காந்தி மரணமடைந்த நாள் இன்று. அவரை எந்தக் கொள்கைக் கொன்றதோ அதே கொள்கை பரப்பப்படுவதற்காகவே இங்கு ஆட்சிப் பிடிக்கப்பட்டுள்ளது. காந்தி இறந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு முன்பு காந்தி மறைந்ததினம் ‘தியாகிகள் தினமாக’ மட்டுமே கொண்டாடப்பட்டது. இப்போது காந்தி இறந்ததையே கொண்டாடும் தினமாக மாற்றம் பெற்றுவருகிறது.
இந்த வருடத்திலும் காந்தி குறித்து பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவிப்பார். ஆனால் அதற்கான அருகதைத் தனக்கு இருக்ககிறதா என்பதை அவர் யோசிக்க மாட்டார். காந்திக்கு இவர்கள் எழுதும் இரங்கல்கள் எல்லாமே வெறும் கண்துடைப்பு.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தத் தேசத்தில் நடந்த மதக்கலவரத்திற்குப் பிறகு 2002ஆம் ஆண்டு காந்தி பிறந்த குஜராத்தில் நடந்த மதக்கலவரம் நாட்டை உலுக்கியது. இந்தக் கலவரத்துக்கு காரணம் என்ன, யார் பின்னணியில் இருக்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரங்களோடு எழுந்தபோது அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி தலை கவிழவில்லை. காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. புகார் அளித்தவர்கள் அகதிகளானார்கள். சொந்த நாட்டில் தங்களது மாநிலத்திலேயே அகதிகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள். அப்போதும் மோடி அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். கலவரத்தில் பாதிக்கபப்ட்ட இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தரப்பட்ட நஷ்ட ஈட்டில் கூட வேறுபாட்டினைக் காட்டினார்.
இப்போது வெளிவந்துள்ள India A modi question பிபிசி ஆவணப்படம் நேரடியாக மோடியைக் குற்றம்சாட்டுகிறது. அவருக்குத் தெரியாமல் அவருடைய ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கலவரம் நடந்திருக்காது என்று ஆதாரங்களோடு முன்வைக்கிறது. இப்போதும் மோடி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய அமைதி அவரது தொண்டர்கள் நினைப்பது போல முதிர்ச்சியினால் வந்த அமைதி அல்ல, அச்சத்தினால் ஏற்பட்டுள்ள அமைதி. ஒவ்வொரு முறையும் குஜராத் கலவரம் குறித்து மோடியிடம் கேள்விகள் முன்வைக்கும்போது அவரது முகம் காட்டும் கலக்கமும், பீதியும், தண்ணீர் வாங்கிக் குடித்து பேட்டியை முடித்துக் கொள்ளலாமா என்று சொன்னதும் அவர் மேல் இருக்கிற சந்தேகத்தை வலுப்படுத்தவே செய்தன. இன்று பிபிசியின் INDIA A MODI QUESTION நேரடியாக அவரைக் குற்றம் சாற்றுகிறது. காந்தி பிறந்த மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு பதில் சொல்ல முடியாத மோடி தான் காந்திக்கு இரங்கல் தெரிவிக்கிறார்.
காந்தி இறந்த பிறகு ஒட்டுமொத்த தேசமும் இந்துத்துவா பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்களை வெறுத்தன. நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில், “நான் இந்துத்துவத்தின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னபிறகும் , சாவர்க்கருடன் கோட்சேக்கு நெருங்கிய தொடர்பு இருந்தபோதும், காந்தி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்ததாலேயே நான் அவரைக் கொலை செய்தேன் என்று கோட்சே சொன்னபிறகும் ‘எங்களுக்கும் கோட்சேவுக்கும் எந்த தொடர்புமில்லை. அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரே இல்லை” என்று இந்துத்துவ சபைகள் மறுத்தன. ஆனால் கோட்சே இந்துத்துவ கொள்கை கொண்டவர் என்பதும் அவரை வளர்தெடுத்ததே ஆர்எஸ்எஸ் தான் என்பதும் எல்லாரும் அறிந்த செய்தியாக இருந்தது. அப்போது சாவர்க்கர் அமைதி காத்தார், இப்போதுள்ள மோடியைப் போல.
