உஸ் அப்பாடா என்று சோர்வாக வந்து அமர்ந்தார் கோபால். என்னண்ணே இவ்வளவு சோர்வா வர்றீங்கன்னு கேட்டார் கமால் பாய். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு போனேம்பா சுத்தி சுத்தி இடுப்பு எலும்பே கழன்று போச்சுன்னு சலிச்சுகிட்டாரு கோபால். டேய் அண்ணனுக்கு டீ ஒன்னு சூடா கொடுன்னு மன்றத்துக்குள் நுழைந்தார் போஸ் பாண்டி. டீ வேணாம்பா மோர் கொடுக்கச் சொல்லுன்னு சொன்ன கோபால் என்ன போஸ் பாண்டி நீ ஈரோடு போகலையான்னு கேட்டார்.
நான் என்ன உங்கள மாதிரியா பல தேர்தல்கள பார்த்தவன். எப்படி போகணும், எப்படி மாவட்டத்துகிட்ட அட்டெண்டென்ஸ் போடணும், எப்படி பேமண்ட் தேத்தனும்னு தெரிஞ்சவன். எங்க மாவட்டத்துக்கு 2 நாள் ஒதுக்குனாங்க போனோம் வந்துட்டோம் என்று சிரித்தார் போஸ் பாண்டி. அதெல்லாம் விடுங்க ஈரோடு தேர்தல் எப்படி இருக்கு சொல்லுங்கண்ணே என்றபடி மோர் டம்பளரை கோபால் கையில் கொடுத்தார் குமார்ஜி.
வா குமாரு இன்னைக்கு முழுசும் பேசலாம் அவ்வளவு கதை இருக்கு என்றார் கோபால். என்னண்ணே சொல்றீங்க இங்கல்லாம் தொலைக்காட்சிகளில் ஒன்றுமே இல்லையே சாதாரணமாக நீ ஆம்பிளையா நான் ஆம்பிளையான்னுத்தானே மோதிக்கிறாங்க என்று குமார்ஜி கேட்க எந்த சானலாவது போய் எடுத்தால் தானே தெரிவதற்கு, அல்லது பேப்பரில் வந்தால் தானே தெரிய, உங்க யாருக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்தவும் தெரியாது, தமிழன் தமிழன்னு பேசுவீங்க ஆனால் அப்டேட்டா இருக்கமாட்டீங்கன்னு கோபித்துக்கொண்டார் கோபால்.
எந்த சானல்களில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அவலங்கள் இல்லாவிட்டாலும் வேற எந்த தேர்தலிலும் இல்லாத புது நடைமுறை எல்லாம் நடக்குது. வாக்காளரிடம் ஓட்டு கேட்கப்போய், பணம், பொருள் விநியோகம் செய்த காலம் போய் இப்ப வாக்காளரையே ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல் அடைச்சு வச்சு அடைக்காக்குது திமுக. முதல் ரெண்டு மூன்று நாட்கள் தான் மக்களை இவர்கள் போய் கூட்டிட்டு வந்தாங்க. இப்ப அவங்களே ஷெல்டருக்கு வந்துடுறாங்க. 500 ரூபாய் பணமாம், 3 வேளை கறி சோறு, புது படங்கள் போட்டு காண்பிக்கிறாங்க; ஆண்களுக்கு தினமும் கோட்டர். அதனால் ஜனங்க காலையில் ரெடியாகி வேலைக்கு போவதுபோல் பட்டியில் வந்து அடைஞ்சிடுறாங்க.
என்னண்ணே சொல்ற ! நேத்துக்கூட கோர்ட்ல தேர்தல் ஆணையம் நியாமான தேர்தல் நடக்கும், மூணடுக்கு பாதுகாப்பு அது இதுன்னு சொல்லி வாக்குறுதி கொடுத்து கோர்ட்டும் ஏத்துகிச்சேண்ணே என்று கேட்டார் கமால்பாய். கமால் உனக்கு இந்த நடைமுறை எல்லாம் புரியாது. அது கோர்ட்டுக்கு சொல்லும் சால்ஜாப்பு, நடைமுறையில் தொகுதியில் இதெல்லாம் பகீரங்கமாக நடக்குது, ஆனால் பறக்கும் படை எல்லாம் எங்க பறந்து போச்சுன்னு தெரியல என்றார் கோபால்.
