முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள், என்ன லேட்டாக சொல்கிறேன் என்று கேட்கலாம். நான் எதையும் எதிர்பார்த்து உங்களை தேடி வாழ்த்துச் சொல்ல வருபவன் அல்ல. உங்கள் வளர்ச்சியை தமிழக சமூக நீதியோடு ரசித்து பார்த்து வாக்களித்தவன், செல்ஃபி கலாச்சாரம் , படோபகாரம் பிடிக்காததால் தாமதமாக சொல்கிறேன், உங்களுக்கு கேட்காவிட்டாலும் பரவாயில்லை. உங்களை கேட்டா வாக்களித்து தேர்வு செய்தேன். உங்கள் செயல்பாடுகள் பிடித்து கடந்த 3 தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்தேன். நான் கலைஞர் காலத்து திமுக தொண்டன்.
கட்சியில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் (ஈடுபட விட்டுவிடுவீர்களா?) அபிமானியாக 45 ஆண்டுகாலமாக இருக்கேன். உங்கள் நடவடிக்கைகள் பிடித்து வாக்களித்து தேர்வு செய்த நான் உங்கள் ஆட்கள் கொடுத்த ஒரு ரூபாயைக்கூட வாங்கியதில்லை என்பதால் நேர்மையான வாக்காளனாக உங்களை விமர்சிக்கவும் எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். அதை நீங்கள் கேட்டால் கேளுங்கள் அல்லது முக்கிய நிகழ்வுகளை உளவுத்துறை எச்சரிக்கைகளை அலட்சியமாக கடந்து செல்வதைப்போல் இதையும் கடந்து செல்லுங்கள்.
உங்களை எனக்கு ஏன் பிடித்தது தெரியுமா? கலைஞரின் மகனாக இருந்தாலும், முதல்வரின் மகனாக இருந்தாலும் உங்களால் யாருக்கும் பிரச்சினை வந்ததில்லை. பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி போகிறவர். 15 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்ட பின் இளைஞரணி பொறுப்பை கொடுத்தார் உங்கள் தந்தை. 16 ஆண்டுகள் கழித்துத்தான் தேர்தலில் நிற்கவே வாய்ப்பு கொடுத்தார் உங்கள் தந்தை. அப்ப இருந்த திமுக வேற. ஸ்டாலின் என பெயர் சொல்லி அழைக்க ஒரு வீரபாண்டி ஆறுமுகம் கட்சியில் இருந்தார். கொத்தடிமைகள் அதிகம் இல்லாத திமுகவாக இருந்த காலம்.
கட்சியின் பெரும்பாலானோர் காங்கிரஸ் அரசால் பாதிக்கப்பட்டும், பெரியார் கருத்தால் ஈர்க்கப்பட்டும், படித்தும், பேச்சாற்றலாலும் கட்சிப்பணியில் உயர்ந்தவர்கள் இருந்தனர். நீங்கள் அவர்களை சோதிக்கவில்லை. எனக்கு உயர் பதவி கொடுங்கன்னு சண்டையிட்டதில்லை. 84 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் எம்ஜிஆர், இந்திரா அலையில் தோற்றுப்போனீர்கள். ஆனாலும் உங்கள் அரசியல்பணி தொடர்ந்தது.
89 ஆம் ஆண்டு முதன்முதலில் வென்றாலும் ( அப்போதுதான் எடப்பாடியும் உங்களுடன் சட்டசபைக்குள் நுழைகிறார்) உங்களுக்கு 21 ஆண்டு அனுபவம் இருக்கிறது என்பதற்காக அமைச்சர் பதவியை தூக்கி கொடுக்கவில்லை உங்கள் தந்தையார். கொத்தடிமைகள் இல்லா திமுக, அனுபவம் மிக்க தலைவர்கள் இருந்த திமுக அது. ஆட்சிக்கலைப்புக்குப்பின் 1991 ஆம் ஆண்டு தேர்தலும் உங்களுக்கு சோதனையான ஆண்டு மீண்டும் 1996 ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோதுதான் உங்களுக்கு முதன்முறையாக அங்கிகாரம் அளிக்கிறார் கலைஞர். மேயர் பதவியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றீர்கள். சிறப்பான மேயர் என பெயர் எடுத்தீர்கள்.
