கலைஞர் கருணாநிதி இறந்தபோது அவருக்கான சமாதி மெரீனா கடற்கரையில் அமையவேண்டும் என அப்போதைய அதிமுக அரசிடம் கேட்டுக்கொண்டனர் திமுகவினர். அதற்கான அனுமதி கிடைத்ததும் கலைஞரின் பூத உடலின் முன்பு அவரது மகனான ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அதைப் பார்த்து திமுக தொண்டர்கள் அழுதார்கள், கலைஞரின் மீது அன்பு கொண்ட பலரையும் அந்தக் காட்சி உருக்கியது. திமுக சாராத பொதுமக்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர்.
இதற்காக மக்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்கிற அர்த்தம் இல்லை. அவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள். மெரினா கல்லறைத் தோட்டமாக ஏற்கனவே மாறிவிட்டது. கடற்கரை என்பது பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமல்ல, அது இயற்கையின் பெரும் கொடை. மனிதர்கள் காற்று வாங்கவும், சுண்டல் தின்னவும் மட்டும் செல்லும் இடமில்லை. அது கோடிக்கணக்கான கடலுயிர்களின் வாழ்விடம். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் அது எதோ சொந்த பட்டா நிலம் போல இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்வதெல்லாம் மிக அநியாயம்.
இப்போது கலைஞர் நினைவாக பேனா சிலை நிறுவுவோம் என்கிறார்கள் திமுகவினர். தமிழ்நாட்டு அரசு என்று சொல்லக் கூட மனம் வருவதில்லை. திமுக தான் விருப்பப்படுகிறது. தனி நபருக்கு நினைவிடம் எழுப்புவது இன்று நேற்றல்ல, மனிதன் தோன்றிய போதிருந்தே நடைபெறுவது தான். மனிதர் இறந்தால் அந்த இடத்தில் நடுகல் வைத்து வழிபடுவதெல்லாம் சங்ககாலம் தொட்டே அறியும் செய்தி தான். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எங்கு, யாருக்கு எப்படி ஒரு நினைவிடம் அமைக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் நினைவிடம் என்பது காலத்துக்கும் ஒரு நினைவை போற்றுவதற்காக உருவாக்கப்படுவது. அடுத்த சந்திதியினருக்கு ஒரு செய்தியை சொல்ல உருவாக்கப்படுவது. அந்த செய்தி சரியாக போய்ச் சேர வேண்டும் என்று நாம் தான் கவலைப்பட முடியும்.
உலகத்திலேயே எழுத்தாளருக்கான மிகப்பெரிய நினைவிடத்தில் ஒன்று எடின்பர்கில் வால்டர் ஸ்காட்டுக்கு அமைத்தது தான். அதனை மிகப்பெரும் நிகழ்வாக 19ஆம் நூற்றாண்டில் நடத்தினார்கள். அதற்கான வரைமாதிரியைத் தேர்வு செய்ய போட்டி வைத்தார்கள். அதில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டனர். வால்டர் ஸ்காட்டின் புதினங்களில் வருகிற கதாபாத்திரங்களின் சிற்பங்களை வடித்து ஒரு நினைவிடத்தை உருவாக்கினார்கள். அது இன்றும் புகழ்பெற்றுவருகிறது. ஆனால் ஒன்றை நினைவுகூர வேண்டும், இது முற்றிலும் மக்களிடம் இருந்து நிதி வசூலித்து கட்டப்பட்ட நினைவிடம். மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு பிடித்த எழுத்தாளருக்கு செய்த மரியாதை. ஒருவரிடம் கூட கட்டாயத்தின் பேரில் வசூல் செய்யப்பட்ட நிதி அல்ல.
பல எழுத்தாளர்களுக்கு உலகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள நினைவிடங்கள் தனியார் நிலத்திலேயே அமைந்திருக்கின்றன அல்லது அவர்களுடைய வாசகர் மனமுவந்து தந்த இடமாக இருக்கும். இத்தனையையும் சொல்ல வேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது என்றால், கலைஞருக்கு கட்டப்படும் நினைவுச் சின்னம் பேனாவாக இருப்பதால் இத்தனை சொல்ல வேண்டியிருக்கிறது.
பேனா என்பது எழுத்தின் அடையாளம். கலைஞர் தன வாழ்நாளில் அதிகம் எழுதியிருக்கிறார். அனுதினமும் எழுதியுள்ளார். அது மாபெரும் உழைப்பு. எந்தளவுக்கு உரை நிகழ்ச்தியிருக்கிறாரோ அந்தளவுக்கு எழுதியிருக்கிறார். திருக்குறளுக்கும் உரை எழுதியுள்ளார். சந்தேகமில்லை. ஆனால் அவர் திரைப்படங்களுக்கு எழுதுவதற்கு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றார். அது அவரது தொழில். இதில் சேவை என்ற பேச்சுக்கு இடமில்லை. அடுத்ததாக அவர் பத்திரிகைகளில் எழுதினார். எழுதிய பலவும் அவருடைய கட்சி சார்ந்த கொள்கைகளைத் தான். முற்போக்கு சிந்தனை என்று எழுதியதும் கூட அவரது கட்சிக் கொள்கைகளையே. அதற்காக அது எழுத்து இல்லை என்றும் சமூக மாற்றத்திற்கான எழுத்து இல்லையா என்றும் ஆகிவிடுமா என்று கேட்கலாம். கலைஞருக்கு முன்பும் சமூக சீர்த்திருத்தவாதிகளை பெருமளவு கொண்ட நாடு தமிழ்நாடு. அவர்களில் சிலருக்கு நாம் சிலைகளை வடித்தோமே தவிர அடையாளமாய் பேனாவை நினைவுச்சின்னமாய் வைக்கவில்லை. கலைஞருக்கு சிலை வைத்திருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால் பேனாவை நினைவுச்சின்னமாக வைக்கும்போது அடுத்து வரும் சந்ததிகள் அதற்கான விளக்கம் கேட்பார்கள். அவர்களுக்கு சொல்லும்போது கலைஞர் மட்டுமே தமிழில் எழுதி சீர்திருத்தத்தை வளர்த்தார் என்ற அர்த்தமாகிவிடும். அது வரலாறைத் திசைதிருப்புவது மட்டுமல்ல, தவறாக சொல்வதும் தான்.
கலைஞர் தமிழ் வளர்க்கவில்லையா? நல்ல தமிழில் பேசவும் எழுதவும் செய்த தலைவர் அவர். தன் வாழ்நாளில் திருவள்ளுவருக்கு இந்தியாவின் தென்கோடியில் சிலை நிறுவியவர். தமிழ் மீது மாபெரும் பற்றுக்கொண்ட ஒருவர் தான் திருவள்ளுவருக்கு இத்தனை பிரம்மாண்டமாய் சிலை அமைக்க முடியும். வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும், பூம்புகார் கோட்டமும், அவர் தமிழ் மேல் கொண்ட பற்றினைப் பேசும். ஆனால் இங்கும் அதே கேள்வி தான் எழுகிறது. திருவள்ளுவருக்கு நிகராக கடலில் ஒரு பேனா சின்னத்தை கலைஞர் நினைவுச்சின்னாமாக மாற்றும்போது திருவள்ளுவருக்கும் கலைஞருக்கும் இடையில் தமிழறிஞர்களே இங்கு இல்லை என்ற கேள்வி நியாயமாய் எழுமே..
தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்தவர் பலருண்டு. அவர்கள் பெயர்கள் கூட முழுமையாக நமக்குத் தெரிவதில்லை. இப்போதும் கூட தமிழுக்காக சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருப்பாவர்கள் இருக்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையைத் தனி நபராகவும், ஒரு சிறு குழுவாகவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தத் தமிழ் நிலம் எப்போதுமே மொழிக்கான தியாகிகளையும் உழைப்பாளிகளையும் தந்து கொண்டே தான் இருக்கும். அவர்கள் எல்லோருமே போற்றுதலுக்குரியவர்கள் தான். அப்படியிருக்க, வழிவழியாக வருகிற தமிழ்மொழி காவலர்களை மறைக்கும்படி ஒரு மனிதருக்கு மட்டும் இந்த நினைவுச்சின்னம் பேனாவாக அமைவது எப்படி சரியாகும்?
