நுங்கு தின்னவனை விட்டுவிட்டு நோண்டி தின்னவனை தண்டித்த ஸ்டாலின்
அமைச்சரின் மருமகன் பக்கம் போகாத போலீஸ் விசாரணை
முதல்வரை ஏமாற்றும் உளவுத்துறை, ஐஜி கண்ணனின் மெத்தனால் கண்டுபிடிப்பு
கள்ளச்சாராய ஸ்பெஷல் மன்ற பாசறை அலசல்
”என்னப்பா எல்லோரும் வந்தாச்சா என்றபடி வந்து அமர்ந்தார் கோபால். ”வந்தாசுண்ணே” என்றனர் அனைவரும் கோரசாக, ”வேதனை, சாதனை, சூழ்ச்சி, சிக்கல் என பலருக்கும் பலவித அனுபவம் தமிழகத்தில் கிடைத்துள்ளது. நமக்கு கள்ளச்சாராய சாவுகள் வேதனையை தருகிறது. இன்னும் பல விஷயங்கள் இருக்கு முதலில் கள்ளச்சாராயம் பற்றி கொஞ்சம் விரிவாக பேச வேண்டி இருக்கு. கவனமா கேளுங்க” என்றார் கோபால். ஏண்ணே மரக்காணம், மதுராந்தகம் மரணங்களில் இரண்டும் ஒரே மாதிரியானதா? யார் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், யார் யார் தப்பித்தார்கள் ஆங்காங்கே பல விஷயம் புகையுதேண்ணே” என்று கேட்டார் கமால் பாய்.
”பாய், கொடுமையான விஷயம் என்னன்னா, கள்ளச்சாராய சாவுகள் நடக்கும் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் காரணம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல மாவட்டங்களில் அரசியல்வாதிகள், மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு போலீஸார், சாராய வியாபாரிகள் கூட்டணி வைத்து நடத்திய சாராய விற்பனையில் போன உயிர்கள் அத்தனையும் மீனவர்கள், சாதாரண விளிம்பு நிலை மக்கள். அரசு நடவடிக்கை எடுத்ததோ சில சம்பந்தமில்லாத அதிகாரிகள் மீது அதைப்பற்றித்தான் சொல்ல வந்தேன். பட்டியலே நம்ம கிட்ட இருக்கு. காப்பாற்றப்பட்டவர்கள் பற்றி அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும், பல நல்ல அதிகாரிகள் நம்மிடம் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர். இது சாதாரண மக்களுக்கு தெரியணும் அல்லவா அதற்காகத்தான் பேசுகிறேன்” என்றார் கோபால்.
”அதான் அரசு நடவடிக்கை எடுத்திருக்கே மாவட்ட எஸ்பியையே முதல்வர் சஸ்பெண்ட் செய்திருக்காரே, பலர் மாற்றப்பட்டிருக்காங்க அப்புறம் என்னதான் வேண்டும், இது என்ன வேண்டுமென்றே நடந்ததா? முதல்வர் இதற்கு காரணம் என்கிறீர்களா?” என்று கோபமாக கேட்டார் ”போஸ்பாண்டி. ”பாண்டி ரொம்ப உணர்ச்சிவசப்படாதே, உத்தமர் காந்தி மெடலை போலீஸார் நெஞ்சில் குத்துவது மட்டும் முதல்வர் வேலை இல்லை, நீ சொல்வது உண்மைதான். அனைத்து உள்துறையையும் கையில் வைத்துள்ள முதல்வர்தான் இதற்கு முழுப்பொறுப்பு. பால் பாக்கெட் சரியாக வரவில்லை, ஆவினை நாசம் செய்கிறார் என்று பால் மேட்டருக்கே ஒரு அமைச்சரை பொறுப்பாக்கும்போது 22 உயிருக்கு பால் ஊற்றிய மேட்டரில் ஏன் காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரை பொறுப்பாக்கக் கூடாது?” என்று கேட்டார் குமார்ஜி
