பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக பாணியில் அல்ல கலைஞர் எழுத்தில் சொன்னால் ’மாடி வீட்டு சீமான்’, ’கோடி வீட்டு கோமான்’, ’ஏழைகளின் பசித்த வயிறு தெரியாது’, ஏட்டில் எழுதி உள்ளதை படித்துவிட்டு அதைத்தான் அமல்படுத்துவேன் என அடம்பிடிக்கும் ’அமெரிக்க குழந்தை’.
சமூக நீதி, நீதிக்கட்சி என்றெல்லாம் அவர் வளர்ந்த காலத்தில் வீட்டில் தந்தையார் பேசியதை கேட்டு அவ்வப்போது வாந்தி எடுத்தாலும், மனம் என்னவோ கார்பரேட் முதலாளிகளுக்கு கால்பிடிக்கும் குரங்குதான். பிறந்தது செல்வ செழிப்புள்ள குடும்பத்தில். பசியறியா வெள்ளி ஸ்பூன் வாழ்க்கை, அமெரிக்க முதலாளித்துவ எண்ணங்களை மண்டையில் ஏற்றிக்கொண்டு வளர்ந்த மனிதர். பணக் கத்தைகளாக வணிக மனதுடன் மக்களை அணுகும் அரசியல்வாதி.
வெளிநாட்டு வங்கிகளில் வாடிக்கையாளர்களை அவர்கள் அறியாமலே எப்படி கசக்கி பிழிவது, போலியாக செலவுகளை வெட்டி ஒட்டி லாபம் எப்படி பார்ப்பது என்று தொழில் செய்தவர். அதையே தனது அரசு பட்ஜெட்டிலும் காட்டுவதை சுட்டிக்காட்டும்போது கோபம் வருகிறது. கண்டபடி ஓட்டி வெட்டி பொய்க்கணக்கு எழுதி ஏமாற்றி லாபம் காட்டினால் வாடிக்கையாளர்கள் நம்புவார்கள். தமிழக மக்கள் நம்புவார்களா?
இவர் அரசியல்வாதி அல்ல, சாதாரணமாக வட்டம், பகுதி, மாவட்டம் என்று வளர்ந்து வந்திருந்தால் மக்கள் கஷ்டம் தெரியும். விபத்தினால் அரசியவாதி ஆனவர். அப்பா பெயரால் அரசியலுக்கு வந்த அமெரிக்க மாடல் பிள்ளைக்கு இங்குள்ள வறுமையும், வாழ்க்கை சூழலும் தெரியுமா? மக்களை அவர்கள் கைக்கு பணம் வராமல் ஏமாற்றும் வித்தையை அமெரிக்காவில் கற்ற இவர்தான் தனக்கு சரியான ஆள் என ஜூனியரான இவரை நிதியமைச்சர் ஆக்கினார் ஸ்டாலின்.
தமிழகத்தின் அரசியல் மிக வித்தியாசமானது. என்னதான் நெருக்கடி வந்தாலும் எளிய மக்கள் தலையில் கை வைக்க மாட்டோம் என உறுதியெடுத்த வந்த முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர். காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் (பிடிஆர் போன்ற நிதி அமைச்சர் இருந்திருந்தால் முளையிலேயே இத்திட்டம் கருகியிருக்கும்) , எம்ஜிஆர் ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு, இலவச காலணி, சீறுடை என்றெல்லாம் யோசித்தார். ரேஷன் பொருட்கள் மண்ணெண்ணெய், சர்க்கரை, அரிசியில் கைவைக்காமல் இருந்தார்.
கருணாநிதி ஆட்சியில் எளிய மக்களுக்காக பல திட்டங்கள் கொண்டு வந்தார். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக இலவச பஸ்பாஸ் கொண்டு வந்தார். முதல் தலைமுறை பட்டதாரிகள் மேற்படிப்பு இலவசம் என்று கொண்டு வந்தார். மகளிர் நலனுக்காக சுய உதவிக்குழுக்களை கொண்டு வந்தார். உணவுப்பொருட்களை ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்று கொண்டு வந்தவர் கருணாநிதி.
உழவர் சந்தை ஆரம்பித்து பெண்களுக்கான 30% இட ஒதுக்கீடு, திருமண உதவி திட்டம், விதவை மறுமண உதவி திட்டம், ஒப்பந்த பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியங்கள், சாலைப்பணியாளர்கள் நலன், இலவச வேஷ்டி சேலை திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் நெசவாளர்களுக்கு ஒரு வருமானத்தை கொண்டு வந்தது என பல திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவைகளை கருணாநிதி அமல்படுத்தியபோது வெளிநாடுகளில் வங்கிகளில் வாடிக்கையாளர்களை கையாளுவது எப்படி என்று பால பாடம் படித்துவிட்டு தற்போது வந்து சமூக நீதி என பேப்பரில் எழுதி வைத்து படிக்கிறார் பிடிஆர். இவர் தாத்தாவும், அப்பாவும் சமூக நீதிக்கட்சியில் இருந்ததால் இவருக்கும் சமூக நீதி சிந்தனை இருக்கிறது என்று சொன்னால் நம்ப தமிழக மக்கள் என்ன முட்டாள்களா? தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களை விட, பஃபல்லோ பல்கலைக்கழகத்தில் படித்து, லேமேன் சகோதரர்கள் நிறுவனத்தில் பல வருடங்கள் பணியாற்றிய ஒரு செல்வச் சீமானுக்கு, தீண்டாமையை ஏட்டிலே மட்டும் படித்த ஏட்டுச் சுரைக்காய்க்கு, வறுமையை பவர் பாயிண்ட்டுகளில் பார்த்த ஒரு கோமானுக்கு, சமூக நீதி புரிந்திருக்க வாய்ப்பில்லை.
கருணாநிதிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கொண்டு வந்த சமூக நீதி திட்டங்களில் 10 சதவீதம் கூட தற்போதைய ஸ்டாலின் அரசால் கொண்டுவர முடியவில்லை. காரணம் அவருக்கும் அதுபற்றி அக்கறை இல்லை. இருந்தால் அமெரிக்க மூளையை வாடகைக்கு எடுத்து வந்துள்ள நிதியமைச்சர் சொல்வதை கேட்பாரா? சமூக நீதி சிந்தனையுடன் இலவச திட்டங்கள் கலைஞர் கொண்டு வந்தாலும் அதில் கை வைக்காமல் அத்திட்டங்களை மேலும் செழுமை படுத்தியவர் ஜெயலலிதா. உதாரணம் பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள் இலவச லேப்டாப், சைக்கிள், பஸ்பாஸ், சீருடை என அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.
பெண்கள் சுய உதவிக்குழு ஜெயலலிதா காலத்தில் மேலும் செழுமை பெற்றது. இலவச திருமண உதவி திட்டத்தை மேலும் செழுமை படுத்தி தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றினார் ஜெயலலிதா. கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகையை உயர்த்தி பேறுகால உதவி பொருட்கள் வழங்கினார். இலவச ஆடு மாடு வழங்கும் திட்டம், கிராம புற வளர்ச்சி, இலவச மின்சாரம், இலவச வேஷ்டி சேலை திட்டம் என அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுச் சென்றார் ஜெயலலிதா.
கருணாநிதி கொண்டு வந்தாலும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மக்கள் நலன் உள்ளதா அதில் அடுத்த கட்ட பயன் மக்களுக்கு சேரும் வண்ணம் செயல்படுவோம் என செயல்பட்டார் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதியே கொண்டு வந்தாலும் இலவச திட்டங்களை ஒழிப்போம், மக்கள் தலையில் வரியாக இறக்குவோம் என உலக வங்கி மன நிலையில் செயல்படுகிறார் பிடிஆர். உதாரணம் தாலிக்கு தங்கம் திட்டம், ஏழை எளிய மக்கள் பசியாற கொண்டுவந்த அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டது.
இன்று அந்த அம்மா உணவகத்தை மூடினால் மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டி வரும் என்பதால் படிப்படியாக நிதியை குறைப்பது, உணவு தரம் குறைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, வரும் வாடிக்கையாளரிடம் ஜாதி, மதம், வருமானம், சொந்த வீடா? வாடகை வீடான்னு சர்வே எடுப்பதன் மூலம் வரவிடாமல் பண்ணுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு அம்மா உணவகத்தை படிப்படியாக ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இட்லி சாப்பிட வருபவன் என்ன ஜாதி என சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் என்பது ‘சமூக நீதி சாஸ்திரிகளுக்கு’ தெரியாததில் வியப்பில்லை. இட்லி சாப்பிட வரும் ஒரு பறையன் எப்படி உணர்வான் என்பது, தியாகராஜ முதலியாருக்கு புரியாது.
இதெல்லாம் பிடிஆர் காரணமா என்றால் சமூக நீதி என தூக்கிக் கொண்டு வருவது அவர்தானே ! அவருக்கு கீழ் தானே இதெல்லாம் வருகிறது ! ஒரு அரசு மக்களுக்கான அரசு என்றால் மக்கள் தலையில் சுமையை ஏற்றாமல் நிர்வாகத்தை நடத்தத்தான் ஆட்சியில் அமர்த்துவது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இவர் ஏதோ எம்.என்.சி கம்பெனி சி.இ.ஓ போலவும், மக்கள் எல்லாம் இவருக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் போலவும் அதிக லாபத்தை எப்படி ஈட்டுவது, எப்படி கசக்கி பிழிவது என்கிற மனநிலையில் செயல்படுகிறார். இது சமூக நீதியல்ல பிடிஆர் சார்.
உங்கள் அப்பா படம் முன் கொஞ்ச நேரம் நின்று உற்று பாருங்கள் அல்லது சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சமாதி, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா சமாதியில் ஐந்து ஐந்து நிமிடம் நின்று கண்மூடி அவர்கள் செயல்பட்டதை மனதில் அசைப்போட்டு பாருங்கள் அப்போதாவது அமெரிக்க பூர்ஷுவா பைத்தியம் விலகுகிறதா பார்ப்போம். ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால்கட்டண உயர்வு சமூக நீதி திட்டங்கள் ரத்து அல்லது நிதிக்குறைப்பு தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்ய நிதி இல்லை என கைவிரிப்பு இதுதான் ஒயிட் காலர் மெண்டாலிட்டி என்பார்கள்.
மக்கள் நலன் மேல் அக்கறை இருக்கவேண்டும் என்றால் மக்களோடு வாழ்ந்து பார்க்கவேண்டும். பசி என்றால் என்ன, ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்க மக்கள் படும் துயரம், மறைமுக வரியாக அவர்கள் வருமானம் பறிக்கப்படுவது பற்றி அறிந்திருக்க வேண்டும். கல்விக்கடன் ரத்து என்ற அறிவிப்பு அறிவிப்போடு நிற்பதும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதிய பலன்களை கொடுக்காமல் இழுத்தடிப்பதும், பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவராமல் ஏமாற்றுவதும், மின்கட்டணத்தை மாதம் தோறும் கணக்கிட்டு வசூலிப்போம் என்று மக்களிடம் போலி வாக்குறுதி கொடுத்து தற்போது சால்ஜாப்பு சொல்வதும் எந்த சமூக நீதியில் வருகிறது தெரியவில்லை.
அரசு வருவாயில் லீக்கேஜ் என்று சொன்னதை, டாஸ்மாக், பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு வரும் வருவாயில் வரவேண்டிய பணம் எங்கோ செல்வதாக நீங்கள் சொன்ன கருத்து என மேற்கண்ட கருத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கிறார்கள். அது உண்மையுங்கூட, உங்களுக்கு அது குறித்த கவலை இருக்கிறது. அதே நேரம் டாஸ்மாக் வருமானத்தை 50,000 கோடியாக அதிகரிக்கும் நோக்கமும் இருக்கிறது. இவை இரண்டுமே அதிகார வர்க்க மனநிலை. டாஸ்மாக் மூலம் ஒரு கோடி பேர் தினம் தினம் குடிக்கிறார்கள் இந்த பணம் அவரவர் வீட்டுக்கு போனால் அது வேறு வகையில் செலவாக ஒரு சுழற்சி பொருளாதாரமாக மாறும், மக்கள் வாழ்க்கை தரமும் நன்றாக இருக்கும் இதுபற்றி யோசிப்பவன் தலைவன் நல்ல அரசியல்வாதி. ஆனால் நீங்கள் கார்பரேட் அரசியல்வாதி ஆயிற்றே. உங்களுக்கு பணம் மட்டும்தானே கண்ணுக்கு தெரியும். உங்கள் நிதித்துறை செயலர் முருகானந்தம், 45 ஆயிரம் கோடி விற்பனையை 50 ஆயிரம் கோடியாக உயர்த்துவதை பெருமையான இலக்காக சொல்கிறார்.
டாஸ்மாக் மதுவிற்பனைக்கு மாற்றாக சாராயக்கடை, கள்ளுக்கடைகளை திறக்கலாமே. பனையேறும் மக்கள் வாழ்க்கை உயரும். மதுப்பிரியர்களும் நல்ல மதுவாக குறைந்த விலையில் அருந்தி வீட்டுக்கு மிச்சப்பணத்தை கொண்டுச் செல்வார்கள். இதுபற்றி யோசித்தால் நீங்கள் பிடிஆர் மகன். ஆனால் உங்களுக்கு இருப்பது அமெரிக்க கார்பரேட் மூளை அல்லவா எப்படி சிந்திக்க தோணும். மணல், கனிம வளக்கொள்ளைகள், 24 மணி நேர மது விற்பனை, போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது என எதைப்பற்றியும் உங்களுக்கு பிரச்சினை இல்லை.
இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது. அதற்கு முன் உங்களுடன் விவாதிக்கணும் என்றால் தகுதி வேண்டுமா? என்ன தகுதி சார் ? நீங்கள் யார் முதலில் சொல்லுங்கள். ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு பிள்ளையாக பிறந்ததை தவிர தமிழக மக்களுக்காக என்ன செய்தீர்கள் ? எப்படி இந்த பதவிக்கு வந்தீர்கள் பிடிஆர் ? ஜெயலலிதாவின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனை மக்கள் பிரச்சினைக்காக போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றுள்ளீர்கள். உங்களுக்கு திமுக என்கிற பின்புலத்தை தாண்டி பார்த்தால் ஒரு வங்கியின் உச்ச அதிகாரி என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது.
எல்லாம் தெரிந்ததால் நிதி அமைச்சர் என்றால் முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம், முன்னாள் நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன், தற்போதைய நிதித்துறை இணைச் செயலர் முருகானந்தம் போன்றோர் உங்களை விட சிறப்பாக கையாளுபவர்கள் ஆயிற்றே. அவர்களைவிட நீங்கள் மேலானவரா? பொருளாதாரத்தில் இவர்கள் அளவு ஞானம் கிடையாது, மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்தவன், மக்கள் இன்ப துன்பங்கள் அறிந்தவன் என்கிற அனுபவமும் இல்லை. உங்களையே தகுதி பார்க்காமல் நிதி அமைச்சர் ஆக்கி இருக்கும் போது உங்களுடன் வாதாட தகுதி வேண்டுமா?
உங்கள் ட்விட்டர் பக்கங்களை திரும்பி பார்த்தால் உங்கள் படிப்புக்கும், பதவிக்கும் தகுதியில்லாமல் சாதாரண உடன்பிறப்பு மனநிலையில் நீங்கள் பதிவிட்டதை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கலாம். சின்னப்பசங்க சண்டை போல் ’என்கிட்ட இது இருக்கு உன்கிட்ட இது இருக்கா’ என்று கேட்பது போல் நான் அமெரிக்கா ரிட்டர்ன், நான் இன்னாரின் மகன் என்னிடம் வாதாட தகுதி வேண்டும் என்ற வாதம் வைப்பதற்கு முன் உங்கள் தலைவர் சிறந்த நிர்வாகி, முதல்வராக 5 முறை பதவி வகித்த கலைஞர் பள்ளி மேல்நிலை படிப்பை தாண்டாதவர் என்பதை சற்று யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
மக்கள் முதல்வராக அறியப்பட்ட காமராஜர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்த எம்ஜிஆர், உங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த உங்கள் ஆட்களால் பெண் என்பதால் கேவலமாக மேடையில் விமர்சிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்டோரும் பள்ளி படிப்பை தாண்டியவர்கள் அல்ல. ஆனால் மேற்சொன்ன நால்வரும் அமெரிக்க மூளையை வாடகைக்கு எடுத்தவர்கள் அல்ல, மக்கள் பிரச்சினையை அணுகியவர்கள். அதுவும் மனதிலிருந்து பிரச்சினையை அணுகியவர்கள். மக்களுடன் பயணித்தவர்கள்.
நீங்கள் தேர்தல் அறிக்கையில் “அனைத்து குடும்பத்தலைவிக்கும்” என்று சொல்வீர்களாம், அதை பின்னர் ”தகுதி வாய்ந்த குடும்பத்தலைவி” என்று மாற்றிக்கொள்வீர்களாம். அதை கேட்டால் கோபம் வருமாம். ஆங்கிலத்தில் ’சட்டையர்’ என்ற வாக்கியம் நீங்கள் அறியாதது அல்ல. கார்ட்டூன் மூலம் கிண்டலடித்த காலங்களின் மறுவடிவம் தான் தற்போதைய மீம்ஸ். அதை ரசித்து கடக்கணும், முடியாவிட்டால் ட்விட்டர் பக்கம் வராமல் இருக்கணும். உங்கள் பொய்களையே நாங்கள் சகித்து வாழும்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் துயரத்தை கேலி வடிவில் போட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதோ? மக்களுக்கு கோபம் வரும்போது அதன் பலனாக வீட்டில் உட்காரும்போது தெரியும். உங்களுக்கென்ன மறுபடியும் அமெரிக்கா பறந்துவிடுவீர்கள். உங்கள் சகாக்கள் தானே அனுபவிப்பார்கள்.
ஆகவே ”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்கிற குறளை உங்கள் தலைவர் எழுதியுள்ள குறளோவிய அர்த்ததுடன் எடுத்து படியுங்கள். தமிழ் தெரியவில்லை என்றால் அருகிலுள்ளவர்களை படிக்கச் சொல்லி அர்த்தம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். விமர்சனத்தை ஏற்பவனே நல்ல அரசியல்வாதி. முடியவில்லை என்றால் மூடிகிட்டு போங்க என்று உங்கள் பாணியில் அழகாக ஆங்கிலத்தில் சொல்ல வராது. விலகிச் செல்லுங்கள் என நாகரீகமாக சொல்கிறோம்.