ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர். தலைமுறைகளை வசீகரித்தவர். இனி வரும் தலைமுறை நடிகர்களுக்கும் உதாரணமாக இருக்கப்போகிறவர். இத்தனை ஆண்டுகள் கழித்தும், அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பினைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். இது எளிதல்ல. ஒரு எளிய பின்புலத்தில் இருந்து வந்து அவர் அடைந்த உச்சத்தை வேறொரு நடிகர் அடைய முடியுமா என்பது சந்தேகமே.
இந்திய அளவில் ரஜினி அளவுக்கு ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் வேறு யாரும் இருந்ததில்லை. எல்லாத் தரப்பினரையும் கவரும் ஆற்றல் கொண்டவர். இதில் எல்லாம் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதெல்லாம் ரஜினிக்குத் தெரியும். அவர் ரஜினியைப் பொறுத்தவரை அவர் தனது படத் தேர்வுகளுக்கு எம்ஜிஆரை பின்பற்றியிருகக் வேண்டும். அதாவது தனது இமேஜ் கெட்டுவிடாத, தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அது போன்ற கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அவரது படங்களில் ஒரே மாதிரியான சாயல் இருப்பதைப் பார்க்க முடியும். அப்பாவி போன்று ஒருவன் காலத்தின் கோலத்தால் அடிபட்டு பக்குவமாகிறான் என்பது தான் ரஜினியின் பல படங்களின் ஃபார்முலாவும். மிகச் சில படங்களே அதிலிருந்து மாறியிருக்கின்றன.
ஒரு அரசியல்வாதியாக தன்னை இதே இமேஜில் தான் மக்கள் முன்பு நிறுத்த முயற்சித்தார் ரஜினி. தான் ஒதுங்கிப் போனதாகவும் அவர் அரசியலுக்கு வர நிர்பந்தம் இருந்ததாகவும் அரசியலுக்கு வருவதில் தனக்கு இஷ்டமில்லை என்பது போலவும் ஒரு இமேஜை மக்கள் முன்பு கொண்டு வர நினைத்தார். அரசியல் வாழ்க்கையின் தனக்காக அவர் எழுதிய திரைக்கதை படுதோல்வி கண்டுவிட்டது.
ரஜினி என்கிற ஒருவர் மீது மக்களுக்கு இருக்கும் அன்பை தங்களுடைய கட்சிக்கு சாதகமாக்க எல்லாக் கட்சிகளும் விரும்பின. நாம வாய்ஸ் குடுத்தால் மக்கள் கேட்பார்கள் என்றால் நாமே ஏன் அரசியலில் நேரடியாக இறங்கக்கூடாது என்று ரஜினி முடிவெடுத்தார்.
தவறில்லை. யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால் பாபா படத்தில் அவரே சொன்ன வசனம் போல ‘யார் வேணாலும் முதல்வர் சீட்டுக்கு ஆசைப்படலாமா?’ என்பது அவர் சும்மா பேசிய வசனம் இல்லை. அவருக்கு அவரே இப்போது சொல்லிக்கொள்ளும் வசனமாக மாறிவிட்டது.
அரசியல் ஆசையும் அதோடு சேர்ந்து கொண்ட குழப்பமும் தான் அவரையும் அவர் ரசிகர்களையும் படாதபாடு படுத்திவிட்டது. அரசியல் ஆசை மிதமிஞ்சிப் போகும்போதெல்லாம் அவர் ஒரு திரைப்படத்துக்கு ஒரு திரைக்கதை எழுதுவார். வள்ளி படத்தினை சொல்லலாம். அதில் அவர் கதாநாயகன் இல்லை. இத்தனைக்கும் அவர் கதாநாயகனாக நடித்தால் வசூல் அள்ளிய காலகட்டம். ஆனால் அதில் அவர் வயதான ஒருவராக தத்துவம் பேசிக்கொண்டு வருவார். ஒருவகையில் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட ஒரு பதிலாக இருக்கலாம். தான் வாழ்க்கையை தத்துவம் போல அணுகுபவன் என்கிற நம்பிக்கையை அவர் உருவாக்க முயன்ற முயற்சி அது. படம் தோல்வி. வள்ளி படத்தில் ரஜினி அவருக்காக அமைத்திருந்த பாத்திரம், கிட்டத்தட்ட நிஜ ரஜினியின் பிம்பமே.