வீதி வீதியா குக்கர் குடுக்குறாங்கன்னு சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வீடியோவோட வருது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சமூக ஊடகங்களில் வர்றதையெல்லாம் ஆதாரமா ஏத்துக்க முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா ஈரோடுல அதிகாரிங்க, பேருக்கு ஏதாவது செய்யணும்னு செஞ்சிக்கிட்டு இருக்காங்க.
தேர்தல் சம்பந்தமா ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர் ஒருத்தரோட நண்பர், மக்களிடம் பணம் எந்த அளவுக்கு வாக்கு செலுத்துவதில் செல்வாக்கு செலுத்துகிறதுன்னு சர்வே நடத்த பார்ம்ஸ் எடுத்துட்டு வந்துருக்கார். இரவு சோதனையின்போது, உதவி தேர்தல் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் அந்த பார்ம்ஸையெல்லாம் பறிமுதல் பண்ணிட்டு அனுப்பிருக்கார். எந்த அரசியல் கட்சிக்காக வேலை செய்யறீங்கன்னு கேட்கவும், அவர் நாங்க ஆராய்ச்சிக்காக இதை செய்யறோம்னு சொல்லவும், அனுமதி இல்ல. போங்கன்னு சொல்லிட்டாரு.
அந்த ஆராய்ச்சியாளர் செங்கோட்டையன் கிட்ட விஷயத்தை கொண்டுபோக, செங்கோட்டையன் தேர்தல் அலுவலர் சிவக்குமாரிடம் கத்தி தீர்த்திருக்கிறார். வீதி வீதியா மக்களை பட்டியில அடைச்சி போடுறாங்க. குக்கர் குடுக்குறாங்க; அதையெல்லாம் விட்டுட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்ம்ஸை பறிமுதல் செஞ்சா என்ன அர்த்தம். கடும் விளைவுகள் ஏற்படும்னு சொன்னதும், முதலில் அப்படி பறிமுதலே செய்யலன்னு சொல்லிட்டு, படிவங்களை குடுத்து அனுப்பிருக்காங்க.
தேத்தல் அதிகாரிகள் திமுகவினரின் பண வினியோகத்தை கண்டு கொள்வதே இல்லை என்றார் கோபால்.
ஏண்ணே ஆனா ஊன்னா திமுகன்னு பட்டுன்னு சொல்லிடுறியே அதிமுக காரங்க கொடுக்கலையான்னு போஸ்பாண்டி விசுவாசத்தை காட்ட அவங்களுக்கு கொடுக்குறாங்கப்பா, ஆனா குக்கர், பாத்திரம், மூன்று வேளை சாப்பாடு, தினம் 500 ரூபா பணம், ஆம்ப்ளைங்களுக்கு குவார்ட்டர், புடவை, வேஷ்டின்னு வாக்காளர்களை சொர்க்கலோகத்துக்கு கூட்டிட்டு போறது நம்ம செந்தில் பாலாஜி டீம் தானேப்பா. அதிமுக காரவுக கொலுசு, வேஷ்டின்னு கொடுக்குறாங்கப்பா என்றார் கோபால்.
சொர்கலோகத்துக்கு கூட்டிட்டு போயிட்டாங்கன்னு சொன்னதும்தான் ஞாபகம் வந்துச்சு எங்க அண்ணன் பையன் அக்பர் ஒரு வீடியோ காட்டினான் அதுல நாலைந்து பஸ்ல இன்பச்சுற்றுலா கூட்டிட்டு போறாங்க, அதை வீடியோ எடுக்கிற நபர்கிட்ட நீ வேணா வந்தா கூட்டிட்டு போன்னு கட்சிக்காரர் சொல்கிறார், இன்னொரு இடத்துல குக்கர வாங்க ஜனங்க ரேஷன் கடைக்கு வர்றதுபோல வந்து தயக்கம் இல்லாம வாங்கிட்டு போறாங்க அதெல்லாம் உண்மைத்தானான்னு கேட்டார் கமால்பாய்.
