சவுக்கு வாசகர்களுக்கு வணக்கம், கட்டுரையாக விஷயங்களை சொல்வது ஒருவகை. ஆனால், பல விஷயங்கள் சின்ன சின்னதாக கடந்துச் செல்கிறது. இவைகளை ஒரு சில அச்சு ஊடங்கள் தவிர பெரும்பாலான ஊடகங்கள், முக்கிய காட்சி ஊடகங்கள் தொடுவதே இல்லை. அதிமுக்கியமான விஷயங்கள் வாசகர்களின் பார்வைக்கு வருவதே இல்லை. இவைகளை இலைமறை காயாகவும், நேரடியாகவும் வாசகர்களுக்கு அளிக்க புதிய முயற்சியை சவுக்கு ஆன்லைன் உருவாக்க உள்ளது.
வாரா வாரம் அல்லது வாய்ப்புள்ளபோதெல்லாம் இதுபற்றி சிலர் பேசுவார்கள். அவர்களைப்பற்றிய அறிமுகம்…
நமது வழக்கமான சோர்ஸ் பார்ட்டி கும்மிடிப்பூண்டி கோபாலு, பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போஸ் பாண்டி, குமார் ஜி, கமால் பாய் ஆகியோர் சந்தித்து பல்வேறு விஷயங்களை அலசுவார்கள். அவர்கள் அமர்ந்து பேச ஒரு இடம் வேண்டுமல்லவா? அது டீக்கடையோ காபி டேவோ அல்ல. மக்களோடு மக்களாக இவர்கள் அமர்ந்து பேசும் இடமே அரசியல் பாசறை.
அரசியல் பாசறையில் அமர்ந்து இவர்கள் அலசப்போகும் விஷயம் யாரும் கேள்விப்படாத விஷயங்கள், அதிகாரிகள் பற்றி, அரசு நிர்வாகம் பற்றி, அரசியல் திருப்புமுனைகள், அரசியல் சார்பற்று பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயமாக இருக்கும். உங்களுக்கான சுவாரஸ்யத்துக்கும் குறைவிருக்காது. அதற்கு நாங்க கேரண்டி.
கோபால் அண்ணே வணக்கம் வாங்க ஒரு டீ சாப்பிடலாம் அழைத்தார் போஸ் பாண்டி. என்ன பாண்டி எப்படி இருக்க வா மன்றத்துக்கு போலாம், டீ அங்க வரட்டும் நாலு டீயா சொல்லிடு கமால்பாயும், குமார்ஜியும் வந்துகிட்டு இருக்காங்க என்றார் கோபால்.
எண்ணன்னே விசேஷம் எல்லோரும் வர்றாங்க போஸ்பாண்டி கேட்க சும்மா தான் ஈரோடு கிழக்கு இடைதேர்தல் நடக்குதுல்ல அதுல குமார்ஜிக்கு ஏகப்பட்ட சந்தேகமாம் உங்க ஆட்கள் நிக்கல காங்கிரஸ நிக்க வச்சிருக்கீங்க அதனால் அக்கறை காட்டலைன்னு சொல்கிறார் குமார்ஜி.
அண்ணே என்னை கொண்டுபோய் ஏண்ணே திமுக ஆளுன்னு சேர்க்கிறீங்க. ஏதோ 2021-ல் மாற்றம் விடியல் வரும்னு ஓட்டுப்போட்டால் உடனே திமுககாரன்னு சொல்கிறீர்களே நியாயமான்னு போஸ்பாண்டி கோபப்பட கோச்சுகாதப்பா, என்ன இருந்தாலும் உன் ரத்தத்தில் அது ஊறிப்போய் கிடக்கு அவ்வப்போது வாசகர்களும் பின்னாடி அத தெரிஞ்சுக்குவாங்கன்னு மீண்டும் கிண்டலடித்தார் கோபால். நீ மட்டும் இல்லப்பா குமார ஏன் குமார்ஜின்னு சொல்றேன் சொல்லு, அந்த பயபுள்ளக்கு எப்போதும் மத்தியில் உள்ளவங்க மீது பாசம் தான், அதேபோல கமால் பாய் ரெண்டுக்கெட்டான் கண்ண மூடிகிட்டு பாஜக வந்துரும்னு எதிர்க்கிறது, எல்லாத்தையும் நம்புறது என்று மீண்டும் கிண்டலடித்தார் கோபால்.