அடுத்ததாக, ஒரு அரசியல்வாதியாக, முதல்வராக சிறப்பாக செயலாற்றினார் அதற்காக பேனா சின்னம் என்று சொன்னார்கள் என்றால், அரசியல்வாதியாக , முதல்வராக இருந்ததன் அங்கீகாரத்தை அவர் பெற்றுவிட்டார். முதல்வராக அவர் செய்த சாதனைகளை அடுக்கினால், அது சாதனைகள் என்று சொல்வதே தவறாகும். சொல்லப்போனால் இங்கு முதல்வர், பிரதமர் போன்றோர் எல்லாம் செய்வது சாதனைகளே அல்ல, கடமைகள். கடமைகளை சாதனைகளாக மாற்றி அதைப் பெருமையாக பேசிக்கொண்டிருக்க நாம் முட்டாள்கள் போல் கைதட்டிக் கொண்டிருக்கிறோம். ரேஷன் பொருட்கள், அரசு மருத்துவமனைகள் , அரசு பள்ளிகள் இவையெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து மக்களுக்காக உருவக்காப்படுபவை. முதலில் அங்கிருந்து முதல்வர்கள், பிரதமர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும். இவர்கள் தனிப்பட்ட சொந்தக் காசில் நமக்காக செய்யும் சலுகை அல்ல , அது அவர்களது கடமை. இதற்கென வருடந்தோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி நம்மிடம் இருந்து பெறப்படுகிறது. எப்போது இதையெல்லாம் கேள்வி கேட்காமல் நமக்குத் செய்யும் சலுகை என நினைக்கத் தொடங்கினோமோ, அதே மனநிலையில் தான் இந்த பேனா சின்னம் கடற்கரையில் நமது பணத்தில் உருவாவதையும் நினைகிறோம்.
கலைஞர் முதல்வராக இருந்து நல்லாட்சி மட்டுமே தந்தார் என்று ஒரு திமுக தொண்டன் நினைத்தால் அது அவரது விருப்பம், அவருக்கு தனிப்பட்ட முறையில் அதற்காக நினைவுச் சின்னத்தை எழுப்பலாம். ஆனால் மக்கள் கலைஞர் ஆட்சியினை எப்போதும் நிரந்தரமாக்கவில்லை. அவர் தலைமையில் கட்சி தேர்தலில் தோற்றுமிருக்கிறது எனும்போதே மக்கள் அவர் ஆட்சியின் மீது மாற்றுக்கருத்து கொண்டிருந்தார்கள் என்று தானே அர்த்தம். ஆக, நிரந்தர தமிழ்நாட்டுத் தலைவரும் அல்ல அவர். அப்படியிருக்க, பேனா சின்னம் எதைக் குறிக்கிறது?
81 கோடி ரூபாய் செலவில் மக்கள் பணத்தில் இயற்கையை அழித்து கட்டப்படுகிற ஒரு நினைவுச்சின்னம் என்பது ஒரு பக்கமிருக்க, அந்தப் பேனாவே இத்தனை கேள்விகள் எழுப்புகின்றன. கலைஞர் என்றால் எழுத்து தான் நினைவுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்துவது போல இருக்கிறது. ஆட்சி கையில் இருக்கையில் தான் வைத்ததே சட்டம் என்று ஆட்சியாளர்கள் வரலாற்றை இஷ்டத்துக்கு வளைக்க ஆரம்பித்தால் அவர்கள் எதிர்காலத்துக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
இது கலைஞர் என்கிற ஒரு ஆளுமை மீது வைக்கப்படுகிற விமர்சனமோ, காழ்ப்புணர்வோ , அவரது உழைப்பைக் கேள்வி கேட்பதோ அல்ல, பகுத்தறிவை முன்மாதிரியாகக் கொண்டு அரசியலில் எழுந்து வந்த தலைவருக்கு ஒரு நினைவுச்சின்னம் வைக்கப்படும்போது பகுத்தறிவினைக் கொண்டு ஒரு சாமானியக் குடிமக்கள் கேட்கும் கேள்வி இது.
கலைஞருக்கான உரிய மரியாதையை மக்கள் என்றும் தந்திருக்கிறார்கள். கருணாநிதி என்கிற அவரது பெயரைக் கூட சொல்ல தயக்கப்பட்டு அவரது கொள்கை எதிரியாக இருந்தாலும் கூட அவரை கலைஞர் என்று அன்புடன் அழைக்கும் அளவுக்கு அவர் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அப்படியிருக்க, அவரை இத்தனைக் கேள்விக்குட்படுத்தும் நினைவுச்சின்னத்தை வரலாற்றுப் பிழையாக மாற்றுவது இப்போதைய திமுக ஆட்சி செய்கிற அவலமே.