சமீபத்தில் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்சியில் முக்கிய எதிர்க்கட்சிகளை அழைக்காமல் புறக்கணித்ததும், பின்னர் மேடையில் பேசும்போது காங்கிரசுடன் இணையாமல் பாஜகவை வீழ்த்த முடியாது என எதிர்க்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததும், ஒற்றுமையை காட்ட தைரியமில்லாமல் பல கட்சிகளை அழைக்காமல் அவர்களுக்கு அறிவுரை மட்டும் சொன்ன முதல்வரின் போக்கு அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில கட்சிகளை மட்டும் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கும் முதல்வருக்கு ஒற்றுமை குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்கிற வாதம் வைக்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். அந்த நேரங்களில் ஸ்டாலினுக்கு பெரிதும் துணை நின்றது இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், மம்தா பானர்ஜி போன்றோர். தமிழகத்தில் திமுக எனும் இயக்கம் பாசிச எதிர்ப்பு இயக்கம், சமூக நீதி இயக்கம் என ஸ்டாலின் அந்த நேரங்களில் மார்த்தட்டி வந்தார். அதற்கு ஏற்ப 2019 தேர்தல் நேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வீறு கொண்டு நின்றார். ராகுல் காந்தியை, காங்கிரஸ் தலைமை பற்றி யாருமே பேசாத நேரத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் முந்திக்கொண்டு சொன்னார்.
இந்திய அரசியலைப்பற்றிய மதிப்பீடு குறைவான பார்வை இது எனலாம். காங்கிரஸ் கேரளாவில் 20 இடங்களும், தமிழகத்தில் திமுக தயவால் 8 இடங்கள் தவிர பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறும் அளவுக்குக் கூட பெற முடியாமல் 52 எம்பிக்களுடன் சுருங்கியது. வேறு வழியில் சொன்னால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 19% மட்டுமே. இது காங்கிரஸுக்கு மிகப்பெரிய சறுக்கல். அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல் எதிலும் காங்கிரஸ் தோல்விமுகமே கண்டது.
இந்தியாவில் மிகப்பெரிய கட்சி என்கிற நிலையை காங்கிரஸ் இழந்துள்ளது. அதே நேரம் பாஜகவுக்கு மாற்றாக தென் இந்தியாவில் கேரளாவில் இடதுசாரிகள், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசாவில் பட்நாயக், மே.வங்கத்தில் மம்தா, பீஹாரில் லல்லு–நிதிஷ் கூட்டணி, மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா என உள்ளனர். உபியில் பிஎஸ்பி, எஸ்பி கட்சிகள் உள்ளன. இவர்கள் மட்டுமே 25% வாக்குகளை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். காங்கிரஸ் 19% வாக்குகளையும், பாஜக 37% வாக்குகளையும் பெற்றுள்ளது.
2021 தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என்று பார்த்தால் திமுகவின் முகம் மாறத்தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கும் போக்கை திமுக எடுத்து வருகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்தவரையில் சிறிய கட்சிகளுக்குக்கூட அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தார். அவர்களை போராட அனுமதித்தார். உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மற்ற கட்சிகள் இருந்தால்தான் பொது எதிரியை வீழ்த்த முடியும் என்பது அவருக்கு தெரியும்.
ஓட்டுகளின் எண்ணிக்கை வைத்து கட்சிகளை புறந்தள்ளாமல் கொள்கை வழியில் ஒன்றுபட்ட கூட்டணி என பொதுமக்களுக்கு மிகப்பெரிய உளவியல் ரீதியான பிம்பத்தை காட்டுவார். ஆனால் தற்போதுள்ள திமுகவும் அதன் தலைவர் ஸ்டலினும், புதிதாக முளைத்துள்ள சபரீசனும், உதயநிதியும், செந்தில் பாலாஜிக்களும் என்ன கருத்தை முதல்வர் மூளையில் திணிக்கிறார்கள்? நாம் தான் எல்லாம், பணமிருந்தால் எதையும் செய்யலாம் என பதிவு செய்கிறார்கள்.
கூட்டணிக்கட்சிகள் இணைந்து சமூக நீதி கூட்டணியாக உருவெடுத்தபோது கருணாநிதி வழியில் ஸ்டாலின் செல்கிறார் என இடதுசாரிகள், மதிமுக, காங்கிரஸ், விசிக, இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் கருதின. சிலர் சீட்டு தராவிட்டாலும் அதிமுக–பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று ஆதரவளித்தனர். அந்த நேரத்தில் தான் திமுக தன் வேலையை காட்டியது. மதிமுக, மமக,விசிக உள்ளிட்ட கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்தித்தது. இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இருங்க இல்லன்னா கிளம்புங்க என்பதுதான் அதன் அர்த்தம்.
சில நேரங்களில் சூழ்நிலை எங்கும் செல்ல விடாது. மக்கள் நலக்கூட்டணியின் கதி கண் முன்னால் வந்து போகும் அல்லவா? அதனால் கூட்டணிக்கட்சிகள் கிடைத்த இடத்தை சகித்துக்கொண்டு ஏற்றுக்கொண்டனர். அதன் பின் ஆரம்பித்த திமுகவின் ஆட்டம் தற்போது அடியாள் போல கூட்டணி கட்சிகளை பயன்படுத்துவதும், பின்னால் பாஜகவுடன் மறைமுகமாக கைகோர்த்துக்கொள்வதும் நடக்கிறது. இதை சமீப மாதங்களாக பார்த்து வருகிறோம். கூட்டணி என்ற ஒரு வரையறைக்குள் வர மாட்டோம் தொகுதி உடன்பாடு மட்டுமே என்று, தேர்தலுக்குப்பின் ஆளுங்கட்சிக்கு எதிராக துணிச்சலாக போராட்டங்களை நடத்தி வந்த இடதுசாரிகள் நீர்த்துப்போய் கூட்டணிக்கட்சியாக அல்ல திமுகவின் இடதுசாரி அணியாகவே மாறிப்போனதை பார்க்கிறோம்.
இதற்கு இடதுசாரி தலைவர்களில் ஒயிட் காலர் தலைவர்கள் வந்ததும், புரட்சிகர சிந்தனையற்ற சுயநலமிக்கவர்கள் தலைமை பதவிக்கு வந்தது மட்டுமா காரணம்? அல்ல கூட்டணிக்கட்சிகளை திமுக தலைமை பார்க்கின்ற பார்வை. உங்களுக்கு சீட்டுப்பிச்சை நாங்கள் போடுகிறோம், உங்களுக்கு சகாயம் செய்கிறோம் அதற்கு பதில் எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும், நாங்கள் சொல்லும் போராட்டத்தை நடத்த வேண்டும். அரசின் ஊழலை, முறைகேடுகளை, மக்கள் பிரச்சினைகளை பேசவே கூடாது அப்படி பேசுவதாக இருந்தால் அடையாளப்பூர்வ போராட்டம் ஒன்றை நடத்திவிட்டு போங்க என்பதுதானே அதன் அர்த்தம்.
இப்படி தனது சுயநலத்துக்காக கூட்டணிக்கட்சிகளை அதன் கொள்கைகளை முடக்குவது ஒருபக்கம் மறுபுறம் ஆளுநரை எதிர்ப்பதில் பயம், மோடி பிபிசி டாக்குமெண்ட்ரி வருகிறதா அதை போட பயம் (ஆனால் சிறுபான்மை காவலர் என்று பேச்சு) , மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பயம், காரியம் ஆவதற்காக கைகோர்ப்பது என தனது சுயதன்மையையும் திமுக இழக்கிறது. ஏதோ திமுக இப்போது மட்டும்தான் அப்படி செய்கிறது என்று சொல்லவரவில்லை. நேருவின் மகளே வருக எனவும், ரைட்மேன் இன் த ராங்க பார்ட்டி என காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டவர்கள் தான் திமுகவினர். ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை இருந்தது. இன்று அதுவும் இல்லை.
சமீபத்தில் தனது 70 வது பிறந்த நாளை தேசிய தலைவர்களை அழைத்து பாஜக அரசுக்கு எதிராக பெரிதாக அணிதிரட்டும் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டுவர போகும் விழாப்போல் படம் காட்ட திட்டமிட்ட முதல்வர் அதன்படி பேசவும் செய்தார். ஆனால் சொல் ஒன்று செயல் ஒன்று என்பதுபோல் அவரது பேச்சுக்கும் செயலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பதை சொல்லவும். இந்தியாவில் மோடி எதிர்ப்பில், பாஜகவை ஐடியாலஜிக்கலாக எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் இடதுசாரி தலைவர்கள், அடுத்து மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இவர்கள் அல்லாமல் எதிர்க்கட்சிகள் வரிசையில் பிஜு பட்நாயக், பாஜகவை கடுமையாக எதிர்க்கும் தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, பிஎஸ்பி, பஞ்சாபில் உள்ள கட்சிகள் என பல கட்சிகள் உள்ளன.
முதல்வர் பிறந்த நாளுக்கு இவர்கள் யாரையும் அழைக்கவில்லை. அழைக்கப்பட்டது காங்கிரஸ் தலைவர் கார்கே, எஸ்.பி தலைவர் அகிலேஷ், தேசிய மாநாட்டுக்கட்சி பரூக் அப்துல்லா, பீஹார் துணை முதல்வர் லல்லு மகன் தேஜஸ்வி மட்டுமே. அது அவர்கள் பிறந்த நாள் அவர்கள் இஷ்டம் நாம் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் இந்தக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எனக்கென்ன என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை சொன்னார். பாஜகவை வீழ்த்த வந்த சீரிய சிந்தனையாளர் போல் பேசியதால்தான் நாம் இதை எழுத தோன்றுகிறது. கேள்வி எழுப்பவும் நியாயம் இருக்கிறது.
அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது இதைத்தான், ..”தமிழ்நாட்டை போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்திய முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுத்து பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் காங்கிரஸ் இல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சிலரால் சொல்லப்படக்கூடிய வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரைசேராது.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்து கொள்கிறோம் என்று சொல்வதும், நடைமுறைக்கும் சரியாக வராது. அரசியல் கட்சிகள் எழுச்சி பெற வேண்டும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முறியடிக்க அரசியல் கட்சிகள் அவநம்பிக்கைகளை தாண்டி ஒன்றுபட வேண்டும். மூன்றாம் முன்னணி என்ற பேச்சு தேர்தலில் அர்த்தமற்றது. பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த எளிய தேர்தல் கணிதத்தை புரிந்துகொண்டு ஒற்றுமையாக நிற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பேசியுள்ளார்.
தன்னுடைய பிறந்த நாளுக்கு மோடி எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்களை அழைக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், மோடி எதிர்ப்பில் முன்னணியில் இருக்கும் சந்திரசேகர் ராவை அழைக்காமல், பிஎஸ்பி கட்சியினரை அழைக்காமல், பிஜு பட்நாயக்கை அழைக்காமல் இன்னும் பிற அழைக்காமல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தார்மீக அடிப்படை உண்டா? எச்சூரியும், டி.ராஜாவையும் அழைக்கவில்லை, சந்திரசேகர் ராவை அழைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு புத்தி சொல்கிறார் முதல்வர்.