அண்ணே நாங்க மட்டுமா தமிழ் நாடே அப்படித்தானே குழம்பிபோய் கிடக்கு என்று சொல்லியபடி மன்ற பெஞ்சில் வந்து அமர்ந்தனர் கமால்பாயும், குமார் ஜியும். வாங்கப்பா தம்பிகளான்னு வரவேற்ற கோபால் தம்பி டீ இன்னும் வர்லன்னு வடிவேல் பாணியில் டீக்கடைக்காரரை நோக்கி குரல் கொடுத்தார்.
அப்புறம் ஈரோடு கிழக்கு தொகுதி எப்படி இருக்கு நீ சொல்லுப்பா போஸ்பாண்டி என்றார் கோபால். அண்ணே தொகுதி முழுதும் திமுகவினர் சிறப்பா வேலை செய்றாங்க, செந்தில்பாலாஜி வேகமா வேலை செய்கிறார். அமைச்சர்கள் வீதி வீதியா போய் பிரச்சாரம் செய்கிறார்கள், தொகுதிக்கு மருமகன் சபரீசன் விசிட் அடிச்சு அவர் சமூகத்தை சேர்ந்த தொகுதியில் அதிக வாக்குள்ள சமுதாயத்தார சந்திச்சதா தகவல் வெளியாயிருக்குண்ணே. அது மட்டுமில்ல நெசவாளர் சங்கங்கள கூப்பிட்டு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் திமுகவுக்கு ஓட்டப்போட்ருங்கன்னு சொல்லியிருக்காரு, பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை கூப்பிட்டு வாக்குறுதி கொடுத்ததாக சொல்றங்கண்ணே.
ஏம்பா சப்ரீசன் அங்க போய் தேர்தல் வேலை பார்க்குறாருன்னு சொல்கிறாரே அவர் திமுகவில் என்ன பதவியில இருக்காரு, அல்லது அமைச்சரான்னு எதிர்கேள்வி கேட்டார் கமால்பாய். பாய் நீங்க இப்படி கேட்கிறீங்க உங்களுக்கு பதில் தெரியாதா திமுகவுல குடும்பம் தான் எல்லாம்னு தெரியாதான்னு இடையில் புகுந்தார் குமார்ஜி, இருப்பா அதை போஸ்பாண்டி சொல்லட்டும்னுதான் கேட்கிறேன் என்று கிண்டலடித்தார் கமால்பாய். எப்படியாவது எனக்கு திமுக முத்திரை குத்தணும் அதுதானே உங்க ஆசை கமால் பாய் என்று கோபமாக கேட்டார் போஸ்பாண்டி.
சரி விடு பாண்டி நீ கோபப்பட்டால் மட்டும் அது இல்லாமல் போகப்போகுதான்னு இடையில் புகுந்த கோபால், ஈரோடு கிழக்கில் வெற்றி பெற போவது யாருன்னு பேச இன்னும் நாள் இருக்கு அதற்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன் கேளு தன் முயற்சியில் மனம் தளராத அந்த நயன் நடிகை அஜித்தை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன்னு சவால் விட்டிருக்காங்களாம். அந்தம்மா அவருக்கு நெருக்கமானவர் ஆச்சே அதை வச்சுத்தான செஸ் போட்டியில கூட அவர் கணவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தாங்கன்னு பேச்சு அடிபட்டதே என்றார் கமால்பாய். ஆமாம் அவங்களே தான் அவங்க கணவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக இருந்தது, ஆனால் அவர் சொன்ன சொதப்பல் கதை அஜித்துக்கு பிடிக்காததால படம் எடுக்கும் நிறுவனத்த கூப்பிட்டு ஆள மாத்துன்னு சொல்லிட்டாரு அஜித்.
கணவருக்காக ஃபேஸ்டைம் வீடியோவில் அஜித்கிட்ட பல தடவை பேசியும் அஜித் ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரத்துடன் பட நிறுவனத்தை அணுக அவர்கள் ரெட்ஜெயன்ட் தான் இன்வெஸ்டர்ஸ் என்று சொல்ல சின்னவரிடம் பேசி என்ன பண்ணுகிறேன் பார்னு நயன் கோபத்தில் சவால் விட்டிருக்காராம் என்று கோபால் சொல்ல அஜித் தாத்தா காலத்து அரசியலையே பார்த்தவரு இதை சமாளிக்க மாட்டாரா என்று கமால்பாய் பதில் சொன்னார்.
இந்த கதை தெரியுமா அரசியல் வாழ்க்கையில்தான் தோல்வின்னு பார்த்தா அந்த தர்மத்தலைவனுக்கு சொந்த வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத ஊமைக்குத்து கிடைச்சிருக்கு என்று குமார்ஜி ஆரம்பிக்க உனக்குத்தான் தலைநகர செய்தி அத்துப்படியாச்சே சொல்லு என்று எடுத்துக்கொடுக்க குமார்ஜி சொல்ல ஆரம்பித்தார். தர்மத்தலைவன் வருமானத்தில் ஒரு பெரிய தொகையை சுமார் 1500 சி வரை அதானி இண்டஸ்ட்ரீயில் முதலீடு செய்தாராம், அது புட்டுகிச்சாம் அது புட்டுக்க போகுதுன்னு வெளியில் தெரியும் முன்னரே பணத்தை வாங்க குஜராத் வரை போனாராம், ஆனாலும் பணம் பணால். இது ஒரு புறம் இருக்க அரசியல் வாரிசு மகன் அவர் பங்காக தந்தை மூலம் கிடைத்த 500 சியை அவர் பங்குக்குக்கும் கல்லல் சரவணன்னு ஒருத்தர்கிட்ட மொத்தமா தூக்கி கொடுத்துட்டு நைனா நீயும் பொம்மை நானும் பொம்மைன்னு புலம்பிக்கிட்டிருக்காராம்.
பெரிய பையன் அந்த பணத்தை குடுத்தது லைக்கா கிட்ட. லைக்காவை கல்லல் சரவணன் ஏமாத்திட்டாரு. ரவி லைக்காவை நெருக்க, லைக்கா சின்னவரிடம் சரணடைந்துள்ளது. சின்னவர் லாட்டரி மருமகன் அர்ஜுனிடம் பொறுப்பை ஒப்படைக்க, கடந்த அக்டோபர் மாதத்தில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து, கல்லல் சரவணனை கைது செய்துள்ளது. ஆனால் பணம் எதுவும் வரவில்லையாம். அடுத்து என்ன செய்வது என்று சின்னவரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
இன்னொரு புலம்பல் காவல்துறைக்குள் இருக்காம் அதையும் கொஞ்சம் கேளுங்கன்னு கமால் பாய் சொல்ல ஒரு புலம்பலா ஓராயிரம் புலம்பலான்னு குமார்ஜி கேட்க கணக்கே இல்ல இருந்தாலும் சிலதை சொல்கிறேன். சென்னை காவல் ஆணையர் அடுத்த டிஜிபின்னு ஒரு கும்பல் கிளம்பி இருக்கு. ஆனால் சென்னை காவல்துறை அதிகாரிகள் வாயை மூடிகிட்டு சிரிக்கிறாங்க. ஏன் சிரிக்கணும் அவர்தான் அந்த ரேங்கில் இருக்கிறார் அல்லவா என்று அப்பாவியாக கேட்டார் போஸ் பாண்டி. யோவ் பாண்டி நான் சொல்ல வந்தது அது இல்ல, இதுக்கு முன்னாடி இருந்த கமிஷனர்கள் அளவுக்கு கூட நிர்வாகம் இல்ல இவர் எங்கேன்னு தமிழகத்தை வழி நடத்தப்போகிறார்னு சிரித்துள்ளார்கள்.
