இன்று புதுதில்லி சிபிஐ நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் தாக்கல் செய்தார். அந்த மனுவின் படி, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரின தனிச் செயலர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹூரா ஆகியோர் மீது, நம்பிக்கை மோசடிக்கான குற்றப் பிரிவு, இந்திய தண்டனைச் சட்டம் 409ன் கீழ் குற்றச் சாட்டு பதிவு செய்ய வேண்டுமென புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இது வரை ஆ.ராசா மற்றும் மற்ற குற்றவாளிகள் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், கூட்டுச் சதி, ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சில பிரிவுகளிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டிருந்தது.
ராசா மற்றும் சித்தார்த் பெஹுரா (ம்.. ம்… அன்னைக்கு நம்ப சிரிச்சோம். இன்னைக்கு நம்ப பொழப்பு சிரிப்பா சிரிக்குது)
இந்த பிரிவுகளின் படி, ஒரு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் மட்டுமே வழங்க முடியும். ஆனால் தற்போது தாக்கல் செய்துள்ள 409ன் கீழ் ராசா மீதும் மற்றவர்கள் மீதும் குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்டால், அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப் பட வாய்ப்பு உண்டு.
2ஜி வழக்கில், ஆ.ராசா தனது தரப்பு வாதத்தின் போது, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சாட்சியாக விசாரிக்கப் பட வேண்டும் என வாதிட்டுள்ளார். இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
மேலும். திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவில் தற்போது ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் ஏறக்குறைய முறிவு என்ற சூழலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற திமுகவின் அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் காதில் தேனைப் பாய்ச்சவில்லை. மாறாக, ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியிருக்கிறது.
திமுகவோடு கூட்டணியில் இருந்தால், தோற்றாலும் அதற்கு திமுகவை காரணம் காட்ட முடியும். திமுகவின் தவறுகளாலேயே தோற்றோம் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி கொடுக்க முடியும். ஆனால் தனித்துப் போட்டி என்று வந்த பிறகு, அரசு பிணவறையில் ஆதரவற்றுக் கிடக்கும் அனாதைப் பிணம் போல ஆகி விட்டது காங்கிரஸ். தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவனும், அனைத்திந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் போட்டியிட்டால் வாங்கும் வாக்குகளை விட காங்கிரஸ் கட்சி குறைவாக வாங்கப் போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
சல்லடை போட்டு தேடியும், உள்ளாட்சித் தேர்தல்ல போட்டி போட ஒருத்தனும் சிக்க மாட்றானே…!!!
இந்நிலையில், ஒரு நெருக்கடியான நேரத்தில் நம்மை கழற்றி விட்டு விட்டாரே என்ற எரிச்சல் காங்கிரசுக்கு.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையை எரிச்சலூட்டிய மற்றொரு விஷயம், மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் வம்பில் இழுத்து விட்டுள்ள பிரணாப் முகர்ஜியை தூண்டி விட்டதும், அவருக்கு பின்னால் இருந்து உதவி செய்வதும் திமுகதான் என்று காங்கிரஸ் கட்சித் தலைமை பார்க்கிறது.
ப.சிதம்பரம் குறித்து கருணாநிதி நேற்று என்ன கருத்து சொன்னார் ?
“ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அது உண்மையாக இருந்தால் ராஜினாமா அவர் செய்ய வேண்டிய முடிவு.” என்று கூறினார்.
நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி சிதம்பரம் குறித்து என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
“செய்தியாளர் :- ப. சிதம்பரம் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கலைஞர் :- அது அவர்களுடைய கருத்து. இந்த வழக்கில் அரசியல் தலையிடக் கூடாது என்பது என் கருத்து. இந்த வழக்கில் முதலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றார்கள், பிறகு 30 ஆயிரம் கோடி இழப்பு என்றார்கள். அதன் பிறகு நஷ்டமே இல்லை என்று அதிகாரப்பூர்வமாகச் சொன்னார்கள். இதற்கிடையில் நான் எதையும் சொல்வது முறையாக இருக்காது.
செய்தியாளர் :- ஏதோ ஒரு வகையில் இந்த வழக்கில் ப. சிதம்பரத்திற்கு சம்மந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
கலைஞர் :- சிதம்பரம் அவர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளதாக வெளிநாட்டிலிருந்த பிரதமரே சொல்லியிருக்கிறார்.
செய்தியாளர் :- ராஜா மீது இதே குற்றத்தை முதலில் சொல்லி, அவர் பதவி விலக வேண்டுமென்றார்கள். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் மீதும் இதே புகாரைச் சொன்னார்கள். தற்போது சிதம்பரம் மீதும் அதே புகாரைத் தானே சொல்கிறார்கள்?
கலைஞர் :- ஒருவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காகவே புகாரை அள்ளி வீசுவதை நான் ஏற்பதற்கில்லை. தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு அமைச்சரை பதவியிலிருந்து கீழே இறங்கச் சொல்ல நாம் யார்? விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது என் கருத்து.”
தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு அமைச்சரை பதவியிலிருந்து இறங்கச் சொல்ல நாம் யார் ? என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி.
நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவின் வெளிப்பாடு இது.
சிபிஐ ராசா மீதும் மற்ற இருவர் மீதும் 409ன் கீழ் புதிய குற்றச் சாட்டுகளை பதிய வேண்டும் என்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டு 5 மாதங்களைக் கடந்து இன்று தாக்கல் செய்துள்ளது எதேச்சையான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஒரு புலனாய்வு நிறுவனத்தின் குற்றப் பத்திரிக்கை என்பது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பு, பல்வேறு முறை புலனாய்வு அதிகாரிகளாலும், வழக்கறிஞர்களாலும் சரி பார்க்கப் பட்ட பின்னரே தாக்கல் செய்யப் படும். மேலும், ஊழல் வழக்குகளை விசாரித்த அனுபவம் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு 409 பிரிவு ராசா மீது தாக்கல் செய்யலாம் என்பது தெரியாது என்று சொல்வதற்கில்லை.
இந்தப் புதிய பிரிவை, குற்றச் சாட்டுகள் பதிவு செய்யும் (Framing of charges) நேரத்தில் தாக்கல் செய்திருப்பது, சம்பந்தப் பட்டவர்கள் ஜாமீனில் வெளிவருவதை தடுப்பதற்காக மற்றும், அரசியல் தலையீடு காரணமாகவே என்ற குற்றச் சாட்டை மறுப்பதற்கில்லை.
ஆ.ராசா, ஆர்.கே.சந்தோலியா மற்றும் சித்தார்த் பெஹுரா மீது பிரிவு 409 சேர்க்க வேண்டும் என்று சிபிஐ சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் மீது 409 உடன் இணைந்த 120-B ஆகிய பிரிவுபளைச் சேர்க்க வேண்டும் என்று சிபிஐ தனது மனுவில் தெரிவித்திருப்பது அப்பட்டமான அரசியல் சூழ்ச்சியே…
பிரிவு 409 என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
Whoever, being in any manner entrusted with property, or with any dominion over property in his capacity of a public servant or in the way of his business as a banker, merchant, factor, broker, attorney or agent, commits breach of trust in respect of that property, shall be punished with1[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
ஒருவரிடம், ஒரு சொத்தோ, அல்லது அந்த சொத்து குறித்த கட்டுப்பாடோ, அவர் பொது ஊழியர் என்ற முறையில் அவரிடம் ஒப்படைக்கப் பட்டு, அவர் நம்பிக்கை மோசடி (அந்த சொத்தை பாதுகாக்க தவறியதன் மூலம்) செய்தால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.
இதை எளிதாக விளக்க, ஒரு வழக்கை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றிய ஒருவர், பயணிகள் டிக்கெட் வாங்கிய பணத்தை கையாடல் செய்து விட்டார். அப்போது குற்றம் சாட்டப் பட்டவர் சார்பாக எடுத்த வைக்கப் பட்ட வாதம், பயணிகள், காசாளரிடம் தான் பணத்தை கொடுத்தார்கள், அதனால் அவர் நம்பிக்கை மோசடி செய்தார் என்று சொல்ல முடியாது என்று. உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், பயணிகள் காசாளரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கவில்லை, மாறாக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு காசாளர் மூலமாக பயணிகள் பணம் கொடுத்துள்ளனர். ஆகையால் அவர் பயணிகள் இந்தியன் ஏர்லைன்ஸிடம் ஒப்படைப்பதற்காக அவரிடம் கொடுத்த பணத்தை கையாடியதன் மூலம் நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்று தீர்ப்பளித்தது. (Som Nath v. State of Rajasthan, AIR 1972 SC 1990)
சிபிஐ நேற்று டெல்லி சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில்,
“It is submitted that accused Raja, Behura and Chandolia were public servants having a dominion over valuable 2G spectrum in their respective capacities as public servants,”
“The said accused public servants in pursuance of conspiracy with other accused dishonestly disposed of the valuable 2G spectrum illegally and in violation of the existing policies and the eligibility criterion in order to confer wrongful gain on accused Swan Telecom promoter Shahid Usman Balwa,Vinod Goenka of Swan Telecom, MD of Unitech Sanjay Chandra and Unitech Wireless Tamil Nadu Ltd,”
அதாவது, விலைமதிப்புள்ள 2ஜி ஸ்பெக்ட்ரத்தை தங்கள் பொறுப்பில் வைத்திருந்த, பொது ஊழியர்களாக ஆ.ராசா, பெஹுரா மற்றும் சந்தோலியா, ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
மற்ற குற்றவாளிகளோடு கூட்டுச் சதியில் ஈடுபட்ட இந்த மூவர், குற்றவாளிகளான ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹீத் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா மற்றும் யூனிடெக்கின் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு, சட்டவிரோதமான லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, முறையற்ற வழிகளில் ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளனர். இதன் மூலம், கூட்டுச் சதியில் ஈடுபட்டு (120-B) நம்பிக்கை மோசடி செய்துள்ளனர் (409) என்று தெரிவித்துள்ளது.
