ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பண்டிகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் இந்த பண்டிகைகள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதி புரிந்து கொண்டால் வாழ்க்கை குறித்த நம் பார்வையே மாறுபடும்.
பண்டிகைகளைப் பற்றி புரிந்து கொள்ள நாம் சற்றே நம் வாழ்வில் பின்நோக்கிச் சென்று குழந்தைகளாக மாறுவோம். உங்களுக்கு எட்டு வயது, நீங்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். தீபாவளி வருகிறது. எட்டு வயது குழந்தையாக நம் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஏற்படும் ? முதலில் விடுமுறை; புதுத் துணிமணி; பட்டாசு; பலகாரங்கள்; சக குழந்தைகளோடு கொண்டாட்டங்கள்; சினிமா; நண்பர்களோடு ஊர் சுற்றுவது; புதுத் துணியை அணிந்து கொண்டு நண்பர்களிடம் பெருமை பேசுவது; இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் அல்லவா !
ஏன் குழந்தைப் பருவத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டேன் என்றால், அவ்வயதில்தான், உலகத்தின் சுமைகள் நம் தோள் மீது ஏறுவதில்லை. நமது சிறகுகள் கத்தரிக்கப்படுவதில்லை. நாம் பாரம் சுமப்பதில்லை.
அப்படி குழந்தையாக, பண்டிகைகள் எத்தகைய சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றன. அதற்காகத்தான் பண்டிகைகள்.
எனது நண்பன், மூலக்கடையில் சுக்ரியா என்ற பெயரில் ஒரு ஆயத்த ஆடை கடை வைத்திருந்தான். மற்ற நாட்களில் எல்லாம் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் கடையில் வியாபாரம் பிய்த்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கூட்டத்தை சமாளிக்க என் போன்ற நண்பர்களை கடையில் இருக்க அழைப்பான். தீபாவளிக்கு அன்று விடியற்காலை 4 மணி வரை வியாபாரம் நடக்கும்.
அப்படி ஒரு நாள் நான் கடையில் இருந்தபோது ஒரு பெண்மணி தனது 10 வயது மகனுக்கு துணி வாங்க வந்தார்.
“10 வயசுப் பையனுக்கு ஒரு ஜீன்ஸ் குடுப்பா. அது ஏதோ கிழிஞ்ச மாதிரி இருக்குமாமே. அதான் பேசனாம். அதே குடுப்பா. எவ்வளவு வரும் ?”
“500 ரூபாயில இருக்குமா. 1200 ரூபாயிலயும் இருக்கு. டீ சர்ட் ஒன்னு வாங்கிக்கங்க”
“இல்லப்பா. 500 ரூபா ஜீன்ஸே குடு. டீ சர்ட்டெல்லாம் வாங்க முடியாது”
அந்தப் பெண்ணைப் பார்த்தாலே அவள் மிகவும் ஏழை என்பது தெரிந்தது. கலைந்த தலை. அதை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையின்மை. கூலி வேலை செய்பவளாகத்தான் இருக்கும். அவளிடம் பேசினேன்.
“எத்தனை பசங்கம்மா”
“ஒரு பையந்தாம்ப்பா. ஜீன்ஸு, ஜீன்ஸுன்னு ஒரே அழுகைப்பா. அவன் அதுதான் கேட்டான். டீ சர்டெல்லாம் கேக்கல”
அவளுக்கு 500 ரூபாய் பெரிய தொகையாகவே தெரிந்தது. பண்டிகை நாள் அன்று தன் மகன் புதுத் துணி உடுத்த வேண்டும். அன்று அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தவிர அவளுக்கு வேறு ஆசைகள் இருக்க முடியாது. அவளது உடல்மொழி அதை வெளிப்படுத்தியது.
