ஒரு மாநிலத்தில் அமைதி நிலவுகிறது என்பதை எப்படி சொல்ல முடியும் என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பெயருக்கு ஏற்ற மாதிரி ஒழுங்காக இருக்க வேண்டும். இப்படி சரியாக இருந்தாலே 60 சதவிகித பிரச்சனைகள் தீர்ந்து விடும். சட்டம் ஒழுங்கை பராமரித்தல் ஒரு அரசின் அடிப்படை கடமை. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மாநில அரசுகள், காவல் துறையை தங்கள் கூலிப் படைகளாகவே பயன்படுத்தி வருகின்றன. காவல் துறை மீதான தங்களின் கட்டுப்பாடு கையை விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவே காவல் துறையில் சீர்திருத்தங்களை எந்த கட்சியும் ஆதரிப்பதில்லை. சீர்திருத்தம் நடக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கின்றன அரசியல் கட்சிகள்.
காவல்துறை சீர்திருத்தம் சம்பந்தமாக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காவல்துறையினை அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடியவில்லை. 2006ம் ஆண்டு ஓய்வு பெற்ற டிஜிபி பிரகாஷ் சிங் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது. அதில் அமல்படுத்தப்பட்டவை வெகு சிலவே.
அதில் ஒன்றுதான் காவல் துறை தலைமை இயக்குநருக்கான பதவிக்கு 2 ஆண்டுகள் பணி உத்தரவாதம். அதாவது ஒரு காவல்துறை அதிகாரி ஒய்வு பெறவிருக்கிறார் என்றால் அவருக்கு பதவி உயர்வினைக் கொடுத்து மேலும் இரண்டு வருடங்கள் அவரைத் தக்க வைத்துக் கொள்ள இந்த சீர்திருத்தினைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார்கள். அதற்கு ஒரு உதாரணம், ஓய்வு பெறும் நாளில் ராமானுஜத்தை டிஜிபியாக நியமித்து 2 ஆண்டுகள் சட்டவிரோத பணி நீட்டிப்பு வழங்கினார் ஜெயலலிதா.
2006ம் ஆண்டு உச்சநீதிமன்ற பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸ் தலைமையில் கமிட்டி ஒன்றை 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு மாநிலங்கள் எந்த ஒத்துழைப்பையும் நல்காமல் அழைக்கழித்தன. 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்குப் பின் மீண்டும் ஒருமுறை அது போல நேராமல் இருக்க 1861ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல் சட்டமே, இன்று வரை இந்தியா முழுமைக்கும் காவல்துறையை நிர்வகிக்க பயன்படுத்தப் படுகிறது. .பிரிட்டிஷ் அரசாங்கம் நம்முடைய இந்தியர்களை அடக்குவதற்கு போடப்பட்ட சட்டங்கள் அவை. இப்போது அதே சட்டத்தைக் கொண்டு சொந்த நாட்டினரை அடக்குவதற்கு பயன்படுத்துவதில் இருந்தே அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆள்வதற்காக உருவாக்கிய ஒரு அமைப்பு இன்றும் நம்மை வழிநடத்துகிறது என்பதை விட ஒரு அவமானம் இருக்க முடியுமா ?
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், பிரிட்டிஷ் காலத்து அடிமை மனநிலையிலேயே காவல் துறை தொடர்வதை விரும்புகின்றன. தமிழகமும் இதற்கு விதிவலக்கல்ல. தமிழகத்தை நீண்ட காலம் ஆண்ட இரு திராவிட கட்சிகளும், காவல் துறையை தங்கள் கைப்பாவையாக வைத்திருப்பதையே விரும்புகின்றன.
அரசியல் தலையீடுகள் இல்லாமல், இங்கே ஒரு உதவி ஆய்வாளர் நியமனம் கூட நடப்பதில்லை. எண்பதுகள் வரை பெருமளவில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருந்தது எனலாம். ஆனால், ஆண்டுகள் போகப் போக, அனைத்து நியமனங்களும் அரசியல் தலையீடுகளால் மட்டுமே நிகழ்கின்றன என்பதுதான் வேதனை. குறிப்பாக காவல் துறை நியமனங்களில் அரசியல் தலையீடு தொடங்கியதே திமுக ஆட்சியில்தான். திமுகவிலிருந்து உதித்த அதிமுக, அதை பின்பற்றத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் காவல்துறை ஆளுங்கட்சியின் தலையீட்டால் எத்தனை சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது என்பதை எழுதினால் தனி புத்தகம் தான் பதிப்பிக்க வேண்டி வரும். ஆளுங்கட்சியின் ஆதரவோடு சில காவல்துறையினர் இஷ்டத்துக்கு ஆடி வருகின்றனர். தமிழகம் சொந்த வீட்டு சொத்து என்று ஆளுங்கட்சி எப்போதும் நினைக்கும். அதைத் தட்டிக் கேட்பதற்குத் தான் காவல்துறையும், நீதித்துறையும் இயங்குகிறது. ஆனால் இங்கு காவல்துறையும் தமிழ்நாட்டை ‘என் அப்பன் வீட்டு சொத்து’ என்பது போல நடத்திக் கொண்டிருக்கிறது. நடப்பதைப் பார்க்கும்போது ஒரு சாமானியனாக ரத்தம் கொதிப்பதைத் தடுக்க முடியவில்லை. ஏற்கனவே இதே ‘கசடற’ தொடரில் இது குறித்து பேசியிருக்கிறோம். இப்போது மற்றுமொரு அதிகாரி குறித்து சொல்ல வேண்டியிருக்கிறது.
அரசியல் தலையீடுகள் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு உதாரணமாக, திருச்சியில் காவல் துறை ஆணையராக இருக்கும் சத்தியப்பிரியா ஐபிஎஸ் அதிகாரி பற்றி சொல்ல வேண்டும். இவர் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருந்தும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி அவருக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுகள், டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகிய அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் இவர்கள் சத்யபிரியாவுக்கு பதவி உயர்வு அளித்துள்ளனர். இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுவதற்கு தகுதியானவர் சத்யப்பிரியா. இவரைப்போன்ற அதிகாரிகளை பதவி உயர்வு அளித்து, திருச்சி காவல் ஆணையராக நியமித்து வசூலை குவிக்க ஒரு நிர்வாகம் அனுமதிக்கிறதென்றால், நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு நாம் ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருமா வராதா ?
சத்யப்பிரியா மீதுள்ள குற்றச்சாட்டுகளில் விசாரணை நடைபெற்று, அவை நிரூபிக்கப்பட்ட நிலையிலேயும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் 2011 ஆட்சி காலத்தில், அரசின் அனுமதி இல்லாமலேயே, சூடான் நாட்டின் அமைதிப் படையில் பங்கேற்ற குற்றத்துக்காக சத்யப்பிரியா பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் காவலர் பயிற்சிக் கல்லூரியின் டிஐஜியாக 2020ம் ஆண்டு பணியாற்றினார். பின்னர் காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றினார். காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றியபோது இவர் வசூலை அள்ளிக் குவித்ததாக புகார் உண்டு. ஆனால் அந்த புகார்கள் விசாரிக்கப்படாததாலும், நிரூபிக்கப்படாததாலும் அதை சத்யப்பிரியாவுக்கு எதிராக நிறுவ முடியாது. நிரூபிக்கப்பட்ட புகார்கள் என்னவென்று பார்ப்போம்.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் ஆய்வாளராக பணியாற்றும் ஒருவர் சத்யப்பிரியா மீது விசாரணை நடந்தபோது வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான் பல ஆண்டுகளாக, காவல் துறையில் வாகனங்கள் அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளேன். ஏறக்குறைய அத்தனை ஐபிஎஸ் அதிகாரிகளுமே, ஆளானார்கள். ஏனைய அதிகாரிகளும் வாகனங்களை வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்துகிறார்கள்தான். சத்யப்பிரியா செய்த துஷ்பிரயோகங்களை கேட்டால் தலை சுற்றும். எப்படி இந்த அதிகாரி இன்னும் காவல் அதிகாரியாக பணியில் தொடர்கிறார் என்று தோன்றும்.
அந்த விபரங்களை பார்ப்பதற்கு முன், சத்தியப்பிரியா திருச்சி கமிஷனரான பின்னர், ABP நாடு சேனலுக்கு அவரைப் பற்றி அவரே அளித்த பேட்டியை பார்த்து விடுங்கள்.
சத்தியப்ரியா குறித்து ஆய்வாளர் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் இது.
“நான் மோட்டார் வாகனப் பிரிவின் முழு பொறுப்பு அதிகாரியாக பணியில் இருந்தேன். ஜூன் 2019ம் வருடம் சத்தியப்பிரியா டிஐஜியாக பணியில் சேர்ந்ததும் அவரை மரியாதை நிமித்தமாக பார்க்க சென்றேன். அப்போது அவர் பயிற்சி கல்லூரியில் உள்ள வாகனங்கள் மற்றும் ஓட்டுனர் விபரங்களை கேட்டார். அவர் உத்தரவின் பேரில் கீழ்கண்டவை நடைபெற்றன.
Tn 09 G 2792 Hero Extreme மோட்டார் சைக்கிள், TN 09 G 2746 Hero Super Splendor மற்றும் TN 09 G 2748 Hero Super Splendour ஆகிய மூன்று இரு சக்கர வாகனங்களும் திருமதி சத்தியப்பிரியா அவர்களின் வீட்டில் சமையல் வேலை, வீடு துடைக்கும் வேலை, மற்றும் டிரைவர் மருதுபாண்டி ஆகியோர் பயன்படுத்த டிஐஜியின் உத்தரவின் பேரில் நான் அனுப்பி வைத்தேன்.
TN 09 G 2791 என்ற பொலீரொ அரசு வாகனம் சத்தியப்பிரியாவின் கணவரது பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டது. அவரது கணவரின் வாகனத்தை ஓட்டுவதற்கு காவலர் 5915 சிலம்பரசன் மற்றும் விழுப்புரம், மயிலம் காவலர் பயிற்சிப் பள்ளியில் இருந்து சுழற்சி முறையில் வரும் ஓட்டுனர்களும் சேர்ந்து ஓட்டினார்கள்.
அரசு வாகனம் வெள்ளை நிற TN 09 G 2796 என்ற வெள்ளை நிற பொலீரோ ஜீப்பை சத்தியப்பிரியா அவர்களின் மகன் கல்லூரி சென்று வருவதற்காக டிஐஜியின் உத்தரவின் பேரில் நான் அனுப்பி வைத்தேன். டிஐஜியின் மகன் கேளம்பாக்கத்தில் இருந்த விஐடி கல்லூரியில் படித்து வந்தார். டிஐஜியின் வீடு உள்ள திருவான்மியூரில் இருந்து கேளம்பாக்கம் சென்று திரும்ப இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தை ஓட்ட காவலர் மருதுபாண்டி கா 6163, ஜோஷ்வா காவலர் 2486 ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர்.
டிஐஜியின் கணவர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் மாதந்தோறும் 200 லிட்டர் எரிபொருளை அவர்கள் பயன்படுத்திய வாகனங்களுக்காக உபயோகித்தனர்.
TN 23 G 1357 என்ற எண்ணுள்ள பச்சை நிற பொலீரோ வாகனம் வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வருக்காக ஒதுக்கப்பட்டது. டிஐஜியின் உத்தரவுப்படி இந்த வாகனம் வேலூரிலிருந்து பெறப்பட்டு டிஐஜியின் சகோதரி வீடு உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள வீட்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவர் அந்த வாகனம் சரியில்லை என்று சொல்லி விட்டதால், டிஐஜி உத்தரவுப்படி TN 22 G 0891 என்ற டாடா க்ராண்ட் வாகனத்தை அனுப்பினேன். இதற்கு மாதம் 200 லிட்டர் எரிபொருள் செலவாகும்.
டிஐஜி வீட்டில் சமையல் செய்வதற்கும், பெருக்கி சுத்தம் செய்வதற்கும் பெண் காவலர் 45388 மற்றும் பெண் காவலர் 39277 ரோஸ்மேரி ஆகியோர் ஆயுதப்படையில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வேலைகளை முடித்து டிஐஜியின் வீடு உள்ள திருவான்மியூரில் இருந்து அவர்கள் வீடு திரும்புவதற்காக TN 22 G 0893 என்ற வாகனம் பயன்படுத்தப்பட்டது. அதற்கு மாதந்தோறும் 125 லிட்டர் வரை எரிபொருள் செலவானது. காவலர் 8149 என்பவர் இதன் ஓட்டுனர்.
டிஐஜி வீட்டில் வேலை செய்த காவலர் 6163 மருதுபாண்டி, டிஐஜி வீட்டில் வண்டி ஓட்ட விருப்பம் இல்லைஎன்பதால், என்னிடம் அந்த காவலருக்கு கவுன்சலிங் செய்யச் சொன்னார். அதன்படி கவுன்சலிங் செய்து, அவரை சமாதானப்படுத்த TN 09 G 2792 Hero Splendour Extream என்ற அரசு பைக்கை டிஐஜி உத்தரவுப்படி கொடுத்தேன். அதில் சமாதானமடைந்த மருதுபாண்டி, தொடர்ந்து டிஐஜி வீட்டில் வேலை செய்தார்.
டிஐஜி ருப்படைந்து தன்னால் அந்த வேலைகளை செய்ய முடியாது என்று கூறி திரும்ப காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வந்து விட்டார்.
அடுத்த நாள், டிஐஜி சத்தியப்பிரியா சிலம்பரசனை கடுமையாக கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி எந்த அலுவலும் கொடுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்து, அவரை சிறப்புக் காவல் படைக்கு மாற்றி விட்டார். சிலம்பரசனுக்கு பதிலாக காவலர் 7863 பிரபாகரன் என்பவரை அனுப்ப முயற்சித்தபோது, அவர் துணி துவைக்க மாட்டேன் என மறுக்க, அவரும் சிறப்புக் காவல் படைக்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
டிஐஜி சத்தியப்பிரியா வீட்டில் மொத்தம் 12 அரசு வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன. சத்தியப்பிரியா மனித உரிமை ஆணையத்திலும், தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி பேராவூரணியிலும் பணியாற்றியபோது, அவருக்கு TN 22 G 0861 என்ற Tata Sumo Victa வாகனம் வழங்கப்பட்டது. அந்த வாகனம் சத்தியப்பிரியாவின் மகன் இருக்கும்போது விபத்து நடந்து சேதத்துக்குள்ளானது. முறைகேடாக பயன்படுத்தப்பட்டு அந்த வாகனம் விபத்துக்கு உள்ளானதால், அதை ஓட்டிய காவலர் 7517 விக்டர் பெலிக்ஸ் வழக்கு பதிவு செய்யாமல், வடபழனி அருகிலுள்ள East West Workshopல் பழுது பார்க்குமாறு டிஐஜியால் பணிக்கப்பட்டார். வாகனத்தை சரி செய்ய 1.32 லட்சம் செலவானது. டிஐஜி உத்தரவின்படி Facility Fund மற்றும் Welfare Fundல் இருந்து அந்த ரிப்பேருக்கான தொகை செலவிடப்பட்டது.”
இது ஆய்வாளர் வாக்குமூலம். ஒரு உயர் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலம். இதை விசாரணை செய்த உயர் அதிகாரி, சத்தியப்பிரியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை அளித்துள்ளார். இந்த விசாரணை டிஜிபிக்கு அனுப்பப்பட்டது. காவல் துறை இயக்குநர் என்ற முறையில் டிஜிபி சைலேந்திரபாபு சத்தியப்பிரியாவுக்கு பதவி உயர்வு அளிக்கக்கூடாது என்று பரிந்துரைத்திருக்க வேண்டும்.
ஆனால் சைலேந்திரபாபு என்ன காரணத்தினாலோ, சத்தியப்பிரியா மீதான குற்றச்சாட்டுகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்று பரிந்துரைத்து, அவருக்கு ஐஜியாக பதவி உயர்வு அளித்து, திருச்சி கமிஷனராக நியமித்து, வசூலை அள்ளிக் குவிக்கவும் உதவியிருக்கிறார். சத்தியப்ரியா பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவரைப் பற்றி வாக்குமூலம் அளித்த ஆய்வாளர் பழிவாங்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு பணீந்திர ரெட்டியும், உதயச்சந்திரனும் துணை போயிருக்கிறார்கள். சத்தியபிரியாவின் குற்றங்கள் இத்தோடு முடியவில்லை.
12 செப்டம்பர் 2021 அன்று, சத்தியப்பிரியாவின் மகன், கிழக்கு கடற்கறைச் சாலையில், அக்கரை அருகே, குடித்து விட்டு வாகனம் ஓட்டி, ஒருவரை கொன்றுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 308, மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 184, 185 மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நேர்ந்து, கையும் களவுமாக பிடிபட்டும், குற்றவாளி என்ற பத்திக்கு நேராக “TN 01 BK 0984 என்ற வாகனத்தின் ஓட்டுனர்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினார் என்றால், அந்த இடத்திலேயே ஊதச் சொல்லி சோதனை செய்வார்கள். அல்லது மருத்துவமனை அழைத்துச் சென்று ரத்தப் பரிசோதனை செய்வார்கள். இது இல்லையென்றால், குடித்து விட்டு, அல்லது போதையில் வாகனம் ஓட்டுவதற்கான பிரிவு 185 பயன்படுத்தப்படாது.
இப்படி இருக்கையில், ஓட்டுனரின் பெயர் என்ன என எப்.ஐ.ஆர் போட்ட அதிகாரிகளுக்கு தெரியாதா ? சத்தியப்பிரியா நேரடியாக சென்று, தனது மகனை, கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.
ஒரு மரணம் நிகழ்ந்ததாலேயே இந்த எப்.ஐ.ஆராவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இல்லையென்றால் எப்.ஐ.ஆரே பதிவு செய்யப்பட்டிருக்காது.
இப்படிப்பட்ட அதிகாரியால், எந்தத் தடையுமின்றி பதவி உயர்வுகளை பெற்று நல்ல பதவியில் அமர்ந்து, மாமூலும் வசூல் செய்ய முடிகிறதென்றால், தமிழக காவல் துறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை பாருங்கள்.
சத்தியப்பிரியாவிடம் யாராவது எஸ்பியோ, கூடுதல் எஸ்பியோ பேசினால், அவரை லைனில் வைத்துக் கொண்டே, “கொஞ்சம் இருங்க. சபரீசன் இன்னொரு காலில் வருகிறார். பேசிட்டு வர்றேன்” என்று லைனை கட் பண்ணி விடுவார். ஒரு மணி நேரம் கழித்து, அதே அதிகாரியை அழைத்து, “சபரீசன் தான் 40 மினிட்ஸ்பேசிட்டு இருந்தாரு. நீங்க சொல்லுங்க” என்று சொன்னால் மறுபுறத்தில் இருக்கும் அதிகாரிக்கு எப்படி இருக்கும். பெரிய இடம் போல என்று கூடுதலாக சத்தியப்பிரியாவைப் பார்த்து அஞ்சுவாரா மாட்டாரா ?
ஆனால், இது சபரீசனுக்கே தெரியாது என்பதுதான் விசேசம். இந்தக் கட்டுரையை வாசித்தபிறகு அவருக்கு யாரேனும் சொல்வார்கள் என நினைக்கிறேன். சத்தியப்பிரியா பதவி உயர்வு பெற்றதற்கு முழுக்க முழுக்க காரணம், 1) சைலேந்திர பாபு, 2) பணீந்திர ரெட்டி, 3) உதயச்சந்திரன் ஆகிய மூவரே.
வழக்கம் போல இது எதுவுமே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஸ்டாலினுக்கு தெரிந்தால் தமிழகக் காவல்துறை ஏன் இப்படி சீர்கெட்டு இருக்கப்போகிறது?
காவல்துறையில் இலஞ்சம் , அதிகார துஷ்பிரயோகம், விசாரணையில் அடிப்பது எல்லாம் உண்டு. இது பொதுமக்களுக்கு பழகிய ஒன்று என்பதால் இது குறித்த செய்திகள் வருகிறபோது இது தெரியாதா என்கிற மனநிலை வரும். ஆனால் இவையெல்லாம் கடந்து காவல்துறை சிலவற்றிற்கு கட்டுப்பட்டது. ஆட்சியாளர்கள் சில சமயங்களில் கேட்கும் கேள்விக்கு அஞ்சக்கூடியது காவல்துறை. ஆட்சியாளர்கள் காவல்துறையை தங்களுக்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ள வேண்டியாவது சில கேள்விகளைக் கேட்பார்கள். கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் இங்கு காவல்துறையின் ல அதிகாரிகள் யாருக்கும் கட்டுப்படவும் அச்சப்படவும் நினைப்பதில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா? ஸ்டாலின் முதல்வராக ஆட்சி செய்கிறார் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறைக்குத் தெரியும் தங்களை ஆட்சி செய்வது ஸ்டாலின் அல்ல, அவரைச் சுற்றியுள்ள கூட்டம் என்று. அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று இவர்களுக்குத் தெரியும்.
இது எந்தளவுக்கு ஆபத்தாக மாறப்போகிறது என்பதை பார்க்க வேண்டிவருமே என்று உண்மையில் வருத்தமும், கோபமும் அடைகிறேன். அதனால், என் ஆதங்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.