ஏதோ போகிற போக்கில் புலம்பிவிட்டு செல்லும் கட்டுரையல்ல இது. பல அதிகாரிகளின் எண்ணப்போக்காகவும், தமிழக சட்டம் ஒழுங்கில் பல ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள், விவரமறிந்த பத்திரிக்கையாளர்களின் மனக்குமுறல்; கண்ணெதிரில் இப்படி தகுதியில்லாத அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை பார்த்து எழுதப்பட்டுள்ள கட்டுரை. இந்த கட்டுரைக்காக, பல மூத்த காவல் துறை அதிகாரிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும், மூத்த பத்திரிக்கையாளர்களும் நம்மிடம் பேசினர்.
போன ஆட்சியில் இல்லையா இப்ப தூக்கிகிட்டு வந்துட்ட என்று யாராவது கேட்டால் எல்லா ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை, உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும், ஆனால் ஆட்சியாளர்கள் அதை எப்படி. கையாளுகிறார்கள் எப்படிப்பட்ட அதிகாரிகளை வைத்துக்கொள்கிறார்கள் என்பதே ஒரு ஆட்சி எப்படி இருக்கிறது, அந்த ஆட்சியில் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்.
முதல்வர் நினைத்தால் இதை மாற்றலாம், மாற்றும் இடத்தில் இருப்பவர் அவரே. ஆனால்… என்ன நடக்கிறது என்பதை முதலில் சொல்லிவிட்டு என்ன பிரச்சினை என்பதை அலசிவிட்டு தீர்வு பற்றி பேசுவோம். தமிழக காவல்துறையில் 16 டிஜிபிக்கள் உள்ளனர். இதில் கந்த சாமி, சைலேந்திர பாபு இன்னும் 4 மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். ஒருவர் இடை நீக்கத்திலும், ஒருவர் காத்திருப்போர் பட்டியலிலும் இருக்கிறார். இரண்டுபேர் அயல்பணியில் உள்ளனர்.
20 ஏடிஜிபிக்கள் உள்ளனர். இவர்களுக்கு கீழே ஐஜிக்கள், டி.ஐ.ஜிக்கள், எஸ்பிக்கள் என ஒரு பெரிய ரேங்க் அதிகாரிகள் பட்டியலே உண்டு. இதில் சட்டம் ஒழுங்கு காவலின் தலைவராக அனைத்து காவல்துறை தலைவராக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளார். அவருக்கு கீழ் காவல்துறையின் அனைத்து பிரிவுகளும் வரும். அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அவருக்கு கீழ் 4 மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், எஸ்பிக்கள் வருவார்கள். இதுதவிர காவல் ஆணையரகங்களின் ஆணையர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவ அதிகாரிகள் வருவார்கள். இது தவிர பல்வேறு பிரிவுகளில் முக்கியமானது உளவுத்துறையும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவும் ஆகும்.
இவைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து ஒரு துறைக்கு ஒன்று உதவி செய்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். உளவுத்துறை, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகளின் பொறுப்பு இதில் அதிகம். காரணம் தமிழகத்தின் அனைத்து உள்நாட்டு சட்டம் ஒழுங்கு, அரசியல், சமூக, மதம் சார்ந்த பிரச்சினைகள், வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல், தமிழகத்தில் அவர்கள் செயல்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்காணித்து அதை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு அவ்வப்போது ரிப்போர்ட் போடுவது, தடுப்பது, முதல்வருக்கு அறிக்கை அனுப்புவது இவர்கள் வேலை.
மேற்கூறிய அனைத்தையும் முறையாக நடத்த தகுதிபெற்ற காவல்துறை அதிகாரிகள் இருப்பது அவசியம். இவர்களுக்கு மதம், ஜாதி, மொழி, இனப்பற்று இருக்காது வேலையை செய்வார்கள். பெயர் கிடைக்காவிட்டாலும் வேலை நடக்கும். ஜெயலலிதா முதல்வராக இருந்த கடைசி 10 ஆண்டுகளில் ஒரு காவல்துறை அதிகாரிகூட அவர்கள் வேலையை தவிர சமூக வலைதளங்களில் பதிவு போடுவது, விளம்பரம் தேடிக்கொள்வது, தேவையற்ற வார்த்தை போரில் ஈடுபடுவது என்கிற எதற்கும் அனுமதி கிடைத்ததில்லை. அப்படி செய்தால் அந்த அதிகாரி சில மணி நேரங்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பார்.
