”குமார்ஜி கோபால் அண்ணன் எங்கேன்னு” கேட்டப்படி வந்து அமர்ந்தார் கமால்பாய், “எனக்கென்ன தெரியும் இந்தா வர்றான் போரு போஸ் பாண்டி அவன கேளுங்க”ன்னு சொன்னார் குமார் ஜி. ”என்ன போஸ் பாண்டி அண்ணன் கோபால எங்க காணோம்”னு கமால் பாய் கேட்க ”அவரத்தான் தேடிகிட்டிருக்கேன். 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துலதான் ஜெயிப்பீங்கன்னு பெட் கட்டினார் இப்ப 65000 வித்தியாசம் வந்ததால தலைமறைவா இருக்காரான்னு தெரியல”ன்னு போஸ்பாண்டி முடித்தார்.
“இவ்வளவு வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சும் தலைவர் என்னமோ சந்தோசமா இல்லப்பா” என்றார் போஸ் பாண்டி.
“ஏன் இதை விட என்ன வேணுமாம்” என கமால் பாய் வினவ, “தலைவருக்கு தான் முதல்வரான பிறகு வந்த முதல் இடைத்தேர்தலில், அதிமுகவை டெப்பாசிட் இழக்க வைச்சு காட்ட முடியலையேன்னு வருத்தப்பட்டிருக்கார். இதுக்காகவா இத்தனை மந்திரியை அனுப்புனேன். டெப்பாசிட் போயிருக்க வேணாமான்னு கேட்டுருக்கார்”.
“இது பேராசைப்பா” என்ற கமால் பாய், “கோபாலை காணோம். தலைமறைவா” என்றார்.
“நான் ஏம்பா தலைமறைவாகணும் நீ தான் சந்தோஷமா இருக்க ஆனா 250 செலவழிச்சு ஜெயிச்சு அதை கொண்டாட கூட மனசு இல்லாம தமிழகத்தின் முதல் குடும்பம் சோகத்துல இருக்கு தெரியுமா உனக்கு” என்று சிரித்தார் கோபால்.
”என்னண்ணே அப்படிப்பட்ட சோகம் பெரிய சோகமா இருக்கும்போல” ன்னு கமால் பாய் கேட்க “ஆமா பெரிய சோகம் தான் 6100 கோடி ரூபாயாச்சே, வெளியில சொல்ல முடியாத அளவுக்கு சோகமா இருக்கு, எல்லா முதலீடும் போச்சு என்ன செய்றதுன்னே தெரியாம மனசுக்குள்ளயே வச்சிகிட்டு புலம்புகிற நிலைமையில் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்காம், தேர்தல் வெற்றியைக்கூட இதனால் சந்தோஷமா கொண்டாட முடியலையாம், ஒரு வருஷம் ஆகியும் பணத்த வெள்ளையாக்க முடியாம பணமாவது மீளுமான்னு சோகத்துல மொத்த குடும்பமும் இருக்காம்” என்றால் கோபால்.
”நீங்க எப்பவும் பொடி வச்சுத்தான் பேசுவீங்க போட்டு உடைண்ணே அத விட்டுட்டு பூசி மழுப்புற”ன்னு குமார்ஜி கோபப்பட ”இருப்பா உன் அளவுக்கு எல்லாம் அவரு கோபப்பட்டா எல்லாம் நட்டுகிட்டு போய்டும், அதான் சிவாஜி பட வசனம் மாதிரி நெஞ்சுக்குள்ளயே வச்சுகிட்டு புலம்புறாரு மருமகன், இங்கிருந்து அங்க அமௌண்ட கொண்டு போய்ட்டாங்க. அதை முதலீடா இங்க திரும்ப கொண்டு வரலாம்னு அண்ணசாலையில் பெரிய மால் கட்ட கணக்கெல்லாம் போட்டு எல்லாம் நல்லா தான் போச்சு ஆனா, இவங்க கொண்டு வர்றதா சொன்ன மொத்த கம்பெனியும் இப்ப பல்டி அடிச்சுட்டாங்க அதனால தான் பெரிய சோகத்துல இருக்காங்க”ன்னு முடிச்சார் கோபால்.
”இங்க பாருண்ணே நீ சொல்றதே எனக்கு விளங்கல புரியும்படி சொல்லு”ன்னு கமால்பாய் கேட்க, ”பாய் அவங்களுக்கே பணம் எப்படி சிக்கிகிச்சுன்னு விளங்கல, ஒரு வருஷமா ஹவாலாவுல கொண்டு போன பணத்தை, கேமேன் தீவுகள் மாதிரி வெள்ளைப்பணமா மாத்த போட்ட திட்டம் எல்லாம் சிக்கலாகி இவங்க செட்பண்ணுன கம்பெனிகள் எல்லாம் தெறிச்சு ஓடிப்போய்ட்டாங்க, பணத்த என்ன பண்றது, பினாமிகளும் சிக்கிக்குவோம்னு எஸ்கேப்னு ஒட்டு மொத்த குடும்பமே ’உன்னால் நான் கெட்டேன் என்னால நீ கெட்டே’ன்னு சோகத்துல இருக்காம், இந்தியாவுடைய ‘ரா’ உளவுப்பிரிவு துபாய்ல ரொம்ப ஸ்ட்ராங்க். வித்தை காட்டுவாங்க. தான் அங்க போய் சேட்டைய வச்சுகிட்டா இப்படித்தான், கரெக்டா லாக் பண்ணிட்டான் இல்ல” என்றார் கோபால்.
