பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவரான ஜெயலலிதா இல்லாமல் திமுக சந்திக்கும் தேர்தல். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கலாம். அதிமுகவைப் போல தலைமைக் குழப்பம் இல்லை. கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என வலுவான கூட்டணி. இருந்தும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில், போராடித்தான் ஜெயித்தார்கள்.
இந்த வெற்றி, போராடிப் பெற்ற வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் அடிமட்ட திமுக தொண்டர்களின் உழைப்பினை மறுக்க முடியாது. பத்து ஆண்டு காலத்துக்குப் பின் தங்களது தலைவரின் மகன் அரியணை ஏற வேண்டும் என்பதில் அவர்கள் காட்டிய ஆர்வம் மிகப்பெரியது. இரவும் பகலுமாக பிராச்சாரத்துக்கு உழைத்தவர்கள், பொருளாதார உதவி செய்தவர்கள், வீதியில் வியர்வை சிந்த கால் கடுக்க நின்றவர்கள், கொடி கட்டியவர்கள், கோஷம் போட்டவர்கள் என இவர்கள் எல்லாரும் பதவிக்காகவோ பொறுப்புக்காகவோ உழைத்தவர்கள் அல்ல. கட்சிக்காக தோள் கொடுத்தவர்கள். திமுகவை நேசித்தவர்கள். இத்தனை பேர் உழைப்பில் திமுக ஜெயிக்க, ஸ்டாலின் ஜெயித்தது கடவுளின் அருள் என்று பேச வைத்த பெருமை இத்தனை ஆண்டு கால திமுக வரலாற்றில் இது தான் முதன்முறை. இப்படி சொல்லக் காரணமில்லாமல் இல்லை.
திமுக ஜெயித்ததற்கான முக்கியப் பங்கினை இந்த முறை தெய்வங்களும் எடுத்துக் கொண்டன. திமுகவை கலைஞருக்கு முன்பு, பின்பு என்று பிரிப்பதற்கு பதிலாக ஸ்டாலினுக்கு முன்பு ஸ்டாலினுக்கு பின்பு என்று குறுகிய காலத்திலேயே பிரித்துப் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அது தெய்வத்தின் அருள் என்று யாரும் பேசியதில்லை. கலைஞர் வாழ்ந்த காலத்தில் சாய்பாபா, பங்காரு அடிகளார் போன்ற சாமியார்கள் அவரை சந்தித்ததையே தலைப்பு செய்தியாக்கி கேள்விகள் கேட்டனர். அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர், தாய் மூகாம்பிகா கோவிலுக்கு செல்வதையே பெரும் சர்ச்சையாக்கியது திமுக.
அதே திமுகவினர்தான் இன்று துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக சுற்றுவதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் பக்தி ஈடுபாட்டினை தமிழகமே அறியும். திருப்பதி வெங்கடாசலபதியையும் போய் பார்த்துவிட்டு வந்ததால் தெலுங்கு தேசமும் அறியும்.
துர்கா ஸ்டாலின் என்பவர் தனி மனுஷி. கடவுள் நம்பிக்கை என்பது அவரது தனிபப்ட்ட நம்பிக்கை அதைக் கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று சொல்லலாம். எல்லாம் சரி தான். ஆனால் துர்கா ஸ்டாலின் தனி மனுஷி என்பதைத் தான் ஒப்புக் கொள்வதில் சிரமம் உள்ளது.
பெரியார் தனி மனிதர். அண்ணா தனி மனிதர். கலைஞர் தனி மனிதர். இவர்கள் எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் அதைத் தாங்கள் மட்டும் கொள்கையாகப் பின்பற்றாமல் ஏன் அதனை மக்களிடம் பிராசாரம் செய்தார்கள்? கடவுள் மறுப்பு என்பதை ஊர் ஊராக ஏன் கொண்டு சென்றார்கள்? இதைக் கேட்ட ஒவ்வொரு மனிதரும் அதை ஏன் தங்களது கொள்கையாக மாற்றிக் கொண்டார்கள்? இவர்களும் தனி மனிதர்கள் தானே..!! பெரியார், கலைஞர், அண்ணா இவர்களின் கடவுள் மறுப்பு கருத்துக்களால் கவரப்பட்ட ஒருவர் தன்னையும் தன்னோடு சேர்ந்து குடும்பத்தினரையும் கடவுள் மறுப்பாளர்களாக மாற்றிக் கொண்டது தமிழகத்தின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் எழுதப்பட்ட பக்கங்கள். இன்று வரையிலும் கூட வீட்டில் கடவுள் படத்தினை வைத்திடாத, மூட நம்பிக்கையை மறுத்து வாழும் குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு. அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள்? அவர்கள் தங்களின் தலைவர்கள் சொன்னவற்றில் உள்ள வாய்மையை நம்புகிறார்கள். கடவுள்களுக்கும் இந்தத் தலைவர்களுக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரா என்ன? கடவுள் மறுப்பு என்பது கடவுளை மறுத்தல் மட்டுமல்ல, அதனால் ஏற்படுகிற மூட நம்பிக்கைகளை சமூக ஏற்றத்தாழ்வுகளை, சாதி வேறுபாட்டினையும் சேர்த்து மறுப்பது.