ஆளுமைக்கு பெயர் பெற்ற கருணாநிதியின் 2006-11 ஆட்சிக் காலக்கட்டத்தில் சில அதிகாரிகள் மேலிடத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டது நடந்தது. அந்த நோய் 2016 க்கு பிறகும் தொடர்ந்தது. மிகவும் அருவருக்கத்தக்க வகையில் குட்கா உள்ளிட்ட விவகாரங்களில் டிஜிபிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளே சிக்கினர். அரசியல் தலைவர்களின் தயவை நாடினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற போக்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்குள் அதிகமாக வளர்ந்தது.
இதன் நீட்சி தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் பொறுப்புக்கு வந்த அன்றே பல ஐபிஎஸ் அதிகாரிகள் வரிசைக்கட்டி அவர் வீட்டு வாசலில் நிற்பதில் முடிந்துள்ளது. இது வழக்கமான ஒன்றுதான், ஆனால் இதில் எஸ்பி லெவல் அதிகாரிகள் வீட்டுக்கு வந்து பொக்கே கொடுக்கும் வழக்கம் இருந்தது இல்லை, ஆனால் எஸ்.பி. லெவல் அதிகாரிகளும் முதல்வரை சந்தித்த நிகழ்வும் நடந்தது. சின்னவரின் நண்பர் கூட்டத்தில் உள்ள இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பிடித்துக்கொண்டனர். அதிமுகவில் வலுவாக ஒட்டிக்கொண்டு காரியம் சாதித்த அதிகாரிகள் இந்த ஆட்சியிலும் அதிகாரமிக்க இடத்தில் உட்கார்ந்து கொண்டனர்.
எங்கெல்லாம் தகுதி குறைவானவர்கள் சிபாரிசு மூலம் வந்தவர்கள், சொல்கிற வேலையை செய்துக்கொடுக்கிறேன் என்ற வாகுறுதியுடன் பதவியை ஆக்கிரமிக்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் நலன் பின்னுக்கு போய்விடும். அரசை தவறாக வழி நடத்தும் அதிகாரிகள் அவர்களும் ஆதாயம் அடைந்து அரசை முட்டுச் சந்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள். இது பல காலக்கட்டத்தில் திமுக, அதிமுக தலைவர்களுக்கு நடந்தாலும் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் அவர்கள் அதை மறந்துவிடுவதுதான் வேடிக்கை.
இம்முறையும் முதல்வராக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் ஐபிஎஸ் அதிகாரிகள் வரிசைக்கட்டி நின்றதைப் பார்த்தவுடன் அனைத்தும் மறந்து போனது. வழக்கமாக திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகார மையங்கள் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கும். இந்த முறையும் அப்படித்தான். தந்தை, மகன், மருமகன், மகனின் நண்பர் கூட்டம் என அதிகார மையம் பிரிந்து நின்றது. இதுதவிர கிச்சன் கேபினட் தனி. இது போதாதா ?அதிகாரிகளுக்கு அவரவர் அவரவருக்கு தேவையானவர்களை நெருங்கி பதவியில் அமர்ந்துக்கொண்டனர். நேர்மையாக, எந்த பிரச்சினையும் வேண்டாம் என நினைக்கும் அதிகாரிகள் ஒதுங்கி கொடுக்கப்பட்ட பொறுப்பில் வேலை செய்கின்றனர்.
இதில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு சின்டிகேட் அமைப்பே இருக்கிறது. அவர்கள் சின்னவரின் நண்பர்கள் கூட்டத்துடன் நெருக்கமானவர்கள். அந்த கூட்டத்தில் ஒருவர் முதல்வரை அங்கிள் என்று அழைக்கும் அளவுக்கு சக்தி மிக்கவர். கேட்கவேண்டுமா? கடந்த ஆட்சியில் அதிகாரமிக்கவர்களாக இருந்தவர்கள்கூட இந்த ஆட்சியிலும் அப்படியே தொடரும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். நம் சமூகத்தை சேர்ந்தவர் எனவும் சமூகத்துக்கு நெருக்கமானவர் எனவும் அதிகாரிகள் பார்த்து பார்த்து அமர்த்தப்பட்டார்களே தவிர தகுதி பார்த்து அமர்த்தப்படவில்லை.
