”வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு இனி காபி டீ தவிர்ப்போம், மோர் குடிப்போம். விலங்குகள், பறவைகளுக்கு வீட்டு வாசலில் மொட்டை மாடியில் தண்ணீர் வைப்போம்” என்றபடி வந்து அமர்ந்தார் கோபால்.
“போஸ்பாண்டி, கமால்பாய், குமார்ஜி நேரா விஷயத்துக்கு போய்டுவோம் ஏன்னா நாம ரொம்ப வளவளன்னு பேசுறோம்னு எல்லோரும் திட்றாங்க அதனால பேச்சை குறைப்போம் இந்த வாரம் என்ன ஸ்பெஷல்” என்று ஆரம்பித்தார் கோபால்.
”ஆன்லைன் ரம்மிதான், அதை ஒட்டி வேறு சில விஷயங்களும் வெளியில வந்துருக்கு அதுதான் ஹைலைட்” என்றார் போஸ்பாண்டி. “ஆன்லைன் ரம்மி பில்ல ஆளுநர் திருப்பி அனுப்பிட்டாருன்னு மட்டுமே பேசுறாங்க அவர் கேட்ட விஷயங்களை பற்றி யாருமே பேச மாட்டேங்கிறாங்களே”ன்னு புகுந்தார் கமால்பாய். “44 பேர் இறந்துபோனார்களே அது பற்றி பேசுங்களேன்”னு கோபமாக புகுந்தார் போஸ்பாண்டி.
”போஸ் உணர்ச்சி வசப்பட்டு விஷயத்தை அணுகுவதே உங்க ஆட்கள் வேலையா போச்சு, அதோடு மற்றவர்களையும் சிந்திக்க விடுவதில்லை. 44 பேர் இறந்தது யாருக்கும் மகிழ்ச்சியா இல்லை” என்றார் குமார்ஜி. போஸ் ஏதோ பேசப்போக இடைமறித்த கமால் பாய் “44 ஆட்கள் செத்துட்டாங்கன்னு சொல்கிறாயே டாஸ்மாக் கடை திறந்து அதில் குடிக்கும் மாணவர்கள், இளம் வயது ஆட்கள் பாதிக்கப்படுகின்றனர், குடும்ப சண்டைகள் கொலையில் முடிகிறது, பல வன்முறைக்கு மது காரணமாக இருக்கு, குடிச்சு குடிச்சே பலர் செத்து போகிறார்கள், குடும்ப வறுமைக்கு முக்கிய காரணமாக டாஸ்மாக் இருக்கு அதை மூடச்சொல்லலாமே” என்று கேட்டார்.
“இப்படித்தான் எடக்கு மொடக்கா கேள்வி கேட்டு வாயடைக்க வைப்பீங்க” என்றார் போஸ் கோபமாக. ”உன்னை வாயடைக்க வைத்து நாங்கள் என்ன செய்ய போகிறோம். உங்கள் ஆட்கள் 44 பேர் என்று அக்கறையாக பேசுகிறார்களே அந்த அக்கறையை இதில் ஏன் காண்பிப்பதில்லைன்னு சுட்டிக்காட்டத்தான் கேட்கிறேன்” என்றார் கோபால். ”அதெப்படி டாஸ்மாக் கடையை மூடிடுவாங்கலா? அப்புறம் டி.ஆர்.பாலு, அண்ணியார் என சாராய பேக்டரி சப்ளை வருமானம் பாதிக்கும், இதுபோக அண்ணியாரின் ஸ்ப்ரிங் வாட்டர் பாட்டில் சப்ளையும் பாதிக்கும் அதையெல்லாம் யார் ஈடுகட்டுவது. தமிழ் மக்கள் குடும்பம் அழிஞ்சா என்ன நமக்கு சேரவேண்டியது வருதான்னுதானே பார்ப்பாங்க” என்று கோபமாக சொன்னார் குமார்ஜி.
”டாஸ்மாக் மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் நூற்றுக்கணக்கானோர் கும்பல் கும்பலா செய்துபோவாங்க பரவாயில்லையா” என்று கொக்கி போட்டார் போஸ் பாண்டி. ”ஆமாம்பா இந்த சிக்கல் வேற இருக்கு”ன்னு கமால்பாய் தடுமாற, ”பாய் என்ன பாய் நீங்களும் அவங்க சொல்கிற பேய்க்கதைய நம்புறீங்க, டாஸ்மாக்ல தான் கொள்ளை லாபம் அடிக்கிறாங்க, இதில் கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல், இதற்கு சாராயக்கடையும், கள்ளுக்கடையும் திறந்துட்டு போங்க, குடிக்கிறவன் குறைஞ்ச செலவுல குடிப்பான், உடம்பும் கெடாது. பனையேறி பிழைக்கும் மக்கள் பிழைப்பும் ஓடும்.
