சாட்டையை சுழற்ற முடிவு செய்த உதயநிதி..மாற்றம் வருமா?
மருமகனுக்கு குறைந்த மவுசு..இதுதான் காரணமா? ஓபிஎஸ்–சபரீசன் கைகோர்ப்பின் பின்னணி
அமைச்சரவை மாற்றத்தில் தலையிடும் உதயசந்திரன், கொதிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகள்
மொத்தமாக மாற்றப்படுகிறதா உளவுத்துறை..கோபத்தில் முதல்வர்
டிஜிபி ரேசில் புதுத்திருப்பம்…இப்படி கூட நடக்கலாம் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்
சைக்கிள் டெண்டரில் பெரிய அமவுண்ட் பார்த்த அண்ணா நகர் டாக்டர்
”என்னண்ணே அரசியல் களம் சூடாக இருக்குதுபோல? இந்தா கூலாக மோர் குடி” என்று வந்து அமர்ந்தார் குமார்ஜி. ”ஆமாம் குமார் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை, ஏராளமான தகவல் இருக்கு” என்ற கோபால், ” கமால்பாய், போஸ் பாண்டி எங்கே” என்று கேட்க ”பின்னாடி திரும்பிப்பாருங்க அப்பவே வந்துட்டோம்”னு கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டனர் இருவரும்.
”ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு ரொம்ப நாளா எதிர்பார்த்ததுதான் இப்ப சேர்ந்திருக்காங்க என்ற கோபால், அமைச்சரவை மாற்றம், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் என பெரிய மேட்டரெல்லாம் இருக்கு பேசுவோம்”. என்றார். ”முதலில் ஓபிஎஸ் மேட்டர சொல்லுண்ணே, இதோட அதிமுக பணால் பாஜக இரண்டுபேரையும் வச்சுகிட்டு அரசியல் பண்ணப்போறாங்க” என்றார் போஸ்பாண்டி உற்சாகமாக.
”வசதியா உங்க அண்ணன்மார்கள் கை இதற்கு பின்னால் இருப்பதை மறைச்சிகிட்டு பாஜக, இரண்டு அணின்னு காதில் பூ சுற்றுகிறாயே போஸு? நிறையப்பேர் இப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. தங்கள் கட்சி வளராத நிலையில் வீழ்த்தப்படவேண்டிய திமுகவுக்கு எதிராக களம் அமைத்த பாஜக ஓபிஎஸ்–சுக்கு வேண்டிய அளவு சப்போர்ட் செய்தது உண்மைதான். இரண்டுபேரையும் மட்டுமல்ல நான்குபேரையும் இணைத்து ஒன்றுபட்ட அதிமுகவாக திமுகவை எதிர்க்க அணி திரட்டலாம்னு நினைச்சாங்க. ஆனால் அது கூடிவரவில்லை.
ஓபிஎஸ்–சுக்கு 10% ஆதரவுகூட இல்லை, அவரால் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லைன்னு போகப்போக தெரிஞ்சுகிட்டாங்க, எடப்பாடிகிட்ட நெருங்குகிறார்கள். ஆனால் ஓபிஎஸ் மூலம் தான் அதிமுகவுக்கு தொல்லை கொடுக்க முடியும் என்று திமுகவுக்கு நன்றாக தெரிந்திருந்ததால் அவரை நன்றாக பயன்படுத்திகிட்டாங்க. அவரும் தனது சுயநலத்திற்காக எதையும் செய்யும் மனநிலையில் வேறு வழியில்லாமல் திமுக சொல்படி ஆடத்தொடங்கினார். அதற்கு இரண்டு காரணம் இருக்கு ஒன்று அரசியல் ரீதியாக நிராதராவாக்கப்பட்டது, இரண்டு தனது சொத்துக்களை பாதுகாக்க அரசியலில் நீடிக்க வேண்டிய நிலை. இதுதான் ஓபிஎஸ்சை தனது எதிரி டிடிவி நோக்கி தள்ளியுள்ளது” என்றார் கோபால்.
”ஏண்ணே பாஜக அதிமுக இல்லாவிட்டால் வளர வாய்ப்புள்ளது, அதனால் கொங்குமண்டலத்துக்கு எடப்பாடி டீம், தென் மண்டலத்துக்கு ஓபிஎஸ்,டிடிவி டீம்னு உருவாக்குது என்பதுதான் உண்மை, திமுகவுக்கு ஓபிஎஸ்சுக்கு கனெக்ஷனா கொஞ்சம் யதார்த்தமா சொல்லுண்ணே” என்று போஸ் பாண்டி தன் வாத திறமையை காட்டினார். ”போஸு உங்க ஆட்களுக்கு வாய் காதுவரை இருக்கும், ஆனால் அதை நம்ப மக்கள் தயாராக இருக்கணும் அல்லவா? அதிமுக எடப்பாடி தலைமையில் தான் உள்ளது என்பதை பாஜக டெல்லி தலைமை உணர்ந்ததால் தான் எடப்பாடியை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம். அமித்ஷா சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் நடந்தது.
