மதியம் 2.15 மணிக்கு ஜாபர் சேட் சாட்சி சொல்வதற்கு வந்தார். அந்த நீதிமன்றம், வழக்கமான உயர்நீதிமன்றங்கள் போல இருக்காது. சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக மட்டும் என்பதால், ஓய்வு பெற்ற அமர்வு நீதிபதிகளை, அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிப்பார்கள். அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத நீதிமன்றம் என்பதால், பெரிய அறை ஒதுக்கப் படவில்லை. அதிக பட்சம் 10 X 15 அடி இருக்கும். அந்த சிறிய அறைக்குள்ளே நீதிபதியின் மேசை, அவரது செயலாளரின் மேசை, கம்ப்யூட்டர், பிரின்ட்டர், சாட்சி சொல்பவருக்கான கூண்டு, பார்வையாளருக்கு இரண்டு பென்ச்சுகள், மற்றும் நீதிபதியின் தனியறை ஆகிய அனைத்தும் அமைந்திருக்கிறது என்றால் எத்தனை இட நெருக்கடி என்று பாருங்கள்.
இதே ஜாபர் உளவுத்துறையில் இருந்திருந்தால், அவர் சாட்சி சொல்ல வருவதற்காகவே புதிய நீதிமன்றத்தை கட்டியிருப்பார் அந்த தகத்தகாய கதிரவன். அய்யகோ… இன்று கூடுதல் டிஜிபியாக இல்லாதது மட்டுமல்ல…. பணி இடைநீக்கத்தில் வேறு இருக்கிறாரே….
அந்த நிதிமன்றத்துக்கு தான் ஜாபர் சேட் சாட்சி சொல்ல வந்தார். சவுக்கு உள்ளே நுழையும் போது, ஜாபர் கூண்டில் ஏறி, சாட்சி சொல்லிக் கொண்டிருந்தார். பதவியில் இருக்கும் போது இருந்த மிடுக்கு கொஞ்சமும் குறையவில்லை. கருப்பு நிறத்தில் “கலர் ப்ளஸ்” பேன்ட். வெள்ளை நிறத்தில், மெல்லிய கருப்பு கோடு போட்ட அரைக்கை சட்டை. கருப்பு நிறத்தில் “ஷு” அணிந்து மிடுக்காக காணப்பட்டார்.
இந்த வழக்கு புகழேந்தி மீது அவர் தொடுத்த மான நஷ்ட வழக்கு என்பதால், அதற்கு ஆதாரமாக, புகழேந்தி பேட்டியளித்திருந்த குமுதம் ரிப்போர்டர், தமிழக அரசியல் போன்ற பத்திரிக்கைகளை ஆவணமாக தாக்கல் செய்தார்.
ராமலிங்கம் என்ற அந்த நீதிபதி எளிமையான மனிதர். மிக இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். ஜாபர் சேட்டின் வழக்கறிஞர், இது குமுதம் ரிப்போர்டர், “பை வீக்லி” என்று சொன்னதும், நீதிபதி, மாதம் இருமுறையா ? என்று கேட்டார். வழக்கறிஞர் வாரம் இரு முறை என்று சொன்னதும், “ஓ இப்போல்லாம் வாரத்துக்கு ரெண்டு போட்றாங்களா… இதே வேலையா திரியிறானுங்க போலருக்கு” என்று அலுத்துக் கொண்டார்.
பிறகு மக்கள் டிவி மற்றும் ஜெயா டிவிக்கு புகழேந்தி அளித்த பேட்டி அடங்கிய குறுந்தகடுகளும் தாக்கல் செய்யப் பட்டன.
ஜாபர் சாட்சி சொல்லிக் கொண்டிருந்த போதுதான் சவுக்கு அந்த நீதிமன்றத்துக்குள் நுழைந்தது. நுழைந்து அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்தவுடன்…. ஜாபர் சவுக்கை திரும்பிப் பார்த்தார். அப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறார். புகைப்படத்தில் பல முறை பார்த்திருப்பார். குரலை ஆயிரம் முறை கேட்டிருப்பார் (ஒட்டுக் கேக்கும் போது) நேரில் இப்போதுதானே பார்க்கிறார். அதனால், சரியாக நம்ப முடியாமல் இரண்டு மூன்று முறை பார்த்தார். மூன்றாவது முறை பார்த்த போது சவுக்கு அவரைப் பார்த்து செய்த புன்னகையை அவர் ரசிக்கவில்லை. முறைத்தார்.
பிறகு சாட்சி சொல்லி முடித்தவுடன், நீதிபதி, “சார் நீங்க இந்த அபிடவிட்ல கையெழுத்து போடனும். உக்காருங்க” என்று ஜாபரை பார்த்து சொன்னதும், அந்த சிறிய இடத்தில் ஜாபர் எங்கே உட்காருவது ? வேறு வழி…. சவுக்குக்கு வெகு அருகில் இருந்த ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தார். அப்போது சவுக்கு, “Jaffer Sait deposes in High Court in connection with defamation case against advocate Pugalenthi” என்று பத்திரிக்கையளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிக் கொண்டிருந்தது.
அப்போது சவுக்கின் செல்போனை பார்த்தார் ஜாபர் சேட். (பழைய பழக்கம் பாஸ்) அப்போது என்ன நினைத்திருப்பார் ? “டேய்… இதே நான் உளவுத்துறையில இருந்திருந்தா, எனக்கு தெரியாம ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப முடியுமாடா உன்னால ? ம்ம் என் நேரம், இப்புடி எட்டிப் பாத்து தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு” என்னு நினைத்திருக்க மாட்டார்.
ஒரு 15 நிமிடங்கள் கழித்துதான் அபிடவிட் தயாரானது. அது வரை, அந்த நீதிபதி, புகழேந்தியிடமும், அங்கிருந்த மற்றவர்களிடமும் சரளமாக உரையாடிக் கொண்டிருந்தார். ஆனால், ஜாபர் மட்டும் இறுக்கமான முகத்துடனேயே இருந்தார். ஜாபர் சார் கொஞ்சம் சிரிச்சாத்தான் என்ன ? நீங்க எவ்வளவோ கெடுதல் பண்ணிருக்கீங்க எங்களுக்கு. புகழேந்தி எப்படி சிரிச்சிக்கிட்டே இருக்கார் பாருங்க ? அடுத்த வாட்டி கோர்ட்டுக்கு வரும் போது, நல்லா ஸ்மைல் பண்ணுங்க சார்.
அந்த நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர், ஜாபர் சேட்டின் புகழ் தெரிந்து, பக்கத்து நீதிமன்றங்களில் இருந்த அலுவலக உதவியாளர்களையெல்லாம் அழைத்து வந்து ஜாபர் சேட்டை பாருங்கள் என்று காண்பித்துக் கொண்டிருந்தார். வெள்ளைச் சீருடையில் அவர்கள் வேறு வரிசையாக வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஜாபர் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று போன அத்தியாயத்தில் சவுக்கு சொல்லியிருந்ததே….. அது ஏன் ?
கருணாநிதியின் கனவான செம்மொழி மாநாடு, 2010 ஜுன் 24 முதல் ஜுன் 27 வரை கோவையில் நடைபெற்றது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். அது முள்ளிவாய்க்கால் படுகொலையை முடிந்து சரியாக ஒரு வருடம் ஆன காலம். தமிழ் உணர்வாளர்களின் துக்கமும், கோபமும் சற்றும் குறையாத காலம் அது. அப்போது சிங்கள அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே இந்தியாவுக்கு அரசியல் விருந்தினராக வந்து, ஜுன் 10 அன்று இலங்கை திரும்பியிருந்தார்.
ராஜபக்ஷேவுக்கு கருப்புக் கொடி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று தமிழ் உணர்வாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்திருந்தனர்.
செம்மொழி மாநாட்டுக்கு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. தமிழன் பிணத்தின் மீது தமிழுக்கு மாநாடா என்று கடும் கொதிப்பில் இருந்தனர். கருணாநிதியின் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கும் சூழல் இருந்தது.
இந்த நேரத்தில் தான் ஜுன் 11 2010 அன்று காலை திடீரென்று ஒரு செய்தி வந்தது. விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு என்று. அந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே, “இனியும் தமிழர்கள் அமைதியாக இருக்க முடியுமா ? தமிழினத்தை அழித்த மஹிந்தா ராஜபக்ஷே என்ற ரத்த வெறி பிடித்த ஓநாய்க்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்த இந்திய அரசாங்கத்தை கண்டிக்கிறோம். – இப்படிக்கு பிரபாகரனின் தம்பிகள்” என்று கையால் எழுதப் பட்ட துண்டறிக்கை ஒன்று கிடந்தது.
