிபப்டையில் பக்குவம் வேண்டும். இவை எல்லாம் கொண்ட தலைவர்கள் நமது நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். கொள்கையில் பேதம் இருந்தாலும் அவர்கள் மக்களைக் கொண்டே மக்களுக்காக இயங்கியிருக்கிறார்கள். அவர்கள் தான் இந்தியாவைக் குறித்த கனவு கண்டவர்கள். அவர்கள் வெற்று கோஷம் போட்டதில்லை, ஒருவர் கூட தான் செய்யும் செயலின்போது கேமராவையே பார்த்துக் கொண்டிருந்ததில்லை, ஒருநாள் அணிந்த உடையை மற்றுமொரு நாள் அணிய மாட்டேன் என்று உள்ளூர சபதம் எடுத்துக் கொண்டதில்லை. ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்ததாகச் சொல்லிக் கொண்டே ஏழைகளைக் காவு வாங்கியதில்லை.
தலைவர்கள் தான் கடந்து வந்த பாதையின் முற்களையும் கற்களையும் பின்தொடர்ந்தவர்களுக்காக அகற்றினார்கள். அப்படி அகற்றுகையில் அவர்கள் கைகளில் இரத்தம் கசிந்தது, முட்கள் நிரந்தமாய் ஏறின. அதனை சமூகத்துக்காக தனிமனிதர்களாக தாங்கிக்கொண்டார்கள்.
அம்பேத்கர் தாங்கிய முட்களும் வேதனைகளும் அவர் வாழ்ந்த காலத்தைவிடவும் பின்னாட்களில் பலருக்கும் வலித்தது. அவர் தந்த பாதையில் நடந்துவருகையில் தான் அவர் இட்ட பாதையின் செழுமை புரிந்தது. அந்தப் பாதையை அம்பேத்கர் சாதாரணமாக இடவில்லை.
அவர் தொடர்ந்து வாசித்தார், எழுதினார், பேசினார், பேசியதை செயலாற்றினார். செயலாற்றலின் பலனைப் பெற வேண்டும் என மீண்டும் வாசித்தார். எழுதினார். பேசினார். செயலாற்றினார். இப்படித் தொடர்ந்து தனது வாழ்நாள் முழுக்க, சொல்லப்போனால் அவர் மறைந்த தினத்துக்கு முந்தைய நாள் நடுஇரவு வரை தொடர்ந்து கொண்டே இருந்திருக்க முடியுமானால் அவரை செலுத்தியது எது? தன் வாழ்நாளின் ஒரு நொடி கூட வீணாகாமல் இருக்க வேண்டும் என்று அவர் தன்னை மீண்டும் மீண்டுமாய் பரிசோதனைக் கூடமாக மாற்றியது எதற்காக? தான் தலைவனாக வேண்டும் என்கிற எண்ணத்தினால் அல்ல, தன் இன மக்கள் தலைவர்களாக வேண்டும் என்கிற நோக்கத்திற்காக.
இது மிகையே அல்ல. அவர் விரும்பியது அதைத் தான். தன் தோளுக்கு மீது நின்று என் மக்கள் உலகைக் காண வேண்டும் என்று நினைத்தார். தனக்காக சேர்ந்த தொண்டர்களைக் கொண்டு அவர் எதையும் செய்திருக்க முடியும். ஆனால் அவர் செய்தது அசாத்தியமானது. தொண்டர்கள் சேர சேரச் சேர அவர் தனது கருத்துகளை இன்னும் பரவச் செய்தார். தாய் மொழியில் எழுதுவதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் எழுதும்போது தான் கருத்துகள் உலகளாவிய அளவில் சென்று சேரும் என அவர் கொண்ட பார்வை தொலைநோக்கானது.
அவரது வீட்டு நூலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் புத்தகங்களையும் அவர் பெரும்பாலும் வாசித்திருந்தார். இதனை அவருடைய நூல்களில் அவர் எழுதிய அடிக்குறிப்புகள் எடுத்து சொல்லின. கொலம்பியா பல்கலைக்கழத்த்தில் அவர் படித்தபோது அவர் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை இரண்டாயிரம். அப்போது அவரது வயது 22. சமூகவியல், அரசியல், மானுடவியல், தத்துவம், என பல்துறை புத்தகங்களை வாசித்தே துறைகள் சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டார். அதை ஏன் அவர் செய்ய வேண்டும். அந்த உந்துதலை எங்கிருந்து பெற்றிருப்பார்.?