நீ என்னப்பா சத்யபிரதா சாஹூ போல நம்ப மாட்டேங்கிற. அவர்தான் வீடியோ எல்லாம் நம்ப மாட்டேன்னு அடம் பிடிக்கிறார், நீயும் அதே போல் அடம் பிடிக்கிறாயேன்னு கோபால் கேட்க, அண்ணே கோபால் அண்ணே இதை நாங்க எப்படி நம்புறது ஆதாரம் இருக்கான்னு போஸ்பாண்டி கேட்க, டேய் போஸு உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா அங்க போய் டூர் அடிச்சிட்டு வந்து ஆதாரம் கேட்கிறியா இதுபோல ஆதாரம் கேட்டவங்களத்தான் ஒரு சின்னப்பையன் வச்சி செய்யுறான், நியூஸ் தமிழ் ரிப்போர்ட்டர் ராஜேஷ்னு ஒரு பையன் தமிழ் நாட்டிலேயே ஒரே சானல் இவங்கத்தான் போல களத்துல இறங்கி லைவ் போட்டு கேள்வி கேட்க உன்னை மாதிரி ஆதாரம்னு கேட்டு வந்த திமுக, அதிமுக ஆட்கள் எல்லாம் சேதாரம் ஆகி துண்ட காணோம் துணியக்காணோம்னு ஓடினத லைவ்ல பாத்து ரசிச்சிட்டுத்தான் சொல்றேன்.
ஆனா பாவம்பா அந்த அப்பாவி ஜனங்க. வாழ்க்கையில் முழுசா 500, 1000 த்த பார்க்காத ஜனங்க வெள்ளந்தியா அந்த நிருபர் கேள்விக்கு 500 கொடுத்தாங்க, மூனு வேளை கறிசோறு போட்றாங்க, குக்கர் கொடுத்தாங்க, இதுவரைக்கு 6000 ரூபா வாங்கியிருக்கேன் என்று பட்டு பட்டுன்னு சொல்லுதுங்க. பின்னாடி இருந்து வயித்தால போறவன் அவசரமா ஒதுங்க போனா பாத்ரூம்ல ஆள் இருந்தா எப்படி துடிப்பானோ அப்படி துடிக்கிறான் கட்சிக்காரன் அதையும் அந்த சானல்காரன் காட்டி மானத்த வாங்கிட்டாம்பா.
ஈரோடு கிழக்குல தேர்தல் பறக்கும்படைக்குக் கூட கட்சிக்காரனுங்க பயப்படுல இந்த சானல்கார தம்பி ராஜேஷ் கண்ணுல பட்றக்கூடாதுன்னுத்தான் ஓடி ஒளியறாங்க. அதிமுக காரங்க 8 வேட்டியை கட்டப்பையோட அந்த பையன் கிட்ட கொடுத்துட்டு டிராபிக் போலீஸை பார்த்து டபாய்ற புள்ளிங்கோ போல ஓடினதுதான் செம்ம காமெடி என்றார் கோபால். அய்யய்யோ நான் பார்க்காம போய்ட்டேனே என்று கமால் பாய் வருத்தப்பட, உனக்கு இன்னாதான் தெரியும் பாய்க்கமாருல்லாம் திமுகவுக்கு போடணும்னு அவங்கத்தான் நமக்கு துணைன்னு குதிக்க தெரியும், அந்த பிபிசி டாக்குமெண்டரியை போட்டு காட்டுங்கப்பான்னு திமுக ஆட்கள கேட்டுருப்பியா? இல்ல அந்த கொட்டகையில அடைச்சு வச்சு படம் போட்றாங்கல்ல விசிக; தமிழாக்கம் செஞ்ச அந்த பிபிசி டாக்குமெண்டையும் போட்டு காட்டுனாதான் என்ன? இதை கேக்க தெரியாது என்று கோபால் போறபோக்கில் அடித்து விட்டார்.
எங்க தலைவருங்களே கேக்க மாட்டேங்கிறாங்க நாங்க எங்க கேக்கன்னு வருத்தப்பட்ட கமால் பாய் இப்படி தினம் தினம் பணம் கொடுப்பதும், ஆட்களை அடைத்து வைப்பதும் பகீரங்கமாக தொலைக்காட்சியில் வந்த பிறகாவது தேர்தல் அதிகாரி முழிச்சிக்கிட்டாரான்னு கேட்க, இங்க முழிச்சிக்கவில்லைன்னாலும் மேலே இருந்து ஒரு டீம் மொத்த மேட்டரையும் வீடியோ ஆதாரத்துடன் திரட்டி கணக்கெடுக்குறாங்கலாம். பயபுள்ளைங்க தேர்தல்ல ஜெயிக்கணும்னு தலைய குடுக்குதுங்க போகப்போக பாருங்க தெரியும் என்றார் கோபால்.