ஒருவர் இங்கு கடவுளை மறுக்கிறார் என்றால் அவர் மேற்சொணன் எல்லாவற்றையும் சேர்த்தே மறுக்கிறார் என்று தான் பொருள். அந்த வழியில் ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சியின் பிரநிதியான முதல்வரின் மனைவி கோயில் கோயிலாக சுற்றுவது என்பது மேற்சொன்ன மூடநம்பிக்கை, சமூக ஏற்றத்தாழ்வை, சாதி வேறுப்பாட்டினை மறுக்காமல் ஏற்றுக்கொள்வதற்கு சமம் என்று தானே பொருள்?
இவற்றை எல்லாம் எதிர்க்கிறேன் , ஆனால கடவுள் பக்தியைக் கையில் பிடித்துக் கொள்கிறேன் என்பது சாமானிய மக்களுக்கு பொருந்தலாம், ஆனால் ஸ்டாலின் குடும்பத்துக்கு பொருந்தாது. அதற்காக கடவுள் பக்தி என்கிற உணர்வு ஒருவருக்கு ஏற்பட்டால், அதை மறைத்து வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா என்கிற கேள்வி அடுத்து வரும். முதலில் இங்கேயே ஸ்டாலினின் குடும்பம் தோற்றது என்று புரிந்து கொள்ளலாம். தங்களது கட்சி எந்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததோ அந்தக் கொள்கையை வீட்டில் உள்ள நபருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது என்றால், அடித்தளமே ஆட்டம் கண்டுவிட்டது என்று தானே பொருள்?
சும்மா இல்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத திராவிட சித்தாந்தம் தமிழகத்துக்குள் பரவ காரணமாக இருந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள். இதில் கட்சிக்காரர்களையும் கழகத்தினரையும் விடுவோம். பெரியாரும், அண்ணாவும் கலைஞரும் மேடையில் பேசுகிறார்கள் என்றால் கூடிய கூட்டம் எத்தனை பெரியது என்பதை நாம் அறிவோம். பெரியார் என்ன பேசுவார் என்பது தெரியும், ஆனாலும் அதனை மீண்டும் மீண்டும் கேட்க எதற்காக அத்தனை மக்களும் கூடினார்கள்? ஒரே காரணம் இதுவரை நாம் சிக்கிக்கொண்டிருந்த அறியாமை என்றும் இருளில் இருந்து ஒரு மனிதர் நம்மைக் கைப்பிடித்து தூக்க வந்திருக்கிறார், அவர் பேசுவது நியாயம் தானே என்கிற மக்களின் எண்ணம் தான் அத்தனை போரையும் அவர்களை நோக்கி வரவழைத்தது. பெரியார் போன்ற பெரியவர்கள் தமிழகத்தில் இல்லை, எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் அவர்கள் மக்களைத் தங்களது வாய்மையினால் கவர்ந்திருப்பார்கள்.
இரவும், பகலும் ஊர் ஊராய் ஓய்வில்லாமல் கொள்கைகளைப் பரப்பிய அந்த நாட்களை கட்சியின் மூத்த தலைவர்கள் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு எடுத்துச் சொல்லும் நிலையில் இல்லை என்றே தெரிகிறது. கலைஞரின் உரையைக் கேட்டு வீட்டில் இருக்கும் சாமி படத்தினை எடுத்து வீதியில் வைத்த தொண்டனின் மனநிலையை இப்போது எண்ணிப் பாக்க வேண்டும். அதனால் அவன் தன்னுடைய குடும்பத்திலும், உறவுகளிடமும் வாங்கிக் கொண்ட எள்ளல் பேச்சுகளையும் எப்படி மறக்க முடியும்? ‘உங்க தலைவரோட குடும்பமே கோயில் கோயிலா சுத்துது, அவர் பேச்சைக் கேட்டு நீ சாமி இல்ல..பூதம் இல்லன்னு சொன்னே?” என்று பேசியவர்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள்? ஸ்டாலின் வீட்டு பூஜை அறை என்று யூட்யூபில் வீடியோ பாரக்கும்போது ஏற்படும் அந்த மனக்குமுறலை ஏன் ஸ்டாலின் குடும்பம் நினைக்க மறுக்கிறது?
