கசடற கட்டுரைத் தொடருக்கு இது 25வது வாரம். ஒவ்வொரு ஞாயிறன்றும் கசடற வெளிவரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தும் சில வாரங்கள் எழுத முடியாமல் போயிருக்கிறது. ஒருசில வாரங்கள், திங்கட்கிழமை வெளிவந்திருக்கிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாராவாரம் இந்தக் கட்டுரைகளை வாசித்து இருக்கிறீர்கள். கருத்துகளை பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் அளித்தாலும் எழுதுகிறபோது ஒரு நிறைவு ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே விடாமல் கசடற எழுதி வருகிறேன். இதற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி.
இனி இந்த வாரம்
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. ராட்சத இயந்திரங்கள் எந்த நேரமும் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. இரவும் பகலும் வேலை செய்தால் தான் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியும். நகரின் நடுவில் சாலைகளுக்கு நடுவில் மெட்ரோ வேலைகள் என்பது நகரத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடியது. இது சென்னையில் உள்ள எல்லோரின் அனுபவம். அதற்காகவே வேலைகள் சீக்கிரம் முடிய வேண்டும். அதற்கு ஆள் பலம் வேண்டும். மெட்ரோ வேலைகளில் தினக்கூலிகளாக வேலை செய்பவர்கள், மெட்ரோ பணிகளினால் சாலையில் ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் போக்குவரத்தை சரிசெய்ய வந்து நிற்பவர்கள் யார்? எல்லாம் வடக்கிந்தியர்கள்.
சில வருடங்களுக்கு முன்பு, கொரனாவுக்கும் முன்பு பல உணவகங்கள் மூடப்பட்டன. காரணம், அவை நஷ்டத்தில் ஓடுவதால் அல்ல. அங்கு வேலை செய்ய ஆள் கிடைக்காததால். சமைக்கவும், எச்சில் தட்டு எடுக்கவும், ஆர்டர் எடுக்கவும் ஆட்கள் இல்லை என்ற காரணத்துக்காகவே மூடிய உணவகங்கள் உண்டு. அப்போது தான் வடமாநிலத்தவர் அந்த வேலைகளுக்கு வரத் தொடங்கினார்கள். அவர்கள் வந்தபிறகு தமிழகத்தின் பேரு நகரங்களில் தெருவுக்குத் தெரு சிறிய உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்த பட்ச இலவசக்கல்வி என்பதும், கல்வி என்பதின் தேவையையும் அறிந்த மாநிலம் இது. அதனால் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் படிப்பு வரவில்லை என்றாலும் கூட ஐடிஐ போன்றவற்றில் சேர்ந்து தொழில்நுட்ப கல்வியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இங்குண்டு. கிராமப்புறங்களில் கூட பாலிடெக்னிக் கல்லூரிகள் அதிகம் கொண்ட மாநிலம் இது. அதனால் கடந்த இரண்டு தலைமுறைகளாக இங்கு கூலி வேலை செய்யும் ஆட்கள் குறைவாகிவிட்டனர். ப்ளம்பர், தையல்காரர்கள் போன்ற தொழிலேனும் அறிந்தவர்கள் தான இங்கு அதிகம். இது வரவேற்கத் தக்க ஒன்று. ஆனால் நமக்கு எல்லா வகையிலான தொழிலுக்கும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். சாலையில் வெயிலில் நின்று வாகனங்களை சரிசெய்வதற்கு தினம் அதற்கு 150 ரூபாய் சம்பளம் என்றால் இந்த வேலையைச் செய்ய இங்கு ஆட்கள் கிடையாது. ஹோட்டல்களில் பணி செய்ய, ஜவுளிக்கடைகளில் நாள் முழுக்க நின்று ஜவுளிகளை விற்க இப்போது யாரும் முன்பு போல வருவதில்லை.
வேலைகள் இருக்கின்றன. ஆட்கள் தேவைப்படுகின்றனர். வடஇந்தியர்களுக்கு வேலை தேவைப்படுகின்றன. வரவும் தயாராக இருக்கிறார்கள். இப்படியிருக்க, எங்கிருந்து இவர்கள் மீதான வெறுப்புத் தோன்றுகிறது?