சட்ட ரீதியாக இது சரியே. ஆனால், இத்தனை மாதம் கழித்து, இப்போது ஏன் சிபிஐக்கு இந்த திடீர் ஞானோதயம் ? இதற்கு பின்னால் இருப்பது, சிதம்பரமா, மன்மோகனா, சோனியாவா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அடுத்து சிபிஐ தனது மனுவில் சொல்லியிருப்பதுதான் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கில் உள்ள கனிமொழி உள்றிட்ட மற்றவர்களுக்கும், 120-Bயோடு இணைந்து 409ன் கீழ் புதிய குற்றச் சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சிபிஐ தனது மனுவில் நேற்று தெரிவித்துள்ளது.
ஷாஹீத் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா மற்றும் சஞ்சய் சந்திரா ஆகியோர் மீது ராசாவோடு இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டார்கள் என்பது பொருந்தும். ஆனால் கனிமொழிக்கு இது எப்படி பொருந்தும் ?
கனிமொழி மீதான குற்றச் சாட்டுகள் என்ன ? தான் எம்டியாக இருக்கும் கலைஞர் டிவிக்கு, 200 கோடியை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். இது கடன் தொகை அல்ல, லஞ்சத் தொகை என்பதுதானே…. ? இதனால் தானே கனிமொழி மற்றும் சரத்குமார் மீது 120-B மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகள் 7, 11 மற்றும் 12ன் கீழ் வழக்கு தொடுத்தது சிபிஐ ?
மீண்டும் பிரிவு 409ஐ பாருங்கள். தன்னிடம் உள்ள ஒரு சொத்தை நம்பிக்கை மோசடி செய்த ராசாவோடு கனிமொழி கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
ஒரு வேளை, கனிமொழிக்கு இது முன்பே தெரியும். தெரிந்தே, நாட்டின் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு கொடுப்பதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார், அதனால் அவரும் நம்பிக்கை மோசடி செய்வதற்கான சதித்திட்டத்தில் பங்கெடுத்துள்ளார் என்று சிபிஐ சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ராசா, 2001 விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை ஸ்வான், ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கிறார் என்பது ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங்குக்கு தெரியும் தானே ? கனிமொழி எந்தக் காலத்திலும் அமைச்சராக பதவி வகிக்கவில்லை. ஆனால், நிதி அமைச்சராகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த இருவருக்கும் நாட்டின் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறதா இல்லையா ? அந்த விலை உயர்ந்த ஸ்பெக்ட்ரத்தை 2001 விலைக்கு 2008ல் விற்கப் போகிறேன், அடி மாட்டு விலைக்கு விற்கப் போகிறேன், என்று ஆ.ராசா, மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளாரே ? அந்த விபரம் தெரிந்தும் அமைதியாக இருந்த மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் நம்பிக்கை மோசடி செய்வதற்காக ராசாவோடு கூட்டுச் சதியில் ஈடுபட்டார்களா, கனிமொழியும் சரத்குமாரும் ஈடுபட்டார்களா ?
கலைஞர் டிவி சார்பில் பெறப்பட்ட 200 கோடி ரூபாய்க்காக கனிமொழியும், சரத் குமாரும் உரிய தண்டனை பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக, அவர்கள் மீது தவறான சட்டப் பிரிவுகள் சேர்க்கப் பட்டால், இதை மன்னிக்க முடியாது.
சிபிஐயின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது மட்டுமல்ல, அயாக்கியத்தனமாது. திமுகவைச் சேர்ந்தவர் யார் 2ஜியில் சிக்கினாலும் பரவாயில்லை, ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யார் மீதாவது குற்றம் சாட்டினால், வழக்கை சிபிஐயை வைத்து திசை திருப்புவோம், சிதைப்போம் என்கிற காங்கிரஸ் கட்சியின் போக்கு கண்டிக்கத் தக்கது. கடுமையான கண்டனத்திற்கு உரியது.
உச்ச நீதிமன்றம் நேரடி மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் போதே, இது போன்ற தவறுகள் நடைபெறுகிறது என்றால், மேற்பார்வை இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
காங்கிரஸ் கட்சி, லோக்பால் மசோதாவின் கீழ் சிபிஐ ஐ கொண்டுவருவதற்கு எதற்காக எதிர்ப்பு தெரிவித்தது என்பது இப்போது புரிகிறதா ?
1 Response
[…] […]