முதன் முதலாக 1969ல் ராஜ்யசபைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப் படுகிறார். அதற்குப் பிறகு தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1973ல் இந்திரா அமைச்சரவையில் தொழில்துறை துணை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
எப்போதான் பிரதமர் ஆக்குவாங்களோ….
1982 முதல், 1984 வரை இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிறார். இவர் நிதி அமைச்சராக இருந்த போது, மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணி புரிந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, இவரை ஓரங்கட்டினர். இதனால் காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு, ராஜீவோடு சமாதானம் ஏற்பட்டதும். தனது சொந்தக் கட்சியை காங்கிரசோடு இணைத்து அதில் ஐக்கியமாகிறார்.
காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுத் துறை, கப்பல் போக்குவத்து, தரைவழிப் போக்குவரத்து, தொலைத் தொடர்புத் துறை, பொருளாதார விவகாரம், வணிகம் மற்றும் தொழில் என்று பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக இருந்தது பிரணாப்பின் சிறப்பம்சம்.
சரி, இப்போது இவருக்கு பிரதமராகும் ஆசை வந்து விட்டதா ? வந்து விட்டது என்றுதான் தோன்றுகிறது. ஏழுமலை என்ற திரைப்படத்தில், வடிவேலு ஏட்டாக இருப்பார். அவருக்கு கீழே கான்ஸ்டபிளாக இருந்த அர்ஜுன், திடீரென்று அந்த காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வந்ததும், வடிவேலுவுக்கு ஏற்படும் எரிச்சல், தனக்கு கீழே ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றதும் பிரணாப் முகர்ஜிக்கு வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
பிரணாப் முகர்ஜிக்கு நெடு நாட்களாகவே பிரதமர் பதவி மீது ஒரு கண் உண்டு. காங்கிரஸ் கட்சியில் அவரின் நீண்ட அனுபவத்தில், இது நியாயமற்றது என்றும் சொல்ல முடியாது.
இப்போது பிரதமராக வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி அவசரப் படுவதற்கான காரணம், காங்கிரஸ் கட்சிக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்பதுதான். 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினால், பிரியங்கா காந்தியின் குழந்தை கூட நம்பாது. அதனால் இதுவே இறுதி வாய்ப்பு என்பதை பிரணாப் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
அண்ணன் எப்போ சாவான்… திண்ணை எப்போ காலியாகறது ?
கனிமொழி கைது செய்யப் பட்ட பிறகு, ஜுலை மாதத்தில் கடைசியாக சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த பிறகு பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது திரை மறைவில் பேசப்பட்ட விவகாரம் என்னவென்றால், தனக்கு பிரதமர் பதவி வரும் சூழல் ஏற்பட்டால், திமுக எம்பிக்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், பதிலுக்கு கனிமொழியை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதாகவும் (சிறைத் துறையா ?) தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது.
சமீபத்தில், சிதம்பரத்துக்கு 2ஜி விவகாரத்தில் உள்ள பங்கு குறித்து பிரணாப் முகர்ஜியின் குறிப்பு வெளியான விவகாரம் பற்றி கருணாநிதியிடம் கருத்து கேட்ட போது,
“ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அது உண்மையாக இருந்தால் ராஜினாமா அவர் செய்ய வேண்டிய முடிவு.” என்று கூறினார்.
பிரணாப் முகர்ஜி, “2ஜி’ தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு இது பற்றி தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் முன்பு ராஜாவும் சொன்னார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். தி.மு.க., தரப்பில் தவறு இல்லை என்கிறீர்களா என்று கேட்டதற்கு, “இது கோர்ட்டில் உள்ள பிரச்னை. விரிவாக பேசுவது நல்லதல்ல.” என்று கவனமாக கருத்து சொல்லாமல் தவிர்த்து விட்டார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்து தன் மகளை காப்பாற்ற வில்லை என்பதால், கருணாநிதிக்கும் மன்மோகன் சிங் மீது கோபம் இருக்கிறது. பிரணாப் முகர்ஜி பிரதமர் ஆனால், வருங்காலத்தில், கனிமொழி மீதான வழக்கை வலுவிழக்கச் செய்து, சிபிஐக்கு கடிவாளம் போட்டு, தன் மகளை பிரணாப் காப்பாற்றுவார் என்று கருணாநிதி நம்புகிறார்.
இந்நிலையில், தற்போது 2ஜி விவகாரத்தில் சிதம்பரத்தின் பங்கு குறித்து, அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவருவதன் பின்னணி குறித்து பார்க்க வேண்டும்.
முதலில் வெளி வந்தது, 2011 மார்ச் மாதத்தில் பிரணாப் முகர்ஜி மன்மோகன் சிங்குக்கு எழுதிய ரகசிய குறிப்பு. இந்தக் குறிப்பு, 2ஜி விவகாரத்தை முழுமையாக ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், எப்படி இந்த விவகாரத்தில் தவறான முடிவு எடுத்தார், 2001 விலைக்கு ஸ்பெக்ட்ரம் 2008ல் ஒதுக்கீடு செய்யப் பட்டதை ரத்து செய்யவோ, மறு பரிசீலனை செய்யவோ தவறினார் என்பதை நாசூக்கான வார்த்தைகளால் பிரதமருக்கு சுட்டிக் காட்டியுள்ளார் பிரணாப் முகர்ஜி.