நானும் என் நண்பன் சேகரும் பேசிக் கொண்டு 1200 ரூபாய் ஜீன்ஸையும், ஒரு டீ சர்ட்டையும் அவளுக்கு அவள் கொடுத்த 500 ரூபாயை வாங்கிக் கொண்டு கொடுத்தோம். அவள் டீ சர்டை எடுத்து, இது வேணாம்ப்பா என்றாள்.
“இல்லம்மா, ஜீன்ஸ் வாங்குனா, இது ப்ரீ” என்றதும், அவள் முகத்தில் ஒரு புன்னகை வந்ததே பார்க்கலாம்.
வருடம் முழுவதும் கஷ்டங்களோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஒரு நாள் கிடைக்கும் அந்த மகிழ்ச்சி; நிம்மதி; ஆகியவையே இந்த கொண்டாட்டங்களுக்காக வருடம் முழுக்க நம்மை காத்திருக்க வைத்திருக்கிறது. இந்த கொண்டாட்டங்கள் நமக்கு சோர்வை போக்கும், மகிழ்ச்சியை அளிக்கும் மதுவாகவோ, வேறு ஒரு போதை வஸ்துவாகவோ இருக்கிறது. We are addicted to it. இந்த addiction அந்த மகிழ்ச்சியை நோக்கி வருடம் முழுவதும் உழைக்க வைக்கிறது. குழந்தையாக இருக்கையில் அம்மகிழ்ச்சியை அனுபவிக்க ஓடுகிறோம்; உழைக்கிறோம். வளர்ந்து, அம்மகிழ்ச்சியை நாமும் அனுபவித்து, அதை நம் உற்றவர்களுக்கு பகிர பழகுகிறோம். அது கிட்டத்தட்ட போதையை ஆகிறது.
இது ஒரு நல்ல போதை. இதை போதை என்பதை விட, ஆடை போல அத்தியாவசியம் என்றும் கூறலாம்.
இந்த போதை நம்மை எப்படி உழைக்க வைக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது ! பண்டிகை நாள் வந்து விட்டால் எப்படி குஷியாகி விடுகிறோம். நாமும் காலையில் எழுந்து, நம் குழந்தைகளோடு பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதில்லையா. உங்களில் எத்தனை பேர், ராம்ஜான் தொழுகைக்கு சென்றுள்ளீர்கள் ? எத்தனை பேர், தேவாலயங்களில் நள்ளிரவு மாஸுக்கு சென்றிருக்கிறீர்கள் ? எத்தனை பேர், அதிகாலை எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு குழந்தைகளை எழுப்பி குளிக்க வைத்து, பட்டாசு வெடித்து விட்டு, இட்லியும் கறிக் கொழம்பும் அருந்தியிருக்கிறீர்கள் ?
எத்தனை சுகமான அனுபவமாக இருக்கிறது இது ? இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த பண்டிகைகளில் பேதம் உள்ளதா ? ஒரு இந்துவாக நம்மில் ஒருவர் நள்ளிரவு மாஸுக்கு போவதும், கிறித்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக்கு போவதும், கூட்டுத் தொழுகைக்கு போவதும், பிரியாணி உண்பதும், ஒன்றாக பட்டாசு வெடிப்பதும், பலகாரங்களை பரிமாறிக் கொள்வதிலும் இருக்கும் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா ?
எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு மூத்த காவல் துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கேதான் அவர் எனக்கு அறிமுகம். அவரோடு, ஐஜியாக இருந்து ஓய்வு பெற்ற, திருஞானம் ஐபிஎஸ் ஒன்றாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இருவரும், லஞ்ச ஒழிப்புத் துறையின் கெஸ்ட் ஹவுஸில் ஒன்றாக தங்கியிருந்தனர். எனக்கு நெருக்கமான அதிகாரி என்று சொன்னேனல்லவா. அந்த அதிகாரி ஒரு இந்து. விழா நாட்களில் அவர் நெற்றியில் விபூதி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு agnostic. மத சடங்குகளை நம்பாதவர்.
