1. உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்.
2. ஒரு சாதாரணமான குக்கிராமத்தில், பிறந்த நீங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது இருந்ததா ?
3. தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான தலைமை ஏற்போம் என்று நினைத்தீர்களா ?
4. சமூக இயக்கமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று நிலை வந்ததற்கு உங்கள் பதில்.
5. தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவதத்தை இரு திராவிடக் கட்சிகளுமே வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
6. ஒரு வலுவான தலித் அமைப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கட்டியமைத்த நீங்கள், அரசியலில் வலுவாக கால் ஊன்றுவதற்கு தடை எது என்று நினைக்கிறீர்கள்.
7. திராவிட கட்சிகள் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு. அதே பாணியில் உங்கள் கட்சியும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பரவலான கருத்த உண்டு. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்
8. தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவது சாத்தியமா ?
9. தலித் ஒருங்கிணைப்பு அரசியல் அதிகாரம் அடைவதை சாத்தியப் படுத்துமா ? அல்லது தமிழ் தேசிய அரசியல் சாத்தியப் படுத்துமா ?
10. உங்கள் அமைப்பை பலப்படுத்த 2011 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்று அறிவித்த நீங்கள், அதை செயல்படுத்த தவறியது போலத் தோன்றுவதற்கான காரணம் என்ன ?
11. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஜனநாயக சக்திகள் வளரவில்லை என்று அறிவு ஜீவிகள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
12. உங்கள் கட்சியில் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?
13. திராவிடக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான் பரவலாக மக்கள் மத்தியில் அக்கட்சிகளை செல்வாக்கடைய வைத்தார்கள் என்பது வரலாறு. திராவிடக் கட்சி பாணியை பின்பற்றுவது போலத் தோன்றும் உங்களுக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வளர்வதை பலவீனமாக நினைக்கிறீர்களா ?
.
14. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து அழைப்பு வந்தும், அப்பாவி மக்கள் பலியானதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் ? விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் தான் கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் கூட்டணி கிடையாது என்று நீங்கள் கூறினாலும், சோனியாவோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. இது குறித்து என்ன கூறுகிறீர்கள்.
15. பெண்களையும், குழந்தைகளையும் நச்சுக் குண்டுகள் வீசி கொலை செய்ய உத்தரவிட்ட ராஜபக்ஷேவை சந்தித்து கை குலுக்கியதை, உலகத் தமிழர்கள், அவர்களுக்கு நீங்கள் செய்த மிகப் பெரிய துரோகமாக கருதுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து ?
16. 25 வயது தலித் இளைஞன் திருநாவுக்கரசுவை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பியோடி, தமிழக காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, இன்று அங்கே அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவோடு விருந்துண்டதை உலகத் தமிழர்கள் ரசிக்கவில்லை. இது குறித்து உங்கள் கருத்து
17. அரசியலுக்காக திமுக தமிழர்களுக்கு செய்த துரோகங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்ட உங்களை, உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணித்தது திமுக. உங்களை தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தலித் வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, தேவையற்ற சமயத்தில் ஒதுக்கி விட்டதாக உணர்கிறீர்களா ?
18. திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடியபோதும் அது குறித்து ஒரு வார்த்தையும் நீங்கள் பேசாமல் இருந்ததனால், தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் புகாருக்கும் ஆளாகாத உங்களுக்கு இது தடுமாற்றம் இல்லையா ?
19. வடபழனியில் உங்கள் கட்சி அலுவலகம், ஆக்ரமிப்பு குற்றச் சாட்டின் பேரில் வேறு ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப் பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று நீங்கள் வழக்காடினாலும், இந்த விவகாரத்தில் உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக எந்த உதவியும் செய்யாமல், துரோகம் இழைத்ததாக கருதுகிறீர்களா ?
20. தமிழகத்தில் கணிசமான அளவில் இருக்கும் தலித்துகளை ஒருங்கிணைத்து மற்ற தலித் அமைப்புகளோடு கூட்டணி வைத்து ஒரு வலுவான தலித் அமைப்பை உருவாக்க நீங்கள் முயற்சிகள் எடுக்காததற்கு காரணம் ?
21. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி கடுமையான துரோகம் இழைத்து விட்டதாக உலகத் தமிழர்கள் அனைவருமே கருதுகிறார்கள். அவ்வாறு இருக்கையில், உங்களுக்கு கிடைக்கும் எம்.எல்.ஏ / எம்.பி சீட்டுக்காகவும், கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளுக்காகவும், கருணாநிதியை ஆதரித்தீர்கள் என்ற குற்றச் சாட்டுக்கு என்ன கூறுகிறீர்கள் ?
22. சென்னை புல்லா அவென்யூவில், நீங்கள் நடத்திய எழும் தமிழ் ஈழம் என்ற மாநாட்டுக்காக செய்யப் பட்டிருந்த விளம்பரங்களில் ஈழம் என்ற வார்த்தையை கருணாநிதி அரசின் காவல்துறை இரவோடு இரவாக அழித்த போதும், அதற்கு துளி கூட எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணம் என்ன ?
23. ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்த நீங்கள், ஈழப் போருக்கு பெருமளவில் ஆயுதங்களை கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணியில் இருப்பதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் ?
இவை சவுக்கு கேட்க விரும்பும் கேள்விகள். திருமாவிடம் கேட்பதற்கு வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன. அதிக பட்சம் 3 நாட்களுக்கு கேள்விகள் ஏற்றுக் கொள்ளப் படும். வாசகர்கள் உங்கள் கேள்விகளை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ newsavukku@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.