பாஜகவை வீழ்த்த ஒன்றுபட வேண்டும் என்கிறார். காங்கிரஸ் இல்லாமல் கரைசேர முடியாது என்று இவர்களை புறக்கணித்து காங்கிரஸ் தலைவரை மேடையில் வைத்து சொல்கிறார் முதல்வர். இதை சொல்ல அவருக்கு தகுதி என்ன இருக்கிறது என்று மேற்கண்ட கட்சி தலைவர்கள் கேட்க வாய்ப்பிருக்கிறது அல்லவா? ஒரு பிறந்த நாள் கூட்டத்திற்கே பாகுபாடு பார்க்கும் நீங்கள் மோடி எதிர்ப்பில் பல சமரசங்களை செய்துக்கொள்ளும் நீங்கள் எப்படி அகில இந்திய அளவில் ஒற்றுமையை கட்ட முடியும். காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாத எதிர்க்கட்சிகளை இணைக்க உரிய சிறந்த வழியை தேடுவதை விட்டுவிட்டு காங்கிரஸ் இல்லாமல் கரை சேர முடியாது என்று பேச திமுகவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். மம்தாவுக்கோ, சந்திர சேகர் ராவுக்கோ, பிஜு பட்நாயக்குக்கோ, பினராயி விஜயனுக்கோ அவசியம் இல்லாதபோது இப்படி பேசுவது குறுகிய பார்வை அல்லவா?
காங்கிரஸ் கட்சியே கரைசேர முடியாமல் தடுமாறும்போது காங்கிரசுடன் இணையாமல் கரைசேர முடியாது என்று சொல்கிறார் முதல்வர். இதை எத்தனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளும். முதல்வர் ஸ்டாலின் 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு கொடுத்த அதே 9 தொகுதிகளை ஒதுக்குவேன் என்று சொல்ல முடியுமா?. தேர்தலுக்குப்பின் அணி சேர்ந்து பாஜகவுக்கு எதிராக ஒரு அரசை அமைக்க வாய்ப்பு இருக்கவும் செய்யலாம். இப்போதே அதை மறுப்பதும் குறுகிய அரசியல் பார்வை. அதேபோல் தேர்தலுக்கு பின் ஒருவேளை பாஜகவுக்கு ஆதரவு தேவைப்படுகிறது என்றால் திமுக தராது என்று திமுக தலைவர் ஸ்டாலினால் உறுதியாக கூற முடியுமா?. பாஜகவுக்கு எதிராக வெற்று பிரச்சாரம் செய்வதை விட்டு ஆளுகின்ற மாநில அரசு நடைமுறையிலும், கட்சி ரீதியில் கொள்கை ரீதியாகவும் பாஜகவை திமுகவால் எதிர்க்க முடியும் என்று சொல்ல முடியுமா? என்பது முக்கியமான கேள்வி.
தனது பிறந்தநாளில் குறிப்பிட்ட கட்சிகளை மட்டும் கூப்பிட்டு பிரதான பாஜக எதிர்ப்பு கட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு எதிர்க்கட்சி ஒற்றுமை பேசி பெருமைப்படுவது திமுக ஆதரவு ஊடகங்கள், முரசொலியில், ஐடிவிங்கில் போட்டு பிரதமர் வேட்பாளர், தேசிய தலைவராக உயர்கிறார் முதல்வர்களின் முதல்வர் ஸ்டாலின் என்று பெருமை பேச உதவுமே தவிர வேறு எதற்கும் இது பயன்படாது.
கடந்த 2019-ல் வென்ற 38 தொகுதிகளின் வெற்றியை தக்க வைக்க பாருங்கள். அதை நீர்த்துபோகச்செய்யும் வேலைகள் அதிகம் நடக்கிறது. அதை தவிர்க்க முயலுங்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. யதார்த்தம் வேறு, யாரோ எழுதி வைப்பதை பேசி எதையும் சாதிக்க முடியாது. வரலாற்று தலைவர்கள் தங்கள் அறிவார்ந்த அரசியல் நடவடிக்கைகளால் மட்டுமே உயர்ந்துள்ளனர். மேடைப்பேச்சுகளில் அல்ல.