ஓய்வெடுங்கள் ஓபிஎஸ்… இப்படிச் சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்கலாம். உங்களுக்கு வாக்களித்த தொண்டன், உங்கள் அரசியலை பெரிதாக பார்த்தவன், எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் உண்மையான விசுவாசி என்கிற உரிமையில் சொல்கிறேன். அந்த உரிமை எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். அரசியலில் ஏது ஓய்வு என்று நீங்கள் கேட்கலாம். ஓய்வு உங்கள் செயல்பாட்டால் உங்களை நோக்கி வந்துள்ளது. அனைத்து வகையிலும் நீங்கள் முடக்கப்பட்டுள்ளீர்கள்.
உங்கள் நலனை சுற்றியே அரசியலை இயக்கலாம் என்று நினைக்கிறீர்கள். அது முடியாது. அதனால் இரண்டு பாதகங்கள் நடக்கிறது. ஒன்று அதிமுகவின் நோக்கம் சிதைக்கப்படுகிறது. அதிமுகவின் இயல்பான திமுக எதிர்ப்பு சிதைக்கப்படுகிறது. அதனால் அதிமுகவுக்கு அழிவு. இரண்டு உங்கள் செயலால் எதிராளிகளை வாழவைப்பதை தவிர வேறு எந்த பயனும் இல்லை என்பது தெளிவாகிறது.
இதை வேறு யாரும் செய்யவில்லையா திமுகவில் உள்ளவர்கள்கூட இப்படி சுயநல அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு இல்லையா என நீங்கள் கேட்கலாம். ஆனால் அவர்கள் செயல் கட்சிக்குள்ளேயே, கட்சியை வளர்க்கும் நோக்கில் தான் உள்ளது. ஆனால் உங்கள் செயல்பாடு உங்களைச் சுற்றியே இருக்கிறது. அரசியலில் நுழையும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு போராட்ட வாழ்க்கை இருக்கும். ஆனால் உங்களின் ஆரம்ப கால வாழ்க்கையை சிறிது பின்னோக்கி பார்த்தால் கொத்தடிமை அரசியல்தான் இருக்கும்.
சாதாரண இளைஞரணி செயலாளராக 1982-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட உங்களின் 40 ஆண்டுகால வளர்ச்சியை பின்னோக்கி பார்த்தால் எவ்வித போராட்ட வாழ்க்கையோ, உங்களுக்கான பெரிய அளவிலான கட்சி செல்வாக்கோ இருந்ததில்லை என்பது தெரியும். 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அம்மா அம்மா என்று அழைக்கும் ஜெயலலிதாவுக்கு எதிரான அணியில் இருந்தவர்தான் நீங்கள். எப்படியோ அணிகள் இணைந்தபின்னர் உங்கள் பதவி போகாமல் பார்த்துக்கொண்டீர்கள்.
பொதுவாக ஜானகி அணியினரை ஜெயலலிதா ஒன்றுமில்லாமல் ஆக்கினார் ஆனால் அதிலிருந்து நீங்கள் தப்பிக்க உதவியது சசிகலா குடும்பத்தின் தொடர்பு. உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது டிடிவி தினகரனின் நட்பு. சமுதாய செல்வாக்கும் நீங்கள் காட்டிய பணிவும் டிடிவியை கவர சின்னம்மாவின் கனிவு பார்வை உங்கள் பக்கம் திரும்பியது. விளைவு நம்பிக்கைக்கு உரியவராக இருக்க ஒரு அடிமையை தேடிய அவர்களுக்கு ’நம் இனமடா இவர்’ என்கிற பாணியில் உங்கள் பணிவு திருப்தியளித்தது.
2001 ஆம் ஆண்டு உங்களுக்கு பெரிய குளம் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு முதல்முறையே சக்திவாய்ந்த வருவாய்த்துறை அமைச்சர் பதவி. இவ்வளவும் கட்சிக்குள் செல்வாக்காக இருந்தவர் என்பதால் உங்களுக்கு கிடைத்த பரிசா? அல்லது தேனி மாவட்டத்தில் மக்கள் தலைவராக அறியபட்டவர் என்பதால் கிடைத்த பரிசா? இல்லவே இல்லை. நம் சொல்பேச்சு கேட்கும் ஒரு அடிமை, வருகின்ற பங்கை சரியாக ஒப்படைப்பார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு கிடைத்த அமைச்சர் பதவி. இதைத் தவிர உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.