யாகமின்றி, தாலியின்றி மந்திரமின்றி அதை செய்து வைக்க புரோகிதரின்றி நடக்கும் கல்யாணங்களை, மணமகனும் மணமகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு செய்து கொண்ட திருமணங்களை ‘சுயமரியாதை திருமணங்கள்’ என்று சட்டத்தில் அங்கீகாரம் வழங்கிய பெருமை திமுக கட்சியை சாரும். கலைஞர் தன்னுடைய முதல் மனைவியான பத்மா அவர்களைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தது பத்மா அவர்களை நேரில் பார்த்தோ, பேசியோ அல்ல. பத்மாவின் குடும்பத்தினர் சுயமரியாதைத் திருமணத்துக்கு சம்மதம் என்று சொன்னால் மட்டுமே கல்யாணம் நடக்கும் என்று சொன்னபிறகே அவருடைய திருமணம் நடந்திருக்கிறது.
திமுகவைப் பின்பற்றிய குடும்பம் மட்டுமல்ல, மற்ற கட்சியினர் வீட்டுத் திருமணங்கள் கூட சுயமரியாதைத் திருமணங்களாக நடந்திருக்கின்றன. இவையெல்லாம் யாரும் மறைக்கக் முடியாத வரலாறு. இதனால் தானே தமிழ்நாட்டை பகுத்தறிவு மாநிலம் என்றே மற்ற மாநிலத்தினர் நினைக்கின்றனர். அதற்கு விதையிட்டது எண்ணற்ற பெரியோர்கள். அதை பரவலாக்கியது திராவிடக் கழகங்கள்.
இதனை சுயமரியாதை வகுப்புகள் என்று கழகக் கண்மணிகளுக்கு சொல்லிக் கொடுப்பதை விட தலைமைக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் அல்லவா சொல்லித் தர வேண்டும். உதயநிதி திராவிட பயிற்சிப் பாசறையை அவர் அம்மாவுக்கல்லவா நடத்த வேண்டும் ?
பிராமணர்கள் வேதம் படித்த காரணத்தால் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் செல்கிறார்கள் அவர்களே பிராசதம் செய்யும் / தரும் உரிமை பெறுகிறார்கள்; அவர்களுக்கு கோயில்களில் முதலிடம்; அதனாலேயே சமூகத்தில் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். எல்லா உயரிய பொறுப்புகளிலும் அவர்களது அதிகாரங்கள் பரவலாக இருக்கிறது என்பதாலும் மனுதர்மத்தினைப் பிடித்துக் கொண்டு தாங்களே பெரியவர்கள் என்று அவர்கள் சொல்வதாலும் தான் பிராமணிய எதிர்ப்பு இங்கு சுயமரியாதையின் ஒரு அங்கமாகப் பார்க்கப்பட்டது. 80 வருட காலங்களாக திராவிடக் கழகத்தின் கொள்கை பரவலாக்கப்பட்டதன் விளைவாக அவர்கள் தங்கள் மனதுக்குள் எத்தனை குமுறிப் போய் இருக்கிறார்கள் என்பது நாம் அறியாதது அல்ல. தமிழ்நாடு தங்களுக்கான மாநிலம் அல்ல என்கிற எண்ணத்துக்கே அவர்கள் வந்துவிட்டார்கள். திராவிடம் என்றாலே கசப்புணர்வு அவர்களுக்குள் வேரூன்றியிருக்கிறது. இத்தனைக்கும் தொடக்கப்புள்ளி அவர்களின் தனிப்பட்ட சொத்தாக வைத்திருந்த கடவுளையும் கோயிலையும் மறுத்தது தான். இதில் இருந்து தொடங்கியது தான் ஒவ்வொன்றும் என்பது அவர்களது எண்ணம். அதனாலேயே அவர்களது வாக்குகள் திமுகவுக்கு எதிராக இருக்கின்றன. அப்படியிருக்க, இப்போது ஸ்டாலின் கோயில் சுற்றுலா செல்வதைப் பார்க்கையில் அவர்கள் என்ன நினைப்பார்கள்? கடவுள் மறுப்பு பேசி, நூறாண்டுகளாக எங்கள் மீது பொது சமூகத்தின் வெறுப்பை தூண்டிவிட்ட பின்னர், அதே கடவுளை உயர்த்திப் பிடித்து, எதை மூடநம்பிக்கை என்று கூறி எங்களை வெறுக்க வைத்தீர்களோ, அதையே நீங்கள் இன்று செய்வதற்காகவா எங்கள் சமூகத்தையே வெறுப்பின் தாக்கத்தில் உழல வைத்தீர்கள் என்று பிராமண சமூகம் கேட்கும் கேள்விக்கு ஸ்டாலின் குடும்பத்தின் பதில் என்ன ?
