2022ல் இருந்து விடைபெற்று விட்டோம். ஒவ்வொரு ஆண்டும் கழியும்போது அந்த ஆண்டில் திருப்தியடையும் வகையில் ஏதாவது செய்திருக்கிறோமா என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பது என்னை செழுமைப்படுத்திக் கொள்ளவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் உதவும். எனக்கு என்னைப் பற்றிய மிகை மதிப்பீடுகள் பெரிதும் கிடையாது. ஒரு சாதாரண குடிமகன் என்ற நிலையில் இருந்துதான் அதிகாரங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் நான் எதிர்த்து வருகிறேன். என்னை விட யாரும் என்னை விமர்சித்துவிட முடியாது. அதனால் ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் நான் செய்த செயல்களை யோசித்து பார்த்திருக்கிறேன். ஆனால் பட்டியலிட்டதில்லை. இந்த முறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் செய்த ஒவ்வொன்றும் நினைவு வந்தது. அதை கசடற பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த செயல்களுக்கெல்லாம் என்னுடன் தோளுக்கு தோளாய் நின்ற பலர் உள்ளனர். நீங்கள் இருக்கிறீர்கள். என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட உங்கள் ஒவ்வொருவராலும் தான் இது சாத்தியமாயிற்று. தனியாக என்னால் இதை சாதித்திருக்க முடியாது.
இந்த ஆண்டு காவல் துறையில் ஆர்டர்லி முறை மற்றும் அரசு வாகனங்கள் துஷ்பிரயோகம் குறித்து கொண்டு வந்த விழிப்புணர்வும் அதன் விளைவுகளும் நான் எதிர்பாராதது. ஒரு குரலாய் நான் பேசியதை பல குரல்களாய் நீங்கள் கொண்டு சென்றீர்கள். சிலப்பல வருடங்களாகவே நான் இது குறித்து பேசி வருகிறேன் என்றாலும், பெருமளவில் மக்களிடையே இதை பேசுபொருளாக கொண்டு சென்றது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையே. இந்தப் பின்னணியில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை கையில் எடுத்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் காரணமாக, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் வீட்டில் பணியாற்றிய 450க்கும் மேற்பட்ட காவலர்கள் திரும்பப் பெறப்பட்டனர். இது காவல்துறையினரிடையே என் மீதான மதிப்பை பெருமளவு உயர்த்தியது. இதனை நான் கடலூர் சிறையில் கூட உணர்ந்தேன். பல அதிகாரிகளின் பொய் வாக்குறுதிகளை, அரசியல்வாதிகளின் போலியான நம்பிக்கை வார்த்தைகளை நம்பி ஏமாந்தவர்கள் நம்பி கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் இது உழைப்பால், நேர்மையால், துணிவால் அடைந்த நிலை.
ஆர்டர்லி விவகாரம் ஆகட்டும், வாகனங்களை தவறாக பயன்படுத்துவதாக இருக்கட்டும். இவை முற்றாக களையப்படவில்லை. ஆனால், ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. இதற்கு காரணம் நீங்கள் தான். தொடங்கியது நானாக இருக்கலாம். ஆனால் நான் சிறையில் இருந்தபோது கூட ட்விட்டரில் அரசு வாகனங்களை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு உபயோகித்துக் கொள்வதைப் பார்க்கும்போது அதை புகைப்படம் எடுத்தால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் என அதிகாரிகள் தரப்பில் பேசத் தொடங்கினார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசியபோது ‘சங்கர், வண்டியில போலிஸ்னு போட்டுக்கிட்டு, சினிமாவுகோ, ஷாப்பிங்குக்கோ போக அதிகாரிகள் இப்போ யோசிக்கிறாங்க” என்று ஒரு உயர் அதிகாரி சொல்லியபோது மகிழ்ச்சி ஏற்பட்டது.
