காங்கிரஸ் பேரியக்கம் பெரிய இயக்கமாக இருந்த காலம். காங்கிரஸ் கட்சி நடத்திய தேசிய பள்ளியில் நடக்கும் ஜாதிய கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி காந்திக்கு கடிதம் எழுத மழுப்பலான பதில் வர நாட்டு விடுதலையைவிட சமூக மாற்றம், இட ஒதுக்கீடு முக்கியம் என முடிவெடுத்த பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
அவர் காலத்திலேயே வெளியேறிய இன்னொரு தலைவர் ஜீவா பொதுவுடமை கட்சி நோக்கி பயணமானார். பெரியார் நீதிக்கட்சியில் ஐக்கியமானார். நீதிக்கட்சி திராவிடர் கழகமாக அவதாரம் எடுத்தது. சுயமரியாதை இயக்கம் பெரியார் முன்னெடுத்த முக்கியமான இயக்கம். பின்னர் திராவிடர் கழகத்திலிருந்து 1949- ஆம் ஆண்டு பிரிந்து உருவான இயக்கம் திமுக.
இவைகளை குறிப்பிடக் காரணம் சுயமரியாதையை முன் வைத்து உருவான இயக்கத்திலிருந்து வந்தவர்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் திமுக இன்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி பி.டி.ராஜனின் மகன் துணிச்சல் மிகுந்தவர் என திமுகவில் பெயர் எடுத்தவர் பழனிவேல்ராஜன். அவரது மகன் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன். மெத்தப் படித்தவர். அவர் 27 வது அமைச்சராக பின்னால் நிற்க, திமுகவின் ஆரம்பத்தில் 15 வது இடத்திலிருந்த பின்னர் திமுக தலைவரான கருணாநிதியின் பேரன் உதயநிதி 10 வது அமைச்சராக முன் வரிசையில் அமர்த்தப்பட்ட காட்சியைப் பார்த்த அரசியல் தெரிந்தவர்கள் அறிவாலய வாசலில் சுயமரியாதையை தேடுகின்றனர்.
இது ஒருபுறம். இன்னொருபுறம் தன் அமைச்சர் ஒருவர் நெற்றியில் குங்குமம் அணிந்து பொதுவெளியில் வந்ததை கண்டித்த திமுக தலைவர் கருணாநிதியின் வழிவந்த குடும்பத்தில் முதல்வரின் மனைவி கோவில் கோவிலாக சுற்றுவதும், யாகம் வளர்ப்பதுமாக இருக்கிறார். மற்றொரு அதிகார மையமான சபரீசன் எதிரிகளை அழிக்கும் யாகம் செய்ததையும் அதில் தங்க நாணயங்கள் போடப்பட்டதையும் பார்த்தோம். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் மிச்ச சொச்சங்களான வீரமணி கம்பெனி இதற்கு சுயமரியாதை அகராதியில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என எச்சில் முழுங்கியப்படி தேடிக்கொண்டிருக்கிறது. திமுகவில் மருமகன்களுக்கு எப்போதும் அதிகாரம் அதிகம். காலம் சென்ற கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறனை “என் மனசாட்சி” என்று வர்ணித்தார் கருணாநிதி.
பிடி.ராஜன் முதல்வராக இருந்தவர். அந்தக்கட்சியில் பெரியார் தலைவராகி அது திராவிடர் கழகமாக உருமாறியது. பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது முன்னணியில் இருந்த ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகக் கூட கருணாநிதி இல்லை. ஆனால் அவரின் பேரன் அரியணையில் அமர்ந்திருக்க, பிடி.ராஜனின் பேரன் 27வது அமைச்சராக பின்புறம் நிற்கவைக்கப்படும் அவலம் திமுக கம்பெனியில் மட்டும் தான் நடக்கும். 1977 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி சாதாரண மாணவர் இயக்கத்தில் இருந்தபோது மாவட்ட செயலாளராகவும், மாநில அமைச்சராகவும் இருந்தவர் முத்துசாமி. எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக உறவாடும் செல்வாக்கு பெற்றவர் முத்துசாமி. இவர் திமுக கம்பெனியில் இணைந்து பின் வரிசையில் நிற்கிறார். இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா?
