இந்தியாவின் ஒப்பு நிகரற்ற தலைவர் என அம்பேத்கரைச் சொல்ல வேண்டும். இதனை முன்பே அறிந்திருந்தாலும் சிறையில் அவர் எழுதிய, அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாசிக்கும்போது நன்றாகத் தெரிந்தது.
அம்பேத்கர், தன்னை சந்தைப் படுத்திக் கொள்ள அறியாதவர். 24 மணி நேரமும் அவரது சிந்தனை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனது அறிவை இச்சமூகத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், இச்சமூகத்துக்காக உழைக்க வேண்டும், இருக்கும் வாழ்நாளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே.
அம்பேத்கர் பாரதியாரைப் போலவே, அவர் வாழ்நாளில் கொண்டாடப்படவே இல்லை. அம்பேத்கரை கடலூர் சிறையில் படித்தபோது, எனக்கு வெட்கமும் அவமானமும் ஏற்பட்டன. அவரை ஒரு சட்டகத்துக்குள் வைத்துப் பார்ப்பவர்கள் மீது கோபம் ஏற்பட்டது.
அம்பேத்கருக்கு நீரிழிவு நோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. அதோடு தான் அவர் எழுதினர். பொது இடங்களில் பேச வாய்ப்பு கிடைக்கையில் அதைப் பயன்படுத்தினார்.
இடதுசாரிகள் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் அம்பேத்கரை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சாதி என்ற சிக்கலை கண்ணில் பார்க்கவே மறுத்தவர்கள் இடதுசாரிகள். அம்பேத்கர், கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்ப்பனீயத்தின் நீட்சி என்றே பார்த்தார். இருவருக்கும் ஏழாம் பொருத்தம். விளைவு, இடதுசாரி முகாம்களில் அம்பேத்கர் பரிந்துரைக்கப்பட மாட்டார்.
அடுத்தது வலது சாரிகள். இவர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம் அம்பேத்கர் இந்து கோட் சட்டத்தை அறிமுகப்படுத்தியதும், சனாதன சக்திகளிடமிருந்து இந்தியா முழுக்க கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆர்.எஸ்.எஸ் இதற்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது. சாமியார்கள் கூடி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். வேறு வழியேயின்றி, அம்பேத்கர் சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
வலது சாரிகள் செய்த போராட்டத்தால் காங்கிரஸ் தன்னுடைய பங்கை அம்பேத்கருக்கு எதிராகச் செய்தது. அம்பேத்கர் தன் பதவியை எப்போது ராஜினாமா செய்வார் என்று காங்கிரஸ் கட்சியே எதிர்ப்பார்த்து காத்திருந்திருக்க வேண்டும். அவர் முடிவை மாற்ற வைக்க ஒருவர் கூட முயற்சி செய்யவில்லை. நேரு உட்பட. ஏன் நேரு அம்பேத்கரை ராஜினாமாவை கைவிட வற்புறுத்தவில்லை என்பதை பின்னொரு நாளில் பார்ப்போம்.
இப்படி எந்தக் காட்சியின் ஆதரவும் இல்லாம வெறும் எதிர்ப்புகளால் தன்னை புடம் போட்டுக் கொண்டவர் அம்பேத்கர்.
தனக்கு வரும் எதிர்ப்புகளை தனது எழுத்தின் மூலமும், செயல்பாடுகளின் வழியாகவும் எதிர்கொண்டவர்.
அம்பேத்கரின் பல நூல்கள், குறிப்பாக அவரது Annihilation of Caste நூலை அவரது மாஸ்டர் பீஸ் எனலாம். இந்தியாவின் சிந்தனையை மாற்றுவதற்காக எழுதப்பட்ட நூல் இது. ஆனால் அம்பேத்கரைப் பொறுத்தவரை அவரது Buddha and his Dhamma தான் அவருக்கு magnum opus.
அம்பேத்கர் அவர் வாழ்நாளில் பதிப்பிக்காமல் போன பல புத்தகங்களில் ஒன்று Riddles in Hinduism. இதர புத்தகங்கள்
1) Buddha and his Dhamma
2) Riddles in Hinduism
3) Riddle of Rama and Krishna
4) Riddle of Trimurti
5) Buddha and Karl Marx
6) Revolution and Counter Revolution in Ancient India
7) Riddle of Women
இந்நூல்களை அம்பேத்கர், தட்டச்சு செய்த அல்லது கையெழுத்து பிரதியாகவே வைத்து விட்டு போய் விட்டார்.