தந்தையின் ஆலமர அனுபவமிக்க நிழல் உங்களை சூரியனை காணாமல் மறைத்ததால் உங்கள் அரசியல் அனுபவம் சற்று குறைவுதான் முதல்வர் அவர்களே. அதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆகணும். பின்னால் நான் சொல்லப்போகும் தகவல்களுக்கு அது பொருந்தும். வைகோவின் வளர்ச்சி அவர் பின்னால் தொண்டர்கள் ஆர்பரித்து செல்வதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடன் போட்டியிட முடியாத நீங்கள் வேறு வழியில் அவருடன் போட்டியில் இறங்கினீர்கள். உங்கள் தந்தையாரும் வைகோ இருக்கும் வரை அடுத்த தலைமைக்கு நீங்கள் வர முடியாது என முடிவெடுத்து சப்பை காரணத்தை சொல்லி நீக்கியது ஊருக்கே தெரியும்.
1993-ல் திமுக செங்குத்தான பிளவை சந்தித்தது. ஆனால் 3 வருடங்களுக்குள் அதிமுகவின் அடாவடி ரவுடியிச ஆட்சியை அழகாக அறுவடை செய்தார் உங்கள் தந்தை. ரஜினிகாந்த் உள்ளிட்ட வந்தவர்களை எல்லாம் பயன்படுத்தினார். ஆடிக்காற்றில் அதிமுக பறந்தது. கூடவே வைகோவும் ஒன்றுமில்லாமல் போனார். தன் அரசியல் அனுபவத்தால் உங்களுக்கு மலர் பாதை ஏற்படுத்திக் கொடுத்தார் உங்கள் தந்தை. 1996 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ, மேயர்னு ரெட்டைப்பதவி வகிச்சீங்க. அதேபோல் 2001 ஆம் ஆண்டும் ரெட்டைப்பதவியில் தேர்வு செய்யப்பட்டீங்க. அன்றைய முதல்வர் சட்டதிருத்தம் மூலம் மேயர் பதவியிலிருந்து உங்களை நீக்கினார். அதன் பின் எம்.எல்.ஏவாக தொடர்ந்தீர்கள்.
2006 ஆம் ஆண்டு முழு மெஜாரிட்டியில்லாவிட்டாலும் கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி நடத்தினீர்கள். ( அச்சச்சோ அந்த நிலையிலும் அந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆட்கள் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது) உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆனீர்கள். ரூட் கிளியர் ஆனவுடன் 2008 ஆம் ஆண்டு திமுக பொருளாளர் பதவியில் உங்களை நியமித்தார் உங்கள் தந்தை. கட்சி குடும்ப சொத்தானது அந்த காலக்கட்டத்தில் தான். வாரிசு அரசியலை தெரிந்தே புகுத்தினார். திமுகவுக்குள் கொத்தடிமைகள் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டம் என்றால் 2006 க்குப்பின் என்று சொல்லலாம். குடும்பச் சொத்தானது திமுக. மருமகன் (இவர் உங்கப்பாரு மருமகன்), பேரன், மகள், மகன்கள் என பலர் அரசியலில் பதவி பெற்றனர். கண் காதுகளை மூடி கொத்தடிமைகள் அனைவரும் அதற்கு சாமரம் வீசினர்.