2002 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் தேர்தல் ஏஜண்டாக பணியாற்ற வாய்ப்பளித்தார் சசிகலா. அதில் நீங்கள் காட்டிய பணிவும் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிப்பவர் போல் காட்டிக்கொண்டதும், ஏற்கெனவே சசிகலா உங்களைப்பற்றி கொடுத்த சர்டிபிகேட்டும் ’பரவாயில்லையே’ என்று ஜெயலலிதாவை எண்ண வைத்து குட் புக்கில் இடம் பிடித்தீர்கள்.
உங்கள் பயணம் ஏற்றத்தில் போனது. டான்சி வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவி விலகியபோது யாரையும் நம்பாமல் ஜூனியரான உங்களை முதல்வராக்கியதற்கு காரணம் சசிகலாவின் சர்டிபிகேட்டும், நீங்கள் அவர்கள் குடும்பம் காட்டிய பணிகளை முடித்து கொடுத்த விதமும்தான். அதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த நீங்கள் முதல்வரானவுடன் முதன்முதலாக ஓபிஎஸ் என தமிழகம் முழுவதும் அறியப்பட்டீர்கள். ஆனாலும் மாவட்டத்தில் உங்களுக்கென்று எந்த செல்வாக்கும் பின்புலமும், செயல்பாடும் இல்லாத நிலைதான். அதற்கு தடையாக இருந்தது டிடிவி.
அதுவும் 2004 ஆம் ஆண்டு நீங்கியது. பெரியகுளம் மக்களவை தேர்தலில் டிடிவி தோற்று மன்னார்குடிக்கு திரும்பச்செல்ல அப்போது ஆரம்பித்தீர்கள் உங்கள் ஆட்டத்தை. ஆட்டத்தை என்றால் கட்சி செல்வாக்கை வளர்த்ததென்று, யாரும் தப்பாக நினைத்து விட போகிறார்கள். பெரியகுளத்தில் உங்களை கட்டிப்போட்டிருந்த சங்கிலிகள் உடைபட, தேனெடுப்பவன் புறங்கையை நக்குவதுபோல் அடுத்தடுத்து உங்கள் வாழ்க்கை வளமையை உயர்த்திக்கொண்டீர்கள். அப்போதும் உங்களுக்காக ஒரு செல்வாக்கு மிக்க கூட்டத்தையோ உங்களை நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது நன்மையோ செய்ததில்லை. மாவட்டத்தில் செல்வாக்கை அதிகரிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அப்படிப்பட்ட நபரும் நீங்கள் இல்லை. உங்கள் வாழ்க்கை நன்றாக போனதால் எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படவில்லை.
மீண்டும் முதல்வரான ஜெயலலிதா உங்கள் விசுவாசத்தை பாராட்டி பொதுப்பணித்துறையை கொடுக்க அடித்தது யோகம் உங்களுக்கு. அப்போதும் யாருக்காவது ஏதாவது செய்தீர்கள், மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்தீர்கள் என்று பார்த்தால் ஜீரோதான். ஆனால் உங்கள் குடும்பத்தார் வளம் பெற்றார்கள். உங்கள் சகோதரர்கள், பிள்ளைகளின் பெயர்களில் சொத்துக்கள் குவிந்தன. உங்களை நம்பி இருந்த பால்ய கால தோழர் ஜின்னாபாய்க்கு கூட நீங்கள் எதுவும் செய்யவில்லை என்பதுதான் வரலாறு.
2006 தேர்தலில் ஜெயலலிதாவின் ஈகோ காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் பதவி உங்களுக்கு கிடைத்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தபோது வரலாறு காணாத வளர்ச்சியை நீங்கள் அடைந்தீர்கள். ஆனால் அதற்காக சொந்த மாவட்டத்தில்கூட நீங்கள் ஒரு துரும்பைகூட அசைத்ததில்லை. நீங்கள் செய்ததெல்லாம் சின்னம்மா குடும்பத்திற்கு காட்டிய விசுவாசம்தான். 2014 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாக ஜெயலலிதா இரண்டாம் முறையாக பதவி விலக, முதல்வர் வாய்ப்பை அடிமை விசுவாசியான உங்களுக்கு மீண்டும் வழங்கினர் சின்னம்மா குடும்பத்தினர். அதற்கு ஏற்ப நீங்களும் விசுவாசமாக நடந்துக்கொண்டீர்கள்.