ஒரு வாரம் முன்னாடி கொளத்தூரில் நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை நடந்தது இல்லியா, அதைப்பற்றி இப்போதுவரை துப்பு துலக்க முடியலையாம். தகுதியில்லாத அதிகாரிகளை பொலிட்டிக்கல் பிரஷரில் நியமித்ததுதான் காரணம் என்கிறார்கள். சைலேந்திரபாபுவுக்கு அடுத்து சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இவர் வரணும்னு ஆதரவு பத்திரிக்கைகள், டிஜிட்டல் மீடியாக்களில், யூடியூப்களில் செய்த பிரச்சாரம் எல்லாம் இந்த கொள்ளை சம்பவத்தால் தலைகீழாக போச்சாம். காரணம் சமூக வலைதளத்தில் இவர்கள் செய்த பிரச்சாரமே இவர்களுக்கு எதிரா திரும்பிடுச்சாம். அந்த ஏரியா சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை கூப்பிட்டு கமிஷனர் கொந்தளிச்சிட்டாராம். சிசிடிவிக்கள் பராமரிப்பு, கொள்முதல் விவகாரங்களை தோண்ட ஆரம்பிச்சா பல விவகாரங்கள் வெளியே வரும்போல இருக்கேன்னு கமால் பாய் அடுத்த மேட்டருக்கு தாவினார்.
அதுமட்டுமா? கொச்சின் ஹவுஸ் காவலர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நடந்த முறைகேடுகளையும் தோண்ட ஆரம்பிச்சாலும் கடந்த ஆட்சியில் மட்டுமல்ல அதற்கு பொறுப்பான அதிகாரியா இருந்தவரின் வாரிசும் சிக்குவார்னு சொல்கிறார்கள். உரலுக்கு ரெண்டு பக்கமும் இடி என்பதுபோல் போலீஸார் நிலை கஷ்டம்தான் என அடுத்த சப்ஜக்டுக்கு தாவினார் கோபால். நீங்க போலீஸுக்கு எதிராகதானே பேசுவீங்க இப்ப என்ன என்று போஸ் பாண்டி இடைமறிக்க விஷயத்தை கேளுப்பான்னு சொன்ன கோபால், முதல்வர் வீட்டு வாசலில் காவலுக்கு இருக்கும் போலீஸார் மன உளைச்சல்ல இருக்காங்கலாம்.
அமைச்சர்கள், சொந்தக்காரர்கள் வந்தால்கூட அனுமதிக்கக் கூடாதுன்னு அம்மா சொல்றாங்களாம். ஏன் அவர்களை உள்ளே விடலன்னு சி.எம். அய்யா திட்டுறாராம். அம்மா தான் விட வேணான்னு சொன்னாங்கன்னு சொல்ல வேண்டியதுதானேன்னு அப்பாவியாய் குமார்ஜி சொல்ல அவரை ஒரு முறை முறைத்துவிட்டு கோபால் பேச ஆரம்பித்தார், ஏம்பா குமாரு அப்படி சொல்ல முடியுமா பெரியவர்கள் விவகாரம் அல்லவா, சிக்கலாகிடும் அல்லவா. அதையெல்லாம் மனசுக்குள் பூட்டி வச்சிகிட்டு அய்யா இதோ அனுப்பிடுறேன் அய்யான்னுதானே சால்ஜாப்புதான் சொல்ல முடியும். இதில் காமெடி என்னன்னா அமைச்சர்களுக்கே இந்த நிலை என்பதுதான்.
முதல்வர் வீட்டை சுற்றி 12 வாசல் இருக்காம் எதன் வழியா வரணும் எங்கே நிற்கிறோம் என்றெல்லாம் சொல்லணும், அதை மீறி மேடம் உத்தரவு என்றால் அனுமதி இல்லாமல் திரும்பி போகணும். இதுல நடுவுல சிக்கி அமைச்சர்கள், விஐபிக்கள் கிட்ட திட்டு வாங்குவது அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் தான் பாவம் உரலுக்கு ரெண்டு பக்கமும் இடி. ராமர் காலில் மிதிபட்ட தவளை கதை தெரியுமா குமாரு என்று கேட்டார் கோபால். அதத்தெரிஞ்சா நான் கதாசிரியர் ஆயிருப்பேனேன்னு சொன்ன குமார், அதை விடுங்க தீர்வு இல்லா பிரச்சினை கோட்டை கதை ஒன்னு சொல்றேன் கேளுங்க என்று ஆரம்பித்தார்.