இரட்டை இலை சின்னம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று பாஜகவுக்கும் தெரியும். திமுகவுக்கும் தெரியும். அந்த இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தன் செல்வாக்கால் தென் மாவட்டங்களில் தோல்வியை தழுவியதையும் நாம் பார்த்தோம். கொங்கு மண்டலம் போல் ஓபிஎஸ் குறிப்பிட்ட சதவிகித இடங்களை வென்றிருந்தால் திமுக நிலை சிக்கலாகி இருக்கும். ஆனால் ஓபிஎஸ்சால் முடியவில்லை. இதுதான் யதார்த்தம். இது பாஜகவுக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது என்.டி.ஏ கூட்டணியை பலகீனப்படுத்த பாஜகவே உதவி செய்யுமா?அதுவுமில்லாமல் திமுக துணையுடன் ஓபிஎஸ் செயல்படுவது ஊருக்கே தெரியும். ஆகவே முழுக்க முழுக்க இது திமுக அசைன்மெண்ட். போக போக தெரியும்” என்றார் கோபால்.
“இதற்கு வலு சேர்க்கிற பல விஷயங்கள் இருக்கு சொல்கிறேன் அப்புறம் சொல்லு ஓபிஎஸ் பின்னாடி இருக்கிறது யார் என்று?” என்ற கோபால் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ”ஓபிஎஸ் –சபரீசன் சந்திப்பு மிகப்பெரிய அரசியல் நாகரீக சந்திப்பு போல் திமுக ஆதரவு ஆட்கள் பேசுகிறார்கள். ஆனால் அதன் பின்னால் பெரிய பிஸ்னெஸ் டீல் இருப்பது இவர்களுக்கு தெரியுமா? சேப்பாக்கம் ஸ்டேடியம் சந்திப்பே திட்டமிட்ட சந்திப்புதான், ஆனால் சாதாரண சந்திப்பு போல் காட்டிக்கொண்டார்கள்” என்றார் கோபால்.
”ஏண்ணே சேப்பாக்கத்துல ஐபிஎல் மேட்ச் தான் நடக்குதுன்னு பார்த்தால் சின்னவர் மது விளம்பரம், நடிகர் நடிகைகள் மீட், தோனியோட வியாபார விளம்பர மீட், சபரீசன் – ஓபிஎஸ் வியாபார மீட்டுன்னு என்னன்னமோ நடக்குதேண்ணே” என்று வாயை பிளந்தார் கமால் பாய். வாயை மூடு இன்னும் வாயை பிளக்கவேண்டிய பல மேட்டர் இருக்கு என்ற கோபால் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் நில விவகாரங்களை ஆபரேட் செய்பவர் சேலம் விஐபி ராஜா என்பவர். இவர் ஜி.ஸ்கொயர் நிலங்களையும் ஆபரேட் செய்பவர் இவரது தொடர்பும் வருமான வரித்துறை ஆவணத்தில் சிக்கியுள்ளது. இனி ஜி.ஸ்கொயர் பெயரில் நில வியாபாரம் கொஞ்சம் கஷ்டம்தான் என முடிவுக்கு வந்துள்ள சபரீசன் இந்த சேலம் விஐபி ராஜா மூலமாக நில விற்பனையை ஆபரேட் செய்யும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பின் ஒருபார்ட் இது, இன்னொரு பார்ட் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது சிசிபியில் உள்ள வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க சபரீசன் சந்திப்பு என்கிறார்கள். சபரீசனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதும் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் சபரீசன், ஆனால் அங்கு சந்தித்தால் நோக்கத்துடன் சந்திப்பது தெரிந்துவிடும் என்பதால் கில்லி தாண்டு ஆட்டம் கூட ஆடாத ஓபிஎஸ் ஐபிஎல் பார்க்க சேப்பாக்கம் வந்து சபரீசனை சந்தித்துள்ளார். சபரீசனும் லண்டனிலிருந்து வந்தவுடன் ஒரு நாள் முழுவதும் வீட்டில் ஓய்வெடுத்த நிலையில் தன்னை ரெய்டு எதுவும் பாதிக்கவில்லை கேஷுவலாக இருக்கிறேன் எனக்காட்டிக்கொள்ள ஐபிஎல் பார்ப்பதுபோல் இந்த சந்திப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார். ஆக, இவர்கள் சந்திப்புக்கு பின்னால் உள்ள நோக்கமும் ஓபிஎஸ் அம்மா வழியில் கட்சியை கட்டிக்காக்கும் லட்சணமும் புரியுதா போஸ் பாண்டி?” என்று நக்கலாக சிரித்துக்கொண்டே கேட்டார் கோபால்.
