2ஜி ஊழல் வழக்கு எப்படி உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு சூடு பிடித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 2ஜி வழக்கில் எப்ஐஆர் போடப்பட்டு, 11 மாதங்களுக்குப் பிறகு சாவகாசமாக தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் சோதனை நடத்தியது சிபிஐ. 11 மாதங்கள் கழித்து சோதனை நடத்தி விட்டு, இந்தக் கோப்பை காணவில்லை, அந்த ஆவணத்தை காணவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தது.
காணாமல் போன ஆவணங்களைப் பற்றி புலம்பும் சிபிஐ, கையில் உள்ள ஆவணத்தை வசதியாக மறைத்தது ஏன் என்பதுதான் மர்மமாக உள்ளது.
ஜுலை 8 அன்று பத்திரிக்கையாளர்களை கல்லுளி மங்கன் கபில் சிபலும், மற்றொரு பொய்யர் பவன் குமார் பன்சாலும் சந்தித்தனர். அப்போது கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிதம்பரத்துக்கு எந்தப் பங்கும் கிடையாது. (ஏன்னா பங்கை முதல்லயே வாங்கிட்டார்) அவரை பதவி விலகச் சொல்லி எழுந்துள்ள கோரிக்கை ஒரு சதித்திட்டத்தின் வெளிப்பாடு. ஆண்டிமுத்து ராசாவுக்கும், சிதம்பரத்துக்கும் இடையே நடந்த மீட்டிங் தொடர்பாக குறிப்புகள் ஏதும் தயாரிக்கப் படவில்லை
கூட்டத்திற்கான குறிப்புகள் தயாரிக்கப் படாதது குறித்து விளக்கிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பவன் குமார் பன்சால் “ராசா மற்றும் சிதம்பரம் இடையே நடந்த அந்த கூட்டம், குறிப்பு எடுப்பதற்கான தேவையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் சில விவகாரங்களை விவாதிப்பதற்காக சந்திப்பதுண்டு. ஆனால் எல்லா நேரங்களிலும் குறிப்புகள் எடுக்கப் படுவதில்லை” என்று கூறினார்.
ஆண்டிமுத்து மகனுக்கும், பழனியப்பன் மகனுக்கும் இடையே நடந்த மீட்டிங், அலுவல் ரீதியான சந்திப்பு. ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக நடந்த சந்திப்பு. (அல்லது சிதம்பரத்துக்கு பங்கு பிரிப்பதற்காக) மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அவர் மீதே குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்ட போது, பிப்ரவரி 24 அன்று பாராளுமன்றத்தில், இவ்வாறு பேசினார்.
The government’s policy on the pricing of spectrum was taken on the basis of the Cabinet decision of 2003, which specifically left this issue to be determined by the Ministry of Finance and the Ministry of Telecommunications. Contrary to the assertion of the Leader of the Opposition, the record clearly shows that the then Finance Minister, while he initially had a different view, which he communicated to me on January 15, subsequently consulted with the Minister, Telecommunications and the two Ministers worked out an agreed formula on spectrum charges, which was reported to me in a meeting on July 4, 2008.
அதாவது, 2003ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் (அதாவது பிஜேபிய ப்ளேம் பண்றாராமாம்…!!!!!) ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பான முடிவு நிதி மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் எடுக்கப் பட்டது. முதலில் நிதி அமைச்சருக்கு விலை தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது. பிறகு இரண்டு அமைச்சர்களும் ஜனவரி 15 அன்ற சந்தித்தார்கள். சந்தித்த பிறகு அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது (பேரம் படிந்தது) அவர்கள் அந்த விபரத்தை ஜுலை 4 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் என்னிடம் தெரிவித்தனர். (6 மாசமா இவருக்கு தெரியாதாம்…!!!! ஹய்யோ… ஹய்யோ..)
ஆனால் சிதம்பரத்துக்கும், ராசாவுக்கும் இடையே நடந்த கூட்டத்தில் குறிப்புகள் (Minutes) எடுக்கப் பட்டுள்ளன என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்க பட்ட விஷயம், ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பானது. இந்தக் கூட்டத்துக்கு முன், ராசா 2001 விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை கொடுக்க வேண்டும் என்கிறார், அதற்கு நிதி அமைச்சர் என்ற முறையில், சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதை நாட்டாமை மன்மோகன் சிங் கூடிப் பேசுமாறு உத்தரவிடுகிறார்.
இந்தக் கூட்டம், ராசா 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை வழங்கி உத்தரவிட்ட 20வது நாள் நடக்கிறது. இந்தக் கூட்டம் தொடர்பாக பதிவு செய்யப் பட்ட குறிப்பில், சிதம்பரம், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்ட நிறுவனங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதையோ, வருவாயைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியோ மீண்டும் ஆராய வேண்டியதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். 22 நவம்பர் 2007 அன்று அப்போதைய நிதிச் செயலாளர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ? 122 லைசென்சுகள் 1658 கோடி ரூபாய்க்கு வழங்கப் பட்டுள்ளன. இது 2001 அன்று உள்ள விலைக்கு கொடுக்கப் பட்டது. ஆகையால் இந்த லைசென்சுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிதம்பரத்தின் அமைச்சகத்தின் செயலாளர் எழுதுகிறார்.
இது தவிரவும் இந்தக் கூட்டத்திலேயே, ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தோடு இணைவது தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு பெற்ற பின்பு நிறுவனங்கள் அதை விற்பதை தடை செய்வுது தொடர்பான விதிமுறைகளையும் மாற்ற வேண்டும் என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு 3 மாதங்கள் கழித்து, ராசா தன்னிச்சையாக இரு நிறுவனங்கள் இணைவது தொடர்பான விதிமுறையை மாற்றுகிறார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு தங்கள் ஷேர்களை விற்பதோ, வேறு நிறுவனத்துடன் இணைவதோ, ஸ்பெக்ட்ரத்தை மறு விற்பனை செய்வதோ கூடாது என்ற விதியை சந்தடியில்லாமல் தளர்த்துக்கிறார். இதன் காரணமாகவே ஸ்வான், யூனிடெக் மற்றும் டாடா நிறுவனங்கள் தங்கள் பங்குகளை முறையே எடிசலாட், டெலிநார் மற்றும் டோகோமோ நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன.
இந்த மாற்றங்கள் எல்லாம் அறிந்தும் செட்டிநாட்டு சீமான் எதுவுமே செய்யவில்லை. மாறாக 15.01.2008 அன்று சிதம்பரம் எழுதிய குறிப்பில், “தற்போது ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றவர்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற பொழுது அவர்கள் செலுத்திய கட்டணத்தை கூடுதல் ஸ்பெக்ட்ரத்துக்காக அவர்கள் செலுத்திய கட்டணமாக எடுத்துக் கொண்டு, இந்த விவகாரத்தை முடிந்து விட்டதாக கருதலாம்.” என்று எழுதியுள்ளார்.
தன்னுடைய அமைச்சகத்தின் செயலாளர், குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்டுள்ளது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவை சிதம்பரம் ஏன் ரத்து செய்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
மார்ச் 2011ல் தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள குறிப்பில், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்ட விலை குறித்து மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், நிதி அமைச்சகம் (ப.சிதம்பரம்) குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியதை ஒப்புக் கொண்டதாகவே தெரிகிறது என்று எழுதியுள்ளார்.
பிரணாப் முகர்ஜி இப்படி வெளிப்படையாக சிதம்பரத்தை குற்றம் சாட்டி கருத்து தெரிவித்த பிறகும், காங்கிரஸ் சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்குவது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில், திமுகவினர் தற்போது நடந்துள்ள டெவலப்மென்டுகளால் அகமகிழ்கின்றனர். ராசா மட்டுமே குற்றம் செய்தார் என்று, கனிமொழியையும், ராசாவையும், சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சி, இன்று தன்னுடைய உள்துறை அமைச்சரின் பங்கு குறித்து என்ன பதில் சொல்லப் போகிறது என்பதையும் ஆர்வத்தோடு கவனித்து வருகிறார்கள்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் சுப்ரமணியம் சுவாமி. இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள சிபிஐ எடுத்துள்ள நிலைபாடுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. புதிய வழக்கு பதிவு செய்யவோ, புதிதாக குற்றவாளியை சேர்க்கும் உரிமை விழக்கு விசாரணையை நடத்தும் நீதிபதிக்குத் தான் உள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரம் இல்லை என்ற நிலைபாட்டை சிபிஐ எடுத்துள்ளது.
ஆனால் சுப்ரமண்ய சுவாமியோ, சிதம்பரத்தை விசாரிக்காமலேயே அவரை காப்பாற்ற சிபிஐ ஏன் முயற்சிக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறார். உச்ச நீதிமன்றத்தில், ஸ்பெக்ட்ரம் 2001 விலைக்கு விற்கப் பட்டதில் சிதம்பரத்தின் பங்கு என்ன என்பதற்கு ஆதாரமாக ராசாவுக்கும், அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும் இடையே 2008 ஜனவரி 30இ மே 29, ஜுன் 12 மற்றும் ஜுலை 4 ஆகிய தினங்களில் நடந்த அலுவல் ரீதியான கூட்டங்களுக்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் டாக்டர் சுவாமி.
சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில், நிதி அமைச்சரின் ஆலோசனையை ஆ.ராசா நிராகரித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், நிதி அமைச்சருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதை விளக்கி, ஆதாரங்களோடு சிபிஐக்கு கடிதம் எழுதிய போது, சுவாமிக்கு பதில் அனுப்பிய சிபிஐ, அவர் அனுப்பிய ஆதாரங்கள் பரிசீலிக்கப் படும் என்று தெரிவித்தது. ஆனால், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த போது, இந்த ஆதாரங்கள் நிராகரிக்கப் பட்டு, ஆ.ராசா தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது போல் சிபிஐ நிலைபாடு எடுத்திருப்பது ப.சிதம்பரத்தை காப்பாற்றவே என்கிறார் டாக்டர் சுவாமி.
மேலும் சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ள வாதமும் தவறே.. சிபிஐயின் கூற்றுப் படி, வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்குத் தான் புதிய குற்றவாளியை சேர்க்கவும், விசாரணைக்கு உத்தரவிடவும் அதிகாரம் உள்ளது. 2ஜி வழக்கை பொறுத்தவரை, ஏற்கனவே உச்ச நீதிமன்றம், 2ஜி வழக்கில், விசாரணை நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று ஆணையிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இது தவிரவும், உச்ச நீதிமன்றம் என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படியும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படியும், அளவில்லாத அதிகாரங்களைக் கொண்டது. ஆகையால், உச்ச நீதிமன்றம், பழனியப்பன் சிதம்பரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை என்ற வாதம் தவறானது.
ஆனால் இத்தனை ஆதாரங்கள் வெளியாகிய பின்னரும், காங்கிரஸ் கட்சி, சிதம்பரம் அப்பழுக்கற்றவர் அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று வாதிட்டு வருகிறார்கள்.
அதிமுக, பாஜக, இடது சாரிகள் என அனைவரும் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி, சிதம்பரத்துக்கு ஆதரவாக எடுத்தள்ள நிலைபாடும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக எடுத்து வைக்கப் படும் வாதமும், சிதம்பரம் தவிர்த்து காங்கிரஸ் கட்சியில் வேறு யார் யாருக்கு 2ஜி ஊழலில் பங்கு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
ஆ.ராசா, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு தெரிந்தே 2ஜி விவகாரத்தில் அனைத்து முடிவுகளும் எடுக்கப் பட்டன என்று கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அப்போது சிதம்பரம் இந்த ஊழலில் எனக்கு மட்டும் பங்கு இல்லை, மன்மோகனுக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்வாரா எனத் தெரியவில்லை.
ஆனால், இந்த ஊழலில், ராசா, கனிமொழி, சிதம்பரம் ஆகியோருக்கு இருக்கும் பங்கை விட, இந்த ஊழல் நடைபெறுவது தெரிந்தும், தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக மவுனச் சாமியாராய் இருந்த மன்மோகன் சிங்தான் மிகப் பெரிய குற்றவாளி.
அவர் மீது சட்டத்தின் கரங்கள் பாயுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.