தலைமைச் செயலரை தகவல் ஆணைய தலைமை பொறுப்பில் அமர்த்த நினைக்கிறாராம் சி.எம், அதற்கு தோதா இந்த மாத இறுதியில் சி.எஸ் இறையன்பு வி.ஆர்.எஸ் கொடுக்க போறதா சொல்கிறார்கள் என்று சொல்ல அது பழைய கதை புது கதை சொல்லட்டா என்று ஆரம்பித்த கோபால் புதிய தலைமை செயலர் யார் என்பதுதான் இப்ப கோட்டை வட்டார ஹாட் டாபிக் அடுத்த தலைமைச் செயலாளராக 3 பேர் போட்டியில் இருக்கிறார்கள் இதில் முதலிடத்தில் இருப்பவர் ஹன்ஸ்ராஜ் வர்மா போன தடவையே அவர்தான் தலைமைச் செயலாளர் என்று இருந்தபோது அவரைவிட ஜூனியர் இறையன்புவை கொண்டுவந்தார்கள். இந்த முறையும் அவர் போட்டியில் இருக்கிறார்.
86 பேட்ச் அதிகாரி, அனுபவம், டெல்லி லாபி தெரிந்தவர் என்பதால் இவருக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர். 87, 88, 89 பேட்ச் அதிகாரிகள் பல திறமையானவர்கள் இருக்கின்றனர். ஆனால் 91 பேட்ச் அதிகாரிகள் 20 இடத்தில் இருக்கும் முருகானந்தம், 22 வது இடத்தில் இருக்கும் ரமேஷ் சந்த் மீனாவும் அடுத்தடுத்த இடத்தில் போட்டியில் இருப்பதாக சொல்கிறார்கள். தமிழர் ஒருவர் வரவேண்டும் என்றால் முருகானந்தத்துக்கு வாய்ப்பு என்கிறார்கள். ஆனால் முக்கிய தரப்பினர் ஆதரவு ரமேஷ் சந்த் மீனாவுக்கும் உள்ளது என்கிறார்கள். ஆமா சின்னவருக்கு சகல விதத்திலும் ஆலோசனை சொல்வது மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராதான் என்கிறார்களே அவர் போட்டியில் இல்லையா என சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைத்தார் கமால்பாய்.
ஆமாம் மருமகனுக்கு எதிராக காய் நகர்த்த சரியான நபரை கேட்டு வாங்கினார்கள். ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு இணையாக அனுபவம் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி, அவர்தான் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். மார்க் மை வார்ட் சின்னவர் காலத்தில் அவர்தான் சி.எஸ் என்றார் கோபால். அவர் கொடுக்கும் ஆலோசனையில் உதயமான அந்த அதிகாரிக்கு நெருக்கடி அதிகமாக இருக்காம் அதனால் மாற்றம் கேட்டு வருவதாக தகவல். அது மட்டுமல்லாமல் உதயமான அதிகாரி இன்னொரு வேலையையும் செய்துள்ளார். அவருக்கு சிவதாஸ் மீனா தலைமைச் செயலாளர் ஆவதில் விருப்பம் இல்லை. தலைமைச் செயலாளர் ஆக்குகிறோம் என்று நம்பிக்கை அளித்தே மத்திய அரசுப் பணியில் இருந்த அவர் அழைத்து வரப்பட்டார். முதல்வர் அழைப்பில்தான் அவர் டெல்லியில் இருந்து வந்தார்.
அவர் தலைமைச் செயலாளர் ஆனால், முதல்வரோடு நெருக்கமாகி விடுவார் என்பதால் அவரை வரவிடாமல் செய்ய, ஊழல் ஒழிப்பு இயக்கமான அறப்போர் இயக்கத்தை உதயம் பயன்படுத்தி, சிவதாஸ் மீனா மீது புகார் அளிக்க வைத்துள்ளார் என்பதும் கோட்டை வட்டாரத் தகவல். 20 மாதங்கள் அமைதியாக இருந்த அந்த அமைப்பு, இப்போது சிவதாஸ் மீனாவுக்கு எதிராக கிளம்புவது ஏன் என்பதுதான் சந்தேகம் எழுப்புகிறது.