திமுக இளைஞரணிக்கு புதிதாக கிடைத்த வாத்தியார் கோவி லெனின் மூலம் திராவிட இயக்க பாசறையில் சுயமரியாதை குறித்த வகுப்புகள் எடுக்கப்படுகிறது. அதில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை சுயமரியாதை. திமுக கம்பெனி சேல்ஸ் ரெப்ரசண்டேட்டீவ் கோவி. லெனின், “சுயமரியாதை” கழகத்தின் மூச்சு என, எம்.எல்.எம் கூட்டத்தில் பேசுவது போல பேசுகிறார்.
திமுகவில் இப்போது, கோவி லெனின் குறிப்பிடும் சுயமரியாதை இருக்கிறதா என விபரம் தெரிந்தவர்கள் கூறினால், 200 ரூபாய் வழங்கப்படும்.
சாதாரணமாக மூத்த தலைவர்களையே திமுக குடும்ப வாரிசுகளுக்கு கூஜா தூக்கினால்தான் வாழ்க்கை என்கிற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். உதயநிதியைவிட வயதில் மூத்த ஒரு எம்.எல்.ஏ இப்போதே துண்டை போட்டு வைப்போம் என்று உதயநிதி காலில் விழுகிறார்.
கிட்டத்தட்ட 1991 ஆம் ஆண்டு ஜெ தலைமையிலான அதிமுக ஆட்சியில் எந்த அடிமைத்தனத்தை கருணாநிதி எள்ளி நகையாடினாரோ அது இன்றைய திமுகவில் உள்ளது என்கின்றனர் அரசியல் அறிந்தவர்கள். அப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா செய்ததை, இன்று ஒரு குடும்பம் செய்து வருகிறது.
தவழ்ந்து, ஊர்ந்து என காலில் விழுவதை கிண்டலடித்தவர்கள் இன்றைய சமூக வலைதள காலத்தில் அதை செய்தால் சிக்கலுக்கும், கேலிக்கும் ஆளாகிவிடுவோம் என்பதால் தவிர்க்கின்றனர். அறைக்குள் மூத்த உறுப்பினர்கள் உதயநிதி காலில் விழுகிறார்களா என்பது குறித்து, ‘இப்போதைக்கு’ தகவல் இல்லை.
மற்றபடி அனைத்து விஷயங்களும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களை நோக்கியே உள்ளதை யாரும் மறுக்க முடியாது. வாரிசு அரசியலா இல்லவே இல்லை என மறுத்து பேசியவர்கள் ஆமாம் வாரிசு அரசியல்தான், 10 ஆண்டு கழித்து அமைச்சராக்கினாலும் இதைத்தான் சொல்வீர்கள், அதனால் இப்போதே ஆக்கிவிட்டோம் என்னா இப்போ? என்று கேட்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சியை பெற்றுவிட்டனர். இந்தபோக்கு எங்கு போய் முடியும் பார்ப்போம். ராமநாதபுரத்தில் எம்.பி சீட் வாங்க ஆவலாக உள்ள ஒரு புதிய உடன்பிறப்பு, ராஜராஜ சோழனுக்குப் பின் ராஜேந்திர சோழன் வரவில்லையா ? உதயநிதி வருவதில் என்ன தவறு என்று கேட்கிறார்.
திமுகவில் தலைவர் ஸ்டாலின் என்றாலும் அவரை சேர்க்காமல் அதிகார மையம் தனியாக மூன்று உள்ளது என அரசியலை நன்றாக அறிந்த ஆர்வலர் ஒருவர் கூறினார். இதை தமிழக அரசியல் அறிந்தவர்கள் மறுக்க முடியாது என்று கூறிய அவர் மேலும் கூறியது, “ தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலினை கொண்டு வரும் முயற்சியில், திமுகவை தாண்டி தமிழகத்தின் பெரும்பாலான சமூக ஆர்வலர்கள், அக்கறையுள்ளோர் முயற்சி எடுத்தனர். அவர்கள் யாரும் திமுகவினர் அல்ல. அந்த நேரத்தில் அவர்களை ஒருங்கிணைத்ததில் மருமகன் சபரீசன், கனிமொழி போன்றோருக்கு பெரும் பங்கு உண்டு.
