கடந்த வருடம் மார்ச் மாதம் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா காங்கிரஸ் குறித்தும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பற்றியும் சொன்ன ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது. அதனை சரி என்றும் எதிர்த்தும் குரல்கள் ஒலித்தன. “காந்தி குடும்பம் காங்கிரசை விட்டு விலக வேண்டும்” என்றார் குஹா. அதன் பிறகு இது குறித்த விவாதங்கள் எழத் தொடங்கின. கடந்த ஜூலை மாதம் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இது கடும் அதிர்ச்சியை காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏற்படுத்தியது. காங்கிரசின் மூத்தத் தலைவர்கள் சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு ஏமாற்றத்தையும் கொடுத்தது. பிஜேபி குறித்து கேட்கவே வேண்டாம். அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ராகுல் புறமுதுகிட்டு ஓடியதாகவே சித்தரித்தார்கள். பப்பு என்று அழைத்தது சரி தான் என்று பேசிக்கொண்டார்கள். கட்சி சாராத பொதுமக்கள், எப்போதுமே ராகுலைத் தலைவராக பார்த்ததை விடவும் ‘பாவமான பிள்ளை’ என்கிற தோற்றத்தில் பார்த்தால், அவருக்காக பரிதாபப்பட்டார்கள். அடுத்து ராகுல் என்ன செய்யப்போகிறார்? காங்கிரசின் நிலை என்ன? என்பது தான் கேள்வியாக இருந்தது.
ராகுல் தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியதை இப்போது வாசிக்கையில் அவர் வருங்காலத்தை யோசித்தே சில முடிவுகளை எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ராஜினாமா செய்தபின் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, “நான் இப்போது காங்கிரசின் தலைவர் அல்ல. நான் பதில் எதுவும் சொல்ல முடியாது” என்றார். ஆனால் அவர் பதிலுக்கான செயல்பாடுகளில் இருந்தார் எனத் தெரிகிறது.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியதில் இருந்து கவனித்து வந்தால் ஒன்று புலப்படும். அவர் இப்போதும் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை சொல்லவில்லை. ஆனால் ஒரு தீர்மானமா இருக்கிறார் என்பது புரிகிறது. இல்லாவிட்டால், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே கடப்பேன் என்ற உறுதியோடு அவர் நடந்திருக்க மாட்டார். வேறெந்த தலைவரும் செய்யத் தயங்குகிற, சொல்லப்போனால் யோசிக்கவே அச்சப்படுகிற ஒன்று இது. முதலில் நடக்க வேண்டும் என்றால் தெம்பு வேண்டும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டார் நடப்பது சாதாரணம் அல்ல. அந்தத் துணிவு இங்கு யாரிடத்திலும் இல்லை. அப்படியே நடந்தாலும் போகிற இடங்களில் கூட்டம் கூட வேண்டும். அப்போது தான் ஒரு அரசியல்வாதிக்கு கௌரவம் காக்கப்படும். ராகுல் இங்கு மாறுபடுகிறார். அவர் கூட்டம் கூடுகிறதா, தனக்கு முன்னாலும் பின்னாலும் எத்தனை பேர் நடக்கிறார்கள் என்பதெல்லாம் குறித்து கவலைப்படவில்லை. செல்லும் வழியில் எல்லாம் மக்கள் ஆராவரம் செய்ய வேண்டும் என்றும் நினைக்கவில்லை. நான் நடக்கிறேன் என்றார். கூட வாருங்கள் என்று கூட அறைகூவல் விடவில்லை. இதனாலேயே காங்கிரஸ் தலைவர்கள் பலர் எட்டிக்கூட பார்க்காமல் பதுங்கிப் போய் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் ராகுலை வரவேற்று பேசிய பிரியங்காவின் பேச்சில், “பாஜக ராகுலின் பெயரைக் கெடுப்பதற்காக பல கோடிகள் செலவு செய்கிறது” என்றார். இதனை அவர் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினார். “உங்களால் அம்பானி, அதானியை வாங்க முடியும், ராகுலை அல்ல” என்றார். இந்தப் பேச்சுக்கும் ராகுலின் நடைபயணத்துக்கும் தொடர்பிருக்கிறது. பாஜக காங்கிரஸ் தலைமை ஏற்ற ராகுலை மிக மோசமாக விமர்சித்தது. ஒன்றுக்கும் உதவாதவன் என்கிற அர்த்தத்தில் பப்பு என்றது. இன்று பாஜக அப்படி சொல்ல முடியாது. இப்போது அல்ல இனி வரும் காலங்களிளும் கூட சொல்ல முடியாது. வேறென்ன செய்திருந்தாலும், அவர்களுக்கெதிராக ராகுல் எது பேசியிருந்தாலும் அவர்கள் திரும்பத் திரும்ப இதனைத் தான் சொல்லியிருப்பார்கள். ஆனால் ராகுல் இப்படி இந்தியாவை நடந்தே கடப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதை விட முக்கியமாக அவர் தனது நடைபயணத்தில் சந்தித்தவர்களுடன் உரையாடியதன் மூலம் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் என்பதையும் உணர்த்திக் கொண்டிருக்கிறார். ‘ஒன்றுக்கும் உதவாத பப்பு’ இதை செய்ய முடியாது என்பதை பாஜக உணர்ந்திருக்கும்.
தன்னிடம் பேச வரும் ஊடகங்கள், பொருளாதார வல்லுனர்கள், கட்சித் தலைவர்கள், துறைசார் வல்லுனர்களிடம் ராகுல் அவரவர் துறை சார்ந்த கருத்துகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். தனது கனவினை சொல்கிறார். ஒரு பிரச்சனையை என்ன செய்தால் போக்கலாம் என்று ஆலோசிக்கிறார். எதிர்கட்சியாக இல்லாமல் பாஜகவுடன் மக்கள் பிரச்சனையைப் போக்குவதற்கு கைகொடுக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்கிறார். குறிப்பாக சீன ஆக்கிரமிப்பில் என்ன நடக்கிறது என்று பிரதமர் எதிர்கட்சியினரிடம் சொன்னால், தங்களது அனுபவத்தினை பகிர்ந்து கொள்கிறோம் என்கிறார். வேலைவாய்ப்பின்மைக்கு காரணம் தகவல்கள் பரிமாற்றத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு என்கிறார். Information currency என்பது எல்லோரிடத்திலும் பரவலாக போய்ச் சேர வேண்டும் என்கிறார். இந்தியா போன்ற பல்வேறுதரப்பட்ட மக்கள் வாழ்கிற நாட்டில் எல்லாருக்கும் தெரிய வேண்டிய தகவல்கள் போய்ச் சேராததே இந்த நாட்டின் ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என்கிறார்.
இது மட்டுமலளது, தவறான ஜிஎஸ்டி கொள்கை சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கான அரசின் கவனக்குறைவு போன்றவற்றால் பல தொழிற்சாலைகளும், உற்பத்திகளும் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியபடி இருக்கிறார். பெல்லாரியில் ஜீன்ஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தவறான ஜிஎஸ்டி கொள்கையினால் மூடப்பட்டதை கடும் விமர்சனதுக்குள்ளாக்குகிறார்.
இதெல்லாம் அவர் எங்கோ உட்கார்ந்து சொல்லவில்லை. மக்களோடு மக்களாக இறங்கி நடந்ததால் புரிந்து கொண்டு பேசுகிறார்.
ஓரு மாபெரும் கட்சியின் தலைவர் இப்படி நேரடியாக மக்களை சந்தித்து பேசுவது என்பது இனி நடக்குமா என்பதும் காந்தியடிகள் காலத்துக்குப் பிறகு நடந்திருக்கிறதா என்றால் இல்லை தான். தேர்தல் நேரத்தில் பாதுகப்பான இடத்தில் நின்று கொண்டு பிராசாரம் செய்வதை மக்களை சந்திப்பது என்று சொல்லிவிட முடியாது. இப்படி இந்தியாவை நடந்தே கடந்து அனைவரிடமும் பழகி பேசி, சிரித்து கைகொடுத்து பிரச்சனைகளைக் கேட்பது என்பது இனி எவரும் செய்யத் துணியாத ஒன்று.