”ரா உளவுப்பிரிவு–ன்னு சொல்றீங்க துபாய்னு சொல்றீங்க, 6100 கோடி ரூபாய்னு சொல்றீங்க, முதலீடுன்னு சொல்றீங்க, கம்பெனிகாரன் ஒதுங்கிட்டான்னு சொல்றீங்க, மொத்த குடும்பமும் சோகம்னு சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியல கோபால் அண்ணே” என்றார் கமால் பாய். “உனக்கு என்னதான் பாய் புரியும் கூட்டிக்கழிச்சுப்பாரு கணக்கு கரெக்டா வரும்”னு குமார் சிரித்தான். “அப்ப உனக்கு புரிஞ்சுடுச்சா குமாரு” என்று சிரித்த கோபால். “கமால் பாய் உன்னை மாதிரி அப்பாவியா இருந்தா பலியாடா ஆக்கிடுவாங்க உஷாரா இருக்கணும் புரியுதா”ன்னு கேட்க எனக்கென்ன நான் எப்பவும் உஷாரு, வாழ்க்கைல படிப்படியா ஏறி வந்திருக்கேன்னு கமால் பாய் சொன்னார்.
”இப்படித்தான் ஒரு தம்பி சொல்லிகிட்டு திரிஞ்சுச்சு. இணை இயக்குனராகவும் ஆயிட்டேன், சானல் ஓனர் ஆயிட்டேன். இனிமேல் என் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கும்னு ஷேவிங் கூட பண்ணாமல் அரை தாடியோட சுத்திகிட்டு திரிஞ்சுச்சு இப்ப தம்பி பலியாடாகி மாட்டிகிட்டு முழிக்குது”ன்னு சொல்லி கோபால் சிரித்தார். ”எந்த குடும்பம் எந்த தம்பி ஒழுங்கா நேரா சொல்லுண்ணே மறைச்சி பேசாத நேர்மையா பேசு”ன்னு போஸ் பாண்டி கோபப்பட, ”இருப்பா பாண்டி கோச்சுக்காத இது மாதிரி திரிஞ்ச தம்பி விக்னேஷ்காந்த். நேர்மையா, நேரா சொல்லுங்கன்னு உன்னை மாதிரி கண்டிஷன் எல்லாம் போட்டிருந்தா இன்னைக்கு நிம்மதியா இருந்திருப்பாரு. இப்ப பாரு ஒட்டுமொத்த பிரச்சினையும் தம்பி மேல போட்டுட்டாங்க” என்ற கோபால் தொடர்ந்தார்.
”பிளாக்ஷீப் டிவிய கலைஞர் டிவி வாங்கியபோது அதன் ஒரு இயக்குநரா விக்னேஷ் காந்தையும் ஷையும் நியமிச்சாங்க. ஒரு இயக்குனர் அண்ணியின் தங்கை பையன் கார்த்தி, இன்னொருவர் விக்னேஷ். நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. ஆனா இவங்க மேட்டர் எல்லாம் இங்கிருந்து ரிப்போர்ட்டாக போக திடீர்னு ஒருநாள் ஜிஎஸ்டி அதிகாரிகள் ரெய்டு விட பெரிய அளவில் சிக்கிகிட்டாங்க. 60 கோடி ரூபாய் வரை பணமாகவே சானலுக்காக பொருட்களை வாங்கியிருப்பது தெரிய வந்துருக்கு. உடனடியாக விக்னேஷ வரவழைச்சு வாக்குமூலம் வாங்கிட்டாங்க. இன்னொரு இயக்குனர் கார்த்தி 2 சம்மனுக்கு ஆஜராகாமல் டபாய்ச்சார், என்னதான் பெரியப்பா சி.எம் ஆக இருந்தாலும் ஆஜராகலன்னா கைதுன்னு தெரிஞ்சவுடன் போய் ஆஜராகிட்டார்” என்றார் கோபால்
”அப்புறம் என்ன சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள் ஆஜராகி அனைத்து விஷயங்களையும் சொல்லியாச்சு, ஜிஎஸ்டி கட்டலன்னா அபராதம் கட்டப்போறாங்க இப்ப என்ன தலையா போய்டும்”ன்னு போஸ் பாண்டி கோபப்பட. “ அபராதம் வசூலிப்பார்கள் அதெல்லாம் இரண்டாம் பட்சம் தம்பி, 60 கோடி ரூபாய் எங்கிருந்து வந்துச்சு, அதற்கு என்ன சோர்ஸுன்னு சொல்லணும் இல்லன்னா வேற சில அண்ணன்கள் எல்லாம் உள்ள வருவாங்க. கலைஞர் டிவி வழக்கு ஞாபகம் இருக்கா? கொல்கத்தால ஒரு உப்புமா கம்பெனிகிட்ட கடன் வாங்கியதுபோல காட்டி சிக்கலாச்சே”ன்னு கோபால் சொல்ல ”ஆமாண்ணே அதுல கூட சரத்ரெட்டின்னு ஒருத்தர சிக்க வச்சாங்க சம்பந்தமில்லாத கனிமொழியும் கைதானாங்களே”ன்னு குமார் எடுத்துக்கொடுக்க ”கரெக்டா பாயிண்ட புடிச்ச குமாரு உனக்கும் மூளை வேலை செய்யுது”ன்னு கலாய்த்த கோபால், “மேட்டருக்கு வர்றேன். அதே சிக்கல்தான் இப்ப பிளாக்ஷிப் டிவிக்கும் வந்திருக்கு.