ஜெயலலிதாவின் ரவுடியிச ஆட்சியை சொல்லி வந்தவர்கள் ஆடிய ஆட்டம் அதிலும் சென்னையின் எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமா? நஞ்சமா? ஆர்.எஸ்.பாபு என்று ஒரு மாவட்டச் செயலாளர் இருந்தார் உங்கள் அப்பாக்கு பிடிக்காததால் ஓரங்கட்டப்பட்டார். அவர் ஆடிய ஆட்டம், பொதுமக்களிடம் கந்துவட்டி கொடுத்து பிடுங்கிய சொத்துகள் புகாரை எடுக்காமல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர். ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி, தனசேகரன், ரங்கநாதன் என வாக்களித்தவர்களே அஞ்சும் அளவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்டம் சொல்லி மாளாது.
காவல்துறையில் உளவுத்துறையின் ஒரு அதிகாரி ஆடிய ஆட்டம், அனைத்தையும் நீங்களும் உங்கள் அப்பாவும் கண் காதுகளை மூடிக்கொண்டு அந்த அதிகாரி சொன்னதை மட்டுமே கேட்டீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவரானார் அந்த அதிகாரி. இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று சொல்வார்கள் அந்த அதிகாரியின் ஆட்டத்தைக்கண்டு போலீஸ் அதிகாரிகளே அஞ்சினர். உங்கப்பா தினமும் அனைத்து பேப்பர்களையும் படிப்பார், பத்திரிக்கை ஆசிரியர்களிடம் பேசுவார் ஆனால் அவரையே ஏமாற்றி வாராவாரம் நிலைய வித்துவான்களாக ரஜினி, கமலை அருகில் வைத்துக்கொண்டு சினிமா விழாக்களை நடத்தி படம் காட்டினார்கள் அதிகாரிகள், கட்சிக்காரர்கள்.
எந்த விஷயத்தையும் அடி நுனி முதல் அலசி ஆராய்ந்து ரிப்போர்ட் வாங்கும் முதல்வர் கலைஞரையே ஏமாற்றினார் அந்த அதிகாரி. அவருக்கே கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி சென்னை கவுன்சிலர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்று மக்கள் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் இது எதைப்பற்றியும் அறியாமல் தந்தையுடன் சினிமா விழாக்களில் கலந்துக்கொள்வது, உங்கள் துறையை மட்டுமே பார்த்துக்கொள்வது (அப்போது எல்லாம் நீங்கள் சிறந்த அமைச்சராக இருந்தீர்கள்) என இருந்தீர்கள். முதன்முறையாக உங்கள் மகன் உங்களிடம் அடம்பிடித்து அமைச்சர் ஆனதுபோல் உங்கள் அப்பாவிடம் அடம் பிடித்து துணை முதல்வர் ஆனீர்கள்.
ஆனாலும் உங்களுக்கு சாமர்த்தியம் பத்தாதுன்னு சொன்னேன் அல்லவா? அதற்கு சில உதாரணங்களை சொல்கிறேன். 2009 ஆம் ஆண்டு இலங்கைப்பிரச்சினை கடுமையாக சூடு பிடித்திருந்த காலக்கட்டம். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆவேசப்பட்டு அடிக்கடி போராட்டம், மறியல் என நடத்தினார்கள். சூடு ஏறிக்கொண்டிருந்த காலம். இப்போது மாதிரியே தகுதியில்லாத கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்த நேரம். அனுபவம் மிக்க முதல்வர் கலைஞர் முது தண்டுவட அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துணை முதல்வரான நீங்கள் தான் காவல்துறைக்கும் பொறுப்புன்னு வச்சிக்கலாம்.
பிப்ரவரி 19 2009 உயர் நீதிமன்றத்தில் காலையில் ஆரம்பித்த சிறு பொறி பெரும் ஜுவாலையாக வழக்கறிஞர் –போலீஸ் மோதலாக மாறியது. இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. என்ன ஆகப்போகிறதோ என கலங்கினார்கள் சட்டம் அறிந்தோர். இந்தியாவே உற்று நோக்குமே சட்டத்தின் இரு பிரிவுகள் மோதினால் நாடு என்னாவது என்று பதைபதைத்தார்கள். போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுத்துறை புலிகள் இருந்தும் முதல்வர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் நீங்கள் பொறுப்பாக இருந்த நேரத்தில் இந்த கலவரம் இன்றும் கரும்புள்ளியாக உள்ளது.