ஆனால் அந்த அமைதி பின்னாட்களில் அசாதரணமாக வெடித்தது. இந்துத்துவ அமைப்புகள் நேருவால் முடக்கப்பட்ட பின்பு திரும்பவும் மக்களிடையே எப்படி செல்வாக்கினைப் பெறுவது என்ற நோக்கத்தில் தான் ராம ஜென்ம பூமி விவகாரத்தைக் கையில் எடுத்தன இந்துத்துவ அமைப்புகள். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்றும் அவர் பிறந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்றும் செய்தியினைப் பரப்பி அயோத்தியில் இந்து இஸ்லாமியர்கள் இடையே பிரிவினை உண்டாக்கினார்கள். இதனால் காந்தியின் கொலையாளிகள் என்பதில் இருந்த பிம்பத்தை அவர்களால் மாற்றிக் கொள்ள முடிந்தது. அதன் பின்பும் அந்த நெருப்பினை அணையாமல் பல்லாண்டு காலம் பாதுகாத்து வைத்து அத்வானியின் ரதயாத்திரை மூலமாக கொழுந்துவிட்டு எரியச் செய்தார்கள். இத்தனையும் வெளிப்படையாக நடந்தபின்பும் அத்வானி அமைதி காத்தார், இப்போதைய மோடியைப் போல.
மோடி ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். அது ஒரு வகையில் காந்தி இறந்த பின்பு அந்த வரலாற்றுப் பிழையை நாங்கள் மறைத்துவிட்டோம் என்று உலகத்துக்குக் காட்டிய செயல் தான். அது மோடிக்கும் அவர் சார்ந்த இந்துத்துவ அமைப்பிற்கும் தெரியும். நாட்டில் நடக்கும் வேறு எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத மோடி மிக ஆர்வமாக அயோத்தி ராமர் கோயில் கட்டுவதில் முனைப்பு காட்டியது அவர் சார்ந்த இந்துத்துவ அமைப்புகளுக்கு செய்த நன்றிக்கடன். எதையும் துணிந்து எதிர்கொள்ளாத மோடி இராமருக்கு கோயில் கட்டியதன் மூலம் தான் இந்துத்துவ விசுவாசி என்று காட்டிக் கொண்டார்.
இதைத்தான் கோட்சே எதிர்பார்த்தார். இப்படி இந்தத் தேசத்தில் நடக்கவேண்டும் என்பது அவரது ஆசை. அதை நிறைவேற்றிவிட்டு மோடி இன்று காந்திக்கு இரங்கல் சொல்வார்.
பிபிசியின் ஆவணப்படம் வெளிவந்ததும் அது குறித்து கருத்து தெரிவித்த பிஜேபியினர் இது ‘காலனிய மனோபாவத்தோடு ப்ரிட்டிஷாரால் பரப்பட்ட வதந்தி’ என்று கூறினார்கள். ஆனால் இதே மோடி தான் பிபிசியில் வெளிவருகிற செய்திகளில் எப்போதுமே நம்பகத்தன்மை இருக்கும் என்று புகழ்பாடியிருக்கிறார்.
பிரிட்டிஷ் நம்மை ஆண்டார்கள், வகுப்புவாத கலவரங்களை மௌனமாக வேடிக்கைப் பார்த்தார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தார்கள். உண்மை தான். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின்போது காந்தி கொல்லப்படவில்லை. வெறும் இந்துத்துவ கொள்கைக்காக தேசத்தின் தலைவர் கொல்லப்பட்டார்.
அகிம்சைஎன்பதுதீர்வாகாது, போராட்டமே தீர்வாகும் என்கிற கொள்கை உடைய இந்துத்துவ அடிப்படைவாதிகள் தொடர்ந்து சிறுபான்மையினரை வெளியேற்ற கலவரங்களே சரியானது என்ற முடிவோடு இருந்ததை நாம் வரலாற்றில் பார்க்க முடியும். ஒரு தேசத்தின் தலைவரைக் கொலை செய்துவிட்டு எந்தத் தலைகுனிவும் இல்லாமல் தான செய்தது சரி தான் என்று கோட்சேயும் , நாராயண ஆப்தேயும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்கிறார்கள் என்றால், எந்தளவுக்கு அடிப்படைவாதம் அவர்களுக்குள் வேரூன்றியிருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த கோட்சேயை இந்த நாடு வெறுத்தது. அவர் பெயரைச் சொல்லவே கூசியது. ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு கோட்சே தியாகியானார். அவரது உருவப்படத்துக்கு மலர்மாலை போட்டு ஆரத்தி எடுத்து வழிபடும் சடங்கினை பெருமையாக செய்தனர். அப்படி வெளியிட்டவர்களுக்கு பிஜேபியில் பதவிகளும் பொறுப்புகளும் தரப்பட்டன. இவற்றையெல்லாம் செய்துவிட்டு கூச்சமேயில்லாமல் காந்தி இறந்த தினத்துக்கு முதலைக் கண்ணீர் வடிப்பார் மோடி.
காந்தியின் மீது விமர்சனங்கள் வைத்தவர்கள் கூட அவரது இருப்பினை முக்கியமானதாகக் கருதினார்கள். இன்றும் காந்தி குறித்து அறிந்து கொள்ள இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். அவர் குறித்து ஆய்வு நூல்கள் இப்போதும் வெளிவருகின்றன. அவருடைய கருத்துகளில் எது சரி, எது காலத்தினால் பின்னடைந்துள்ளன என்று பாகுபடுத்திப் பார்க்கிறார்கள். அவருடைய பொருளாதார சிந்தனை குறித்து பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் உள்ளன. அந்தப் பொருளாதாரக் கொள்கை சரி தவறு என மாணவர்கள் விவாதிக்கின்னர். காந்தியையும் அவரது கொள்கையையும் விமர்சிக்கும் உரிமை இங்கு உண்டு என்பதே ஆரோக்கியமானது. காந்தியே தன்னை விமர்சிக்கும் உரிமையை கொடுத்திருந்தார். தனனுடைய கொள்கைக்காக கொல்லப்படுவோம் என்பதை அவர் யூகித்திருந்தார். அவர் எங்கும் ஓடவில்லை, ஒளியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் தன்னை நோக்கி எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்றே நினைத்தார். அதை எதிர்நோக்கியே அவரது பயணம் அமைந்திருந்தது. ஒரு தலைவனாக தன்னைத் தேசத்துக்கு அர்ப்பணித்ததாலேயே காந்தியை விமர்சித்தவர்களும் அவர் இறப்பை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள். ஒரு உதாரணமாக, பெரியாருக்கு காந்தி மீது விமர்சனங்கள் இருந்தபோதும் அவர் மரணத்தை பெரும் துக்கமாக கொண்டார். இந்துத்துவத்தின் கொள்கை காந்தியைக் கொன்றது என்பதை உரக்கச் சொன்னார். காந்தியின் கொள்கைகளில் சிலவற்றைப் பெரியார் எதிர்த்தார் என்றாலும் அவரது இறப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவர் தொடர்ந்து எழுதிய காந்திக்கான அஞ்சலிக் கட்டுரைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். பெரியார் போல காந்தியை விமர்சித்தவர்கள் கூட காந்தியின் மரணத்தைத் தங்களது சொந்தத் துக்கமாக நினைத்தனர். ஆனால் இந்துத்துவ அமைப்பினர் இன்று கோட்சேவைக் கொண்டாடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு எதிரான செயலைச் செய்கிறார்கள்.
காந்தி இறந்தபிறகு உலக நாடுகள் வெளியிட்ட அறிக்கைகள், இரங்கல்களை வாசித்துப் பார்த்தால் அவர்கள் இந்தியாவையும், காந்தியையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கவில்லை என்பது புரியும். காந்தியின் கொள்கையை இந்தியாவின் கொள்கை என்றே நினைத்தனர். இந்தியா அகிம்சை பூமி என்ற கருத்தே மற்ற தேசத்தினரிடமிருந்தது. ஆனால் இன்று ? எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவின் இறையாண்மை கேள்விக்கு உட்பட்டுள்ளது. இங்கு சிறுபான்மையினர் வாழ்வது என்பது சாத்தியமில்லை என்கிற சூழல் வருவதை எல்லா உலகநாடுகளும் கவனித்து வருகிறார்கள்.
இந்தியாவின் அடையாளம் மாறிக்கொண்டு வருகிறது. Ethinic cleansing செய்யப்பட்ட இந்தியாவைத் தான் சாவர்க்கரும், கோட்சேயும் , கோவல்கரும் விரும்பினார்கள். அதை நிறைவேற்றும் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்பு முட்டாள்தனமாக விதைக்கப்பட்ட ஒருங்கிணைந்த இந்து ராஜ்ஜியம் என்கிற கனவுக்கு உயிர்கொடுக்க எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள். அதைப் பெருமையாகவும் நினைக்கிறார்கள். பிரதமர் மீது வைக்கப்பட்டிருக்கிற Ethinic cleansing பற்றிய குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று உலக அரங்கம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் மோடி காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
இந்துத்துவ அடிப்படைவாதியான நாதுராம் கோட்சே காந்தியை சுட்டபோது காந்தி உதிர்த்த வார்த்தையும், இன்று அயோத்தியில் இருந்து பரப்பப்படுகிற வார்த்தையும் ஒன்று. ஆனால் இரண்டுக்குமான் அர்த்தம் முற்றிலும் வேறு. ஒன்று அமைதிக்கானது, மற்றொன்று விஷத்திற்கானது
ஹே ராம்!!