மணி சோர்ஸ் காண்பிக்கணும், ஏன் ஜிஎஸ்டி கட்டாமல் மோசடியாக பணமாக கொடுத்து வாங்கினீர்கள் என்று பல கேள்விகளுக்கு எனக்கு எதுவும் தெரியாது, விக்னேஷுக்குத்தான் எல்லாம் தெரியும்னு தம்பி கார்த்தி சொல்லிடுச்சாம். விக்னேஷையும் ஒப்புக்கச் சொல்லிட்டாங்களாம், அவரும் ஒப்புகிட்டாராம்” என்றார் கோபால். ”அதெப்படி அப்படி ஒப்புகிட்டா கார்த்தியை விட்டுடுவாங்களா”ன்னு கமால்பாய் அப்பாவியாக கேட்க, “பாய் உங்கள மாதிரிதான் அந்த குடும்பமும் நினைக்குது, ஆனால் முதன் முதலில் வாக்குமூலம் கொடுத்தது விக்னேஷ் என்பதை மறந்துட்டாங்க. நான் தான் கம்பெனியில் முழு பொறுப்புன்னு விக்னேஷ் சொன்னால் விட்டுடுவாங்களா? அக்ரிமெண்ட் காப்பி, வவுச்சர்னு பல விஷயங்கள் இருக்கேப்பா, அதுவுமில்லாம 60 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது, என்ன சோர்ஸுன்னு கேட்டால் அவர் என்ன சொல்வார். சிவகார்த்திகேயன் கொடுத்தார்னு சொல்வாரா? இது மாதிரி நடைமுறை சிக்கல்கள் இருக்கு, பொறுத்திருந்து பார்ப்போம், இப்போதைக்கு பலி ஆடு விக்னேஷ் தான்” என்று அடுத்த சப்ஜக்டுக்கு தாவினார் கோபால்.
”இப்பத்தாம்பா புரியுது, திடீர்னு அந்தப்பையன அந்த சானல் இயக்குனரா எப்படி நியமிச்சாங்கன்னு யோசிச்சேன், உழைப்பால் உயர்வதில் இவ்வளவு சிக்கல் இருக்கா”ன்னு ஆதங்கப்பட்டார் கமால் பாய். ”அதுமட்டும் இல்ல இவர்களுக்காக நிகழ்ச்சி நடத்திக்கொடுத்த யுவன் சங்கர் ராஜாவுக்கும் செய்த செலவு, அவருக்கு கொடுக்கப்பட்ட தொகை எல்லாம்கூட ஜிஎஸ்டியில் காண்பிக்கப்படாததால அவர் இடத்திலேயும் ரெய்டு போயிருக்கு, அவரும் விசாரணை வளையத்தில வர்றாரு, அடுத்து இசையமைப்பாளர் தேவா கிட்டயும் போகப்போகுதான் ஜிஎஸ்டி டீம்” என்றார் கோபால். ”இதெல்லாம் ஜுஜுபி இன்னும் பெரிய சம்பவம் எல்லாம் இருக்காம். இங்கிருந்து ஒருத்தர் ரிப்போர்ட் போட்டுகிட்டே இருக்கார், மேலிருந்து கணக்கெடுத்துகிட்டே இருக்காங்க, எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவர்கள் ஆடுகிறார்கள் எங்க போய் முடியப்போகுதோ வரும் காலங்களில் நல்ல தரமான சம்பவம் எல்லாம் இருக்கும்போல” என்று தன் பங்குக்கு குமார் சொல்ல, ”ஆமா குமாரு எங்கள பத்தி பேசலன்னா உனக்கு அந்த நாள் நன்றாகவே இருக்காது”ன்னு போஸ் பாண்டி கோபப்பட்டார்.
