ஆனால், ராசா கைது செய்யப் பட்டதிலிருந்து, 2ஜி வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெறத் தொடங்கியது முதலே மிக மிக கவனமான அணுகுமுறையை கையாள்கிறார். ராசா கைது செய்யப் பட்ட பிறகு, ஒட்டு மொத்த ஊழலுக்கும் ராசாதான் காரணம் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று மாறன் சகோதரர்கள் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் வெளியாகின. இதன் பின்னணியில் இருந்தது ராசா என்றே கூறப்பட்டது.
அதன் பிறகு இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ராசா மிக கவனமாக, அனைத்து முடிவுகளும் பிரதமருக்கு தெரிந்தே நடந்தன என்ற வாதத்தை முன் வைத்த போது, காங்கிரஸ் கட்சி அதிர்ந்து போனது. ராசா கைது செய்யப் பட்ட புதிதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, சோனியாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட அஹமது படேல், ராசாவை சந்தித்தார். அதன் பிறகு, ராசாவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது மட்டுமல்ல, திமுகவைச் சேர்ந்தவர்களே கண்டு கொள்ளவில்லை.
திமுகவைச் சேர்ந்தவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதோடு மட்டுமல்லாமல், ராசாவை தகத்தகாய கதிரவன், பொட்டல் காட்டில் பூத்துக் குலுங்கும் பூச்செடி (கொடுத்த காசுக்கு சளைக்காமல் கூவுகிறார்) என்று வர்ணித்த கருணாநிதி, அத்தனை ஊழல்களையும் செய்தது ராசாதான் என்றும், கனிமொழி, ஒன்றும் அறியாத அப்பாவி, வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாதவர் என்றும் கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணையின் போது வாதிடச் செய்தார்.
ஆனாலும் சாதுர்யமான ராசா, இந்த நேரத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தன்னுடைய வழக்கில் பின்னடைவு ஏற்படுத்தும் என்று உணர்ந்து அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். கனிமொழி மட்டும் சிறையில் இல்லாவிட்டால், தன்னைப் பார்க்க திமுகவில் இருந்து ஒருவரும் வரப்போவதில்லை என்பதை உணராதவர் அல்ல ராசா.
ஆனால், ராசா அடுத்து நகர்த்திய காய் நகர்வுகள், காங்கிரஸ் கட்சியை ஆடிப்போக வைத்தது. ராசா கைது செய்யப் பட்ட புதிதில், ராசாவை சோனியாவின் அரசியல் ஆலோசகர் அஹமது படேல் வந்து சந்தித்ததோடு சரி. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் கூட தன்னை வந்து சந்திக்கவில்லை என்பதை ராசா உணராதவர் அல்ல. பொறுமையாக காத்திருந்து உரிய நேரத்தில் அதற்காக பதிலடியை கொடுத்தார்.
ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பது நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல, அமைச்சரவை எடுத்த முடிவு. ஆனால் கூட்டாக எடுத்த முடிவுக்காக நான் மட்டும் சிறையிலிருக்கிறேன் என்று வாதிட்ட போது, காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன. “இது நீதிமன்றத்தில் செய்யப் படும் வாதம், அதற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை” என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைகள் ஆடித்தான் போனார்கள்.
அடுத்து ராசா, சிதம்பரத்தையும், மன்மோகன் சிங்கையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார். இது சாதாரணமாக எடுத்து வைத்த வாதமாக கருத முடியாது. சிதம்பரமோ, மன்மோகன் சிங்கோ சாட்சியாக விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப் படும் போது, அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களை வைத்தே, அவர்களை குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்க முடியும் என்பதை வழக்கறிஞரான ராசா உணர்ந்தே செய்தார் என்று தோன்றுகிறது.
தற்போது மத்திய அரசில் ஏற்பட்டு வரும் குழப்பங்களை ராசா மகிழ்ச்சியோடு ரசித்து வருவதாகவே தெரிகிறது. தொடக்கத்தில் பெரும் பரபரப்போடு தொடங்கப் பட்ட 2ஜி வழக்கின் விசாரணை ராசா வசமாக சிக்கிக் கொண்டார் என்று எண்ண வைத்தது. ஆனால் நாளுக்கு நாள் நடக்கும் புதுப் புது திருப்பங்கள் ராசா மீதான வலை தளர்ந்து வருவதை உணர்த்துகிறது.
நேற்றைக்கு முன்தினம் ராசாவின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் அற்புதமானது. ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார், உச்ச நீதிமன்ற டிவிஷன் பென்ச் முன்பாக, வாதிடும் போது, ‘சிபிஐ 2ஜி வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை என்று கூறுகிறது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறது. 2ஜி வழக்கு தொடர்பாக 2010 அக்டோபர் 21ல் பதிவு செய்யப் பட்ட ஒரே ஒரு எப்ஐஆர் தான் உள்ளது. புலன் விசாரணை முடிந்தால் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறது.
அப்படி இருக்கையில் புலன் விசாரணை நடைபெறும் ஒரு வழக்கில் ராசா மட்டும் ஏன் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் ?” என்று வாதிட்டார்.
இவரது வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கங்குலி மற்றும் ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் “நீங்கள் புத்திசாலியான மனிதர்” என்று தெரிவித்தனர். ராசா தரப்பில் தற்போது வைக்கப் பட்டுள்ள வாதம், சிபிஐக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக, புலனாய்வு முடியாத ஒரு வழக்கில் நான் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்ற வாதத்தையும் ராசா முன்வைப்பார்.
உண்மையிலேயே ஆண்டிமுத்து ராசா, புத்திசாலி ராசா தான்.