எனது சிறை அனுபவங்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறேன். விரைவில் நூலாக வரும். அதில் ஒரு அத்தியாயத்தில், என்னை லஞ்ச ஒழிப்புத் துறை பணியிலிருந்து நீக்கிய உத்தரவை நான் பெற்றுக்கொண்ட அனுபவம் பற்றி எழுதியிருக்கிறேன்.
பணி நீக்க உத்தரவுக்கான விளக்க கேட்பு நோட்டீஸை பெற்றபோதே நான் பணியில் இருந்து நிச்சயம் நீக்கப்படுவேன் என்பது தெரியும். இருப்பினும் அதை அமைதியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதாலேயே சிறையில் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் டிஸ்மிஸ் உத்தரவு வந்தபோது என் மனது மிக மிக அமைதியாக இருந்தது. என் காலில் கட்டியிருந்த சங்கிலிகள் உடைபட்டன என்றே நினைத்தேன். நான் ஒரு பட்டாம்பூச்சி போல உலகில் சிறகடித்துப் பறக்கலாம் என்பதை உணர்ந்தேன். நான் நினைத்த பலவற்றை செய்யத் தடையாக இருந்த அரசு வேலை என்னை விட்டு ஒழிந்தே போனது, இனி எனக்கு வானமே எல்லை என்பது மகிழ்ச்சியை அளித்தது.
எந்தத் துறையில் பதினெட்டு ஆண்டு காலம் பணி செய்தேனோ, எந்தத் துறையில் கண் முன்னே பல அரசியல், அதிகார மையங்களின் மற்றொரு மோசமான ஊழல் முகத்தைப் பார்த்தேனோ, எந்தத் துறையில் “எதையும் தைரியமாக கேள்வி கேட்க வேண்டும்” என்கிற பாடத்தை கற்றுக் கொண்டேனோ அதே துறையில் நான் ஒரு புகாரோடு போய் நின்றேன். இந்தப் புகார் அதிகாரத்தின் நடுநாயகமாக இருக்கிற முதலமைச்சர் மீதும், மகன் என்பதாலேயே அமைச்சருமான ஒருவர் மீதும். இதோடு உள்துறை செயலாளர் மீதும். வானமே எல்லை என்று ஆனது என்று சொன்னேன் இல்லையா..அது தான் இந்தப் புகார் கொடுக்கக் காரணமாக அமைந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் நிர்வாக ஆய்வாளர் சார்லஸை தொடர்பு கொண்டு நான் இயக்குநரை சந்தித்து நேரில் புகார் அளிக்க வேண்டும் என்றும், இயக்குநரிடம் நேரம் வாங்கித் தருமாறும் கேட்டேன். சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்த அவர், புதன் கிழமை பகல் 12 மணிக்கு இயக்குநர் நேரம் தந்திருப்பதாகக் கூறினார். புகாரை தயார் செய்து கொண்டு, குறித்த நேரத்தில் சென்றேன். தரைத் தளத்துக்கே ஆய்வாளர் சார்லஸும், தலைமையக டிஎஸ்பி ராமதாஸும் வந்து என்னை அழைத்துச் சென்றனர்.
இயக்குநர் அறைக்கு செல்லாமல், டிஎஸ்பி அறைக்கு சென்றதுமே எனக்கு புரிந்து விட்டது. இயக்குநர் என்னை பார்க்கப் போவதில்லை என்று.
அமர்ந்ததுமே தொடங்கினேன். “ஏன் சார் டைரக்டர் பாக்க மாட்டாரா என்னை ?”