திருஞானம் ஐஜி ஒரு கிறித்துவர். இருவரும் ஒன்றாக தங்கியிருந்ததால், எனக்கு நெருக்கமான அதிகாரியை திருஞானம் கிறித்துமஸ் அன்று சர்ச்சுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த அதிகாரி மறு நாள், அவர் கலந்து கொண்ட கிறித்துமஸ் சிறப்பு வழிபாட்டையும், முடிந்ததும், அருகில் உள்ளவரை பார்த்து “தோத்திரம் உண்டாகட்டும்” என்று கூறிக் கொண்டதையும், அவரும் திருஞானம் ஐபிஎஸ்ஸும் தோத்திரம் உண்டாகட்டும் என்று கூறி சிரித்துக் கொண்டது உட்பட அத்தனை அனுபவங்களையும் எனக்கு விவரித்தார். அவருக்கு அது ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்திருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
திருஞானம் ஒரு சுவையான தன்மை கொண்ட அதிகாரி. கிறித்துவர். ஏறக்குறைய எல்லா அதிகாரிகளுமே என்னோடு தனிப்பட்ட முறையில் நட்பு கொள்வார்கள். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான அதிகாரிகள், என்னை நண்பராகவே நடத்தினர். Subordinateஆக அல்ல. அதன் காரணமாக அனைவருமே இன்றும் நண்பர்கள்.
திருஞானம் அவர்களின் மனைவி, முன்னதாகவே இறந்து விட்டிருந்தார். அவர் பெயர் ஞானம் என்று நினைவு. வருடந்தோறும், அவர் ஊதியத்தில் ஒரு கணிசமான தொகையை செலவழித்து ஏழைக் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை கட்டுவார்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை என்னை வரச் சொல்லி, “சங்கர் ஒரு பெர்சனல் வொர்க்” என்றார். சொல்லுங்க சார் என்றேன். போன வருடம், அவர் மனைவியின் புகைப்படத்தோடு ஒரு நன்கொடை கடிதம் ஒரு பள்ளிக்கு டைப் அடிக்கச் சொன்னார் என்று நினைவு. அப்போதுதான் இவரின் கொடையுள்ளம் பற்றி அறிந்து கொண்டேன்.
ஆனால் திருஞானம் அவர்கள், இந்த செய்தி வெளியே தெரியாமல் கவனமாக பார்த்துக் கொண்டார். இன்று அவருக்கு கிறித்துமஸ் வாழ்த்து சொல்ல அழைத்தேன்.
“Sir, I will ask you one thing. Do you feel proud that I have reached this height”
“100 percent Shankar” என்றார். எனக்கு அவ்வளவு பெருமையாக இருக்கிறது. ஒரு முறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கலைஞர் முதல்வர்.
என்ன மாதிரியான விசாரணை என்று யாருக்கும் புரியாத வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு போட்டிருந்தது. அதாவது, முழுசாக விசாரிக்கணும்னும் இல்ல. விசாரிக்காதன்னும் இல்ல. நீதிபதிகளும் மனிதர்கள்தானே !
திருஞானம் விசாரணை அதிகாரி. திருஞானம், பல வங்கிகளுக்கு, முக.ஸ்டாலின் கணக்கு விபரங்களை தருமாறு கடிதம் அனுப்பினார்.
நீதிமன்றத்துக்குத்தான் அவர் பதில் சொல்ல வேண்டும் என்பதால் உயர் அதிகாரிகளுக்கு விபரம் சொல்லவில்லை.
அவர்கள் திருஞானத்தை அழைத்து, என்ன நடக்கும் தெரியுமா ? என்ன காரியம் பண்ணிருக்கேள் என்று கேட்டனர்.