தொடர்ந்து மலக்குழிகளையும் சாக்கடையையும் அள்ளுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினராக் இருக்கிறார்களே, இந்தளவுக்கு அதை எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்கலாமே.. அதனை மேம்போக்காக பேசி வட இந்தியர்கள் இங்கு நுழையும்போது மட்டும் ‘தமிழ் உணர்வினை’ பேசுவதன் பின்னணியில் அரசியல் தானே இருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஒவ்வொரு முறையும் அமெரிக்காவில் வெளி நாட்டினர் அதிகம் வேலை செய்வது குறித்தும் ஐடி துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் பற்றியும் பேச்சு எழும். அப்போதெல்லாம் அமெரிக்காவுக்கு போய் செட்டிலாகிவிட்ட மகன் அல்லது மகளின் நிலைமை என்னவாகுமோ, என்று அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என பதைபதைத்துக் காத்திருந்தவர்களும் நம்மில் சிலர் தானே.. நமக்கு ஒரு நீதி? நமது நாட்டின் ஒரு பகுதியினரான வட மாநிலத்தவருக்கு ஒரு விதியா?
வட இந்திய தொழிலாளர்கள் பிரச்சினை சில காலமாகவே நீறுபூத்த நெருப்பாக இருந்து, சமீபத்தில் வெடித்துள்ளது. இனவெறி, மதவெறி, மொழிவெறி, சாதி வெறி உள்ளிட்ட அனைத்து வெறிகளுமே மனிதனிடமிருந்து மனிதனை பிரிப்பவை. சக மனிதனை வேறுபடுத்தி வெறுப்பை வளர்ப்பவை.
திடீரென்று சமூக வலைத்தளங்களில் கிளம்பிய வதந்திகள், தமிழகத்தில் லட்சக்கணக்கில் பணியாற்றும் வட இந்திய தொழிலாளர்களை கூட்டம் கூட்டமாக கிளம்பிச் செல்ல வைத்துள்ளன. இன்று சென்னை சென்ட்ரலுக்கு சென்ற நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து கிளம்பும் டாடா நகர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ் போன்றவை கூரை வரை நிரம்பி வழிகிறது என்கிறார். ஓசூரில் பணியாற்றிக் கொண்டிருந்த வட இந்திய தொழிலாளர்கள் பலர் 5ம் தேதி ஊதியம் வந்ததும் சாரி சாரியாக கிளம்பிச் செல்வதாகவும், இரவு ஷிப்டுகளுக்கு பலர் வரவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
தமிழக அரசும், அதன் அதிகாரிகளும், இந்த வதந்திகளை தடுத்து, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களுக்கு வாழ்வை உத்தரவாதப் படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். குறிப்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் பணி பாராட்டுதலுக்கு உரியது.
வட இந்திய தொழிலாளிகள் இப்படி கிளம்பிச் செல்வது தமிழகத்தின் தொழில் மற்றும் வணிகத்தை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தில் இன்று 80 முதல் 90 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் முடி திருத்துவது, கட்டுமானப் பணிகள், ஓட்டல்கள், சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், பல இடங்களில் விவசாயக் கூலிகளாகவும் இருந்து வருகின்றனர். எளிமையாக சொல்வதானால் நாம் அவர்களை நம்பி இருக்கிறோம். இதில் அவர்களைக் கண்டு நாம் அஞ்ச என்ன இருக்கிறது ? தமிழர்கள், தங்களுக்கு உதவும் விலங்கினமான மாடுகளுக்கென்றே ஒரு பண்டிகையை கொண்டாடும் அளவுக்கு பண்பானவர்கள்.