இப்படித்தான் உளவு அதிகாரி விருப்பம் இல்லாமல் இருக்கிறார் மாற்றப்போகிறார்கள் என்றீர்கள் இதுவரை மாற்றவில்லை, இப்ப இவரை சொல்கிறீர்கள் இதுமட்டும் நடக்கவா போகிறது என்று போஸ் பாண்டி பாயிண்ட புடிச்சார்.
அதுவேற மேட்டர், வேறு காலம். இது சின்னவர் காலம் பாண்டி. சின்னவர் அமைச்சரானவுடன் மருமகன் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து காய் நகர்த்தல் நடக்கிறது. அதற்குத்தான் அந்த முக்கிய அதிகாரி ஆலோசனை கேட்டு நடக்கிறாராம் சின்னவர் என கோபால் சொல்ல ஆமா துறை அதிகாரியிடம் பேசினால் கூட கதை கட்டுவீர்கள் நீங்கள் என போஸ்பாண்டி எதிர்கேள்வி கேட்க நானாக எதையும் சொல்ல மாட்டேன் எனக்கு வரும் தகவல்களை சொல்கிறேன் நம்பினா நம்பு நம்பாகாட்டி போ என்று கோபால் கோபித்துக்கொண்டார்.
இப்படித்தான் வெளியில் உலா வரும் விஷயத்தை நம்பாமல் மீடியா கேமராக்களை கூட்டிக்கொண்டு அலையும் அதிகாரிகளை நம்பி புதுக்கோட்டை மலம் கலந்த விவகாரத்தில் கோட்டை விட்டார்கள் என்று கோபால் சலித்துக்கொண்டார். என்ன கோட்டை விட்டார்கள் சிபிசிஐடி விசாரணை அமைத்து விசாரணை நடக்கிறதே என போஸ் பாண்டி சொல்ல, விசாரணைத்தான் நடக்கிறது வேறு என்ன முன்னேற்றம், இப்ப அந்த விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுக்கிறார்கள் தெரியுமா? அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அளிக்கப்பட்டு இருக்கு இது தெரியாம இங்க நாள கடத்திக்கிட்டு இருக்காங்க என்ற கோபால் ஒரு கிளுகிளு கதையை சொல்லி முடிக்கவா என்று கேட்டார்.
அதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே சொல்லுங்கன்னு மூவரும் கோரசாக சொல்ல, ஆரம்பித்தார் கோபால். நான் பேச்சுக்குத்தான் கிளுகிளுன்னு சொன்னேன் ஆனால் அது துயரப்படும் ஒரு கதை, சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் நிலைக்க முடியும்னு அதில் உள்ள சில ஹீரோயின்களே பகீர் கிளப்பி இருக்காங்க அதைப்போலவே ஊடகத்துறை குறிப்பாக காட்சி ஊடகத்துறையும் மாறி வருவது வேதனையாக இருக்கு. இலைமறை காய்மறையாக சில எடிட்டர்கள் ஆடிய ஆட்டம் இப்ப துணிச்சலாக வெளியே தெரியும் அளவு ஆட ஆரம்பிச்சுருக்காங்க. அதிலும் அந்த குறிப்பிட்ட ஒரு முன்னணி சானல்ல எடிட்டர் மட்டுமல்ல இன்னும் பலரும் அட்ஜெஸ்ட் செய்ய சொல்லி பெண்களை மிரட்டும்போக்கு அதிகரிக்குதாம் என்றார்.
அதுக்குத்தான் விசாகா கமிட்டி இருக்கேன்னு குமார்ஜி பாயிண்ட பிடிக்க, அப்படி எதுவும் இருப்பதாக தெரியல, ஆனால் விவகாரம் வெடித்தால் கைது நிச்சயம் இப்பத்தான் புகைய தொடங்கியிருக்கு நீ சொன்ன மாதிரி விசாகா கமிட்டியும் அந்த நிறுவனத்தில் இல்லை அதனால் எத்தனை பேர் சிக்க போகிறார்களோ பார்ப்போம், என்ற கோபால் அடப்பாவிகளா உங்களோட பேசிகிட்டு இருந்ததில் வீட்ல சட்னி அரைக்க தேங்கா வாங்கிவரச் சொன்னதை மறந்துட்டேனேன்னு கிளம்பினார் சபை கலைந்தது.