அந்தச் சம்பவம் குறித்து, இந்து நாளேட்டிற்கு பேட்டியளித்த ஜாபர் சேட் இவ்வாறு கூறியிருந்தார். “Inspector-General of Police (Intelligence) M.S. Jaffar Sait said someone must have been sitting at a visible distance and operating the detonator. “It appears to be the handiwork of some pro-LTTE elements. The ‘Q’ Branch CID has formed special teams to investigate the case,” he said.”
அதாவது, வழக்கின் புலனாய்வு தொடங்கும் முன்பே, எல்டிடிஈ ஆதரவாளர்கள் என்று பேட்டியளித்திருந்தார் ஜாபர் சேட். இந்த சம்பவம் குறித்து ஜுனியர் விகடனில் வந்திருந்த செய்தியை எடுத்தாளுவது பொருத்தம்.
“அதிகாலை 2.08 மணிக்கு வெடிச் சத்தம் கேட்டதாக மக்கள் சொல்கிறார்கள். குண்டு வெடித்து தண்டவாளம் தகர்க்கப்பட்ட 145-வது மைல் கம்பம் அருகே உள்ள இடத்தை, சேலம் எக்ஸ்பிரஸ் 2.15 மணிக்கு கடந்திருக்கிறது. அப்படி என்றால் துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தில்தான் அந்த ரயில் கடந்து சென்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூன்று அடி நீளத்துக்கு ஒரு தண்டவாளம் தகர்க்கப்பட்ட நிலையில், அதன் வழியே ரயில் சென்றிருக்க சாத்தியமே இல்லை. ஆனால், அந்த வழியாகத்தான் சேலம் எக்ஸ்பிரஸ் போனதாக ஏரியாவாசிகள் அடித்துச் சொல்கிறார்கள். துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயில் வந்தபோது பெரிய அதிர்வு ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகளுக்கு ‘கார்டு’ ராஜசேகர் தகவல் சொல்லி இருக்கிறார்!” என்றார் அந்த அதிகாரி.
தண்டவாளம் தகர்க்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே சித்தணி கிராமத்தைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் என்பவரின் வயலில் மோட்டார் கொட்டகை உள்ளது. அந்த கொட்டகையில் இருந்து மின்சார ஒயர் மூலம் மின் இணைப்பு கொடுத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்திருப்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது.
தண்டவாளத் தகர்ப்பில் தமிழ் அமைப்புகளின் பின்னணி இருப்பதாகச் சொல்லும் போலீஸ் தரப்பு, ”ஜெலட்டின் குச்சிகளை மின்சார இணைப்பில் கொடுத்து ஒயர் மூலம் வெடிக்கச் செய்திருப்பது எங்களைத் திகைக்கவைத்திருக்கிறது. பேட்டரி மூலமாகவோ நாட்டு மருந்து திரி மூலமாகவோதான் முன்பெல்லாம் இப்படிப்பட்ட சம்பவங்களை தமிழ்த் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். ஜெலட் டின் குச்சிக்களுக்கு மின்சார கனெக்ஷன் கொடுக்கும் டெக்னிக்கை இதுவரை தமிழ்த் தீவிரவாதிகள் பின்பற்றியதில்லை. தென்னாற்காடு மாவட்டத்தில் தமிழர் விடுதலைப் படையின் ஆதிக்கம் ஒரு காலத்தில் பெரிதாக இருந்தது. இப்போது, அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அவ்வளவாக இல்லை என்றாலும், அந்த இயக்க ஆட்கள் மர்மமாகத்தான் நடமாடி வருகிறார்கள். குறிப்பாக, தமிழீழ வீழ்ச்சி, பழைய தமிழ் அமைப்புகளை ரொம்பவே உசுப்பேற்றி உள்ளது. இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோதும், பிரபாகரனின் சடலமாக இலங்கை அரசு காட்டியபோதும் மிகப் பெரிய அசம்பாவிதங்களை நிகழ்த்த சில தமிழ் அமைப்புகள் திட்டமிட்டன. ஆனால், உளவுத் துறையின் தீவிரக் கண்காணிப்பால் அவை அசுரகதியில் கண்டறியப்பட்டுத் தவிர்க்கப்பட்டன. சில தமிழீழ ஆர்வலர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, குண்டு வெடிப்பு நடந்த பேரணி கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள விக்கிர வாண்டி அண்ணா சிலை அருகே ராஜபக்ஷே உருவ பொம்மைக்கு கடந்த ஒன்பதாம் தேதி செருப்பு மாலை போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மெரினா ஏரியாவில் சிலர், ‘ஈழத்துத் தமிழினம் அழிந்த நிலையில் செம்மொழி மாநாடு தேவையா?’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீசி இருக்கிறார்கள். அதன் பின்னணி குறித்தும் விசாரித்து வருகிறோம். தண்டவாளத் தகர்ப்பு நடந்த இடத்தில் பேனாவால் எழுதப்பட்டுக்கிடந்த பேப்பரை முன்னாள் தமிழ்த் தீவிரவாதிகளிடம் காட்டி விசாரித்து வருகிறோம்!” என்கிறது வழக்கை விசாரிக்கும் போலீஸ் தரப்பு.
ஆனால், தமிழீழ ஆதரவாளர்களோ இதனை அறவே மறுக்கிறார்கள். ”தமிழர் அமைப்புகள் ஏதேனும் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டிருந்தால், இந்நேரம் சம்பவத் துக்குப் பொறுப்பேற்று இருப்பார்கள். பழைய தமிழ் அமைப்புகள் ஏதும் இப்போது வலுவாக இல்லை. மேலும், இலங்கைத் தமிழனுக்கே பற்றுதலோடு குரல் கொடுக்கும் இயக்கத்துவாதிகள், இங்கு உள்ள தமிழர்களின் உயிர் பறிபோகக்கூடிய சதியில் இறங்குவார்களா? ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அறவழியில் தமிழ் அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் அரசுக்கு பெரிய தலைவலியை உண்டாக்கி வருகின்றன. சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதும், ராஜபக்ஷேயின் டெல்லி விசிட்டும் தமிழக மக்களை மனதளவில் கொதிக்க வைத்திருக்கின்றன. செம்மொழி மாநாடு மூலமாக மக்களின் மனதைத் திசை மாற்றிவிடலாம் என நினைத்த அரசுத் தரப்பு, சமீபத்தில் மாநிலம் முழுக்க சர்வே ஒன்றை நடத்தியது. அப்போது, ஈழ விவகாரம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், சமீப காலமாக தமிழகத்தில் ‘திடீர் தமிழ் ஆர்வலர்களாக’ உருவாகி வரும் சிலர், அரசின் கைப்பிள்ளையாக மாறி வருகிறார்கள். இன்னும் சிலரோ, சிங்கள அரசின் ஆசி பெற்றவர்களாக பெரிய அளவில் பணத்தோடும் ‘தமிழ் ஆர்வலர்’ என்ற போர்வையோடும் தமிழகத்துக்குள் நடமாடி வருகிறார் கள். தமிழீழ ஆதங்கத்தைக் குறைக்கும் வகையிலும், புலிகள் இயக்கத்தின் மீது வெறுப்பு உணர்வை உண்டாக்கும் வகையிலும் நடத்தப்பட்டு இருக்கும் தண்டவாளத் தகர்ப்புப் பின்னணியில் இத்தகைய ஆட்கள்தான் இருப்பார்கள்.
மேலும், தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தமிழ் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கும் ஆலோசனைகளும் நடந்து வருவதை இங்கே கவனிக்க வேண்டும். கூடவே, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் வருவதாகத் திட்டமிட்டு இருந்ததாகவும், அவரைக் குறிவைத்தே தண்டவாளத் தகர்ப்பு நடந்ததாகவும் கிளப்பிவிடுவதன் மூலம்… மத்திய அரசையும் தமிழீழ ஆதரவு இயக்கங்களுக்கு எதிராகத் திருப்பிவிடப் பார்க்கிறார்கள்.
தண்டவாளம் தகர்க்கப்பட்ட இடத்துக்கு மிகச் சரியாக 10 அடி தூரத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு நுணுக்கமாக ரயிலை நிறுத்தி விபத்தைத் தவிர்ப்பது சாத்தியமே இல்லாதது. அதோடு, சம்பவம் நடந்த அடுத்த கணமே, ‘இது நக்ஸலைட்களின் வேலை இல்லை’ என டி.ஜி.பி-யான லத்திகா சரண் அறிவித்தது ஏன்… எப்படி? அதேவேகத்தில் வழக்கை உளவுத் துறையின் கையில் ஒப்படைத்ததும் சந்தேகங்களைக் கிளப்புகிறது!” என சொன்னவர்கள்,
”கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், சென்னையில் அசம்பாவிதங்களை அரங்கேற்ற திட்டமிட்டதாக மூன்று பேரை க்யூ பிராஞ்ச் போலீஸ் கைது செய்தது. ‘சென்னையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த புலிகள் முயற்சி’ என அப்போது செய்தி பரப்பிய போலீஸ், பிடிபட்டவர்கள் பிரபாகரனின் நேரடிப் பாதுகாவலரான கடாபியோடு போனில் பேசியதாகவும், அதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றிவிட்டதாகவும் சொன்னது. இத்தனைக்கும் பிடிபட்ட அந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும் வைத்திருந்தது ஒரு லேப்டாப் மட்டும்தான். பிறகு அந்த விவகாரம் அமுங்கிப்போனது!” என்றார்கள். கூடவே,
”விழுப்புரம் சுற்று வட்டாரத்தில் எழுத்தாளர்கள் குழு ஒன்று இரவு நேரங்களில் ‘செம்மொழி மாநாடு தேவையா?’ என்று காரசாரமான கேள்விகளை எழுப்பியும்… அந்த ஏரியாவின் தி.மு.க. அமைச்சர்கள் தொடர்பான சொத்துக் குவிப்பு என்று ஒரு பட்டியலைப் போட்டும் திண்ணைக் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு குழுக்கள் உருவாகி, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக மக்களைத் திருப்புவதாகத் திட்டம் இருந்தது. இப்போது, ரயில் விபத்தைக் காரணம் காட்டி சரமாரி கைது செய்ய முடியுமல்லவா?” என்று கேள்வியும் எழுப்புகிறார்கள்!
சீமான் கிளப்பும் சந்தேகங்கள்!
தண்டவாளத் தகர்ப்பு குறித்து ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமான் பல்வேறுசந்தேகங்களைக் கிளப்பி இருக்கிறார். அவரிடம் பேசினோம்.
”குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ‘மேதகு பிரபாகரனின் தம்பிகள்’ எனத் துண்டுப் பிரசுரத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் சொல்கிறது. தலைவர் பிரபாகரனின் மீது பற்றுதல்கொண்ட தம்பி எவனும் இப்படி ஒரு கொடுமையைச் செய்ய நினைக்க மாட்டான். ஈழமே இடுகாடாக மாறிக்கிடந்தபோதும், தாங்கொணாத் தமிழக உணர்வாளர்கள், எந்த அசம்பாவிதத்தையும் நிகழ்த்தவில்லை. முத்துக்குமார் உள்ளிட்ட 16 பேர் தங்களைத் தாங்களே எரித்து மாய்ந்தார்களே தவிர, அடுத்தவர் மீது துரும்பைக்கூட ஏவவில்லை. ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது; இருப்புப் பாதை மரக்கட்டைகள் உருக்குலைந்து போய் விட்டன; ஆனால், அந்தத் துண்டு பிரசுரம் மட்டும் வெடிப்பு இடத்தின் அருகிலேயே எவ்விதச் சேதமும் இல்லாமல்கிடந்தது எப்படி? அங்கேயே காகிதம் கிடப்பதற்கு காற்றின் அசைவே இல்லாமல் இருந்ததா? ரயிலைக் கவிழ்த்து, நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று பேரழிவை உண்டாக்க நினைத்தவர்கள் ‘அதை நாங்கள்தான் செய்தோம்’ என வெறும் காகிதத்தால் எழுதி வைப்பார்களா? ஒருவேளை ஒரு கோர சம்பவம் நடந்திருந்தால் அந்தப் பேரழிவுப் பிரதேசத்தில் காற்றுக்கே தாக்குப்பிடிக்காத சின்ன காகிதம் அங்கே இருக்காது என்பது அவனுக்குத் தெரியாதா?இந்த எலெக்ட்ரானிக் யுகத்தில் இதை எல்லாம் நம்ப முடிகிறதா?
விசாரணைக்கு முன்பே, ‘இது விடுதலைப் புலிஆதரவாளர் களின் செயல்தான்’ என போலீஸார் சொல்வது ஏன்?” என்கிறார் சீமான்.” இதுதான் ஜுனியர் விகடனில் வெளிவந்த கட்டுரை. இந்தக் கட்டுரையை எழுதியவர், ஜாபர் சேட்டின் தொண்டர் அடிப்பொடிகளில் ஒருவரான இரா.சரவணன் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜுனியர் விகடனில் வெளிவந்த இந்தக் கட்டுரைக்காக, அந்த இதழின் மீது, தமிழ்நாடு அரசு, மான நஷ்ட வழக்கு தொடுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தச் சம்பவத்தை ஒட்டி, நூற்றுக்கணக்கான தமிழின ஆதரவாளர்கள், தமிழகமெங்கும் கைது செய்யப் பட்டனர். அவர்கள் அனைவரையும், கைதும் செய்யாமல், சட்டவிரோதமாக அடைத்து வைத்து விசாரித்து வந்தனர் காவல்துறையினர்.
இதற்கு மறுநாள் விழுப்புரம் சென்ற உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் மற்றும் க்யூ பிரிவு ஐஜி சங்கர் ஜிவால் ஆகியோர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து, இந்த வழக்கின் புலனாய்வு குறித்து பேட்டியளித்தனர்.
எப்படிப்பட்ட மோசமான குற்றங்கள் நடந்தாலும், உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது கிடையாது. அது தொடர்பாக வேறு யாராவது அதிகாரிதான் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார்.
இந்த விவகாரம் தொடர்பாக நூற்றுக்கணக்கானவர்களை சட்டவிரோதமாக கைது செய்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. அதையொட்டி, கைது செய்தவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்தது காவல்துறை.
இத்தனை பேர் கைதுகளையும் மீறி, கோவையில் “தமிழினத் துரோகி கருணாநிதியே உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா” என்று சுவரொட்டிகள் ஒட்டப் பட்டதும், ஒட்டியவர்களை கைது செய்து அவர்கள் மீது இன்று வரை வழக்குகள் நடைபெற்று வருவதும் வேறு விஷயம்.
தமிழ் இன உணர்வாளர்கள் விழுப்புரம் வெடிகுண்டு விஷயம், காவல்துறையின் வேலை என்பதை அப்போதே சந்தேகித்தாலும், அதை ஊர்ஜிதப் படுத்தும் விஷயங்கள் இப்போதுதான் வெளி வரத் தொடங்கியிருக்கின்றன.
தமிழ்நாடு விடுதலைப் படையின் முன்னாள் உறுப்பினரான, சுப.இளவரசன், ஜாபர் சேட்டுக்காக இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார் என்று நம்பகமான தகவல்கள் வந்துள்ளன. ஜாபர் சேட், விழுப்புரம் சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்ததும், புலனாய்வு தொடங்கும் முன்பாகவே இது விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயல் என்றதும், சகட்டு மேனிக்கு தமிழ் இன உணர்வாளர்களை கைது செய்ததும் எதற்காக என்பது தெளிவாகியுள்ளது.
மன்னர் போல் வாழ்ந்து பழக்கப் பட்ட ஜாபர் சேட், இப்போது சென்னையிலும், ராமேஸ்வரத்திலும் எப்படி வாழ்கிறார் என்று விசாரித்தால், மன்னர் போலவேதான் வாழ்கிறார் என்று சொல்கிறார்கள். யார் இவருக்கு உதவி செய்வது என்று விசாரித்தால், ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும், கே.என்.நேருவின் தம்பி ரவி என்பவர், ஜாபர் சேட்டுக்கு பண உதவி செய்து வருவதாக சொல்கிறார்கள். ஜாபர் சேட் ராமேஸ்வரத்தில் தங்கியிருக்கும் வாடகை வீட்டை, 20 லட்ச ரூபாய் செலவில் ரவி புனரமைத்துக் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர்களுக்குள் என்ன உறவு என்று விசாரித்தால், ஜாபர் சேட், பணியில் சேர்ந்த போது, உதவி காவல் கண்காணிப்பாளராக திருச்சியில் பணியாற்றியிருக்கிறார். அப்போதிருந்து இவர்கள் நட்பு தொடர்வதாகவும் சொல்கிறார்கள்.
இவரை எப்படி மன்னிப்பது ? இதற்காகத் தான் சவுக்கு சொல்கிறது, இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.