
தேர்தல் முடிவு வெளிவந்த அன்று ஸ்டாலின் வீட்டுக்குள் நுழையும் சங்கர் ஜிவால். கேட்டை திறந்து விடுவது, சபரீசனின் நெருங்கிய உறவினர் ப்ரவீன்
கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கசடற கட்டுரைக்கான வரவேற்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது. எத்தனை இடர்பாடுகள் இருந்தபோதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘கசடற’ எழுதிவருகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக கடும் பணி நெருக்கடி காரணமாக கசடற வெளிவரவில்லை. இது குறித்து விசாரித்த , எதிர்பார்த்திருந்த வாசகர்களுக்கு கட்டுரைகள் வெளிவராததற்கான வருத்தத்தினை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு என்று சில இலட்சணங்கள் உண்டு. மழையும் இடியும் போல, திமுகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும். இப்போது இந்த இடி பெரும் சத்தங்களுடன் இடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிமுகவினரும் கூட திமுக ஆட்சியின் மீது எப்போதும் சொல்லும் குற்றச்சாட்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது என்பது. ஒரு அதிமுக பிரமுகர், காவல் நிலையத்திலோ, காவல் அதிகாரிகளிடமோ தகராறு செய்ததாக தகவல் தெரிந்தால், ஜெயலலிதா சும்மா விட மாட்டார். இப்படித்தான் அதிமுக தொண்டர்கள் கண்டிஷன் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திமுகவில் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன். குறிப்பாக சட்டம் ஒழுங்கு, காவல் நிலையம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், திமுகவினர் ரவுடிகளைப் போலத்தான் நடந்து கொள்வார்கள். இது இன்று நேற்றல்ல. திமுக அதிகாரத்துக்கு வந்தது முதல் நடந்து வருகிறது. கூடுதலாக திமுகவினர் லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும், காவல் துறையினரை தங்களுக்கு சாதகமாக ஏறக்குறைய வளைத்தே விடுவர்.
திமுக குறித்து நான் தொடர்ந்து விமர்சித்து வருவதால், என்னைத் தொடர்பு கொள்ளும் சிலர் எந்தளவுக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை இந்த ஆட்சியில் நிலவி வருகிறது என்று தெரிவித்து வருகின்றனர். இவர்களில் பலரும் பொதுமக்கள். சிலவற்றை நான் தனிப்பட்ட முறையில் விசாரித்தேன். அவற்றில் இரண்டு சம்பவங்களை இங்கு பகிர்கிறேன்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இரு குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக சொத்துத் தகராறு நடைபெற்று வருகிறது. இந்த சொத்துத் தகராறில் ஈடுபடும் ஒரு தரப்பு ஆளுங்கட்சியை சேர்ந்தது. பொருட்செல்வி என்பவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் கந்தவேல் திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனுக்கு நெருங்கிய உறவினர்.
கந்தவேல் தன்னோடு சொத்துத் தகராறில் இருக்கும் இந்திரா என்பவரின் வீட்டுக்குள் ஏழு பேரோடு புகுந்து அரிவாளால் வெட்டுகுத்து செய்திருக்கிறார். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்தது 28 அக்டோபர் அன்று. காயம் பட்டவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.
காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு, முதல் குற்றவாளி கந்தவேல், அவர் மனைவி பொற்செல்வி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கிறார்கள்.
திமுக அரசில், திமுக நிர்வாகிகள், அதிலும், எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனின் உறவினர்கள் மீதே வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு காவல் துறையினர் வேகமாக நடவடிக்கை எடுக்கிறார்களே என்று எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது. ஆனால் எப்.ஐ.ஆர் மட்டும்தான் பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரைக் கூட காவல் துறை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை. கொலை முயற்சி எப்.ஐ.ஆர் ஒரு புறம் நிலுவையில் இருக்க, கந்தவேல், பொங்கல் பண்டிகைக்கான மாட்டுவண்டி ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பொது விழாக்களில் சர்வ சாதாரணமாக கலந்து கொள்கிறார். அவ்விழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இவர்கள் அத்தனை பேரும் முன் ஜாமீன் கோரி, தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்கள். இதன் மீது தீர்ப்பளித்த தஞ்சை அமர்வு நீதிமன்றம், முதல் குற்றவாளி கந்தவேலுக்கு மட்டும் முன் ஜாமீனை மறுக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சம்பவம் நடந்தது 28 அக்டோபர் 2022. முன் ஜாமீன் உத்தரவு வந்தது 8 பிப்ரவரி 2023. 100 நாட்களுக்கு மேலாக இந்த குற்றவாளிகள் சர்வ சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு கூட காவல் துறை நம்மை கைது செய்யும் என்ற பயம் துளியும் இல்லை. அடிவாங்கி, வெட்டுப்பட்டு காயமடைந்தவர்கள்தான், மீண்டும் தாக்குதல் நடத்துவார்களோ என்ற கடும் அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த கட்டுரை எழுதுகையில், முன் ஜாமீன் மறுக்கப்பட்டு 5 நாட்கள் ஆகின்றன. ஆனால் கந்தவேல் இது வரை கைது செய்யப்படாமல், கோவில் மாடு போல ஊரைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த வழக்கு ஒரு பானை சோறின் ஒரு பருக்கையே. திமுகவினரின் அடாவடிகள் குறித்தும், காவல் துறையினர் திமுக மாவட்டச் செயலாளர்கள் போல செயல்படுவது குறித்தும் நூற்றுக் கணக்கில் தமிழகமெங்கும் புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது ஆட்சிக்கு மிக மிக ஆபத்து என்பதை ஸ்டாலின் துளியும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர் உணர்வார் என்றும் தோன்றவில்லை. மாவட்ட கண்காணிப்பாளர்கள் முதல், முக்கிய காவல் அதிகாரிகளின் நியமனங்களை ஸ்டாலின் செய்வதில்லை; அனைத்து நியமனங்களையும் செய்பவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனே என்பது தலைமைச்செயலக வட்டாரத்தில் வெளிப்படையாக அனைவரும் அறிந்த விஷயம்.