நல்ல ஆட்சி அமையும் கோரிக்கைகள் நிறைவேறும், பல ஆண்டுகளாக ஸ்டாலின் நமக்காக குரல் கொடுக்கிறார், அவரே அதிகாரத்திற்கு வந்தால் சொன்னது நடக்கும் என மருத்துவர்கள் தொடங்கி, நீட் தேர்வெழுதும் மாணாக்கர்கள் வரை உளப்பூர்வமாக ஆதரித்தனர். ஆட்சி வந்தபோது திமுகவினரை விட மகிழ்ந்தவர்கள் இந்த அக்கறைக் கொண்ட கூட்டமே. திமுக ஆட்சி மட்டுமே தமிழர் ஆட்சி. திராவிடக் கொள்கைகளை நிலை நிறுத்தவே, இந்த ஆட்சி வந்துள்ளதாக எண்ணி இரும்பூது எய்தியது ஒரு கூட்டம். இந்த கூட்டம் இப்போது, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறது.
இப்படி பலர் எதிர்பார்த்த கனவு ஆட்சி, அலங்கோல ஆட்சியாக அமைந்தது. முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார், ஆனால் மருமகன், மகன், வீட்டில் உள்ளவர்கள் என தனி அதிகார மையமாக மாறியதை தமிழகம் கண்டது. மூத்த அமைச்சர்களே வாயடைத்து போய் இனி காலந்தள்ள இவர்களை அண்டித்தான் வாழ வேண்டும் என்கிற நிலைக்கு வந்தது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்தது.
மகனுக்கு நெருக்கமான அமைச்சர் அன்பில் முக்கிய அதிகார மையம், குடும்பத்துக்கு நெருக்கமான அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அதிகார மையம் என்பதை வெறுப்புடன் சகித்துக்கொண்டனர் சக மந்திரிகள். மாவட்ட மன்னர்களாக அப்பா கருணாநிதி ஆட்சியில் வலம் வந்தவர்கள் மாவாட்டும் மன்னர்களாகி போனதை பார்த்து சமூக வலைதளமே கிண்டலும் கேலியும் செய்வதை பார்க்கிறோம். இன்னொருபுறம் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம், அவர்களுக்கான பொறுப்புகளை நிர்ணயிக்கும் சக்தியாக மருமகன் மாறிப்போனார். உளவு அதிகாரியும், சென்னையின் முக்கிய அதிகாரியும், முதல்வருடனேயே இருக்கும் நம்பர் ஒன் அதிகாரியான உதயச்சந்திரனும், மருமகனின் ஆட்கள் என கட்சிக்காரர்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.
இதை மெய்பிக்கும் வகையில் தூக்கியெறியப்பட வேண்டிய அளவுக்கு தவறு செய்தும் அதிகாரிகள் மாற்றப்படவில்லை. ஒரு சிறிய மாற்றத்தைக்கூட முதல்வர் முடிவு செய்ய முடியவில்லை என்பது கோட்டை வட்டாரங்களிலும், அதிகாரிகள் மத்தியிலும் பேசுபொருளானது. “அவர் தாங்க மெயின், அவரை போய் பார்த்துடுங்க” என மருமகனை நோக்கி அனைத்தும் திருப்பி விடப்பட்டது. மகன் திரைத்துறையின் முக்கிய அதிகார மையமாக மாறிப்போனார். அவர் வைத்ததே சட்டம் என்கிற நிலை உருவானது. பலமான அன்புச்செழியன்கூட விக்ரம் படத்தை விட்டுத்தந்து வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டது. கமலஹாசன்களே புகழ்பாடும் தாசன்களானால் தான் காலந்தள்ள முடியும் என்கிற நிலையில் மகன் அதிகார மையம் இன்னொரு புறம்.