அம்பேத்கரின் புத்தகங்களை படிக்க படிக்க, இவ்வளவு பெரிய அறிவுஜீவியா, இவரை ஏன் இன்னும் உள்வாங்காமல் விட்டோம் என்ற மிகுந்த குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அருந்ததி ராய் அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதிய the Doctor and the Saint, என்ற புத்தகத்தையும் படித்தபோது, அம்பேத்கரின் மீதான மதிப்பு வியப்பாக மாறியது.
நவயானா பதிப்பகம், அம்பேத்கரின் Riddles of Hinduism புத்தகத்தை, காஞ்சா அய்லய்யாவின் கட்டுரையோடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்தியாவின் மதிப்புமிக்க கட்டுரையாளரும், ஊடகவியளாளருமான Prathap Bhanu Metha, இந்நூல் குறித்து, “A searing challenge to the entire intellectual order” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்துமதத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீயம், இதர மதங்கள் எப்படி காலப்போக்குக்கு ஏற்றாற்ப்போல தங்களையும் திருத்திக் கொள்வார்கள் என்றே 1935 வரை எதிர்ப்பார்ப்பில் இருந்தார். ஆனால், அவரோடு விவாதிப்பதற்கோ, இந்து மதத்தில் சீர்திருத்தத்தை உருவாக்க ஒருவர் கூட முன்வரவில்லை என்பதுதான் வேதனை. இதையடுத்தே அம்பேத்கர் தனது போக்கை, அணுகுமுறையை மாற்றுகிறார்.
அவரது Annihilation of Castes புத்தகத்தில் அம்பேத்கர் இவ்வாறு எழுதுகிறார்.
You must not forget that if you wish to bring about a breach in the system (varna), you have got to apply dynamite to the Vedas and the Shastras, which deny any part to reason; to the Vedas and Shastras, which deny any part to morality. You must destroy the religion of the Shrutis and Smritis. Nothing else will avail.
வர்ணாஸ்ரம முறையை உடைக்க வேண்டுமென்று விரும்பினால், வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வெடி வைத்து தகர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. வேதங்கள், எவ்விதமான நியாய தர்மத்துக்கும் கட்டுப்படுபவை அல்ல. ஸ்ருதிகளும், ஸ்மிருதிகளும் அழிக்கப்பட வேண்டும். வேறு வழியே இல்லை.
இனி “இந்து மதத்தின் புதிர்கள்” புத்தகத்திலிருந்து.
“இந்தியா பல்வேறு மதங்களைக் கொண்டது. ஒரு பார்ஸியிடம் நீ ஏன் பார்ஸி என்று கேட்டால், நான் ஜோராஷ்டிரரை பின்பற்றுகிறேன். கிறித்துவரிடம் கேட்டால், நான் ஏசு கிறித்துவை பின்பற்றுகிறேன் என்பார். ஒரு இஸ்லாமியரும், நான் இஸ்லாத்தையும், குரானையும், நபிகளையும் பின்பற்றுகிறேன் என்று கூறுவார்.
ஒரு இந்துவிடம் நீ ஏன் இந்து என்று கேட்டால் என்ன சொல்வார் ? எந்த கடவுளை வழிபடுகிறாய் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு கடவுளை சொல்வர். ஒருவர் சிவனை வழிபடுவார். ஒருவர் விஷ்ணுவை. ஒருவர் ராமனை. ஒருவர் கிருஷ்ணரை. ஒருவர் காளியை, மற்றொருவர் லட்சுமியை. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை சொன்னால், அவர்கள் பட்டியலிடும் கடவுள்களின் பெயர்கள் எல்லையில்லாமல் நீண்டுகொண்டே போகும்.
ஒரு இஸ்லாமியரிடம், உங்கள் மதத்தின் பழக்கவழக்கங்கள் என்ன என்று கேட்டால் அவர் இஸ்லாத்தின் பழக்கவழக்கங்களை பட்டியலிடுவார். ஒரு இந்து எப்படி பட்டியலிடுவார் ? ஒருவர் மாமிசம் உண்பார். மற்றொருவர் சைவம் என்பார். ஒருவர் அமாவாசைக்கு படையலிடுவார். ஒருவர் ஆட்டை பலி கொடுப்பார். அதே போல பெண்களை இந்து மதம் நடத்தும் விதம் பகுதிக்கு பகுதி மாறுபடுகிறது. இதில் எங்கே இந்து மதம் உள்ளது ? ஒரே மாதிரியான, சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கடவுள்கள், புனித நூல்கள் இல்லாத ஒரு மதம் எப்படி ஒரே மதமாக ஆக முடியும் ? ஒரு கிறித்துவரோ, ஒரு இஸ்லாமியரோ, ஒரு பார்சியோ, எளிமையாக அளிக்கும் பதிலை ஏன் ஒரு இந்துவால் அளிக்க முடியவில்லை ?”