இதுலயும் திமுக கொள்ளை லாபம் சம்பாதிக்குது. பியர் மற்றும் விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளை மொத்தம் 18 நிறுவனங்கள் வழங்குது.
என்ரிகா என்டர்பிரைசஸ், மோகன் ப்ரூவரீஸ் மற்றும் டிஸ்டில்லரிஸ், ஷிவா டிஸ்டில்லரிஸ், எம்பீ டிஸ்டில்லரீஸ், சதர்ன் அக்ரிப்யூரேன் இண்டஸ்ட்ரீஸ், மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ், அக்கார்ட் ப்ரூவரீஸ் மற்றும் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ், கல்ஸ் டிஸ்டில்லரீஸ், கோல்டன் வாட்ஸ், கல்ஸ் பீவரேஜஸ், யுனைட்டட் ப்ரூவரீஸ்,அப்போல்லோ டிஸ்டில்லரீஸ், அக்கார்ட் ப்ரூவரீஸ் மற்றும் டிஸ்டில்லரீஸ், ஆகிய 15 நிறுவனங்கள்தான் டாஸ்மாக்குக்கு மொத்தமா மதுவகைகளை சப்ளை செய்யுது.
இதுல எஸ்.என்.ஜே மற்றும் கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கு மட்டும் 45 சதவிகித ஆர்டரை டாஸ்மாக் வழங்குது. எந்த நிறுவனங்களுக்கு எத்தனை சதவிகிதம் மது ஆணை வழங்கப்படுதுன்னு தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டதுக்கு டாஸ்மாக் நிறுவனம் தொழில் ரகசியங்களை வெளியிட முடியாதுன்னு மறுத்துடுச்சு.
எஸ்.என்.ஜே நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயமுருகன் கலைஞரின் தயாரிப்பில் உளியின் ஓசை மற்றும் பெண் சிங்கம் படத்தை தயாரிச்சதுக்காக லைசென்ஸ் வழங்கப்பட்டவர். கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், திமுக குடும்பத்துக்கு நெருக்கமான வாசுதேவன் என்பவருக்கு சொந்தமானது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு 45 சதவிகித ஆர்டர் வழங்குவது மட்டுமில்லாம, இரவு நேரங்களில், டாஸ்மாக் கணக்கில் வராம நேரடியா மது ஆலையிலிருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளும் இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்துதான் எடுக்கப்படுகின்றன.
திமுக குடும்பத்துக்கு நெருக்கமான பெரும் புள்ளி ஒருத்தர் இதையெல்லாம் கவனிச்சிக்குறார். அது தெரியுமா ?” என்று பாயிண்ட புடிச்சார் குமார்ஜி.
“நல்லா சொன்ன குமார், ஆனா இதையெல்லாம் யாரும் கேட்கவும் மாட்டாங்க, இவங்க செய்யவும் மாட்டாங்க ஏன்னா இவர்கள் உதட்டில் தான் தமிழக மக்கள், தமிழ் எல்லாம். மற்றபடி குடும்ப வருமானம் முக்கியம்” என்றார் கோபால். ”சரி இப்ப பாயிண்டுக்கு வருவோம், இவர்கள் அமைத்த ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆன்லைன் ரம்மி குழு பற்றி பேசுவோம். சந்துரு வளைச்சு வளைச்சு அரசியல்வாதிபோல் பேட்டி கொடுக்கிறார், ஆனால் பாயிண்ட் தான் இல்ல. போன ஆட்சியில் ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்துக்கு ஆளுநர் உடனே கையெழுத்து போட்டாரு, ஆனா இப்ப நாங்க அதே அம்சத்துடன் அனுப்பிய மசோதாக்கு கையெழுத்து போடாமல் இரட்டை வேஷம் போடுகிறார் என்கிறார்” என்றார் கோபால்.
”ஆமா அன்னைக்கு உடனே கையெழுத்து போட முடிஞ்சது இப்ப அதே மசோதாவை அனுப்பினால் கையெழுத்து போடலைன்னா என்ன அர்த்தம் இரட்டை வேஷம் தானே பதில் சொல்லுங்க” என்று போஸ்பாண்டி ஆவேசமானார். ”ஏம்பா ’பாயிண்ட் போஸ்’, நீதியரசர் மாதிரி நல்லாதான் கேட்கிற, அன்னைக்கு அனுப்பின மசோதா என்ன ஆச்சு? சொல்லு”ன்னு கேட்டார் கோபால். ”அதைத்தான் செல்லாது மாத்தி வேற மாதிரி கொண்டு வாங்கன்னு கோர்ட்டு சொல்லிச்சுல்ல, அப்படின்னா என்ன அர்த்தம் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை இருக்குன்னு கோர்ட்டே சொல்லிடுச்சுல்ல ஆளுநர் மட்டும் மாநில அரசுக்கு அதிகாரமில்லன்னு சொல்றாரு”ன்னு மீண்டும் கோபமானார் போஸ் பாண்டி.
”பாண்டி முரசொலி படிச்சியா? நல்லாதான் பாயிண்டா பேசுற ஆனா உன் பேஸ்மெண்ட் வீக்கா இருக்கே, கோர்ட் மாற்றி வேறு மாதிரி கொண்டுவாங்கன்னு சொன்னது, தடைச்சட்டமா கொண்டு வராதீங்க, நெறிப்படுத்தும் சட்டமாக (ரெகுலேஷன் ஆக்டாக) கொண்டு வாங்கன்னு அர்த்ததில் சொல்லுச்சு. ஆனால் நீங்க அதே மசோதாவ மறுபடியும் அனுப்பிட்டு ஆளுநரை கையெழுத்து போடுன்னா அவர் எப்படி போடுவார். தடை மசோதான்னு கொண்டுபோனால் மீண்டும் ஆன்லைன் வியாபாரிகள் கோர்ட்டுல தடை வாங்கிடுவாங்க, இதுதானே கர்நாடகாவுல, கேரளாவுல, தெலங்கானாவுல நடந்தது. இப்ப சொல்லு ஆளுநர் கேட்டதில் என்ன தப்பு?” என்றார் கோபால்.
”அண்ணே உனக்கு புரியலையா இவர்கள் நோக்கமே அதுதான், ஆன்லைன் தடை மசோதா கொண்டு வந்தோம், மீண்டும் கோர்ட் தடை போட்டுடுச்சு நாங்க என்ன பண்றதுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முயற்சி பண்ணாங்க ஆனால் அந்த ஆளுநர் விளக்கம் கேட்டவுடன் குதிக்கிறார்கள்”. என்றார் குமார்ஜி.
”ஆமா குமார் பாயிண்ட புடிச்சிட்ட, இவர்கள் நோக்கம் இதுதான். லாட்டரி மார்ட்டின் இவர்கள் குடும்ப நண்பர், அவரது மருமகன் அர்ஜுன் இப்ப மருமகன் – மகனுக்கு இணைப்பு பாலம். தேர்தல் வியூகம் வகுக்கும் மருமகனின் பெனின்சுலா நிர்வாகி. இவர்கள் குடும்பமே கள்ள லாட்டரிக்கு பேர் போனவர்கள் இவர்கள் தான் இதன் பின்னணியிலும் இருக்கிறார்கள் என்கிறார்கள்”. என்றார் கமால்பாய்.
”அப்படின்னா எங்களுக்கு உண்மையில் மக்கள் மேல அக்கறை இல்லையா”ன்னு போஸ் பாண்டி கேட்க ”அக்கறை இல்லன்னு சொல்ல மாட்டேன், ஆனால் அதற்கு ஏற்ற அறிவில்லைன்னு சொல்வேன். இவர்கள் நோக்கம் கவர்னர் எதிர்ப்பு மட்டுமே, உண்மையில் அக்கறை இருக்குமானால் நான் சில கேள்விகள் கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லு பாண்டி” என்றார் கோபால். “கேளுங்கள் சொல்கிறேன்” என்று கோபமாக போஸ்பாண்டி சொல்ல, “இதுதான்யா உங்க கிட்ட உள்ள பிரச்சினை. பிரச்சினை பற்றி பேசி உங்கள் தலைமை செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் கோபமாயிடுவீங்க.
கண்டபடி ட்வீட் போடுவீங்க. ஒரு ஆளு ராஜ்யசபா எம்பின்னு திரியுறாரு, புதுக்கோட்டை அப்துல்லான்னு பேரு. ஐந்து வேளை நம்ம கமால் பாய் தொழுகிறாரா? தெரியல. குரான், சூரா, கலிமா எல்லாம் தெரியுமான்னு தெரியல”. ஆனால் ”பீச்சுக்கு போனால் கையில அஞ்சு வாயில பத்து”ன்னு மட்டும் நல்லா தெரியுது. அதுபோல இருக்காத பாண்டி, பெரியார் என்ன சொன்னார் சிந்தியுங்கள், சொல்வதை சீர்தூக்கி பாருங்கன்னு சொன்னார் அல்லவா? நான் சொல்வதில் தவறு இருந்தால் சொல்லு என்றார்” கோபால்.
”கோச்சுக்காதண்ணே என் திராவிட ஸ்டாக் ரத்தம் அப்படி நீ மேட்டர சொல்லு” என்று கூல் ஆனார் போஸ் பாண்டி. அது என்ன கோபால்ண்ணே ”கையில அஞ்சு வாயில பத்து”ன்னு அப்பாவியா கேட்டார் கமால் பாய். ”அதை புதுக்கோட்டை அப்துல்லாகிட்டத்தான் கேட்கணும் கமால்பாய், மேட்டருக்கு வர்றேன்” என்ற கோபால் சொல்ல ஆரம்பித்தார். ”பாண்டி இவர்களுக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்யணும் என்றெல்லாம் அக்கறை கிடையாது, அப்படி இருந்தால் அதை நெறிப்படுத்த சட்டம் கொண்டு வந்திருப்பாங்க. அதை விடு, சமீபத்தில் ஐகோர்ட் ஒரு தீர்ப்ப கொடுத்தது, அதற்கு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்திருக்கணுமே ஆனா செய்யல” என்றார் கோபால்.
”என்னண்ணே கொஞ்சம் விளக்கமா சொல்லு ஆனா ஊனான்னா பொடி வச்சு பேசுவே”ன்னு குமார் கொந்தளித்தார். ”ஆளுங்கட்சிக்கு எதிரான மேட்டர்னா அண்ணாமலைபோல் பொங்கிட்டு வர்றாரு குமார்ஜி, ஆனால் போலி பாஸ்போர்ட் மேட்டர மறந்ததுபோல கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் மறந்துடுற” என ஒரு இடி இடித்தார் கோபால்.
”பாத்தியாண்ணே மறுபடியும் உன் வளவள பேச்ச ஆரம்பிச்சுட்ட விஷயதுக்கு வா” என்றார் போஸ் பாண்டி. ”வர்றேன் தமிழகத்தில் குட்கா, பான்பராக், கஞ்சா போன்ற போதைப்பொருள் நடமட்டம் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புரளுது. இதனால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் இதில் சீரழிகிறார்கள். குடும்ப வன்முறை, கொலை, சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அடிப்படையே போதை பொருள்தான்” என்றார் கோபால் .
”அதான் தெரியுமே அதனால தான் தடை விதித்து நடவடிக்கை எடுக்கிறோம். போதைப”பொருள் இல்லா தமிழகம் என்று முதல்வரே சொல்கிறாரே அதில் என்ன குழப்பம் உங்களுக்கு” என்றார் போஸ்பாண்டி. ”இப்ப தடை இருக்கா?” என்று கேட்டார் கோபால். ஏன் என்னாச்சு என்றார் போஸ்பாண்டி. ” குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மீதான தடையையும் நீக்கி அதன் மீது எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கையையும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ரத்து செஞ்சுடுச்சு உயர் நீதிமன்றம்.
சொன்ன காரணம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதே” என்ற கோபால், “இப்ப சொல்லு இப்ப குட்கா மீது தடையில்லை, தாராளமாக விற்கலாம், விற்பனை செய்தவர்கள் மீது, பிடிபட்ட நிறுவனங்கள் மீது எடுத்த சட்ட நடவடிக்கையும் ரத்துன்னு தீர்ப்பு வந்திருக்கு. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதன் மீது தடை விதிக்க முடியாதுன்னு சட்டமேதை ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா. பிறகு ஏன் சும்மா இருந்தார்கள்?” என்று கேட்டார் கோபால்.
”போன ஆட்சியில் தப்பா போட்டுட்டாங்க இப்ப கோர்ட்டு சொல்லிடுச்சுல்ல இனி பாருங்க” என்றார் போஸ்பாண்டி, ”என்னத்த பாக்குறது? என்றார் கோபால். ”அதற்கும் தடைச்சட்டம் கொண்டு வருவாங்க ஆளுநர் முட்டுக்கட்டை போடுவார்” என்றார் போஸ்பாண்டி. ”அப்படி எல்லாம் நினைச்சுடாத தம்பி, தடைச்சட்டம் கொண்டு வர்றது பத்தி அரசு யோசிக்கவே இல்லை, அதற்கு பதிலா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில மேல் முறையீடு போயிருக்காங்க, இதுதான் திராவிட மாடல்” என்றார் கோபால். ”என்னண்ணே சொல்றீங்க ஏன் உச்சநீதிமன்றம் போகணும் இதற்கு எதிராக புதிய தடைச்சட்டத்தை அரசு இயற்ற முடியாதா?”ன்னு கேட்டார் கமால் பாய். ”அது எனக்கு தெரியாது, ஆனால் மேல்முறையீடுன்னு உச்ச நீதிமன்றத்துக்கு போனால் வருடக்கணக்காகும் என்பது மட்டும் தெரியும், இது யாருக்கு லாபம்னு போஸ் பாண்டிக்கும் புரியும்” என்றார் கோபால்.
”ஆன்லைன் ரம்மியை விடுண்ணே வேற சொல்லு” என்றார் குமார்ஜி. ”என்ன குமார் உனக்கும் சலிப்பு தட்டிடுச்சா ? போஸ் சந்தோஷப்படும் விஷயத்தை சொல்கிறேன் கேளு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையில் ஏதோ செய்யணும்னு மெனக்கிடுகிறார். அவர் சமீபத்தில் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார். விளையாட்டுத்துறையில் 76 புதிய கோச்சுகளை நியமித்துள்ளார். இதில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உட்பட போடப்பட்ட போஸ்டிங் நியாயமாக போடப்பட்டுள்ளதாம். 12 வருடமாக போஸ்டிங் போடப்படவில்லை. இவர் தற்போது போட்டுள்ளதை பாராட்டணும்” என்றார் கோபால்.
”அண்ணே நீயா உன் வாயிலிருந்து நல்ல வார்த்தையா?” என்று போஸ்பாண்டி சந்தோஷப்பட “நல்லதை பாராட்டவும், அல்லதை சுட்டிக்காட்டுவதும் என் வேலை, தமிழ்நாட்டு செய்தியாளர்கள் சிலர்போல் ஜிங்சாக் செய்வது எனக்கு பிடிக்காது” என்றார் கோபால். ”யதார்த்தவாதி வெகுஜன விரோதி விடுண்ணே, அந்த கை, வாய் மேட்டர பத்தி சொல்லிட்டன்னா மனசுக்கு நிம்மதியாக இருக்கும்”னு சைடு கேப்புல தன் கோரிக்கையை மீண்டும் வைத்தார் கமால் பாய்.
”கமால் பாய், அந்த அப்துல்லா பாய்தான் புத்திகெட்டு போட்டுட்டு, சி.எம் கிட்ட வாங்கிக் கட்டிகிட்டு இப்ப முழிச்சிக்கிட்டிருக்காருன்னா நீ வேற அதையே கேட்கிற”ன்னு சிரித்த கோபால் அடுத்த மேட்டருக்கு வர்றேன், ”முதல்வர், தலைமைச் செயலர், பி.ஏ.1 உதயசந்திரன், உளவுத்துறை அதிகாரி டேவிட்சன், ஐஜி செந்தில்வேலன் இன்னும் சிலர்னு பங்குபெற்ற ஒரு ஆலோசனை கூட்டம் 5 மணி நேரத்துக்கும் மேல கடந்த ஞாயிறு நடந்ததாம். அதில் முக்கிய அஜெண்டா பற்றி ஒன்றரை மணி நேரம் ஆலோசனை போச்சாம்” என்றார் கோபால். ”என்ன மேட்டர் எதிர்க்கட்சி ஒற்றுமையை எப்படி கட்டுவது, காங்கிரஸுடன் சேர்ந்து எப்படி கரை சேர்வது என்றா?” என்று நக்கலாக கேட்டார் குமார்ஜி.
”இதுதான் இதே தான் இதேபோல் நய்யாண்டி பேசிக்கொண்டு திரிகிற ஒரு பத்திரிக்கையாளருக்கு, யார்யா இந்த தகவலை எல்லாம் கொடுப்பது, சோர்ஸ் யாருன்னு கேட்டிருக்கிறார் சி.எம். சார் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல இருந்தாலும் சொல்கிறேன், 20 நாட்களுக்கு முன்னா. அமலாக்கத்துறைக்கு அந்த பத்திரிக்கையாளர் போயிருக்கிறார், அவர் சில அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை பெற்றுள்ளார், அனைத்தும் நம்ம ஃபேமிலி மெம்பர் சம்பந்தப்பட்ட மேட்டராம் டெல்லியிலிருந்து நேரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த உத்தரவின்பேரில் தந்தார்களாம் என்று சொல்லியிருக்கிறார் உளவுத்துறை டேவிட்சன்.
டெல்லி சோர்ஸ் எப்படி கிடைச்சது என்று கேட்க கிண்டி சோர்ஸ்சாக இருக்கும், அதுவுமில்லாமல் நம்ம கட்சியிலேயே ஒருத்தருக்கு ஆகாதவர் மேலிடத்துக்கு அந்த விஷயம் தெரியணும் என்றால் உடனே அவரை கூப்பிட்டு சொல்லிவிடுகிறார்கள், அவரும் அதை பேட்டியில் பேசிவிடுகிறார், துபாயில் வாட்ச் வங்கின விஷயத்தை பில்லோட ஒருத்தர் வாண்டடா சொன்னாருன்னா பார்த்துக்கங்க என்றார்களாம் அதிகாரிகள். இதெல்லாம் பேசுங்க ஆனால் யார் சோர்ஸுன்னு மட்டும் சொல்லாதீங்க. நீங்க என் கவனத்துக்கு கட்சி மேட்டர, ஆட்சி விவகாரத்த கொண்டு வந்தால் அவர்கள் ஏன் அந்த ஆளுகிட்ட போகப்போறாங்க என்றாராம் முதல்வர்” என்றார் கோபால்.
”எத்தனை கடல் தாண்டி உங்ககிட்ட வர்றது, இப்ப புதுசா ஒரு ஷிண்டே வேற பவராயிட்டு வர்றாரு அவர சமாளிக்கிறது அதைவிட சிரமம் என மனதுக்குள் அதிகாரி புலம்பியிருப்பார் அல்லவா” என்றார் குமார்ஜி. ”கடைசியில் அந்த பத்திரிக்கையாளர் சோர்ஸ்கள் யாருன்னு தேடி–தேடி கண்டுபிடிங்கன்னு சொல்லியிருக்கிறாராம் முதல்வர். இதையும் ஒரு சோர்ஸ் சொல்லிடுச்சு. அதனால இவர்கள் செயல்பாடின்மைதான் சோர்ஸை உருவாக்குகிறது. இதை புரிந்தால் எல்லாம் நன்மையாகும்” என்று சிரித்தார் கோபால். “இருக்கலாம். ஒரு அதிகார மையம் இருந்தால் பரவாயில்லை; கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணிவெடி வைக்கிற மாதிரி பல அதிகார மையம் இருந்தா முதல்வருக்கு எப்படி ஒழுங்கான தகவல் போகும்” என்றார் கமால் பாய்.
”அதிகார மையம் என்றவுடன் தான் ஞாபகம் வருது புதுசா ஒரு அதிகார மையம் உருவாகிகிட்டு வருது. அதற்கு முன் ஒரு விஷயம் உதயசந்திரன் ஐஏஎஸ் முக்கிய அதிகார மையமான மருமகனை மதிப்பதே இல்லைன்னு மருமகன் உள்ளிட்ட குடும்பத்தாரே கோபத்தில் இருக்காங்களாம். அவர்கள் சொல்லும் ஐஏஎஸ் போஸ்டிங் எதையும் உதயசந்திரன் கண்டுக்கொள்வதே இல்லையாம். ஏதாவது பிரச்சினையை குடும்பத்தார் கொண்டுவருவதற்கு முன்னரே உதயசந்திரன் முந்திக்கொண்டு முதல்வரிடம் போய் நான் வேறு துறைக்கு போகிறேன் மாற்றிக்கொடுங்க, நான் இந்த பதவியில இருக்குறது பலருக்கு பிடிக்கல; எனக்கு உடம்பு வேற சரியில்லைன்னு ஒரு புலம்பு புலம்புவார். இதைக் கேட்டவுடன் முதல்வர் அப்படியே மனம் மாறி நீங்க எங்கும் போகவேண்டாம் என்கூடவே இருங்கன்னு சொல்லிவிடுகிறாராம். இதனால் குறை சொன்னாலும் எடுபடாததாலும், வேலையும் நடக்காததாலும் மருமகன் கோபமாக அத்தையிடம் சொல்ல அத்தை சொல்லியும் பலனில்லையாம். இப்ப குடும்பமே உதயசந்திரன் மீது கடும் கோபமாக இருக்காம்” என்றார் கோபால்.
”புதுசா அதிகார மையம்னு சொன்னீங்களே அது யாரு?” என்று குமார்ஜி கேட்க ”அது யாருன்னு சொல்கிறேன், அதற்கு முன்னால் ஒரு மேட்டர சொல்லி விடுகிறேன். உளவுத்துறை அதிகாரி டேவிட்சன் இப்ப தவிப்பில் இருக்கிறாராம். எப்படியும் ஜிவால் தலைமை டிஜிபி ஆகிவிடுவார், அவர் வந்தால் நான் இங்க இருக்க முடியாது. என்னை மாற்றினால் எனக்கு சென்னை கமிஷனர் போஸ்ட் தவிர வேறு எதைக்கொடுத்தாலும் ஏத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாராம். இதற்காக அவர் வாரத்தில் மூன்று நாள் ஒரு முக்கியமான நபர் வீட்டில் வாரத்தில் 3 நாள் போய் ஒரு முக்கியமான புதிய அதிகார மையத்தை சந்திக்கிறாராம். இந்த சந்திப்பின் நோக்கம் ஜிவாலை தலைமை டிஜிபி ஆவதிலிருந்து தடுப்பது என்கிறார்கள்.
அந்த அதிகார மையம் தமிழகம் அறிந்த நபர்தான் ஆனால் இப்ப சொல்லவேண்டாம்னு நினைக்கிறேன். ஆனால் அவர்கள் ரகசியமாக சந்திக்கும் வீட்டின் உரிமையாளர் கண்ணன் ஜெகதீசன் என்கிற யூனியன் பிரதேச முக்கிய அதிகாரி. அவர் வீட்டில் தான் சந்திக்கிறார்களாம். முடிவு என்ன ஆகும் ஜிவால் டிஜிபி கனவுக்கு வேட்டாக கூட அது அமையலாம். உளவுக்கே உளவு இது எப்படி இருக்கு” என்று சிரித்தார் கோபால்.
”டிஜிபி கனவு என்றவுடன் தான் ஞாபகத்துக்கு வருது, டெல்லி கமிஷனர் சஞ்சய் அரோராவை, தமிழக அரசு டிஜிபி ஆக்குவது என்ற உத்தரவாதம் தந்தால், தமிழகம் வரும் முடிவில் இருக்கிறாராம். அது போல உத்தரவாதம் அளிக்காவிட்டால் அவர் விருப்ப கடிதம் கொடுக்கப் போவதில்லையாம். பிரஜ் கிஷோர் ரவி தனக்கு நெருக்கமான அவர் சமூக தலைவர் மூலம் முதல்வரிடம் பேசியதாக தகவல், ஏகேவி ஒருபக்கம் போட்டியில் இருக்கிறார், மருமகனின் குடும்ப நண்பர் ஜிவால் பலமாக இருக்கிறார். இதனால் நான்கு முனை போட்டி இம்முறை நல்லா களைகட்டும். 3 பேர் பட்டியல் வரும்போது தெரியும், அதன் பின்னர் பவர் மருமகன் பக்கம் உள்ளதா? அல்லது புதிய அதிகார மையம் பக்கம் உள்ளதா? என்பதெல்லாம் தெரியவரும். போகிற போக்கை பார்த்தால் பிரஜ் கிஷோர் ரவி கூட தலைமை டிஜிபி ஆக வாய்ப்புள்ளது” என்றார் குமார். ”இதெல்லாம் டெல்லி சோர்ஸா” என நக்கலடித்தார் போஸ் பாண்டி.
”நீங்க இப்படி சொல்றீங்க ஆனா கடந்த திமுக ஆட்சியில் ஒட்டுகேட்பு நிறுவனம் நடத்தி பிரபலமான நாராயண யாதவ் இப்ப மீண்டும் பவராகிவிட்டாராம். கமிஷனருக்கு நெருக்கமான அவரை பார்த்தால் கமிஷனரை பார்த்தது போலன்னு அவரை போய் எல்லோரும் பார்க்கிறார்களாம், நீங்க என்னடான்னா ஜிவால் ஒன்றுமில்லைன்னு கதை கட்டுகிறீர்கள்” என்று சிரித்தார் கமால் பாய்.
”எப்படி பாய் இப்படி தகவல்னு கேட்டால் நம்ம சொந்தக்கார பையன் கபூர் த்ரீடிஜி டெக்னாலஜியில வேலை செய்றான் அவன் சொன்னதுன்னு சொல்வீங்க” என்று சிரித்தார் கோபால்.
சரி நான் ஒரு தகவல் சொல்றேன் என்ற போஸ் பாண்டி ”வனத்துறை சுப்ரியா சாஹுவை விரைவில் தூக்கி அடிக்க போகிறார்களாம். வனப்பகுதியில் கிர்லோஸ்கர் குடும்பம் வீடு கட்ட முறையற்ற அனுமதி கொடுத்து பிறகு ரத்து செய்த விவகாரம் உளவுத்துறை ரிப்போர்ட் போட்டதால் சிக்கியிருக்காங்களாம். அதனால் விரைவில் மாற்றம் என்கிறார்கள்” என்றார். ”பாண்டி, அப்படியே அந்த ரஞ்சிதமே புகழ் கவிதா ராமுவையும் கொஞ்சம் கவனிக்க சொல்லு பாண்டி” என்றார் கமால் பாய் கோபமாக.
”மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் அதிகாரிகள் கூத்தடிக்கிறார்கள். சர்வதேச பெண்கள் தினத்தில் கஷ்டப்பட்டு ஐஏஎஸ் படித்து முன்னுக்கு வந்த கவிதா ராமு போன்ற அதிகாரிகள் கல்லூரி மாணவிகளுக்கு சில மோடிவேஷன் தகவல்களை சொல்லி பேசியிருந்தால் இவரைப்பார்த்து 4 மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக வருவார்கள். ரஞ்சிதமேன்னு பாட்டு போட்டு கூத்தடித்தால் பார்க்கும் மாணவிகளும் அதை நோக்கித்தானே போவாங்க, இந்தம்மா இதையே பிழைப்பா வச்சிருக்காங்க, இதில் திராவிட புதல்வின்னு பட்டம் வேறு கொடுக்கிறார்கள் பத்திரிக்கைகாரர்கள்” என்று கோபப்பட்டார் குமார்ஜி.
”ஏன் பாட்டு பாடி ஆடினால் என்ன தப்பு? அவரும் மனிதர் தானே” என்றார் போஸ் பாண்டி. ”பாட்டு பாடுவது, ஆடுவது தப்பில்லை பாண்டி, ஆனால் இவர் வேலையே விளம்பரம் தேடுவதுதான். செயலில் ஒன்றுமில்லை. புதுக்கோட்டை வேங்கைவயல் மலம் கலந்த விவகாரத்தில் இவர் விசாரணைக்கு போனார் என்ன செய்தார்? அங்குள்ள ஆலயத்தில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி ஊடக விளம்பரம் தேடிகிட்டார்.
ஆனால் வேங்கைவயல் பிரச்சினை தீர்ந்ததா? குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? இதுவரை இல்லை. ஆனால் இவர்தான் மாவட்ட ஆட்சியர், இவர் அதுபற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இதைத்தான் தவறு என்கிறோம். அதிகாரி அவர் வேலையை பார்க்கவேண்டும். இவர் நடனம் பயின்றவர் என்பதற்காக எங்கு போனாலும் நடனம் ஆடினால் எப்படி?” எனக் கேட்டார் கோபால்.
”வேங்கைவயல் பிரச்சினை என்றவுடன் தான் ஞாபகம் வருது, திமுக கூட்டணி கட்சிகள் குறிப்பாக திருமாவளவன் இந்த விவகாரத்தில் மனவேதனையில் இருக்கிறார். மத்தளத்துக்கு ரெண்டுபக்கம் இடி என்பதுபோல திமுகவின் திடீர் பாமக–பாஜக பாசம் ஒருபுறம், தன் கட்சி நிர்வாகிகள் திமுகவினராகவே மாறி வருவது ஒருபுறம்னு அவர் மனதை வேதனை வாட்டி வருதாம்.
இதே மனநிலையில் தான் இடதுசாரி கட்சி தலைவர்களும் இருக்கிறார்களாம். கீழ்மட்ட கமிட்டி கூட்டத்தில் தலைவர்களை வச்சு செய்கிறார்களாம் தோழர்கள். நாம் என்ன திமுக அடியாளா? அவர்கள் சொல்லும் போராட்டங்களை நடத்த நமது சுய தன்மை என்னாச்சு, நமது போராட்டங்கள் எங்கேன்னு போட்டு வறுத்தெடுக்கிறார்களாம் இளம் தோழர்கள்” என்றார் கமால் பாய்
”இதே மனநிலையில் கூட்டணி கட்சித்தலைவர்கள் புலம்பல் அதிகமாகி வருகிறது. அந்த ரோஷமான தலைவர் திமுக தலைமை எங்களை போராட்டம் நடத்த அசைன்மெண்ட் கொடுக்கிறார்கள். நாங்கள் என்ன இவர்கள் கட்சி அணியா? மாறி மாறி கூட்டணி கட்சிகளுக்கு அந்த ப்போராட்டம் பண்ணுங்க, இந்த போராட்டம் பண்ணுங்கன்னு அசைன்மெண்ட் கொடுக்கிறார்கள், எங்கள் சொந்தப்போராட்டத்தை கைவிட்டு அடியாள் போல போராட்டம் நடத்துகிறோம். இவர்கள் ஜாலியாக போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பிரச்சினை என்றால் மாநிலத்தின் பெரிய கட்சியான திமுக போராட்டம் நடத்தலாம், அல்லது அதன் அணிகள் நடத்தலாம் கூட்டணி கட்சிகள் நாங்கள் கலந்துக்கொள்வோம். ஆனால் இங்கே எல்லாம் தலைகீழாக இருக்கேன்னு புலம்பி தள்ளிட்டாராம்” என்ற கோபால் “ஏம்பா டைம் ஆகுது கிளம்புவோம்” என்று கிளம்ப பாசறை மன்றம் வெறிச்சோடியது.