சபரீசனை அணுகி ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் கீழ்நிலையில் இருக்கும் இதர அதிகாரிகள், தங்களுக்குத் தெரிந்த திமுக கட்சிப் பிரமுகர்களைப் பிடித்து நியமனம் பெற்றுக் கொள்கிறார்கள். 95 சதவிகித நியமனங்கள் இப்படித்தான் நடைபெறுகின்றன. இப்படி திமுகவினரைப் பிடித்து பதவிகளைப் பெற்று வரும் அதிகாரிகள் மக்களுக்கோ, சட்டத்துக்கோ விசுவாசமாக இருப்பதை விட, திமுகவினருக்கே விசுவாசமாக இருக்கின்றனர்.
இந்த நோய் புரையோடி தமிழக காவல்துறையின் ஈரலை அழிக்கத் தொடங்கியிருக்கிறது. என்னிடம் முறையிடப்பட்ட மற்றொரு வழக்கு சென்னையைச் சேர்ந்தது. திரைப்படங்களுக்கு நிதி உதவி செய்யும் மார்வாடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார். 95ம் ஆண்டு முதல் அவருக்கு பைனான்ஸ் தான் தொழில். அவருக்கும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ரங்கா என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வருகிறது. சென்னை உரிமையியல் நீதிமன்றங்களில் 2016ம் ஆண்டு முதல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சினிமா பைனான்ஸ் செய்பவர் என்பதால், இவர் சொத்துப் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்ட பிறகே நிதி உதவி செய்கிறார். ரங்கா பைனான்சியருக்கு 4 கோடி அசல் கொடுக்க வேண்டும். அந்தக் கடனுக்கு ஈடாக சென்னையிலேயே உள்ள 4 கட்டிடங்களை அடமானம் வைத்திருக்கிறார்.
திமுக ஆட்சி வந்ததும், ரங்கா பணத்தை திருப்பிக் கொடுக்காமல், அண்ணா நகர் கார்த்தியை அணுகுகிறார். ரங்கா, கார்த்தி ஆகிய இருவரும் பைனான்சியரை கார்தி அலுவலகம் அழைத்து, ரங்கா அடமானம் வைத்த சொத்துப் பத்திரங்கள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும் என்று மிரட்டுகின்றனர். பைனான்சியர் மறுக்கவே, அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது. சென்னை மாநகர குற்றப்பிரிவு அதிகாரிகள், துணை ஆணையர் நாகஜோதி தலைமையில், பைனான்சியரின் வீட்டில் சோதனை நடத்தி, இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத அனைத்து சொத்துப் பத்திரங்களையும் எடுத்து வந்து விடுகின்றனர். பைனான்சியர் மட்டும் இல்லாமல் அவரது மகளின் வங்கிக் கணக்குகளையும் முடக்குகின்றனர்.
தற்போது பைனான்சியர் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்து விட்டு தலைமறைவாக இருக்கிறார். தலைமறைவாக இருந்தபோதுதான் என்னை சந்தித்து விபரங்களை சொன்னார். நான் அவரை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினேன்.
சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு ஜூன் இறுதியில் சைலேந்திரபாபு ஓய்வு பெற்றதும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக வேண்டும். இதை திராவிட மாப்பிள்ளை சபரீசன் நினைத்தால் மட்டுமே செய்து தர முடியும். இந்தப் பதவி வெறி காரணமாக, கிட்டத்தட்ட சபரீசனின் அடிமையாகவே மாறிப்போய் விட்டார் சங்கர் ஜிவால். சபரீசன் சொல்லாமல் சங்கர் ஜிவால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட மாட்டார்.