2015 ஆம் ஆண்டு உங்கள் வளர்ச்சி, சுயரூபம் ஜெயலலிதாவுக்கு புரிய ஆரம்பித்தது. உங்களை ஓரங்கட்ட நினைத்தார் ஜெயலலிதா. அப்படி ஜெயலலிதா நினைத்தால் அதன் பின்னர் யாராக இருந்தாலும் அவர்கள் செல்லாக்காசுதான். ஆனல் நீங்கள் வழக்கமான அரசியல்வாதி இல்லையே. சின்னம்மா குடும்ப விசுவாசி அல்லவா? அதனால் காப்பாற்றப்பட்டீர்கள். அதுமட்டுமல்ல 2016 ஆம் ஆண்டு தேர்தலில் உங்களுக்கு சீட்டும் கொடுத்தார் ஜெயலலிதா. பின்னர் நிதியமைச்சரும் ஆக்கினார். அனைத்தும் உங்கள் மக்கள் செல்வாக்கா? இல்லை சின்னம்மா குடும்பத்துக்கு நீங்கள் காட்டிய விசுவாசத்தான் கிடைத்த பரிசு.
2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் உங்கள் பதவி ஆசைக்கும், விசுவாசத்துக்கும் இடையே ஒரு போட்டி வந்தது. டெல்லி மேலிடத்துடன் நெருக்கமாகி நீங்கள் நகர்த்திய காய்களை லேட்டாக புரிந்துக்கொண்டது சசிகலா குடும்பம். நமக்கு வாய்த்த அடிமை மிகமிக திறமைசாலி என சசிகலா புரிந்துக்கொண்டார். தொடர்ந்து விசுவாசம் காட்டி முதல்வராக தொடர கனவு கண்டீர்கள், ஆனால் ஜெயலலிதா இருக்கும்வரைதான் நமக்கு விசுவாசி தேவை, விசுவாசியின் விசுவாசம் இப்போது வேறு இடத்தில் என்பதை புரிந்துக்கொண்ட சசிகலா தான் முதல்வராக பொறுப்பேற்க நினைத்து விலக சொன்னபோது நீங்கள் விக்கித்துப் போனீர்கள்.
ஒற்றை ஆளாக சின்னம்மா குடும்பம் முன் நீங்கள் நின்றபோதுதான் நீங்கள் செய்த தவறுகள் உங்களுக்கு புரிந்தது. நாங்கள் இல்லாவிட்டால் நீ ஏது என அடித்து விரட்ட எதிரணியில் தஞ்சம் புகுந்தீர்கள். பதவிக்காக எதையும் செய்யும் நீங்கள் அப்போதும் யாருடைய நிழலிலாவது அண்டி பதவியை தக்க வைக்கலாம் என்று எண்ணித்தான் தர்மயுத்த போராட்டம் நடத்தினீர்கள். நான் சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினார் என ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னபோதுதான் புரிந்தது நீங்கள் பதவிக்காக எங்கும் செல்ல தயங்க மாட்டீர்கள் என்று.
சசிகலா சிறை செல்ல முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி குரூப் கைப்பற்ற தர்மயுத்தம் நடத்திய நீங்கள் தனிமைப்பட்டு போனீர்கள். உங்களை நம்பி 11 எம்பிக்கள், 11 எம்.எல்.ஏக்கள் பின்னால் வந்தார்கள். அதில் முக்கியமானவர் கே.பி.முனுசாமி, பொன்னையன், பி.எச்.பாண்டியன், மதுசூதனன், மைத்ரேயன் போன்றோர். அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனே உங்கள் பக்கம் வந்தார். வந்தவர்கள் ஏதோ உங்களால் வாழ்வு பெற்றவர்களோ, உங்கள் விசுவாசிகளோ அல்ல. சசிகலா குடும்பத்தை பிடிக்காதவர்கள், தினகரனின் ஆதிக்கத்தை வெறுத்தவர்கள். நீங்கள் அவர்களுக்கு ஏதாவது செய்வீர்கள் என்கிற நம்பிக்கையில் வந்தவர்கள்.
உங்கள் இடத்தில் வேறு ஒரு தலைவர் இருந்திருந்தால், அன்று நிச்சயம் ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும். எடப்பாடி பழனிச்சாமி தர்மயுத்தம் நடந்த சமயத்தில் மாபெரும் தலைவரெல்லாம் இல்லை. ஆனால் நீங்கள் தோல்வியடைந்ததற்கு காரணம், உங்களை உஙக்ள் கட்சியினரே நம்பவில்லை என்பதுதான்.