மக்களோடு மக்களாய் நான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவன், நான் அரச குடும்பத்து ஆள் இல்லை என்று மோடி பிரச்சாரங்களின் போது சோனியா காந்தி குடும்பத்தினை இடித்துரைப்பார். ஒருவகையில் மோடியும் முழு நேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பு மக்களோடு ஒன்றாகப் பழகியவர் தான். குஜராத், உத்தரபிரதேச தெருக்களில் ஊடும்பாவுமாக அலைந்தவர் தான். எண்ணற்ற மக்களைக் கண்டவர் தான். ஆனால் அதெல்லாம் எதற்காக? தனக்கு வாழ்வளித்த ஆர்எஸ்எஸ் எனும் கட்சிக்கு ஆள் சேர்க்கவும், பலப்படுத்தவும் அலைந்த நாட்கள் அவை. இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு அதிகாரப்பூர்வமாக அதையே செய்கிறார் என்பது அவர் மேல் நாம் வைக்கும் குற்றச்சாட்டு. நாட்டுக்காக , நாட்டின் நன்மைக்காக அவர் தெருவில் இறங்கியிருக்கிறாரா என்றால் இல்லை என்று தான சொல்ல வேண்டும். ஆனால பணமதிப்பிழப்பின் போதும், குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தும், கொரோனா தொற்றுக்காலத்தில் மைல் கணக்காக நடக்க வைத்தும், விவசாயிகளுக்கு எதிரான கொள்கை வகுத்தும் நாட்டு மக்களை தெருவில் இறங்க வைப்பார்.
ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக ரத யாத்திரை மேற்கொண்டு, பாபர் மசூதியை கையிலெடுத்து அதை இடித்து அதன் மூலம் கலவரம் ஏற்படுத்திய பிஜேபிக்கு ஒரு நடைபயணம் என்னவெல்லாம் செய்யும் என்று தெரியும். ஆனால் எந்த பின்னணிக் காரணமும் இல்லாமல் ராகுல் நடப்பதை எல்லாரும் கவனிப்பார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
மீசையில் மண் ஒட்டவில்லை என்று பாஜக சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கு இது எதிர்பாராத அடி தான். ஏனெனில் ராகுல் சந்தித்தது மக்களை. விலைக்கு வாங்க முடிந்த எம்பி, எம்எல்ஏக்களையோ, தொழிலதிபர்களையோ அல்ல.
தேசிய ஊடகங்கள் ராகுலின் நடைபயணத்தை வெறும் துணுக்கு செய்தியாக மட்டும் காட்டிவிட்டு நிறுத்திக் கொண்டது. ஊடகங்களின் ஆதரவு எதுவுமில்லாமல் தான் பாரத் ஜோடோ நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கலந்து கொள்கிறார்கள். வெளிச்சம் விழுந்துகொண்டே இருக்கிறது. காரணம் இன்று மக்கள் ஒவ்வொருவரும் ஊடகங்களாக மாறத்தொடங்கியது தான். ஒவ்வொருவரின் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கையில் எதற்கு ஊடகக் கவனம்? போகும் வழியெங்கும் பொதுமக்கள் தங்களது ஃபோன்களில் ராகுலைப் படம் எடுக்கிறார்கள் உடனே பகிர்கிறார்கள். இதோடு ஒரு உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிஜேபி ஊடகங்களைத் தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றையும் தங்களுக்கு ஆதரவாக மாற்றிக்கொண்டே இருக்கும் வேளையில் சமூக வலைதள ஊடகங்கள் பெருகத் தொடங்கிவிட்டன. அரசு விளம்பரங்களை எதிர்பார்க்காத ஊடகங்கள் மக்களிட்ம் நேரடியாக “நீங்கள் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்….. நேர்மையான செய்திகளைத் தருகிறோம்” என்கிறார்கள். மக்களின் ஆதரவும் இருப்பதால அவர்கள் யாருக்கும் அஞ்சாமல் செய்தியைத் தருகிறார்கள். வெகுஜன ஊடகங்கள் வியாபார காரணங்களால் ஆளும்வர்க்கத்துக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றன.
தேசிய ஊடகங்கள் நிலை பரிதாபம். என்னதான் காசு கொட்டி சேனல்களை வளைத்துப் போட்டாலும் யார் பார்க்கிறார்கள் இன்று? செய்தித்தாள் படிக்கும் பழக்கம் அறுகி வருகிறது. உங்களில் யாருக்கு தொலைக்காட்சிகளில் நடக்கும் தின விவாதங்களை பார்க்க நேரம் இருக்கிறது. அந்த விவாதங்களையே மக்கள் யுட்யூபில்தான் பார்க்கிறார்கள். அனைத்து வெகுஜன ஊடகங்களும், தங்களின் டிஜிட்டல் presenceக்காக அதிக தொகையை செலவிடுவதே இதற்கு சான்று. பல நிறுவனங்களின் மெயின் செய்தி நிறுவனத்தை விட, யுட்யூப் வருமானம் அதிகமாக இருக்கிறது என்பதே உண்மை.