முதல்வர் குடும்பத்தோடு ஒரு காவல் துறை அதிகாரி மது விருந்தில் கலந்து கொண்டதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? சபரீசன் வீட்டில் நடந்த விருந்தில், சங்கர் ஜிவால் குடும்பத்தோடு கலந்து கொண்டிருக்கிறார். சங்கர் ஜிவால் வீட்டில் நடந்த விருந்தில் சபரீசன் கலந்து கொண்டிருந்திருக்கிறார். ஏறக்குறைய முதல்வர் குடும்பத்தின் அங்கமாகவே சங்கர் ஜிவால் மாறிவிட்டதாக கூறுகின்றனர். சமீபத்தில், துர்கா ஸ்டாலினின் சகோதரி இறந்த நிகழ்வுக்குச் சென்ற சங்கர் ஜிவால், 4 மணி நேரம் வேலை வெட்டியையெல்லாம் விட்டு விட்டு, அங்கேயே இருந்தார். யாராவது யோசனை சொல்லியிருந்தால் கொள்ளி போடும் அளவுக்குக் கூட போயிருப்பார்.
சங்கர் ஜிவால் முதல்வர் குடும்ப உறுப்பினராக ஆகிவிட்டார் என்றால், இதர காவல் துறை அதிகாரிகள், திமுகவினரின் குடும்ப உறுப்பினர் போல நெருங்குவதற்கு பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். இந்த விசுவாசத்தை, திமுக குடும்பத்தினர் விரும்புகின்றனர். விசுவாசமான அடிமைகளை அவர்கள் வளர்த்து போஷிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், தமிழக மக்களுக்கு காவல் நிலையங்களில் எப்படி நியாயம் கிடைக்கும் ? எந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க காவல் நிலையம் செல்வார்கள் ?
முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக இருக்கின்றது. மக்கள் அனைவரும், எவ்வித குறைகளும் இல்லாமல், ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்யும் படங்களை பார்த்து மகிழ்வோடு இருக்கிறார்கள் என்று அவரிடம் சொல்லப்படுகிறது. அவர் இது உண்மையா இல்லையா என்பதை விசாரிக்கவோ, சரிபார்க்கவோ துளியும் முயற்சிகள் எடுப்பதில்லை. ஏனெனில், அவர் மனது விரும்புவது, பொய்களைத்தான்.
ஸ்டாலினுக்கு ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் திறமை துளியும் இல்லை என்பதற்கு சான்று அவரது 20 மாத கால ஆட்சி. அவரால் முடியவில்லை. அதற்கான திறன் இல்லாதது புரிகிறது. அவரின் இயலாமைக்காக, 8 கோடி மக்களைக் கொண்ட ஒரு மாநிலம் பலியாக முடியாது.
இதுமட்டுமின்றி, முதல்வரின் உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை. அதை மறைப்பதற்காகத்தான் அவரைப் போல ஆரோக்கியமானவர்கள் தமிழகத்திலேயே இல்லை என்று நிரூபிக்கும் விதமாக, அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று தேவை ஓய்வு. இன்று அவர் முதல்வராக தொடர்வதால் நடக்கும் ஒரே விளைவு தினந்தோறும் அவர் நடத்தும் போட்டோ ஷூட்டுகள் மட்டுமே. இதை முதல்வராக இருந்துதான் அவர் செய்ய வேண்டும் என்பதில்லை. சோளக்கொல்லை பொம்மை பறவைகளை விரட்ட பயன்படுத்துவது போலத்தான், குடும்பம் வசூல் செய்ய ஸ்டாலின் ஒரு பொம்மை.
இத்தனை சிரமங்களுக்கிடையே ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதால், அவர் மட்டுமல்லாமல் அவர் கட்சியும் சேதாரம் அடைந்து வருகிறது.
பொறுப்பை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு….அட..அப்படி சொல்ல முடியாது. யாரிடமாவது ஒப்படைக்கவா ஸ்டாலின் இத்தனை தூரம் தேர்தலில் செலவு செய்து கலைஞரின் பெயரை பழுதாக்கிக் கொண்டிருக்கிறார். அதாவது மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஒய்வு கொள்ளலாம்..எப்படியும் உதயநிதியும் தந்தைக்கு மகனாற்றும் உதவி என்பது போலத் தான் நடந்து கொள்ளப் போகிறார்..குறைந்தபட்சம் ஸ்டாலினுக்கு இப்போது தேவைப்படும் ஓய்வாவது கிடைக்கும். தினமும் போட்டோ ஷூட் நடத்தும் செலவும் மிச்சமாகும்.
காவல்துறை இப்படி கண்மூடித்தனமாக உள்ளூர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதெல்லாம் நல்லதுக்கே அல்ல. சட்டம் ஒழுங்கு கெடுவது என்பது ஒரு நிர்வாகத்தின் நரம்பில் கோளாறு ஏற்படுவது போன்றது. அதன் தாக்கம் அபாயமானது. இந்த அபாயத்தை முதல்வர் புரிந்து கொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
விடியல் ஆட்சி என்பது விளம்பரப்பலகை வாசகத்தில் இருந்தால் போதாது. விடியல் என்பது மக்களுக்கான பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கில் இருக்க வேண்டியது அவசியம்..காவல்துறையில் இன்று நடப்பதைப பற்றி நான் பகிர்ந்தது இரண்டு சம்பவங்கள் மட்டுமே. ஆனால் நடந்து கொண்டிருப்பதை எழுதினால் தனியாகத் தொடர் தான் தொடங்க வேண்டும்.
அடுத்த ஞாயிறு சந்திப்போம்.