“இல்ல சங்கர். இதுதான் ப்ரொசிஜர்”
“ப்ரொசிஜரையெல்லாம் எனக்கு கத்துக் குடுக்காதீங்க சார். இந்த டிப்பார்ட்மெண்டுல 18 வருசம் வேலை பாத்தவன் நான். என் கிட்ட ப்ரொசிஜர் சொல்லிக் குடுக்குறீங்களா”
“இல்ல. டைரக்டர் நேரடியா புகார்களை வாங்குறதில்ல”
“க்ளெர்க் மேல புகார் கொடுத்தா தான் வாங்க மாட்டாரு. சி.எம் மேல புகார் குடுத்தா கூட வாங்க மாட்டாரா. இல்ல சி.எம் மேல புகார் குடுக்குறதுனாலதான் வாங்க மாட்டேங்குறாரா ?
உங்க கிட்ட புகார் குடுக்குறதுக்கு ரிஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்பத் தெரியாதா எனக்கு ? ஏன் உங்க ஆபீஸ்ல ஐபிஎஸ் ஆபீசர்ங்களே இல்லையா ? நான் ஒரு சிட்டிஸன். சி.எம் மேல புகார் குடுக்க வந்தா, நான் எதுக்கு சார் டிஎஸ்பிக்கிட்ட என் புகாரை குடுக்கணும் ? உங்க டைரக்டர்க்கு என் புகாரை வாங்குறதை விட என்ன வேலை ?
நான் சும்மா வரல. முன்னாலயே நேரம் கேட்டுட்டு வந்துருக்கேன். பாக்குறேன்னு சொல்லிட்டு பாக்காம இருக்குறது முறையா ?”
“இல்ல சங்கர். ஏதோ நீங்க பர்சனல் மேட்டரா வந்திருக்கீங்கன்னு டைரக்டர் நினைச்சிட்டார். காலையிலதான் சி.எம் மேல கம்ப்ளைண்ட்டுன்னு தகவல் வந்துச்சு. அதான் என்னை வாங்க சொல்லிட்டார்.”
“இவருக்கிட்ட எனக்கு என்ன சார் பர்சனல் மேட்டரு ? ஓ… என் டிஸ்மிஸ்ஸலை எதிர்த்து அப்பீலுக்கு இவர்கிட்ட கெஞ்ச வந்துருக்கேன்னு நினைச்சிட்டாரா ?நான் கவர்மெண்ட் சர்வண்ட் இல்ல சார் இப்போ. இந்த வேலைக்காக உங்க கிட்ட வந்து கெஞ்சுவேன்னு நினைச்சீங்களா?”
“இல்ல சங்கர். புகாரை நான் வாங்குறதுதான் முறை”
“சார் உங்க அதிகாரிங்கதான் தேவையில்லாம பிரச்சினை ஆக்குறாங்க. டைரக்டர் இதை வாங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போறதில்லன்னு தெரியும். இதை தூக்கி குப்பையில கூட போடுவீங்க. உங்களை எப்படி நடவடிக்கை எடுக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்.
டைரக்டர் இதை வாங்கிருந்தார்னா, நான் வெளிய போயி ப்ரெஸ்ல இயக்குநரை சந்திச்சேன். அவர் விசாரிப்பதாக உறுதி அளித்தார்னு சொல்லுவேன். ஆனா இப்போ நேரம் குடுத்துட்டு சந்திக்காம தவிர்க்கிறதை வெளிய போயி, டைரக்டர் சி.எம் மேல கம்ப்ளைண்ட்டுன்னு பயந்துக்கிட்டு என்னை சந்திக்காம தவிர்த்துட்டாருன்னு சொல்லுவேன். இதையும் பிரச்சினை பண்ணுவேன். இதெல்லாம் எதுக்கு சார் ?
உங்க அதிகாரிங்க எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா ? உங்களை முன்னுக்குத் தள்ளி விட்டுட்டு கோழை மாதிரி ஒளிஞ்சுக்குறாங்க. இதுதான் சார் இவங்க லட்சணம். இதுக்கு ஐபிஎஸ் வேற” என்று பேசியதும் அவருக்கோ சங்கடமென்றால் அப்படி ஒரு சங்கடம். நெளிந்தார். அவரோடு ஆய்வாளர், காவலர் ஒருவர் இருந்தார்.
