35 ஆண்டுகளாக அரசியலைக் கூர்ந்து நோக்குபவன், அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்றாலும், ஒரு அரசியல் கட்சி தேர்தலை எப்படி அணுகுகிறது, குறிப்பாக இடைத்தேர்தலை எப்படி அணுகுகிறது என்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இது வரை கிடைத்ததில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக முகாம் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, தொகுதி முழுக்க சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. எளிதாகச் சொன்னால், தேர்தல் என்பதே ஜனநாயகத்தின் திருவிழாதான். தேர்தல் சமயத்தில் மட்டுமே வாக்காளனை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மதிக்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் தொகுதி வாக்காளர்கள் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பது கூட பெரும் கடலைத் தாண்டுவது போல கடினமாகத்தான் இருக்கும்.
அரசியல் கட்சிகள், மக்களை இந்த இடைத்தேர்தலுக்காக தங்கத் தட்டில் வைத்துத் தாங்குவதை பார்க்க முடிகிறது. அவர்களை இரு கட்சிகளுமே தாங்கு தாங்கென்று தாங்குகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில், கவுண்டர்கள், முதலியார்கள் சம எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள், அருந்ததியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள். இவர்களில் பெரும்பாலானோர் விளிம்பு நிலையில் இருப்பவர்கள். வறுமையில் இருப்பவர்கள். இவர்களைத்தான் குறிவைத்துள்ளது திமுக.
இன்று தமிழகத்தைப் பொறுத்தவரை, பணம் கொடுக்காமல் எந்தக் கட்சியும் தேர்தலை சந்திக்க முடியாது என்பது யதார்த்தம். இதைப் புறக்கணித்து விட்டு நாம் utopian அரசியல் பேசிக்கொண்டிருக்க முடியாது. இந்நிலை எப்போது மாறுமோ அப்போது இதை தவிர்ப்பதைப் பற்றி பேசிக் கொள்ளலாம். இந்த வகையில், எனக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளபடியே மகிழ்ச்சி. நான் ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் நேர்மையாக அரசியல் செய்யப் போகிறேன் என்று எந்த அரசியல்வாதியும் சொல்லப்போவது இல்லை. அது சாத்தியமும் இல்லை. அதனால், அரசியல்வாதி தான் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை, ஏழைகளுக்கும், உழைப்பாளி மக்களுக்கும் தேர்தல் நேரத்திலாவது பகிர்ந்து கொடுப்பதை நான் உளப்பூர்வமாக வரவேற்கிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட, தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் இன்று ஓரளவு உயர்ந்திருக்கிறதுதான் என்றாலும், 1000 ரூபாய் என்பது இன்னும் பல ஏழைக் குடும்பங்களுக்கு பெரிய தொகையே. எனது உறவினர்களிலேயே பலர் இன்னும் 100 நாள் வேலைத் திட்டம் தரும் ஊதியத்தை நம்பி இருக்கின்றனர். ஜெயலலிதா தந்த இலவச ஆடு மாடுகளால் வாழ்வு பெற்றவர்களை எனக்குத் தெரியும். கலைஞர் இலவச கலர் டிவி தரும் வரையில், வீட்டில் தொலைக்காட்சி இல்லாத குடும்பங்களை நான் அறிவேன். அதனால், வாக்குகளுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை நான் வரவேற்கிறேன்.
சரி; பணம் இருக்கும் கட்சிகள் கொடுக்கின்றன. பணம் இல்லாத கட்சிகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு என்னிடம் விடையில்லை. இதுதான் கள யதார்த்தம். பணத்தை விட, எனது வேட்பாளர் சிறந்தவர்; அவருக்கு வாக்களித்தால் இவர் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவார் என்று மக்களை convince செய்வது அதிமுக, திமுக அல்லாத அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் சவால்தான்.
ஈரோட்டுக்கு வருவோம். அதிமுகவை பொறுத்தவரை, இந்தத் தேர்தல் அவர்களுக்கு வரப்பிரசாதம். இதனால் அவர்களுக்கு பல நன்மைகள். முதல் நன்மை பிஜேபி மற்றும் திமுகவோடு கைகோர்த்துக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்த கோடரிக் காம்பு ஓ பன்னீர்செல்வத்தின் கதை இந்த இடைத்தேர்தலோடு முடிந்தது. ஓபிஎஸ் தலைமை, ஈபிஎஸ் தலைமை, இரு அணிகள் என்ற விவாதம் இத்தேர்தலோடு முடிவுக்கு வந்து விட்டது. மிக சாதுர்யமாக, எடப்பாடி பழனிச்சாமி ஒரு இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றத்தை அணுகி பெற்றார். உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த இடைக்கால உத்தரவு, மெயின் வழக்கில் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஈரோடு கிழக்கின் வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் கூறியதன் மூலம், பொதுக்குழுவே அதிமுகவின் அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதை சுட்டிக்காட்டியுள்ளது என்பதையே இந்த இடைக்காலத் தீர்ப்பின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தீர்ப்பின் காரணமாக, இரட்டை இலைக்கு உரிமை கோரும் பன்னீர்செல்வத்தின் திட்டம் தவிடு பொடியானது.
இரண்டாவது நன்மை, அதிமுக என்ற பெரிய கட்சியை, அதில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக இஷ்டப்படி வளைத்து அக்கட்சியை தங்களது கைப்பாவையாக ஆக்கி விடலாம் என்று நினைத்த பிஜேபியின் கனவு தகர்ந்து போனது. இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும், அதிமுக என்ற கூட்டணியின் தலைமைக் கட்சியை கலந்தாலோசிக்காமலேயே பிஜேபி தேர்தல் பணிக்குழு அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம், எங்களின் ஆதரவு உங்களுக்கு அத்தனை எளிதில் கிடைத்து விடாது; நாங்கள் ஆதரவை அத்தனை சுலபத்தில் தந்து விட மாட்டோம்; நாங்கள் சொல்லும்படி கேட்காவிட்டால் பன்னீர்செல்வத்தை வைத்து இரட்டை இலையை முடக்குவோம் என்ற உத்தியை பிஜேபி பிரயோகித்தது.
இதை நன்கு புரிந்து கொண்ட எடப்பாடி, இதை முறியடிக்கவே உச்சநீதிமன்றத்தை அணுகினார். அது மட்டுமல்ல, தமிழகத்தில் யார் பெரிய கட்சி என்பதை பிஜேபி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஈரோடு தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பிஜேபி கூட்டணியின் பெயரான தேசிய ஜனநாயக கூட்டணி என்பதை தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்தார். ஆனால் மேடையில் மோடியின் படம் இல்லை. பிஜேபி தலைவர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதால், அந்த பேனர் தேசிய ஜனநாயக கூட்டணி என்று மீண்டும் மாற்றப்பட்டது. பிஜேபி தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கையில், நான் அதிமுக தலைவர்களிடம் பேசினேன். ‘அது ப்ரிண்டிங் மிஸ்டேக். சொன்னதும் திருத்திக் கொண்டார்கள்’ என்று கூறியதை அடுத்து, மீண்டும் பேனர் மாற்றப்பட்டது. இம்முறை, “அதிமுக தலைமையிலான கூட்டணி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் யார் கூட்டணிக்கு தலைமை என்பதை பிஜேபி தலைமைக்கு தெளிவாக உணர்த்தினார் எடப்பாடி பழனிச்சாமி.
சிடி ரவியோடு எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில், அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டது என்று வரலாற்றுப் பாடம் எடுத்ததோடு, அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று இலவச அறிவுரைகளையும் வழங்கினார்.
பன்னீர்செல்வத்தை வைத்து காய் நகர்த்தி, எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டலாம் என்று நினைத்த பிஜேபியின் திட்டங்கள் ஒவ்வொன்றாய் தோல்வியைத் தழுவின. பிஜேபி சொல்லியபடி பன்னீர்செல்வமும் ஒரு வேட்பாளரை நிறுத்தினார். அவர் வேட்புமனுவும் தாக்கல் செய்தார். இதற்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர, பன்னீர் பின்வாங்கினார்.
மூன்றாவது நன்மை, தமிழ் மாநில காங்கிரஸை கபளீகரம் செய்யலாம் என்று நினைத்த பிஜேபியின் திட்டமும் தோல்வியைத் தழுவியது. தமிழ் மாநில காங்கிரஸின் வேட்பாளர் யுவராஜ்தான் ஈரோடு கிழக்கில் 8 ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் தோல்வியடைந்த வேட்பாளர். அவரை அணுகி, அவரை தாமரை சின்னத்தில் நிற்கவைத்து அக்கட்சியை கபளீகரம் செய்யலாம் என்று அவர்கள் போட்ட திட்டத்தையும் முறியடித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இது வரை, அதிமுகவை பிஜேபி துணையோடு உடைத்து விட்டோம்; அவர்களை எளிதாக வெற்றி காணலாம் என்று இறுமாந்து இருந்த திமுக, அதிமுக நேரடியாக களத்தில் இறங்குவது கண்டதும் சுதாரித்தது. இது வலுவான போட்டியாக அமையப்போகிறது என்பதை திமுக உணர்ந்தது.
தொடக்கத்தில் 11 அமைச்சர்கள் கொண்ட 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்த திமுக, அனைத்து அமைச்சர்களையும் களத்தில் இறக்கியது. செந்தில் பாலாஜியிடம் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு 24 பூத்துகள் ஒதுக்கப் பட்டிருந்தன. மா. சுப்ரமணியத்துக்கு 12 பூத்துகள். மா. சுப்ரமணியம் செலவு செய்ய முடியாது என்று கை விரிக்கவே, செந்தில் பாலாஜி 36 பூத்துகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கில் பணம் ஆறாக ஓடியது. பணத்தை செலவு செய்து, எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்ற இறுமாப்பில் திமுக செய்யக் கூடாத காரியங்களையெல்லாம் செய்தது. இவர்களுக்கு வேலை செய்யும்; இவர்கள் ஆதரவாளர்களுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்டு வருகையில், தொகுதியில் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், ஈரோடு கிழக்கில் இருக்கும் விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களை தினமும் காலையில் அழைத்துச் சென்று பட்டிகளில் ஆட்டை அடைப்பது போல அடைக்கத் தொடங்கினர் திமுகவினர்.
ஈரோடு கிழக்கில் மொத்தம் 120 ஷெட்டுகள் அமைக்கப்பட்டன. தினமும் காலையில் 7 மணிக்கே வாக்காளர்களை அழைத்து வந்து, ஷெட்டுகளில் அடைத்தனர். அங்கே, தினமும் LCD திரையில் துணிவு, வாரிசு போல புதிய படங்கள் திரையிடப்பட்டன. மூன்று வேளையும் கறியோடு கூடிய விருந்து. மேட்டுர் அணை, சென்னிமலை போன்ற இடங்களுக்கு இன்பச் சுற்றுலா. ஏழை மக்களின் கனவில் கூட இந்த சொகுசு வந்திருக்காது. அம்மக்களால் இவர்கள் பண பலத்தையும், அதிகாரத்தையும் எதிர்க்க முடியாது என்பதால், இதற்கு உடன்படுகின்றனர். தலித் குடியிருப்பில் இருந்து பேசிய அதிமுக ஆதரவாளர் ஒருவர், அந்தக் குடியிருப்பில், மொத்த மக்களும் திமுக பக்கமும், அவரும் மற்ற இருவர் மட்டுமே, திமுகவின் பணத்தை எதிர்ப்பார்க்காமல் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனர்.
ஈரோட்டில் விளிம்பு நிலை மக்கள் பஸ்ஸில் டூர் அழைத்துச் செல்லப்படும் காட்சி
செந்தில் பாலாஜி தொடங்கி வைக்க, ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களுமே பட்டிகளில் மக்களை அடைக்கும் திட்டத்துக்கு ஒத்துழைக்கத் தொடங்கினர். மக்களை மாக்களைப் போல நடத்தும் இம்முறை சக மனிதனாக எனக்கு அவமானத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுகவினருக்கும், திமுக தலைவர்களுக்கும் இது துளியும் தவறாகத் தெரியவில்லை என்பதுதான் வேதனை.
இதற்கிடையே ஒரு முக்கியமான development நடந்தது. 2024 தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேடையில் மோடி படம் தோன்றியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்தக் கட்சியும் தேர்தல் நெருங்கும் வரையில் கூட்டணி குறித்து வெளிப்படையான commitmentஐ அளிக்க மாட்டார்கள். அதுவும் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக தன்னை தகவமைத்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.
பிஜேபி தலைமை சார்பாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த சிடி. ரவி வெளிப்படையாகவே கூறியது, “எங்களோடு கூட்டணி தொடரும் என்பதை நீங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உங்களிடம் இருந்து இப்படி ஒரு வெளிப்படையான commitment வராவிட்டால், நாங்கள் உங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ‘கொடுக்க’ மாட்டோம்” என்று கூறினார். 11 ஜனவரி அன்று தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம், ஒரு மாதம் கடந்தும் இது வரை தீர்ப்பு குறித்து வாய் திறக்கவில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
சிடி. ரவி சொல்லியதன் பொருள், பிஜேபியோடுதான் 2024ல் கூட்டணி என்று சொல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வராது அல்லது, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்பதே.
நிலைமையை எடப்பாடி பழனிச்சாமி புரிந்து கொண்டார். ஒரு வருடம் தீர்ப்பு வராமல் தாமதமானால் அது பன்னீர்செல்வத்துக்கு புதிய உயிரைக் கொடுப்பதோடு, தன்னை அரசியல் ரீதியாக செயல்பட விடாமல் தடுக்கும் என்பதையும் புரிந்து கொண்டார். அந்தப் புரிதலின் விளைவே, 2024 தேர்தலிலும் பிஜேபியோடு கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பு.
இது இறுதியான அறிவிப்பு அல்ல. அரசியலில் எதுதான் உறுதியான இறுதியான அறிவிப்பு !!!
திமுகவினர் இப்படி பணத்தை தண்ணீராக செலவழித்தாலும், எனக்கு எப்போதும் மக்களின் மீது அபாரமான நம்பிக்கை உண்டு. அவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான தீர்ப்பை எப்படி அளிப்பது என்று நன்கு தெரியும். நல்ல தீர்ப்பை அளிப்பார்கள் என்று எம்மக்களின் மீது உள்ள நம்பிக்கை பொய்த்தது இல்லை.
மக்கள் தீர்ப்புக்காக காத்திருப்போம்.