சரிப்பா விடு நல்ல விஷயமா நாலு சொல்கிறேன் கேட்டுக்க, ”எலியும் பூனையுமா இருந்த மகனும், மருமகனும் இப்ப ஜிகிரி தோஸ்த்தாயிட்டாங்க. யாராவது பார்க்கப்போனால் அவர பாத்துடுங்கன்னு சின்னவர் சொல்வதும், எதுக்கும் சின்னவர பாத்துடுங்கன்னு மருமகன் சொல்வதும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு குடும்பம் சந்தோஷமாக இருப்பதுபோல் தெரியுது, அதேபோல் மார்ட்டின் மருமகன் அர்ஜுன், பிரசாந்த் கிஷோர் பார்த்துகிட்டிருந்த மருமகன் அலுவலகமான பெனின்சுலாக்கு பொறுப்புக்கு வருகிறாராம்” என்றார் கோபால்
”அர்ஜுன் ஒலிம்பிக் ஃபெடரேஷன் பொறுப்புல இருக்கார், விளையாட்டு வீரர், சின்னவருக்கு நெருக்கமானவர், அவர் எப்படி அரசியல் ஸ்ட்ரேடஜி டீமுக்கு பொறுப்பேற்று என்ன செய்வார்” என்று போஸ் பாண்டி அப்பாவியாக கேட்க, இப்ப மட்டும் என்ன செய்கிறார்கள், ஐடி விங் தறிகெட்டு எதிர்ப்பவர்களை தரக்குறைவா திட்டிகிட்டு இருக்கு, முதல்வர் பாஜகவை வேரறுப்போனு சொல்கிறார். மகனும், மருமகனும் டெல்லியில் குழைகிறார்கள், டி.ஆர்.பாலு இப்பவே மத்திய மந்திரிக்கு துண்டு போட்டு வச்சிட்டாரு. வருங்கால திமுகன்னு சொல்லிக்கிற செந்தில் பாலாஜி அண்ணாமலைக்கூட ரகசிய உறவுன்னு பாஜகவுல இருந்து விலகுன சிடி.நிர்மல்குமாரு போட்டு உடைச்சிட்டாரு, இதில் ஏமாற போறது கூட்டணி கட்சிங்கதான். இவர்கள் செய்வதை தனது ஸ்ட்ரேடஜின்னு அர்ஜுன் சொல்லிக்குவாரு” என்றார் கோபால்.
”நல்லா இருக்குண்ணே இந்த டெக்னிக், சின்னவரும்–மருமகனும் ஒன்னாயிட்டா மருமகன் ஆட்கள், சின்னவர் ஆட்கள்னு பிரிஞ்சு கிடந்த அதிகாரிங்க கதி”ன்னு குமார் கேட்க, அதெல்லாம் அவங்க பிரச்சினை அவங்களுக்கு முதல்வரை ஏதாவது சொல்லி தனது பதவியை தக்க வச்சிக்கணும்னு தெரியும், நீங்கதான் அடுத்த பிரதமர்னு அவர நம்ப வச்சிருக்காங்கன்னா பார்த்துக்க, அதையும் நம்பி முதல்வர் வார்த்தை விட இப்ப பல கட்சிகள் கோபத்தில் இருக்காங்களாம்” என்றார் கோபால்.
”என்னண்ணே புது குண்ட தூக்கி போடுற அவருக்கு இந்தியாவே சாமரம் வீசுது, முதல்வர்களின் முதல்வர்னு சொல்றாங்க, பிறந்த நாள் என்றால் அகில இந்திய தலைவர்கள் வர்றாங்க, காஷ்மீர சிங்கத்தின் மகன் பரூக்கே நீங்க ஏன் முதல்வராக கூடாதுன்னு மேடையிலேயே கேட்டாரே அப்புறம் என்ன, முதல்வர் கூட மேடையில் பாஜகவை வேரறுப்போம்னு சவால் விட்டு எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை எல்லாம் சொன்னாரே. ஏதாவது நல்லது நடந்தா உனக்கு பொறுக்காதே வேட்டி கட்டியவன் பிரதமரா ஆகக்கூடாதுன்னு உங்க புத்தியிலதான் யாரோ ஏத்திவிட்டுட்டாங்க”ன்னு போஸ் பாண்டி கோபப்பட, “தம்பி ஏன் திருமாவளவன் மாதிரி உனக்கு சமீப காலமாக இவ்வளவு கோபம் வருது, வேட்டி கட்டினவன் பிரதமராக வரக்கூடாதுன்னு தடுத்ததா? உங்க ஆட்கள் மேலதான் பழைய புகார் இருக்கு ஞாபகம் வச்சிக்க” என்றார் கோபால்.
அவன் கிடக்குறான்னே நீ சொல்லுண்ணே என்ன நடந்ததுன்னு என்று கமால் பாய் கேட்க, ”பாய், முதல்வர் பிறந்த நாளுக்கு மேடையில் எத்தனை கட்சி இருந்துச்சு”ன்னு கோபால் கேட்க ”காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ், பரூக், லல்லு கட்சியில் அவர் மகன் தேஜஸ்வின்னு 4 கட்சி ஆட்கள் வந்தாங்க” என்றார் கமால் பாய். ”முதல்வருக்கு நெருக்கமான மம்தா கட்சியில் ஏன் வரல, மோடி எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் சந்திரசேகர் ராவ் ஏன் வரல, போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்கன்னு சமீப காலமாக தன்னிலை மறந்து இருக்கும் இடதுசாரி தேசிய தலைவர்கள் எச்சூரி, டி.ராஜா எங்கே? மோடியின் பரம வைரின்னு சொல்கிற அர்விந்த் கேஜ்ரிவால் எங்கே, எங்கே, எங்கே?”ன்னு கமால் பாய் ராகம் பாட, ”அவங்களுக்கு நேரம் இருந்திருக்காது”ன்னு போஸ் பாண்டி சமாளித்தார்.
”எதே நேரம் இல்லையா காலையில் டி.ராஜா நேரில் வாழ்த்துச் சொன்னாருப்பா, மம்தா வரலைன்னா ஓ பிரையன்னு ஒருத்தர் ஆவேசமா பேசுவாரே அதுமாதிரி யாரையாவது அனுப்ப போறாங்க. எச்சூரிக்கு இதைவிட வேறு என்ன வேலை இருக்கு?” என்று கேட்டார் கோபால். ”அப்ப என்ன நடந்துச்சு நீயே சொல்லுங்க”ன்னு குமார் கேட்க, கோபால் சொல்ல ஆரம்பித்தார். இடதுசாரி தலைவர்களையும், மம்தா, சந்திர சேகர்ராவ் என யாரையும் அழைக்கவில்லை. இந்த நாலு கட்சியை மட்டுமே அழைச்சிருக்காங்க. இவர்கள் அழைச்சதிலேயே ஒற்றுமையில்லாம முதல்வர் பேசும்போது பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரளணும், அதுவும் காங்கிரஸ் பின்னால்னு பேசினால் மம்தா, சந்திர சேகர்ராவ், இடதுசாரிகள் ரசிப்பார்களா இவர் பேச்சை?, இதுல எங்க இவர் பிரதமர் ஆவது?, எல்லோருக்கும் ஒரு பக்கம் கைகாட்டிட்டு இவர்கள் வேறு திட்டம் வச்சிருக்காங்க. அதுதான் டி.ஆர்.பாலு திட்டம்”னு சிரித்தார் கோபால்.
”ஆமால்ல நான் கூட என்னடா சம்பந்தமில்லாம யாருமே வரலைன்னு யோசிச்சேன், அட கீழ உட்கார்ந்திருக்கிற திருமா, வைகோ, இடதுசாரி தலைவர்களை கூட மேடை ஏத்தி வாழ்த்த சொல்லலையேப்பா”ன்னு வருத்தப்பட்டார் கமால்பாய். ”அது அவங்களுக்கும் உள்ளூர இருக்கு பாய். இப்பவே இடதுசாரி கட்சிகளில் கீழ் அணிகள், தொழிற்சங்கங்களில் புகைய ஆரம்பிச்சுடுச்சாம், எத்தனை நாளைக்கு திமுக செய்யும் தவறுகளுக்கு நாம் சிலுவை சுமக்க போகிறோம், புதுக்கோட்டை மலம் கலந்த விவகாரத்தில் இது வரை நடவடிக்கை இல்லை, சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் கிடக்கு. பட்டி ஃபார்முலாவை வைத்து 250 கோடி செலவு செய்து தேர்தலில் ஜெயிக்கிறாங்க, நாம என்னன்னா? திருதிராஷ்டிர சபை பீஷ்மர் மாதிரி கைய பிசைஞ்சுகிட்டு நிக்கிறோம்னு ஒரே சண்டையாம் தோழர்களுக்குள்.
இதுல ஆனா..ஊன்னா ஆளுநரை கண்டிக்கிறோம்னு அடியாள் மாதிரி கோபத்தோட கிளம்பி போகிறீர்கள் ஏன் திமுகதான் போராட்டம் நடத்தட்டுமே நாம மக்கள் பிரச்சினையை கேட்போம், வேங்கைவயல் பிரச்சினைக்கு ஒரு அடையாளபூர்வ போராட்டம் நடத்தியதோடு சரி, நாம ஏன் இப்படி இருக்கனும்னு இடதுசாரி தோழர்கள் கேடபதற்கு தலைவர்கள் முழிக்கிறார்களாம். இது இப்படின்னா திருமாவளவன் திடீர் என ஆவேசமாகி பொதுக்கூட்டத்தில் இடதுசாரிகளை வச்சிகிட்டே எங்களுக்கும் பாஜகவுக்கும் தான் போராட்டம் இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இல்ல, பதவி என் தலைமுடிக்கு சமம் என்றெல்லாம் பேசியதை கே.பாலகிருஷ்ணனும், முத்தரசனும் ரசிக்கலையாம். இவருக்கு பாமக வர்றது பிடிக்கலைன்னா திமுகவுக்கு சவால் விட நாங்க தான் கிடைச்சோமான்னு மனதுக்குள் புழுங்குகிறார்களாம்”. என்றார் குமார்ஜி