ஒவ்வொரு வாரமும் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங்கில் செய்தி சேனல்களின் ரேட்டிங் பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. “நீங்கள் கொடுக்கும் செய்திகள் வேண்டாம். நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்” என்கிற இடத்துக்கு மக்கள் வந்துவிட்டனர்.
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விடவும் மாநிலக்கட்சிகள், பிஜேபி ஆளும் மாநிலங்களைத் தான் அதிகம் ராகுல் கடந்திருக்கிறார். ஆனால் எல்லா மாநிலங்களிலும் கூட்டத்தினைத் தான் பார்க்க முடிகிறது. பிஜேபி வலுவாக தளம் அமைத்துள்ள மைசூரில் ராகுலுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. டெல்லியில் பிரமாண்டமானதாக அமைந்தது. ஏனெனில், கட்சிக்காரகளிடம் பொறுப்பினை ஒப்படைத்து கூட்டத்தை சேருங்கள் என்று ராகுல் சொல்லாததும் ஒரு காரணம்.
இந்தக் கூட்டத்தினை அவர் தனக்காகவும் கட்சிக்காகவும் வந்தவர்கள் என்று அவர் எங்கும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் இவர்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் அதனால் எனக்கு ஆதரவு தருகிறார்கள் என்கிறார்.
இப்போது மீண்டும் ராகுலின் ராஜினாமா கடிதத்துக்கு வருவோம் “என்னுடைய போராட்டம் வெறும் அரசியல் தலைமையைக் கைப்பற்ற அல்ல, எனக்கு பிஜேபி மீது எந்த வெறுப்பும் கோபமும் இல்லை. ஆனால் இந்தியாவின் சிந்தனைக்கு எதிராக அவர்கள் செய்யும் செயல்களை என்னுடைய உடலின் ஒவ்வொரு செல்லும் எதிர்க்கிறது. இது புதிய போரே அல்ல. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்த மண்ணில் இந்திய சிந்தனையைத் தக்க வைக்கும் போர் நடந்து வருகிறது. அவர்கள் வேற்றுமையைக் காண்கிறார்கள், நான் ஒற்றுமையைக் காண்கிறேன். அவர்கள் வெறுப்பினைக் காணும் போது நான் அன்பினைக் காண்கிறேன் அவர்கள் பயத்தினப் பரப்பும்போது, நான் ஆறுதலைக கைகொள்கிறேன்”
இதனை அவர் அந்த ராஜினாமா கடிதத்தில் சொல்வதோடு நிறுத்தாமல் அதை பரப்பவும் செய்கிறார் என்பது தான் அவர் மேல் மதிப்பு கூட காரணமாக இருக்கிறது.
ராமச்சந்திர குஹா Makers of Modern India என்றொரு அற்புதமான் நூலை எழுதினார். அதில் அவர் இந்தியாவின் வளர்ச்சி பலரின் கனவுகளாலும் செயலாலும் உருவானது என்கிறார். “ஒரு தலைவன் என்பவன் தொலைதூரப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும், தன்னுடைய சமூகம் எப்படியாக அமைய வேண்டும் என்கிற கனவு வேண்டும். அந்தத் தலைவனால் தான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை ருவாக்க முடியும்” என்கிறார்.
அந்த வரிசையில் இடம்பெறுவதற்கு தகுதியானவரே ராகுல் காந்தி என்பதை இந்த நடை பயணம் நிருபித்து வருகிறது என்று தயக்கமில்லாமல் சொல்வேன்.
பப்பு என்று எள்ளி நகையாடப்பட்டவரை இன்று தேசம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. பிஜேபியினர் பதறுகிறார்கள். ராகுல் காந்தியின் உள்ளாடையை பிஜேபி ஐடி விங்கும், Troll armyயும் செய்து கொண்டிருப்பதே ராகுல் காந்தி இவர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
இந்த வெற்றிக்கு காரணம் ராகுல் காந்தியின் இந்திய சமூகத்தினைப் பற்றிய புரிதல். அவர் மக்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. அவர் ஊடகங்களை நம்பவில்லை; அமைப்புகளை நம்பவில்லை; நீதிமன்றங்களை நம்பவில்லை; தேர்தல் ஆணையத்தை நம்பவில்லை. ஏன் தன் கட்சியினரையே நம்பவில்லை.
ராகுல் நம்பியது தன்னையும்; மக்களையும்.