”சரியாக சொன்னாய் குமார் அதுமட்டுமல்ல இதில் நடந்துள்ள குளறுபடிகளை சொல்லி விடுகிறேன், முதலில் இத்தகைய கள்ளாச்சாராயத்தை தேடி செல்லும் அப்பாவி மக்கள் அரசாங்க மதுவை குடிக்கமாட்டேன் என மறுப்பவர்களா என்றால் இல்லை. மது விலை எட்டாத அளவுக்கு செல்லும்போது வீட்டருகிலேயே குறைந்த விலையில் சாராயம் கிடைக்கிறது என நினைத்து வாங்கி குடிப்பார்கள். இன்னொருபக்கம் கட்சிக்காரர்கள் அங்காங்கே பார் ஏலம் எடுத்து டாஸ்மாக் மது விற்பனை மூலம் ஏதோ சம்பாதிப்பார்கள். அவை அத்தனையையும் கரூர் கும்பல் மூலம் அமைச்சர் ஆக்கிரமித்தால் அவர்கள் எங்கே போவார்கள்? ஐடி கம்பெனி வேலைக்கா போவார்கள்? இதுபோன்று கள்ளச்சாராயம் பக்கம் தான் திரும்புவார்கள். இதுதான் கள்ளச்சாராயம், விஷச்சாராயம் பெருக காரணம்.
அதேபோல் அமைச்சர்கள் அவர்களது பணியை பார்க்காமல், சாராய வியாபாரிகளுக்கு துணை போனால் போலீஸ் ரொம்ப ஜாலியா லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிப்பார்கள். இதுதானே நடந்தது. மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை குறைந்தால் கண்டறியவே மதுவிலக்கு அமல் போலீஸார் பணியாக இருந்தது. கள்ளச்சாராயம் ஓடினால் உளவுத்துறை ரிப்போர்ட் போடும், மதுவிலக்கு அமல் போலீஸார் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தப்பின் உளவுத்துறை வேலை ஆகாதவர்கள் யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதாக சுருங்கிப்போச்சு. எல்லாம் ஒன்று சேர்ந்து இன்றைக்கு 22 உயிர் பலி ஆகியிருக்கு இது இன்னும் அதிகரிக்கலாம்.
இதில் மோசமான விஷயம் முதல்வரை அனைத்து அதிகாரிகளும் ஏமாற்றியதுதான். முதல்வர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் அவரை திசைத்திருப்பி விஷச்சாராயம், மெத்தனால் என கண்டதையும் சொல்லி உயர் அதிகாரிகள் தப்பித்துக்கொண்டதுதான். கள்ளச்சாராயமோ விஷச்சாராயமோ அதை கண்டுபிடித்து தடுக்கத்தான் மதுவிலக்கு அமல்பிரிவு உள்ளது. இதற்கு மகேஷ்குமார் அகர்வால் என்று ஒரு ஏடிஜிபி தலைமைப்பொறுப்பில் இருக்கிறார்” என்றார் கோபால். ”யாருண்ணே அவர் சென்னை காவல் ஆணையரா இருந்தாரே, போலீஸுக்கு அவர் மனைவி தலைமையில் யோகா வகுப்பெல்லாம் எடுத்தாரே அவரா” என்று இடையில் புகுந்தான் குமார்ஜி.