”குமார்ஜி திருமா அண்ணன் கோபம் எல்லாம் ஒருநாள் தான் பார்த்தியா, மறுநாளே என்ன சொன்னார், ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் வென்றது, மதவாத, ஜாதியவாத சக்திகளுக்கு கிடைத்த தோல்வின்னு சொன்னாரா? இல்லையா?”ன்னு போஸ் பாண்டி கேட்க, ”ஆமாப்பா ஜனநாயகம் எப்படி வென்றதுன்னு அவருக்கு தெரியாதா? அவரே இப்படி பேசினால் என்ன சொல்வது. அதற்கு எதுவும் சொல்லாமல் சும்மா போய்விடலாமே” என்றார் கமால் பாய். ”அவரும் கட்சி நடத்தணுமே அவர் தம்பிமார்கள் அண்ணே ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேண்ணேன்னு யதார்த்தத்தை உணர்த்தியிருப்பார்களோ என்னவோ”ன்னு குமார்ஜி சொல்ல, இடைமறித்த கோபால் ”சில மாற்றங்களை நோக்கி தமிழக அரசியல் நகர்கிறது அதை இப்போது தெளிவாக சொல்ல முடியாது, ஆனால் திருமாவளவன் இப்படி பேசியதற்கு பின்னால் எடப்பாடி கை இருக்குன்னு சொல்கிறார்கள். ஒன்று பாஜகவை கழற்றி விட்டு மெகா அணி அமைப்பது, அல்லது மீண்டும் மக்கள் நலக்கூட்டணி இதற்கு திருமா, இடதுசாரிகள் பயன்படுவார்கள்னு அதிமுக தரப்பு கணக்கு போடுதாம். அது மட்டுமல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு இங்கே இடம் உண்டுன்னு எடப்பாடி திருமாவுக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்காராம். பாமக அவங்க பக்கம் இல்லைன்றது தெரியும்ல. அதான் திருமாவை வைச்சி பேலன்ஸ் பண்ணலாம்னு திட்டம் போல” என்றார் கோபால்
”எனக்கு வந்த தகவலை சொல்கிறேன், பாஜகவின் அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துபோகாமல் ஜெ பாணி அரசியலை ஓரளவுக்காவது கொண்டு போகணும். 2024 –ல் ஒரு பல்ஸ் பார்த்துவிட்டால் அதன் பின்னர் பாஜக இல்லாமலே முன்னர் ஜெ அமைத்ததுபோல் மெகா அணி, அல்லது மக்கள் நலக்கூட்டணி போல் தனி அணியாக செயல்பட வைப்பது என யோசித்துள்ளதாம் அதிமுக தரப்பு” என்றார் குமார்ஜி, ஆமா குமார் ”அர்ஜுன் போன்ற ஆட்களை எல்லாம் பிரசாந்த் கிஷோர் ரேஞ்சுக்கு வைத்து பொறுப்பு கொடுத்து மங்குனி அதிகாரிகள், செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள், சின்னவரு கிட்ட இருக்கிற திராவிட ஸ்டாக் அரசியல் நிபுணர்கள், ஜால்ராக்கள் செயலை பார்க்கும்போது மீண்டும் ஒரு 2011 அல்லது 2016 கண்ணு முன்னே தெரியுது” என்றார் கமால்பாய்.
”இதெல்லாம் முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்” என்று கேட்டார் போஸ்பாண்டி கோபமாக. நான் கேட்கிறேன் நீ பதில் சொல்லி பாண்டி, ”உங்கள் வேகமான ஓட்டத்துக்கு போலீஸ் அதிகாரிகளே உங்கள் கூட ஓடி வர முடியாதாமே என்கிற சரித்திர பூர்வமான கேள்விகளுடன் ஒரு பேட்டியை எடுக்கும்போது முதல்வருக்கு தெரியாதா? ராணுவ வீரர் மரணம் இவ்வளவு பெருசா பூதாகரமாக மாறியபோது அதை ஏன் முன்னரே ரிப்போர்ட் போடலைன்னு முதல்வர் கேட்டாரா? பிறந்த நாளைக்கு மற்ற தேசிய கட்சிகளை ஏன் அழைக்கலைன்னு முதல்வர் கேட்டாரா? அட திராவிட ஸ்டாக்கின் மொத்த குத்தகைக்காரர் வீரமணியைக்கூட மேடையில் ஏற்றவில்லையே தேஜஸ்வி யாதவை விடவா அவர் குறைந்து போய்விட்டார். இன்னொன்னு சொல்றேன் கேளு முதல்வர் கலந்துக்கொள்ளும் கூட்டங்களில் டிஐபிஆர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கோர்செல், எஸ்சிபி அதிகாரிகள் செய்யும் தொல்லை தாங்க முடியலையாம். இதையெல்லாம் யார் போய் சொல்வது.