உங்களை நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது செய்தீர்களா என்றால், எதையும் செய்யவில்லை என்பதே உண்மை. நீங்கள் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்றதும் நடக்கவில்லை. டெல்லி மேலிடத்தை நாடினீர்கள். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயன்ற டெல்லி மேலிடம் உங்களுக்கு மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியது. சசிகலா, தினகரன் விரட்டப்பட்டு டெல்லி மேலிடத்தால் வலுக்கட்டாயமாக அதிமுகவுக்குள் திணிக்கப்பட்டீர்கள். அப்போதும் உங்களுடன் இருந்தவர்களுக்கு ஏதாவது செய்தீர்களா என்றால், இல்லவே இல்லை.
நீங்கள் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என வளமான பதவியை வாங்கிக்கொண்டீர்கள். இப்போதும் உங்கள் வளர்ச்சிக்கு உதவியது இன்னொரு மேலிட கைதான், உங்கள் செல்வாக்கு அல்ல. உங்களுடன் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி திரும்ப கிடைத்தது. ஆனால் வளமில்லாத துறை ஒதுக்கப்பட்டது. மற்றவர்கள் கதி அதோ கதியானது. உங்களால் தூண்டிவிடப்பட்டு பேசிய மைத்ரேயனை கட்சிக் கூட்டத்திலேயே அவமரியாதை செய்தார் மூத்த அமைச்சர் ஒருவர் சிரித்தப்படி பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.
உங்களுடன் பயணித்த ஒருவருக்கும் ஒன்றும் செய்யாமல் உங்கள் மகனை உருவாக்குவதிலும், உங்களை வளமாக்கி கொள்வதிலும் கவனம் செலுத்தினீர்கள். நீங்கள் போராட்ட அரசியல்வாதி இல்லை என்பதை அப்போது பலர் கண்ணெதிரே பார்த்தனர். மாவட்ட செயலாளர்கள் ஒருவர்கூட உங்களை மதித்ததில்லை, கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை தூக்கி நிறுத்துவது, அவர்களுக்கு பதவி வாங்கி தருவது என்கிற எந்த காரியத்தையும் நீங்கள் செய்யவில்லை. உங்களை கட்சிக்குள் சேர்த்தாலும் பாஜகவின் விசுவாசியாகவே உங்களை பார்த்த எடப்பாடி அண்ட் கோ நாங்களே உங்களுக்கு விசுவாசியாக இருக்கிறோம் அவர் எதற்கு என டெல்லி மேலிட காலில் விழ உங்கள் செல்வாக்கு சரிய தொடங்கியது.
விசுவாசத்தை காட்டுவதில் கொத்தடிமை புகழ் என பெயர்பெற்ற என்னையே வீழ்த்திவிட்டாரே என எண்ணும் அளவுக்கு எடப்பாடி காட்டிய விசுவாசம், டெல்லி மேலிடத்துக்கு எடப்பாடி மீது நம்பிக்கையை அதிகரித்ததோடு, எடப்பாடியை சேர்த்துக் கொண்டால் பலன் உண்டு, கட்சி அவர் பின்னால்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டது. ஆனால் ஓபிஎஸ் அவர்களே நீங்கள் ஒன்றை தவறவிட்டீர்கள்; ஆனால் எடப்பாடி அதை தவறவிடவில்லை. விசுவாசத்தை காட்டிவிட்டு காரியமானால் போதும் என்று நீங்கள் சும்மா இருந்தீர்கள். விசுவாசம் காட்டினாலும் கட்சி நமது கைக்குள் இருக்கவேண்டும் என்று கணக்கு போட்டு வேலை செய்தார் எடப்பாடி. ஏனென்றால் அடிமட்டத்திலிருந்து போராடி அரசியலுக்கு வந்தவர் எடப்பாடி. அவருக்கு கள நிலவரம் தெரியும். தன்னோடு சேர்ந்து கட்சியும் வளர வேண்டும்; கட்சிதான் நமது வளர்ச்சிக்கு ஆதாரம் என்பதை எடப்பாடி புரிந்து வைத்திருந்தார். ஆனால் நீங்களோ, உங்கள் வளர்ச்சி போதும், கட்சி அழிந்து நாசமானால் என்ன என்ற முடிவை எடுத்தீர்கள். அதுதான் உங்கள் இயல்பு. முழுக்க முழுக்க சுயநலம். இதன் காரணமாக்த்தான் இன்று நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள்.