“ஏண்ணே எனக்கு ஒரு சந்தேகம் ரவீந்திரநாத் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போட்டுள்ள வழக்குக்கும், சபரீசனை சந்திப்பதற்கும் என்னண்ணே சம்பந்தம்” என்று அப்பாவியாக கேட்டார் கமால் பாய், ”எது நடந்தாலும் மாற மாட்டேன்னு இருக்கிற சமூக வலைதள கொத்தடிமை மாதிரி இருக்கிறாயே பாய், சபரீசன் என்றால் என்ன கமிஷனர் ஜிவால் என்றால் என்ன? சபரீசன் சொன்னால் ஜிவால் கேட்க மாட்டாரா?” என்று கேட்டார் கோபால். ”அதெப்படி தனக்கு வாழ்க்கை கொடுத்து காத்து வருகிற சபரீசன் பேச்சை கேட்காமல் வேறு என்ன வேலை இருக்கு அவருக்கு, அடுத்து டிஜிபி பதவி வேறு வருது விசுவாசம் பெரிதாக இருக்கும் அல்லவா” என்று குமார் எடுத்துக்கொடுக்க, ”இப்ப புரியுதா பாய்?” என்றார் கோபால்.
“புரியுதுண்ணே யாரோட யாரு யார் மனசுல யாருன்னு ரொம்ப நுணுக்கமா பார்க்கவேண்டி இருக்கு” என்ற கமால்பாய், ”ஏண்ணே இரண்டாண்டு சாதனை எப்படி இருக்கு?” என்று கேட்டார். ”எதிர்பார்த்த அளவு உற்சாகம் இல்ல, அனைத்து உற்சாகத்தையும் ஆளுநர் பிடுங்கிட்டாரே, ஆளுநர் பேட்டிக்கு பிறகு முதல்வர் ரொம்ப அப்செட்டாயிட்டாராம், அவர் பங்குபெறும் ஒரு ஜாலிப்பேட்டி கலைஞர் டிவியில ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். இளைஞர்கள், மாணவர்கள் இடையே உரையாடும் நிகழ்ச்சி அதை கூட கேன்சல் செஞ்சிட்டாராம், ஆளுநர் சொன்ன பல குற்றச்சாட்டுகளில் பாகிஸ்தான்–தமிழ்நாடு ஆயுதம், போதைபொருள் கடத்தல் தான் சி.எம் ஐ அதிகம் பாதித்த விஷயமாம்”. என்றார் கோபால்.
“ஆளுநருக்குத்தான் அருமையா பதில் சொன்னாரே முதல்வர் அப்புறம் என்ன?” என்று கோபமாக கேட்டார் போஸ்பாண்டி. ”ஆமா இப்ப கோபப்படு, 21 மாநிலங்களில் ஆளுநர் பேட்டி வந்துள்ளது. உடனே கோபப்படாமல் 3 நாள் கழித்து கோபப்படுவதுதான் நடவடிக்கையா? சி.எம். அழகாக பதில் சொன்னார், எத்தனை நாள் பொறுத்து சொன்னார்? ஆளுநர் அடிப்படை விஷயங்களை தொட்டு பேட்டி கொடுத்தாரே அவர் பேட்டி வந்தவுடன் முதல்வர் பிரஸ் மீட் வைத்து பதில் கொடுக்க எது தடுத்தது? அட்லீஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராவது பதில் சொல்லி இருக்கணும் அல்லவா? ஏன் 3 நாட்கள் மவுனம் காத்தார்கள்? மருமகன் மீது நடவடிக்கை வரும்னு பயமா?” என்று ஆக்ரோஷமாக கேட்டார் குமார்ஜி.
“ஆளுநருக்கு எதற்கு உடனே பதில் சொல்லணும்” என்று கேட்டார் போஸ்பாண்டி. ”அப்ப ஏன் 3 நாள் கழித்து பதில் சொன்னீர்கள்?” என்று திருப்பி கேட்டார் குமார்ஜி. ”இதில் எல்லோரும் ஒரு விஷயத்தை கவனிக்க மறந்துட்டீங்க, ஆளுநர் பேட்டி முழுவதும் அபத்தமாக இருந்தது, அதற்குக் கூட பதிலளிக்க திமுக தலைமைக்கு தயக்கம், 3 நாள் பொறுத்து முதல்வர் பதில் அளிக்கிறார், அதுவும் மேடையில் பேசும்போது. ஆனால் ஆளுநர் சுட்டிக்காட்டிய சில விஷயங்கள் திமுகவுக்கு எச்சரிக்கை மணி என்று சில ஐபிஎஸ் அதிகாரிகள் கருத்தாக இருக்கு. உளவுத்துறை ஃபெயிலியர் அதை திமுக தலைமை கண்டுக்கொள்ளாமல் வசதியாக பதிலளிக்காமல் தவிர்த்ததை பார்த்தீர்களா? பாகிஸ்தான் மேட்டர் பற்றி காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஏன் வாயே திறக்கவில்லை, சட்டம் ஒழுங்கு பற்றி கேள்விகேட்டால் மணிப்பூர் கலவரத்தை கைகாட்டுகிறார் முதல்வர்” என்றார் கோபால்.
”இதுக்கு என்னதாண்ணே தீர்வு ஒவ்வொரு தடவையும் உளவுத்துறை ஃபெயிலியர்னு பேசிகிட்டே கடக்கிறோம்” என்று கேட்டார் கமால்பாய். ”தீர்வு வந்திருக்குன்னு நினைக்கிறேன், அதற்கு முன் அமைச்சரவை மாற்றம் பற்றி சொல்லிவிடுகிறேன்” என்ற கோபால் சொல்ல ஆரம்பித்தார். ”பிடிஆர் ஆடியோ விஷயத்தில் என்ன மறைத்தாலும் பிடிஆர் மீது குடும்பம் கடும் கோபத்தில் இருக்கு. இதனால் அவரது இலாகாவை மாற்றுகிறோம் என்று முதல்வர் பிடிஆர் கிட்ட நேரிலேயே சொல்லிவிட்டார். காரணம் இதுமட்டும் அல்ல பிடிஆரின் ஆணவ நடவடிக்கை, ஒரு அமைச்சரையும் மதிப்பதில்லை, நிதி அமைச்சர் என்பதால் அவர் அப்ரூவலுக்காக நிற்கும் ஃபைல்களை நகர்த்துவதே இல்லை, பல வேலைகள் தேக்கம் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. இப்போது மாற்றாவிட்டால் பிறகு மாற்ற முடியாது என்பதால் மாற்றுகின்றனர். அவருக்கு தகவல் தொழில் நுட்பத்துறை கொடுத்து கனிமொழி ஆதரவாளர் மனோதங்கராஜுக்கும் செக் வைக்கின்றனர்.
ஆவடி நாசர் என்ன எச்சரிக்கை கொடுத்தும் தன் செயல்பாட்டை மாற்றவில்லை, தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சரிவை நோக்கி போவதும், ஆவடி நாசர் அடங்காமல் திரிவதாலும் அவரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டார்கள். அந்த இடத்தில் மனோ தங்கராஜும், தகவல் தொழில்நுட்பத்துக்கு பிடிஆர் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமிக்கலாம் என்று முடிவுக்கு வர தான் இப்போதுதான் தொழில்துறையில் ஓரளவு கால் பதித்து முதலீடுகளை ஈர்க்கும் நிலையில் இலாகா மாற்றினால் எப்படின்னு கேட்டிருக்கிறார். ஆனால் ’சக்திமான்’ உதயசந்திரன் நான் நிதித்துறை செயலராக வருகிறேன் நீங்கள் நிதி அமைச்சராக வாருங்கள் என்று சொல்லி சம்மதிக்க வைத்துள்ளார்”. என்றார் கோபால்.
“ஏண்ணே குறுக்கிடுவதற்கு மன்னிக்கணும் பொதுவா ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம் முதல்வர்தானே இதையெல்லாம் முடிவு செய்வார் போ என்றால் ஒதுக்கிய துறைக்கு போவதுதானே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி?” என்று அப்பாவியாக கேட்டார் கமால் பாய். ”இன்னும் 200 ரூபாய் ஊபிஸ் போலவே சிந்திக்கிறாயே, நீ என்ன சபரீசன் போல லண்டனில் இருந்தா வந்தாய், சென்னையில் தானே குப்பை கொட்டுகிறாய்? இந்த ஆட்சியே ஒரு விநோதமான ஆட்சின்னு உனக்கு தெரியாதா? ’சக்திமான்’ உதயசந்திரன் பவர் பற்றி கேள்விப்படவில்லையா? பலவிதமான யூ டர்னுக்கு காரணமான அதிகாரிகள் ஆட்சி நடக்கும் அரசு இது” என்று கோபப்பட்டார் குமார்ஜி.
“குமார் ரொம்ப பொங்காத ஏதோ மத்தியில் எல்லாம் சரியா நடப்பதுபோல் பொங்குகிறாய், அங்கு பெரியண்ணன் செய்றததான் இங்க நம்ம முதல்வரும் செய்கிறார், ஒரு மல்யுத்த வீராங்கனை பாலியல் கொடுமை விவகாரத்தில் ஒரு எம்பி மீது நடவடிக்கை அவ்வளவு தயக்கம், டெல்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கிற அளவுக்கு போராட்டம் போய்கிட்டிருக்கு, எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்” என்ற கோபால், ”பாய் உதயசந்திரன் தான் அரசாங்கத்தில் எல்லாமே, அவராக பார்த்து தன் இலாகாவை மாற்றிக்கொள்கிறார், அவராக பார்த்து இவரை அமைச்சராக போடுங்கள் நான் செயலராக இருந்து பார்த்துக்கொள்கிறேன் என்று நிதித்துறைக்கு போகிறார் என்கிறார்கள். உதயசந்திரனாவது ஐஏஎஸ் அதிகாரி பரவாயில்லை என்று சொல்லலாம் இதில் இன்னொரு தலையீடும் உள்ளது, அதனால் ஐஏஎஸ் அதிகாரிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள், அதை சொல்லும் முன் அமைச்சரவை மாறுதல் பற்றி சொல்லி முடிச்சுக்கிறேன்” என்று சொன்ன கோபால் தொடர்ந்தார்.
