உதயநிதி மூன்றாவது முறையாக சுழற்றிய சாட்டை..அட இவர் அப்பா போல இல்லையே
அரண்டுப்போன உதயசந்திரன்..பிடுங்கப்பட்ட துறை நல்லாதான் இருக்கு இந்த வாரம்
மா.சு முதல் சேகர்பாபு வரை முதல்வர் கோபத்துக்கு ஆளான அமைச்சர்கள்
மாவட்டச் செயலாளர்களை கடிந்துகொண்ட முதல்வர், முதல் விக்கெட் அப்துல் வகாப் அடுத்து…
செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வந்த ஆப்பு..உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு மறைத்த ஊடகங்கள்
அண்ணா நகர் டாக்டர் நிதி நிறுவனத்தில் செய்த முதலீடு
”என்னப்பா எல்லோரும் வந்துட்டீங்களா” என்றபடி வந்தார் கோபால். ”எல்லோரும் வந்தாச்சுண்ணே” என்றபடி மூவரும் கோரசாக குரல் கொடுத்தனர். ”இன்னைக்கு பல செய்தி இருக்கு சிலது பழசாக இருந்தாலும் வெளியில் வராத விஷயங்கள் என்பதால் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார் கோபால்.
”ஏண்ணே புதுசு, பழசு மேட்டர் எதுவுமே வெளியில் வருவதில்லை. மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள் வேற வேலையை பார்க்கிறார்கள். ஆன்லைன் வெப்சைட்டுகளுக்கு காப்பி பேஸ்ட்டுக்கும், நடிகர், நடிகைகள், கள்ளக்காதல் பற்றி எழுதவே நேரம் சரியாக இருக்கு, நம்ம பாசறையில் பேசுற விஷயம் முக்கியமான விஷயம்ணே. அது லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் நீங்க சொல்லுங்கண்ணே” என்று உற்சாகமாக சொன்னார் கமால் பாய்.
”அப்படியா சொல்கிறாய், சரி ரொம்ப பேசிட்டோம் விஷயத்துக்கு வருகிறேன்” என்ற கோபால் ”முதலில் சமீபத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும், உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தையும் எடுத்துக்குவோம்” என்றப்படி சொல்ல ஆரம்பித்தார். ”முதல்வர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வரும் விஷயங்களை கவனிக்கிறாரா தெரிய ஆனால் கடும் கோபமாக இருப்பது மட்டும் உறுதி, அது மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்திலும் எதிரொலிச்சதை பார்க்க முடிந்தது. முக்கியமாக உறுப்பினர் சேர்ப்பு எந்த மாவட்டத்திலும் நகரவில்லை, பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி வேலைகளும் நடக்கவில்லை என்கிற கோபம் முதல்வரிடம் நன்றாகவே பார்க்கமுடிந்தது.
மாவட்டச் செயலாளராக இருங்கள் இல்லாவிட்டால் அமைச்சராக இருங்கள் இரண்டில் எதுவேண்டும் என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள் என்று எல்லா அமைச்சர்களையும் லெஃப்ட் ரைட் வாங்கினாராம் (போங்கண்ணே உங்களுக்கு கோபப்படவே தெரியலன்னு சிலர் இருந்தது வேற லெவல்) ஆனால் மா.சு, சேகர்பாபு, த,வேலு, சிற்றரசு, சுதர்சனம், சேகர் என சென்னை மாவட்டத்தில் உள்ள மா.செக்களுக்கு செம்ம திட்டு விழுந்ததாம்” என்றார் கோபால்.
”நான் கூட கேள்விப்பட்டேண்ணே மா.சு மீது செயல்பாடு சரியில்லை என ஏற்கெனவே புகார் வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கோபமாக பேசி அனுப்பினாராம் முதல்வர், வழக்கமாக மா.சுவுடன் வாக்கிங் போகும் மாசு சமீப காலமாக போவதில்லை. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் உங்கள் துறை சரியில்லை இப்படியே போனா மாவட்டச் செயலாளராக மட்டுமே இருப்பீர்கள், உங்கள் துறையை அருள் எழிலனுக்கு கொடுத்துவிடுவேன் என எச்சரித்ததாக சொல்கிறார்கள்” என்றார் கமால்பாய்.
”ஆமாண்ணே விஜயபாஸ்கர் அளவுக்கு இவர் ஆக்டிவாக இல்லை, விஜயபாஸ்கரிடம் சட்டப்பேரவையில் சிக்கி தடுமாறினார்” என்று குமார்ஜி சொல்ல, ”ஆமாம் அவர் அந்த அளவுக்கு செயல்படவில்லை, மருத்துவமனைகள் மோசமாக உள்ளதாக தகவல் வருகிறது. மற்ற நிர்வாகத்திலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்று மருத்துவர்கள் பக்கம் இருந்தே புகார் வருது. ஆனால் மா.சு பக்கம் எதுவுமே செய்ய முடியாமல் கையை கட்டிபோட்டுவிட்டு செயல்படலைன்னு சொன்னால் எப்படின்னு கேள்வி எழுப்புகிறார்களாம்” என்றார் கோபால்
”ஏன் அவர்தானே ஹெல்த் மினிஸ்டர் அப்புறம் ஏன் செயல்பட முடியல செந்தில் பாலாஜி எல்லாம் 200% செயல்படுகிறாரே” என்றார் போஸ்பாண்டி. ”கடுப்ப கிளப்பாதே போஸ் பாண்டி. உங்க முதல்வர் சிக்கலில் மாட்டுவார் என்றால் அது செந்தில் பாலாஜியால் மட்டுமே நடக்கும், முதலில் பாய்க்கு பதில் சொல்லி விடுகிறேன் மா.சுவுக்கு இதுவரை தொல்லையாக இருப்பது 2 பேர் ஒருவர் டி.எம்.எஸ் இயக்குநர் ராஜமூர்த்தி. அவர் அண்ணியாரின் சகோதரர் அவர் வைத்ததுதான் சட்டம் என்று இருந்தது, அவர் ஓய்வுப்பெற்று விட்டார், இன்னொருவர் உமாநாத், முதல்வரின் தனிச் செயலர் 2 என்கிற முறையிலும், போன ஆட்சியில் விஜயபாஸ்கருக்கு கீழ் மருந்து கொள்முதலில் அனுபவம் பெற்றதாலும் சுகாதாரத்துறை டெண்டர், கமிஷன், கட்டிங் அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறாராம்.
எந்த மருத்துவமனையிலும் மருந்து மாத்திரைகள் சப்ளை சரிவர இல்லை என்று மருத்துவர்களே குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இதில் அமைச்சர் என்ன செய்ய முடியும், சிவனேன்னு மராத்தான் ஓடிகிட்டிருக்கார். இதில் அவரை முதல்வர் கடிந்துக்கொண்டால் அவர் என்ன செய்வார், நியாப்படி இவர்களின் காட்ஃபாதர் மருமகனைத்தான் கேட்கணும் என உள்ளூர புலம்புகிறார்களாம் மா.சு.வின் ஆட்கள்” என்றார் கோபால்.
”வேற யார் யாரெல்லாம் திட்டு வாங்கினார்களாம் அண்ணே என்று கேட்டார்” குமார்ஜி, ”யார் திட்டு வாங்கலைன்னு கேளு அதுதான் சரியாக இருக்கும். ஊருக்கு ஊர் கோஷ்டி அரசியல், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் மோதல், அதிகாரிகளை செயல்பட விடுவதில்லை, அல்லது உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகாரம் செய்து மக்கள் கிட்ட வெறுப்பு வரும்படி நடப்பது, முறைகேடு என மக்கள் வெறுப்பை சம்பாதித்து மக்களுக்கும் திமுகவுக்கும் சம்பந்தமே இல்லை என்று செயல்படும் நீங்கள் எல்லாம் எதற்கு மாவட்ட செயலாளர்களாக இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் முதல்வர், இதில் 20 மாவட்ட செயலாளர்கள் வரை லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறேன், அடுத்து சின்ன கம்ப்ளைண்ட் வந்தாலும் அவ்வளவுதான் என்று எச்சரித்துள்ளார்” என்றார் கோபால்.
”திமுக அதிரடியாக அறிவித்த 2 கோடி உறுப்பினர் சேர்ப்பு நடுக்காட்டில் பஞ்சரான ஜீப் மாதிரி நிக்குதாம், எல்லோரும் அவரவர் கீழே உள்ளவர்கள் தலையில் பொறுப்பை போட்டுவிட்டு கைவிரித்ததால் ஒரு இஞ்சு கூட நகரவில்லை என்கிற கோபம் வெடித்ததாம்”. என்றார் குமார்ஜி. ”ஏண்ணே மக்கள் என்னமோ திமுகவில் சேர அலைமோதுவது போல் 2 கோடின்னு இலக்கு வைக்கிறார்களே இவர்களுக்கு தமிழ் நாட்டில் விழுந்த வாக்குகள் எண்ணிக்கை தெரியுமா தெரியாதா?” என்று கேட்டார் கமால்பாய். ”அதெல்லாம் யார் கேட்பது பாய், எந்தக்கட்சிக்கும் கோடிக்கணக்கில் உறுப்பினர் இல்லைன்னு தெரியும். தெரிந்தே உறுப்பினர் சேரு, அதில் ஓட்டர் ஐடி, ஜெராக்ஸ் வையின்னு சொன்னால் நாங்க யாரைப்போய் உறுப்பினராக சேர்ப்போம் படிவத்தை நீட்டினாலே தெறிச்சு ஓடுறாங்க ஜனங்க, இவர்கள் மேலே சம்பாதிப்பார்கள், கீழே மல்லுக்கட்டுவது நாங்களா என்று வட்டம், பகுதிகள் எல்லாம் புலம்புகிறார்களாம்”. என்றார் கோபால்.
”ஆமாண்ணே உறுப்பினர் சேர்ப்புக்கான எந்த ஏற்பாடும் மாவட்டம், பகுதியிலிருந்து பேசுறதே இல்லை, வீடுவீடாக போய் உறுப்பினர் சேர்ப்பது நடக்கிற காரியமா? ஏதோ வட்டச்செயலாளர், வட்ட நிர்வாகிகளை சம்பாதிக்க விட்டால் குறைந்தப்பட்சம் அதிகாரிகள் சொல்வதை மதித்தாலாவது மக்கள் மதிப்பார்கள் யாருமே மதிக்கிறதில்ல, ஒரு சின்ன அதிகாரி கூட மந்திரிக்கு சொந்தக்காரன்னு மதிக்க மாட்டேங்கிறான், இப்படி இருந்தால் மக்கள் எப்படி கீழே இருக்கும் எங்கள மதிப்பாங்க, எப்படி உறுப்பினர் சேர்க்கமுடியும்?” என்று ஆதங்கத்தை கொட்டினார் போஸ்பாண்டி.
”பாண்டி அனுபவம் பேசுதா? உனக்குள் இன்னொரு முகமா ஆச்சர்யமா இருக்கு” என்ற கோபால் ”ஆமாம் உண்மைதான் திமுக உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல அதிமுக உறுப்பினர் சேர்க்கையிலும் தொய்வு உள்ளதாக எடப்பாடி திட்டியிருக்கிறார். முன்புபோல் உறுப்பினர் சேர்ப்பு என்றால் பிரச்சினை இல்லை, ஆதார்கார்டு, ஓட்டர் ஐடி என்று வாங்கி உறுப்பினர் சேர்ப்பதுதான் பிரச்சினை என்று தலைமையிடம் யார் சொல்ல முடியும். அதனால் உள்ளுக்குள்ளேயே புழுங்குகிறார்கள். திமுக கூட்டத்தில் சென்னையின் மாவட்டச் செயலாளர்கள் மீதும் கடும் கோபத்தை காட்டினாராம் முதல்வர். த.வேலு, சிற்றரசு இருவர் செயல்பாட்டிலும் திருப்தி இல்லை, சுதரசனத்தின் செயல்பாடிலும் திருப்தி இல்லை. சென்னையில் சில மாவட்ட செயலாளர்களுக்கு விரைவில் கல்தா என்கிறார்கள்.