”ஆமாம் அவரேதான், அவருக்கு கீழே ரூபேஷ்குமார் மீனா என்று ஒரு ஐஜி, அவர்களுக்கு கீழே செந்தில் குமார், வருண்குமார் என்று இரண்டு மண்டல எஸ்பிக்கள், அவர்களுக்கு கீழ் டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள், எஸ்.ஐ.கள் என பெரும் பட்டாளமே உண்டு. இவர்கள் தான் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள். இது தவிர கலால் சி.ஐ.யூ பிரிவுக்கு ஜெயந்தி என்கிற எஸ்பி உண்டு. கள்ளச்சாராயம் பற்றி உளவறிந்து சொல்ல மாவட்டத்திற்கு ஒரு எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் உண்டு. இவர்கள் யாரும் தங்கள் பணியை சரியாக செய்யவில்லை. விளைவு கீழே உள்ள மதுவிலக்கு டி.எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வச்சிக்கிட்டு கண்டபடி விற்பனைக்கு அனுமதிச்சிருக்காங்க” என்றார் கோபால்.
”அண்ணே ஒரு நிமிஷம் இப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட எஸ்பி யாரு? அவர் என்ன டூட்டி” என்று கேட்டார் பாய், “அவர்கள் எல்லோரும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டவர்கள். அவர்களுக்கு இது மட்டும் டூட்டி இல்லை, சட்டம் ஒழுங்கு, குற்றங்களை தடுப்பது, பந்தோபஸ்து என பல விஷயங்கள் உண்டு. ஆனால் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருக்கு ஒரே வேலை கள்ளச்சாரய வேட்டைதான் இப்ப சொல்லு யார் மீது நடவடிக்கை எடுத்திருக்கணும்” என்று கேட்டார் கோபால். “நியாயப்படி ஏடிஜிபி, ஐஜி, எஸ்பி எல்லாம் மாற்றப்பட்டிருக்கணும், எஸ்.பியை சஸ்பெண்ட் செய்திருக்கணும்” என்றார் குமார்ஜி. ”அதான் எஸ்பியை சஸ்பெண்ட் செய்தாரே முதல்வர்” என்று குறுக்கே புகுந்தார் போஸ்பாண்டி, “இவன் யாருய்யா சி.எம். மாதிரியே புரியாத ஆளாக இருக்கான், நுங்கு தின்னவனை தண்டிக்காம நோண்டி தின்னவனை தண்டிச்ச கதையா நேரடியாக அந்த பொறுப்பில் இருக்கும் யார் மீதும் நடவடிக்கை இல்லை, ஆனால் சம்பந்தம் இல்லாத எஸ்.பி ஸ்ரீநாதா மீது நடவடிக்கை, அதிலும் செங்கல்பட்டு எஸ்பிக்கு ஒரு நியாயம், விழுப்புரம் எஸ்பிக்கு ஒரு நியாயம் ஏன் தெரியுமா?” என்று கேட்டார் கோபால்.
பின்னர் தொடர்ந்த கோபால் ”இரு புரிகிற மாதிரி சொல்கிறேன். கள்ளச்சாராய சாவுக்கு காரணம் என்று விழுப்புரம் மாவட்ட சட்டம் ஒழுங்கு எஸ்.பி மீது சஸ்பெண்ட் நடவடிக்கை. ஆனால் மதுராந்தகம் சாவுக்கு காரணம் என்று செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் மீது சாதாரண காத்திருப்போர் பட்டியல் மாற்றம் மட்டுமே நடவடிக்கை. அதுகூட ஒருவாரம் இல்லை, இப்ப மதுரை தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்னு வெயிட்டான பதவி கொடுத்துட்டாங்க”. என்றார். ”ஏண்ணே பிரதீப் அவ்வளவு செல்வாக்கு மிக்கவரா? ஏன் அவருக்கு வேறுவித கவனிப்பு?” என்று கேட்டான் குமார். ””அதுவா கள்ளச்சாராய சாவு நடந்தப்ப அவர் லீவில் இருந்தாராம்” என்று சொன்னார் போஸ் பாண்டி. “அந்த ஒரு வாரம் லீவில் இருந்தால் நடவடிக்கை இல்லையா அதற்கு முன்னர் அவர்தானே எஸ்பி? விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா மீது எடுத்தது போல் அவர்மீதும் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் அல்லவா?” என்று கேட்டார் கமால்பாய்
”கரெக்டாக சொன்னாய் பாய் இதுபற்றி கேட்டபோது அதிகாரிகள் சிரிக்கிறார்கள், பகைக்ககூடாதவரை ஸ்ரீநாதா பகைச்சுக்கிட்டார். அதான் நேரம் பார்த்து முழுப்பழியையும் அவர்மீது போட்டுட்டாங்க, முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடக்கும்போது மதுவிலக்கு அமல்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தான் தப்பிக்க விழுப்புரம் எஸ்பி தான் முழுக்கண்ட்ரோல் என்று சொல்ல கோபமடைந்த முதல்வர் என்ன ஏதுன்னு கேட்காமல் அங்கேயே அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருக்கார். அதே அளவு சம்பவம் நடந்த செங்கல்பட்டு எஸ்பியை நைசாக காப்பாற்றி விட்டார்கள். அவருக்கு நல்ல இடத்தில் இடமாற்றம் தந்துள்ளனர் இது சரியில்லைன்னு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்” என்றார் கோபால்.
”இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் 2001 ஆம் ஆண்டு இதேபோல் கடலூரில் கள்ளச்சாரய சாவுக்கு 40 பேருக்கு மேல பலியானார்கள் அப்ப மாவட்ட எஸ்.பி.யாரு தெரியுமா? இப்ப உளவுத்துறை ஏடிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தான். அப்ப இதுபோல் நடவடிக்கை இல்லை. இப்ப விஷயத்துக்கு வருகிறேன் நாம ரூட் மாறுகிறோம். நியாயப்படி, மதுவிலக்கு அமல்பிரிவு ஏடிஜிபி முதல் எஸ்.பி வரை உள்ள அதிகாரிகள் , உளவுப்பிரிவு அதிகாரி, மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பி, கலால் பிரிவு டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கணும் ஆனால் எடுக்கவில்லை” என்றார் கோபால்
”யார் யார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை சொல்லுங்கள்” என்று போஸ்பாண்டி கேட்க, ”சொல்கிறேன், கள்ளச்சாராய சாவுகள் இரண்டு மாவட்டத்தில் அதுவும் வடக்கு மண்டலத்தில் நடந்துள்ளது. இதற்கு முதலில் ஏடிஜிபி, ஐஜி இருவரும் மாற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஐஜி ரூபேஷ்குமார் மீனாவை ஒருவாரம் பொறுத்து மாற்றியுள்ளனர். வடக்கு மண்டல கலால் பிரிவு எஸ்.பி செந்தில்குமாரைத்தான் நியாயப்படி சஸ்பெண்ட் செய்திருக்கணும் ஆனால் அவரை முழுக்க முழுக்க உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தான் காப்பாற்றியுள்ளார் என்று அங்குள்ள அதிகாரிகளே கூறுகிறார்கள். இதுவரை அவர் மீது சின்ன நடவடிக்கைக்கூட இல்லை அதே பணியில் தொடர்கிறார். மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பி ஜெயந்தியையும் சஸ்பெண்ட் செய்திருக்கணும் ஆனால் அவர் இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். இது அல்லாமல் செங்கல்பட்டு டி.எஸ்.பி துரைப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் மதுராந்தகம் கலால் பிரிவு டிஎஸ்பி மணிமேகலை இவர்தான் நேரடி பொறுப்பு அவரை எதுவும் செய்யாமல் ஒருவாரம் பொறுத்து இன்று மாற்றியுள்ளனர்.