அப்படிப்பட்ட நாம், நமக்காக வேலை செய்பவர்களை மொழியைக் காரணமாக வைத்து, அவர்கள் மனதில் அச்சத்தை விதைத்து அவர்களை விரட்டும் அளவுக்கு பண்பற்றவர்களாக மாறி விட்டோம் என்பது வேதனையைத் தருகிறது. நாம் அனைவரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மாற்றுவதற்கான சூழல்களை குறிப்பிட்ட சிலர் ஏற்படுத்திக் கொண்டே வருகிறார்கள். திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும், தமிழ் தேசியம் என்ற கற்பிதத்தோடு கற்பனாவாதம் பேசித் திரியும் சிலரும், சில தனி நபர்களும் சில ஆண்டுகளாகவே இத்தகைய வெறுப்புணர்வை விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதன் நீட்சியே இன்று வட இந்தியர்கள் சாரி சாரியாக செல்வது. டோனி ஜோசப் என்ற பத்திரிக்கையாளர் மற்றும் ஆய்வாளர், இந்தியர்களின் மூதாதையர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று, சமீப காலத்தில் வளர்ச்சி அடைந்த டி.என்.ஏ தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உலகெங்கும் நடக்கும் ஆராய்ச்சிகளின் முடிவுகளின் அடிப்படையில், “Early Indians : The Story of our ancestors and where we came from” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
வரலாற்று காலத்துக்கு முன் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்துதான் நமது மூதாதையர்கள் வந்திருக்கின்றனர். ஈரானியர்கள் இந்தியர்களோடு கலந்து இந்தியாவில் விவசாயத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான் ஹரப்பன் நாகரீகம். கிழக்காசியமொழியின் கூறுகள் இந்தியாவில் உண்டு. ஹூனர்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள், அராபியர்கள், முகலாயர்கள் என்று பலர் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தாலும், அந்த பெயர்ச்சிகள் பெரிய அளவில் நமது மக்கள் தொகையை பாதிப்புக்குள்ளாக்கவில்லை.
இப்படி நமது வரலாற்றை ஆராய்ந்தாலே, நாமே புலம் பெயர்ந்து வந்தவர்கள்தான் என்பது தெரியும். இத்தகைய ஆராய்ச்சிகள், நம்மை மேலும் செழுமைப் படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தத்தான் உதவ வேண்டுமே ஒழிய, பழங்கதைகளை பேசி வெறுப்பை வளர்க்க உதவக் கூடாது.
ஏன் இத்தகைய வெறுப்பரசியலில் கட்சிகளும் இயக்கங்களும் ஈடுபடுகின்றன என்றால், வெறுப்பை விதைப்பது அன்பை விதைப்பதை விட மிக எளிது. அடிப்படையிலேயே நாம் அனைவரும் குழு மனப்பான்மை கொண்டவர்கள்தான். நாகரீகத்துக்கு முந்தைய காலத்தில் நம்மோடு இருப்பவர்களைத் தவிர, அத்தனை பேருமே நமது எதிரிகள் என்றுதான் நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். இதன் காரணமாகத்தான் வரலாறு நெடுக பல்வேறு போர்கள் நடந்திருக்கின்றன. பல கோடி உயிர்கள் அழிந்திருக்கின்றன. அந்த டி.என்.ஏவை இன்றும் வைத்துக் கொண்டிருக்கும் நாம் மட்டும் இதிலிருந்து உடனடியாக மாறுபடுவது அத்தனை எளிதல்ல. ஆனால், ஒரு உன்னதத்தை நோக்கிப் பயணிப்பதுவே சிந்திக்க தெரிந்த மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி வைத்திருக்கிறது.
அந்த உன்னதம் என்பது, மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனம். சிந்திக்கும் திறனற்ற விலங்குகள் வேறு இனம் என்பதே. மனிதர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நேசத்தோடு ஒரு உலக கிராமமாக வாழ வேண்டும் என்பதே உன்னதம். அந்த உன்னதத்தை நோக்கிய பயணத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாடுகளுக்கு இடையேயான பூகோள எல்லைகள் நமது வசதிக்காக ஏற்படுத்திக் கொண்டவை. இதையும் தாண்டி பல நாடுகளோடு நாம் நட்பு பேணுகிறோமா இல்லையா ?
அப்படி இருக்கையில் வட இந்தியர்களை மட்டும் நாம் விரோதிகளாக பார்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் ?