இப்போதைக்கு யாருண்ணே ஜெயிப்பாங்க என்று குமார்ஜி கேட்க என்னதான் சின்னம், தொகுதியில் ஜோராக வேலை செய்தாலும் ஜனங்க கிட்ட ஓட்டு கேட்க போனால் அவங்க வீட்டிலேயே இருக்கிறது இல்லாதபோது எங்கே அதிமுக ஜெயிக்கும். செந்தில் பாலாஜி டீம் ஈரோடு கிழக்கு பார்முலா ஒரு பகுதி மக்கள் கிட்ட போய் சேர்ந்திருக்கு. ஆனாலும் அதிமுக டஃப் கொடுக்கிறாங்க பொறுத்திருந்து பார்ப்போம், எனக்கென்னமோ இது ஆர்.கே.நகர் தேர்தல் கதையாக போகும்னு தோணுது பார்ப்போம் என்று சொன்னார்.
ஏன்ண்ணே இப்படி வாயை வைக்கிறீங்க என்று பதறினார் குமார் ஜி.
ஈரோடு இடைத்தேர்தலுக்காக கவுதம் குமார்னு ஒரு CBIC சர்வீஸ் ஆபீசரை தேர்தல் செலவினப் பார்வையாளரா போட்டு இருக்காங்க. அவர் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவில், குஜராத்தில் நீண்ட நாளா வேலை பாத்துக்கிட்டு இருந்தவர். அவர் மட்டுமில்லாம, வருமான வரித் துறை இந்த தேர்தலை உன்னிப்பா பாத்துக்கிட்டு இருக்கு என்றார் கோபால்.
இன்னும் 5 நாள் இருக்கு நட்சத்திர பிரச்சாரகர் எல்லாம் வ்ந்து பிரச்சாரம் செய்துட்டு போயிருக்காங்க என்றார் கோபால், யாருண்ணே அதுன்னு குமார்ஜி கேட்க அதுதாம்பா பிக்பாஸ் புகழ் கமல்ஹாசன் என்று நமுட்டு சிரிப்பு சிரித்தார் கோபால். ஏண்ணே கிண்டலா என்று போஸ்பாண்டி கோபப்பட நான் இல்லாததை சொல்லலைப்பா அவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே நான் சினிமா புகழை விட பிக்பாஸ் மூலம் அதிகமானோரிடம் சென்று சேர்ந்திருக்கேன்னு சொன்னார் அப்ப இக்பாஸ் புகழ்தானேன்னு கேட்டார் கோபால். நீங்க அப்படி சொல்றீங்க ஆனால் அவர் வரும்போது வந்த கூட்டத்தை பார்த்தீர்களான்னு போஸ் பாண்டி கேட்க அதுதாம்பா கமலே ஆச்சர்யப்பட்டு போயிருப்பார் மொத்தமே 20 பேர வச்சிகிட்டு அல்லாடிகிட்டு இருக்கிறோம் இவ்வளவு கூட்டமா என்று வியந்திருப்பார்.
அதெல்லாம் அந்த கூடார கூட்டமா? என்று கமால் பாய் கேட்க ஆமாம்பா 500 ரூபா 3 வேளை சாப்பாடு ஏதாவது வேலை கொடுக்கணும்ல அதான் இவ்வளவு கூட்டம், கமல் என்ன இளைய சூப்பர் ஸ்டார் விஜய்யா கூட்டம் அலைமோதன்னு குமார்ஜி இடையில் புகுந்தார். கூட்டத்த பார்த்தவுடன் கமல் உணர்ச்சி வசப்பட்டு என்னென்னமோ பேசிட்டார், நாட்டு நலம், மக்கள் நலம் அது இதுன்னு பேச கூட இருக்கிறவங்களுக்கே முடியல. இதுல ஜெயலலிதா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியிருக்காரு.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கமல்ஹாசன் என ராகுல் முடிவு செய்து கமலிடம் சொல்லிவிட்டாராம். கமலுக்கு ஏக சந்தோஷமாம், 300 ஓட்டுல போன வெற்றி இப்ப ஈசியா கிடைக்கப்போகுதுன்னு இருந்த நேரத்தில் ஒரு லாரி மண்ண அள்ளி திமுக போட்டிருக்கு. அவர் வேண்டாம், காங்கிரஸிலேயே யாரையாவது நிக்க வையுங்க இல்லன்னா ஈவிகேஎஸ்சை நிக்க வையுங்க கமல் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். இதை காங்கிரஸும் கமலும் கேட்டு ஒத்துகிட்டாங்களா? என்று கமால்பாய் கேட்க, காங்கிரஸ் ஒத்துக்கல ஆனால் கமல்கிட்ட ஒருத்தர் பேசினாராம், அப்புறம் கமல் ஒத்துகிட்டாராம். அந்த அவர், சின்னவர் என்கிறார்கள், பகைச்சுகிட்டா சிக்கல் அல்லவா? இந்தியன்-2 விநியோகம் கண்ணுமுன்னாடி வந்து போகுமில்லன்னு கோபால் சிரித்தார்.
