கடந்த வாரம் சென்னையின் புத்தகத் திருவிழாவுக்கு சென்றிருந்தேன். பல நினைவுகளை அது எனக்குத் தந்தது. சுற்றிலும் புத்தகங்கள். புத்தகங்களைத் தேடித் தேடி வாங்க வந்த மக்கள். இவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன். அத்தனைப் புத்தகங்களையும் ஒரு சேர பார்க்கும்போது பலருடைய முகங்களும் எழுத்துகளும் சேர்த்தே நினைவுக்கு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான ஞாநி அவர்கள். அவருடைய நினைவு தினம் இன்று. என்னுடைய அரசியல் பார்வையை கூர்மைப்படுத்தியதில் அவருடைய எழுத்துகளுக்கு மாபெரும் பங்கு உண்டு. அவரின் நினைவினைப் போற்றுகிறேன். இந்த நாளில் புத்தகங்கள் குறித்தும் புத்தக கண்காட்சியைக் குறித்தும் பேசுவதும் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. சொல்லப்போனால், அரசியல் குறித்து எனது பார்வையில் clarity வந்ததற்கு ஞாநி பெரும் பங்கு ஆற்றினார் என்றே நினைக்கிறேன்.
நான் எப்போது புத்தகங்கள் படிக்கத் தொடங்கினேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
எனக்கு எட்டு வயது இருக்கையில் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கத் தொடங்கியது நினைவிருக்கிறது. நாங்கள் அப்போது ஆதம்பாக்கத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருந்தோம். எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பஞ்சாபி குடும்பம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு ஒரு பெரிய பையன், என் வயதில் ஒரு பையன் பிறகு ஒரு மகள். எங்கள் வீட்டின் சொந்தக்காரருக்கு டில்லி, கற்பகவல்லி என்று பிள்ளைகள். டில்லி என் வயது, கற்பகவல்லி என் தங்கை வயது. அந்த ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தவர்கள் அத்தனை பேருமே சினேகமாக இருந்தனர் என்றே நினைவு. பண்டிகை நாட்களில் அந்த குழந்தைகளால் அங்கே மகிழ்ச்சி ததும்பும். டில்லி வீட்டில் மட்டும் தான் டிவி இருக்கும். தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும், ஞாயிறு திரைப்படம் போடும் நாளில், டில்லி வீட்டில் கூட்டம் நிரம்பி வழியும்.
மாலையில் அவர்களோடு விளையாடுவேன். என் தந்தை ஆதம்பாக்கத்தில் இருந்து, ஜெமினி அருகில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சைக்கிளில் சென்று வருவார். வெள்ளிக்கிழமைகளில் விகடன், குமுதம் அவர் சைக்கிள் கேரியரில் இருக்கும். வியாழன்களில் கல்கி இருக்கும். கல்கியில் வாரந்தோறும் பொன்னியின் செல்வன் படிப்பதற்காகவே காத்திருப்பேன். என் தந்தையின் சைக்கிள் வீட்டுக்குள் வந்ததும் சைக்கிள் கேரியரில் புத்தகங்கள் இருக்கும். நானாக எடுத்து படிக்கத் தொடங்குவேன். எனக்கு நினைவு தெரிந்து, அப்போதுதான் எனக்கு வாசிக்கும் பழக்கம் தொடங்கியது என்று நினைக்கிறேன். பிறகு முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, பால மித்ரா. அதிக காமிக்ஸ் வைத்திருப்பவர்கள்தான் உலகிலேயே மகிழ்ச்சியானவர்கள் என்று நினைத்துள்ளேன்.
அம்புலிமாமா காலத்துக்குக் பிறகு பதினான்கு வயதில் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள், தமிழ்வாணன் புத்தகங்கள் என எனது வாசிப்புத் தொடர்ந்தது. புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்ததால், நேரு பூங்கா அருகே இருக்கும் நூலகத்துக்கு அடிக்கடி சென்று புத்தகங்கள் வாசிப்பேன். பள்ளியை கட் அடித்து விட்டு நூலகத்தில் கதை புத்தகங்கள் வாசிக்க நேரத்தை செலவிட்டிருக்கிறேன்.
16 வயதில் பணிக்கு சேர்ந்த பின், இடதுசாரி இயக்கத்தோடு ஏற்பட்ட தொடர்புகள் என் படிப்பார்வத்தை விரிவுபடுத்தியது. இடதுசாரி இலக்கியங்கள், அரசியல் நூல்கள் என்று என் கவனம் திரும்பியது. மர்ம நாவல்கள் என் கவனத்திலிருந்து அகன்றன. அப்போதுதான் புத்தக கண்காட்சிக்கு செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் கண்காட்சி நடைபெறும்.
அந்த நாட்களில் யாரேனும் இன்னார் நன்றாக எழுதுகிறார் என்று சொன்னால் உடனே வாங்கி வாசித்து விட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படும். ஜெயகாந்தன், பிரபஞ்சன், ஜெயமோகன் என இப்படித் தான் எனக்கு அறிமுகமானார்கள். கவிதைகளை வாசிக்கலாமா என்று நான் யோசித்துத் தேர்ந்தெடுத்த கவிதைகள் என்னை கிறுகிறுக்க வைத்தன. கவிதையின் தலைப்பை மட்டும் வாசித்து வாங்கிய கவிதைகள் என்னை சோதனை செய்தன. கவிதைகளைப் படித்தாலே தலை சுற்றியது.
பிறகு இன்று வரை கவிதைகள் பக்கமே செல்லவில்லை.
புத்தகக் கண்காட்சியில் சும்மா சுற்றிவருவதே நன்றாக இருக்கும். நண்பர்களை சந்திக்க முடியும். இப்போதும் கண்காட்சி சென்றால் பல நாட்கள் தொடர்பில் இல்லாத, பார்க்க வேண்டும் என்று நேரம் இல்லாத காரணத்தால் பார்க்கமுடியாமல் தவறவிட்டவர்கள் எனபலரை சந்திக்க முடியும். ஞாநி அவர்களைக் கூட புத்தகக் கண்காட்சியில் சந்தித்து நிறைய பேசியிருக்கிறேன். விவாதித்திருக்கிறேன். சளைக்காமல் பதில் சொல்வார். தன்னைத் தேடி வரும் எவருடனும் நேரம் செலவழித்து பேசும் பண்பை வியந்திருக்கிறேன். என்னைத் தேடி இன்று வருபவர்கள், பொது இடங்களில் என்னைப் பார்க்கிறபோது பேச வேண்டும் என்று நினைப்பவர்களிடம் என்ன அவசர வேலையாக சில நிமிடங்களாவது நின்று பேசுவதற்குக் காரணமாக ஞாநி போன்றவர்கள் இருகிறார்கள். புத்தகக் கண்காட்சிகளில் ஒரு இளைஞன் ஆர்வமாக அரசியல் பேசுகிறான் என்று அவர் என்னிடம் பேசியதில் அவருக்கு என்ன இலாபம் இருக்க முடியும்? அனால் அவர் உரையாடல்களை முன்வைத்தார். புத்தகக் கண்காட்சி போன்ற இடங்கள் இதைத் தான் செய்யும். நாம் நேசிக்கும் எழுத்தாளர்கள், ஆளுமைகளை அருகில் கொண்டு வரும். எழுத்தாளர்கள் தங்களின் வாசகர்கள் யாரென்று தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தக் காலகட்டம் அது. இன்று சமூக வலைதளங்களில் வாசகர்கள் நேரடியாக எழுத்தாளரிடம் பேசிவிடுகின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் வாசகர்கள் தங்களுக்கு பிரியமான எழுத்தாளரைப் பார்த்துவிட்டால் சந்தோஷப்படுவார்கள். சிலர் பேசுவார்கள், சிலர் தள்ளி நின்று ரசித்துப் பார்த்து விட்டு செல்வார்கள். நானும் ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளைத் தூரம் நின்று பார்த்திருக்கிறேன். போய் பேசியிருக்கலாமோ என்று இன்று தோன்றுகிறது.
புத்தகக் கண்காட்சியில் அதிகமும் தமிழ்ப் புத்தகங்களே வாங்கிக் கொண்டிருந்தேன். வேலைக்காக அல்ல. எனக்கு ஏற்பட்ட அவமானங்களை சகிக்க முடியாமல். பின்னாட்களில் எனது புலனாய்வுக் கட்டுரையால் குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கிய ஜார்ஜ், 1991ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் மேற்கு சரக எஸ்பியாக இருந்தார். மிகுந்த ஆணவமாக நடந்து கொள்வார். தெற்கு சரக எஸ்பி ஜேகே திரிபாதி. அவர் மிக மிக அன்போடு பழகுவார். ஜார்ஜ் ஊழியர்களை ஒரு புழு போல நடத்துவார். அவருக்கு இரண்டு பெருமைகள். ஐஐடியில் படித்தவர். இரண்டு ஐபிஎஸ் படித்ததால் அவருக்கு மற்றவர்களை விட அறிவு அதிகம் என்ற எண்ணம் உண்டு. அவரைப் போலவே நானும் இவர்கள் மிகுந்த அறிவானவர்கள் என்றே பல வருடம் நம்பியிருந்தேன்.