வட இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்படும் ஒரு முக்கிய கருத்து, அவர்கள் தமிழகத்தில் குடியேறி வாக்குரிமை பெற்று, பிஜேபியை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதும், அவர்கள் தமிழர்களை சிறுபான்மையினர் ஆக்கி விடுவார்கள் என்பதும்.
வட இந்தியாவிலிருந்து இங்கே வேலைக்கு வரும் அத்தனை பேரும், தமிழ்நாடு சொர்க்க பூமி, இங்கே சொகுசாக வாழலாம் என்பதற்காக வரவில்லை. தமிழகத்தில் தனி நபரின் ஆண்டு வருமானம், சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, ரூபாய் 2,12,174. இப்போது வட இந்திய மாநிலங்களின் தனி நபர் வருவாயை பார்ப்போம்.
பீகார் பட்டியலின் கடைசியில் உள்ளது. ரூபாய் 43,605/- உத்திரப்பிரதேசம் ரூபாய் 61,666/- ஜார்க்கண்ட் 71,071/-. அஸ்ஸாம் 86,857/- மத்தியப் பிரதேசம் 1,04,894/-.
தொழில் வளர்ச்சியை ஒப்பிட்டால், தமிழகம் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பல மடங்கு முன்னேறி இருக்கிறது. கல்வி அறிவு, வாழும் சூழல் என எதை எடுத்துக் கொண்டாலும், தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதாலேயே, வடக்கிலிருந்து புலம் பெயர்ந்து கூலிகளாக, தொழிலாளிகளாக இங்கே வந்து குவிகிறார்கள்.
இப்படி வேலைக்கு வருபவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் இங்கேயே தங்கி விடுகிறார்கள் என்றால் 5 முதல் 8 சதவிகிதத்தினர் இங்கேயே தங்கி, தமிழ்நாட்டு குடியுரிமை பெருவதற்கான சூழல் உண்டுதான். ஆனால் வரும் அனைவரும் இங்கேயே தங்கி விடுகிறார்கள் என்பதுதான் பொய்; வதந்தி. 5 முதல் 8 சதவிகிதத்தினர் இங்கேயே குடியேறுவதை தவிர்க்க முடியாது. இப்படி இந்தியாவெங்கும் தமிழர்கள் குடியேறியதோடு ஒப்பிட்டால் இது மிக மிக குறைவே.
பெங்களூரில் மட்டும் வீடு மற்றும் சொத்துக்கள் வாங்கி குடியேறிய தமிழர்களின் சதவிகிதம் மிக மிக அதிகம். மும்பையில், உள்ள தமிழர்களில் 90 சதவிகிதத்தினர் சொந்த வீடு, வாக்காளர் அடையாள அட்டை, சொந்த தொழில் என பல்வேறு துறைகளில் இருக்கிறார்கள். மும்பையில் பலர் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். சியோன் – கோலிவாடா தொகுதியின் எம்.எல்.ஏவாக 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் இருந்தவர் கேப்டன் தமிழ்ச்செல்வன் என்ற தமிழர். இந்தியாவின் பல பகுதிகளில் இது போன்ற உதாரணங்களை சொல்லலாம். அவர்களை அவ்வூரின் மக்கள் விரட்டியடிக்கத் தொடங்கினால் இதற்கு எல்லை உண்டா ? இது எங்கே சென்று முடியும் ?
நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கிறோம். வட இந்திய தொழிலாளர்களின் தேவை நமக்கு இருக்கிறது. நாம் தரும் கூலியும், நமது விருந்தோம்பலும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இதை அன்போடு செய்தால் இரு தரப்புமே மகிழ்வோடு வாழலாம்தானே ?
இந்த பூமி அனைவருக்கும் சொந்தமானதுதான். அதிகபட்சம் ஒரு 80 வருடம் வாழ்வோமா ? இன்னும் 500 ஆண்டுகள் வாழ்ந்து இந்த பூமியை இறக்கையில் கொண்டு செல்வது போல நமக்கு ஏன் இந்த பேராசை ?
வடஇந்தியக் கடவுளர்களான இராமனையும், கிருஷ்ணனையும் நம் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொண்டு மனிதர்களை வெறுப்பது எந்த விதத்தில் நியாயம்?