தனக்கான செல்வாக்கு என்பது மாநிலம் முழுவதும் தனக்கான ஆட்கள் இருக்க வேண்டும், அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டும். அதிமுகவின் வலுவான கோட்டை கொங்கு மண்டலமும், தென் மாவட்டங்களும்தான். அங்கு வலு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். ஆனால் நீங்கள் உங்கள் சமூகம் சார்ந்த தலைவர்களுக்கோ, மக்களுக்கோ ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடாததால் தென் மாவட்டங்களில் உங்கள் சொந்த மாவட்டத்தில்கூட உங்களுக்கு விசுவாசி இல்லை என்பது வெட்டவெளிச்சமானது.
உங்களை நம்பி வந்த கே.பி.முனுசாமி உங்களால் பயனில்லை என்று தெரிந்து எடப்பாடி பக்கம் தாவினார். இன்று எடப்பாடியின் முக்கிய வலது கை அவர்தான். இப்படி உங்களை நம்பி வந்தவர்கள் எல்லாம் உங்களின் சுயநலனையும், சுயநலனுக்காக யாரையும் காவு கொடுக்கத் தயங்க மாட்டீர்கள் என்பதை உணர்ந்தபோது, எதிரணி பக்கம் தாவினர். அதிமுகவின் அடிப்படையான வாக்கு வங்கியை எடப்பாடி கொங்கு மண்டலத்தில் தக்க வைத்தார். ஆனால் நீங்கள் டிடிவியிடமும், திமுகவிடமும் தென்மாவட்டத்து வாக்குகளை தாரை வார்த்து கொடுத்தீர்கள்.
முதல்வர் வேட்பாளர் நான் தான் என அடம்பிடித்தீர்கள் பெரிதாக சண்டை போடூவீர்கள் என்று பார்த்தால் பெரிய அந்தர்பல்டி அடித்து ஒதுங்கிக்கொண்டீர்கள். மற்றவர்களைவிட அதிமுகவில் உங்கள் பலம் என்னவென்று உங்களுக்கு தெரிந்ததால் தான் ஒதுங்கினீர்கள் என்பது உங்களைத்தவிர யாருக்கு தெரியும். 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுகவின் தென் மாவட்ட வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதை கடைகோடி அதிமுக தொண்டன் கூட உணருவான். இதை உணர்ந்த காரணத்தினாலேயே, டிடிவி தினகரன், அதைக் கண்டித்து விரிவான அறிக்கையை அளித்தார். ஆனால் அந்த குறைந்தபட்ச அரசியலும், புரிதலும் இல்லாத நீங்கள் அச்சட்டம் நிறைவேற துணை நின்றீர்கள்.
அதன் விளைவு உங்கள் சொந்த மாவட்டத்திலேயே அதிமுக சாதிக்க முடியவில்லை. நீங்களே போராடித்தான் வென்றீர்கள். கடைகோடி பதவிகளிலும் எடப்பாடி அணியினர் ஆக்கிரமித்தபோது டெல்லி மேலிடம் பார்த்துக்கொள்ளும் என்கிற கொத்தடிமை மனப்பான்மையிலேயே காலம் தள்ளினீர்கள். எதிர்க்கட்சித்தலைவராக நான் இருப்பேன் என மீண்டும் போர்க்கொடி தூக்கினீர்கள், அங்கும் எடப்பாடி கையே ஓங்கியதால் மவுனமாக ஒதுங்கினீர்கள். அப்போதும் நீங்கள் அடிப்படை விஷயத்தை உணரவில்லை. அது நீங்கள் அதிமுகவில் தனிமரம் என்பதை.
மாவட்டச் செயலாளர்கள், நகர, பகுதி, கிளைக்கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என நீக்கமற எடப்பாடி அணியினர் நிறைந்துள்ளனர். எடப்பாடிக்கு இணையாக தலைவர் பதவி கேட்கும் நீங்கள் எந்த அளவுக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை வைத்துள்ளீர்கள். எத்தனை பேருக்கு உதவினீர்கள்? எத்தனை மாவட்டங்கள் உங்கள் கையில் உள்ளது என்று கூற முடியுமா? பொதுக்குழு உறுப்பினர்களில் 10% கூட ஆதரவு இல்லை என்பது வெளிப்படையாக தெரியும் ஒன்று. அதிமுகவுக்கு உள்ளே எந்தவித செல்வாக்கும் இல்லாத தலைவர் என்பது உங்களுக்கும் தெரியும்.