இந்த நிலையில் தான் மருமகன் மூன்று அலுவலகங்களை திறந்து கட்சி ஆட்களை கண்காணிக்கவும் அனைத்தும் தனக்கு கீழ் கொண்டுவரும் வேலையிலும் ஈடுபடுகிறார். தினம் மாவட்ட செயலாளர்களுடன் பேசுகிறார், அமைச்சர்களுடன் பேசுகிறார் பெரிய அதிகார மையமாக மாறுகிறார், நிழல் முதல்வராகவும், கட்சியின் முக்கிய அதிகார மையமாகவும் மாறுகிறார் என்கிற தகவலால் கொதித்தெழுகிறார் மகன். விட்டால் கட்சியில் உள்ள அமைச்சர்கள் போல் வாய்மூடி மவுனியாக சினிமா பக்கம் ஒதுக்கி தள்ளப்படுவோம் என உணர்கிறார். தாயாரும் மகனுக்கு பட்டம் சூட்டி அடுத்த முதல்வராக தயார் செய்ய வேண்டி நெருக்குகிறார்.
அரசியலில் தீவிரமாக ஈடுபட தான் கதாநாயகனாக நடிப்பதையே கைவிட்டு அமைச்சராக்குங்கள் என்கிற கோரிக்கையுடன் நெருக்குகிறார் மகன். அரசியல் இருக்கும் நிலையில் 2024 க்குப்பிறகு அமைச்சராக்கலாம், இப்போது ஆக்கினால் விமர்சனத்தின் மையப்புள்ளி ஆவார் மகன் என்பதால் அது கட்சிக்கும் சிக்கலாகும், 2024 தேர்தலில் எதிரொலிக்கும் ஆகவே தள்ளிப்போடலாம் என தந்தை சொன்னதை குடும்பத்தில் யாரும் கேட்க தயாராக இல்லை. குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மீற முடியாத பலவீனமான தலைவராக இருக்கும் ஸ்டாலினால் எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியவில்லை.
அமைச்சராகிறார் மகன். அவர் அமைச்சராவதின் முக்கிய நோக்கமே கட்சியை தன் கைக்குள் கொண்டுவர வேண்டும். அமைச்சரவையின் அனைத்து விஷயங்களும் தன் கைக்குள் வரவேண்டும் என்பதே என்று சொல்லி முடித்தார் அந்த அரசியல் விமர்சகர்.
அதுமட்டுமில்லை இனிமேல்தான் சிக்கலே இருக்கு என்றார் அவர். என்னங்க அது இளம் அமைச்சர் ஏதாவது அதிரடியாக செய்து பெயர் வாங்கத்தானே பார்ப்பார் என்ற போது ’ஹெல்மட் இல்லாமல் வந்து சிக்கிய இளைஞரை பார்க்கும் டிராபிக் போலீஸ் போல் ஏளனமாக நம்மை பார்த்த அவர், ஒரு கேள்வி கேட்டார். பெரியார் ஆரம்பித்த இயக்கத்தின் பெயர் என்ன?
நாம் ’சுயமரியாதை இயக்கம்’ என்று சொல்ல இனிமேல் நீங்க அதை பார்ப்பீர்கள் என்று சொல்ல என்னங்க டோட்டல் அந்தர்பல்டி அடிக்கிறீங்க என நாம் கேட்டபோது ”பொறுங்க எப்படின்னு சொல்றேன் அவசரப்பட்டால் எப்படி” என்னு சொல்ல ஆரம்பித்தார்.
இப்ப சுயமரியாதை இயக்கம் தொடங்கி இருப்பது அமைச்சர் உதயநிதி. யாருக்கு எதிராக தெரியுமா? மருமகனுக்கு எதிராக. இந்த சுயமரியாதை போராட்டத்தால் எத்தனை தலைகள் உருளப்போகுதோ என அமைச்சர்கள், அதிகாரிகள் வட்டாரத்தில் பெரிய டாபிக்கே ஓடுகிறதாம். மருமகனின் தயவால் அமைச்சரானவர்கள், அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை எடுக்கும் பணி ஆரம்பிக்க உள்ளதாம். மற்றொரு புறம் அது எப்படி நடக்கும் நான் பார்க்கிறேன் என மருமனும் களத்தில் குதிக்க தயாராக இருக்கிறார். அவரும் சுயமரியாதை இயக்கத்தில் உள்ள குடும்பத்தில் பெண்ணெடுத்தவர் அல்லவா?