அடுத்து அவர் கதை திரைக்கதை எழுதிய பாபா. 2002 காலகட்டம். அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது காமெடியாக பார்க்கப்படாமல் சீரியசாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவருகிற படம் பாபா. எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. தினசரிகள், வார இதழ்கள், பாபா காலையில் பல் துலக்குவது முதல், உறங்கச் செல்வது வரை செய்திகளாக்கின. படம் படுதோல்வி. காரணம், தன் மனதைப் போலவே படத்தையும் அவர் குழப்பியதில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பாபா படத்துக்கு, பாட்டாளி மக்கள் காட்டிய கடும் எதிர்ப்பு கூட நெகட்டீவ் பப்ளிசிட்டியாக மாறி படத்தின் வெற்றிக்கு உதவவில்லை.
சினிமா என்பது வியாபாரம். எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் தெளிவாக சொல்ல வருவதை சொல்லவில்லை என்றால் மண்ணைக் கவ்வும். அதற்கான உதாரணமாக பாபா இருந்தது. “ஒண்ணு அரசியலுக்கு வருவேன்னு சொல்லு.. இல்ல வரமாட்டேன் இமயமலைக்கு போவேன்னு சொல்லு’ என்று ரசிகர்கள் கடுப்பான படமிது. ரசிகர்களுக்கு வருடங்கள் போகப் போகத் தான் தெரிந்தது, குழப்பம் நமக்கு மட்டுமல்ல நமது தலைவர் ரஜினிக்கே இருக்கிறது என்று.
ரஜினியைப் பொறுத்தவரை அவருக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் தான அப்படி நடித்தால் வசூலாகாமல் போய்விட்டால் என்கிற பயமும் உண்டுஅப்படி நடித்தால் வசூலாகாமல் போய்விட்டால் என்கிற பயமும் உண்டு. அதனால் ஒரே ஃபார்முலாவில் நடித்து தப்பித்துவிடுகிறார். ஒரு கதாபாத்திரத்தினைத் தேர்வு செய்வதற்கே பயந்து கொண்டு ரிஸ்க் எடுக்காமல் நடிக்கும் ரஜினி அரசியலில் குதிப்பது குறித்து உடனே முடிவு எடுப்பார் என்று நம்பியது அதை நம்பியவர்களின் முட்டாள்தனம் தான்.
ரஜினி தான் ஒரு ஆன்மீகவாதி என்பதை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் படங்களிலும் காட்டத் தொடங்கினார். அதை தன் இமேஜாக கூட மாற்றி கொண்டார். ஆனால் இதிலும் ரசிகர்களின் மனதை அவர் புரிந்து கொள்ளவில்லை. ரஜினி ராகவேந்திரரின் பக்தராக நடித்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும். அவரே ராகவேந்திரராக நடித்ததில் படம் தோல்வி. பாபாவின் பக்தனாக நடித்திருந்தால் பாபா கதை வேறு. ரஜினி பாபாவின் மறுஜென்மம் என்பதாக கதை மாறியதால் பாபா படுதோல்வி. இதே தான் அரசியலிலும் அவருக்கு நிகழ்ந்திருக்கிறது. எந்த ஒரு கட்சிக்கும் அவர் ஆதரவு அளிக்கும்போது மக்கள் கேட்டுக் கொண்டனர். நானே கட்சி தொடங்குகிறேன் எனும்போது யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களிடம் சினிமா செல்வாக்கு கொண்டவர்களை அரசியலிலும் கொண்டாடுவார்கள் என்கிற பிம்பத்தை தக்க வைத்ததும் ரஜினி தான். போட்டு உடைத்ததும் அவர் தான்.
எம்ஜிஆர் தனது படங்களில் தன்னை ஏழைப்பங்காளனாக காட்டிக் கொண்டே இருந்தார். இது மாதிரி நல்லவன் தான் நாட்டுக்குத் தேவை என்கிற பிம்பத்தை உருவாக்கினார். இதனை ரஜினி செய்ததில்லை. ஒரு அப்பாவி கதாபாத்திரம் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறது என்கிற கதையில் அவர் விதவிதமாக நடித்துக் கொண்டிருந்தார். இது ரஜினி என்கிற தனிமனிதனின் வளர்ச்சிக்கு உதவியதே தவிர, இதில் சமுதாய நலன் என்று சொல்லிக் கொள்ள வழியேயில்லை. கமல்ஹாசனை இங்கு ஒப்பிட்டால், அவர் தன்னுடைய இமேஜை திரைப்படங்களில் கட்டமைக்கவில்லை. எல்லா வகையான கதைகளிலும் நடித்தார். அதை மீறி அவர் மேல் இருக்கும் இமேஜ், அவர் ஊழல்வாதியாக இருக்க மாட்டார் என்பது. கறுப்புப் பணத்தை அவர் ஆதரிக்கவில்லை என்பதை நடைமுறையில் காட்டியதும் அறிவானவர் என்கிற பிம்பமும் அவரைக் காப்பற்றிக்கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் அரசியலில் தோல்வி கண்ட ஒருவர் மீண்டும் திரையில் வெற்றி காண்பது என்பது அரிதான ஒன்று. கமல் தேர்தலில் தோற்ற பின்புதான் அவர் படம் அவர் திரைவாழ்க்கையில் காணாத வெற்றியை கண்டது.
ரஜினியை சுற்றிலும் வியாபார உலகம் என்கிற வலை பின்னப்பட்டிருக்கிறது. அதை அவர் அறுத்து கிழிக்க முடியாது. ஒரு சாதாரண கதைத் தேர்வையே தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்க முடியவில்லை என்கிற இடத்தில் இருந்து கொண்டு சுயமாக அரசியலில் ஒரு சக்தியாக உருவாக முடியும் என்று அவர் எப்படி நினைத்திருப்பார்?
ஆன்மீக அரசியல் என்பதெல்லாம் ஒரு சப்பைக்கட்டு. ஆன்மீகத்தில் அரசியலைக் கலந்து ஏற்கனவே நாறடித்துக் கொண்டிருக்கிறவர்களின் காலகட்டத்தில் அவரும் அதே ‘பிராண்டை’ கொண்டு நிறுத்தினால் மக்கள் வீட்டைப் பார்க்கப் போ என்று சொல்லாமல் என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்த்தார்?
இப்போது பாபா மறுரிலீஸ் ஆகியிருக்கிறது. பாபா ஒரு ஆன்மீக அவதாரப் புருஷரின் கதை என்பதாக சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது இதை ஃபேன்டசி கதை என்கிறார். அதனால் இப்போது படம் வெற்றி பெறும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் என்பது ஒரு ஃபாண்டஸி என்று அவர் புரிந்து கொள்ள இத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன.
இருபது வருடங்களுக்கு முன்பு பாபா வெளியானபோது அவர் நம்புகிற ஆன்மீக குரு ஒருவரின் கட்டளை என்பதாக சொன்னார். அதன் பின்னர் யோகா, கிரியா யோகம், பாபா, இமயமலை, தியானம் என்று தமிழகத்தில் ‘மாற்று ஆன்மீக’ முகங்கள் அறிமுகமாயின. கார்ப்பரேட் சாமியார்களின் வரவு அதிகரித்தன. மக்கள் பக்தியைக் கடந்து ஞான மார்க்கத்தை நோக்கி கவனத்தைத் திருப்பினார்கள். ரஜினி பாபா படத்தின் தோல்வியைக் காட்டிலும் இந்த வெற்றியை ரசித்திருப்பார். இதை எதிர்பார்க்கவும் செய்திருப்பார்.
மீண்டும் அந்த ஞான மார்க்க ஆன்மீக அலையைக் கொண்டு வரும் அழுத்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். இருபது வருடங்களுக்குள் இரண்டு தலைமுறைகள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு பக்தியையும், ஞானத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டிருக்கலாம். இதற்கென்று புதிதாக ஒரு படம் எடுக்கமுடியாது. அப்படியே எடுத்தாலும் அது ஓடுமா என்பது ரஜினிக்கே சந்தேகம் வந்திருக்கும். அதனால் ஏற்கனவே ஓடிய குதிரையை மீண்டும் ஓடவிட்டுப் பார்ப்போம். குதிரை ஜெயிக்க வேண்டாம். ஆனால் ஓடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.