உங்களை குறைத்து மதிப்பிட இதைச் சொல்லவில்லை. முதல்வர் கருணாநிதி ஆபத்தான முதுகுதண்டு ஆபரேஷன் செய்து படுக்கையில் இருந்த நேரத்திலும் இதை மட்டுப்படுத்த உடனடியாக அறிக்கை விட்டு பதற்றத்தை தணிக்க தலைமை நீதிபதிக்கே கோரிக்கை வைத்தார். அவருக்கு தெரியும் அதன் பின் வரும் விளைவுகள் என்னவென்று. ஆனால் அப்போதிருந்த உளவுத்துறை அதிகாரிகள், காவல் உயர் அதிகாரிகள் அன்று பொறுப்பில் இருந்த உங்களை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதற்கு காரணம் உங்களது இயலாமை. அடுத்தவன் பார்த்துக்கொள்வான் என்று பொறுப்பை தட்டிக்கழிக்கும் போக்கு.
இப்போதும் அதுதான் நடக்கிறது. லாக்கப் டெத்தை சாதாரணமாக இட்லி சாப்பிட்டு நெஞ்சடைத்து செத்துபோனான் அக்யூஸ்ட் என்று நம்ப வைக்கிறார் கமிஷனர். கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் வெடிப்பு, உங்கள் வீட்டை ஏபிவிபி டெல்லி நிர்வாகிகள் முற்றுகை இட்டது, கிருஷ்ணகிரி கலவரம், ராணுவ வீரர் கொலை விவகாரம் என அனைத்திலும் மீண்டும் மீண்டும் உளவுத்துறையும் காவல்துறையும் கோட்டை விட்டாலும் நீங்கள் கண்மூடி தியானத்தில் இருக்கிறீர்கள். சட்டம் ஒழுங்கை காக்கும் டிஜிபி சைக்கிளில் ஊர்சுற்றி வீடியோ போடுகிறார், காவல் உயர் அதிகாரி பெண் சிங்கம் என்று சைக்கிளில் இரவு உலா வருவதை வீடியோ போடுகிறார். துபாயிலிருந்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து போடுகிறீர்கள், ஒரு முதல்வர் செய்யும் வேலையா இதுன்னு சமூக வலைதளத்தில் கொந்தளிக்கிறார்கள்.
அதிகாரிகள் அவர்களது வேலையை செய்வது இல்லை, தூங்கி வழிகிறது உளவுத்துறை. என்.ஐ.ஏ டெல்லியிலிருந்து வந்து திருச்சி முகாமில் ரெய்டு நடத்தும் வரை இங்கு யாருக்கும் அது தெரியவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இதுவரை சிறு விசாரணை கூட நடத்தி யாரும் கைகாட்டப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி அதே பொறுப்பில் தொடர்கிறார். இப்ப சொல்லுங்க பிரச்சினை உங்களிடமா அவர்களிடமா? சிம்பிளா ஒரு விஷயம் சொல்கிறேன் முதல்வர் அவர்களே, ராணுவ வீரர் கொல்லப்பட்டார். கொன்றவர் ஆளுங்கட்சி கவுன்சிலர். கட்டாயம் அரசியல் பிரச்சினை ஆகும்.
இடுப்பை கிள்ளிய இளைஞரணியினர் மீது நடவடிக்கை எடுக்க ஆருடம் பார்த்ததுபோல் இதில் பார்க்க முடியாது. பாஜகவினர் தேசம், ராணுவம் என்றால் அதில் ஸ்கோர் செய்வார்கள் இதை எப்படி நீர்த்துபோகச் செய்வது என்று அங்குள்ள சார்பு ஆய்வாளரை கேட்டாலே சொல்லி இருப்பார். ஆனால் வழக்கம் போல் நீங்கள் அன்னியப்பட்டு இருந்தீர்கள், உங்கள் உளவுத்துறை வழக்கம் போல் மவுனமாக இருந்தது. பிரச்சினை தேசிய அளவில் விசிறப்பட்டு பெரிதானது. அவர்கள் சொந்தக்காரர்கள் என்று விதண்டாவாதம் பேசாமல் என்ன தீர்வு அரசு செய்திருக்க வேண்டும்? உடனடியாக ராணுவ வீரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடும்பத்துக்கு இழப்பீடு தந்திருக்க வேண்டும்.