ரகசியம் என்று தலைப்பிடப்பட்ட இந்த கடிதம், எப்படி வெளியில் வந்தது. சுப்ரமணியன் சுவாமிக்கு எப்படி கிடைத்தது என்றால் ஒன்றம் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஒருவருக்கு இந்தத் தகவல் வழங்கப் பட்டிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி எழும். இதில் பெரும் சதி அடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிபு 8 (1) (h) என்ன சொல்கிறது தெரியுமா ? புலனாய்வில் உள்ள ஒரு விவகாரம் தொடர்பாக கேட்கப் படும் தகவல்களை இச்சட்டத்தின் கீழ் தர வேண்டியதில்லை என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
2ஜி வழக்கு இன்னும் சிபிஐயின் புலனாய்வில் இருப்பது மட்டுமல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இருப்பதால், இந்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8 (1) (h) ன் கீழ் தர இயலாது என்ற பதிலை நிதி அமைச்சகம் எளிதாக தந்திருக்க முடியும்.
ஆனால், இந்த ரகசிய குறிப்பை வெளியிட்டு, அந்த ஆவணம் சுப்ரமணியன் சுவாமி கையில் கிடைத்து, அதை அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது எதேச்சையான நிகழ்வு கிடையாது. ப.சிதம்பரத்தின் மீதான தனது நீண்ட நாள் பகையை தீர்த்துக் கொள்ளவே…!!!
2011 ஜுன் மாதத்தில், பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அவரது ஆலோசகர் ஓமிதா பால், மற்றும், அவரது தனிச் செயலர் மனோஜ் பந்த் ஆகியோரின் அலுவலகம் ஒட்டுக் கேட்கப் பட முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது, இந்த ஒட்டுக் கேட்புக் கருவிகளை தனது அலுவலகத்தில் இருந்து அகற்ற, பிரணாப் முகர்ஜி பயன்படுத்தியது மத்திய உளவுத்துறையை (Intelligence Bureau) அல்ல. மாறாக, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், நேரடி வரிகளுக்கான மத்திய அமைப்பை (Central Board for Direct Taxes). பிரணாப் அலுவலகத்தை சோதனையிட்ட மத்திய உளவுத் துறை, உளவு பார்க்க யாரும் முயற்சிகள் எடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத் தக்கது. ஆனால், பிரணாப் உத்தரவுப் படி சோதனையிட்ட அமைப்பு, பிரணாப் அலுவலகம், அவர் ஆலோசகர் அலுவலகம், தனிச் செயலர் அலுவலகம், கான்பரன்ஸ் ஹால் ஆகிய இடங்களில், சூயிங் கம் இருந்ததாக கண்டுபிடித்தது. இந்த சூயிங் கம், ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்துவதற்காக வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. நிதி அமைச்சரின் அலுவலகத்திற்குள்ளே யாரோ நுழைந்து சூயிங்கம்மை மென்று விட்டு, தனது மேசைக்கு கீழே ஒட்டி விட்டுப் போய் விட்டார்கள் என்பதை நம்ப பிரணாப் முகர்ஜி தயாராக இல்லை.
இன்னும் எத்தனை நாளைக்கு என்னை செக்யூரிட்டி ஆபிசர் மாதிரி பின்னாடி நிக்க வைப்பன்னு பாக்கறேன்.
தனது அலுவலகத்தை ஒட்டுக் கேட்டவரை பழி வாங்க வேண்டாமா ? ஜாபர் சேட் போல ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான்.
இதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதத்தில் தான், பிரணாப் முகர்ஜி திட்டமிட்டு, ப.சிதம்பரத்தை சிக்கலில் இழுத்து விடும் ரகசியக் குறிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
சிதம்பரத்தை சிக்கலில் இழுத்து விட்டாயிற்று. மன்மோகன் மீதான சிக்கல் போதுமானதாக இல்லையே !!! அதற்காகத் தான், தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அவர் பிரதமருக்கு எழுதிய கடிதமும் நேற்று வெளியாகியுள்ளது.
அந்தக் கடிதத்தில் தயாநிதி மாறன், “உங்களோடு 1 பிப்ரவரி 2006 அன்று நடந்த சந்திப்பை நினைவு கூர்கிறேன். அந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான, அமைச்சரவைக் குழு பற்றி பேசினோம். அந்தச் சந்திப்பில், அமைச்சரவைக் குழு, பாதுகாப்பு அமைச்சகம் ஸ்பெக்ட்ரத்தை விட்டுக் கொடுப்பதைப் பற்றி மட்டுமே விவாதிக்கும் என்று எனக்கு உறுதி அளித்தீர்கள். ஆனால், தற்போது வெளியிடப் பட்டுள்ள அமைச்சரவைக் குழுவின் வரம்புகள் நாம் விவாதித்த விஷயங்களையும் மீறி, என்னுடைய அமைச்சகத்தின் அதிகாரங்களையும் மீறுவதாக உள்ளது.