எதோ ஒரு நேர்காணலில் உதயநிதியிடம், “எது இல்லவே இல்லை?” என்று ஒரு கேள்வி கேட்கபபடுகிறது. அவர் நிமிர்ந்தமர்ந்து “கடவுள்” என்கிறார். இப்படி சொல்கையில் கூசவில்லையா? தாத்தா, அப்பா, பிறகு தனக்கு மூவருக்கும் கடவுள் வேண்டாம். ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு வேண்டும். ஏனெனில் அது தனி மனித உரிமை. அப்படியா நினைக்கிறார்கள்? இப்படி நினைத்தால் இதனை விட கேவலமான அரசியல் இருக்க முடியுமா? உதயநிதி சொல்லித் தான் பார்க்கட்டுமே, கடவுளை நான் நம்புகிறேன் என்று. ஏன் சொல்வதில்லை? ஏனெனில் கடவுள் மறுப்பு என்பது கொள்கையில் இருந்து அரசியலாக மாறி உதயநிதியியின் கையில் அரசியல் பிழைப்பாக மாறிவிட்டது. இதனை பார்க்கும் நாம் எல்லாரும் முட்டாள்கள் என்று அவர்கள் நினைப்பது தான் வேதனை.
அதாவது கழகத் தலைமையில் நேரடி அரசியலில் இருக்கும் ஆணும் பெண்ணும் கடவுளை மறுப்பார்கள். அரசியலில் நேரடியாக ஈடுபடாத துர்கா, சபரீசன் போன்றவர்கள் கடவுளை நம்புவார்கள். இது தான் பகுத்தறிவு இல்லையா?
இது அரசியல் பிழைப்புவாதம் அல்லாமல் வேறென்ன? திமுகவின் கொள்கை தெரியாதவர்களா துர்காவும் சபரீசனும். ஆனாலும் வெளிப்படையாக கோயில்களுக்கு போலிஸ் பாதுகாப்புடன் வலம் வந்த யாகம் நடத்துகிறார்கள் என்றால் கட்சியை எந்தளவுக்கு கேலிக்கூத்தாக மாற்றியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
கடவுள் மறுப்பு, பகுத்தறிவு இவையெல்லாம் பேசுவதால் தங்களுடைய இமேஜ் அடிபட்டுப்போகுமோ, அந்த இடத்தை வலதுசாரிகள் நிரப்பிவிடுவார்களோ என்கிற அச்சம் இருந்திருக்குமேயானால் ஒரு கணம் அவர்கள் தங்களது மூத்தோர்களை நினைத்துப் பார்த்திருக்க்க வேண்டும். மாறாக, ‘நான் இந்தப் பக்கம் மேடையில கொள்கையைப் பேசறேன், நீ அந்தப் பக்கம் கோயில் கோயிலா என் பேர்ல யாகம் பண்ணு” என்று பச்சைக் கொடி காட்டியிருக்கக்கூடாது. இது மட்டகரமான அரசியல்.
கடவுளை மறுத்தாலும், ஏற்றுக்கொள்ளுதலும் அவரவர் விருப்பம் சார்ந்தது. மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் கடவுள் நம்பிக்கையை விட பலமானது மானுடத்தின் மீதான நம்பிக்கை. இந்த சமூகம் அறிவொளி பெற வேண்டுமானால் முதலில் மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று இறங்கிய பெரியோர்கள் கடவுளைக் காட்டிலும் மானுடத்தின் மீது நம்பிகைக் கொண்டிருந்தனர். மானுடத்துக்கு எதிரானதாக கடவுளும் அதை நம்புபவர்களின் போக்கும் இருக்குமானால அதை எதிர்க்கத் துணிந்தவர்கள். முதல் கல்லடிகளைப் பெற்றவர்கள். அவர்கள் கல்லடி பெற்று கிடைத்த பரிசைத் தான் இன்றைய திமுக அதிகாரமாய் அனுபவிக்கிறது. கல்லடிபட்டவர்களில் பலரை காலம் தன்னோடு கொண்டு போய்விட்டது. மீதமுள்ளவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். அவர்கள் வேடிக்கைப் பார்ப்பது தாங்கள் கட்டிக் கொடுத்த பீடத்தின் மீது நடக்கும் அவல நாடகத்தை.
பொதுவெளியில் பகுத்தறிவு பேசி விட்டு, வீட்டுக்குள் மூடநம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் ஸ்டாலின் குடும்பம் செய்வது அப்பட்டமான மோசடி அரசியல். இவர்களின் மோசடியை, இவர்களின் தயவு அண்டிப் பிழைக்கும் அடிமைகள் ஏற்றுக் கொள்ளலாம். கொண்டாடலாம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறமெ கூற்று என்பதை தமிழாய்ந்த அறிஞரின் குடும்பத்தினர் அறியாதது காலத்தின் கோலமே