மாவட்ட அமைச்சரை இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு காசோலையை வழங்கச் செய்து சம்பந்தப்பட்ட கவுன்சிலரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்திருக்க வேண்டும். இதை செய்திருந்தால் பாஜக போராட்டத்தை கையிலெடுக்க ஏதாவது விஷயம் கிடைத்திருக்குமா? ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்யவில்லை. இதை ஆணவம் என்பதா? அல்லது உங்கள் இயலாமை என்பதா? அதனால் தான் சொன்னேன் உங்களுக்கு அப்பா போல் வேகமான நடவடிக்கை வரவில்லை என்று.
இது ஒரு உதாரணம் இதுபோல் பல சொல்லலாம். பல துறைகளில் சொல்லலாம். உங்கள் அமைச்சரவையில் செல்வாக்கு உள்ள அமைச்சர்கள் எல்லாம் அதிமுகவினரே. உங்கள் பக்கத்திலேயே இருக்கும் தேங்கா முடி அமைச்சர் ஒரு காலத்தில் உங்கள் தந்தையை அடிக்க பாய்ந்தவர். மறப்போம் மன்னிப்போம்னு நீங்கள் மழுப்பலாம். 1977 லில் எழும்பூர் தொகுதியில் மணிமுடிக்கு ஓட்டு போட்ட காலத்திலிருந்து (இடையில் 2011 –ல் மட்டும் போடாமல்) இப்ப வரை உதய சூரியனுக்கு வாக்களிக்கும் என்னால் மறக்கவும் முடியல மன்னிக்கவும் முடியல முதல்வரே.
இப்பவும் அவர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது, கொள்ளையும் கணக்கில்லாமல் நடக்கிறது. 2014 ஆம் ஆண்டு காங்கிரஸை ஒதுக்கி தோல்வியை தழுவியதும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேவையில்லாமல் தேமுதிகவை மக்கள் நலக்கூட்டணி பக்கம் தள்ளி விட்டுவிட்டு இப்போதிருக்கும் கொத்தடிமைகள் போல் அப்போதிருந்த கொத்தடிமைகள் பேச்சைக்கேட்டுக்கொண்டு அண்ணாமலை பட ரஜினி போல் ”வெற்றி நிச்சயம்னு” பாட்டு பாடிகிட்டு திரிஞ்சீங்க. திமுக தனியாக என்றைக்குமே அதிமுகவை வென்றதில்லை என்கிற யதார்த்ததை மறந்து கலைஞர் ஆலோசனையையும் புறந்தள்ளி கொத்தடிமைகள் பேச்சைக்கேட்டு தினமலர், நியூஸ் 7 சானலில் 200 இடத்தில் திமுக வெல்லும்னு போலி கருத்துக் கணிப்பை வெளியிட்டு கல்லா கட்ட நினைத்தீர்கள்.