பின்னாளில், சிவில் சர்வீஸ் என்பது ஒரு தேர்வு. அதில் தேர்வானவர்களெல்லாம் அறிவாளிகள் அல்ல என்பதை உணர்ந்தேன். படிப்பறிவு அதிகம் இல்லாத என் தாயார் பல நேர்வுகளில் எனக்கு உலக ஞானத்தை போதித்திருக்கிறார். அவர் தவறான மனிதர்கள் என்று அடையாளம் காட்டியவர்களை, நான் தொடர்ந்து நம்பி பிறகு அவர் கூறியது இறுதியில் உண்மையாக அமைந்தது கண்டு வெட்கியிருக்கிறேன்; வியந்திருக்கிறேன்.
ஒரு நாள் ஜார்ஜிடம் கோப்புகளில் கையெழுத்து பெறச் சென்றபோது, ஜார்ஜ் கேட்ட ஏதோ கேள்விக்கு தட்டுத் தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். ஜார்ஜின் முகத்தில் வியப்பு. நீங்க செக்ரடேரியட் ஸ்டாப்பா என்றார். இல்லை என்று பதிலளித்தேன்.
“நீ இங்கிலீஷ்ல பேசுனதும் எஸ்பி செக்ரடேரியட்னு நெனைச்சிட்டார்ப்பா” என்றார் உடன் பணிபுரிந்தவர். அப்போதுதான் என் மனதில் பதிந்தது என்று நினைவு. செக்ரேடேரியட்தில் வேலை செய்பவர்களுக்குத் தான் ஆங்கில அறிவு இருக்க வேண்டுமா என்ற எண்ணம் தான் வெறித்தனமாக ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதைத் தூண்டியது என்று நினைக்கிறேன்.
முதலில் ஒரு நல்ல டிக்ஷனரியை வாங்கினேன். ஆங்கிலப் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். அலுவலகம் அருகில் இருந்த சத்தியம் திரையரங்கில் வரும் ஆங்கிலப் படங்கள் அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தேன்.
பின்னர் தாம்பரத்தில் இருந்த எனது தோழியின் வீட்டுக்கு சென்றபோது இது பற்றி பேச்சு வந்தது. அவள் சென்னை கிறித்துவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவள். ஆங்கில நாவல்கள் படிக்குமாறு பரிந்துரைத்தாள். நான் முதன் முதலில் படித்த ஆங்கில நாவல், ஜெப்ரி ஆர்ச்சரின் Shall We Tell the President.
மூன்று பக்கம் படிப்பதற்குள் 30 முறை டிக்ஷனரியை புரட்டுவேன். அவ்வளவு கஷ்டமாக இருக்கும். பக்கங்கள் போக போக, கதை என்னை இழுத்துச் சென்றது. ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை புரியாது. நாள் ஆக ஆக டிக்ஷனரி தேவைப்படவில்லை. அந்த புரியாத வார்த்தைக்கு இதுதான் பொருளாக இருக்க முடியும் என்பது கதையின் சுவராஸ்ய போக்கில் புரிந்து விடும். ஆங்கில நாவல்கள் பிடித்துப் போகத் தொடங்கின.
திருவல்லிக்கேணியின் நடைபாதைகளில் விற்கும் ஆங்கில நாவல்களை வாங்கி வாங்கிப் படித்தேன். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஈஸ்வரி வாடகை நூல் நிலையத்தில் நூல்களை வாடகைக்கு எடுத்து வாசித்தேன். நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லரில் இருக்கும் நூல்களைப் படித்தேன். பின்னாளில் Dan Brown எழுதிய டா வின்சி கோட் நாவல் உலகைக் கலக்கியபோது, நான் டிக்சனரியை புரட்டுவதே இல்லை. மொத்த நாவலில் தெரியாத ஆங்கில வார்த்தைகள் 10 இருக்கும். அவ்வளவுதான்.
இந்த வாசிப்புப் பழக்கம் எனக்கு பெரும் வகையில் உதவியது. என்னை வளர்த்தது. என்னை செழுமைப் படுத்தியது. என்னை பண்படுத்தியது. என்னை ஊக்கப்படுத்தியது. சுருக்கமாக சொன்னால் என்னை உருவாக்கியது.
புத்தகக் கண்காட்சியில் ஆங்கில நூல்களை வாங்கத் தொடங்கினேன். அரசியல் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இது ஒரு நல்ல இடம். தேடித் தேடி ஒரு வாசகனாய் நான் புத்தகங்கள் வாங்கிய இடத்தில் என்னுடைய புத்தகமும் ‘பெஸ்ட் செல்லர்’ ஆக இடம் பெறும் என நினைத்துப் பார்த்ததில்லை. என்னுடைய ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகம் வெளியானபோது அது வேகமாக விற்றுத் தீர்ந்தது. அடுத்தடுத்து பதிப்புகள் வெளிவரத் தொடங்கின. அதுத்ததாக ‘இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்’ வெளிவந்தது.
2019 ஆம் ஆண்டில் புத்தகக் கண்காட்சிக்கு முன்பு மோடி புகழ்பாடும் புத்தகங்கள் தமிழில் ஒன்றிரண்டு வரத் தொடங்கி அதற்கென விழாக்கள் எல்லாம் நடந்தன. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு இருபது நாட்கள் மட்டுமே இருந்தது. நான் ஏன் மோடி பற்றிய ஒரு நூல் எழுதக்கூடாது என்கிற எண்ணத்தில் ‘மோடி மாயை’ எழுத ஆரம்பித்தேன். அசுர உழைப்பு என்பார்களே அப்படித் தான் எழுதினேன். மோடியும் அவரது கட்சியும், இணை சங்கங்களும் சேர்ந்து செய்த அட்டூழியங்களை எழுதினேன். இருபது நாட்களின் முடிவில் அந்தப் புத்தகம் கண்காட்சிக்கு விற்பனைக்கு வந்தது. அவ்வளவு விரைவில் ஒரு புத்தகத்தை எழுதியதன் காரணம் உண்மைகள் மௌனமானால் பொய்கள் தலைவிரித்தாடும் அதைத் தடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தான்.
அந்தப் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற நாட்களில் தேடி வந்து புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார்கள். செல்பி எடித்துக் கொண்டார்கள். சந்தோஷமாக இருந்தது. இப்போது இன்னொரு மாற்றம். ஒருபக்கம் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள், மற்றொரு பக்கம் ஊடக கவனமும் கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான வாய்ப்பினை சிறைத்துறை நிர்வாகம் தந்திருக்கிறது. சிறைவாசிகள் வைப்பதற்கான ஸ்டால் ஒன்றினை சிறைத்துறை நிர்வாகம் தொடங்கியிருக்கிறது.
வாசிப்புப் பழக்கமே நான் கடலூர் சிறையில் 63 நாட்களை கடத்த பெரிதும் உதவியது. வெளியில் உள்ள நமக்கு நேரம் போவது தெரியாது. இன்னும் சொல்லப்போனால் நேரமே இருக்காது. ஆனால் சிறையில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்துவது அவ்வளவு சிரமமாக இருக்கும். எனக்கு 4 மணிக்கு விழிப்பு வந்து விடும். சமயத்தில் 3 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடும்.
உறக்கம் வராமல் புரளுவது எவ்வளவு சிரமம் என்பது தனிமையில் இருக்கையில்தான் தெரியும். வெளியில் இருக்கையில் உறக்கம் வரவில்லையென்றால், செல்போனை நோண்டலாம்; நெட்ப்ளிக்ஸ் பார்க்கலாம்; காதலியோடு கடலை போடலாம்; ஒரு காப்பி போட்டு குடிக்கலாம்; ஒரு வாக்கிங் போகலாம்.
இது எதையுமே சிறையில் செய்ய முடியாது. புத்தகங்கள் மட்டுமே துணை. சிறை விதிகளின்படி விளக்குகள் அணைக்கப்படக் கூடாது என்பதால், விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கும்.
சிறையில் கடிகாரம் கிடையாது. அதனால் நேரம் என்ன என்பதும் தெரியாது. ரோந்து காவலர்கள் வந்தால் நேரம் கேட்கலாம். காலை 5.30 மணிக்கு, சிறைத் தொழிலகத்தில் வேலை செய்யும் தண்டனைக் கைதிகளுக்காக சங்கு ஊதும். நான் எழுந்தது நாலா, மூன்றா என்பது தெரியாது. ஐந்து முப்பது மணிக்கு சங்கு ஊதியதும், லாக்கப் திறக்கும் 6 மணி வரையிலான அரை மணி நேரம் 2 மணி நேரம் போல கழியும்.
எனக்கு இந்த சிக்கல் கிடையாது. புத்தகம் படித்துக் கொண்டே இருப்பேன். காகங்கள் மற்றும் குருவிகள் காலையில் தவறாது ஓசை எழுப்பும். சில சமயம் சங்கு ஊதாமல் போகும். அப்போது இந்த காக்கை குருவிகள்தான் விடியலைச் சொல்லும்.
இப்படி புத்தகஙக்ள் எனக்கு சிறையில் பெரும் துணையாக இருந்தன. சிறை நூலகமோ சிதிலமடைந்து இருந்தது. சிதிலமடைந்தென்றால் அதில் உள்ள புத்தகங்கள் சிதிலமானவை. சிறைக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் ஆயிரம் விதிகள். பிற்போக்கின் மொத்த உருவமாக சிறை நிர்வாகம் இன்றும் இருந்து வருகிறது. அவ்வளவு எளிதாக புத்தகங்களை நன்கொடை கொடுத்து விட முடியாது. சரி சிறை நிர்வாகமாவாது புத்தகங்களை வாங்கி நூலகங்களுக்குத் தருகிறார்களா என்றால் இல்லை.
2008ல் சிறைக்கு நூலகங்கள் அனுப்ப நான் எடுத்த முயற்சி வெற்றி பெறாமல் போய் விட்டது. இந்த முறை இதை சும்மா விட்டு விடக் கூடாது என, சிறையிலிருந்து வெளியே வந்ததும் அதிகாரிகளிடம் பேசினேன்.
இளம்பகவத் ஐஏஎஸ், தமிழ்நாடு நூலகத் துறையின் இயக்குநராக இருந்து வருகிறார். பொது நூலகங்களில் படித்து ஐஏஎஸ் ஆனவர் இளம்பகவத். அவர் ஐஏஎஸ் ஆவதற்கு முன் க்ரூப் 1 டிஎஸ்பியாக இருந்தவர். ஆறு மாத பயிற்சி முடிந்தபின் ஐஏஎஸ் கிடைத்து டி.எஸ்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்.
இவர் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்தபோது, அந்த பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் அம்ரேஷ் பூஜாரி. சிறைக்கு நூல்கள் அளிப்பதற்கு இளம்பகவத்தின் மூளையில் உதித்த அற்புதத் திட்டம்தான் “கூண்டுக்குள் வானம்”. புத்தகம் நன்கொடை அளிக்க விரும்புவோர் சிறையின் சிகப்பு நாடாவை மீறி அனுப்ப உருவாக்கப்பட்ட திட்டமே இந்த திட்டம். இளம்பகவத்தும், அம்ரேஷ் பூஜாரியும் – முன்னாள் ஆசிரியரும் மாணவரும் இணைந்து உருவாக்கிய திட்டமே இது.
இத்திட்டத்தின்படி, உடனடி செயல்பாடாக சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டது. அந்த அரங்கில் யார் வேண்டுமானாலும் சிறைக்காக நூல்களை நன்கொடை வழங்கலாம். ஒரு QR code உருவாக்கியிருக்கிறார்கள். அதை பயன்படுத்தி எளிதாக சிறை நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டால், அவர்களே வீட்டுக்கு வந்து புத்தகங்களை பெற்றுக் கொள்வார்கள்.
அந்த அரங்கிற்கு சென்று 10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை நன்கொடை அளித்தேன். அங்கே இருந்த துணை ஜெயிலர் விக்னேஷிடம் எவ்வளவு புத்தகங்கள் இலக்கு என்று கேட்டேன். ஒரு லட்சம் என்றார்.
இலக்கு குறைவு; 5 லட்சத்தை இலக்காக்குவோம் என்றேன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். கண்காட்சிக்கு சென்று, புத்தகங்களை நன்கொடை கொடுத்து, அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டதும் எனது நண்பர்களே 20 ஆயிரத்தை பதிப்பகத்துக்கு அனுப்பி சிறைக்கு புத்தகம் வழங்குமாறு என்னை கேட்டுக் கொண்டனர். இது போல பலரும் புத்தகங்களை வாங்கி அனுப்புவதாக வரும் தகவல்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன.
எனது விமர்சனங்களையும், கட்டுரைகளையும் பார்ப்போர் இவன் ஒரு pessimist என்று கருதக் கூடும். எப்போது பார்த்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறான் என்று. ஆனால் என்னைப் போன்ற optimistஐ நீங்கள் பார்க்க முடியாது.
எனக்கு உங்களின் மீது, நம் உறவுகளின் மீது, நம் மக்களின் மீது அபிரிமிதமான நம்பிக்கை உண்டு.
அதன் காரணமாகவே 5 லட்சம் நூல்கள் என்று சொன்னேன்.. அப்படி ஐந்து இலட்சம் புத்தகங்கள் சேர்ந்தால் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்…
மீண்டும் அடுத்த ஞாயிறு.