இந்த மண்ணுக்கென்று ஆன்மீகத்தில் எத்தனை ஆழமான உறவு உள்ளதோ அதே போல பகுத்தறிவிலும் உண்டு. இதை ரஜினி புரிந்து கொண்டிருக்க வேண்டும். பகுத்தறிவை மறுக்கும் உரிமை அவருக்கு உண்டு. விமர்சிக்கவும் உரிமை உண்டு. ஆனால் தன் கருத்தை சொல்ல வில்லனுக்கு ராமசாமி என்று பெயர் வைத்து திட்டிப் பேசினால் அவரது ரசிகர்களே விரும்பமாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ரஜினி நினைப்பதுபோல இளைஞர்கள் ஆன்மீகத்தைக் குறித்து பேச ஆரம்பித்தால் அவருடைய அரசியலுக்கு இது உதாவது. மாறாக அவர் நம்பிக் கொண்டிருக்கும் ‘ஆன்மீக அரசியலுக்கு’ உதவலாம். இது யாருக்கு உதவும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இந்தியா முழுவதும் முன்னணி நாயகர்களைக் கொண்டு ஆன்மீகப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதையும் அதை வலதுசாரிகள் ஆதரிப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் அப்படியான சாத்தியங்கள் இல்லை, இங்கு அம்மன் படங்களே காலாவதியாகிவிட்டன. ராமர், கிருஷ்ணரை வைத்தெல்லாம் இங்கு படங்கள் எடுக்க முடியாது. அதனால் ஏற்கனவே ஆன்மீக அரசியல் குறித்து பேசிய பாபாவை தூசி தட்டியிருக்கிறார்கள். ரஜினி அரசியலில் இருந்து விலகுவதாக சொன்னாலும் அவர் மேல் உள்ள அழுத்தம் அப்படியே இருப்பதைத் தான் இது காட்டுகிறது. சினிமாவில் ரஜினியை வைத்து வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் போலவே, அரசியலிலும் முயற்சி செய்பவர்கள் இன்னும் முயற்சிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
முப்பது வருட காலம் தமிழக மக்களிடம் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் ரஜினிக்குத் தனனுடைய நிலைமை அரசியலில் என்ன என்று தெரிந்திருக்கும். அவர் சூப்பர்ஸ்டார். அந்த இடத்தினை தமிழ்நாடு வேறு யாருக்கும் தந்துவிடாது. இது தமிழகம் அவருக்குத் தந்த பரிசு. பதிலுக்கு அவரிடம் எதிர்பார்ப்பது குறுக்கு வழியற்ற ஒரு அரசியல் பார்வையை. அதற்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்பது தெரிகிறது. இனியும் தயாராவார் என்று தோன்றவில்லை. அந்த குறுக்கு வழியின் விளைவே பாபா ரீ ரிலிஸ். நேரடியாக மோதாமல் ஆன்மீக அரசியல் என்கிற கருத்தை ஒரு கருவியாக வைத்து இன்றைய இளைஞர்களிடம் பரப்ப முயன்றிருக்கிறார். எப்படி இளைஞர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னும், ரசிகர்களையே ரஜினி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அவர் தமிழக மக்களை, குறிப்பாக வாக்காளர்களை புரிந்து கொள்ள அவருக்கோ, நமக்கோ பொறுமையும் இல்லை, அவகாசமும் இல்லை.
தமிழ்த் திரையுலகம் ரஜினிக்கு கொடுத்த பெரிய இடம் இன்னும் ரஜினியிடமே இருக்கிறது. அதை அவர் தக்க வைத்துக் கொள்ளட்டும். அரசியலை குழப்பமில்லாதவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். சிறப்பான உடல்நலனுடன், தொய்வடையாத சக்தியோடும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முள்ளும் மலர்களை தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்கட்டும். தன் பெயரை தமிழ்த் திரையுலக வரலாற்றில் ரத்தினக் கற்களால் பொறிக்கட்டும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.