திருஞானம் அமைதியாக, “என்ன சார் பண்ணுவீங்க ? ட்ரான்ஸ்பர் பண்ணுவீங்க. பனிஷ்மெண்ட் குடுப்பீங்க. ஆளை வச்சி அடிப்பீங்க. இது மூணுல ஒன்னுதானே பண்ண முடியும். ஒரே ஒரு சூட்கேஸ்தான் சார். போயிக்கிட்டே இருப்பேன் எந்த இடத்துக்கும். பனிஷ்மெண்டெல்லாம் நான் பாக்காதது இல்ல சார். இன்னொன்னு நீங்க என்னை பனிஷ் பண்ண முடியாதபடி excellentஆ சர்வீஸ் பண்ணிருக்கேன். உங்களால என்னை பனிஷ் பண்ண முடியாது.
நான் போலீஸ் ஆபீசர் சார். நான் பாக்காத ரத்தம் இல்ல. நான் கோர்ட்டுக்குத்தான் சார் ரிப்போர்ட் பண்ணனும். உங்களுக்கு இல்ல.
திருஞானத்தின் உயர் அதிகாரிகள், அந்த விசாரணையை என்ன கதிக்கு ஆளாக்கியிருப்பார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
எனக்கு ஒரு குறை உண்டு. என்னையும் திருஞானம் சர்ச்சுக்கு அழைத்துச் செல்லவில்லையே என்ற ஏக்கம் இருந்தது உண்மை.
நான் இப்தார் விருந்தில் கலந்து கொண்டுள்ளேன். கிறித்துவ தோழி ஒருத்தி அழைத்துப் போயிருக்கிறாள். பெசண்ட் நகரில் ஒரு மாதா ஆலயம் என்று நினைவு.
வருடந்தோறும் நான் எனது நண்பர்களோடு, கேதர்நாத் செல்வேன். கடவுளை பார்க்க அல்ல. அவர்தான் எங்கும் இருப்பதாக கூறுகிறார்களே. எதற்கு கேதர்நாத் செல்லவேண்டும். நான் அங்கு செல்வது, அந்த மனிதர்களைப் பார்க்க. அவர்களோடு இந்தியில் உரையாடுவேன். சில சமயம் 17 கிலோ மீட்டர் மலையை நடந்து செல்வேன். பல சமயம் குதிரைகளில் சென்றுள்ளேன். அங்கே ஹெலிகாப்டர் மூலமும் கேதர்நாத் செல்ல முடியும். ஹெலிகாப்டரில் நான் இது வரை பறந்தது இல்லை என்றாலும், ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்ற ஆசை ஒரு முறை கூட வந்தது இல்லை.
கேதர்நாத் செல்வது அதை அனுபவிக்க. அம்மக்களை அனுபவிக்க. ஒரு 70 வயது கிழவி, உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்து, கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு, களைப்பே இன்றி கையில் ஒரு தடியை ஊன்றிக் கொண்டு வேக வேகமாக நடப்பதை பார்த்து வியந்து போனேன்.
எதற்காக கேதார் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது “பக்வான் பையா. க்யா பூச் ரஹே ஹோ” என்று கடிந்து கொண்டார். பின்னர், எப்படி 10 ஆண்டுகளாக பணத்தை சேகரித்து, இந்த யாத்திரையை திட்டமிட்டதையும், அவர் கணவர் இதற்காக பணம் சேர்த்ததையும் பெருமையோடு சொல்லி, அவர் கணவரை அறிமுகப்படுத்தினார்.
அவர் கண்களில் கடவுளை பார்த்த நெகிழ்வு தெரிந்தது. அவர் போன்ற பெண்மணிகளை, அழகிய இளம் பெண்களை பார்த்து, உரையாடிக் கொண்டே நடந்து மலையேறுவது ஒரு சிறப்பான அனுபவம். அதை சிவபெருமான் கொடுத்தால் என்ன ? சிவ கார்த்திகேயன் கொடுத்தால் என்ன ?
இதுதானே மதங்களுக்கும் நமக்குமான உறவு ? இதில் எதற்கு சண்டை ?
கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள்