எதிரிக்கு எதிரி நண்பன் பாணியில் டிடிவியுடன் சந்திப்பு
நீண்ட நாட்களாக பேசிவந்த ஒரு விஷயம் இன்று நடந்துள்ளது. ஓபிஎஸ்–டிடிவி சந்திப்பு. ஓபிஎஸ் தன்னையும், தன் சொத்துக்களையும் காப்பாற்றிக்கொள்ள எந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இன்றைய சந்திப்பு நல்ல உதாரணம். அதிமுக அரசில் நல்ல பதவியில் இருந்து, தனது நலனை மட்டுமே யோசித்து கட்சியில் யாரிடமும் ஒட்டுதல் இல்லாமல், ஆனால் தலைமைக்கு ஆசைப்பட்டு தன்னால் முடிந்தவரை அதிமுக தலைமைக்காக போராடி கடைசியில் ஓரங்கட்டப்பட்டு வேறு வழியில்லாமல் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் டிடிவி, சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என முடிவெடுத்து அறிவித்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்சை வேண்டாத விருந்தாளியாகவே பார்த்த அதிமுகவினர்
ஓபிஎஸ் அதிமுகவில் செல்வாக்காக இருந்தாலும் அவர் ஒண்ட வந்தவர் பாஜக தலைமையால் மேலிடத்திலிருந்து திணிக்கப்பட்டவர், தனது ஆட்சிக்கு எதிராக 11 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்றவர் என்று தெரிந்தே வேண்டாவெறுப்பாகவே சேர்த்துக்கொண்டனர். அதன் பின்னர் இரட்டை தலைமை என்கிற பெயரில் அதிமுகவுக்குள் நடந்த குழப்பம், திமுக ஆட்சிக்கு வந்தப்பின்னர் திமுக எதிர்ப்பிலிருந்து ஓபிஎஸ் நழுவியது, திமுக ஆட்சியை புகழ்ந்தது, அதிமுக நிர்வாகிகள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. கட்சியில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கட்சித்தலைமைக்கு போட்டியிட்டதால் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
சட்டப்போராட்டத்திலும் தோல்வி. கடைசி பிடிமானமே டிடிவியுடன் கூட்டியக்கம்?
அதன்பின்னர் சட்டப்போராட்டம் நடத்திய ஓபிஎஸ் அதிலும் தோல்வியுற்று ஓரங்கட்டப்பட்டார். இவை அனைத்திலும் ஓபிஎஸ்சுக்கு மறைமுகமாக ஆளும் திமுக அரசு உதவியது வெளிப்படையாக அதிமுக தலைவர்களால் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது. ஓபிஎஸ் ஒரு நம்பகமான தலைவராக இல்லாததால் அவர் அதிமுகவினராலேயே ஓரங்கட்டப்பட்டார். எந்த வகையிலும் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. டெல்லி தலைமையும் வேண்டிய அளவு வாய்ப்பு கொடுத்தும் ஒன்றும் செய்ய முடியாத ஓபிஎஸ்சை கைவிட்டு எடப்பாடியை ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது ஓபிஎஸ்சுக்கு சிக்கலாக அமைந்தது.
டிடிவி வாக்கு பிரிப்பால் திமுகவுக்கு கிடைத்த தொகுதிகள்
இந்த நேரத்தில்தான் தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய, தான் தர்மயுத்தம் நடத்தி எதிர்த்த டிடிவி, சசிகலாவுடன் இணையலாம் என ஓபிஎஸ் முடிவெடுத்தார். எதிர்பார்த்த அளவுக்கு தனது அரசியல் பிரவேசம் இல்லை, எடப்பாடி குரூப்பும் அதிமுகவுக்குள் தன்னை விடவே கூடாது என்று கங்கணம் கட்டி வேலை செய்யும் நிலையில், தன்னை நாடி வரும் ஓபிஎஸ்சை ஏற்கலாமா? வேண்டாமா? என்கிற நிலை சசிகலாவுக்கு. டிடிவி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு சில கணிசமான இழப்பை ஏற்படுத்தி திமுக வெற்றிக்கு காரணமாக இருந்தார். இது திமுக தலைமைக்கும் நன்றாக தெரியும். 10.5% இட ஒதுக்கீடு, டிடிவி பிரித்த வாக்குகள், பாஜகவுடன் அதிமுக அமைத்த கூட்டணி இந்த மூன்றும் இல்லாவிட்டால் தான் ஆட்சியை தனித்து பிடித்திருக்க முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும்.
அதிமுகவை பிளவுப்படுத்தும் திமுக தலைமையின் திட்டத்துக்கு ஒத்துபோகும் ஓபிஎஸ்
இந்த அடிப்படையில்தான் அதிமுக ஒழிக்கப்பட முடியாத ஒன்று என்பதை திமுக தலைமை புரிந்து வைத்துள்ளது. அதன் வலுவான வாக்கு வங்கி கடுமையான எதிர்ப்பலையிலும் குறையவில்லை, கூட்டணி கட்சிகள் பலம் மற்றும் மேற்சொன்ன அம்சங்களால் மட்டுமே இரட்டை இலையை வீழ்த்த முடிந்தது என்பது நன்றாக தெரிந்து வைத்துள்ளது திமுக தலைமை. அத்தகைய இரட்டை இலை விட்டால் 2024 தேர்தலிலும், 2026 தேர்தலிலும் திமுகவை வீழ்த்தும் என்கிற உண்மையும் திமுக தலைமைக்கு தெரியும். இதையெல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்து திமுக தலைமை கையில் எடுத்த ஆயுதம் ஓபிஎஸ்.
அதிமுக விசுவாசியா ஓபிஎஸ்?
ஓபிஎஸ் ஒன்றும் அதிமுக விசுவாசி அல்ல. அவர் மக்கள் தலைவரும் அல்ல. உருவாக்கப்பட்ட ஒரு தலைவர். சுயநலன் ஒன்றையே வைத்து செயல்பட்டதால் தான் சொந்த மாவட்டத்தில்கூட செல்வாக்கு இல்லாமல் இருக்கிறார். ஓபிஎஸ்சுக்கு இப்போதுள்ள பிரச்சினை எல்லாம் சேர்த்த சொத்துகளை காப்பாற்ற வேண்டும், மகன் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யவேண்டும். திமுக ஆதரவு நிலைப்பாட்டால் தன்மீது வழக்குகள் எதையும் வராமல் பார்த்துக்கொண்ட ஓபிஎஸ் திமுக தலைமை கொடுத்த அஜெண்டாப்படி 2 ஆண்டுகளாக எடப்பாடிக்கு கொடுக்கும் தொல்லைக்கு அவர்களால் எதிர்க்கட்சியாகவே செயல்பட முடியாமல் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சபரீசனுடன் கூட்டு மகனைக்காப்பற்ற கோரிக்கை, ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியாம்
தான் சேர்த்த சொத்துக்களை பராமரிக்கும் சேலம் ராஜா என்கிற நபர் ஏற்கெனவே ஜி.ஸ்கொயர் இடங்களை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறார். இதன்மூலம் ஓபிஎஸ்–சபரீசன் கூட்டும் வெளிவந்துள்ளது. சப்ரீசன் சென்னை வந்ததும் சபரீசனை சந்திக்க ஓபிஎஸ் அழைக்க தன் வீட்டுக்கு அழைத்த சபரீசனிடம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சாதாரணமாக சந்திப்பதுபோல் சந்திப்பு நடக்க ஏற்பாடு செய்தது ஓபிஎஸ். இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் சொத்துகள் மற்றும் அவரது மகன் மீது சிசிபியில் போடப்பட்டுள்ள வழக்குகளை நீர்த்துபோகசெய்யும் பேச்சு இருந்துள்ளது. இப்படிப்பட்டவர் எந்த நோக்கத்துக்காக எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தாரோ, புரட்சித்தலைவி வழிநடத்தினாரோ அந்த வழியில் என்று இன்றும் பேட்டி அளிக்கிறார்.
திமுகவின் அசைன்மெண்டே டிடிவி சந்திப்பு
திமுக போட்டுக்கொடுத்த அசைன்மெண்ட் அவர்களின் கவனிப்பு மூலமே தனது அரசியலை நடத்தும் நிலையில் இருக்கிறார் ஓபிஎஸ். கோடரி கம்பு என்று சொல்வார்கள் அதுபோல் எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை அழிக்கும் தோல்வி அடையச்செய்ய அதன்மூலம் திமுகவை வெற்றிப்பெறச் செய்யவே புது அணி அமைக்கிறார். ஓபிஎஸ்ஸுக்கு வேறு வழியில்லை. ஆனால் தான் வாழ எதையும் செய்வார் ஓபிஎஸ் என்று மேலே சொன்னோமே அதைத்தான் தற்போது செய்கிறார். கோவை மாநாட்டில் இரண்டு இயக்கங்களும் இணைந்து செயல்படுவோம் என்று டிடிவி–ஓபிஎஸ் இணைந்து பேட்டி அளித்துள்ளனர். ஓபிஎஸ் பின்னால் என்ன இயக்கம் இருக்கிறது? தெரியவில்லை. டிடிவிக்கும் வேறு வழியில்லை, அரசியல் நடத்தவேண்டும், அவருக்கும் பசிக்கும் அல்லவா?
ஓபிஎஸ் பின்னால் டெல்லி மேலிடம் உள்ளதா?
ஓபிஎஸ்–டிடிவி இணைப்பின் பின்னால் டெல்லி மேலிடம் உள்ளதாக விவரமறியாமல் பேசி வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்த வியூகம் அமைக்கும் பாஜக தங்கள் அணிக்கு இடையூறு செய்ய தானே ஒரு அணியை உருவாக்குவார்களா? இரட்டை இலை சின்னம் மட்டுமே அதிமுகவின் அடையாளம், இவர்கள் எல்லாம் அதிமுக அல்ல. ஜெயலலிதா போல் கவர்ச்சி மிக்க தலைமையும் இல்லாத இவர்களால் எதையும் செய்ய முடியாது என்பது பாஜகவுக்கும் தெரியும்போது எப்படி ஒரு அணியை உருவாக்க முயற்சிப்பார்கள். இது முழுக்க முழுக்க திமுகவின் ஆதரவோடு அமைக்கப்படும் அணியே சுருங்கச்சொன்னால் 2016-ல் ஜெயலலிதா உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணி போல் அதிமுக வாக்கை பிரிக்க செய்ய திமுக தலைமை போடும் கணக்கே இந்தக்கூட்டணி. இது வெல்லுமா? வெல்லாதா? என்பது அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகளே தீர்மானிக்கும்.
திமுக எதிர்ப்பே அதிமுகவின் பலம்..ஓபிஎஸ் எதிர்ப்பாரா?
தன் சொத்தை காக்க திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து திமுக உதவியுடன் சட்டமன்றத்தில் அதிமுகவை எரிச்சலூட்டும் ஓபிஎஸ், அதிமுகவின் பலமே திமுக எதிர்ப்பு என்பதை வசதியாக மறந்துப்போனார். திருச்சி மாநாட்டில் ஆளும் திமுகவுக்கு எதிராக எத்தனை தீர்மானம் நிறைவேற்றினார்கள்?, திமுகவை ஆதரித்துக்கொண்டே உண்மையான அதிமுக நான் தான் என்று ஓபிஎஸ் சொன்னால் வைத்தியலிங்கமும், பண்ருட்டி ராமசந்திரனும் நம்புவார்கள். திமுக மீது கடுமையான கோபத்திலிருக்கும் அதிமுக தொண்டன் நம்புவானா? இதனால் ஓபிஎஸ் புதிதாக எதையும் சாதிக்க முடியாது. டிடிவி திமுக எதிர்ப்பில் இருப்பவர். ஓபிஎஸ் திமுக ஆதரவாளர். பொருந்தா கூட்டணி இணைவதற்கு பின் என்ன டானிக் உள்ளது போக போக தெரியும்.
சாதகம் மட்டுமல்ல இதுநாள் வரை செய்துவந்த அரசியல் பாதகத்தையும் டிடிவி–ஓபிஎஸ் சந்திக்கவேண்டும்
இந்தக்கூட்டணியில் இணைய இதுவரை சசிகலா முடிவெடுக்கவில்லை. அவருக்கு தெரியும் திமுக ஆதரவாளர் ஓபிஎஸ் ஒன்றுக்கும் பிரயோஜனப்படமாட்டார் என்று. இரண்டு மாத காலமாக பிடிகொடுக்காமல் இருக்கிறார். ஒருவேளை அவருக்கும் ஆசைக்காட்டப்பட்டால் எந்த முகத்துடன் எடப்பாடி அதிமுகவை எதிர்ப்பார். திமுகவை எதிர்ப்பதுதானே ஜெயலலிதா காட்டியவழி. ஓபிஎஸ் சசிகலா குடும்பத்தார் மீது சாட்டிய குற்றச்சாட்டுகள், சசிகலா, டிடிவியை ஒருங்கிணைப்பாளராக இருந்து நீக்க கையெழுத்து போட்டது, டிடிவி பற்றி பேசியதை அவர்கள் மறக்கலாம், ஆனால் போகுமிடமெல்லாம் வரும் விமர்சனங்களை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டுமே. மொத்தத்தில் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை புதைகுழியில் தள்ள திமுக தலைமை போட்ட திட்டத்துக்கான கருவிகளா இவர்கள்? காலம் பதில் சொல்லும்.