சேகர்பாபுவையும் கடிந்துக்கொண்டதாக சொல்கிறார்களே என்று கேட்டார் குமார்ஜி. ஆமாம் அவருக்கு சி.எம்.டி.ஏ கொடுத்தாலும் கொடுத்தார்கள் வளைத்துக்கட்டி கல்லா கட்டுகிறாராம். அவர் போடும் கண்டிஷன்களால் பில்டர்ஸ் முழுவதும் முத்துசாமியிடம் போய் முறையிட சி.எம்.வரை விஷயம் போனதாம். அதுவும் அதிமுகவினரையே அதிகம் கிட்ட சேர்த்துக்கொண்டு திமுகவினரை ஒதுக்குகிறாராம் இதை குறிப்பிட்டே முதல்வர் கடிந்துக்கொண்டாராம். ஒன்று மாவட்ட செயலாளராக இருங்க இல்லை அமைச்சராக இருங்கன்னு சொன்னாராம்” என்றார் கோபால்.
”அவரை ஒன்றும் செய்ய முடியாதுண்ணே அண்ணியார்கிட்ட அவர் மனைவி ரொம்ப நெருக்கம் அங்க கண்ணை கசக்கினால் இங்க எதிரொலிக்கும்” என்றார் போஸ்பாண்டி. ”இவரு மட்டுமா அதிமுக ஆட்களை வச்சிருக்காரு, செந்தில் பாலாஜி, கண்ணப்பன் ஆஃபீஸ் போய் பாருங்கள் ஒரு திமுககாரன் இருக்க மாட்டான் முழுவதும் அவர்கள் ஆட்கள் தான்” என்ற போஸ்பாண்டி ”இதெல்லாம் தலைவருக்கு தெரியுமோ தெரியாதோ கட்சி போகிற ரூட் சரியில்ல” என்றார். ”இதுக்கு தீர்வு என்ன தெரியுமா பாண்டி கட்சி அலுவலகத்துக்கு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் நிர்வாகிகள் தினம் வரணும். ஆனால் ஒருவர் கூட வருவதில்லையே அப்புறம் எப்படி கட்சிக்காரன் குறையை மேலிடத்தில் சொல்வான் இதில் மக்களிடம் திமுக அந்நியப்படுதுன்னு ஸ்டாலின் சொல்கிறார், கட்சிக்காரர்களிடமிருந்து இவர் அந்நியப்படுகிறாரே அது தெரியவில்லையே” என்றார் கோபால்.
”ஒன்று தெரியுமா மாவட்டம் முழுவதும் கட்சி தலைமை பேரை சொல்லிகிட்டு, அமைச்சர்கள் பேரை சொல்லிகிட்டு ஒரு கூட்டம் அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதிக்குது, இதை அதிகாரிகள் யாரிடம் சொல்வதுன்னு புலம்புகிறார்கள்” என்றார் குமார்ஜி. சொல்றத தெளிவா சொல்லு குமார் என்றார் கோபால். ”நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் மீன்வளத்துறையில அதிகாரியா இருக்காருண்ணே அங்க கான்ட்ராக்டர் ஒருத்தர் மணிவண்ணன் என்று பேரு. இவர் வேலையே காண்ட்ராக்டர்களை மிரட்டி காண்ட்ராக்ட் எடுப்பதுதான். ஒத்துவராத அதிகாரிகளை அவர்கள் மீது குறைச்சொல்லி பெட்டிஷன் போட்டு, வழக்கு போட்டு ஒரு வழி பண்ணிடுவாராம்
மன்னார்குடி ஆளுன்னு சொல்லிகிட்டு ஜெயலலிதா ஆட்சியில் மீன் வளத்துறையில் சீன் போட்ட நபரை அப்போதைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் விவரம் தெரிந்து கிட்ட வரவிடாம ஓரங்கட்டி வச்சிருந்தாராம், அப்புறம் போன அதிமுக ஆட்சியில அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை பிடிச்சு அங்க இங்கன்னு மீன் வளத்துறை காண்டராக்டுகளை எடுத்திருக்கார். இவர் ஆவணங்கள் எதுவும் சரியில்ல காண்ட்ராக்ட் எடுக்கும் தகுதி இல்லை என்று சென்னை மீன்வளத்துறை அதிகாரிகள் மறுக்க சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்துக்குள்ள போய் அடித்து தாக்கியதால் சைதாப்பேட்டை ஸ்டேஷனில் வழக்கே உள்ளது.
அதற்கு பிறகு கொஞ்ச நாள் சும்மா இருந்தவர் இப்ப மீண்டும் ஆட ஆரம்பிச்சுட்டாராம். அதிகாரிகளை மிரட்டுவது காண்ட்ராக்ட் எடுக்க ஆவணங்கள் சரியில்லைன்னு சொன்னால் சரிபண்ணு இல்ல உன் மீது ஆர்டிஐ போட்டு வழக்கு தொடருவேன் என்றெல்லாம் மிரட்டுகிறாராம். நான் அன்பில் மகேஷ் உறவினர், நாகை மாவட்ட செயலாளரையே தூக்கும் அளவுக்கு மேலிட செல்வாக்கு இருக்குன்னு மிரட்டுகிறாராம். இதில் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேரை அதிகம் பயன்படுத்துகிறாராம் இதை அனிதா ராதாகிருஷ்ணனிடம் எப்படி கொண்டுபோவதுன்னு அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இப்படி மாவட்டத்துக்கு பலர் உள்ளனர், இதனால் கீழ்மட்ட அதிகாரிகள் தான் பாதிக்கப்படுகின்றனர். டாஸ்மாக்கில் கரூர் கேங்க் மாதிரி இதுபோல பல இருக்கு” என்றார் கோபால். ”அண்ணே அதிகாரிகள் அரசியல்வாதியை மதிக்காமல் குட்டுப்பட்ட சம்பவம் தெரியுமா? உதயநிதி மூன்றாவது முறையாக சாட்டையை சுழற்றியிருக்கிறார்” என்றார் போஸ் பாண்டி. ”அது என்ன பாண்டி சொல்லு” என்று மூவரும் கேட்க ”முதல் தடவை சைலேந்திரபாபு மேட்டரில் அவரை கேள்விக்கேட்டு தாம்பரம் கமிஷ்னர் அலுவலகம் மாற்றத்தை ரத்து செய்தது, இரண்டாவது தடவை சைக்கிள் டெண்டரில் தலையிட்டு 88 கோடி வரை குறைத்தது. மூன்றாவது மேட்டர் தான் சுவாரஸ்யமான மேட்டர், இருங்க தண்ணி குடிச்சுக்கிறேன்” என்று போஸ் பாண்டி தண்ணீர் குடித்தார்.
”போஸ் உனக்கு நக்கல் ஜாஸ்தி ஏதாவது கதை சொல்ல யோசிக்கிறாயா” என்று குமார்ஜி கேட்க, ”இரு குமாரு மேட்டர சொல்கிறேன் அப்புறம் நீயே சொல்லு, சக்திமான் உதயசந்திரன் முதல்வரையே ஆட்டிபடைப்பவர்னு ஊரெல்லாம் பேச்சு, அது சரிதான் என்பதுபோல் அவருக்கான டிரான்ஸ்ஃபரை அவரே போட்டுகிட்டு நிதித்துறையில் போய் உட்கார்ந்துக்கொண்டார், செகரெட்டரி 1 இடத்தில் தனது ஆளான முருகானந்தத்தை உட்கார வைத்துக்கொண்டார். உள்துறைக்கு அமுதாவையே இவர்தான் பரிந்துரைத்தார் என்பது ஐஏஎஸ் வட்டாரத்தில் உலா வரும் தகவல். அப்படி சக்தியுள்ள உதயசந்திரன் உதயநிதியையும் விட்டு வைக்கவில்லை. அவரது துறையின் கீழ் வரும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைச் செயலரை மாற்றிவிட்டு அந்த துறையையும் தானே கையில் எடுத்துக்கொண்டார். அப்போது உதயநிதி வெளிநாட்டில் இருந்தார். ஒரே நேரத்தில் தந்தை, மகன் இருவரையும் கட்டுப்படுத்தும் யுக்தி அது. அங்குதான் ஆப்பு விழுந்தது.
உதயநிதி வந்தவுடன் இதைக்கேட்டு கோபப்பட்ட அவர் உடனடியாக அப்பா கிட்ட பிரச்சினை செய்து உதயசந்திரனை நகர்த்திவிட்டார். அவரிடமிருந்து சிறப்பு திட்ட செயலாக்கத்துறையை பிடுங்கி ககந்தீப்சிங் பேடியிடம் ஒப்படைத்துவிட்டார், அதுமட்டுமல்ல அவருக்கு ஞாபகம் இருக்கட்டும் என்று முன்னர் அவர் இருந்த ஆர்க்கியாலஜி துறையை அவருக்கு கொடுத்து தான் யாரென்பதை காட்டியுள்ளார் உதயநிதி. இது அவரது மூன்றாவது மூவ். இது சத்தமில்லாமல் நடந்திருக்கு. ஆனால் ஊடகங்களில் ஏதோ உதயசந்திரன் ஆர்க்கியாலஜியை எடுத்துக்கொண்டதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். ஆனால் சபரீசனை தொடர்ந்து உதயசந்திரனுக்கும் பின்னடைவு, இதேபோல் விரைவில் காவல்துறையிலும் இதுபோன்ற மாற்றங்கள் வரலாம் என்று எதிர்ப்பார்ப்போம்” என்று போஸ் பாண்டி முடிக்க, ”ஏம்பா நீ சொல்றது உண்மையா கூட்டிக்கழிச்சு பார்த்தா அப்படித்தான் தெரியுது” என்று கமால் பாய் ஆமோதித்தார்.
”இதுமட்டுமல்ல அஞ்சு கட்சி அமாவாசைன்னு சமூக வலைதளங்களில் பிரபலமான செந்தில் பாலாஜிக்கு இந்தவாரம் முழுவதும் சோகவாரம் தான். பணம், ஆள் பலம் இருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதை பொய்பித்து பாடம் கற்றுக்கொடுத்த வாரம் போனவாரம். முதலில் கள்ளச்சாராய சாவுகள், பின்னர் உச்ச நீதிமன்றம் வச்ச ஆப்பு, பிறகு டாஸ்மாக் பாரிலேயே 2 உயிர்கள் பலியானது என்று தொடர்ந்து டாஸ்மாக் அமைச்சர், அவரது சட்டவிரோத மதுபார்கள், கரூர் கேங் என அம்பலப்பட்டு போனார் செந்தில் பாலாஜி. எப்போதும் சொல்வதைக்கேட்டு தலையாட்டிச் செல்லும் ஊடகத்தினர் முதன்முறையாக எதிர்த்து கேள்விக்கேட்க தடுமாறி கண்டபடி உளறிவிட்டு போனார் செந்தில் பாலாஜி” என்றார் போஸ் பாண்டி. என்ன பாண்டி அடுக்கடுக்கா கட்சிக்கு எதிரா தகவலா சொல்கிறாய் என்று கையை கிள்ளிப்பார்த்துகிட்டார் கமால்பாய்
”அதெல்லாம் விடுங்கபாய் இதை கேளுங்க, கள்ளச்சாராய விவகாரம் முதல்வருக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கண்டவர்களையெல்லாம் சஸ்பெண்ட் செய்து சஸ்பெண்ட் செய்யவேண்டியவர்களை கண்டுக்கொள்ளாமல் போனது, அதிகாரிகள் பேச்சைக்கேட்டு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளித்தது, சாராய வியாபாரிக்கே 50 ஆயிரம் கொடுத்தது என அம்பலப்பட்டு போனார். அதிகாரிகள் எதைச் சொன்னாலும் தலையாட்டினால் சாலையில் போகிறவன் கூட கடையில் பரிசுக்கோப்பை வாங்கி முதல்வரிடமே காட்டி ஏமாற்றுவான் என்பது தெரிந்தும் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சை பதில் கேள்வி கேட்காமல் நிறைவேற்றி வருவதால் சமூக வலைதளங்களில் பிரித்து மேய்கிறார்கள்” என்று சிரித்தார் கோபால்.
”அண்ணே நீங்க சிரிக்கிறீங்க ஆனால் ஆளுநர் சீரியசாயிட்டாரே, உடனடியாக முழு ரிப்போர்ட் கேட்டிருக்கார், அண்ணாமலை சந்திச்சு கொடுத்த கோரிக்கை மனுவையும் வாங்கிகிட்டார், இந்த விவகாரத்தை சரியாக கையில் எடுத்த எடப்பாடி பெரிய பேரணி நடத்தி ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார், அதுமட்டுமல்ல உடன் வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சில நெருக்கமானவர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆளுநரிடம் ரகசியம் பேசியுள்ளார் அது என்னவாக இருக்கும்னு உளவுத்துறையினர் தலைய பிச்சுக்கிறாங்களாம்” என்று சொன்னார் குமார்ஜி. ”பாரில் 2 பேர் உயிரிழந்தது பெரிய பிரச்சினை ஆகியுள்ளது, தங்களை பலிகடா ஆக்கிவிடக்கூடாது என்பதற்காக மதுவிலக்கு அமல் போலீஸார் தாங்களாகவே பத்திரிக்கையாளர்களை அழைத்து பல விவரங்களை கூறி வருகிறார்களாம். மொத்தத்தில் செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் ஆட்டம் வெகுநாள் நீடிக்காதுன்னு சொல்கிறார்கள், அதற்கு சாட்சி திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது கரூர் கேங்கின் சட்ட விரோத பார்களுக்கு சீல் வைக்கப்பட்டதுதான் அதுவும் ஒன்று இரண்டு அல்ல 75 பார்களுக்கு சீல் வைத்துள்ளார் மாவட்ட எஸ்பி கல்யாண்” என்றார் கமால்பாய்.
”ஏண்ணே அதென்ன சுப்ரீம் கோர்ட் உத்தரவு எந்த பேப்பரிலும் வரலையே” என்று கேட்டார் குமார்ஜி, ”அது எப்படி வரும், சிறப்பு விசாரணைன்னு சில சானல்கள் போட்டதை கூட கூப்பிட்டு மிரட்டி தூக்கிட்டாங்க, அப்புறம் எப்படி முழு செய்தி வரும், மேட்டர கேளு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்கவும் இது ஜாப் ராக்கெட் என்பதால் லஞ்ச ஒழிப்பின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யணும்னு உத்தரவிட்டிருக்காங்க. இதனால் விசாரணை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்க உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜெயில் களி தான், அதுமட்டுமல்ல இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க மத்திய அமலாக்கத்துறை முயற்சி செய்தும் செந்தில் பாலாஜி கோர்ட் ஸ்டே வாங்கி தப்பித்து வந்தார், இப்ப அதிலும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரிக்கலாம்னு உச்ச நீதிமன்றம் சொல்லிடுச்சு. விடுவார்களா அமலாக்கத்துறையினர் மணீஷ் சிசோடியா கதை தெரியும் அல்லவா? திஹார் சிறைதான். அதானால் உள்ளே உள்ள பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடமாடுகிறார் செந்தில் பாலாஜி” என்றார் கோபால்
”இத்தனை நடந்தும் முதல்வர் மட்டும் செந்தில் பாலாஜிமீது கனிவு பார்வையுடனேயே இருப்பது கட்சிக்காரர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது, இதை இப்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பிச்சுட்டாங்க, எப்போ வெடிக்கப்போகுதோ, இதேபோல் லைகா ரெய்டு விவகாரம் ரெட் ஜெயண்ட் வரை வந்து இப்ப முதல்வரின் முக்கிய அதிகார மையம் ராஜா சங்கர் அவரது மகன் வரை நீண்டுள்ளது. இதனால் முதல்வருக்கு நேரடியாகவே சிக்கல் ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஒரு அளவு வரைதான் தலையிட முடியும். ஆனால் ராஜா சங்கரோ, முதல்வரிடம் கலந்தாலோசிக்காமலேயே, இவராக சங்கர் ஜிவாலிடம் இரண்டு மீட்டிங் நடத்தியிருக்கிறார்.
லைக்காவின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஜிகேஎம். தமிழ்க்குமரன். இவர் பாமக தலைவர் ஜிகே மணியோட மகன். லைக்கா அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள்ள வந்தவுடனேயே, அன்புமணி ஜிகே மணியை அழைச்சி, அமலாக்கத்துறை விசாரணைக்கு முழுமையா ஒத்துழைப்பு குடுக்கணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். தமிழ்க்குமரனும், லைக்காவுக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்ல உள்ள கருப்புப் பண பரிவர்த்தனைகள் குறித்து வாக்குமூலம் கொடுத்திருக்கார்.
இதையடுத்து, தனது மகன் விசாரணை வளையத்தில் வந்து விடுவார் என்பது அறிந்த ராஜா சங்கர், சங்கர் ஜிவாலிடம், தன் மகன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்து விடுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இதில் உள்ள சிக்கல்களை விளக்கி முடியாது எனக் கூறவும், எம்.ஜி மாறன் வழக்கை இதே போல ஒரு சூழலில் முடித்துத் தரவில்லையா; அது போல இதையும் முடித்துத் தரவும் என்று ராஜா சங்கர் வலியுறுத்த, வேறு வழியின்றி சம்மதித்திருக்கிறார் ஜிவால்.
இதன் நடுவே, பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு இந்த விஷயம் தெரிந்து, அவர் தன் பங்குக்கு உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார். அங்கிருந்து அழைப்பு வந்ததும், தனது டிஜிபி பதவி கனவுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சிய ஜிவால், ராஜா சங்கர் மகனை காப்பாற்றுவதற்காக வழக்கை முடித்து வைத்தால் நமக்கு சிக்கல் வந்து விடும் என்ற அச்சத்தில் உள்ளார்.
அவருக்கு கமிஷனர் பதவி வாங்கித் தந்த சபரீசனின் உறவினர் ப்ரவீன் கணேஷ் மூலமாக, சபரீசனை வைத்து, முதல்வரிடம், ராஜா சங்கர் கேட்டபடி வழக்கை முடித்து வைத்தால், பெரும் சிக்கல் வந்து விடும் என்று முதல்வருக்கு உணர்த்தும் முயற்சிகளிலும் ஈடுபடுவார்.
எம்.ஜி மாறன் மீதான வழக்கை முடித்து வைத்து ஒரு பெரும் தொகையை பார்த்தது போல, இதில் பார்க்க முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறார் ஜிவால்” என்றார் கோபால்.
“சரி கிளம்புவோம்” என கமால் பாய் சொல்லவும், அனைவரும் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
பாசறைஎக்ஸ்க்ளூசீவ்
திடீர் அதிகார மையமாக வலம் வரத் தொடங்கியுள்ள அண்ணா நகர் டாக்டர், முதல்வர் குடும்பத்துக்கு தெரியாமலேயே பல டெண்டர்களை முடிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக இலவச சைக்கிள் டெண்டரில் மட்டும் 60 கோடிகளை டாக்டர் அடித்துள்ளார். இந்த தகவல் வெளியானதிலிருந்து சின்னவர் கடும் எரிச்சலில் இருக்கிறார். ‘யாரோட ஆட்சி, யாது இதுல சம்பாரிக்கிறது’ என்று கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சின்னவர்.
துபாயிலிருந்து கடந்த ஆண்டு வருவதாக சொன்ன ஒரு முதலீடு துபாயைச் சேர்ந்த Aster Healthcare நிறுவனம் தமிழகத்தில் தொடங்குவதாக சொன்ன மருத்துவமனை. அண்ணா நகர் டாக்டருக்கு, ஒரு மருத்துவமனை கட்டி அதை நிர்வகிக்க வேண்டும் என்று ஆசை. இதை ராஜா சங்கரிடம் தெரிவிக்கவும், அவர் அண்ணா நகர் மருத்துவரையே துபாய்க்கு அனுப்பி, Aster Healthcare நிறுவனத்தின் கிளையை நானே தமிழகத்தில் தொடங்குகிறேன் என்று பேச்சுவார்த்தை நடத்த அனுப்புவதாக இருந்தார். இந்த தகவல் வெளியே கசிந்ததும், துபாய் பயணம் ரத்தாகியுள்ளது.
இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த ‘கோ’ என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு நிதி நிறுவனத்தின் வாரிசிடம், அண்ணா நகர் மருத்துவர் 60 சியை கொடுத்து, மாதந்தோறும் இதற்கான வட்டித் தொகையை தருமாறு பேசியிருக்கிறார். அந்த நிதி நிறுவன வாரிசோ, வரி அதிகாரிகளை நினைத்து அஞ்ச, ராஜா சங்கர் கவலைப்படாமல் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறவும், முதல் தவணையாக 20 சி கொடுக்கப்பட்டுள்ளது.