போதுண்ணே ஈரோடு மேட்டர் போரடிக்குது, எப்படியும் அவங்க ஜெயிப்பாங்க இல்ல தேர்தல் ரத்தாகும் நீ அடுத்த விஷயத்துக்கு வா என்று குமார்ஜி சலிப்போடு சொல்ல நீ என்னப்பா அண்ணாமலை போல சோர்ந்துபோய் பேசுற எல்லாம் சரியாகும் இருக்குறவங்களை எல்லாம் கவர்னரா பார்சல் பண்ணியதில் அண்ணாமலைக்கு ரூட் கிளியர்னு சொல்றாங்க, வானதி கூட திடீர்னு அந்தர் பல்டி அடிச்சிருக்காங்க, ஆனாலும் அண்ணாமலை தலைமேல் ஆடிட்டர் கத்தி தொங்கிகிட்டுத்தான் இருக்கு பொறுத்திருந்து பார்ப்போம், அடுத்து போலீஸ் கதைக்கு போகலாமான்னு கோபால் கேட்க அதுதான் உங்களுக்கு லட்டு மேட்டர் ஆச்சே சொல்லுங்க என்று அனைவரும் ஆவலாக அருகில் வந்தனர்.
ஒரு டீ சொல்லுன்னு குமார்ஜிகிட்ட சொன்ன கோபால் சொல்ல ஆரம்பித்தார். பதவிக்காக அரசியல்வாதிகள் மட்டும் அலையவில்லை ஐபிஎஸ் அதிகாரிகளும் அலைவதை பார்க்க முடியுது. அடுத்த டிஜிபி ரேஸில் உள்ள ஒரு அதிகாரிக்கு எதிரா இன்னொரு அதிகாரி சில அரைகுறை ஜர்னலிஸ்டுகளை வைத்து செய்தியெல்லாம் போடவைக்கிறார் என்று போலீஸில் பேச்சு அடிபடுது. செய்தி போடுறதுதான் போடுற கொண்டைய மறைக்க தெரியலையேப்பான்னு கேட்கிறார்கள். மற்றவர்களை ஊழல்வாதி, அதிமுக ஆதரவு அதிகாரின்னு எழுதினதோட நிற்காம காசு வாங்கினவன் சம்பந்தப்பட்ட அதிகாரி நல்லவரு, வல்லவருன்னு எழுத யாரு இவரா? வல்லவரான்னு போலீஸ் குரூப்பில் போட்டு சிரிக்கிறாங்க.
இதுல ரேஸ்ல இருக்கிற ஒரு டிஜிபி, எழுதின நிறுவனத்துக்கு நான் ஊழல் செய்தேன்னு எப்படி எழுதலாம் நிரூபியுங்கள் என்று நோட்டீஸ் அனுப்பியிருக்காராம். செய்திய போடத்தெரியாம போட்டு இப்ப முழிக்கிறாங்க அந்த நிறுவனத்தினர். இது இப்படி இருக்க ஒரு மேட்டர வெளியே வராம இருக்க அந்த அதிகாரி ஊடகங்களை அழைத்து பேசுறாராம். என்ன செய்தி அது. அதாம்பா முதல்வர் தொகுதியில நகைக்கடையில 9 கிலோ தங்கம், வைரம் எல்லாம் கொள்ளை போச்சுல்ல இதுவரை உருப்படியா ஒரு துப்புக்கூட கிடைக்கலையாம். எங்கே போலீஸ் திணறல் அது இதுன்னு செய்தி வந்துடப்போகுதோன்னு அவரவர்களிடம் தனித்தனியா பேசி செய்தி வராம பார்த்துகிறாராம்.