இப்படியான கேள்விகளை அம்பேத்கர் பொதுவாக, பொத்தாம் போக்கில் எழுப்பவில்லை. வேதங்கள், உபனிஷத்துகள், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் இந்து மதம், சனாதனம் என்று கூறப்படும் அனைத்து நூல்களையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே இவ்வாறு கூறுகிறார்.
உலகம் எப்படி தோன்றியது என்பதையே, ஒவ்வொரு வேதமும், ஒவ்வொரு வகையில் எப்படி முரணாக வர்ணிக்கின்றன என்பதை விளக்கும் அம்பேத்கர், கிரேக்க தத்துவங்களை பின்பற்றியும் சில வேதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார். பார்ப்பனர்கள் ஏன் அசைவம் உண்டார்கள், விலங்குகளின் இறைச்சியை எப்படி விருந்தின் ஒரு அத்தியாவசிய அங்கமாக வைத்திருந்தார்கள், எந்த விலங்கை உண்ணலாம், எதை உண்ணக் கூடாது என்பதையும், மது வகைகளை எப்படி படைப்பது எனவும், வேதங்களில் உள்ளனவற்றை அம்பேத்கர் பட்டியலிடுகிறார்.
அந்நூலில் எனக்கு மிகவும் பிடித்தது, பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டுள்ள Riddles of Rama and Krishnaதான்.
அம்பேத்கரின் ‘புத்தரும் அவர் தம்மமும்’ உள்ளிட்ட நூல்களை மகாராஷ்ரடிர அரசு 1987ம் ஆண்டு பதிப்பித்தபோது, அவரது முழுத் தொகுப்பில், நான்காவது பகுதியில், இந்து மதத்தின் புதிர்கள் இருந்தது. மராட்டியத்தின் சிவ சேனா இப்புத்தகத்தை பொது வெளியில் எரித்தது. அஞ்சிய அரசு, அம்பேத்கரின் முழுத் தொகுப்பில் இருந்து, “ராமர் மற்றும் கிருஷ்ணரின் புதிர்கள்” என்ற பகுதியை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
மராட்டியமெங்கும் தலித்துகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்பகுதியை மீண்டும் பதிப்பித்த மராட்டிய அரசு, “இப்பகுதியில் உள்ள அம்பேத்கர் எழுத்துக்களோடு உடன்படவில்லை” என்ற அறிவிப்போடு வெளியிட்டது.
காந்தி தனது சுயசரிதையில், “ராமநாமத்தை மனதுக்குள் ஜெபிப்பது தனக்கு மாபெரும் சக்தியை வழங்குகிறது” எனவும், இந்தியாவில் ராமராஜ்யம் அமைய வேண்டும் என்றும் பல இடங்களில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப்பட்ட அரசன் வரலாற்றில் புகழ் பெறுகிறான் என்று பல சான்றுகள் உள்ளன. ராமன், பின்பற்றத்தக்க, வழிபடத்தக்க அரசனா, அவன் கடவுளாக நம்மை வழிநடத்த தகுதி படைத்தவனா என்பதை ராமாயணத்திலிருந்தே பார்ப்போம்.
வாலி வதம் கதையை எடுத்துக் கொள்வோம். வாலியும் சுக்ரீவனும் சகோதரர்கள். ஒரு சண்டையில் வாலி இறந்து விட்டான் என்று அவசரப்பட்டு புரிந்து கொண்ட சுக்ரீவன் தன்னை கிஷ்கிந்தாவின் அரசனாக முடிசூட்டிக் கொள்கிறான். உண்மையில் இறந்தது வாலி அல்ல, மாயாவி என்கிறவன். ஆனால் நடந்தது என்ன என்று சரிபார்க்காமல் சுக்ரீவன் அந்த நாடான கிஷ்கிந்தையின் அரசனாகிறான். வாலிக்கு அங்கதன் என்ற மகன் இருக்கிறான். அவனே வாலிக்கு அடுத்த வாரிசு. ஆனால், சுக்ரீவன் பதவியை அபகரித்துக் கொள்கிறான்.
சுக்ரீவனை விரட்டி விட்டு விட்டு வாலி மீண்டும் கிஷ்கிந்தையின் அரசனாகிறான். இருவரும் பரம எதிரியாகிறார்கள். இந்த நிலையில்தான், வாலியைக் கொன்று, கிஷ்கிந்தையின் அரசனாகத் துடிக்கும் சுக்ரீவன், சீதையை காணாமல் தேடியலையும் ராமனையும் அவன் சகோதரனையும் பார்க்கிறான். வாலியைக் கொன்று கிஷ்கிந்தையை பெற ராமன் உதவி செய்தால், சீதையை கண்டுபிடிக்க உதவி செய்வதாக சுக்ரீவன் ஒரு யோசனையை முன்வைக்க, சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுகிறது. சுக்ரீவனும், வாலியும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதால், சுக்ரீவன் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மாலையை அணிந்து கொள்வது என்றும், சுக்ரீவனும், வாலியும் சண்டையிடுகையில், மறைந்திருந்து வாலியை கொலை செய்கிறான் ராமன்.
இது ஒரு கோழைத்தனமான செயலா இல்லையா ? ராமனுக்கும் வாலிக்கும் ஏதாவது பஞ்சாயத்து உள்ளதா என்ன ? ராமன் கிட்டத்தட்ட ஒரு கூலிப்படையாக அல்லவா செயல்பட்டுள்ளான் ? உயிர் பிரியும் முன் தன் வாதத்தை எடுத்து வைக்கும், வாலி, “வேறு ஒருவரோடு போரிட்டுக் கொண்டிருக்கையில், மறைந்திருந்து என்னை கொன்றதன் மூலமாக போரின் விதிகளை மீறியதோடு மட்டுமல்லாமல், எவ்விதமான முன் பகையும் இல்லாமல் கொன்றதன் மூலமாக, ராமன் ஒரு மனிதனுக்குரிய நன்னடத்தையிலிருந்து தவறி விட்டான். மேலும், போர் அறிவிப்பு செய்யாமலேயே, மறைந்திருந்து என்னைக் கொன்றது ஒரு கோழைத்தனமான செயல்.
குரங்குகளின் மாமிசத்தை மனிதன் புசிக்கக் கூடாது என்று வேதங்களில் சொல்லியிருப்பதால், வேட்டையாடுவதாகவும் எனது கொலையை கருத முடியாது. ராமன் ஒரு கோழை. என்னோடு நேரடியாக போரிட்டிருந்தால் நான் ராமனை வீழ்த்தியிருப்பேன்.
மேலும் ராமன் ஒரு முட்டாள். அவன் மனைவியை மீட்க சுக்ரீவனைப் போன்ற ஒரு கோழையின் உதவியைக் கேட்காமல் என்னிடம் உதவி கேட்டிருந்தால் நானே சீதையை மீட்டுத் தந்திருப்பேனே” என்று கூறுகிறான் வாலி. இப்படி ஒரு கோழையை எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும் ?
ராமன் சீதையை எப்படி நடத்தினான் என்று பார்ப்போம். சுக்ரீவன் மற்றும், அனுமன் உருவாக்கிய படைகளின் உதவியோடும், அங்கேயும், குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, ராவணனின் தம்பி விபீஷணனின் உதவியோடு ராவணனை கொல்கிறான் ராமன். மனைவியை பிரிந்து, மனைவிக்காக இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்த ஒருவன் என்ன செய்ய வேண்டும் ? கடத்தப்பட்ட தனது மனைவியைத்தானே முதலில் பார்க்க வேண்டும் ?
ஆனால் ராமன், அடுத்து செய்வது என்ன தெரியுமா ? விபீஷணனை இலங்கையின் அரசனாக்கி நடத்தப்படும் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கிறான். மீண்டும் அனுமனை சீதையை சந்திக்குமாறு தூதனுப்புகிறான். அவளிடம், தானும், லட்சுமணனும், சுக்ரீமனும் சுகமாக இருப்பதாகவும், ராவணனை கொன்று விட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறான். சீதையை சந்திப்பதை விட, ராமனுக்கு முக்கியமாக தோன்றியது, சுக்ரீவனின் பட்டாபிஷேகமே. சரி அனுமனிடம், சீதையை அழைத்து வா என்றாவது ராமன் சொன்னானா ? ‘நாங்கள் சுகமாக இருக்கிறோம்’ என்ற தகவலைத்தான் சொல்கிறான்.
அனுமன் சீதையை ராமனிடம் அழைத்துச் செல்கிறான். சீதையை சந்தித்த ராமன் இவ்வாறு கூறுகிறான்.
“எனது எதிரியும், உன்னை கடத்தியவனையுமான ராவணனை கொன்று, உன்னை பரிசாக பெற்றுள்ளேன். எதிரியை தண்டித்து இழந்த எனது பெருமையை மீட்டு விட்டேன். எனது அசுர பலத்தையும், வீரத்தையும் மக்கள் பார்த்து விட்டனர். எனது வீரத்துக்கு பரிசு கிடைத்து விட்டது. எனக்கு ஏற்பட்ட இழுக்கை துடைத்தெறிய வேண்டியது எனது கடமை. அதற்காகவே இலங்கை வந்தேன். உனக்காக அல்ல.”
இப்படி சொல்லிவிட்டு ராமன் அடுத்து கூறுகிறான். “உனது நடத்தையில் சந்தேகப்படுகிறேன். ராவணனால் உனக்கு ஏதோ நேர்ந்திருக்குமோ என அஞ்சுகிறேன். உன்னைப் பார்ப்பதே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ஜனகனின் மகளே நீ எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். உன்னைப்போல ஒரு அழகியை நேரில் பார்த்த ராவணன் அமைதியாக இருந்திருப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை”.
சீதை ராமனை நோக்கி, “ஒரு வீரதீரம் மிகுந்த இளவரசனான நீ, செவிகளுக்கு வலிகளைத் தரும் வார்த்தைகளை பேசும் அருவருப்பான ஒரு ஆணைப் போல, எப்படி என்னிடம் இப்படி பேச முடியும் ? என்னைப் பற்றி உண்மையிலேயே நீ அறிந்தவனாக இருந்தால் இப்படி பேச மாட்டாய். என் விருப்பத்தை மீறி வேறொருவன் என்னை தொட முயன்றால், அதை என்னால் தடுக்க முடியாது என்பதை நீ அறிவாய். எனது காதலையும், நமது அன்பையும் நீ புரிந்து கொள்ளாதவனாக இருந்தால் நான் தொலைந்து போனவளாய் ஆவேன்.
என்னைப் பார்க்க அனுமனை அனுப்பியபோதே ஏன் இளவரசனே நீ என்னை கண்டிக்கவில்லை. அப்போதே கண்டித்திருந்தால் நான் அந்த குரங்கு அரசனின் முன்பாகவே உயிரை விட்டிருப்பேனே. இந்தப் போருக்கான அவசியமே இருந்திருக்காதே. உனக்காக போரிட்டு பலர் உயிரிழந்திருக்க வேண்டியிருக்காதே.
மனிதர்களில் புலியைப் போன்றவனே, நான் ஒரு பெண் என்பதால் ஒரு சாதாரண அற்ப மனிதனைப் போல உனது கோபம் என் மீது திரும்புகிறது.”
சீதையிடம் தனது கற்பை நிரூபிக்க ராமன் உத்தரவிட்டதும், சீதை தீக்குளிக்கிறாள். பின்னர் அவளை ஏற்றுக் கொண்ட ராமன், சீதையை அயோத்திக்கு அழைத்து வருகிறான்.
சில நாட்களில் சீதை கருவுறுகிறாள். அயோத்தி மக்கள், சீதையின் குழந்தை ராமனுடையதா என்று சந்தேகத்தை எழுப்புகிறார்கள். இந்த வதந்தி ராமனின் காதுகளை வந்தடைகிறது. ராமனுக்கு மிகுந்த அவமானம் ஏற்படுகிறது. ஒரு அரசனாக ராமன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால், ராமன் தனது சகோதரர்களை அழைக்கிறான். வதந்தி குறித்து சொல்கிறான்.
“சீதை தனது புனிதத்தை ஏற்கனவே நிரூபித்திருந்தாலும், இந்த அவமானத்தை என்னால் தாங்க முடியவில்லை. ஒரு மனிதனுக்கு மானமே பெரிது என்று பெரியோர் கூறியிருக்கின்றனர். எனது மானத்துக்கு கேடு விளையுமென்றால் நான் உங்களைக் கூட கைவிடுவேன். அப்படி இருக்கையில், சீதையை கைவிட நான் தயங்க மாட்டேன்” என்று கூறுகிறான் ராமன்.