அவர் ஒரு டிஎஸ்பி. அவரிடம் மோதுவதால் எதுவும் ஆகப் போவதில்லை என்பது தெரியாதவன் அல்ல நான். ஆனால் என்னை சந்திக்க மறுத்த டிஜிபி கந்தசாமிக்கு ஒரு சாமானியனான என் குரல் கேட்கப்பட வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ஊழல் என்பது அரசியலின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படுகிறது. அரசியல்வாதினா அப்படி இப்படித் தான இருப்பான்..என்று மக்களின் மனதை மாற்றும் அளவுக்கு ‘பேர்’ சம்பாதித்து வைத்திருக்கின்றனர் அரசியல்வாதிகள். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய எனக்கு ஊழல் என்பதன் அத்தனை வடிவமும் தெரியும். அங்கு பணி செய்த காலம் மட்டுமல்ல, இத்தனை நாட்கள் நான் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். ஊழல் ஒரு சமுதாயத்தை எப்படி கரையான் போல் அரிக்கும் என்பதைப் பார்த்து வருகிறேன்.
ஊழல் என்பது எதோ ஒரு அரசியல்வாதி கொள்ளை இலாபம் பார்க்கிறான் நமக்கு அதனால் என்ன என்பதல்ல. ஊழல் என்பது உங்களையும் என்னையும் நேரடியாக பாதிக்கக்கூடியது. உதாரணத்துக்கு நீங்கள் குண்டும்குழியுமான சாலையில் செல்லும்போது எத்தனை கஷ்டப்படுகிறீர்கள்..உடல்வலி, விபத்துகள், கால தாமதங்கள் , வாகனத்துக்கு வீண் செலவு, எரிச்சல் என ஏற்படுகிறது இல்லையா? இது எதனால்? இதில் ஊழல் இல்லையா? ஒரு மழைக்கு கூட தாங்காத சாலையை ஒருவர் தைரியமாகப் போட்டுவிட்டு போகிறார் என்றால் அதற்குப் பின் எத்தனை இலட்சங்கள் ஊழலாக கைமாறியிருக்கும்? அதன் பாதிப்பினை நாம் தானே அனுபவிக்கிறோம். இது ஒரு உதாரணம் தான்..கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விளையாட்டுத் துறை, குடி தண்ணீர் , நிலம் இப்படி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்..ஊழல் இங்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது இல்லையா? இது நம்மை பாதிக்காதா? இதற்கெல்லாம் நாம் புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? குரல் கொடுக்கப்போகிறோமா?
இங்கு பலருக்கும், சாலையில் போக்குவரத்துக் காவலர் வாங்கும் 200 ரூபாய்தான் பெரிய லஞ்சம். வானம் இடிந்து விழுந்து விட்டது போல குதிப்பார்கள். டைம்ஸ் நவ் சேனலைப் பார்த்தால், ஒரு காவலர் 200 ரூபாய் வாங்குவதை ஸ்டிங் ஆப்பரேசன் செய்துவிட்டு, அவனால் இந்த சமுதாயமே கெட்டு விட்டது போல, ஒரு வாரத்துக்கு கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், ரெட் ஜெயண்ட் அடிக்கும் கொள்ளைகளை கண்டும் காணாமல் இருப்பார்கள். ரெட் ஜெயண்டிடம் கூசாமல் விளம்பரம் கேட்டு தவம் கிடப்பார்கள். சமுதாயத்தில் எது பெரும் ஊழல் ? 200 ரூபாயா ? 2000 கோடிகளா ?
எதற்காக ஸ்டாலின், உதயநிதி, பணீந்திர ரெட்டி மீது புகார் ? இவர்கள் செய்தது ஆணவத்தின் உச்சம். திமிரின் உச்சம். அகங்காரத்தின் உதாரணம்.
