தாமதமாக தொடங்கினாலும், இந்த சோதனை நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதே. அதிமுக அரசுக்கு கிடைத்த வாக்குகள், திமுக தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்களின் மீதான கோபத்தின் காரணமாகவும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது. திமுக அமைச்சர்கள் நம்மை யாருமே எதுவுமே செய்து விட முடியாது என்ற ஆணவத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருந்தனர். திமுக அமைச்சர்களுக்கு இருந்த இந்த ஆணவத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை.
1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், 1991-1996 வரையிலான காலத்தில், அதிமுக அமைச்சர்கள் பல்வேறு பேர் மீது ஊழல் வழக்குகள் தொடரப் பட்டன. வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் அல்லாமல், பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்தும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன. இந்த தனி நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என்று அதிமுக உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம், ஒரு அரசுக்கு ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்றங்களில் ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது. சில நேர்வுகளில் தண்டனையும் கிடைத்தது.
ஆனால் 2001ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே, திமுக அமைச்சர்களில் அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் மீது ஊழல் வழக்கு தொடரப் பட்டது. அந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படாமல், அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப் பட்டன. இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே உள்ள வேலைப் பளுவோடு இந்த பளுவும் சேர்ந்து, வழக்கு விசாரணை துரிதமாக நடக்காமல் ஜவ்வு போல இழுத்துக் கொண்டு சென்றது.
குற்றம் சாட்டப் பட்டவர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி, தங்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளையும் பயன்படுத்த உரிமை உண்டு. அந்த உரிமைகளை மறுப்பது சட்ட விரோதம். உதாரணத்திற்கு, எனக்கு இந்த ஆவணத்தின் நகல் வேண்டும், எனக்கு எதிராக வழக்கு தொடர உரிய அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை என்பது போன்ற மனுக்களை குற்றம் சாட்டப் பட்டவர்கள் தாக்கல் செய்யலாம். மாவட்ட நீதிமன்றங்களில் இது போல மனு தாக்கல் செய்யப் படும் நேர்வுகளில், இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிவடைவதற்கே ஆண்டுக்கணக்கில் அவகாசம் பிடிக்கும். அந்த மனுக்களின் மீதான விசாரணை முடிந்து, வழக்கு விசாரணை தொடங்குவதற்குள், அடுத்த ஆட்சி வந்து விடும். பிறகு என்ன ? வழக்குகள் குழிதோண்டி புதைக்கப் படும். இதுதான் திமுக அமைச்சர்கள் விவகாரத்தில் நடந்தது. 2001ல் ஒரு வேளை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டிருந்தால், கே.என்.நேரு மீது இன்று சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்வதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது.
கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆற்காடு வீராச்சாமி, பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், என அத்தனை பேர் மீதும் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப் பட்டன. இவ்வாறு ஏறக்குறைய அனைத்து வழக்குகளிலும், குற்றவாளிகள், நீதிமன்றத்தால், வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று விடுவிப்பு செய்யப் பட்டன. இந்த விடுவிப்பு உத்தரவுகள், திமுக ஆட்சியில் இருந்ததால் நடந்தன என்ற கூற்றை மறுப்பதற்கில்லை.
இந்த காரணத்தால், திமுக பிரமுகர்கள் பலருக்கும், சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து எந்த விதமான அச்சமும் இல்லாமல் போய் விட்டது.
அந்தத் தவறை இந்த முறையும் நடக்காமல் முதல்வர் ஜெயலலிதா பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணியாற்றுவதில், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும், போதுமான வாகன வசதிகள் இல்லாத காரணத்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த சிரமங்களை நீக்கி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணியாற்ற போதுமான வசதிகளை செய்து தருவதோடு அல்லாமல், உடனடியாக இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அந்த நீதிமன்றங்களுக்கு உரிய கட்டிட வசதிகளை செய்து தர வேண்டும்.
ஊழல் வழக்குகளை விசாரிக்கையில், அதிமுக வழக்கறிஞர்களாக பார்த்து நியமிக்காமல், விபரம் தெரிந்த திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.
வழக்குகளை பதிவு செய்து சோதனைகளை நடத்துவது என்பது மிக எளிது. ஆனால், அந்த ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதென்பது மிக மிக முக்கியம். அவ்வாறு தண்டனை பெறுவதே, மக்கள் சொத்தை கொள்ளையடித்தவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும்.
இதை அதிமுக அரசு செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.