ஆனால், பொதுமக்களையே ஒரு நீதிமன்றத்தில் அனுமதிக்காத ஒரு உத்தரவை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
தலைமை நீதிபதியின் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை காண்பித்த பிறகு அனுமதிக்கப் படுகிறார்கள். தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்காக நீதிமன்றத்துக்கு வரும் வழக்கு தொடுத்த கட்சிக் காரர்கள் கூட நீதிமன்றத்தினுள் அனுமதிக்கப் படுவதில்லை. “சார் என் கேஸ் வருகிறது” என்று சொன்னால் “உங்களுக்காக வக்கீல் வாதாடுகிறார். உங்களுக்கு என்ன வேலை ? உங்கள் வக்கீல் வெளியில் வந்ததும் விபரத்தை கேட்டுக் கொள்ளுங்கள் என்று பதிலளிக்கிறார்கள் அங்கே பணியில் உள்ள காவல்துறையினர்.“
வழக்கமாக, சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், முதல் நீதிமன்றத்துக்கு வந்து, மூத்த வழக்கறிஞர்கள் எப்படி வாதாடுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து கற்றுக் கொள்ளுவார்கள். வகுப்பறையில் கற்றுக் கொள்ளுவதை விட, நேரில் நீதிமன்ற நடைமுறைகளைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுவது சிறப்பான ஒரு விஷயம். ஆனால் இந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை காட்டினால் கூட உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை.
இது போன்ற கட்டுப்பாடுகள் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்தில் மட்டும்தான் என்பது குறிப்பிடத் தக்கது. சட்டக் கல்லூரி மாணவர்கள் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்துக்கு வந்து பார்ப்பதற்காக காரணம் என்னவென்றால், பொது நல வழக்குகள் அத்தனையும் தலைமை நீதிபதி முன்புதான் வரும். மேலும், ரிட் மனுக்கள் மீதான தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப் படும் மேல் முறையீட்டு மனுக்களான ரிட் அப்பீல்களும் தலைமை நீதிபதி முன்பாகத் தான் வரும். மேலும், முக்கியமான அத்தனை வழக்குகளும் தலைமை நீதிபதியின் முன்புதான் வரும் என்பதால், சட்டக் கல்லூரி மாணவர்கள் தலைமை நீதிபதி நீதிமன்றத்துக்கு வருகை தருவது இயல்பு.
ஆனால் வருகை தரும் மாணவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கிறார்கள்.
வெளியில் வந்தால் அந்த வெராண்டாவில் கூட நிற்க விடமாட்டேன்கிறார்கள். நீதிபதி பார்த்தால் வெராண்டாவில் நிற்பது தெரியுமாம். ஏன் நீதிபதி வெராண்டாவில் நிற்கும் பொதுமக்களை பார்த்தால் தான் என்ன ? வழக்காட வரும் பொதுமக்களை நீதிபதிகள் பார்த்தால் தீட்டுப் பட்டு விடுமா ?
நீதிமன்றத்துக்கு உள்ளே பொதுமக்கள் நுழைந்து, செல்போனை ஒலிக்க வைத்து அதனால் நீதிபதிகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பது நியாயமான கருத்தே. ஆனால், தலைமை நீதிமன்றத்தில் மட்டும், பார்வையாளராக ஒருவர் நுழையும் போதே, கதவு அருகில் இருக்கும் காவல்துறையினர், செல்பேசி சைலென்ட்டில் போடுங்கள், அல்லது அணைத்து விடுங்கள் என்று அறிவுறுத்திய பின்னரே உள்ளே அனுமதிப்பார்கள். தவறி செல்போன் ஒலித்து விட்டால், செல்போன்கள் பறிமுதல் செய்யப் படும் என்ற அறிவிப்பும் இருக்கிறது. மேலும், தலைமை நீதிமன்றத்துக்கு வருகை தருபவர்கள் அனைவருமே, அந்த நீதிமன்றத்துக்கு உரிய மாண்பை மதிக்கிறார்கள் என்பதுதான் இத்தனை நாள் அனுபவம்.
வழக்கறிஞர்கள் சமயங்களில் சத்தம் போட்டுப் பேசுவார்களே ஒழிய, பார்வையாளர்களில் ஒருவர் கூட, நீதிமன்றத்துக்கு உள்ளே அதிர்ந்து பேசுவதோ, சத்தம் போடுவதோ கிடையாது.
பிறகு திடீரென்று எதற்காக இத்தனை கட்டுப் பாடுகள் ?
அங்கே பணியில் இருக்கும் காவல்துறையினரை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு வந்த உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். உயர்நீதிமன்ற பதிவாளரின் உத்தரவுப் படியே இந்த தடை என்று தெரிவிக்கிறார்கள். இந்த நீதிமன்றங்கள் யாருக்காக அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப் பட்டவை என்பதை இந்த நீதிபதிகள் மறந்து விடுகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், அரசு, நீதிமன்றம் போன்ற அத்தனை அமைப்புகளும் மக்களுக்கானதே… மக்களுக்கு அனுமதி இல்லாத நீதிமன்றம் எதற்கு ? வழக்கறிஞர்களுக்கு ஆயிரக்கணக்கில் பீஸ் கொடுத்து, நமது வழக்கு என்ன ஆகுமோ, நமது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஆதங்கத்தோடு நீதிமன்றத்துக்கு வருகிறார்கள் பொதுமக்கள். நாம் பீஸ் கொடுத்த வக்கீல் ஒழுங்காக வாதாடுகிறாரா ? நீதிபதி நமது வழக்கை எப்படி அணுகுகிறார் ? வழக்கு என்றைக்கு ஒத்தி வைக்கப் படுகிறது என்பது போன்ற ஆயிரம் கேள்விகளோடு நீதிமன்றத்துக்கு வருகிறார்கள் பொது மக்கள்.
ஆனால், இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களை உள்ளே அனுமதிக்காமல், சம்பந்தம் இல்லாத நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் எதற்காக உரையாடிக் கொண்டிருக்க வேண்டும் ? இந்த வழக்கை நடத்தும் கட்சிக் காரரை வெளியில் அனுப்பி விட்டு, வழக்கறிஞர் வாதாடினால் என்ன, வாதாடா விட்டால் என்ன ? அதை நீதிபதிகள் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் தான் என்ன ?
உயர் நீதிமன்றப் பதிவாளர் தலைமை நீதிபதியின் உத்தரவு இல்லாமல் இது போன்ற தடை உத்தரவை பிறப்பித்திருப்பார் என்பதை நம்புவதற்கில்லை. ஏனெனில், தலைமை நீதிபதியின் உத்தரவு இல்லாமல் உயர்நீதிமன்றத்தில் அணுவும் அசையாது.
பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் நீதிமன்றங்களை நடத்துவது என்பது பிரபுத்துவ மனோபாவம். இது போன்ற பிரபுத்துவ மனோபாவங்களுக்கு மக்கள் ஜனநாயகத்தில் இடமில்லை. ஜனநாயக நாட்டில் நடைபெறும் நீதிமன்றங்களில் முதல் உரிமை மக்களுக்கே என்பதை இந்த நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.