ராகுல் காந்தி ‘மோடி’களைக் குறித்து அவதூறாகப் பேசினார் என்று வழக்குத் தொடுக்கப்பட்டு அதற்கு தீர்ப்பு வந்ததும் அவசர அவசரமாக எம்பி பொறுப்புக்கு தகுதி இல்லை என நீக்கப்பட்டிருக்கிறார். ‘சட்டம் தன கடமையைச் செய்தது’ என்று பிஜேபிகாரர்கள் சொல்லிக் கொள்ளலாம். அவர்களுக்கேத் தெரியும், இது பழிவாங்கும் நடவடிக்கை என்பது.
உடனேயே திமுகவினரும் ‘இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். சொல்லிக் கொண்டே மீம்ஸ் போட்டதற்காக ஒரு இளைஞனை கைது செய்திருக்கிறார்கள். கடந்த வாரம் நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளுமே திமுக மற்றும் பாஜகவின் பாசிச முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றன. கருத்து சுதந்திரத்துக்காகவே உருவானது போல ஒரு பிம்பத்தை தங்கள் மீது வலிந்து ஏற்படுத்திக் கொள்ளும், திராவிட முன்னேற்றக் கழகம் செய்த இழிவான ஒரு செயல், பிரதீப்பை கைது செய்தது.
பிரதீப் ஒரு வருடத்திற்கு முன்னதாக எனக்கு அறிமுகமானார். இப்போது அவருக்கு 23 வயது. என்னோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றார். அவருக்கென்று தனியாக தொழில் இருக்கிறது. பிஜேபியில் இருந்து, வெளி வந்தவர். @voiceofsavukku என்று ஒரு ட்விட்டர் ஹேண்டில் தொடங்கி, என்னுடைய நேர்காணல்கள் உள்ளிட்டவற்றை பகிரட்டுமா என்று பிரியத்துடன் கேட்டபோது சம்மதித்தேன். அவருடனான எனது நட்பு தொடங்கிய சில நாட்களிலேயே நான் சிறைக்கு சென்று விட்டேன். நான் சிறையில் இருந்தபோது பிரதீப் உள்ளிட்ட பலர் செய்த உதவிகளை நான் பட்டியலிட்டால் அது புத்தகமாக மாறும். நான் சிறையிலிருந்து வெளியே வந்தது வெறும் நீதிமன்ற உத்தரவால் மட்டுமே நடந்திருக்கவில்லை. பிரதீப் போல பலர் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை பட்டியலிட்டால், கோழை திமுக அரசு அவர்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனால் தவிர்க்கிறேன்.
@voiceofsavukku ஹேண்டில் விரைவில் பிரபலமாகி, 20 ஆயிரம் ஃபாலோயர்களைப் பெற்றது. என்னிடமும் என் கருத்தை ஆதரிக்கும் பிரதீப் போன்றவர்களிடமும் திமுக ஐடி விங் மற்றும் திராவிட ஆதரவாளர்கள் மிகக் கேவலமாகவும், அற்பத்தனமாகவும் நடந்து கொள்வார்கள். இதனை வெளிப்படையாகவே அவர்கள் செய்வார்கள். இது குறித்து என்னிடம் நெருக்கம் கொண்டவர்கள் கோபமும் வருத்தமும் பட்டிருக்கிறார்கள். புகார் சொல்லியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இது சகஜம் தான். பொதுவாழ்க்கைக்கு வந்தால் இதையெல்லாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். எனக்கு அறிமகம் இல்லாத நபர்கள் கூட ‘உங்களைப் பத்தி கேவலமா எழுதறாங்க” என்று சொல்லும்போது, ‘விடுங்க. என் வேலையை நான் செய்துட்டு தான் இருப்பேன்” என்று சொல்லியிருக்கிறேன். என்னுடன் பயணிப்பவர்களும் அந்த மனநிலையில் இருப்பவர்கள் தான். என்னிடம் மோதியவர்கள் இப்போது எனது நண்பர்களையும், நெருக்கமானவர்களையும் குறிவைத்து தாக்குகின்றனர், இந்த செயலுக்கு திமுக அரசு காவல்துறையினை ஏவுகிறது. காவல்துறைக்கு வேறு வேலையே இல்லையா? நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை கேட்க நாதியற்று இருக்கும்போது ஒரு மீம்ஸுக்காக ஒரு இளைஞனைக் கைது செய்வதை தலையாய செயல் போல நினைத்து காவல்துறையை ஏவி விடுவதன் பெயர் அரசியல் தந்திரமா?