ஆமாம்ணே இப்ப நீ சொன்ன பிறகுதான் ஞாபகம் வருது 10 நாளைக்கு மேலே ஆச்சேண்ணே கொள்ளை நடந்து ஒன்னுமே செய்தி வரலையே என்று கேட்ட கமால்பாய் அந்த பெண் சிங்கம் அதிகாரி இந்நேரம் குற்றவாளிகளை தூக்கியிருப்பாங்கன்னு நினைச்சேன் என்று சொல்ல அவங்க லீவுல போயிருக்காங்களாம், வேறு பகுதி ஜேசி தான் பொறுப்பு. இதுவரைக்கும் பெரிய அளவில் துப்பு கிடைக்கவில்லை என்று தகவல். வேலூர், திருவண்ணாமலை, தேனின்னு ஆய்வு போகும் முதல்வர் சென்னையில் அதை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்றார் கோபால்.
ஏண்ணே ஜிவால் சார்தான் டிஜிபி போட்டியில் டாப் ஒன்ல வெல்லும் நிலையில் இருக்காருன்னு சொல்றாங்க அவர் ஆளுமைக்கு கீழ இப்படியான்னு கமால்பாய் அப்பாவியாக கேட்க, இதே கேள்விய கிண்டலாக போட்டு போலீஸ் வாட்ஸ் ஆப் குரூப்களில் போலீஸாரே கிண்டலடித்துக் கொள்கிறார்களாம். நீ வேற போவியா, அது வரும்போது யாராவது வரட்டும் நமக்கு என்ன கிடைச்ச தகவல் சொல்லிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான் என்று அடுத்த சப்ஜக்டுக்கு தாவினார் கோபால். பெண் சிங்கம் மாதிரியே திருச்சியில் ஒரு பெண் சிங்கம் கிளம்பியிருக்காங்க, சானல்களை அழைத்து பீஸ்சா சாப்பிடுவேன், பர்கர் சாப்பிடுவேன், காலேஜ் டைம்ல வேற மாதிரின்னு சாதனைகளை அடுக்கியிருக்காங்க. இப்பக்கூட ரெண்டு ரவுடிகள சுட்டப்ப வந்து பேட்டி கொடுத்தாங்க அந்த ஆஃபிசரான்னு கமால் பாய் கேட்க அவங்களேதான், ஐஜி ப்ரமோஷனே வருமான்னு நிலைமை இருந்தது, ஐஜியும் வந்து கமிஷனரும் ஆனவுடன் மீடியா விளம்பரத்துல இறங்கிட்டாங்க, யாரு கேட்பது கேட்க வேண்டியவரே வீடியோ போட்டுகிட்டு இருக்காருன்னு பெருமூச்சு விட்டார் கோபால்.
உனக்கு ஒன்னு தெரியுமா? அடிக்கடி உளவுத்துறை பற்றி நாம பேசுவோம், இப்ப பாரு முதல்வர் தூக்கத்தை கெடுப்பதில் முக்கிய விஷயமா ராணுவ வீரர் கொலை இருக்கு. அதற்கு பின்னால் பாஜக அணி திரள்வார்கள் இவர்களுக்கு எப்படி மொழி, இனம் என்றால் ஸ்கோர் பண்ணுவார்களோ அதேபோல் பாஜகவினர் ராணுவம், தேசம் என்றால் ஸ்கோர் பண்ணுவார்கள் என்பதை அறிவாலயத்தில் வேர்கடலை விற்கும் நபரைக்கேட்டால் கூட சொல்வார், ஆனால் உளவுத்துறை கோட்டை விட்டது. ஒருவேளை முதல்வர் இதை கேள்விப்பட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்வாரோன்னு சொல்லாமல் விட்டிருக்கலாம் போலன்னு கிண்டலடித்தார் கோபால்.