தந்தை முதலமைச்சராம்; மகன் படம் எடுத்து வெளியிடுவாராம்; தந்தையின் ஆட்சியில் அவரது உள்துறை செயலாளர் முதல் நாள் சிறப்பு காட்சி கூடாதென உத்தரவிட்டு விட்டு, மறுநாள் 5 காட்சிகள் முடிந்தது என்று தெரிந்து கொண்டு, சாவகாசமாக இரவு 9 மணிக்கு அரசாணை வெளியிடுவாராம். இதை ‘குணமேவிய தமிழர்கள்’ அனைவரும் வேடிக்கை பார்ப்பார்களாம்.
எனது இத்தனை வருட அனுபவத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது, வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களை ரெட்ஜெயண்ட் வாங்கியதுமே மாட்டிக் கொண்டார்கள் என்று. வழக்கின் பல்வேறு விபரங்களையும், என்னிடம் வந்து சேர்ந்துள்ள தகவல்களை சிலவற்றையும் strategy காரணமாக சொல்ல மாட்டேன். ஆனால் வலுவான ஆதாரங்கள் உள்ளன. வழக்கை ஒரு நல்ல அதிகாரி விசாரித்தால் தந்தை மகன் இருவரும் சிறை செல்வார்கள். உடந்தையாக இருந்த பணீந்திர ரெட்டி உட்பட.
ஸ்டாலின் குடும்பம் இவ்வளவு முட்டாள்களா அல்லது மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. புகாரைத் தயார் செய்தபோதே, இதில் எங்கே ஆதாரங்கள் உள்ளன, அதை எப்படி சேகரிக்க வேண்டும், யாரிடம் பேச வேண்டும், வழக்கு தொடுக்க எந்த வழக்கறிஞரை வைக்க வேண்டும் என்ற சித்திரம் விரிந்து கொண்டே இருந்தது.
இந்த வழக்கு தண்டனையில் முடியும் சாத்தியம் உள்ளது என்பதும் தெரிந்தது. “என்ன சார் இவங்களுக்கு அறிவு மழுங்கிப் போச்சா ? ஏன் இப்படி மாட்டிக்கிறாங்க” என்று ஒரு அதிகாரியிடம் கேட்டபோது அவர், “ஆணவம் கண்ணை மறைக்குது சங்கர். எது எதெல்லாம் செய்யக் கூடாதோ, அது அதையெல்லா செய்யிறாங்க. நம்பளை யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறாங்க. இதே மாதிரிதான் அந்த அம்மாவும் நினைச்சாங்க. கடைசியில என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா” என்றார்.
நான் பேசிய அந்த அதிகாரி, ஊழல் வழக்கில் நிபுணர் எனக் கூறலாம். அவர் இந்தப் புகார் பற்றி பேசிய இந்த வார்த்தைகளை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
இதற்கு முன்பெல்லாம் என்னிடம் கிடைக்கும் பயனுள்ளத் தகவல்களை அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேனோ, அத்தகைய ஊடகத்தையோ, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையோ தேர்ந்தெடுத்து அதைப் பகிர்வேன். அவர்கள் அந்த தகவலை எப்படி சமுதாயத்துக்காக, மக்களுக்காக பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கிறேனோ, அதற்குத் தகுந்தாற்போல தகவல்களை பிரித்துத் தருவேன். அவர்கள் வழக்குத்தொடருவதற்கு முழு காரணமாக இருந்திருக்கிறேன்.
இப்படி திமுக, அதிமுக தொடர்ந்த பல ஊழல் வழக்குகளில் எனது பங்கு இருக்கிறது என்பது திமுகவின் மூத்த தலைவர்களுக்குத் தெரியும்.