”டி.ஆர்.பி ராஜா நீண்ட நாள் காத்திருப்புக்குப்பின் அமைச்சராகிறார். அவருக்கு தொழில்துறை வர வாய்ப்பிருக்குன்னு சொல்கிறார்கள். துரைமுருகன் துறை மாற்றப்பட இருந்தது. கனிம வளத்தை தங்கம் தென்னரசுவிடம் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டார்கள். செவ்வாய்க்கிழமை காலை முதல் பெரும் பிரச்சினை செய்து விட்டார் துரைமுருகன். அழுது ஆர்ப்பாட்டம் செய்து, இது என் கடைசி பதவி, அப்படி இப்படின்னு அழுததும், சி. எம்முக்கு ரொம்ப சங்கடமாயிருச்சு. நீங்களே போயி, கவர்னருக்கு கடிதம் கொடுத்துட்டு வாங்கண்ணேன்னு சொல்லிட்டாரு.
“சி எம் இவ்வளவு பலவீனமாவா இருக்காரு ?”
“அதுல சந்தேகம் வேறவா ? இதுக்கெல்லாம் பாவம் பாத்தா அரசியல் பண்ண முடியுமா ? ஒரு நிர்வாகிக்கு உறுதியா முடிவெடுக்குற துணிவு வேண்டும். இப்படியெல்லாம் பாவம் பாத்தா முடியாது.
துரைமுருகனால ஆட்சிக்கு ஏகப்பட்ட கெட்டப் பேரு. மணல் கடத்தல் காரங்களை கூட்டிக்கிட்டு துபாய்க்கு போகும்போது கூட்டிட்டு போறாரு. ஆட்சிக்கு வந்ததும் மணலுக்காக 300 சி வாங்கிட்டாரு. மாதம் 10 சி வாங்கிட்டு இருக்காரு. இதுல பத்து பைசா கட்சிக்கு வர்றதில்ல. எதுக்காக இவர் மட்டும் பெரிய அமவுண்ட்டை தூக்கிட்டு போறது மட்டுமில்லாம கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துறதை கட்சி அமைதியா பாத்துக்கிட்டு இருக்கனும் ? ஜி.ஸ்கொயர் ரெய்டிலும் மணல் மாஃபியாக்கள் கரிகாலன் உள்ளிட்ட 3 பேர் தொடர்புடைய ஆவணங்கள் பண பரிமாற்றம் ஐடியிடம் சிக்கியுள்ளது. இவ்வளவு பணம் பார்த்தாலும் குடும்பத்துக்கு பைசா தராமல் சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசிவிட்டு பெப்பே காட்டிவிட்டு போய்விடுகிறார் துரைமுருகன். இவ்வளவு தெரிஞ்சும் சி எம் இவர் மேல நடவடிக்கை எடுக்க முடியலன்னா என்னதான் பண்றது ?
டாஸ்மாக் கொள்ளைகள் குறித்தும் பேச்சு நடந்துருக்கு. ஆனா முதல்வருக்கு செந்தில் பாலாஜி மீது என்ன அக்கறையோ தெரியவில்லை. இதைப் பற்றி பேச்சே எடுக்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டாங்க. அதே போல சட்டத் திருத்தங்களில் குழப்பம் செய்த ரகுபதியோட மாற்றத்தையும் முதல்வர் வேண்டாம்னு சொல்லிட்டாரு.” என்ற கோபால் கொஞ்சம் தண்ணி கொடுப்பான்னு வாங்கிகுடித்தார்.
”அண்ணே வேறு ஏதோ சுவாரஸ்ய கதை இருக்குன்னு சொன்னியே அது என்னண்ணே”-ன்னு கேட்டார் குமார். சொல்றேன், சக்திமான் உதயசந்திரனின் வானளாவிய அதிகாரத்தை பார்த்து ஐஏஎஸ் அதிகாரிகள் கொதிப்பில் இருக்கையில் அதையும் தாண்டி கொதிப்பான விஷயமாக சி.எம். அரசியல் செயலர் தினேஷும், சக்திமான் உதயசந்திரனும் சேர்ந்து எடுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் லிஸ்டுதான் இப்ப ஹாட் டாபிக். தான் நிதித்துறை செயலராக போகும் முன் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தை கொண்டுவந்து விடணும் என்று முதல்வரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டாராம் உதயசந்திரன்.
அதன்படி உதயசந்திரனும், தினேஷும் சேர்ந்து மாற்றப்படவேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலை தயாரித்துள்ளனர். இதில் பல மாவட்ட ஆட்சியர்கள் லிஸ்டும் உள்ளதாம். உதயசந்திரனாவது ஐஏஎஸ் முதல்வரின் செயலர் சகித்துக்கொள்ளலாம், தினேஷ் என்பவர் யார் அவருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் என்ன சம்பந்தம் அவர் எப்படி லிஸ்ட் தயாரிக்கலாம் என்கிற கொதிப்பில் முதல்மரியாதை சிவாஜி கணேசன் மாதிரி உள்ளுக்குள்ளேயே வேதனையை வைத்து புளுங்குகிறார்களாம் அதிகாரிகள். தப்பு இருந்தா முதல்வரிடம் சொல்லலாம், முதல்வரே தப்பாக இருந்தா யார்கிட்ட போய் சொல்றதுன்னு தங்கப்பதக்கம் பிரமிளா மாதிரி புலம்புகிறார்களாம்.
இது எதைப்பற்றியும் கவலைப்படாத சக்திமான் உதயசந்திரனை, ’நீங்கள் போய்விட்டால் அந்த இடத்தில் யார்’ என முதல்வர் கேட்க உமாநாத் சரியான சாய்ஸ் அவரை செகரெட்டரி 1 ஆக போடுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறாராம். அப்படியானால் அமுதா என்று கேட்டதற்கு அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் உதயசந்திரன். அவரை உள்துறை செயலாளராக மாற்றி விடலாம் என்று ஆலோசனையும் சொல்லியிருக்கிறாராம். அந்த வகையில் தப்பித்தோமடா என அமைச்சர்கள் சந்தோஷப்படுகிறார்களாம். காரணம் 10 உதயசந்திரனுக்கு சமமானவராம் அமுதா. ஐ.பெரியசாமி பட்டபாடு போதாதா? நாங்கள் வேறு படணுமான்னு அமைச்சர்களுக்கும் சந்தோஷமாம்.
காவல்துறையிலும் சில மாற்றங்கள் வருகிறது. உளவுத்துறையின் செயல்பாடின்மை குறிப்பாக அதன் தலைமை அதிகாரி செயல்பாடு காரணமாக அரசுக்கு ஏகப்பட்ட கெட்டப்பெயர் வந்துள்ளது. அனைத்தும் முதல்வர் தலையிலேயே விழுகிறது. டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகளை அரசுக்கு அறிக்கையாக போடவில்லை என லேட்டஸ்ட்டாக அவர்மீது மேலிடம் கோபமாக இருக்கிறதாம். ஐஜி இண்ட் செந்தில்வேலனின் வேலையிலும் திருப்தி இல்லை என்பதால் மொத்தமாக உளவுத்துறையில் பெரிய மாற்றங்கள் வர உள்ளதாம். செந்தில்வேலன் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் இடத்தில் வேறொருவர் கொண்டுவரப்படலாம் என்கின்றனர்.
அதேபோல் மாநகர காவல் ஆணையர் ஜிவால், சைலேந்திரபாபு இடத்திற்கு நகர்வது பகல் கனவாகிவிடும்போல் இருக்கிறது. அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட டெண்டர் விட்டதில் தனக்கு வேண்டிய நிறுவனத்துக்காக 4 நிறுவனங்களை தகுதியிழப்பு செய்துள்ளாராம், அதுமட்டுமல்ல கட்டடம் கட்டும் செலவீன தொகை ரூ.54 கோடி என்பதை அந்நிறுவனத்துக்காக ரூ.59 கோடியாக உயர்த்தி கொடுத்ததில் இவர் பங்கு உள்ளது என்கிறார்கள். தனது வரம்பை மீறி அத்துமீறி செயல்பட்டது மேலிட கவனத்துக்கு போயுள்ளது அவருக்கு சிக்கலாக மாறியிருக்கு” என்றார் கோபால். ”ஏண்ணே காவல் துறை சம்பந்தப்பட்ட கட்டடங்களை கட்டத்தானே காவல்துறைக்குள்ளேயே காவலர் வீட்டு வசதி வாரியம் இருக்கேண்ணே அதற்கு ஒரு டிஜிபி கூட இருக்காரே, அப்புறம் எப்படி தனியாக வெளி நிறுவனங்களுக்கு டெண்டர் விட முடியும்” என்று கேட்டார் கமால் பாய்.
”இப்பத்தான் நீ புத்திசாலித்தனமாக கேட்டிருக்கிறாய், ஆனால் அது அவர்களுக்கு தெரியலையே, யார் கேட்டுவிட போகிறார்கள் என்கிற எண்ணம் தான், இத்தனைக்கும் அது நிர்பயா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி உதவி கொண்டு கட்டப்படும் கட்டடம், இதுபோன்ற விதிமீறல் தெரிந்தாலே சிபிஐ உள்ளே நேரடியாக வந்துவிடும். யாராவது புகார் அளித்தால் ஆணையருக்கு சிக்கல் என்கிறார்கள். இது காவல்துறை வட்டாரத்தில் கசியும் தகவல்” என்றார் கோபால். ”ஏண்ணே அவர் மருமகனின் ஆதரவு பெற்றவர் அவரை யார் என்ன செய்துவிட முடியும், இதற்கும் அவர் சைலேந்திரபாபு இடத்திற்கு வருவதற்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டார் குமார்.
”குமார் எல்லாம் உங்க ஆளுங்க செய்வதுதான், தலைமை டிஜிபி போட்டியில் முதலிடத்தில் பி.கே.ரவியும், இரண்டாம் இடத்தில் ஜிவாலும், மூன்றாம் இடத்தில் ஏ.கே,விஸ்வநாதனும் அடுத்தடுத்து பல டிஜிபிக்கள் இருந்தனர். இதில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா தான் போட்டியில் இல்லை என்பதை வில்லிங்காக கொடுக்கணும், அவர் வர மாட்டார் என்று அலட்சியமாக இருந்தார்கள். ஆனால் அவர் நானும் போட்டியில் இருக்கிறேன் என களத்தில் குதித்துள்ளார். பொதுவாக அப்படி வருபவர் அல்ல சஞ்சய் அரோரா, டெல்லி கமிஷனராக நேரடியாக உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் இருக்கிறார், அவர் அங்குள்ள முக்கியமானவர் சொல்லாமல் இப்படி களத்தில் குதிக்க வாய்பில்லை. ஆகவே இதன் பின்னால் சில விஷயங்கள் உள்ளதாக சொல்கிறார்கள் ஐபிஎஸ் உயர் அதிகாரிகள்”. என்றார் கோபால்.
”அண்ணே நீ விவரமான ஆளுன்னு நினைச்சேன் உன் புத்தி பூராவும் குறுக்காகவே யோசிக்குது. என்னதான் டெல்லி மேலிடம் நினைத்தாலும் சஞ்சய் அரோரா உள்ளிட்ட 3 பேர் பட்டியல் அனுப்பும் அதில் ஒருவரை தேர்வு செய்ய எங்களுக்கு உரிமை இருக்கு அப்புறம் என்ன மருமகன் ஆதரவு பெற்ற ஜிவால் ஈசியாக வரப்போகிறார்” என்று போஸ்பாண்டி பெருமையாக சொல்ல, ”நீ யோசிப்பதெல்லாம் சரிதான் இதை மேலே இருக்கிறவர்கள் யோசிக்க மாட்டார்களா? இவரை போடுங்கள் என்று வற்புறுத்தினால் மறுக்க என்ன ஜெயலலிதாவா முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறார்? உங்க குடுமி அவங்க கையில இருக்கு தெரிஞ்சுக்கோ, இதுவரை ஐடி ரெய்டில் என்ன எடுத்தோம்னு வெளியே சொல்லாம உங்களை தொங்கலில் விட்டு வைத்துள்ளார்கள், எதிர்த்து செயல்பட துணிவிருக்கா சொல்லு? இப்ப சொல்லு யாரு குறுக்கு புத்தியா யோசிப்பது என்று, நான் என் அனுமானத்தைத் தான் சொகிறேன் அரசு முடிவெடுத்தால் ஜிவால் தான் வருவார், ஆனால் மருமகனுக்கே மரியாதை போன பின்ன அவர் ஆளை கொண்டுவர விடுவார்களா என்ன?” என்று கேட்டார் கோபால்.
”என்னண்ணே குண்டைத்தூக்கி போடுற ? மருமகனுக்கு மரியாதை குறைஞ்சிப்போச்சா வெவரமா சொல்லு”ன்னு குமார்ஜி கிட்ட வர, ”கொஞ்சம் தள்ளி போய் உட்காரு, மாநிலம் என்றால் ஓடி வர்றது மத்தி என்றால் ஓரமா போய் மவுனமா உட்கார்ந்துக்கொள்வது” என்று கண்டித்த கோபால் சொல்ல ஆரம்பித்தார்.” மருமகன் மதிப்பு மட்டுமல்ல மகன் கையில் சாட்டையை எடுத்து சுழற்ற ஆரம்பித்துவிட்டார் சுவாரஸ்யமான மேட்டர் எல்லாம் இருக்கு கேளு, மருமகனின் வேகமான செயல்பாடு ரெய்டுவரை வந்து அசிங்கப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி கேட்டுக்கொண்டார்களாம், அதுவுமில்லாமல் கட்சி, ஆட்சியில் மருமகன் தலையீடு காரணமாக அதிகாரிகள் கை ஓங்கி யூடர்ன் ஆட்சின்னு கெட்ட பெயர் வருமளவுக்கு ஆகிப்போச்சு, மருமகன் கொண்டு வந்த அமைச்சர் பிடிஆர் ஆடியோ கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையையும் கெடுத்துடுச்சு. ஆகவே நீங்கள் இந்த ஜி.ஸ்கொயர் மேட்டர் எல்லாம் முடியும் வரை எதிலும் தலையிடாதீர்கள் என்று மாமனாரே கனிவாக சொல்லிவிட்டாராம்.