சீதை ஒரு பெண். அவளுக்கென்று ஒரு மனது இருக்கிறது. சீதை எனது மனைவி. ஊரில் ஆயிரம் சொன்னாலும், என் மனைவியை நான் நம்புகிறேன் என்று ராமன் சொல்லவேயில்லை. இந்த வதந்தி குறித்து, சீதையிடம் ராமன் விவாதிக்கவில்லை. தன் சகோதரர்களிடமே விவாதிக்கிறான்.
மேலும், சீதையை விரட்டி விட முடிவெடுத்த ராமன், அதை நேரடியாக சீதையிடம் சொல்ல துணிவற்றவனாகவும் இருக்கிறான். ஒரு நாள் சீதையை அழைத்து, ‘உனக்கு நிறைவேறாத ஆசை உள்ளதா’ என்று கேட்கிறான். ஒரு முனிவரின் ஆசிரமத்தில், பழங்களை உண்டுகொண்டு ஒரு இரவாவது வாழ வேண்டும் என்று கூறுகிறாள் சீதை.
லட்சுமணனை அழைத்த ராமன், சீதையை, காட்டுக்குள் விட்டு வருமாறு உத்தரவிடுகிறான்.
காட்டுக்குள் விடப்பட்ட சீதை, வால்மீகியின் ஆசிரமத்துக்குள் தஞ்சமடைகிறாள். சீதை என்னவானாள் என்பது பற்றி ராமனுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை. சீதைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. லவா மற்றும் குசா என்று பெயரிடப்பட்ட அக்குழந்தைகள் வால்மீகியின் மேற்பார்வையில் வளர்கின்றன.
12 ஆண்டுகள் கழித்து, அயோத்திக்கு வரும் லவா மற்றும் குசா, ராமாயண கதையை ராமன் முன்னிலையில் பாடுகிறார்கள். யார் இந்த குழந்தைகள் என்று ராமன் வினவ, சீதைகளின் பிள்ளைகள் என்று கூறப்படுகிறது. இப்போது கூட சீதையை அழைத்துக் கொள்ள ராமனின் மனம் ஒப்பவில்லை. அந்த இரண்டு குழந்தைகளை அழைத்து, “உங்கள் தாய் புனிதவதியாக இருந்தால், அவள் புனிதத்தை, சான்றோர் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும் என்று உங்கள் குருநாதர் வால்மீகியிடம் கூறுங்கள்” என்று தன் குழந்தைகளிடமே கூறுகிறான் ராமன்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், சீதை அவ்வாறு தன் புனிதத்தை நிரூபித்தால், அவளை சேர்த்துக் கொள்ளுகிறேன் என்று ராமன் கூறவில்லை என்பதே. “என் மனதில் ராமனைத் தவிர வேறு யாரையுமே நினைக்காத நான் புனிதமானவள் என்றால், இந்த பூமி பிளந்து என்னை ஏற்றுக் கொள்ளட்டும்” என்று முனிவர்கள், தேவர்கள் முன்னிலையில் சபதமிடும் சீதையை பூமி பிளந்து ஏற்றுக் கொள்கிறது.
ராமனின் இந்த நடத்தையை இன்றைக்கு மட்டுமல்ல; சீதா உட்பட எந்தக் காலத்திலும் பெண்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் இல்லையா ?
ஒரு சிறந்த அரசுதான் ராம்ராஜ்யம் என்றார் காந்தி. ராமனின் ராஜ்யம் எப்படி இருந்தது என்று அம்பேத்கர் கூறுகிறார்.
அயோத்தியில், ராமனின் ஆட்சியில் நிர்வாகத்தை கவனித்துக் கொள்வது அனைத்தும் ராமனின் சகோதரன் பரதனே. ராமனுக்கு என்ன வேலை ?
காலை முதல் மதியம் வரை பூஜை புனஸ்காரங்கள். மதியத்துக்கு மேல் அந்தப்புரம். அரண்மனைக் கோமாளிகளோடு கேளிக்கை. கேளிக்கை போர் அடித்தால் அந்தப்புரம். அந்தப்புரம் அலுத்தால் கேளிக்கை. மதுவும், மாமிசமும் ராமனுக்கு பிடித்தமான உணர்வு என்று ராமாயணத்தின் உத்தர காண்டத்தில், சர்கா 42ல் வால்மீகி குறிப்பிடுகிறார்.
ராமனின் அந்தப்புரத்துக்கு, பல நாடுகளில் இருந்தும், அப்சரஸ், ஊரகை, கின்னாரி போன்ற அழகிகள் அழைத்து வரப்பட்டனர் என்கிறார் வால்மீகி.
ராமன் தனது ஆட்சிக் காலத்தில் நீதி பரிபாலனம் செய்தது, ஒரே ஒரு நேர்வில்தான். அது என்னவென்று பார்ப்போம்.
ஒரு நாள் ஒரு பார்ப்பனர் ராமனின் அரண்மனைக்கு வந்து ராமனை ஏசுகிறார். அழுகிறார். சாபமிடுகிறார். எனது ஒரே மகன் இறந்து விட்டான். உனது ராஜ்ஜியத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அதனால்தான் என் மகன் இறந்து விட்டான் என்று கூறி, அரண்மனை முன்பாக போராட்டத்தில் ஈடுபடுகிறார். பதட்டமடைந்த ராமன், உடனடியாக 8 ரிஷிகள், மற்றும் நாரதனோடு விவாதிக்கிறான்.
ராமனின் குடிமக்களில், சூத்திரர்களில் ஒருவனான சம்புகன் என்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே தவம் செய்ய முடியும் என்ற விதியை மீறி தவம் செய்து சொர்க்கத்தை அடையப் போகிறான் என்றும், அதனால்தான் அந்த பார்ப்பன பெரியவரின் மகன் இறந்தான் என்றும் தெரிய வருகிறது. சம்புகனைத் தேடி ராமன் விரைவிகிறான். சம்புகன் தவம் செய்வதைக் கண்டதும், ஒரு வினாடி கூட தாமதிக்காமல் சம்புகன் தலையை கொய்கிறான் ராமன். சம்புகன் உயிர் பிரிந்த அடுத்த நொடியே, அப்பார்ப்பன பெரியவரின் மகன் உயிர் பெறுகிறான். முனிவர்களும், தேவர்களும், பார்ப்பன இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய ராமன் மீது பூமழை பொழிகிறார்கள். இதுதான் ராமன் அரச பரிபாலனம் செய்த விதம்.
கிருஷ்ணரின் கதை இன்னும் விரிவாகப் போகிறது. அம்பேத்கரைப் பொறுத்தவரை எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் என்கிறார். ராமரையும் என்பது ஒரு கற்பனை. அப்படி ஒன்று இல்லாதபோது வசதிக்காக உருவாக்கப்பட்ட கற்பனை என்கிறார். இதுதான் அம்பேத்கர் இந்துமதத்தின் மீது கொண்டிருந்த கருத்து.
பிறப்பால் மனிதனை இழிவுபடுத்தும் முறைக்கு அடிப்படையே இந்துமதம் தான். சாதியையும் இந்து மதத்தையும் பிரிக்கவே முடியாது. இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும். நான் ஒரு இந்துவாக, தாழ்த்தப்பட்டவனாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தே அம்பேத்கர் 14 அக்டோபர் 1956 அன்று ஆயிரக்கணக்கானோரோடு பவுத்தத்துக்கு மாறினார். அப்போது மாறுகையில், அம்பேத்கர் ஏற்ற உறுதிமொழிகளில் ஒன்று, அர்ஜுன் சம்பத்துக்கு தேவையான பதிலை சொல்கிறது.
“மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு தடையாகவும், மனிதனோடு மனிதனை வேறுபடுத்திப் பார்க்கும், என்னை பிறப்பால் தாழ்ந்தவனாக கருதும் எனது பழைய மதமான இந்து மதத்தை நிராகரிக்கிறேன்”
அம்பேத்கருக்கு, புத்தகங்களாக எழுதிக் குவிக்க வேண்டும் என்று அவா. அவரால் முடியவில்லை. மத்திய அரசுப் பணியில் டைப்பிஸ்டாக இருந்த நானக் சந்த் ரத்து, அவர் தனது வேலை முடிந்ததும் அம்பேத்கருக்காக secretarial work செய்ய முன் வந்தார். அதிகாலையே அம்பேத்கர் வீட்டுக்கு வந்து விடுவார். அக்டோபர் 1951 முதல் டிசம்பர் 1956ல் அம்பேத்கர் இறக்கும் வரை, அம்பேத்கரின் கடிதங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை செய்தது ரத்துவே.
அம்பேத்கர் இறந்து பத்து ஆண்டுகள் கழித்து அம்பேத்கரின் பங்களாவை மதன் லால் ஜெயின் என்பவர் வாங்குகிறார். அதுவரை அங்கு வாடகைக்கு தங்கியிருந்த அம்பேத்கரின் மனைவி சவீதாவிடம் தொடர்ந்து அங்கு தங்கும்படி அனுமதி அளிக்கிறாற். சவீதாவுக்கு இரண்டு அறைகளை ஒதுக்கித் தருகிறார்.
1967ல் மதன் லால் ஜெயின், சவீதாவை வீட்டை இடிக்க வேண்டும் என்பதால், அந்த இரண்டு அறைகளை காலி செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார். சவீதா இல்லாத சமயத்தில், 1967ல், மதன் லால் ஜெயினின் ஆட்கள், அந்த இரண்டு அறைகளையும் காலி செய்கின்றனர். அந்த இரண்டு அறைகளிலும், அம்பேத்கரின் கையெழுத்துப் பிரதிகளும், கடிதங்களும், புத்தக manuscriptகளும் இருக்கின்றன. அத்தனையும் எடுத்து வெளியே போடப் படுகின்றன. அன்றைக்கென்று பார்த்து பெரும் மழை.
தகவல் அறிந்த ரத்து, மழையில் நனைந்து கொண்டிருந்த ஆவணங்களில் முடிந்தவற்றை சேகரிக்கிறார். இந்த ஆவணங்கள் 10 ஆண்டுகளுக்கு டெல்லியின் ஒரு அரசு குடவுனில் தூசு படிந்து கிடக்கின்றன.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜே.பி.பன்சோட் என்ற தலித் வழக்கறிஞர், மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் அம்பேத்கரின் படைப்புகளை அரசு பதிப்பிக்க வேண்டும், அல்லது தான் பதிப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறார். அதன் பிறகுதான் மகாராஷ்டிர அரசு அம்பேத்கரின் படைப்புகளை Babasaheb Ambedkar Writings and Speeches என்ற பெயரில் 1987ம் ஆண்டு பதிப்பிக்கப்படுகின்றன.
அம்பேத்கர் ஒரு பார்ப்பனராக பிறந்திருந்தால், அவர் உலகின் மிகச்சிறந்த அறிவுஜீவியாக, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போலவோ, வி.கே.கிருஷ்ணமேனன் போலவோ கொண்டாடப்பட்டிருப்பார்.
ஆனால் அவர் ஒரு மகராகப் பிறந்தார்.
அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6 அன்று, பெரியாரைக் கண்டால் பல மைல் தூரம் ஓடும் சங் பரிவார் அமைப்புகள், அம்பேத்கரை தங்களின் சுவீகாரத் தந்தை போல பாசம் பொழிவதை சமீப காலமாக பார்த்து வருகிறோம். அதிலும் ஒரு படி மேலே போய், அர்ஜூன் சம்பத் அம்பேத்கரை காவி சாமியாராக சித்தரித்து ஒரு போஸ்டரை ஒட்டியிருந்தார். விடுதலை சிறுத்தைக் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களையும், கண்டனங்களையும் பார்க்க முடிந்தது. எனக்கு இது கோபத்தையோ, எரிச்சலையோ ஏற்படுத்தவில்லை. மாறாக புன்னகையையே ஏற்படுத்தியது.
இந்த அறிவிலிகளுக்காகத் தான் அம்பேத்கர் எழுதி வைத்து போயிருக்கிறார். அறிவிலிகள் கடைசி வரை அவற்றை புரிந்து கொள்ளப்போவதில்லை என்பதாலேயே முட்டாளாக வாழ்கறார்கள். தான் சார்ந்த மதத்தில் ஏதேனும் முட்டாள்தனம் இருக்குமென்றால் அதை சீர்தூக்கிப் பார்க்காமல் அதை கண்மூடித்தனமாக தூக்கி நிறுத்துவது தான் இந்த அறிவிலிகளின் வேலை. அதைத் தான் அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் செய்கிறார்கள்.
அம்பேத்கருக்கு காவி வேடம் போடுபவர்கள், அம்பேத்கரை அறியாதவர்கள்.
குறிப்பு :
ராமாயணத்தில் இப்படியெல்லாம் இருக்கிறதா என்று வியப்பவர்கள், இந்நூலை படிக்கலாம்