செங்கல்பட்டு மதுவிலக்கு டிஎஸ்பி பரிபூரணம் திருக்கழுக்குன்றத்தையும் சேர்த்து பார்க்கிறார் டபுள் வருமானம், அவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. அமாவாசை என்கிற சாராய வியாபாரி குற்றம் செய்தது எல்லாம் செய்யூரில், ஆனால் அவரை வேறு ஊர் லிமிட்டில் கைது காண்பிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இதேபோல் இந்த மாவட்டத்தில் இதற்கு முன் சட்டம் ஒழுங்கு எஸ்பியாக இருந்த டாக்டர் விஜயகுமார் எஸ்.பியும் பொறுப்பாளி தானே. டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அவர் சென்றப்பின்னர்தான் பிரதீப் வருகிறார். விழுப்புரம் ஸ்ரீநாதா பொறுப்பு என்றால், செங்கல்பட்டு எஸ்.பி விஜயகுமார் என்ன செய்துக்கொண்டிருந்தார், அவர் மீதும் விசாரணை வரவேண்டும் அல்லவா?. உளவுத்துறை இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் விழுப்புரம் எஸ்.பி.இன்ஸ்பெக்டர் மீது ஏன் நடவடிக்கை இல்லை. குறைந்தப்பட்சம் இடமாற்றம் கூட இல்லாதது ஏன்? இதற்கு பதில் இல்லை. காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வருக்கும் இப்படி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளை விட்டுவிட்டு யார் யார் மீதோ நடவடிக்கை எடுக்கிறோமே என்பதும் தெரியாது. இப்படி அரசாங்கம் இருந்தால் எப்படி அதிகாரிகளுக்கு பயம் வரும்?” என்று கேட்டார் கோபால்
”அண்ணே அது மட்டும் அல்ல இந்த கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு பெரிய அளவில் துணை நின்றது ரவிகுமார் என்கிற திமுக நகர மன்ற செயலாளர் என்கிறார்கள். அவர்தான் ஸ்டேஷன் கட்டிங், அமரன், அரூர் போன்று 12 சாராய வியாபாரிகளை மெயிண்டெய்ன் பண்றாராம், இவர் வேலை ஸ்டேஷன் மாமுல், டோல்கேட் மாமுல் கொடுத்து வியாபாரிகளை பாதுகாப்பது, வருமானத்தை மேலிடத்துக்கு கொடுப்பது” என்றார் குமார்ஜி. மேலிடம் என்றால் என்ன குமார் விரிவா சொல்லு என்று பாய் கேட்க, மேலிடம் என்றால் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் என்று அங்குள்ள அனைத்து போலீஸாரும் சொல்கிறார்கள். அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் அனைத்து விஷயங்களிலும் பக்கபலமாக இருந்து பார்த்துக்கொள்கிறார். பின்னணியில் அமைச்சரின் அதிகார பலம், இது அமைச்சருக்கும் தெரிந்தே நடக்கிறது என்று அங்குள்ள நேர்மையான அதிகாரிகளே சொல்கிறார்கள்” என்றார் குமார்.
”அதனால்தான் அண்ணாமலைக்கூட அமைச்சர் செந்தில் பாலாஜி, மஸ்தானை நீக்கணும் என்று ஆளுநர் கிட்ட மனு கொடுத்தாரா?” என்று கமால்பாய் கேட்க ”ஆமாம் இந்த விஷயத்தில் விரைவில் வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளதாக அண்ணாமலை புயலை கிளப்பி இருக்கிறார். தன் மருமகன் பக்கம் போலீஸ் திரும்பாமல் இருக்க அமைச்சர் பெருமுயற்சி எடுத்து வருகிறாராம், ஆனால் போன் கால் லிஸ்ட், இதற்கென நடக்கும் சிபிசிஐடி விசாரணை முறையாக நடந்தால் ஈசியாக சிக்கிக்கொள்வார் என்கிறார்கள் அங்குள்ள திமுகவினரே”. ”இதில் செந்தில் பாலாஜியை ஏன் நீக்கணும்னு அண்ணாமலை சொல்கிறார்” என்று கேட்டார் போஸ் பாண்டி. ”காரணமில்லாமல் சொல்வாரா? அதை சொல்வதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஊடகங்களுக்கெல்லாம் கள்ளச்சாராயம் என்று சொல்லக்கூடாது விஷச்சாராயம்னு சொல்லணும் என்று உத்தரவாம், மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் மரக்காணம் மரணம் என்றார்கள், ஆனால் மதுராந்தகத்தில் போலி மது என்கிறார்கள். அரசு மதுபான பாட்டிலில் எப்படி போலி மது வருகிறது, சரியான விசாரணை கமிட்டி அமைத்து விசாரித்தால் பல மர்மங்கள் வரும்.
சரி விஷயத்துக்கு வருவோம், சாதாரண டாஸ்மாக் சரக்கு 160 ரூபாய் 10 ரூபாய் சேர்த்து 170 சைட் டிஷ் எல்லாம் சேர்த்தால் 200 ரூபாய் ஆகிறது. அதுவே வீட்டு பக்கத்தில் 25 ரூபாய்க்கு சாராயமாக கிடைத்தால் காசு மிச்சம் என்றும், காசில்லாதவர்களும் போதைக்கு கள்ளச்சாராயத்தை மன்னிக்கணும் விஷச்சாராயத்தை நாடுகிறார்கள் என்கிறார் அண்ணாமலை. அவர் சொல்வதும் சரிதானே. இதை தடுக்கவேண்டிய மகேஷ்குமார் அகர்வால், ரூபேஷ்குமார் மீனா, செந்தில்குமார் எல்லாம் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள்? என்கிற கேள்வி நியாயமாக வரணும் அல்லவா? அமைச்சர் செந்தில்பாலாஜி வருமானம் பார்க்க பார்கள் அத்தனையையும் கோர்ட் விசாரணையை காரணம் காட்டி குறுக்குவழியில் கரூர் கேங்க் மூலமாக நடத்துகிறார். 5000 டாஸ்மாக் பார்களில் 90% மேல் ஆளுங்கட்சியினர் கையில் இல்லை. அவர்கள் வருமானத்துக்கு எங்கே போவார்கள் இதுபோன்று கள்ளச்சாராய வியாபாரிகளிடம் கைகோர்க்க வேண்டியதுதான் அதுதான் நடந்தது அதைத்தான் அண்ணாமலை குறிப்பிடுகிறார்” என்றார் கோபால்.
அதுமட்டுமல்ல பார்கள் எப்படி திறக்கப்பட்டு இயங்குகிறது, இந்த வருமானம் யார் கைக்கு போகிறது? பார்கள் யார் ஏலம் எடுத்துள்ளார்கள், ஏலம் எப்போது நடந்தது? உள்ளூர்காரனுக்கு இல்லாமல் வெளியூர்காரன் பெயரில் எப்படி பார் நடக்கிறது, பார்களில் சமையல் செய்யக்கூடாது என்கிற விதி உள்ளது, டாஸ்மாக் நிர்வாகம் தான் பார்களை நடத்தணும் என்கிற விதி எல்லாம் காற்றில் பறக்கிறதே, பார்கள் எப்படி 24 மணி நேரம் இயங்க அனுமதிக்கப்படுகிறது? அங்கு சப்ளை ஆகும் சரக்குகள் டாஸ்மாக் கணக்கில் வருகிறதா? என பல கேள்விகள் எழுப்புகிறார்கள். யார் தெரியுமா திமுக உள்ளூர் கட்சிக்காரர்களே கேட்கிறார்கள். இதை நீங்கள் எழுதினாலாவது இதற்கு தீர்வு கிடைக்கும், கட்சிக்காரர்கள் ஏதாவது காசு பார்ப்போம், கஷ்டப்பட்டு ஓட்டுவாங்க உழைப்பது நாங்கள், வருமானம் கரூர் கேங் மூலம் ஒருவர் கைக்கே போவதா? என்று கேட்பது வேறு யாரும் அல்ல தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரே.
இன்றுகூட கோவையில் திமுக இளைஞரணியைச் சேர்ந்த ராகுல், கோகுல் கோவையில் தொண்டாமுதூர் தொகுதிக்குட்பட்ட இடத்தில் சட்டவிரோத பார் நடத்தில் இஷ்டத்துக்கு விலை வைத்து மதுபானத்தை விற்றதாகவும் இதை தட்டிக்கேட்ட செல்வராஜ் என்பவரை அடித்து கொலை செய்ததாகவும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார். இதற்கு பின்னணியில் திமுக கோவை மாவட்டச்செயலாளர் ரவி இருப்பதாகவும் கொல்லப்பட்டவர் உடலை எரிக்கச் சொல்லி உறவினர்களை போலீஸார் மிரட்டியதாகவும், எதைப்பற்றியும் பேசக்கூடாது என அந்த ஊர் மக்களை திமுகவினர் ரவுடிகள் மிரட்டுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 22 ம் தேதி ஆளுநர் மாளிகை போராட்டத்தில் இன்னும் பல தகவல்கள் வெடிக்கும். இதைப்பற்றியெல்லாம் திமுக தலைமை கண்டுக்காமல் இருக்க காரணம் செந்தில்பாலாஜி என்று திமுகவினரே சொல்கிறார்கள்.
இப்போதும் கள்ளச்சாராய சாவுக்கான முறையான தீர்வு எட்டப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றியிருக்கணும். வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெற்கு கூடுதல் ஆணையராக சென்னையில் இருந்தபோது அவர்மீது உளவுத்துறை பல ரிப்போர்ட்டுகள் போட்டு கண்காணித்தார்கள், ஆனால் அவர்மீது நடவடிக்கை இல்லை. அவர்தான் மெத்தனால் கதை சொல்லி மேட்டரை திசை திருப்பி விட்டவர். மதுவிலக்கு அமல் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், வடக்கு மண்டல கலால் எஸ்.பி செந்தில்குமார், டிஎஸ்பி பரிபூரணம், உளவுத்துறை மாவட்ட எஸ்.பி.சி.சி.டி இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்படவில்லை. செய்யூர் ஆய்வாளர் மீது நடவடிக்கை இல்லை. இப்படி எதையும் செய்யாமல் ஒரே நாளில் 25000 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டதுன்னு அறிக்கை மட்டும் கொடுக்கிறார்கள்” என்றார் கோபால்
”25000 லிட்டர் என்பது சாதாரண ஒரு விஷயம் அல்லவே ஊடகங்களுக்கு தெரியாமல் எப்படி பிடித்தார்கள்? எப்படி அழித்தார்கள்” என்று கேட்டார் கமால்பாய், ”எல்லாம் டிஜிபிக்கே வெளிச்சம். சாதாரணமாக 1000 லிட்டர் பிடிபடுவதே பெரியவிஷயம், அப்படி பிடித்தாலே போட்டோ ஷூட் நடத்தி பெருமைப்பட்டுக்கொள்வார்கள், ஆகவே இதை படிக்கிறவர்கள் யூகத்துக்கே விட்டுவிடலாம்” என்றார் கோபால். ”இப்பவும் சொல்கிறேன் பல மாவட்டங்களில் குறிப்பாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சாதாரணமாக பாக்கெட் சாராயம் விற்கப்படுகிறது என்கிறார்கள், நடவடிக்கை எடுக்கவேண்டியது சம்பந்தப்பட்ட கலால் அதிகாரிகள், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் பொறுப்பு. மீண்டும் கள்ளச்சாராய சாவு வந்தால் அதன் பலனை 2024- தேர்தலில் ஸ்டாலின் தான் அனுபவிப்பார் இந்த மகேஷ்குமார் அகர்வால் போன்ற அதிகாரிகள் அல்ல” என்ற கோபால் ”வெயில் அதிகமாக இருக்கு இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு மீண்டும் மாலையில் சந்திப்போம்” என்று புறப்பட்டார். மன்றம் காலியானது.