மருமகனின் கம்பெனியில் பணியாற்றும் பெண் அதிகாரியின் தந்தை முக்கிய பொறுப்பில் அமர்ந்ததன் மூலம் மருமகனுக்கு நெருக்கமாக இருக்கிறார். இதன் விளைவு எந்த அளவுக்கு போனது தெரியுமா? போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து எந்த பிரச்சினை வந்தாலும் முதல்வர் அதுகுறித்து கண்டுக்கொள்ள மாட்டார் காரணம் மருமகனுக்கோ, மகனின் டீமுக்கோ அந்த அதிகாரி நெருக்கமாக இருப்பார் அதனால் மாற்றம் ஒன்றே மாறாதது இவர்களுக்கு இல்லை.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் கடுமையான கொரோனா காலக்கட்டம், அதை திறமையாக கையாண்டார் அதனால் மதிப்பு கூடியது. அதே மிதப்பில் மெதுவாக ஆட்டத்தை ஆரம்பித்தனர் உடனிருந்தவர்கள். கூட்டணி கட்சிகளுக்கு பல விஷயங்கள் தெரிய வந்தது, ஆனாலும் சொல்ல தயங்கி மவுனம் காத்தனர். கடந்த ஆட்சியில் வளைக்கப்பட்ட ஊடகங்கள் முதுகில் எலும்பு வளராமல் இந்த ஆட்சியிலும் பார்த்துக்கொண்டனர். எதிர்க்கட்சிகளை திட்ட கூடுதலாக யூடியூபர்களையும், செய்தியாளர்களையும் பயன்படுத்தி அவர்கள் பெயரில் யூடியூப்களை ஆரம்பித்து புகழவும், எதிர்க்கட்சியினரை இகழவும் அசைன்மெண்டுகள் கொடுத்தனர்.
எல்லாம் வெற்றிகரமாகத்தான் போனது. ஆனால் அப்படியே எப்படி போகும். முதல்வர் பதவி ஏற்ற சில மாதங்களில் முதல்வரை பார்க்க முடியாததால் அவரது வீட்டருகே ஒருவர் தீக்குளித்தார். அது பாதுகாப்பு குறைபாடாகவே பார்க்கப்பட்டது. பின்னர் சில மாதங்களிலேயே முதல்வர் வீட்டை முற்றுகையிட ஏபிவிபி அகில இந்திய செயலாளர் டெல்லியிலிருந்து வந்தார். அது செய்தியாளர்களுக்கு நன்றாக தெரிந்தது, ஆனால் உளவுத்துறைக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை. டெல்லியிலிருந்து ஒரு மாணவத்தலைவர் திடீரென வந்து கூட்டம் போடுகிறார், அதற்கென இருக்கும் சென்னையின் மத சம்பந்தமான பிரிவை கண்காணிக்கும் நுண்ணறிவுப்பிரிவு கோட்டை விட்டது. தமிழக உளவுத்துறையும் கோட்டை விட்டது. சென்னைக்கு காவல் ஆணையர் ஜிவால், தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் இருவரின் நிர்வாகத்திறமையால் முதல்வர் வீட்டை போலீஸ் பாதுகாப்பை மீறி முற்றுகையிட்டனர் ஏபிவிபி அமைப்பினர்.
இதே பிரச்சினை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்திருந்தால் கமிஷனர், உளவுத்துறை தலைவர் கதி என்ன ஆகியிருக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் பேசிக்கொண்டனர். முதல்வரின் இயல்பின்மையாக பார்க்காமல் அவரது நிதான அணுகுமுறையாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப்பிரச்சினைக்கு பின்னரும் அதிகாரிகள் திருந்தினார்களா என்றால் அதுதான் இல்லை. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக தாமரைக்கண்ணன் இருந்தார். சசிகலாவுக்கு நெருக்கமான அதிகாரி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவர் என்ன ஆகப்போகிறாரோ என்றெல்லாம் விவரமறிந்தவர்கள் பேசினர். ஆனால் அவருக்கு தமிழகத்தின் வலுவான பதவியான சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவேண்டும். ஆனால் இவர் சென்னையை விட்டு நகர்ந்ததே இல்லை. கள்ளக்குறிச்சி கலவரம் நேரத்தில் கூட அங்கு செல்லவில்லை என்பது இவரது சிறப்பு. காவல்துறை, உளவுத்துறை மக்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. அதில் சிறிதளவு நிர்வாகம் பிசகினாலும் முழு வெறுப்பும் மக்களுக்கு அரசின் மீதே திரும்பும். அதிகாரிகள் எப்போதும் பிரச்சினை பற்றி சொல்லவே மாட்டார்கள் சிக்கி சின்னாபின்னமானாலும் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். இதை உணர்ந்துதான் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் உளவுத்துறையை கடந்து பல வகைகளில் தகவல்களை சேகரித்தனர். கருணாநிதி பத்திரிக்கையாளர்களிடம் (ஜால்ராக்களிடம் அல்ல) தகவலை கேட்டு பெறுவார். ஜெயலலிதா ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி அலக்சாண்டரை தனியாக பயன்படுத்தினார். டிஜிபி உளவுத்துறையாக ராமானுஜம் இருந்தாலும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரியிடமும் ரிப்போர்ட் வாங்கினார். இவையெல்லாம் அவர்களது ஆளுமை.