கட்சிக்காரர்களையே யோவ் போயா வெளியேன்னு விரட்டுவதும், நிகழ்ச்சி நடத்துபவர்களை போய் மிரட்டுவதும் கட்சிக்காரர்கள் கொந்தளிச்சுப் போய் இருக்காங்களாம். இதில் முன்னணியில் இருப்பவர் டிஐபிஆர் ஜாயிண்ட் டைரக்டர் மேகவர்ணம் என்கிறார்கள். அவர் மறைந்த அமைச்சரின் உறவினராம். அதற்காக தன் பவரை காட்ட முதல்வர் எதிரிலேயே நாற்காலி போட்டு அமர்வாரா? இவர் சாதாரண பி.ஆர்.ஓ அதிகாரிதானே. ஜெயலலிதா முதல்வராக இருந்தால் அதிகாரிகள் இதுபோல் இருப்பார்களா? என்று கேட்கிறார்கள் கட்சிக்காரர்கள். சொல்றதை சொல்லியாச்சு டிஐபிஆர் ஆட்களால முன்னர் ஆளுநருக்கும்–அரசுக்கும் மோதல் வந்துச்சு. இப்ப கட்சிக்காரர்களையே அடிமைகள் போல் நடத்துறதுனால கொந்தளிக்கிறார்கள் கட்சிக்காரர்கள். இதற்காகவா ஆட்சிக்கு வர பாடுபட்டோம் என்று வெளிப்படையாகவே ஒரு நிர்வாகி ஒரு விழாவில் கோபப்பட்டிருக்கார்”. என்றார் கோபால்.
”சரி எங்களையே குறை சொல்வது இருக்கட்டும் உங்க ஆட்களைப்பற்றி சொல்லுங்க”ன்னு போஸ் பாண்டி கோபப்பட, “கோச்சுகாதப்பா, இப்படித்தான் பலரும் அந்தக்கட்சிக்கு ஆதரவு, இந்தக்கட்சிக்கு ஆதரவுன்னு சொல்றீங்க, நான் நல்லத சொல்றேன், அது கசக்குது. உண்மையில் நான் யார் பக்கமும் இல்லன்னு உனக்கு தெரியும். ஆனாலும் உன் கோபம் இப்படி சொல்லி என்னை காயப்படுத்தலாம்னு நினைக்கிறே உன் விருப்பம் அதுவாக இருந்தால் இருந்துட்டு போகட்டும்” என்ற கோபால் சொல்ல ஆரம்பித்தார்.
”எடப்பாடி பழனிசாமியை ஈரோடு கிழக்கு தோல்வி கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்திருக்கு. தோல்வி அடைந்தாலும் ரெட்டை இலை, அது வாங்கிய வாக்குகள் அவருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் வாக்கு வித்தியாசத்தில் கோட்டை விட்டதும், சொந்தக்கட்சியில் இருந்து போன செந்தில்பாலாஜியின் வியூகத்தை முறியடிக்க அதிமுகவில் ஒருத்தர்கூட சிந்திக்க முடியலையான்னு கோபமாம். இரண்டு நாள் யாரையும் சந்திக்கவில்லை. இதேபோல் பொதுக்குழு தீர்ப்பு வந்தப்பின் கூட உற்சாகமாக இருந்த ஓபிஎஸ் அம்மாவின் மரணத்திற்கு பின்னால் உடைந்து போய் விட்டாராம். இப்போது வரை அறையை விட்டு வெளியே வரவில்லையாம். கட்சித்தலைவர்கள் கூட காண்டாக்ட் பண்ண முடியலையாம். அவர்களாக முடிவெடுத்துதான் பேட்டி தருகிறார்களாம்”. என்றார்.
”எடப்பாடி அடுத்து என்னதான் ஐடியா வச்சிருக்காராம்” என்று கமால்பாய் கேட்க, ”என்ன ஐடியா? அதுதான் ஜெயலலிதா எல்லாத்துக்கும் வழி காட்டிட்டு போயிருக்காங்களே அந்த பாதையை கையில் எடுக்க போகிறாராம். முதல் கட்டமாக விரைவில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் சென்று கட்சியை வலுப்படுத்த போகிறாராம், மக்களிடம் நேரடியாக திமுக ஆட்சியின் அலங்கோலங்களை பேசப்போகிறாராம். அது நடைபயணமாக கூட இருக்கலாம் என்கிறார்கள்”. என்றார் கோபால்ஜி
”அண்ணாமலைக்கூட ஏப்ரலில் பிரச்சார பயணம் போகிறாரே” என்று குமார் சொல்ல, ”ஆமாம் அண்ணாமலை பிரச்சார பயணத்தை முழுதுமாககவர் செய்ய அவர்கள் ஒரு டிஜிட்டல் தளத்தை ஆரம்பிக்க உள்ளனர். என்ன இருந்து என்ன அண்ணாமலை ரொம்ப பேசுறார், வாட்ச் விவகாரத்தை மீண்டும் ஊடகங்கள் கிளப்பும் அப்போது கட்சிக்குத்தான் சிக்கல் என்கிறார்கள் கட்சிக்காரர்கள். மறுபுறம் செந்தில்பாலாஜி–அண்ணாமலை தொடர்பை பிரச்சாரமாக கொண்டு போனால் என்ன, அண்ணாமலைக்கு பல தகவல்கள் செந்தில் பாலாஜி ஆட்கள் மூலமாகத்தான் போகுது என்ற தகவலை கொண்டு போனால் என்ன என்கிற யோசனையும் அதிமுக தரப்பில் உள்ளதாம். இதுமட்டுமல்ல அதிமுகவுக்குள் சில அதிரடிகளை எடப்பாடி செய்ய போகிறார். சசிகலா கும்பலுடன், திமுகவுடன் தொடர்பில் இருக்கும் ஒரு முக்கிய தலைகூட நீக்கப்படலாம் அல்லது வெளியேறலாம் என்கின்றனர். ஆனாலும் அதிமுக பலமாகத்தான் தற்போதைக்கு உள்ளது என்கின்றனர்”. என்றார் கோபால்.
”ஒரு முக்கிய தகவல் சொல்லட்டா? அரசு கேபிள் சத்தமில்லாமல் தனியார் கபளிகரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் பறிபோகிறது என்கிறார்கள் அதிகாரிகள். அரசு கேபிள் அரசின் துருப்புச் சீட்டு ஊடகங்களை மிரட்ட என்கிற குற்றச்சாட்டு எப்போதும் அனைத்து ஆட்சியிலும் உண்டு. ஆனால் அப்படி இருந்த அரசு கேபிள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது தெரியுமா? ஆரம்பத்தில் 77 லட்சமாக இருந்த அரசு கேபிள் அதற்கு பொறுப்புன்னு தாசில்தார் ரேஞ்சில் அதிகாரிகளை நியமித்தார்கள். ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் தாசில்தார் (அரசு கேபிள்) என்று ஒரு பதவி இப்போதும் உண்டு. அவர்கள் எனக்கென்ன என்று செயல்பட இப்ப இருக்கும் கேபிள் கனெக்ஷன் எவ்வளவு தெரியுமா வெறும் 22 லட்சம் தான். எஸ்சிவி, வி.கே, டிசிசிஎல் என 30 லட்சத்துக்கு மேல் கேபிள் இணைப்பு வைத்திருக்கும் சன், பாலிமர், நியூஸ் தமிழ் போக தற்போது குஜராத்தை சேர்ந்த ஜிடிபிஎல் என்கிற நிறுவனம் சத்தமில்லாமல் 7.5 லட்சம் கேபிள் இணைப்புகளை வாங்கியுள்ளது. 10 லட்சத்தை நோக்கி நகர்கிறது என்கிறார்கள்”. என்றார் கமால்பாய்.
”பரவாயில்லையே கமால்பாய் இவ்வளவு தகவல் உங்களுக்கு தெரியுதே”ன்னு கோபால், குமார்ஜி, போஸ் பாண்டி ஆச்சர்யத்துடன் கேட்க ”அட நம்ம சொந்தக்கார பய அந்த துறையில் இருக்காம்பா அவன் சொன்னது, போகிற போக்கில் அரசு கேபிளை இவர்களே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார்கள் போல, அந்த குஜராத் கம்பெனி யாருக்கு சொந்தம், குஜராத் ஆட்களுக்கா அல்லது ஏதாவது லூலு மால் போல கதையா என்பது மில்லியன் டாலர் கேள்வி விரைவில் அந்த உண்மையையும் கேட்டு சொல்கிறேன்” என்ற கமால் பாய்.
”இதுமட்டும் அல்ல தமிழகத்தில் தனியாரிடமிருந்த போக்குவரத்து கழகத்தை அரசுடைமையாக்கியவர் திமுக தலைவர் கருணாநிதி. இப்ப மறுபடியும் யூடர்ன் அடித்து போக்குவரத்து கழகத்தில் தனியார்மயம் நுழைகிறது. முதல்கட்டமாக 1000 பேருந்துகள் தனியார் மூலம் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் இடதுசாரி தொழிற்சங்கங்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். திராவிட அரசு, சமூக நீதின்னு சொல்லிகிட்டே இதுபோன்ற தனியார் மயமாக்கல், குடிசைப்பகுதி மக்களை சென்னையை விட்டு விரட்டுவது இடதுசாரிகள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன செய்ய போகிறார்கள் பார்ப்போம்” என்றார். ஆமாம்பா இன்னும் பல விஷயம் இருக்கு பல வேலைப்பளுவில் சந்திக்க முடியாமல் போகுது. இனி வாரம் திங்கட்கிழமை கட்டாயம் நாம சந்திக்கணும். முடிந்தால் 3 நாளைக்கு ஒருமுறை சந்திப்போம் இப்ப சபையை கலைப்போம்” என்று கிளம்பினார்.
“போறதுக்கு முன்னாடி உங்க கட்சி தகவல் ஒன்னு சொல்றேன். கேட்டுட்டு போய்யா என்று போஸ் பாண்டியை சீண்டினார் கோபால்.
“சொல்லுண்ணே”
“சின்னவர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு வந்ததில், பெரியவருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஒரு வருசம் முன்னாடியே அனுப்பியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன். இந்தியா முழுக்க தம்பியை பத்தி பேசறாங்க. இனிமே அரசு நிகழ்ச்சிகளை தம்பி தலைமையிலே நடத்த சொல்லுங்கன்னதும், அண்ணி கேப்புல, துணை முதல்வராக்கிடலாமேன்னு பிட்டு போட, விரைவில் ஒரு குட்டி முடிசூட்டு விழா நடக்க இருக்கு” என்று கடைசி தகவலை சொல்ல, அனைவரும் கிளம்பினர்.