எதிர்க்கட்சிகளை கிள்ளுகீரைபோல் நினைத்து, கலைஞரின் ஃபார்முலாவை புறந்தள்ளி அவர்களை தனி அணிக்கு தள்ளி, “நமக்கு நாமேன்னு” படம் காட்டி கைக்கெட்டும் வெற்றியை கோட்டை விட்டீர்கள். அப்போதும் தேர்தல் தோல்விக்கான அடிப்படையை நீங்கள் உணரவில்லை. சிறிய கட்சிகளை வாக்குகளை வைத்து கணக்கிடும் உங்கள் மனதை மாற்றிக்கொண்டு அவர்கள் உளவியல் ரீதியாக வெற்றியை கொண்டு வருபவர்கள் என்பதை அதன் பின்னர்தான் புரிந்துக்கொண்டீர்கள். சமூக நீதி எல்லாம் வேஸ்ட், பணம் உள்ளவர்களே அரசியலை தீர்மானிக்கிறார்கள் என்ற உங்கள் எண்ணத்தையும் மாற்றி கூட்டணி அமைத்து போராடியதால் 2019 மக்களவை தேர்தல் பெரு வெற்றியை கொண்டு வந்தது.
அதன் பின்னர் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு, சமூக நீதி, பாசிச எதிர்ப்பு, பெரியார் கொள்கை என தீவிரமாக பேசினீர்கள். 2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய நேரத்தில் மாநில சுயாட்சி குறித்து நீங்கள் பேசியதும், அடிமை அரசு என அதிமுகவை விமர்சித்ததையும், பூரண மதுவிலக்கு கேட்டு கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதையும், நீட் விலக்குக்காக போராடியதையும் பார்த்து கலைஞரின் மகன் போர்வாளை உயர்த்திவிட்டார் என அனைவரும் சந்தோஷப்பட்டோம். தேர்தல் நெருங்கும்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரது கருத்தையும் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரித்தீர்கள்.
மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து, விவசாயிகள் பயிர்க்கடன் ரத்து, நெசவாளர்களுக்கான மின்சார யூனிட் உயர்வு, பழைய பென்சன், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், சிலிண்டர் மானியம், பெட்ரோல்–டீசல் விலை குறைப்பு இலவச திட்டங்கள் தொடரும் என்றெல்லாம் அறிக்கையில் சொன்னபோது இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினில். முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் கலைஞரின் மறுபிறப்பே என ஓடோடி வாக்களித்தேன். ஆனால் அதன் பின் நடந்தது, வயிறு எரியுது முதல்வரே. எந்த பிரச்சினையிலும் நீங்கள் தலையிடுவதே இல்லை. உங்கள் குடும்பத்தினர் ஆதிக்கம் 2006-11 ஆம் ஆண்டை விட கடுமையாக இருக்கிறது. அதே ரவுடியிசம், உங்கள் குடும்ப உறுப்பினர்களை பாராட்டி ஆதாயம் பெறும் கொத்தடிமை கூட்டம்.
இவர்களை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டு யாரையும் அண்ட விடுவதில்லை. உங்கள் மகனின் நண்பர்கள், மருமகன் என அனைவரது தலையீடு காரணமாக நல்ல, திறமையான அதிகாரிகள் அரசுப்பணியில், காவல்துறையில் ஒதுக்கப்பட்டு வேண்டப்பட்டவர்கள் அமர்த்தப்படுகிறார்கள். விளைவு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளும் உங்களைப்போல் போட்டோஷூட், விளம்பர விழாக்கள் நடத்தி போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டுக்கொள்கிறார்கள். பிப் 10 ஆம் தேதி சென்னையில் உங்கள் தொகுதியில் நடந்த கொள்ளையில் இதுவரை ஒரு குற்றவாளிகூட பிடிபடவில்லை. அதற்குள் விருகம்பாக்கத்தில் அதேபோல் ரூ.2 கோடி மதிப்புள்ள நகை பணம் கொள்ளை.