இனி வரும் காலங்களில் சண்டை வெளியில் இல்லை, கட்சிக்குள், ஆட்சி அதிகாரத்திற்குள். இதில் இரண்டு பக்கமும் அண்டும் அதிகாரிகள் போட்டுக்கொடுப்பதால் சிக்கல் மேலும் அதிகரிக்கும். மொத்தத்தில் வலதுபக்கம் ஒருவரும், இடதுபக்கம் ஒருவரும் இழுக்க வண்டி ஊர் போய் சேருமா தெரியாது. இதில் அமைச்சர் பதவி ஏற்றிருக்கும் மகன் அனைத்து அமைச்சர்கள் துறை மற்றும் தந்தையின் காவல்துறையிலும் மூக்கை நுழைப்பார். நாளைய முதல்வரை பகைத்து பொல்லாங்கை தேடுவானேன் என்று கேட்காமலேயே அனைத்தையும் முடித்து கொடுப்பார்கள் அமைச்சர்கள், அதிகாரிகள். மற்றொரு அதிகார மையம் கொந்தளிக்கும், அதன் அதிகாரத்தையும் காட்டும். இதனால் வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் சூடாக இருக்கும் என்றார் அவர்.
அப்ப சூட்டோடு சூடாக வேலையை ஆரம்பிச்சுட்டாரா என்று கேட்டபோது அது எப்போதோ ஆரம்பிச்சுடுச்சு, மருமகனுக்கு நெருக்கமான அந்த 3 அதிகாரிகளுக்கு இப்ப சிக்கல் ஆரம்பித்து விட்டது. இதனால் விரைவில் காவல்துறையில் பெரிய மாற்றம் வரும், அடுத்த ஆண்டு காவல்துறை தலைவருக்கான (டிஜிபி) தேர்விலும் எதிரொலிக்கும். இரு அதிகார மையத்தையும், இரண்டையும் ஆட்டுவிக்கும் மூன்றாவது மையத்தையும் அதிகாரிகள் நெருங்குவார்கள், இதே நிலை ஐஏஎஸ் அதிகாரிகள் பக்கமும் நடக்கும். இதனால் திமுகவுக்குள்ளும் பாதிப்பு வரும் என்று குண்டை தூக்கி போட்டார் அவர். என்னங்க இவ்வளவு விவரமா பேசுறீங்க, அமைச்சர் ஆனால் அவர் துறை வளர்ச்சியை பார்ப்பேன்னு சொல்லியிருக்காரே உதய், என்று கேட்டபோது அவர் அமைச்சர் ஆனதே மருமகன் கைக்கு அதிகாரம் போவதை தடுத்து செக் வைக்கத்தானே அப்புறம் எப்படி நிதானமாக போவார் என எதிர்க்கேள்வி கேட்டார். இது யூகமல்ல பலரும் கட்சிக்குள்ளே பேசும் விஷயம் தான் என அதிர்ச்சி அடைய வைத்தார் அவர்.
உண்மைதான், போட்டியினால் ஆதாயம் அடையப்போவது அதிகாரிகள்தான். பாதிக்கப்படபோவது நிச்சயம் மக்கள் தான். ”நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமா குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி” என்கிற நிலையில் திமுக அரசு உள்ளது. இதை நாம் சொல்லவில்லை விவரமறிந்தோர் சொல்கின்றனர். 2024 ஆம் ஆண்டை நோக்கி பாஜக தெளிவாக காய் நகர்த்த, அதிமுக பிளவுபட்டுள்ளது என்கிற நினைப்பில் முயல் ஆமை கதையாய் கோட்டை விட போகிறார்கள்.
தமிழக அரசியல், தேசிய அரசியல், குடும்ப அரசியல் என்று அனைத்திலும் களம் கண்டு வெற்றிக் கொடி நாட்டிய கருணாநிதியின் குடும்பம் செய்யும் அரசியலாலேயே, அவர் நேசித்த இயக்கம் பெரும் சேதத்தை சந்திக்கப் போகிறது என்பதை கருணாநிதி நன்கு அறிவார்.
அவர் தன் கல்லறையில் புரண்டு கொண்டிருப்பார்.