ஆனால் இன்று சென்னையில் நடக்கும் லாக்கப் டெத் விவகாரத்தில் முதல்வருக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டு அவர் தவறான விஷயத்தை சட்டசபையில் பதிவு செய்கிறார் ஆணையர். மறுநாள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அதிர்ச்சியளிக்கும் வகையில் வருகிறது. முதல்வர் அதிர்ச்சியடைந்தாரா தெரியாது. மாற்றி சட்டசபையில் சொல்கிறார். இதற்கு காரணமான அதிகாரி என்று குறைந்தப்பட்சம் ஒரு நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகூட மாற்றப்படவில்லை. அப்புறம்தானே கமிஷனரிடம் செல்வது. கமிஷனரிடம் சென்றால் மருமகன் தலையிடுவார் அதனால் எதற்கு வம்பு என்று தன்மீதே பாரத்தை போட்டுக்கொண்டார் முதல்வர். குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறை தமிழகத்தின் மீது இல்லை.
இதுபோல் பல விஷயங்கள் சென்னையில் நடக்கிறது. கட்சிக்காரர்கள் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் இடம் அபகரிப்பு நடக்கிறது. தி.நகரில் ஒரு வட்டச்செயலாளர் வாடகைக்கு குடியிருந்த பிளாட்டை உர்மையாளரிடமிருந்து அபகரித்துக்கொண்டார். இடத்தைக் கேட்கப்போன உரிமையாளர் மீதே வழக்கை தொடுத்து பெங்களுருவுக்கு சென்னைக்கும் அலைய விடுகிறார்கள். மதுக்கடைகள், பார்கள் இஷ்டத்துக்கு இயங்குகிறது. பஃப்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் இரவு முழுவதும் நடப்பதற்கு வசதியாக சட்டம் வளைந்து கொடுக்கப்படுகிறது. சாலையை ஆக்கிரமித்து கேளிக்கை விடுதிக்கு வரும் வாகனங்கள் நிற்க, வேலையை முடித்து வீட்டுக்கு செல்லும் சாதாரண மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீட்டுக்கு செல்கின்றனர்.
போக்குவரத்து காவல்துறை என்று ஒன்று உள்ளது. அது எந்த ஆட்சியிலும் பொதுமக்களை கசக்கி பிழியும் துறையாகவே இருக்கும். எப்போதாவது கனிவான அரசு, கனிவான உயர் அதிகாரி வந்தால் ஓரளவு பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஆனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போக்குவரத்து அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் எந்த திட்டமும் இல்லாதவர்களாக இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. மறுபுறம் சாதாரண மக்களை வளைத்து வளைத்து அபராதம் விதிப்பது சாதாரணமாக நடக்கிறது.
சென்னை காவல் ஆணையராக ஜார்ஜ் இருந்த காலத்தில் விசிபிள் போலீஸ் எனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் காவல்துறையில் உள்ள அனைத்து வாகனங்களிலும் சைரன் விளக்குகள் பொறுத்தப்பட்டு சாலைகளில் நிறுத்தப்பட்டது. ஒரு வாகனம் கூட ஸ்டேஷனில் நிற்கக்கூடாது ஏதாவது ஒரு பகுதியில் சைரன் விளக்குடன் நிறுத்தப்படுவதில் உறுதியாக இருந்தார். தினமும் பேட்ராலிங், பட்டா புக் விஷயத்தில் கடுமை காட்டினார். தனக்கு கீழ் பணியாற்றும் அடிஷனல் தொடங்கி உதவி ஆணையர் வரை தினமும் மைக்கில் பேட்ச் அப் செய்து ஒரு மணி நேரம் அன்றைய பிரச்சினையை பேசி லெஃப்ட் ரைட் வாங்குவார். இதனால் அதிகாரிகள் காவல் ஆணையர் கண்காணிக்கிறார் என்கிற பயத்தில் வேலை செய்தனர். இது தவிர தனி லைவ் டீம் வைத்திருந்தது தனிக்கதை.