இந்த விவகாரம் பற்றி திமுக நிர்வாகி ஒருத்தர் வருத்தப்பட்டு சில விஷயங்கள் சொன்னார், ”இந்த விவகாரத்தில் எப்படி நடந்திருக்க வேண்டும் தெரியுமா? சாதாரணமாக கையாள வேண்டிய விவகாரத்தில் கோட்டை விட்டு முழிக்கிறாங்கன்னு வருத்தப்பட்டார். கொலையில் திமுக கவுன்சிலர் சம்பந்தப்பட்டுள்ளதால் முதல்வர் கவனத்திற்கு உடனடியாக இதை கொண்டுச் சென்று இந்தப்பிரச்சினை சென்சிடிவான ஒன்று, உடனடியாக வருத்தமான அந்த நிகழ்வுக்கு ஆழ்ந்த இரங்கல், ராணுவ வீரர் குடும்பம் பக்கம் அரசு நிற்கும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்து கவுன்சிலரை குறைந்தப்பட்சம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கணும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 10 லட்சம் வரை நிதி கொடுத்து லோக்கல் அமைச்சரை இறுதிச் சடங்குக்கு அனுப்பியிருக்கணும், அல்லது செங்கலை தூக்கிட்டு அலையிற சின்னவரையாவது அனுப்பியிருந்தால் பாஜக இந்தப்பிரச்சினையில் எதுவும் செய்திருக்க முடியாது, ஆனால் பாருங்க தலைநகர் சென்னையில் முன்னாள் ராணுவத்தினரை திரட்டி அண்ணாமலை போராட்டம் நடத்தும் அளவுக்கு சிறிய பிரச்சினையை வளர்த்து விடுகிறார்கள் என்று அவர் ஆதங்கப்பட்டார்” என்றார் கோபால். சின்னவர்னு சொல்லும்போதுதான் ஞாபகம் வருது அவரைக்கூட வட இந்திய சானல் செய்தியாளர் கடுப்பேத்திட்டாங்களாமேன்னு ஆரம்பித்தார் குமார்ஜி.
ஆமாம், அவரை மட்டுமல்ல முதல்வரையும் துரத்தி துரத்தி கேள்வி கேட்டார்கள். ஏற்கெனவே நான் சொன்னமாதிரி உளவுத்துறையின் அலட்சியமோ, உடனிருக்கும் அதிகாரிகளின் அலட்சியமோ, அரசு இந்த விவகாரத்தை திமுக நிர்வாகியின் ஆதங்கப்பட்டதை போல் அலட்சியமாக அணுகினர் என்பதே உண்மை. இதை வட இந்திய ஊடகங்கள் பெரிதாக்கின, ஏற்கெனவே புதுக்கோட்டை மலம் கலந்த விவகாரத்தில் வச்சு செஞ்ச வட இந்திய ஊடகங்கள் இதிலும் தேசம் போச்சுன்னு பெரிசா கூச்சல் போட்டாங்க. பாவம் அர்னாப் எல்லாம் பத்து டம்ளர் தண்ணீராவது குடிச்சுட்டு பேசியிருப்பார். இப்படிப்பட்ட நேரத்தில் தான் சின்னவர் அந்த பெண் செய்தியாளரிடம் சிக்கினார்.
அந்தம்மா ராணுவ வீரர் கொலைப்பற்றி கேட்க ஆங்கிலத்திலேயே பதிலளித்தார் உதயநிதி. அண்ணன் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார்னு ட்விட்டரில் களமாட கிளம்பிட்டான் உடன்பிறப்பு, அப்பத்தான் அந்த வார்த்தையை விட்டு சிக்கிகிட்டாரு சின்னவரு. என்ன தூக்குல போட சொல்றீங்களான்னு கோபமாக கேட்க அங்குள்ளவர்கள் அவரை நகர்த்திட்டு போய்ட்டாங்க. தாத்தா கலைஞர் ரேஞ்சுக்கு பட்டுன்னு அடிப்பாருன்னு கட்சிக்காரர்கள் பெருமைப்படுவார்கள், ஆனால் சாதாரண கவுன்சிலர் விவகாரத்தில் அவர் பட்டுன்னு சொன்ன வார்த்தை அவர் நிதானத்தை காட்டவில்லை, அதுக்கு சி.எம் போன மாதிரி காதில் வாங்காதது போல போயிருக்கலாம் என்று சிரித்தார் கோபால்.
எங்கள திட்டணும் என்றால் உங்களுக்கு வெல்லம் சாப்பிடுகிற மாதிரின்னு போஸ் பாண்டி கோபப்பட கோச்சுகாதப்பா விமர்சனத்தை திட்டுன்னு சொல்லக்கூடாது, எடப்பாடி பழனிசாமி ஆம்பிளையான்னு பேசியதால் கண்டிக்கப்படுறத பேசுறோம், சீமான் அருந்ததிய இன மக்களை வந்தேறிகள்னு பேசியதை கண்டிக்கிறோம், ஆனால் ஆளுங்கட்சித்தானேப்பா அதிக விமர்சனத்துக்குள்ளாகும் நீ ஏன் கோச்சுக்கிற ஏதாவது இருந்தா சொல்லு என்றார் கோபால். என்னத்த சொல்ல இருந்த ஒரே நம்பிக்கை ஓபிஎஸ் தான் அவரே அமைதிக்கு பெயர்தான் சாந்தின்னு பாடிகிட்டு திரியிறாரு. இரண்டாவது பானிபட் போர் மாதிரி இரண்டாவது தர்மயுத்தம் ஆரம்பிச்சுருக்காரு. இதுவாவது தேறுமா? என்று கேட்டார் போஸ் பாண்டி.
உங்க ஆட்கள் பிடிக்கிறது எல்லாம் இப்படிப்பட்ட ஆட்கள் தானே, எடப்பாடிக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவதைவிட முக்கியமான வெற்றி கோர்ட் தீர்ப்பிலேயே கிடைச்சுடுச்சு, அடுத்து இரண்டாவது இடம் வந்தால் கூட அவர் அணிதான் அதிமுகன்னு நிருபணம் ஆயிடும் அப்புறம் என்ன ஷிண்டே தீர்ப்பை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்தை நெருக்க வேண்டியதுதான், வழக்கம்போல் ஓபிஎஸ் 5 பேரோட சுற்ற வேண்டியதுதான் ஒரே கஷ்டமப்பா என்றார் கோபால். அது மட்டுமில்ல ஈரோடு தேர்தலுக்கு பிறகு மொத்த கூடாரமும் காலியாகிவிடும் என்கிறார்கள் தேனி எம்பியை தவிர. அதற்கு அச்சாரமா ஈரோட்டில் ஒரு பெரிய டீம் விலகுகிறது, இனி சரிவுதான் அவருக்கு. யுத்தம்னு அறிவிச்சுட்டு நிராயுதபாணியா நிக்கிறாரு.
ஒரு கிளுகிளு சமாச்சாரம் சொல்லட்டா என கோபால் கேட்க உங்களுக்கு அதுதான் கைவந்த கலை ஆச்சே ஆனா எங்க கட்சிக்காரங்கள டேமேஜ் பண்ணாதீங்க என்றார் போஸ் பாண்டி. சே சே இது அனைத்துக்கட்சி சமாச்சாரம்பா, ஈரோடு இடைத் தேர்தலில் பல மாவட்டங்களிலிருந்து அங்கு போகும் கட்சிக்காரர்கள் கட்சி பேதமில்லாமல் ஒரு இடத்துக்கு கட்டாயம் போய்விடுகிறார்களாம். சிலர் வந்த வேலை மறந்து அங்கேயே கிடக்கிறார்களாம் என்றார் கோபால், எது டாஸ்மாக் கடையா என்று குமார் அப்பாவியாக கேட்க அது இல்லாமலா இது வேற பலான இடம், ஈரோட்டில் அதற்கென்று புகழ்பெற்ற இடமாம் காளமாடு ஜங்ஷன்னு ஒரு ஏரியா அங்க தான் கட்சி பேதமில்லாமல் எல்லோரும் குவிகிறார்களாம்.
இதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு பெங்களூரிலிருந்து இறக்குமதி வேற நடக்குதாம் என்றார் கோபால், சே இதற்கெல்லாமா இறக்குமதி என்று கமால்பாய் கேட்க காற்றுள்ள போதே தூற்றிக்கிறானுங்க, இதில் இந்த பிரச்சினையில் சிக்கக்கூடாதுன்னுத்தான் ஒரு பிரபலம் மதுரையிலிருந்து வரும்போதே இரண்டு பெண் கவுன்சிலர்களை கூட்டிகிட்டு வந்துட்டாராம். இதனால் அவர்கள் கணவர்கள் கொதிப்பில இருக்காங்களாம் என்ற கோபால் குடும்பத்தை மறந்து திரிகிறார்கள் நாமாவது குடும்பத்த நினைப்போம் சபையை கலைங்கப்பான்னு எழுந்து கிளம்பினார்.