இதனால், நீங்கள் சம்பந்தப் பட்டவர்களை அழைத்து, இந்த அமைச்சரவைக் குழுவின் வரம்புகளை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தயாநிதி மாறன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் தற்பொது வெளியாகி கிளப்பிய புயலில் சிக்கியுள்ளது மன்மோகன் சிங் தான். மாறன் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்து விட்டு, எப்போது திஹார் செல்லுவோம் என்று காத்திருக்கிறார். அதனால் அவருக்கு இதனால் பாதிப்பு இல்லை.
தயாநிதி மாறனின் இந்தக் கடிதம் எதைக் காட்டுகிறது என்றால், தயாநிதி மாறனும், திமுகவும், யுபிஏ 1 அரசாங்கத்தில் எத்தகைய செல்வாக்கை செலுத்தினார்கள் என்பதையும், தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக, மன்மோகன் சிங் எப்படி மங்குணி சிங்காக இருந்தார் என்பதையும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.
சின்ன மீன போட்டுதான் பெரிய மீன புடிக்கனும் தாத்தா
இந்தக் கடிதத்தோடு சேர்த்து வெளியாகியுள்ள மற்றொரு கடிதம், பிரணாப் முகர்ஜியின் தந்திரத்தை பறைசாற்றுகிறது. 20 டிசம்பர் 2007 அன்று பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்னுடைய நிலைபாடு என்ன என்று பிரதமர் கேட்டுள்ளதற்கு இணங்க இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்தக் கடிதத்தில் அவரும் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற வழி முறையையே கையாளலாம் என்று சொன்னாலும், எதன் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் வழங்கப் படும் என்பதை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
மார்ச் 2006 வரைதான் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு வழங்கப் படும் என்பது பற்றிய விதிகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. அரசு, எப்போது வேண்டுமானாலும், இந்த விதிமுறைகளை, எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்க முடியும் என்றாலும், அவ்வாறு செய்யப் படும் மாற்றங்களை வெளிப்படையாக தொலைத் தொடர்புத் துறை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு வெளிப்படையாக அறிவிக்காமல், ரகசியமாக வைத்திருந்து, வேண்டிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தார் என்பதற்காகத்தான் ஆ.ராசா மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு, தான் 2007ல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டதன் மூலம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நேர்மையாக நடந்து கொண்டது நான் ஒருவன் தான். ஸ்பெக்ட்ரம் வெளிப்படையான முறையில் வழங்கப் பட வேண்டும் என்பதை நான் 2007 லிலேய மன்மோகனுக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டேன். ஆனால், மன்மோகன், மவுனச் சாமியாராக இருந்ததன் மூலம், ராசாவை கொள்ளையடிக்க அனுமதித்து விட்டார். இதனால், இவரும் ராசாவோடு சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான் இந்த நடவடிக்கையின் சாரம்.
ஐடியா கேக்க மட்டும் நானு…. பிரதமர் பதவிக்கு அந்த ஆளா ?
தயாநிதி மாறனின் கடிதம் வெளியான உடனேயே, மன்மோகனின் தலை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து விட்டன. தயாநிதி மாறனின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, “2ஜி விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்தது தொடர்பாக பிரதமர் உட்பட யாராக இருந்தாலும், விசாரிக்கப் பட வேண்டும். இது தொடர்பான பிரச்சினையை கிளப்புவோம். நாங்கள் சொல்லிக் கொண்டிருந்த குற்றச் சாட்டுகளை தற்போது வெளியாகியுள்ள ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணையின் போது, பிரதமரை விசாரிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.
உங்குத்தமா… எங்குத்தமா…. யார நான் குத்தம் சொல்ல
ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்காவில் இருக்கும் மன்மோகன் சிங், “என்னுடைய அமைச்சர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் வேலை எதிர்ப்பது. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவின் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதற்கு காரணம், பழனியப்பன் சிதம்பரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல….. சிதம்பரத்தை காவு கொடுத்தால், அடுத்து நாம்தான் என்பது நன்றாக தெரிந்தே இவ்வாறு சொல்கிறார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், பிரதமர் வெளிநாட்டில் இருக்கும் போது, அத்தனை நாட்டு பிரதிநிதிகள் முன்பாக பிரதமருக்கு இது போன்ற சங்கடத்தை ஏற்படுத்துவது முறையல்ல என்று கூறுகிறார்கள். கோவணம் அவிழ்ந்து காற்றில் பறக்கத் தொடங்கி விட்டது. அது இந்தியாவில் பறந்தால் என்ன, அமெரிக்காவில் பறந்தால் என்ன ? அது மட்டுமல்லாமல், இது போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டவுடன், ரோஷப் பட்டு ராஜினாமா செய்வதற்கு, மன்மோகன் அந்த அளவுக்கு சூடு சொரணை உள்ளவரா என்ன… ?
உங்களுக்கு எப்போது பார்த்தாலும் நகைச்சுவைதான் போங்கள்……