போக்குவரத்து மீறல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்க சென்னையில் காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் காலத்தில் பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முக்கியமாக புதிய குற்றவாளிகளால் செயின் பறிப்பு, வழிப்பறி, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறும் நிலை ஏற்பட்டபோது சிசிடிவி கேமராக்களை நிறுவும் பணி தொடங்கி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீஸ் துறை மட்டுமே சிசிடிவி அமைக்க முடியாது என புரிந்து வங்கி, வியாபார நிறுவனங்கள், கல்வி மையங்கள், பள்ளிகள், சிறு வியாபார நிறுவனங்கள், ஹோட்டல், உணவு விடுதிகள், டீக்கடைகள் என அனைவரும் சிசிடிவி கேமராக்களை நிறுவ வலியுறுத்தப்பட்டு நிறுவினர். இதனால் குற்றச்சம்பவங்கள் பாதிக்கும் கீழே குறைந்தது.
சிசிடிவியில் சிக்குவோம் என்கிற பயத்தில் குற்றவாளிகள் குற்ற நடவடிக்கையில் இருந்து ஒதுங்கினர். புதிதாக யாருக்கும் குற்றம் செய்யக்கூடாது என பயம் வந்தது. சிசிடிவி காட்சியில் தவறு செய்த போலீஸாரும் சிக்கினர். அவர்களை கண்டிக்கவும் செய்தார். காவலன் செயலி, ஃபேஸ் ட்ராக்கர் என குற்றவாளிகளின் முகத்துக்கு நேராக பிடித்து ஸ்கேன் செய்தால் ஜாதகத்தையே தரும் செயலியை தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் சைபர் பிரிவு நிபுணர் உதவியால் உருவாக்கியபோது அந்த செயலி காவலர்கள் செல்போன்களில் பதிவேற்றப்பட்டது. இன்றும் இந்த செயலி பயனுள்ளதாக உள்ளது.
இதுபோன்று நடவடிக்கை எடுத்த காவல் ஆணையர் அவருக்கு கீழ் மனதறிந்து இயங்கிய அதிகாரிகள், உளவுத்துறை இருந்தது. தற்போது அந்த ஒருங்கிணைப்பு இருக்கிறதா என்றால் இல்லை. இவருக்கு அவரை பிடிக்காது, அவருக்கு இவரை பிடிக்காது. பிணத்தை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு கேமராக்கு போஸ் கொடுத்த இன்ஸ்பெக்டருக்கு கடந்த ஆட்சியில் விருது தரப்பட்டது, அவர் அதன் பின்னர் இதே வேலையை கேமராக்களை வைத்து செய்தார் சினிமா நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அழைக்கப்பட்டார், விளைவு இணை ஆணையரே கேமரா மேனை கூட்டிக்கொண்டு இரவு ரோந்து செல்கிறேன் என வீடியோ போட்டார். இதை முதல்வர் பாராட்டி ட்வீட் போட்டார். மற்ற அதிகாரிகள் வேலை செய்யவில்லை இவர் மட்டும் தான் வேலை செய்கிறாரா? ரோந்து போவதற்கு பாராட்டா என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.
அப்போதே சென்னை காவல் ஆணையர் இதை கண்டித்திருக்க வேண்டும், முதல்வரின் நெருங்கிய சொந்தத்துக்கு வேண்டியபட்டவர், டிஜிபியே இதுபோல் வீடியோ எடுத்து போடுகிறார் இவரைப்போய் கேட்டால் வம்பு வரும் என விட்டுவிட்டார், அவருக்கும் வேறு சில கடமைகள் இருந்திருக்கும் அல்லவா? விளைவு புதிதாக தோன்றிய பிரபல யூடியூப் ஒன்று மீண்டும் அந்த பெண் அதிகாரியை வைத்து சைக்கிள் ரவுண்ட்ஸ் எல்லாம் செய்ய வைத்து பெண் சிங்கம் என்று பெரிய பிஜிஎம் எல்லாம் போட்டு மாஸ் காட்டினார்கள். அந்த வீடியோவில் பெண் சிங்கமான அந்த அதிகாரி ஒரு இடத்தில் இரவு ரோந்து வந்த பெண் காவலர்களை பார்த்து இதற்கு முன் நைட் டூட்டி வந்திருக்கிறீர்களா என்று அப்பாவியாக கேட்பார். இதற்கு முன் அவர்கள் என்ன சித்தாள் வேலையா பார்த்தார்கள் அன்று மட்டும் இரவு ரோந்துக்கு வர? கேமரா முன் பேசியதால் டங் ஸ்லிப் ஆகிவிட்டது போல.