இனி எந்தத் தகவல்களையும் யாரிடமும் கொடுப்பது இல்லை. அத்தகவல்களை உரிய முறையில் நானே பயன்படுத்துவது என்றும், ஊழல் புகார்களை நானே அளிப்பது எனவும், வழக்கு என்றாலும் நானே தொடுப்பது எனவும் கடலூர் சிறையில் முடிவெடுத்து விட்டேன்.
அதன் விளைவே நானே அளித்த புகார். நான் குறிப்பிட்ட பல பத்திரிக்கையாளர்கள், எனக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பகை, நான் பிஜேபியின் கைக்கூலியாக மாறி அவர்கள் சொற்படிதான் இந்த புகாரை அளித்தேன். நான் திமுகவை விமர்சனம் செய்வதால் பிஜேபி வளர்ந்து விடும், நான் மதவாத சக்திகளுக்கு துணை போகிறேன், அதிமுகவின் கைக்கூலியாகி விட்டேன் என்றும் கிசுகிசு பேசுகிறார்கள்; வதந்திகளை பரப்புகிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது நேர விரயம். இவர்களுக்கான பதிலை காலமும் எனது செயல்பாடுகளும் வழங்கும். துணிவு, வாரிசு ஆகிய இரண்டு படங்களை வைத்து உதயநிதி அடித்த கொள்ளையை விட, இளைஞர்களை, சிறுவர்களை இந்த குடும்பம் தன் பேராசைக்காக சுரண்டுவது எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. படிக்க வேண்டிய இளைஞர்கள், 120 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகர்களுக்காக, நள்ளிரவு முழுக்க தியேட்டர்களில் காத்திருப்பது, நேரத்தை செலவழிப்பது எனக்கு சீற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதைக் கண்டு வாளாவிருக்க என் மனசாட்சி என்னை அனுமதிக்கவில்லை. அதன் விளைவே இந்தப் புகார்.
இப்படி முதல்வரின் மீது புகார் கொடுப்பது என்பது சாதாரண நிகழ்வு அல்ல என்பதும் இதன் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதும் நான் அறியாததல்ல. நான் வேலை பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலையில் இருந்து என்னை டிஸ்மிஸ் செய்த பின்பு நேரடியாக ஒரு சாமானியனாக ஒரு முதல்வர் மீது புகார் கொடுக்கிறேன் என்பதற்கு இரண்டே காரணங்கள் தான்.
முன்பு நான் செய்து கொண்டிருந்ததை ஒரு சாமானியனாக இன்று நேரடியாக கேள்வி கேட்கிறேன்..
மற்றொன்று உங்களுக்கு இருக்கும் பல்வேறு சுமைகளில் கேள்வி கேட்க நினைத்தும் முடியாத உங்கள் பிரதிநிதியாகக் கேட்கிறேன்.
இனியும் கேட்பேன்.
அடுத்த ஞாயிறும் பேசுவோம்.
நீங்களே பதவியில் இருந்து விலகி கால் விலங்கை உடைத்திருக்கலாமே. அவர்களாக நீக்கும் காத்திருக்க வேண்டியதில்லையே. அப்புறம் ஊழலை பொறுத்தவரை அதிமுக பாஜக எல்லாம் பெரிய அளவில் கரை கண்டு விட்டனர் திமுக ஊழல் எல்லாம் அதனுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே கிடையாது. மக்களிடமும் எடுபடாது
உங்களோடு நேரடியாக பேசிய அனுபவம் கிடைத்தது போல உணர்கிறேன் sir,🔥 உங்கள் எழுத்துக்கள் படிக்க ஆர்வமாக உள்ளேன் sir.🔥🔥 உங்களை பார்த்து வணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் sir,❤️❤️❤️
Sir. Please check formatting and proof read before publishing. A lot of words are without spaces.
🔥
Shankar please understand. You can go against DMK as you like but please also understand that it is helping communal BJP’S growth in TN. Im not telling you to stop going against DMK but also crticize BJP which rules the centre. The state will become a communal graveyard if BJP comes to power. –Your fan.