ஆனால் வழக்கமான உங்கள் ஆசையால் எதையும் செய்ய துணிந்துவிட்டீர்கள். அதிமுகவின் அடிப்படையே திமுக எதிர்ப்புத்தான், ஆனால் அதிலும் நீங்கள் உறுதியாக இல்லை, ஒரு கட்டத்தில் திமுகவுடன் இணைந்து அதிமுகவை பலகீனப்படுத்தும் வேலைகளை செய்தீர்கள். உங்கள் மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி வழங்குகிறார். ‘முதல்வர் ஸ்டாலின் திறம்பட ஆட்சி நடத்துகிறார்’ என பாராட்டுப் பத்திரம் வாசித்தார். இதையெல்லாம் அதிம்,உக தொண்டன் ரசிப்பான் என்றா நினைக்கிறீர்கள் ?
பாஜகவுடன் கைகோர்த்து அதன்மூலம் காரியம் சாதிக்கலாம் என பாஜக ’ஜி’ ஆகவே மாறிப்போனீர்கள். அழையா விருந்தாளியாக பாஜக விழாக்களில் பங்கேற்பது, அதன்மூலம் மீண்டும் நம்மை அதிமுகவில் திணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
மற்றொருபுறம் உங்களை தர்மயுத்தம் நோக்கி தள்ளிய சசிகலா, டிடிவி பக்கம் இணைந்து ஏதாவது செய்ய முடியுமா என முயற்சி எடுக்கிறீர்கள். என்ன செய்தாலும் ஓபிஎஸ் அவர்களே நீங்கள் தனி மனிதர்தான். நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் போராளி அல்ல, அதிமுகவில் உங்களுக்கு விசுவாசிகளும் இல்லை, அதிமுகவும் உங்கள் கையில் இல்லை. இதை டெல்லி மேலிடமும் புரிந்துக்கொண்டது.
ஆனால் நீங்கள் தற்போது எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறீர்கள். உங்களுக்கு தேவை ஓய்வு. மக்கள் தலைவராக இல்லாமல் கொத்தடிமையாகவே யாராவது ஒருவரால் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்ட நீங்கள், தங்கத்தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை வைத்து அதிமுகவில் நல்ல தலைவராக வளராமல் உங்களையும், குடும்பத்தையும் மட்டுமே வளர்த்துக்கொண்டதால் இன்று தனிமைப்பட்டு நிற்கிறீர்கள்.
இப்போதும் தமிழத்தில் உள்ள பாஜக தலைவர்கள் சிலர் பேச்சைக்கேட்டு அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையை செய்கிறீர்கள். அவர்களை நம்பியவர்கள் கதி என்ன ஆனது என்பது தமிழகம் அறிந்த ஒன்று. உங்கள் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்து போன ஒன்று. நல்ல மரியாதையுடன் ஓய்வெடுப்பது உங்களுக்கு நல்லது என்பதை உண்மையான அதிமுக தொண்டனாக சொல்கிறேன்.
தமிழகத்தில் அதிமுக, திமுக இருந்தால் மட்டுமே அமைதியான அரசியல் தமிழகத்தில் இருக்கும். உங்களை போன்றோர் சுயநலத்தால் அதிமுக முடங்கினால் அந்த இடத்தில் காலூன்றும் சக்தியால் தமிழக அமைதி கெடும்.
அரசியலில் வெற்றிடம் இருக்காது. தமிழகத்தில் திமுக ஆதரவு வாக்குகளை விட, திமுக எதிர்ப்பு வாக்குகளே அதிகம். இதை நன்றாக உணர்ந்ததால்தான் ஜெயலலிதா மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த அதிமுக பலவீனமாவதும், அதன் வாக்குகள் சிதறுவதும், பிஜேபியின் வளர்ச்சிக்கே உதவும்.
அதற்கு காரணமாக இருப்பதை விட யதார்த்தத்தை உணர்ந்து அமைதியாக ஓய்வெடுங்கள் ஓபிஎஸ். அதிமுகவை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், உங்களுக்கு நல்ல பெயராவது மிஞ்சும்.
அன்புடன்
எம்ஜிஆர் காலத்து அதிமுக தொண்டன்.