போலீஸார் டிக்டாக் வீடியோ போட்டபோது அவர்களுக்கு சார்ஜ் கொடுத்த காவல்துறை, தமிழக காவல்துறை. காரணம் காவல்பணி சிக்கலானது அவர்கள் வேலை இது அல்ல. பல உன்னதமான அதிகாரிகள், போலீஸார் வெளியில் பெயர் கூட தெரியாமல் அர்பணித்து வாழ்ந்து சென்றுள்ளார்கள். இன்றும் பலர் இருக்கிறார்கள். ரோந்துப்பணி வீடியோ வெளிவந்ததும் கமிஷனர் கண்டுக்கொள்ளவில்லை என்றவுடன் அவரையே வச்சு வீடியோ எடுப்போம்னு பேட்டி எல்லாம் எடுத்து போட்டார்கள். விளைவு கடந்த 10 ஆம் தேதி கொளத்தூரில் கொள்ளையர்கள் 2 மணி நேரம் சாவகாசமாக நகைக்கடை ஷட்டரை வெல்டிங் மெஷினால் கட் பண்ணி (அதை கட்பண்ணுவது சாதாரண விஷயமல்ல பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும்) உள்ளே போய் லாக்கரை கட் பண்ணி, ஷோகேஸில் உள்ள நகைகளை கொள்ளையடித்து, சிசிடிவியின் சிடிஆரை தேடி எடுத்துக்கொண்டு சாவகாசமாக வெளியேறி உள்ளனர்.
கொள்ளைப்போன நகைகள் 9 கிலோ தங்கம், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம், பணம் எவ்வளவு தகவல் இல்லை. ஆனால் இதில் 5 நாட்கள் ஆகியும் துப்பு துலங்க முடியவில்லை. கார் நம்பர் பிளேட்டை மாற்றி எடுத்து வந்துள்ளார்கள், சென்னையிலிருந்து தப்பி சென்று விட்டார்கள் என்கிற தகவலை மட்டுமே காவல் ஆணையர் சொல்கிறார். இதை அங்கு ஸ்டேஷனில் டூட்டி பார்க்கும் கான்ஸ்டபிளை கேட்டாலே சொல்வாரே. இதில் வேடிக்கை என்னவென்றால் நகைக்கொள்ளை நடந்த இடத்தில் போலீஸ் சிசிடிவி உடைந்து பராமரிப்பின்றி கவிழ்ந்து கிடக்கிறது. அருகில் எந்தக்கடையிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை. நகைக்கடைக்கு குறைந்தப்பட்சம் இரவு காவலாளிக்கூட இல்லை. இதை வலியுறுத்திச் சொல்ல லோக்கல் அதிகாரிகளுக்கு தோன்றவில்லை.
இப்போது தெரிகிறதா ஜார்ஜ் எடுத்த விசிபிள் போலீஸ் நடவடிக்கை, மற்றும ஏ.கே.விஸ்வநாதன் காலத்தில் போலீஸார் ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து சிசிடிவி போடு, செக்யூரிட்டி போடு என்று வலியுறுத்திய காரணம் ? இதுதான் காவல் அதிகாரிகள் செய்ய வேண்டிய பணி. முதல்வரே, அமைச்சர்களே ஆளுக்கொரு போட்டோஷூட் நடத்தும்போது நாம் ஏன் நடத்தக்கூடாது என்றுதான் போலீஸ் அதிகாரிகளும் நினைப்பார்கள். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் கொள்ளை போனதுகூட பரவாயில்லை, அந்த கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் பெண் அதிகாரி நடத்திய ஷூட்டிங் தான் சமூக வலைதளத்தில் கிண்டலடிக்கப்பட்டது என்பதுதான்.
இது சென்னையின் லட்சணம், இப்போதும் ஆணையர் திருந்தவில்லை, வாகனத்தில் செல்லும் இரண்டுபேரும் ஹெல்மட் அணிந்துச் சென்றால் சான்றிதழ் தருகிறேன் என்று அதற்கு ஒரு விழா எடுத்து போஸ் கொடுக்கிறார். அங்கேயும் கொள்ளை சம்பவத்தைப்பற்றி கேட்டு மூட் அவுட் ஆக்கிவிட்டார்கள் செய்தியாளர்கள். ஆனால் யாரும் சென்னையில் மீண்டும் அடுத்தடுத்த செல்போன் பறிப்புகள் தலைதூக்குகிறதே என்று கேட்கவில்லை. இவர்தான் தமிழகத்துக்கே தலைமை தாங்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக துடிக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகள், உருவாக்கும் பேய்க்கதைகளில் காட்டும் சிரத்தையை சட்டம் ஒழுங்கில் காட்டியிருந்தால் வீரப்பனை பிடித்த விஜயகுமார் ஐபிஎஸ் அளவுக்கு சிறந்த ஆணையர் என பேர் வாங்கியிருப்பார். இது சென்னையின் கதை மட்டுமல்ல பல கமிஷனரேட்டுகளில் இவைகள் நடக்கத்தான் செய்கிறது.
இதுமட்டுமல்ல தமிழகத்தின் காவல்துறைக்கு முதுகெலும்பாக இருக்கும் உளவுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு பற்றி எழுதினால் ஒரு புத்தகமே போடலாம். முதல்வர் வீட்டில் ஏபிவிபி மாணவர்கள் முற்றுகை விஷயத்தில் கோட்டை விட்டார்கள் என்று எழுதினோம் அல்லவா; அதேபோல் பல சம்பவங்கள் மாநில உளவுத்துறை கோட்டைவிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. முக்கியமானது கள்ளக்குறிச்சி கலவரம். 3 நாட்கள் திட்டமிட்டு ஆட்களை திரட்டும் வரை அசையாது இருந்தது உளவுத்துறை. சமீபத்தில் கூட கிருஷ்ணகிரியில் எருதுவிடும் திருவிழாவில் ஒருங்கிணைப்பு இல்லாமல் கோட்டைவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் கலவரம் நடந்தது. இதுமட்டுமா இரண்டு நாட்களுக்கு முன் பிரபாகரன் குறித்த தகவல் பற்றி நெடுமாறன் பிரஸ்மீட் வைக்கிறார், அவருக்கு தகவல் எங்கிருந்து வந்தது, யார் அவரை சந்தித்தது? அவர்கள் யார்? இன்னும் யார் யாரை அவர்கள் சந்தித்தார்கள் என்கிற தகவல் இல்லாமல் இண்டர்னல் செக்யூரிட்டி, இண்டலிஜென்ஸ் அதிகாரிகள் கையை பிசைந்து நின்றுள்ளனர்.
இண்டர்னல் செக்யூரிட்டியில் ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி இருந்தார். உளவுத்துறை, உள்நாட்டு பாதுகாப்பு இரண்டிலும் வலுவான அனுபவம் பெற்ற அதிகாரி. வீட்டில் ஒரு ஆர்டர்லி கூட வைத்துக்கொள்ளாத அதிகாரி. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் அவர் நேர்மையாக யாருக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தார். அதிலிருந்தே அவரை நகர்த்த துடித்தார்கள் அவருக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வந்தவுடன் அவரது அனுபவத்துக்கு ரிட்டையர் ஆக 6 மாதம் உள்ள நிலையில் அதே பதவியில் அவரை தொடர விட்டிருக்கலாம், ஆனால் அவரை வேறு முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றி முக்கியமான இண்டர்னல் செக்யூரிட்டி துறைக்கு, உளவுத்துறை வேலை என்றால் என்னவென்றே தெரியாத மகேஷை நியமித்துள்ளனர்.
அதுவும் நேரடியாக மகேஷை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுக்கு நியமிக்காமல், பாதுகாப்பு பிரிவு டிஐஜி என்று நியமித்து, கூடுதல் பொறுப்பாக உள்நாட்டு பாதுகாப்பை வழங்கியுள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுக்கு நரேந்திரன் நாயர் என்ற ஐஜி நியமிக்கப்பட விருப்பம் தெரிவித்தும், அதை நிராகரித்து டேவிட்சன் மகேஷை இப்பதவிக்கு நியமித்ததன் காரணம், உள்நாட்டு பாதுகாப்பை விட, தான் பாஸ்பார்ட். வழக்கில் சிக்கிவிடாமல் இருக்க தனது பாதுகாப்புதான் முக்கியம் என்று கருதியதே. கோவையில் தற்கொலை குண்டு வெடித்தும் கூட இப்படி ஒரு நியமனத்தை டேவிட்சன் செய்கிறார் என்றால், அவர் எப்படிப்பட்ட தகுதியற்ற அதிகாரி என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் இவரைத்தான் முதல்வர் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.