அம்பேதகர் படித்தார், அதைத் தன்னோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அடுத்து வந்த தலைமுறை மட்டுமே அவரது கவனத்தில் இருந்தது. யாரையுமே படிக்க விடவில்லை என்றால், அம்பேத்கர் எப்படி படித்தார் என்கிற வஞ்சகமான கேள்விக்கான பதிலை அம்பேத்கரின் நிழலைக் கூட தீண்ட முடியாதவர்களால் கண்டு கொள்ள முடியாது. உயர்சமூகத்தில் ஒருவர் படிக்கையில் அது அவருக்கான வசதியும் வாய்ப்புமாகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்தவர் பெறும் கல்வி அவர் சமூகத்துக்கானது. இதை தொடக்கி வைத்தவர்களில் ஒருவராக இருந்தார் அம்பேத்கர். அப்படி ஒன்றும் அவரை சாதரணமாக கல்வி கற்க வைத்துவிடவில்லை அந்த சமூகம்.
அவர் தலைமுறையில் ஒடுக்கப்பட்டவர்களில் இவரைப் போல மேல்படிப்பு வரைக்கும் வந்தவர்கள் மிகக்குறைவு. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றதும் அந்த வாய்ப்பினை அவர் மேலும் விரிவுபடுத்துகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது புத்தக வாசிப்பு. அவர் தனக்காக மட்டுமல்ல தன் சமூகத்துக்காகவும் வாசித்தார். எழுத்தின் மகிமைத் தெரிந்ததாலேயே எழுதினார். அவர் எழுதியதில் நமக்குக் கிடைத்தவை குறைவு தான். பராமரிப்பு இல்லாமலும் அவர் புத்தகதுக்கென ஒரு நினைவு நூலகம் தொடங்குவதில் அரசாங்கத்துக்கு இருந்த மெத்தனத்தாலும் நாம் இழந்தது அம்பேத்கரின் பல சிந்தனைகளை.
காந்தியும், நேருவும் வாழ்ந்த காலத்திலும் , மறைந்த பின்பும் அவர்கள் நூல்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு நினைவு இல்லங்களில் பத்திரப்படுத்தப்பட்டன. பதிப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கின. யாருக்கும் குறையாமல் இன்னும் செழுமையான கருத்துகளை எழுதிய அம்பேத்கரின் நூல்கள் அவர் மறைந்த பிறகு மாபெரும் போராட்டங்களுக்குப் பிறகே தொகுக்கப்பட்டன. அவரே எழுதிய அவரது சுயசரிதையான Waiting for Visa முதல் பதிப்பு கண்டது 1990ல் தான். வேற்றுமையைக் களைய போராடிய ஒரு தலைவரின் புத்தகத்தில் தான் இத்தனை வேற்றுமையை இந்த நாடு பாராட்டியிருக்கிறது.
அவர் தன் கைப்பட எழுதி அச்சில் பார்க்க்க வேண்டும் என்று விரும்பியிருந்த புத்தகங்கள் பலவும் அவர் வாழ்ந்த காலத்தில் அச்சேறவேயில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து எழுதினார். இந்த சமூகத்தில் சமூக நீதியை நியதியாக்க வேண்டுமானால் அதற்கு சிறந்த ஆயுதமாக அவர் பயன்படுத்தியது அறிவைத் தான். அதைக் கூர்மையாக்க அவர் அனைத்து வழிகளையும் கைக்கொண்டார். தான் வாழ்ந்த காலத்தில் சில நூல்கள் அச்சேறாது என்ற நிலை வந்தபிறகும் கூட அவர் எழுதுவதை நிறுத்தவில்லை என்பது தான் முக்கியமானது. மேடையேறித் தான் பேசும் பேச்சுகள், செய்யும் செயல்கள் இவை இரண்டுக்கும் காலக்கெடு உண்டு. ஆனால் எழுத்துக்கு மட்டும் தான் காலத்தை விஞ்சி நிற்கும் என்பதை அறிந்திருந்தார். தனது சிந்தனையை, புத்தகங்களின் மூலம் கூர்திட்டிக் கொண்ட ஞானத்தை அவர் சேகரித்துத் தந்தது எழுத்துகளில் தான். என்றைக்கேனும் இந்தப் புத்தகங்கள் அச்சேறும் , இந்தத் தேசம் குறித்து அவர் கண்ட கனவுகள் மற்றவர்களுக்கு போய்ச்சேரும், அவர்கள் மனதிலும் செவியிலும் தான் உரையாடுவோம் என்கிற திடகாத்திர நம்பிக்கை இருந்ததாலேயே அவரால் இத்தனை எழுதியிருக்க முடிந்தது.இந்த நேரத்தில், இந்த நாளில் அவருடைய சிந்தனையை பற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அவர் எழுத்தை நம்பியமைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதோடு அந்த எழுத்துக்களை பாதுகாக்க தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை செழவழித்த அவரது தொண்டர்களுக்கும் நன்றியைப் பகர வேண்டும்.
ஏனெனில் எழுத்தை அறிந்து அறிவித்தவனை நாம் இங்கு தெய்வம் என்கிறோம்.