ஆனால் ஒன்று, இதைபற்றி எந்த ஊடகமும் வாயைத்திறக்காமல் இருக்க அவ்வப்போது படியளக்கப்பட்டு “ஆல் இஸ் வெல்” என்று அவர்கள் அடிக்கும் ஜால்ரா காதை பிளக்கிறது. ஆனால் இது சமூக வலைத்தள காலமல்லவா? அனைத்தும் வெளியில் வருகிறது. சாலையில், டீக்கடையில், பூக்கடையில், அலுவலகத்தில், பேருந்தில், ரெயிலில் சாதாரண மக்கள் செல்போனில் விமர்சனங்களை பார்த்து மவுனமாக மனதுக்குள் விவாதிக்கிறார்கள். ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் உங்களிடம் ஒரு ஐடி விங் இருக்கு பாருங்க. அவங்க காட்டும் படம் இருக்கே மக்களுக்கு எரிச்சல் தான் வருது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் எரிச்சலில் சாலையில் போனால் நம்பர் பிளேட் ஏன் பெயிண்ட் உதிர்ந்திருக்கு, எல்லைகோட்டை ஓரடி தாண்டி ஏன் நின்றாய் என பாக்கெட்டில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சேமிப்பையும் பிடுங்குது போக்குவரத்து போலீஸ்.
உங்களுக்கு ஆடம்பர விழா நடத்த எங்கள் பாக்கெட்டில் உள்ள சொற்ப வருமானத்தைதான் பிடுங்கணுமான்னு அன்றைக்கு ஒரு வாகன ஓட்டி போலீஸாரிடம் சண்டை போட்டபோது முதல்வரே உங்களை நினைத்துத்தான் பரிதாபப்பட்டேன். இதெல்லாம் தெரியாமல் கொத்தடிமை கூட்டம் சொல்வதை கேட்டு வெள்ளந்தியாக இருக்காரே என்று. இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன் எம்ஜிஆர், ஜெயலலிதா, உங்கப்பா ஆட்சியில் சாதாரண மக்களுக்கு தொல்லை அதிகம் தர மாட்டார்கள். ரேஷன் பொருட்கள், இலவச பொருட்கள், பால், பேருந்து, மின்கட்டணம் உயராமல் பார்த்துக்கொள்வார்கள்.
அவர்களுக்கு தெரியும் இது சாதாரண வாக்காளனுக்கு கோபத்தை வரவழைக்கு செயல் சில ஆயிரம் கோடிகள் ஒதுக்கி விலை ஏறாமல் பார்த்துக்கொள்வார்கள். இதெல்லாம் உங்களுக்கு தெரிவதே இல்லை. இப்ப புரியுதா உங்களுக்கு விவரம் பத்தாதுன்னு நான் ஏன் சொன்னேன்னு. இன்னொரு விஷயம் ஏற்கெனவே கடந்த ஆட்சியில் மக்களுக்கு இலவசமாக கிடைத்த லேப்டாப், இலவச வேட்டி சேலை, திருமண உதவி திட்டம், அம்மா உணவகம் இதெல்லாம் மூடுவிழாவை நோக்கி நகருது. கல்விக்கடன் ரத்துன்னு சொல்லி இதுவரை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறீர்களே இதுதான் சமூக நீதியா? முதியோர் பென்ஷன் தருவதிலும் உங்கள் சாமர்த்திய அதிகாரிகளின் திறமையால் இல்லாமல் நீர்த்துப்போக செய்துவிட்டீர்கள்.
அதிகாரிகள் ஆயிரம் சொல்வான் மக்கள் நலன் தான் நமக்கு முக்கியம். மதிய உணவு சாத்தியம் இல்ல நிதி இல்லன்னு நம்ம பிடிஆர் போல மாடிவீட்டு கோமான் மன நிலை அதிகாரி சொன்னபோது காமராஜர் சொன்னது ”நீ வேலையை பார் நான் நிதியை நான் கொண்டு வருகிறேன்” என்று. அதுதான் சமூக நீதி. அமெரிக்காவில் படித்தவருக்கு எண் கணிதம் தெரியும் மக்கள் எண்ணங்கள் தெரியாது. அதை நீங்கள் தான் உங்கப்பாகிட்ட எடுத்த பயிற்சி மூலம் செய்யணும். தெரியலன்னா உங்கள் கூட்டணி கட்சிகள் இடதுசாரிகள், விசிகே உள்ளிட்டவர்களை கேளுங்கள்.
வெளியில் உங்களுக்கு ஜால்ரா அடித்தாலும் கூட்டணிக்கட்சிகள் சுயதன்மை இழந்து வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள். கொத்தடிமைகள் போதனையில் மயங்கி கிடக்கும் உங்களுக்கு இது புரியாதுதான். அப்புறம் இன்னொரு விஷயம் முதல்வரே தேர்தல் நேரத்தில் நீங்கள் ஒரு அட்டையை காட்டி ”இதை எடுத்துகிட்டு நேரா தலைமைச் செயலகத்துக்கு வரலாம் உள்ளே முதல்வர் நாற்காலியில் யாரு இந்த ஸ்டாலின் அமர்ந்திருப்பேன். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் உங்கள் குறைகளை என்னிடம் சொல்லலாம்” என்று சொன்னீர்கள் ஞாபகமிருக்கா முதல்வரே?
அந்த அட்டையை பத்திரமாக வச்சிருந்தேன் வீட்டில் இருந்த பழைய கட்சி வேட்டியை உடுத்திகிட்டு மனுவோட உங்கள் பாக்க வந்தேன். அங்கு இருக்கும் சூழ்நிலை பயங்கரமா இருந்தது. போலீஸ் அதிகாரிகள் ஆட்டோக்காரன பார்க்குற ஆர்டிஓ போல என்னை பார்த்தாங்க நான் பழைய உடன்பிறப்பு முதல்வர் வரச்சொன்னார்னு அந்த கார்டை காட்டினேன் ”பெரிசு போ அந்தாண்ட பைத்தியமா நீயி”ன்னு, கார்டையும் கிழிச்சு தூர எரிஞ்சிட்டாங்க. இதையெல்லாம் உங்களிடம் சொல்ல ஒரு விழா நடக்கும் இடத்திற்கு வந்தேன் அங்கே பார்த்தால் மிலிட்டரி ட்ரெஸ்ஸில் கையில் துப்பாக்கி, கருப்புக்கண்ணாடி போட்டு அமெரிக்க அதிபர் பைடனுக்கு கொடுக்கும் அளவுக்கு உங்களைச் சுற்றி பாதுகாப்பு இருந்தது, பயந்துபோய் திரும்பிட்டேன்.
அப்புறம் எப்படி முதல்வரே என் குறையை நான் உங்களிடம் சொல்ல முடியும். அதான் கடிதமாகவே எழுதிட்டேன். நீங்க மேற்கண்டவற்றை செய்யவில்லை, அதனால் தான் சாதனை எதனையும் சொல்ல முடியாமல் மக்களை பட்டியில் அடைத்து வைத்து, சோறுபோட்டு பணம் தந்து ஓட்ட வாங்கி ஜெயிச்சதா சமூக வலைதளம் முழுதும் தகவல் ஓடுது. இதெல்லாம் வெற்றியா முதல்வரே? 2020 ஆம் ஆண்டு சொன்னபாரு ”இந்த ஸ்டாலின் சொல்றதான் செய்வான் செய்றததான் சொல்வான் ஏன்னா நான் கலைஞரோட மகன் “ என்று அப்படி இருங்க முதல்வரே.
இப்ப ஈரோடு கிழக்கில் வென்றது எல்லாம் முகம் சுழிக்க வைக்கும் வெற்றி. அது மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்டதுன்னு உங்களுக்கே தெரியும். நீங்க சொல்லாததை எல்லாம் செய்றீங்க சுத்தி இருக்கும் கொத்தடிமைங்க உங்களை 2011 போல் நடுத்தெருவில் நிற்க வைக்கும் முன் விழிச்சுக்குங்க முதல்வரே. தலைவரேன்னு சொல்லும் அளவுக்கு நீங்கள் இல்லை அந்நியப்பட்டு போய்ட்டீங்க அதனால் தான் முதல்வரேன்னே கடிதம் எழுதி இருக்கேன் –
இப்படிக்கு
கலைஞர் காலத்து திமுக தொண்டன்