இதுமட்டுமல்ல இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருக்கும் நேரம் ஆட்கள் ஊடுருவல், போதைப்பொருள் கடல் மார்க்கமாக அதிகம் கடத்தப்படும் நேரம், தேவையில்லாத ஊடுருவல் தமிழகத்தில் நடக்க வாய்ப்புள்ள காலக்கட்டம், இந்த நேரத்தில் எத்தனையோ உயர் அதிகாரிகள் இருக்க மகேஷ் போன்ற அதிகாரியின் நியமனம் எப்படி சரியாக இருக்கும். மற்றொரு புறம் நாட்டில் கொலை கொள்ளை, சாதிய, மதவாத கருத்துகள் அதிகரித்துவருகிறது. முக்கியமான தென் மாவட்டங்களில் ஜாதிய கருத்துகள் தலைதூக்குவது, ஊடுருவி உள்ளது, அதைப்பற்றி உளவுத்துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இதனால் கொலைகள், மோதல்கள் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கியமாக அனுபவம் பெற்ற உளவுத்துறை காவலர்கள் வேறுபணிக்கு மாற்றப்படுவதையும் பலரும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமின்றி, தமிழகத்தில் சீன உளவுத்துறையின் ஊடுருவல் கண்ணுக்கே தெரியாமல் நடைபெற்று வருகிறது. இது மிக மிக முக்கியமான விஷயம். பாதுகாப்பு காரணங்களுக்காக இது பற்றி மேலும் விவரிக்க முடியாது.
கோவையில் கோர்ட் வளாகத்தில் கொலை, அதற்கு ஒருநாள் முன்னர் ஒரு கொலை தொடர் பழிவாங்கல் கொலைகள். கூலிப்படைகள் அட்டகாசம், ஏடிஎம் கொள்ளை என ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட சைபர் குற்றங்கள் பக்கம் கவனமே செலுத்தாமல் எனக்கென்ன என்று மாநில போலீஸும் சென்னை காவல்துறையும் உள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிக்க தனி பிரிவு ஏடிஜிபி தலைமையில் உள்ளது. சமீப காலங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் சைபர் பிரிவு போலீஸார் சமூக வலைதளத்தில் லாவணி பேசும் அவதூறுகளை பற்றி விசாரிப்பதில் மட்டும் ஈடுபடுத்தப்படுவது அதிகம் நடக்கிறது. இந்த காலக்கட்டத்தில் அப்பிரிவில் அதுகுறித்த ஞானம் உள்ள எஸ்.பி.லெவல் அதிகாரிகளை நியமித்து மாவட்டம் முழுவதும் இதற்கென தனியாக சிபிசிஐடி போல் அதிகாரம் கொடுத்து இயங்க வைக்கலாம் என நிபுணர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் நடப்பதுதான் அதிகம் உள்ளது.
96-ல் முதல்வராக மீண்டும் பதவியேற்ற முதல்வர் கலைஞர் காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகிப் போய் விட்டது என்று சொல்லி சில நடவடிக்கைகள் எடுத்தார். கலைஞரின் அந்த வார்த்தை பல் அதிகாரிகளை மிகவும் காயப்படுத்தியது. இதை அவரிடமே சொன்னதும், சென்னை லயோலா கல்லூரி அருகே ஆசைத்தம்பி மற்றும் கபிலன் சுட்டுக் கொல்லப்பட்டபோது, காவல்துறையினரை பாராட்டிப் பேசினார்.
தற்போது காவல் துறை முதல்வர் குடும்பத்தாராலும், சின்னவரின் நட்பு வட்டாரங்களில் உள்ளவர்கள், சில அமைச்சர்கள் கட்டுப்பாட்டால் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சொன்னதுபோன்ற நிலை நோக்கி செல்கிறது. சரியாக முடிவெடுத்து சரியான அதிகாரிகளை முதல்வர் நியமித்து ஆட்சித்தேரை நகர்த்தினால் திருவாரூர் தேர் போல அலங்காரமாய் நகரும். ஆனால் அவரை அப்படி செய்ய விடுவார்களா? என்பதுதான் சந்தேகம். அனுபவம் வழுக்கை விழுந்த பிறகு கிடைக்கும் சீப்பு என்று ஒரு முதுமொழி உண்டு.