அப்படி அந்த மீம்ஸில் என்ன இருந்தது? குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகை திட்டத்தை கிண்டல் செய்து, கவுண்டமணி செந்திலின் ‘கட்டபொம்மன்’ பட நகைச்சுவை காட்சியை நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் மற்றும் ஸ்டாலினை ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட வீடியோ மீம். அந்த வீடியோ மீமை பிரதீப் உருவாக்கவில்லை. எனக்கு நாள்தோறும் பல மீம்சுகள் வரும். அதில் ஒன்று தான் இது. நான் தான் அதை பிரதீப்புக்கு அனுப்பி பதிவாகப் போடச் சொன்னேன்.
‘கட்டபொம்மன்’ படத்தில் வரும் அந்தக் காட்சி பெண்களை இழிவுபடுத்துகிறதா என்று கேட்டால், ஆமாம், அது இழிவு செய்யும் ஒரு காட்சி தான். ஒரு பெண்ணினுடைய தகுதியைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அதை ஒரு நகைச்சுவை என நினைத்து முதிர்ச்சியில்லாமல் அந்தப் படத்தில் சேர்த்திருந்தார்கள். ஆனால் ஒரு அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு சட்டசபையில் பட்ஜெட் தாக்குதல் செய்யும்போது ‘தகுதிவாய்ந்த குடும்பத்தலைவி’ என்று சொல்லுவது அந்த நகைச்சுவை காட்சியை விடவும் ஆபாசமானதாக இல்லையா? யார் தகுதியை யார் தீர்மானிப்பது? தகுதி வாய்ந்த என்பதற்கான அர்த்தம் என்ன? இதனை எப்படி புரிந்து கொள்வது? இந்த தகுதி வாய்ந்த என்பது பெண்களை எரிச்சல்படுத்தியது என்பதை சமூகவலைதளங்களில் அவர்கள் வெளிப்படுத்திய கோபத்தில் தெரியவில்லையா? உங்கள் இலட்சணம் இந்த நகைச்சுவை காட்சி போலத் தான் உள்ளது என்று முதல்வர் மற்றும் நிதியமைச்சரை நோக்கி சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? சொல்லப்போனால் பெண்களை இழிவுபடுத்துவதாக திமுக மீது நாம் தான குற்றம் சொல்ல வேண்டும். மாறாக அதை எடுத்துச் சொன்னவர் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள்.
பிரதீப் கைது செய்யப்பட இருந்த நாளன்று, திமுகவினர் சமூக வலைதளங்களில் குதூகலிக்க ஆரம்பித்தனர். ஐடி விங் தலைவர் டிஆர்பி ராஜா, நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் ஆகியோர் இடையே உரையாடல்கள் நடந்துள்ளன. திமுகவினர் புகார் கொடுத்தால் அது அரசியல் பழிவாங்கல் என்று நினைத்துக் கொள்வார்கள் என்று, திமுக அரசிடம் பதவியை பிச்சையாக பெற்ற தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவரான A.S குமாரியை வைத்து புகாரைப் பெற்றுள்ளனர்.
எந்தளவுக்கு இவர்கள் அவசரம் காட்டியிருக்கிறார்கள் என்றால் சென்னை சைபர் கிரைமின் மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள் வெளி மாநிலங்களில் உள்ள குற்றவாளிகளை தேடச் சென்றுள்ள நிலையில், எமர்ஜென்சிக்காக சென்னையில் இருக்கும் டீமை இறக்கி விட்டிருக்கிறார்கள். குழுவினை அனுப்பியவர் கூடுதல் ஆணையர் மகேஷ்வரி. இந்த அதிகாரிகளெல்லாம் இந்தப் பதவியில் இருக்கிறார்கள் என்றால் குடும்பத்தின் தயவால் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மகேஷ்வரி, கூடுதல் எஸ்பி ஷஜிதாவிடம் பொறுப்பை ஒப்படைக்க, ஒரு குழு கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரதீப்பின் வீட்டுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கதவை உடைப்பேன் என்று மிரட்டி உள்ளே நுழைந்து, பிரதீப்பின் போன், அவர் தாயார் போன், மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, அவர் தந்தையை தலைகீழாக கட்டி வைத்து உதைப்பேன் என்று மிரட்டியுள்ளனர். பிரதீப் கைது செய்யப்பட்ட தகவல் இரவு 12.30 மணிக்கு எனக்கு தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் எனக்கு நெருக்கமான அதிகாரிகளை அழைத்து விசாரித்ததில், கைது செய்தது சென்னை காவல் துறை என்று தெரிய வந்தது.
பிரதீப்க்கு எதிராக உசிலம்பட்டியில் புகார் அளிக்கப்பட்திருக்கிறது என்று எனக்கு முதலில் தெரிய வந்தது. நான் உசிலபட்டியில் விசாரிக்கையில் அப்படி எந்தப் புகாரும் வரவில்லை என்றார்கள். பிரதீப்பை அழைத்து, “வீட்டிலேயே இரு எங்கும் போக வேண்டாம்” என்று சொன்னேன். கைது செய்யப்பட்டாலும் அவன் உறுதியாக இருப்பான் என்று எனக்குத் தெரியும். அவனை நான் தைரியப்படுத்தித்தான் வைத்திருந்தேன். ஆனாலும் கூட இது போன்ற சாதாரண ஒன்றுமேயில்லாத விசயத்துக்கெல்லாம் காவல்துறை கைது நடவடிக்கை வரை செல்கிற அற்பத்தனத்தை செய்ய மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். இன்னும் அற்பத்தனமாய் நள்ளிரவில் கைது செய்திருக்கிறார்கள்.
காலையில் ஜாமீன் உள்ளிட்ட வேலைகளை பார்க்கத் தொடங்கினேன். எழும்பூரில் உள்ள நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது தெரிந்து, காலை 9.30 மணிக்கு அங்கே சென்றேன். எனக்கு கடும் கோபம். எத்தனையோ அவசர வழக்குகள் இருக்கும்போது இந்த வழக்கினை எதோ தலைபோகிற சட்டம் ஒழுங்கு பிரச்சனை போல நினைத்து நீதிபதி வீட்டுக்கே விசாரணைக்கு அழைத்துப் போக வேண்டிய அவசியம் என்ன? பத்திரிகையாளர்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகாத்தானே. காவல்துறை அதிகாரத்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இப்படியெல்லாம் நடந்து கொள்வது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளிடம் என் கோபத்தை வெளிப்படையாக காண்பித்தேன். “இது வரைக்கும் குடுத்த கம்ப்ளையிண்டுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்துட்டீங்களா ? ஒரு சின்னப்பையனை கைது பண்ணித்தான் உங்க விசுவாசத்தை காட்டணுமா ? உங்க அடிஷனல் எஸ்பி ஷஜிதாவுக்கு ஐபிஎஸ் ஆகணும்னு ஆசை இல்லையா ? திமுக அரசு நிரந்தரமா இருக்கப்போகுதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்களா ? ஷஜிதா எப்படி ஐபிஎஸ் ஆகறாங்கன்னு நான் பாக்கறேன். நீங்க எல்லாரும் இதுக்கு பதில் சொல்லணும்” என்று கத்தினேன்.
பொதுவாக ஒருவரைக் கைது செய்தால் அவரை எந்தப் பிரிவில் கைது செய்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை காவல்துறை கைது செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு சொல்ல வேண்டும். அந்த விபரங்கள் இருந்தால்தான் பெயில் மனு தாக்கல் செய்ய முடியும். பிரதீப் கைது செய்யப்பட்ட பிறகு அவரை எந்த க்ரைம் நம்பரில் கைது செய்திருக்கிறார்கள் என்று வழக்கு விபரங்களைக் கூட அவருடைய பெற்றோரிடம் தெரிவிக்க மறுத்திருந்தார்கள். நான் சென்று நேரில் கேட்டதும் தான் தந்தார்கள். அனைத்து எப்.ஐ.ஆர்களையும் இணையத்தில் பார்க்க முடியும். ஆனால், இந்த எப்.ஐ.ஆரை மட்டும் பார்க்க முடியாமல் தடுத்து வைத்திருந்தார்கள். ஏன் இந்த அச்சம்?
ஒரு மனிதனுக்கு சட்ட உதவி இங்கு அவசியம். பிரதீப்பின் வழக்கறிஞர் வரவேண்டியதிருந்தது. இதனை நீதிபதியிடம் சொல்லி, போராடி, ‘பிரதீப்பை வழக்கறிஞர் வந்ததும் ரிமாண்ட் செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதும், பிரதீப்பை தனது வீட்டில் இருந்து நீதிமன்றம் அழைத்து வரச் சொன்னார். வழக்கறிஞர் வந்ததும் அவர் மூலமாக பிரதீப் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். துணிச்சலாக, உறுதியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். நம்பிக்கையோடு தலையாட்டினான்.
வழக்கறிஞர் மூலமாக அவன் சொல்லியனுப்பிய தகவல், “இது அண்ணனுக்கு போட்ட ஸ்கெட்ச்சு. அண்ணன் ஒரு ஏ 21 சாம்சங் போன் வாங்கித் தந்து, இதை போடுன்னு சொன்னதா வீடியோவுல பேசச் சொன்னாங்க. நானும் சரி பேசறேன்னு சொல்லிட்டு, வீடியோ எடுக்கும்போது, அண்ணனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொல்லிட்டேன்.
“நாங்க சொல்ற மாதிரி வீடியோவுல பேசுனா ஈசியா வெளிய வந்துடலாம்; இனிமே இது மாதிரி பண்ண பண்ண மாட்டேன். பண்ணதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். சவுக்கு சங்கர் எனக்கு போன் வாங்கித் தந்து பேசச் சொன்னார்னு சொல்லணும். இல்லன்னா இன்னும் அடிஷனல் செக்ஷன்ஸ் சேத்து, குண்டாஸ் போட்டுடுவோம். உன் இஷ்டம்” என்று அடிஷனல் எஸ்பி ஷஜிதா பிரதீப்பிடம் சொன்னதும், “அது மாதிரி பேச முடியாது” என்று பிரதீப் மறுத்திருக்கிறான். அதற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல், காலை ரிமாண்டுக்கு அழைத்து வந்து விட்டனர்.
ரிமாண்ட் செய்வது தவறு என்று பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளைக் காட்டி வழக்கறிஞர் வாதாடியும், அன்று விடுமுறை நாளானதால், ரிமாண்ட் செய்ய வந்திருந்த பொறுப்பு நீதிபதி, பொறுப்பை தட்டிக் கழித்து, ரெகுலர் நீதிபதியிடம் உங்கள் வாதத்தை எடுத்து வையுங்கள், நான் ரிமாண்ட் செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.
பிரதீப்பிடம் தைரியம் சொல்லி விட்டு, அவன் பெற்றோருக்கும் தைரியம் சொல்லி விட்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பிரதீப்பை சிறையில், பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.
பிரதீப்பின் ஜாமீன் மனு மீது வரும் திங்கட்கிழமை உத்தரவு வர இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த விவகாரத்தில் பிரதீப்பின் உறுதி மிக மிக பாராட்டுதலுக்குரியது.
ஒரு பத்திரிகையில் வருகிற கார்ட்டூன், தலையங்கம் போன்றவற்றுக்காக இதற்கு முன்பு அரசின் அழுத்தத்தால் பத்திரிகையாளர்களை கைதுசெய்திருக்கிறார்கள். அநேகமாக எல்லா பத்திரிகைகளும் இதற்காக நீதிமன்றங்களில் இப்போது வரை வழக்கினை சந்தித்தும் வருகிறார்கள். ஆனால் சாமானியன் ஒருவர் மீது வழக்குப் போடுவதன் மூலம் இது அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகத் தான் பார்க்கிறேன். வீணாக அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை இது. இன்று காலம் மாறுகிறது. ஒவ்வொருவருமே தங்களுடைய கருத்தினை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அரசும் அரசு இயந்திரங்களும் தவறு செய்யும்போது சுட்டிக் காட்டுகிறார்கள். தனக்கு பிடிக்காத கருத்து சொன்னார்கள் என ஒவ்வொருவரையும் இந்த அரசு கைது செய்யுமா? அரசை விமர்சித்தால் கைது என்று சொல்வதற்கு வெட்கப்பட்டு பெண்களை இழிவுபடுத்தியதால் கைது என்று இந்த திமுக அரசு சொல்லும் என்றால், பெண்களை திமுகவினர் எப்படி தரம் தாழ்த்தி ஆபாசமாக சொல்லக்கூட கூசும் அளவுக்கு இணையதளத்திலும் மேடைகளிலும் பேசுகிறார்கள் என்று தெரியாமலா இருக்கிறோம். பெண்களை தங்கத் தட்டில் வைத்து தாங்கும் அரசா இது? சொந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்து கூட பெண்களை பாதுகாக்க வழியில்லாத ஒரு அரசு தானே இது? இந்தக் கைது பெண்கள் உரிமைக்காகவோ அவர்களை பாதுகாக்கும் நோக்கிலோ செய்யப்பட்டது அல்ல. முழுக்கவும் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த நடவடிக்கையையும் பெண்கள் உரிமை என்கிற கேடயத்தின் பின்னே ஒளிந்துகொண்டு செய்வது தான் இன்னும் கேவலமானதாக இருக்கிறது. இத்தனை அச்சம் ஒரு அரசுக்கு எதற்கு? செய்யும் செயலும் நோக்கமும் தெளிவாக இருந்திருக்குமானால் அரசு எதற்கு இப்படி பயந்து அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டு ஒரு கைதினை செய்ய வேண்டும்?
இந்த கைதுக்குப் பிறகு ஆயிரக்கணக்கானவர்கள் அதே மீம்ஸை பகிர்ந்தார்களே அத்தனை பேரும் இதன் மூலம் அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் என்று தானே அர்த்தம். அத்தனை பேரையும் காவல்துறை கைது செய்யுமா? தமிழ்நாட்டின் கல்வி, சட்டம் ஒழுங்கு, உள்கட்டுமானம் என்று ஓராயிரம் பிரச்சனைகள் தீர்க்கபப்டாமல் இருக்கின்றன. அதில் ஒரு அரசு கவனம் செலுத்தாமல் நள்ளிரவில் தீவிரவாதியை சுற்றி வளைப்பது போல ஒரு சாமானியனைக் கைது செய்வதில் ஆர்வம் காட்டினால் எப்படி இந்த தமிழ்நாடட்டுக்கு விடியல் வரும்?
இந்த இலட்சணத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் மீதான அவதூறு வழக்கு, தண்டனை மற்றும் எம்பி தகுதி நீக்கம். அதானி விவகாரத்தை எப்போது ராகுல் கையில் எடுத்தாரோ, அப்போதே மத்திய அரசிடம் நடுக்கம் தென்படத் தொடங்கியது. மைக்கையெல்லாம் ம்யூட் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்து போனார்கள். இனி ராகுலை பேச விடக் கூடாது என்று முடிவெடுத்த பிறகே, வழக்கின் துரிதமான விசாரணை, தண்டனையெல்லாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘நான் இரண்டாவது முறையாக எப்போது அதானி பற்றி பேசப் போகிறேனோ என்ற பயத்தை நான் பிரதமரின் கண்களில் பார்த்தேன்’ என்று தெள்ளத் தெளிவாக ராகுல் சொல்லியிருக்கிறார்.
“சிறைத் தண்டனைகள் என்னை பயமுறுத்தாது. 2 ஆண்டுகள் என்ன. 5 ஆண்டுகள் கொடுக்கட்டும்; 7 ஆண்டுகள் கொடுக்கட்டும். இதைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன். அதானிக்கு 20 ஆயிரம் கோடிகள், ஒரு ஷெல் கம்பெனியில் எப்படி வந்தது. அது அதானியின் பணமல்ல. அதுதான் விஷயம். இதை நான் மக்களவை உள்ளிருந்தாலும் பேசுவேன்; வெளியே இருந்தாலும் பேசுவேன்’ என்றார். இன்று நாம் பார்ப்பது வேறு ஒரு ராகுல் காந்தி.
அவரிடம் அறச் சீற்றம் தென்பட்டது. பிஜேபி ஆதரவு பத்திரிக்கையாளர்களை அனாயசமாக கையாண்டார். நீங்கள் தாராளமாக பிஜேபிக்கு வேலை செய்யுங்கள். ஆனால் நெஞ்சில் ஒரு தாமரை சின்னத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அவரிடம் கோபம் தென்பட்டது. இது நல்லதே. இந்தக் கோபம்தான் மனிதனை ஓட வைக்கும். அந்த ஓட்டம் வெற்றி இலக்கை நோக்கிய ஓட்டம். எதிரியை வீழ்த்துவதை நோக்கிய ஓட்டம். அந்த வேகம் பிஜேபி போன்ற எதிரியை எதிர்கொள்ள அவசியம் தேவை. ராகுலின் கோபத்தில் அது தென்படுகிறது.
ராகுல் போன்ற மாபெரும் ஆளுமைக்கும், பிரதீப் போன்ற சாமானியனுக்கு இழைக்கப்பட்டது பேச்சுரிமையை பறிக்கும் செயல்கள். இரண்டுமே பாசிசச் செயல்கள். இரண்டுமே கோழைகளின் செயல்கள். இரண்டுமே அச்சத்தின் வெளிப்பாடுகள். இந்த அச்சம் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறது.