தன்னை சமூக நீதிக்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியில் தான் ஜாதிப்பிரச்சினைக்காக பெரிய தலைவர்கள் மோதிக்கொள்ளும் விந்தையெல்லாம் நடக்கிறது. சமூக நீதியின் மொத்த குத்தகை கட்சியில் தான் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் மிக மோசமாக உள்ளது. பெண்களுக்கு 30% என இன்றும் பேசி வருபவர்கள் கட்சியில், பெண் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருக்கிறது.
பெண்களை மதிப்போம், பாலின சமத்துவம் என பேசும் கட்சியில் தான் எதிர்கருத்து கூறும் பெண்களை நாக்கூசும், படிக்க முடியாத வார்த்தைகளால் குதறியெடுப்பதை பார்க்கிறோம். கோமான்கள், சீமான்கள், பண்ணையார்கள் என விமர்சித்த கட்சியில் தான் தலைவர்கள் கோமான்கள், சீமான்களாகவும், பண்ணையார்கள் மனப்பான்மையிலும் இருப்பதை பார்க்க முடிகிறது.
முற்போக்கில் எங்களை மிஞ்ச ஆளில்லை, நாகரீகத்தை படைத்ததே நாங்கள் தான் என்று கூறுபவர்கள்தான் அரத பழசான மன்னராட்சி வாரிசு அரசியலுக்கு வால் பிடிக்கின்றனர். 4 தலைமுறையானாலும் விசுவாசியாக இருப்பேன் என்று சட்டசபையிலேயே மூத்த அமைச்சர் பெருமையாக பேசுகிறார். கொத்தடிமை மனோபாவத்துடன் வாழ்வதை சுயமரியாதை என்கின்றனர். தகுதி பார்த்து தன்னுடன் வாதாட வேண்டும் என்கிறார் அமெரிக்க நாகரீகம் கற்ற அமைச்சர் ஒருவர்.
இன்றும் ஜாதிப்பெருமையை மனதுக்குள் வைத்துக்கொண்டு, பெண்களை அநாகரீகமாக பேசிக்கொண்டு, பகுத்தறிவுக்கு ஒப்பாத அனைத்து விஷயங்களையும் செய்துக்கொண்டு அதை திராவிட மாடல் என்று சொல்லும் விந்தையைத்தான் தமிழகம் பார்க்கிறது. சுயபெருமை, தற்புகழ்ச்சி, எதிரியை சாதாரணமாக எடைபோடும் புத்தி, கொத்தடிமை கூட்டங்களின் கோரஸ் வாய்ஸ்களில் மனம் மகிழும் மந்தபுத்தியின் மொத்தமாக ஒரு கட்சி இருந்தால் தமிழகம் என்னாவது?
இவைகளை செய்வது திமுக மட்டும் தானா? மற்ற கட்சிகளில் இல்லையா என்று கேட்கலாம், ஆனால் இவர்கள் மேற்சொன்ன அனைத்துக்கும் எதிரானவர்கள் போல் காட்டிக்கொண்டும் பெருமை பீற்றிக்கொண்டு ஒரு கூட்டத்தை வளர்த்துக்கொண்டு வருகின்றனர். அதனால் தான் இவர்கள் விமர்சனத்துக்குள்ளாகின்றனர். இன்றும் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் உள்ளது என வெளிப்படையாக பேசுவதை கேட்கலாம்.
இதன் அதிகப்பட்ச வெளிப்பாடுதான் திருச்சியில் நடந்த காவல் நிலைய தாக்குதல். சொந்தக்கட்சிக்காரனையே அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகுந்து தாக்கியது. காங்கிரஸ் கட்சியையே மிஞ்சிய கோஷ்டி பூசல். இந்த விவகாரத்தை மேலோட்டமாக பார்ப்பவர்கள் மற்றும் இது என்ன பெரிய விஷயம் என்று சாதாரணமாக பார்ப்பவர்களுக்காக இதன்பின்னால் உள்ள திடுக்கிடும் விஷயங்களை படித்தப்பின் எவ்வளவு பெரிய விஷயம் ஒரு சாதாரண கான்ஸ்டபிளால் தடுக்கப்பட்டுள்ளது என்பது புரியும்.
அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் ஆவடி நாசர், அமைச்சர் பொன்முடி, புதுக்கோட்டை எம்.பி எம்.எம்.அப்துல்லா போன்றோர் தங்களது பதவியின் மாண்பை மறந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்கள் என்பது சமீபத்திய வரலாறு. இவர்கள் பொது இடங்களில் பொதுமக்களை, கட்சிக்காரர்களை மோசமாக நடத்துவது, மோசமாக பேசுவது, எழுதுவது என்பதை தமிழகம் பார்க்கிறது.
சமூக நீதி கட்சி, பகுத்தறிவு கட்சி என்று பேசப்படும் திமுகவில் தான் இத்தகையா ஜாதிய எண்ணத்துடன் இருக்கும் இருக்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. திருச்சி என்றாலே அமைச்சர் கே.என்.நேரு குடும்பம் தான் ஆதிக்கம். சக கட்சிக்காரர்களை மதிக்கமாட்டார். யாராக இருந்தாலும் எடுத்தெறிந்து பேசுவார். இவரது மாவட்டத்தில் இவருக்கு போட்டியாக இருப்பவர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் மற்றும் திருச்சி சிவா. இருவரையும் இவர் மதிப்பதே இல்லை. இருவருமே அங்குள்ள பெருவாரியான சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கே.என்.நேரு இருவர் மீதும் பகைமை பாராட்டியே வருகிறார். இதன் ஒரு வெளிப்பாடாக திருச்சி சிவா சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு பேசுவது அவர்களை ஜாதிய எண்ணத்துடன் அணுகுவது தொடர்ந்ததால் அவர்கள் ஒன்று திரண்டு தலைமைக்கு தங்கள் தரப்பு நியாயம் தெரியவேண்டும் என்பதற்காக அமைச்சர் நேருவுக்கு கருப்புக்கொடி காட்டினர். இதனால் வந்ததே கோபம் நேருவுக்கு…. அவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டப்பின் நேருவின் ஆதரவாளர்கள் அவர்கள் மீது காவல்நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அங்குள்ள போலீஸார் தடுக்க முயன்ற போது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண் போலீஸ் ஒருவரின் கை எலும்பு முறிந்தது. இந்த தாக்குதல் பின்னணியில் ஒரு ஜாதிக்கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே நேருவின் எண்ணம் என்கிறார்கள் திருச்சி அரசியலறிந்தோர். நம்மை நேரு சமூக ஆட்கள் மதிக்கவில்லையே, தனி ஆதிக்கம் செலுத்துகிறார்களே என்று திருச்சி சிவா சமூக ஆட்கள் கருப்புக்கொடி காட்டினர். ஆனால் திருச்சி சிவா சமூகத்து ஆட்கள் கட்சி பிரச்சினையில், திருச்சி பகுதியில் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் ஒரு சமூகத்தை தவறாக பேசியதாக நேரு ஆட்கலால் தகவல் பரப்பப்பட்டு, அந்த சமூக ஆட்கள் கொந்தளித்துபோய் ஸ்டேஷன் புகுந்து தாக்கினார்கள் என்று ஊரை நம்ப வைத்து அதனால் இரு சமூகத்தினர் மத்தியில் மோதலை உருவாக்கவே திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்கின்றனர் காவல்துறையில் சிலர்.
ஆனால் அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்தது, சாதாரண கான்ஸ்டபிளின் செயல் ஒரு ஜாதிக்கலவரத்தை தூண்டும் செயலை தடுத்ததும் அல்லாமல், போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்கியது நேருவின் ஆட்கள் தான் என்பதையும் காட்டி கொடுத்துவிட்டது. அது வேறொன்றுமில்லை. ஸ்டேஷனிலிருந்த காவலர் எடுத்த வீடியோ யார் யார் உள்ளே புகுந்து தாக்கினார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. அவர்கள் அனைவரும் நேருவின் ஆதரவாளர்கள், நேருவின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என தெரிந்துபோனது. இதனால் அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை.
முதலில் தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என நேரு மறுத்தார். பின்னர் ஊடகங்களில் காவல் நிலையத்திலேயே கோஷ்டி சண்டையால் திமுக மானம் கப்பலேறியதும், தாக்குதல் நடத்தியவர்கள் நேருவின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பதும், பெண் காவலரின் கை உடைந்தது மட்டுமல்ல, அதற்கு முன் திருச்சி சிவாவின் வீட்டையும் அக்கும்பல் தாக்கியது திமுகவிற்குள் உள்ள கோஷ்டி பூசலை வெளிச்சம் போட்டு காட்டவே கட்சித்தலைமை போய் சமாதானபடுத்து என நேருவுக்கு உத்தரவிட்டது (என்ன ஒரு கடுமையான உத்தரவு, இதுவரை பெரிதாக நடவடிக்கை எதுவும் இல்லை)
நேருவும் வேறு வழியில்லாமல் திருச்சி சிவாவை சந்தித்தார், கரம் கோர்த்தார்..”கண்கள் பனித்தது, இதயம் இனித்தது” ஸ்டாலின் சொன்னதால் திருச்சி சிவாவுடன் கைகோர்கிறேன் என்று நேரு கெத்தாக கூறினார். ஆனால் இவர்கள் கோஷ்டி சண்டையில் கை உடைந்த பெண் காவலரின் கதி. கட்டுடன் வீட்டில் இருக்கிறார். சமாதானம் பேசிய பின்னரும் நேருவுக்கு மனது ஆறவில்லை காரணம் தனது திட்டத்தை தவிடு பொடியாக்கி வீடியோ எடுத்து வெளிவர காரணமாக இருந்தது யார் என்கிற கோபம் காவலர்கள் மீது திரும்பியது. வீடியோ எப்படி வெளியில் போனது என மாநில உளவுப்பிரிவே சைபர் பிரிவுடன் சேர்ந்து நேரடியாக விசாரித்தது.
தாக்கியது தப்பில்லையாம், பொதுச்சொத்துகளை இவர்கள் கட்சி கோஷ்டி பூசலால் சேதப்படுத்துவது தப்பில்லையாம். கட்சி மானம் கப்பலேறியது தப்பில்லையாம், இரு சமூககங்கள் இடையே ஏற்படவிருந்த மோதலை இது இரு திமுக நிர்வாகிகள் ஈகோவினால் ஏற்பட்ட மோதல் என நிரூபித்துவிட்ட வீடியோவை எடுத்த காவலர் மீது தப்பாம். இந்த வீடியோவில் ஸ்டேஷனில் புகுந்து தாக்கியதற்கு தலைமை ஏற்று நடத்தியது நேருவுக்கு, நேரு குடும்பத்தினருக்கு நெருக்கமான திருச்சி மாநகராட்சி நிதிக்குழு தலைவர் டி.முத்துசெல்வம், காஜாமலை விஜய், வி.ராமதாஸ், அனைத்து திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள், அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ், திமுக பொன்னகர் பிரதிநிதி திருப்பதி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட துரைமுருகன், “திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இவர்கள் யாரையும் தனக்கு தெரியாது என நேரு வழக்கம் போல் சப்பைக்கட்டு கட்டினார். ஆனால் தாக்குதலில் தலைமை வகித்த திருச்சி மாநகராட்சி நிதிக்குழு தலைவர் டி.முத்துசெல்வம், நேருவை தாண்டி அவரது குடும்பத்துக்கும் நெருக்கமானவர். நேருவின் தம்பி ரவிச்சந்திரன், நேருவின் அக்காள் வீட்டுக்காரர் ஆகியோருக்கு நெருக்கமானவர். ராமஜெயத்தின் நினைவு நாளான நேற்று அவர் குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்கிறார். குடும்பத்துக்கு நெருக்கமானவர்களையே தெரியாது என்று நேரு சொல்கிறார். திருச்சியில் தனது கட்சி கோஷ்டி விவகாரத்தில் ஏற்பட்ட கோபத்தை எதிர் அணியினரை தாக்க ஜாதிய பிரச்சினை போல் காட்ட முயன்ற நேரு நவீன சாதனங்களால் சிக்கிக்கொண்டார். அந்த காலமாக இருந்தால் இவர்கள் சொல்வதுதான் செய்தி, எழுதுவதுதான் வரலாறு.
தனக்கு யாரென்றே தெரியாது என்று நேரு கூறிய காஜாமலை விஜய்யின் வரலாறு சுவையானது. அதை அறிந்தால் நேரு எப்படி பச்சையாக புளுகுகிறார் என்பது தெரியும்.
விஜய் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். தொடக்கத்தில் திருச்சி சிவாவின் ஆதரவாளராக சமூக அடிப்படையில் சிவாவோடுதான் சேர்கிறார் காஜமலை விஜய். திருச்சியில் உள்ள ஈவேரா அரசுக் கல்லூரியை தனது கட்டுப்பாட்டில் எப்போதும் வைத்திருப்பார் காஜாமலை விஜய். அந்த கல்லூரியில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருப்பார் விஜய். திருச்சி சிவாவும், ஈவேரா கல்லூரியில் படித்தவர்தான். ஒரு முறை கல்லூரியில் நடந்த ஒரு தகராறில் அழகர்சாமி என்ற மாணவர் கொல்லப்படுகிறார்.
அப்போது, ஆயுதங்களோடு திருச்சி சிவாவை கொலைவெறியோடு துரத்தினார் காஜாமலை விஜய். அப்போது உயிருக்கு தப்பி திருச்சியின் மாவட்ட செயலாளராக இருந்த கேகேஎம். தங்கராசு வீட்டில் தஞ்சமடைந்து உயிரை பாதுகாத்துக் கொள்கிறார். இது 25 வருடத்துக் கதை.
திருச்சியில் நேரு காலத்துக்கு முன்பே மிகவும் செல்வாக்காக இருந்தவர் கேகேஎம். தங்கராசு. நகரச் செயலாளராகவும் ஆவின் சேர்மேனாகவும் இருந்தவர்.
திருச்சி சிவாவை காஜாமலை விஜய் தாக்க முயன்று எதிர்த்த செய்தி நேருவை அணுகுகிறது. சிவாவை எதிர்க்க இவன் தான் சரியான ஆள் என்று, காஜாமலை விஜயை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். கிட்டத்தட்ட நேருவின் பிஏவாக அறியப்படுகிறார்.
விஜய் உடன் வந்ததும், திருச்சியில் மூத்த திமுக தலைவராக இருந்த கேகேஎம் தங்கராசுவை படிப்படியாக ஓரம் கட்டி இல்லாமல் செய்து விட்டார் நேரு.
1989ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் முறை அமைச்சரான நேருவுக்கு பால்வளத் துறை, மின்சாரம் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை ஒதுக்கப்படுகிறது. அப்போது நேருவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் 1979 பேட்சை சேர்ந்த டிஎஸ்பி ராஜசேகர். அவர் பின்னாளில் 2006 திமுக ஆட்சியில் திருச்சி, கண்டோன்மெண்ட் உதவி ஆணையராக வருகிறார்.
அப்போது, இந்த காஜாமலை விஜய், உதவி ஆணையர் ராஜசேகரை, யூனிபார்மில் இருக்கையில் சட்டையை பிடித்து இழுத்து அறைந்து விடுகிறார். அப்போது திருச்சியில் ராஜசேகரின் பேட்ச் மேட்டாக இருந்த அல்மாஸ் அலி என்ற டிஎஸ்பி உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட்டுக்கு நெருக்கமானவர். அவர் மூலமாக ராஜசேகரை காஜாமலை அறைந்த விஷயம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும், எதுவுமே நடக்கவில்லை என்றால், காஜாமலை விஜய்க்கு பின்னால் அரணாக நேரு நின்றதே காரணம்.
இப்போது திருச்சி மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும், முத்துசெல்வம் என்பவரும் நேருவுக்கு நெருக்கமானவரே. இவர் மீது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகார்கள் நிலுவையில் இருக்கின்றன. திருச்சி மாநகராட்சியை கைக்குள் வைத்திருப்பவர்தான் இந்த முத்து செல்வம்.
2006ல் அமைச்சரான நேரு, முதல் முறையாக திருச்சி சர்க்யூட் ஹவுஸுக்கு வருகை தருகிறார். அப்போது சைலேந்திர பாபு திருச்சி ரேஞ்ச் டிஐஜி. சைலேந்திரபாபு நேருவை பார்க்க வந்ததும் சைலேந்திர பாபுவை பார்த்து காரணமே இல்லாமல் விஜய், “இப்போ யூனிபார்மை போட்டுக்கிட்டு வந்துருவீங்களே.. இத்தனை நாள் எங்க இருந்தீங்க. இவ்வளோ நாள் நாங்க அண்ணனுக்கு பாதுகாப்பு கொடுத்தோம். இனிமேலும் நீங்க தேவையில்ல. கெளம்புங்க” என்று மரியாதை குறைவாக சைலேந்திர பாபுவை பேசி விடுகிறார்.
திருச்சி தினத்தந்தி அலுவலகம் முன்பாக இருக்கும் டாஸ்மாக் கடையின் பாரை அப்போது காஜாமலை விஜய் நடத்தி வருகிறார். ஒரு நாள், மப்டியில் இரண்டு ஆயுதப் படை காவலர்கள் மது அருந்த வருகிறார்கள். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில், காஜாமலை விஜயை இந்த இரண்டு ஆயுதப்படை காவலர்களும் அடித்து வாயை உடைத்து விடுகிறார்கள். இதற்கும், சைலேந்திர பாபுவை அவமானப்படுத்தியதற்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.
தற்போது, காவல் நிலையத்தில் புகுந்து தாக்கிய வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவர் ஜாமின் மனுவையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் இருமுறை நிராகரித்த நிலையில் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மதுரையில் தங்கியிருந்து தினமும் மாலை 5 மணிக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால் திருச்சியில் இருந்தால் சாட்சிகளை மிரட்டி கலைக்கக்கூடும் என்பதால் அடுத்த நீதிமன்ற உத்தரவு வரும்வரை மதுரையில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது நிபந்தனை.
ஆனால் இவர்கள் தான் திருச்சி ”கரிகால் சோழன்” நேருவின் படைத்தளபதிகள் அல்லவா? கோர்ட்டாவது ’நீதிமன்றமாவது’ என்று மதுரைக்கு கிளம்பி வந்துவிடுவதும், மாலையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதுமாக உள்ளனர்.
நேற்று, திருச்சியில் இரண்டு நிகழ்வுகள். ஒன்று திருச்சி மாமன்றத்தின் பட்ஜெட் தாக்கல். மற்றொன்று, கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் நினைவு நாள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் காஜாமலை விஜய், முத்துசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களோடு நேருவின் சகோதரர் மற்றும் அக்காள் கணவர் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது புகைப்படங்கள் மூலமாக அம்பலப்பட்டுள்ளது.

ராமஜெயத்தின் நினைவு விழாவில் கலந்து கொள்ளும் முத்துசெல்வம், காஜாமலை விஜய். உடன் கே.என். நேருவின் மகன் அருண் நேரு
நீதிமன்றத்தின் உத்தரவு, இவர்கள் சாட்சிகளை கலைக்கக் கூடாது என்பதால் மதுரையில் தங்கி இருந்து கையெழுத்து போட வேண்டும் என்பதே. ஆனால் திருச்சியில் இருந்து மதுரைக்கு மூன்று மணி நேரமே பயண நேரம் என்பதால், மதுரையில் கையெழுத்து போட்டு விட்டு, இந்த ஐந்து பேரும் இருப்பது திருச்சியில்தான்.
சட்டம் நடைமுறை எல்லாம் சாதாரண மக்களுக்குத்தான், திமுகவினருக்கு கிடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதன்பின்னாவது திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் இவர்கள் ஜாமீனை ரத்து செய்து சிறையிலடைக்குமா? தெரியவில்லை. நேருவின் வாய்த் துடுக்கும், ஜாதிய வன்மத்தை கக்கும் பேச்சு ஒன்றும் புதிதல்ல திருச்சியில் அவரை அறிந்தவர்கள் அனைவருக்கும் அவரது பேச்சு தெரியும். 2001 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது திருச்சியில் பெரும்பான்மையான சமூகம் பற்றி விமர்சித்து பேச அது பரபரப்பாகி திருச்சியின் பல தொகுதிகளில் திமுக வெற்றியை அது பாதித்தது. லால்குடியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நேரு தோற்றுப்போனார். அதற்கு அவரது ஜாதிய வன்ம பேச்சே காரணம் என திமுகவுக்குள்ளேயே அப்போது புகார் கூறப்பட்டது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். – திருக்குறள்
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும் – இது கலைஞரின் குறளோவியம். 2006-11 ஆட்சியில் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டும், குடும்ப உறுப்பினர்களை ஆட்சி அதிகாரத்தில் தலையிட அனுமதித்துக் கொண்டும் உளவுத்துறை ஜாபர்சேட் பேச்சைக்கேட்டு எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் ஆட்சி செய்தார் கலைஞர். குறையை உணர்த்தியோர் அவமானப்படுத்தப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர், வழக்குகள் போடப்பட்டது. விளைவு தேர்தலில் படுதோல்வி அடைந்தது திமுக.
அன்று வானளாவிய அதிகாரத்தை வைத்துக்கொண்டு உளவுத்துறை புலி என ஜாபர்சேட் ஆட்டம் போட்டார். குறைகள் மன்னர் காதுக்கு போகவில்லை மாறாக குறை சொன்னோர் சிறைப்படுத்தப்பட்டனர். இதேபோன்று இப்போது ஒரு புலி உளவுத்துறையில் இருக்கிறார். திருச்சியில் இப்படி ஒரு மோதல் போக்கு உருவாகி உள்ளது, கட்சிக்குள் கோஷ்டி நோய் தலைவிரித்தாடுகிறது, விரைவில் வெடித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்று ரிப்போர்ட் போட முடியவில்லை.
”அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினாள், கண்கள் பனித்தது–இதயம் இனித்தது எல்லாம் சுபமே” என்பது போல் திருச்சி சிவா–நேரு சமாதான விவகாரம் பற்றி முதல்வருக்கு ரிப்போர்ட் போகுது. குறளோவியம் எழுதியவரின் மகன் ஆட்சியில் அதன் பொருள் உணராமல் ஆட்சி நடத்தினால், இதுபோன்ற தூங்கி வழியும் உளவுத்துறை இருந்தால், ஆட்சி மட்டுமல்ல கட்சியே கைவிட்டு போய்விடும்…இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்….