ஜி.கே.வாசன் சொன்ன உண்மை…இறுகிய முகத்துடன் கேட்டுக்கொண்ட பிரதமர்.
புதிய அதிகார மையம் ராஜாசங்கர் – கொதிப்பில் மகனும் மருமகனும்
கூல் முதல்வர்.. குதூகூலத்தில் அதிகாரிகள், கோஷ்டி பூசலில் கட்சிக்காரர்கள்..கொந்தளிக்கும் மக்கள்
”என்னண்ணே அவசரமா கூப்பிட்டிங்களாம்” என்று மன்றத்தில் வந்து அமர்ந்தனர் போஸ்பாண்டி, கமால்பாய், குமார்ஜி மூவரும். ”தம்பி 4 மோர் குடு. ஜில்லுன்னு சூடான சமாச்சாரங்கள் பல இருக்குன்னு” சொன்னபடி கோபால் மூவரையும் பார்த்து சிரித்தார்.
”என்னண்ணே அந்த மதன் ரவிச்சந்திரன் வீடியோ மேட்டரா? அவசரமா கூப்பிட்ட” என்று கேட்டார் போஸ்பாண்டி. ”அது கிடக்குது விடு, நவீன உலகில் இதெல்லாம் சாதாரணம். ஊடகத்தில் யோக்கிய வேஷம் போடுறவன் சிக்கும்போது திருட்டுப்பயலுகன்னு சொல்றோம், சிக்காதவன் அப்பாடான்னு பெருமூச்சு விடுறான். இன்னும் சிலபேர் அந்த ஹோட்டல் போனோம், இந்த ஹோட்டல் போனோம் நாமளும் சிக்கியிருக்கோமான்னு பதறிகிட்டு இருக்காங்களாம். உப்பைத்தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆகணும்” என்றால் கோபால்.
”ஏண்ணே இப்படி பகீரங்கமா காசு வாங்கினவன், ஒன்றே கால் கோடி வாங்கினேன்னு வாக்குமூலம் கொடுக்கிறவன் மீதெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை, ஜிஎஸ்டி, ஐடி எல்லாம் நடவடிக்கை எடுக்காதா?” என்று கேட்டார் கமால் பாய். ”போப்பா வேலைய பார்த்துகிட்டு நல்லா கேட்கிற டீடெய்லு புகார் கொடுத்தாலே நடவடிக்கை வராது, இதையே திருப்பி கேளு இவ்வளவு பணம் மதனுக்கு எப்படி வந்தது என்று கேளு, அதுவும் சிக்கலான விஷயம் தானே, இது ஒருவாரம் பரபரப்பாக இருக்கும் பிறகு சாதாரணமாகிவிடும்” என்றார் கோபால்.
”அவருதான் பொண்டாட்டி நகைய அடகு வச்சேன், மாமனார் பணம் கொடுத்தார் என்றெல்லாம் சொல்கிறாரே” என்றார் குமார்ஜி. “பழைய பாசமா குமாரு? உங்க ஆளு அண்ணாமலை விவரமில்லாம பல காரியம் செய்ததுதான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கு. இப்படிப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன் செய்ய ஒரு வருடமாவது ஆகியிருக்கும். குறைந்தது 2 சி வரைக்கும் சிலவு ஆகியிருக்கும் ஆகவே இதன் பின்னணியில் ஒரு பெரிய கை இருக்கு, விரைவில் அதுபற்றி விசாரித்து சொல்கிறேன், அப்புறம் அந்த உதயநிதி மதன் மீது போட்ட கேஸ் என்னாச்சு போஸ்பாண்டி? “ என்று கேட்டார் கோபால்.
”ஆமாண்ணே, என்னாச்சுண்ணே தெரியலண்ணே. அந்த பதிவை நினைச்சாலே ரத்தம் கொதிக்குதுண்ணே என்று போஸ் பாண்டி கண்கள் சிவக்க, ரொம்ப உணர்ச்சி வசப்படாத பொறு எல்லா விவரமும் விரைவில் வெளியாகும்” என்ற கோபால், ”குமாரு உங்க ஆளு அண்ணாமலை செய்த வேலைன்னு சொன்னேன் அல்லவா, இப்ப அவருக்கு இறங்கு முகம் ஆரம்பமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்” என்றார்.
”ஏண்ணே வீடியோ மேட்டரா?” என்று கமால்பாய் கேட்க, ”பாய் திமுக கூட்டணி கட்சிங்க மாதிரியே சிந்திக்காமலேயே இருக்கியே, கொஞ்சம் பகுத்தறிவ உபயோகப்படுத்து” என்று கோபால் நக்கலடித்தார். ”சரி சொல்லுங்க என்ன விஷயம் மறுபடியும் அறுக்க ஆரம்பிச்சுடாதீங்க” என்று போஸ் பாண்டி கோபப்பட, ஓக்கே லீடு போல சொல்லவா? ’பிரதமருடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு, தமிழக அரசியல் பற்றி சொன்ன தகவல்களை இறுகிய முகத்துடன் கேட்டுக்கொண்ட மோடி” என்ற கோபால் ”போதுமா” என்றார். ”என்னண்ணே மீண்டும் ஆரம்பிச்சுட்டியா முழுசா சொல்லி முடி” என்று கோபப்பட்டார் குமார்ஜி.
கோபால் சிரித்தப்படி சொல்ல ஆரம்பித்தார்.”பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் திடீரென சந்தித்துள்ளார், தமிழகத்தில் அதிமுகவை, பாஜக அதிலும் அண்ணாமலை கும்பல் தொடர்ந்து வம்பிழுப்பதும், தேர்தல் தோல்வியை கொண்டாடியதையும், பல கோடி ரூபாய் பணம் செலவழித்த திமுகவையோ, செந்தில் பாலாஜியையோ கண்டிக்காமல் எடப்பாடியை குற்றம் சொன்னதையும், அதனால் அதிமுக தலைவர்கள் கடும் கோபமடைந்ததையும் விலாவாரியாக சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் எடப்பாடி உருவப்படம் எரிப்பு, அதை ஆதரித்து பாஜக தலைவர்கள் பேசியது பற்றி சொல்லி பாஜகவுக்கு இருக்கும் ஒரே வெற்றி வாய்ப்பு அதிமுக கூட்டணிதான். அதையும் இதுபோன்ற முதிர்ச்சியற்ற அரசியலால் அண்ணாமலை கெடுத்துக்கொள்கிறார், நாளையே நீங்கள் அதிமுக–பாஜக கூட்டணின்னு முடிவெடுத்து இணைந்தாலும் களத்தில் உள்ள அதிமுக தொண்டன் பாஜக வெல்வதை விரும்புவானா? அது பாஜக வளர்ச்சியையும் சேர்த்தே பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
அதிமுகவுடன் சேர்ந்து திமுக அரசையும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் செயல்பாடுகளையும் கண்டிக்காமல் கண்டபடி அதிமுகவை வசைபாடி திரிகிறார்கள். சமூக வலைதளங்களில் கட்சி நடத்துகிறார்கள். அங்கும் அதிமுகவுடன் தான் வார்த்தைபோர் நடத்திக்கொண்டிருக்கிறார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் உப்பு சப்பு இல்லை என்றாலும் திமுக சொன்னதற்காக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக அரசியல் செய்யும்போது அண்ணாமலை பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை இதெல்லாம் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறார். அனைத்தையும் இறுகிய முகத்துடன் பிரதமர் கேட்டுக்கொண்டாராம். பின்னர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட முன்னணி தலைவர்களை போய் பார்த்து இந்த விஷயத்தை அப்படியே சொல்லுங்கன்னு பிரதமர் அனுப்பி வைத்தாராம்” என்றார் கோபால்.
”பி.எல்.சந்தோஷை எதுக்குண்ணே பார்க்கணும்” என்று கமால் பாய் கேட்க , ”பாய் புரியலையா அண்ணாமலையின் அரசியல் ஆசான் பி.எல்.சந்தோஷ். உன் ஆளு அடிக்கிற கூத்த கேட்டுக்கோன்னு சொல்ல சொல்லி அனுப்பியிருப்பார்” என்றார் போஸ்பாண்டி. “சரியாக சொன்னாய் பாண்டி உனக்கு உன் கட்சியில் உள்ள குடும்ப அரசியல் தவிர மற்ற எல்லாவற்றிலும் மூளை சரியாக வேலை செய்யுது” என்று கோபால் சொல்ல, “குடும்ப அரசியலுக்கு என்னாவாம் எல்லாம் சரியாத்தான் போய்கிட்டிருக்கு” என்று போஸ் பாண்டி கோபப்பட “எல்லாம் சரியா போகுதுன்னா வெளிப்படையா கட்சிக்காரர்கள் ஏன் அடிச்சிக்கிறாங்க” என்று கமால் பாய் கேட்க, ”சரியாக சொன்னீர்கள் பாய் முதலில் டெல்லி மேட்டர முடிச்சுடுவோம்” என்றவர், “இதில் இன்னொரு முக்கியமான விஷயம் பிரதமரை பார்க்க போகும் முன் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து சில மணி நேரம் பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன்” என்று சொல்லி நிறுத்தினார் கோபால்.
“அப்படியானால் எடப்பாடியின் தூதுவராக சென்றாரா ஜி.கே.வாசன்” என்று போஸ்பாண்டி கேட்க ”அப்படியும் வச்சிக்கலாம், தூதர் என்றால் கௌரவர் சபைக்கு போன கிருஷ்ணர் மாதிரி அறிவுரையும் சேர்த்து சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன்” என்று முடித்தார் கோபால். ”அப்படின்னா அண்ணாமலை பதவிக்கு ஆப்பு ரெடியா?” என்று போஸ்பாண்டி உற்சாகமாக கேட்டார்.
“இரு வர்றேன். வாசன் பிரதமரை பாத்த மறுநாளே, எடப்பாடியோட உருவப்படத்தை எரிச்ச, தூத்துக்குடி வடக்கு பிஜேபி இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை ஆறு மாத காலத்துக்கு இடை நீக்கம் பண்ணி, கட்சியோட மதுரை வடக்கு மாவட்ட பிஜேபி தலைவர் சென்ன கேசவன் அறிக்கை வெளியிட்டார்.
மறுநாளே பிஜேபி மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, அந்த உத்தரவை ரத்து செஞ்சிட்டார். அண்ணாமலை கை இன்னும் ஓங்கித்தான் இருக்குன்றதை இது காட்டுது. இந்த நடவடிக்கை ரத்துக்கு, அதிமுகவின் ஜெயக்குமாரும் கண்டனம் தெரிவிச்சிருக்கார்” என்றார் கோபால்.
“பன்னீர் திடீர்னு டிடிவி தினகரனோட இணைந்து பணியாற்றத் தயார்னு சொல்லிருக்காரே. சசிகலாவையும் சந்திக்கப்போறதா சொல்லிருக்காரே” என்று வினவினார் கமால் பாய்.
“சரியா பாயிண்ட்டை புடிச்சிட்டீங்க பாய்” என்றவாரே தொடர்ந்தார் கோபால். “இப்படித்தான் எல்லா புள்ளிகளையும் இணைச்சி அரசியலை பாக்கணும் பாய்.
அதிமுக பிஜேபி இடையே உரசல் தொடங்கி, மோதலா உருவாகியிருக்கா. எடப்பாடி சொன்ன பேச்சை கேக்க மாட்டாருன்னு பிஜேபி, குறிப்பா மோடி நினைக்கிறாரு. அவருக்கு கடிவாளம் போட, பன்னீர்செல்வத்தை தூண்டி விடலாம்னு பிஜேபி நினைக்குது. இத்தனை நாள், தர்ம யுத்தம் நடத்தி, சசிகலா குடும்பம் ஜெயலலிதாவை கொலை பண்ணிடுச்சுன்னு கூசாம சொன்ன பன்னீர் இப்போ சசிகலாவை சந்திக்கத் தயார், டிடிவி தினகரனோட இணைஞ்சு பணியாற்றத் தயார்னு சொன்னா என்ன அர்த்தம் ?
இப்படி யோசிச்சு பாருங்க பாய். பிஜேபி தலைமையில மூன்றாவது அணி. அதுல பன்னீர்செல்வம், டிடிவி, சசிகலா, தேவேந்திர குலவேளாளர் தலைவர்கள் ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போயிடுறாங்கன்னு வச்சிக்குவோம். பிஜேபி தங்களோட உண்மையான செல்வாக்கு என்னன்னு நிரூபிக்க வாய்ப்பு இருக்குல்ல.
அது மட்டுமில்லாம ஏதாவது பண்ணி, இரட்டை இலையை முடக்கிட்டா, அவங்க நாலு சீட்டாவது ஜெயிக்கலாம்னு நினைக்கிறாங்க.”
“இப்படி மூணாவது அணி அமைச்சா எங்களுக்குத்தான் நல்லது. ஈசியா ஜெயிச்சிடுவோம்.” என்று உள்ளே புகுந்தார் போஸ் பாண்டி.
“ஜெயிச்சிட்டு என்ன பண்றீங்கன்னுதானே கேள்வி” என்று இடைமறித்தார் கோபால். டி.ஆர். பாலுவுக்கும் சரி, சபரீசனுக்கும் சரி, பிஜேபியோட நெருங்கி பணியாற்றனும்னு விருப்பம். திருமப் இவங்கதான் வரப் போறாங்க. எதுக்கு வெளிய நின்னு கத்திக்கிட்டு.
அமைச்சரவையில பங்கெடுத்தா நாலு காசு சம்பாதிக்கலாம்னு பாலு நினைக்கிறாரு. மாப்பிள்ளையோ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐன்னு எந்த தொல்லையும் இல்லாம இருக்கலாம்னு நினைக்கிறாரு. ஆக, எத்தனை எம்பி ஜெயிச்சாலும், நீங்க பிஜேபிக்குத்தான் ஆதரவு தரப் போறீங்க” என்றார் கோபால்.
“எங்க கட்சி அப்படியெல்லாம் இல்ல. பாசிச எதிர்ப்பு மற்றும் பிஜேபி எதிர்ப்பில் உறுதியாக இருக்கோம்” என்று திமுகவுக்கு ஆதரவாக குதித்தார் பாண்டி.
“இரு பாண்டி. நீ நினைக்கிற மாதிரி அந்த சங்கதி அத்தனை எளிதல்ல. எக்ஸ்க்ளூசிவா கடைசியில ஒரு பிட் வச்சிருக்கேன். படி புரியும்” என்றார் கோபால்.
“அண்ணாமலை, பிஜேபின்னா சந்தோசமா வந்துருங்க. “சொந்தக்கட்சியில அடிச்சிக்கிறாங்க, குடும்பமே அதிகாரம் செய்யுது, ஒரு அமைச்சர் வானளாவிய அதிகாரத்துடன் வளம் வருகிறார். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது அதுபற்றியெல்லாம் கோபம் வரல, அண்ணாமலைக்கு ஒன்னுன்னா என்னா ஆனந்தம்” என்று குமார்ஜி கோபத்துடன் போஸ் பாண்டியை முறைக்க, “ஏம்பா நீங்க ஒரே மாவட்டத்து மூத்த நிர்வாகிகள் நேரு, திருச்சி சிவா மாதிரி முட்டிக்காதிங்கப்பா, போஸ்பாண்டி கேட்டதில் என்ன தப்பு இன்னும் சில விஷயங்களை சொல்கிறேன் கூட்டிக்கழிச்சுப்பாரு கணக்கு சரியாக இருக்கும்” என்று சிரித்தார் கோபால்.
”என்ன கூடுதல் விஷயம் சட்டுன்னு சொல்லுங்க, எட்டு மணிக்குள் வரலன்னா சோத்துல தண்ணி ஊத்திடுவேன்னு வீட்டுல சொல்லி அனுப்பிச்சுச்சு” என்றார் கமால்பாய். ”பாய் சொல்றேன் கேளுங்க அண்ணாமலைக்கு நெருக்கமானவர் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கேசவ விநாயகம், அவரை மாற்றனும்னு ஒரு கோரிக்கை ரொம்ப நாளா இருக்கு, அவரை மாற்றாமல் வைத்துள்ளார்கள், ஆனால் திடீரென பிரோசபகுமார், சுரேஷ்குமார், ஆறுமுகம், பி.எம்.இரவிக்குமார், .ஆடலரசன் என ஐந்து பேரை ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது மேலிடம். சமீப காலமாக பொன் ராதாகிருஷ்ணனும் உற்சாகமாக இருக்கிறாராம். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் ஏதோ ஒரு மாற்றம் வரலாம்னு தெரியுது” என்றார் கோபால்.
”ஏண்ணே நேற்று நம்ம ஃபாலோயர்ஸ் பாஜகவை பற்றியெல்லாம் பேச மாட்டீங்களான்னு கேட்டதற்கு இப்படியா குண்டை தூக்கி போடுவீங்க அப்ப திமுக சமாச்சாரம் இல்லையா?” என்று குமார்ஜி ஆதங்கத்துடன் கேட்க ”இருக்குடா செல்லாகுட்டி அது இல்லாம கூட்டம் முடியுமா?” என்று சிரித்த கோபால் சொல்ல ஆரம்பித்தார். ”திமுகவில் மீன்வளத்துறை அமைச்சர் யாருன்னு சொல்லுப்பா பாண்டி” என்று கேட்க, அது வந்து கே.பி.பி. சாமி அவரு இறந்து போய்ட்டாரு, கே.பி.பி சங்கரா? ” என்று கேட்க என்கிட்ட கேட்கிறியா இப்படித்தான் இருக்கீங்க உடன்பிறப்புகள், ஒரு 5 அமைச்சர்கள் படத்தை காட்டி கேட்டால் உங்கள் ஆளுங்க யாருக்கும் பேர் சொல்லத்தெரியாது, அப்புறம் தானே மக்களுக்கு தெரியவர” என்று நக்கலடித்தார் குமார்ஜி.
”விடுப்பா மேட்டருக்கு வருவோம் மீன்வளத்துறைக்கு அமைச்சராக அனிதாராதாகிருஷ்ணன் இருந்தாலும் முழு பவர் ராஜாசங்கர் தானாம். அவர்தான் மீன்வளத்துறை அமைச்சர் போல் கவனித்துக்கொள்கிறாராம்” என்றார் கோபால். ”அப்ப அமைச்சர்?” என்று கேட்டார் கமால்பாய். ”அவரு இங்க ’தேங்காமுடி’ அமைச்சர் துர்கா அண்ணி கூட பூந்தட்டு தூக்கிக்கொண்டு திரிவது போல மாவட்ட எம்பி அக்கா கனிமொழிக்காக 4 கேமரா மேன் வைத்து 3 ஷிப்ட் போட்டு டீம் உருவாக்கி இருக்கார். அத வச்சிகிட்டு போட்டோஷூட் டைரக்ஷன் பண்ண வேண்டியதுதான், சொல்றத கேளுப்பா, அவர் டம்மி அவ்வளவுதான் சொல்ல முடியும்” என்றார் கோபால்.
”சரிண்ணே தப்பா நினைச்சுக்காத அந்த ராஜா சங்கர் யாருண்ணே இதற்கு முன்னால கேள்விப்பட்டதே இல்லண்ணே” என்றார் கமால் பாய். ”உனக்கு புதுக்கோட்டை எம்.பி. அப்துல்லா மட்டும்தான் தெரியும் பாய் இவரை தெரியாமல் எப்படி இருக்கீங்க உங்க ரெண்டு பேருக்காவது தெரியுமாப்பா? ஏம்பா போஸு உனக்கு?” என்றார் கோபால். அண்ணே சத்தியமா தெரியாதுண்ணே நீயே சொல்லுண்ணே என்று சரணாகதியானார் போஸ் பாண்டி. அவரு முதல்வரின் பல ஆண்டுகால நெருக்கமான நண்பர். அவர்களுக்குள் பல டீலிங்குகள் உண்டு. இப்ப திடீர்னு அவர் பவருக்கு வந்திருக்கார் என்னன்னு தெரியல” என்றார் கோபால்.
”பவர்னாலே மருமகன் தானேண்ணே நீ திடீர்னு பிளேட்ட மாத்துறியே”ன்னு குமார் கேட்க, ”அது போன மாசம் என்று வடிவேல் ஸ்லாங்கில் சொன்ன கோபால், அந்த ஒற்றை எழுத்து நிறுவனத்தைக்கூட சரியாக ஹாண்டில் பண்ண தெரியல, துபாய் முதலீடும் தொங்கல்ல இருக்கு, இவரால ஆட்சிக்கு கெட்டப்பேருன்னு தூபம் போட்டிருக்கார் உளவுத்துறை ஏடிஜி” என்றார் கோபால். ”அவரு தூபம் போடுவதற்கும் சைக். உன்னை மாதிரியே எனக்கும் வாயில வருது, ரிப்போர்ட் போடுறதுக்கும் ராஜாசங்கர் பவர்ல வர்றதுக்கும் என்னண்ணே சம்பந்தம்” என்று கமால் பாய் கேட்க, ”போனமுறை சொன்னேனே தன் பதவியை காப்பாத்திக்க உளவுத்துறை டேவிட் அய்யா ஒரு முக்கியமான அதிகார மையத்தை வாரத்தில் சில நாட்கள் ரகசியமா ஒரு அதிகாரி வீட்டில் சந்திக்கிறாரு என்று அந்த அதிகார மையம் தான் ராஜா சங்கர், முதல்வரின் உயிர் நண்பர்.
2006 திமுக ஆட்சியில 2ஜி பணம் மொத்தத்தையும் ஹேண்டில் பண்ணது ராஜா சங்கர்தான். இதன் காரணமாக இவர் அமலாக்கத் துறையால் இரண்டு வாரங்கள் விசாரிக்கப்பட்டார்.
எந்த அளவுக்கு ஸ்டாலினோடு நெருக்கம்னா, மகனுக்காக ரெட் ஜெயண்ட் மூவீஸ் தொடங்கப்பட்டபோது, உதயநிதியோடு சேர்த்து, ராஜா சங்கரின் மகனைத்தான் இந்த நிறுவனத்தில் பார்ட்னராக சேர்க்கச் சொன்னார் ஸ்டாலின்னா பாத்துக்கங்க நெருக்கத்தை.
கொஞ்ச நாளாக ஒதுங்கியிருந்த ராஜா சங்கர், இப்போது, முதல்வரை கண்ட்ரோல்ல எடுத்துட்டார்.
அவர் என்ன சொன்னாலும் முதல்வர் கேட்பார்” என்றார் கோபால்.
”உதயசந்திரனை நீக்கச் சொன்னால் கூட முதல்வர் கேட்பாரா?” என்று குமார்ஜி எடக்காக கேட்க, குமாரு இப்ப முதல்வர் நம்புவது 2 அதிகார மையத்தை தான் ஒன்னு ராஜா சங்கர் அடுத்து உதயசந்திரன். இவர்களை டேவிட் பயன்படுத்திக்குறாரு. உளவுத்துறை அதிகாரிகள் ராமானுஜம், அலெக்சாண்டர், அம்ரேஷ்புஜாரி போன்றவர்கள் அவர்கள் அரசுக்கு விசுவாசமாக கெட்டப்பெயர் வராமல் பார்த்துக்கொண்டார்கள். புஜாரி ஒருபடி மேலேபோய் நீங்க ஜெயிலுக்கு போவீங்கன்னு சி.எம். ஜெயலலிதா கிட்ட தைரியமா சொல்லி கோபத்தை சம்பாதித்து தூக்கி அடிக்கப்பட்டார். இப்ப இருக்கிற டேவிட் அய்யா கிட்ட ட்ரெய்னிங் எடுத்திருந்தால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது ஆல் இஸ் வெல் ஜெயில் தண்டனையே இல்லன்னு சொல்லியிருப்பார். அவர்கள் எல்லாம் பதவியை சரியாக பயன்படுத்தினார்கள். ஆனால் இப்ப இருக்கிற உளவுத்துறை அதிகாரி தன்னைச் சுற்றி உள்ளதையும், தன்னை பாதிக்கும் விஷயங்களுக்காக மட்டும்தான் வேலை செய்கிறாராம்.
தன்னை பத்தி எவன் வாட்ஸப்புல, சமூக வலைத்தளங்கள்ல செய்தி போடுறான், தன் பதவிக்கு எவன் வேட்டு வைக்கிறான்னு அதுலயே கவனமா இருக்காரு.
கூடவே அப்பப்ப முதல்வருக்கு உதயநிதி சரியில்ல, மருமகன் சரியில்லன்னு சொல்லி ரிப்போர்ட் போடும் வேலையும் செய்கிறாராம். உதயநிதி நண்பர்களால் ஆட்சிக்கு கெட்டபேரு வருதுன்னு ஒரு ரிப்போர்ட்டாம். ஆனால் கெட்டப்பெயர் வந்ததற்கு எல்லாம் இவரது செயலற்ற நிலைதான் காரணம்னு சொல்கிறார்கள். விகடன் மீது வழக்கு போட நிர்பந்தித்தது, அது அண்ணாநகர் கார்த்திக்கு பிடிக்காவிட்டாலும் போடவைத்து அரசுக்கு கெட்டபெயர். அடுத்து அரசுக்கு கெட்டப்பெயர் வரும் விஷயங்களில் செயலற்று இருப்பது, வேங்கைவயல், ராணுவ வீரர் கொலை விவகாரத்தை பாஜக ஆதாயம் அடைய விட்டது, வடமாநிலத்தவர் பிரச்சினை என பல விஷயங்களை சொல்லலாம்”. என்று சொன்ன கோபால் ஏம்பா கொஞ்சம் மோர் கொடு மூச்சு வாங்குதுன்னு வாங்கி குடித்தார்.
”ஏண்ணே மருமகன், மகன் பெயரை முதல்வரிடம் டேமேஜ் பண்ணுவதால் என்ன லாபம்” என்று போஸ்பாண்டி கேட்க, ”அரசுக்கு கெட்டப்பெயர் வருதுன்னு சொன்னால் முதல்வர் என்ன சொன்னாலும் நம்பி விடுகிறாராம் அதைச் சொல்லி சொல்லி இவர்களை நகர்த்துவதன் மூலம் உதயசந்திரனும், ராஜா சங்கரும் அதிகாரத்தை தக்க வைக்கிறார்கள். கூடவே நம்ம உளவுத்துறை அதிகாரி, அதுபோன்ற அதிகாரிகள் ஆதாயம் அடைகிறார்களாம். ஒரு நிழல் ராஜ்ஜியமே நடக்கிறது.
ராஜராஜ சோழன் படம் பார்த்தாயா அதில் சோழ மன்னர் சிவாஜியுடன் ராஜகுரு நம்பியார் சுற்றுவாரே அதேபோல் சுற்றுகிறார் உதயசந்திரன். இன்னொரு நம்பியார் ராஜா சங்கர் சீனுக்கு வராமல் திரைமறைவில் இருந்து காய் நகர்த்துகிறார். பட்டத்து இளவரசன், மருமகன் இருவரும் எப்படி முதல்வரை ரீச் பண்ணுவதுன்னு தெரியாம முழிக்கிறார்களாம். வீட்டில் அண்ணியார் இதுபற்றி பேச்செடுத்தாலே உதயசந்திரன் பற்றி பேசவேண்டாம்னு முதல்வர் வாயை அடைத்துவிடுகிறாராம், இதெல்லாம் கோட்டை வட்டாரத்தில் தகவலாக உலாவுது”. என்றார் கோபால்.
இது மட்டுமில்லாம, உதயச்சந்திரன், செந்தில் பாலாஜியை மட்டும் கண்டுகொள்வதே இல்லையாம். அவரை பற்றி கோள் சொன்னால் தன்னோட பதவிக்கு ஆபத்துன்னு கவனமா செந்தில் பாலாஜி பத்தி பேசறதை தவிர்க்கிறாராம்.
இப்படியே போனால் எப்படிண்ணே என்று குமார்ஜி கேட்க, ”எப்படின்னா? ரஞ்சிதமே பாட்டுக்கு ஆட்சியர் கவிதாராமு ஆடுவதுபோல் ஆடத்தெரிந்தவர்கள் போட்டோஷூட் நடத்த வேண்டியதுதான் யார் கேட்பது?” என்று கமால் பாய் கோபப்பட்டார். “ உதயச்சந்திரனின் ஆதரவு இருப்பதால் கல்வி அமைச்சர் அன்பில் பேச்சை துறை செயலர் நந்தகுமார் மதிப்பதே இல்லையாம். பவர்ஃபுல் அமைச்சர் என்று இருந்த அன்பில் மகேஷ் மனம் நொந்து போயிருக்காராம். இன்னொரு பக்கம் கோஷ்டி பூசல் வெளிப்படையாக தலைதூக்க ஆரம்பிச்சுடுச்சு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ மதியழகன் உள்ளூரில் தன்னைத்தவிர யாரும் இருக்கக்கூடாதுன்னு கோஷ்டி வளர்க்கிறார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக தோற்பது நிச்சயம் என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வந்த கோடீஸ்வரராம், திருச்சியில் மாநகர அமைச்சர் நேரு, எம்பி சிவா கோஷ்டி மோதல் தறிகெட்டு போகிறது. போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து அடித்துக்கொள்கிறார்கள். நெல்லையில் மேயரை மாற்றியே தீரணும்னு ஒரு கோஷ்டி கிளம்பி சென்னை வந்திருக்கு இப்படி மாவட்டத்தில் பல இடங்களில் கோஷ்டி மோதல் வெடித்து கிளம்புகிறது. இதையெல்லம் கட்சித்தலைவரும், பொதுச் செயலாளரும் கண்டுக்கொள்கிறார்களா தெரியவில்லை” என்று சொன்னார் கோபால்
”மக்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துகிட்டுத்தான் இருக்காங்க. சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கு, ஆனால் போக்குவரத்து காவலர்கள் தெருவுக்கு தெரு முச்சந்தியில் நின்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி சாதாரண பொது மக்களிடம் அபராதத்தை வசூலிக்கிறார்கள். போக்குவரத்தை சீர் செய்வதே இல்லை. சென்னை போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்பு போல் பேனர்கள், கொடிக்கம்பங்கள் சாலையை ஆக்கிரமித்து புதிது புதிதாக முளைக்குது. கோர்ட் உத்தரவை யாரும் மதிப்பதில்லை. மக்களின் மவுனத்தை இவர்கள் அட்வாண்டேஜாக எடுத்துக்கொள்கிறார்கள் அது பஞ்சு மூடிய நெருப்புன்னு தெரியல” என கோபமாக குமார்ஜி சொல்ல.
”என்னப்பா பராசக்தி வசனம் போல இப்படி அடுக்குகிறாய்” என கமால் பாய் சிரிக்க, ”பின்ன தினமும் கஷ்டப்படும் எங்களுக்குத்தானே தெரியும்” என்று குமார் கொதிக்க, ”இதெல்லாம் தெரியும் பெட்ரோல், டீசல் விலை, சிலிண்டர் விலை பற்றி கேட்டால் தெரியாது”ன்னு போஸ் பாண்டி நக்கலடிக்க, ”ஏம்பா நைட்டு எனக்கு சாப்பாடு இல்லாம பண்ணிடுவீங்க போல சபைய கலைங்கப்பா” என்று கமால் பாய் நகர மன்றம் காலியானது.
பாசறை எக்ஸ்க்ளூசீவ்
ஹைதராபாத்தில் ஒற்றை எழுத்து நிறுவனம் ஒரு ப்ராஜெக்டை தொடங்கி சிக்கலில் மாட்டியதன் பின்னணியில் பெரிய டீலிங் இருக்கிறது.
அந்த இடத்தின் அசல் உரிமையாளர்கள், டெல்லி புள்ளியின் மகன். கிரிக்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாமல் கிரிக்கெட்டில் இருக்கும் வாரிசு அந்த மகன். அவர்கள் நிலம் என்பதை தெரிந்து கொண்டு, தெலங்கானா முதல்வர் அந்த நிலத்துக்கு எந்த அனுமதியும் கிடைக்காமல் முடக்கி விட்டார்கள். இதை தெரிந்து கொண்ட ‘ஈசன்’, என்னிடம் ஒற்றை எழுத்து நிறுவனம் இருக்கிறது என்று கேசிஆரோடு தொடர்பு கொண்டு, அந்த இடத்தை கிரிக்கெட் புள்ளியிடமிருந்து வாங்கி, ஒற்றை எழுத்து நிறுவனம் மூலம் டெவலப் செய்ய முயற்சி செய்ய, இப்போது அதுவும் சிக்கலில் மாட்டியிருக்கிறது.
இந்த வியாபார ஒப்பந்தம் காரணமாகத்தான், தமிழக முதல் குடும்பத்தை, டெல்லி கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எங்கள் நிலத்துக்கா அனுமதி கொடுக்க மறுக்கிறாய்; என்ன செய்கிறோம் பார் என்றுதான், கேசிஆர் மகள் கவிதாவை நெருக்குகிறது அமலாக்கத்துறை.
வெளியே பகை, உள்ளே உறவு என்று திமுக முதல் குடும்பம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.