இந்த நேரத்தில் தான் ஓபிஎஸ்சை பகீரங்கமாக மருமகன் சந்தித்து பேச இன்னும் கோபம் ஆயிடுச்சாம் குடும்பம். இவர் பிரச்சினையால் தொடர்ந்து கட்சிக்கு சிக்கல் வருது, ஓபிஎஸ்சை திமுக தான் கையாளுகிறோம் என்ற பேச்சு ஓடிகிட்டிருக்கு இதில் இந்த சந்திப்பு தேவை தானா என்று குடும்பத்துக்குள் மீண்டும் புகைச்சல் ஆரம்பிச்சுடுச்சாம். இந்த நேரத்தில் தான் களத்தில் குதித்துள்ளார் உதயநிதி, காவலர் வீட்டு பிள்ளைகள் பள்ளிக்கு கட்டப்பட்ட கட்டடத்தில் தாம்பரம் காவல் ஆணையரகத்தை மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட, அதை எடப்பாடி கண்டித்து அறிக்கை வெளியிட இதென்ன குழப்பம் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது அதுவும் முதல்வர் இலாகாவிலேயே குழப்பமா? என்று இந்த உத்தரவு எப்படி போடப்பட்டது என சைலேந்திரபாபுவை அழைத்து உதயநிதி கேட்க முதல்வர் அலுவலகத்தில் சொல்லிவிட்டுத்தான் போட்டேன் என்று அவர் சொல்ல, முதல்வர் அலுவலகம் என்றால் முதல்வரிடமா? அல்லது யாரிடம் என்று உதய் கேட்க இரண்டாண்டில் இல்லாத ஒரு கேள்வியை சந்தித்துள்ளார் சைலேந்திரபாபு. இதுபற்றி முதல்வரிடம் விளக்கி சொல்லணும் முதல்வர் அலுவலகம் வாருங்கள் என்று வரச்சொல்லி இருக்கிறார் உதயநிதி.
அடுத்து என்ன செய்யலாம் ஆலோசனை சொல்லுங்கள், என விமர்சிப்பவர்களிடமே கேட்கச் சொல்லியிருக்கிறாராம் உதயநிதி. நல்ல மாற்றம் தான். திமுகவின் இரண்டாண்டு சாதனையைவிட அதிகாரிகள் செயல்பாடு காரணமாக வேதனையும், அனைத்து பழிகளும் அரசின் மீதும் முதல்வரின் ஆளுமை மீதும் விழுவதால் இனி அடுத்த 3 ஆண்டுகளை இப்படி கடத்தினால் சரியாக இருக்காது என்று உதயநிதி சில முன் முடிவுகளை எடுக்க உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான் டிஜிபியை அழைத்து கேட்டது. இது அடுத்த கட்டத்துக்கு போகுமா அல்லது வழக்கம் போல் ஆகுமா பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். உதய் களத்தில் இறங்கியுள்ளது, உளவுத்துறையில் மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம், அமைச்சரவை மாற்றம் என புதிய முடிவுகள் அனைத்தும் பலன் தருமா? வரும் காலமே பதில் சொல்லும். கிளம்பலாம்” என்று நடையை கட்டினார் கோபால்.
பாசறை எக்ஸ்க்ளூசீவ்
எக்ஸ்க்ளூசீவ் 1
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாக மாணவர்களுக்கு வழங்க, 11 லட்சம் சைக்கிள்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து சைக்கிள் டெண்டர்களை எடுத்து வந்த சுந்தர பரிபூரணம் என்பவருக்கே, இந்த ஆண்டும் சைக்கிள் டெண்டர் விடப்பட்டுள்ளது. குறைந்த விலைப்புள்ளி எல் 1 என்ற அடிப்படையில் மொத்த டெண்டரையும் கொடுத்துள்ளார்கள். ஒரு சைக்கிளுக்கு 2140 ரூபாய் மார்ஜின் வைத்துள்ளார். இந்த டெண்டரில் லாபம் மட்டும் 233 கோடி ரூபாய்.
இந்த டெண்டர் வழங்கப்பட்டது, தலைமைக்கே தெரியாது. இறுதி நேரத்தில் யார் இதை செய்தது என்று விசாரித்துப் பார்த்ததில், முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், இந்த டெண்டரில் 60 சி பார்த்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. முதல்வரின் நன்மதிப்பை பெற்ற பெண் மருத்துவர் பரிந்துரை என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். இந்த பெண் மருத்துவரின் அண்ணா நகர் க்ளீனிக்குக்கு, காண்ட்ராக்டர்கள், அதிகாரிகள் என பலர் வரிசை கட்டியுள்ளனர்.
எக்ஸ்க்ளூசீவ் 2
வெளியே யாருக்கும் தெரியாமல் கடந்த 14 ஏப்ரல் அன்று, பசுமை வழிச்சாலையில் உள்ள “குறிஞ்சி” இல்லத்துக்கு குடிபோயுள்ளார் சின்னவர். புதிய வீடு, புதிய செயல்பாடுகள் என அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் பல முக்கிய அதிகாரிகளை தனிமையில் சந்தித்து ஆலோசனை கேட்டு வருகிறார். சின்னவர் இனி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறார். இதற்கு அவர் தந்தையும் க்ரீன் சிக்னல் காண்பித்துள்ளார்.