அதே போல பாஸ்போர்ட் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். இந்த விவகாரத்தில் உளவுத் துறையின் கூடுதல் டிஜிபி டேவிட்சன் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றதும் இவ்விவகாரத்தை ஒரு ஊடகம் கூட தொட முன்வரவில்லை. அவ்வளவு பேரும் அஞ்சினார்கள். மேலும், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சனே சம்பந்தப்பட்டிருப்பதால், இது குறித்து தகவல்கள் வெளி வருவதும் அத்தனை சிரமமாக இருந்தது. இதை விடாப்படியாக விசாரித்து, இவ்விஷயம் குறித்து பல்வேறு தகவல்களை எடுத்து நான் மட்டுமே வெளியிட்டேன். பின்னர், தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இது பற்றி ஒரு விரிவான புகாரை ஆளுனருக்கு அனுப்பினார். நான் டெல்லி சென்று இது பற்றி உள்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அனுப்பினேன். ஆண்டு இறுதியில், இது குறித்து, தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது எளிதாக அடைந்த வெற்றி அல்ல. வெகுஜன ஊடகங்களுக்கு உள்ள பலம் எதுவுமே இல்லாமல் இதை சாதிக்க முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்காட்டுப்பள்ளியில், ஹாஸ்டலில் படித்துக் கொண்டிருந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதும், தமிழக பிஜேபி அதை கையில் எடுத்து இது கட்டாய மதமாற்றத்தால் நடந்த தற்கொலை என்று இதை ஊதிப் பெரிதாக்க முயன்றதும் உங்களுக்கு நினைவிருக்கும். தமிழக அரசு அவ்விவகாரத்தை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழித்தது. தமிழக அரசின் தடுமாற்றத்தை கண்டுகொண்ட பாஜக, இவ்விவகாரத்தில் தமிழக அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க பெருமுயற்சிகள் எடுத்ததையும் அறிவீர்கள். அவ்விஷயத்தை கையில் எடுத்து உண்மையை வெளியுலகுக்கு சொல்லி பிஜேபியின் சதிகளை முறியடித்ததில் சவுக்கு தளத்துக்கு பெரும் பங்கு உண்டு. இப்போது சொல்கிறேன். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே என்னை தொலைபேசியில் அழைத்து, நன்றி சொன்னார். இந்த விவகாரம் எந்த அளவுக்கு இந்த அரசுக்கு அது நெருக்கடியாக மாறியிருந்தது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
அடுத்ததாக கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை மற்றும் கலவர விவகாரம். பலருடைய மனதிலும் இருக்கும் ஒரு வித voyeuristic பிறழ்வின் காரணமாக அப்பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை தான செய்யப்பட்டாள் என்றே பெரும்பாலானோர் நம்பினார்கள். இதில் அரசியல் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல. ஏறக்குறைய சமூகத்தின் 95 சதவிகிதம் பேர் அவர்கள் நினைத்ததை உண்மை என்று நம்பினார்கள். உண்மை வேறானது என்பதை நிரூபிக்க முயற்சி செய்தேன். கள்ளக்குறிச்சிக்கு சென்று நேரில் ஆய்வு செய்து, பலரை சந்தித்து, அம்மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாள், அவரின் தாயார் நாடகமாடுகிறார் என்பதை நான் வெளியில் சொன்னபோது, என் மீது எழுந்த விமர்சனங்கள், பழிகள், அவதூறுகள் இன்றும் ஓயவில்லை. ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக நின்றேன். துளியும் ஊசலாடவில்லை.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இன்றும் அப்பெண்ணின் தாயார் சிபி. சிஐடி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையும் நீதிமன்றமும் கேட்டும் இன்று வரை தர மறுத்து வருவது நான் விசாரித்தவை உண்மையே என்பதை உறுதிப்படுத்துகிறது.
சிபி சிஐடி விசாரணையில், பெண்ணின் தாயார் பேசியது அத்தனையும் பொய் என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பல அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த பத்திக்கையாளர்கள் என் மீது பேசிய அவதூறுகள் ஒன்று இரண்டல்ல. அவர்கள் வைத்த விமர்சனத்துக்கு நான் அளித்த உண்மை சார்ந்த பதில்களை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
அவர்களின் காழ்ப்புணர்வுகளை புறங்கையால் ஒதுக்கித் தள்ளி விட்டு பயணிக்க முடிவு செய்தேன். காழ்ப்புணர்வோடு பேசுபவர்களிடம் நாம் உரையாட என்ன இருக்கிறது ? இவர்கள் காலத்தால் கழித்துத் தள்ளப்படுவார்கள்.
அடுத்து, சென்னை வி.ஆர் மாலில் ஒரு இளைஞன் மது அதிகமாகி ஒரு பார்ட்டியில் இறந்ததும், பின்னாளில் அந்த பார்ட்டி லைசென்ஸே இல்லாமல் நடத்தப்பட்ட ஒரு பாரில் நடந்ததும், அந்த பாரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதும், ரத்து செய்யப்பட்ட லைசென்ஸை 10 நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் வழங்கியதையும் சவுக்கு ஊடகம் மட்டுமே உண்மையை வெளியிட்டது.
இதே போல, கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் குறித்து நாம் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்ததை அடுத்து, அந்நிறுவனம் கொடுத்த அழுத்தத்தினால் சென்னை மாநகர காவல் துறை என் மீதும், விகடன் மீதும், வழக்கு பதிவு செய்ததை உறுதியாக எதிர்கொண்டேன். அந்த நிறுவனமும் என் வாயை மூட 2 கோடி கேட்டு நஷ் ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளதே ஒழிய, அதன் நடவடிக்கைகள் நின்றதாக தெரியவில்லை. மாறாக அந்நிறுவனத்தின் செயல்பாடுகள், இந்திய அளவில் விரிவடைந்து வருகிறது.
எல்லா நேரங்களிலும் நமக்கு உடனடி வெற்றி கிடைத்து விடாது. ஜி ஸ்கொயர் பற்றிய நமது விசாரணைகள் நின்றுவிடவில்லை.
ஸ்டாலின் பதவியேற்று ஆறு மாதங்கள் வரை அரசின் மீது பெரிய அளவில் எதிர் விமர்சனங்களை வைக்கவில்லை. தவறுகள் இருந்தனதான். அவற்றை நயத்தகு நாகரீகத்தோடு சுட்டிக்காட்டினேன். இடித்துரைத்தேன். ஆனால் திமுகவினர் அதை எதிர்கொண்ட முறையே வேறு. திமுக உறுப்பினர்களைப் போலவே அனைவரும் கொத்தடிமைகள் ஆக இருக்க வேண்டும் என்று விரும்பினர். ‘நாங்கள் தொடர்ந்து எங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவோம். கொள்ளையடிப்போம். தமிழகத்தை எங்கள் சொத்தாக கருதுவோம். விமர்சனங்களை எதிர்கொள்ள மாட்டோம்; விமர்சனம் செய்பவர்களை விலை கொடுத்து வாங்குவோம்; விலா எலும்பை ஒடிப்போம்; இல்லையென்றால் 2 வருட பழமையான. வழக்குகளில் கைது செய்வோம்’ என்று ஆணவத்தோடு பிரகடனம் செய்தார்கள். இது இவர்களின் அழிவுக்கே வழி வகுக்கும் என்பதை இவர்கள் உணர்கையில் காலம் கடந்திருக்கும்.
நான் சிறைக்கு சென்று, வெளியில் வரும் 2 மாதத்துக்குள் தமிழ் ஊடகச்சூழலில் பெரும் மாற்றங்கள் நடந்திருப்பதை காண முடிந்தது. தமிழ் ஊடகச் சூழல் vertical ஆக பிளவுபட்டிருந்தது. இரண்டே இரண்டு வகை ஊடகங்கள்தான். திமுக ஆதரவு; திமுக எதிர்ப்பு ஆகிய இரண்டே இரண்டு வகைகள்தான்.
தமிழகத்தில் எந்த ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் திமுக ஆதரவு நினைப்பது கொண்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள். இது போன்றவர்கள் தங்கள் துறை சார் அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் பேச முடியும். தர்க்கம் செய்ய முடியும். கலைஞர், அண்ணா, பெரியார் என மரியாதை கொண்டிருப்பவர்கள். உரையாடலில் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் செல்வாக்கும் அதிகமாக இருக்கும். கட்சியில் இல்லாவிட்டாலும் கொள்கை சார்ந்த பிடிப்புள்ளவர்களாக இருப்பதால் சமூகத்தின் மீது பெரும் அக்கறையும் அன்பும் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், தற்போதெல்லாம் இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மனசாட்சியை விற்று விட்டதை பார்க்க முடிகிறது. அவர்களைப் போலவே நானும் மனசாட்சியை விட்டுவிட வேண்டுமம் என்றும் எதிர்பார்க்கிறார்கள். என்னைப் பற்றி இவர்கள் புரிந்து கொண்டது இவ்வளவே.
இப்படி திமுகவுக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக நிலைபாடு எடுப்பதற்கு இவர்களில் பெரும்பாலானோர் சொல்லும் காரணம்; “திமுகவை காப்பாற்றுவது நமது கடமை; பாஜக திமுக இல்லையென்றால் வளர்ந்து விடும்; திமுகவை விட்டால் பாஜகவை எதிர்க்க கட்சியே இல்லை; திமுகவை விமர்சனம் செய்வது பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதே; பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் அரணாக திமுக இருக்கிறது; திமுகவை விமர்சனம் செய்வது, அந்த அரணை பலவீனப்படுத்தும்”.
நான் குறிப்பிடும் திமுக ஆதரவு அறிவுஜீவிகளின்; ஊடகவியளாலர்களின்; சிந்தனையாளர்களின்; அரசியல் விமர்சகர்களின் நேர்மையை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்களின் judgment ஐ சந்தேகிக்கிறேன். அவர்களின் புரிதலில் உள்ள பிழையால், அவர்கள் பெருந்தவறு இழைக்கிறார்கள்.
பாஜக வளர்ந்துவிடும் என்பதற்காக, திமுக செய்யும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் எப்படி கண்டும் காணாமலும் செல்வது ? அது நமது நேர்மையை கேள்விக்குள்ளாக்குமா இல்லையா ? மேலும், திமுக நிறுவன உரிமையாளர் குடும்பத்தினர் அடிக்கும் கொள்ளைகளால், அதிகார துஷ்பிரயோகத்தால் பிஜேபி வளருமா; அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதால் பிஜேபி வளருமா ?
திமுக பலவீனமாகி விடுமாம். பலவீனம் ஆகட்டுமே !!! 1967ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், தமிழக மக்கள் உண்ண உணவின்றி இருந்தார்களா என்ன ? திமுக என்ற கட்சி அழிந்து விட்டால் தமிழர்கள் அழிந்து விடுவார்களா என்ன ?
திமுக; பாஜக, இரு கட்சிகளிடம் ஒரு ஒற்றுமையை நீங்கள் காண முடியும். மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் நிறுவும் ஒரு கருத்தாக்கம் “பிஜேபியையோ, மோடியோ விமர்சனம் செய்வது இந்தியாவையே விமர்சனம் செய்வதாகும்” என்பதே. அதே போல திமுக குடும்பத்தினர், “திமுகவை, ஸ்டாலினை அவர் குடும்பத்தை விமர்சனம் செய்வது பிஜேபியை ஆதரிப்பது” என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.
இந்த திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்களில் பலர் பிஜேபியின் தொடர் வெற்றிகளுக்கு ஊடகங்களை ஒரு முக்கிய காரணமாக கூறுவர். ஊடகங்கள் பிஜேபி மற்றும் மோடியின் பிழைகளை, தோல்விகளை பதிவு செய்யவும், செய்தியாக்கவும் மறுப்பதாலேயே பிஜேபியின் ஊழல்கள் மற்றும் பிழைகள் மக்களிடம் செல்வதில்லை என்று கூறுவர். தமிழகத்தில் வரலாறு காணாத கொள்ளையில் ஈடுபட்டிருக்கும், ஒரு குடும்பத்தைப் பற்றி செய்தி வெளியிடாமல் தமிழ் ஊடகங்கள் கள்ள மவுனம் காப்பதற்கும் தேசிய ஊடகங்கள் மோடி புகழ் பாடுவதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா என்ன ?
திமுக இல்லாவிட்டால் பிஜேபி வளர்ந்து விடும் என்று கூறுபவர்கள், திமுக உதவியோடுதான் தமிழகத்தில் பிஜேபி தன் முதல் சட்டப்பேரவை உறுப்பினரை பெற்றது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். வாஜ்பாய் அரசில் கிடைத்த பசையான அமைச்சரவை பதவிகளால், 2002 குஜராத் படுகொலையைக் கூட கூச்சமேயின்றி நியாயப்படுத்தியவர்கள்தான் என்பதை மறந்து விடக் கூடாது. திமுகவினர் நிலைகுலையா கொள்கைக் குன்றுகள் அல்ல. எல்லா அரசியல் கட்சிகளையும் போல இவர்களும் சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களே. இவர்களுக்கு சுயநலனைத் தவிர வேறு எந்த நலன் குறித்தும் கவலை இல்லை.
இன்னும் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவர்கள் கலைஞரைப் போல, “ஆகாரத்துக்காக அழுக்கைத் தின்று குளத்தை சுத்தம் செய்யும் மீன் போன்றவர்கள் அல்ல”. மாறாக, ஸ்டாலின் குடும்பம், கிடைக்கும் அத்தனையையும் விழுங்கும் திமிங்கிலங்கள்.
இந்த திமிங்கலங்களைத்தான் தமிழக ஊடகங்கள், “பாஜக உள்ள வந்துரும்” என்று கூறி ஸ்டாலின் குடும்பம் திமிங்கிலங்கள் அல்ல, டால்பின் குட்டிகள் என்று ஏமாற்றப் பார்க்கின்றன.
நாமும் ஏமாறுவோமா என்ன ? ஏமாற இவர்களைப்போல நாம் அறிவிலிகளும் அல்ல; கோழைகளும் அல்ல.
தமிழகத்தின்; நல்லிணக்கத்தை குலைத்து, இங்கு மதவெறியை பரப்ப பாஜக முயற்சி செய்தால், நாம். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா ? நம்மால் அதனை எதிர்கொள்ள முடியாதா ? அதை திமுகவைத் தவிர வேறு யாருமே செய்ய முடியாது என்று நினைப்பதே தமிழர்களை இழிவுபடுத்துவதாகாதா ? 3000 ஆண்டு பழமையான ஒரு இனம், திமுக என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நம்பியா இருக்கிறது ? இது தமிழினத்துக்கே இழிவல்லவா ?
கீழடி வாரிசுகளான நமக்கு, இந்த பாசிச பாஜகவையும், திமுகவையும் ஒரு சேர எதிர்க்கும் வலுவும், துணிவும், வல்லமையும், திறனும் நமக்கு உண்டு.
2023ல் எனக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவேன். தமிழகத்தின் நலன்களை காக்கும் பெரும் பொறுப்பு, குறிப்பாக ஒரு கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தை காக்கும் பொறுப்பு நம் முன் உள்ளது.
இதை செம்மையாக நிறைவேற்றும் வல்லமையும் உங்கள் துணையோடு எனக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த வருடத்தில் எத்தனையோ எதிர்ப்புகளை, வழக்குகளை, மிரட்டல்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் இந்த சமூகத்துக்காக நான் துணிந்து கொடுத்த குரல் தானே தவிர, தனிப்பட்ட இலாபம் எதுவுமில்லை. தனிப்பட்ட இலாபம் இல்லை எனும்போது வருகிற துணிவு இருக்கிறதே அதை யாராலும் அசைக்க முடியாது.
இலக்கை நோக்கி நான் பயணிக்க என் தோழமைகள் நீங்கள் உண்டு என உறுதியாக நம்புகிறேன்
பயணிப்போம் அன்பு உறவுகளே.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.