சென்னை தேவர் மண்டபத்தில் முக்குலத்தோர் முழக்கம் என்ற சிடி வெளியீட்டு விழா நடந்தது. இந்த சிடியை பாடி கவுரவித்திருப்பவர் கருணாஸ். இந்த சிடி சுப்ரமணிய சுவாமியால் வெளியிடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பசும்பொன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனர் முத்துசாமி, “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். அதுவும் அக்டோபர் 30ம் தேதிக்குள் நடக்க வேண்டும். இல்லையெனில், விமான நிலையத்தை கருணாஸ் போன்ற ஆயிரம் இளைஞர்கள் முற்றுகையிட வேண்டும். விமான நிலையத்திறகுள் ஒரு மந்திரியும் உள்ளே போக முடியாதவாறு தடுக்கவேண்டும். உள்ளே இருந்தும் யாரும் வெளியே வரக்கூடாது. விமான நிலையத்திற்கு பெயர் வைக்க நாம் சுப்ரமணிய சுவாமிக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று பேசினார்.
மன்னர் சேதுபதியின் வாரிசான கவுரிசங்கர், “தேவர்கள் என்றால் வீரம் மிக்கவர்கள். அந்த வகையில் வீரம் மிக்கவர், விவேகம் மிக்கவர், தெய்வீக பக்தி கொண்டவர் சுப்ரமணியம் சுவாமி. எனவே நாம்அவரை டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தேவர் என்று அழைப்பதே சாலப்பொருத்தம்” என்று பேசினார்.
அடுத்து பேசிய சுவாமி, ”என் அம்மா அடிக்கடி நீ பிராமணன் இல்லை, தேவர் என்பார். அதற்கு காரணம் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். அய்யர் என்றால் அடக்கமாக இருப்பார்கள். தேவர் என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். முத்துராமலிங்க தேவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் சொத்து எல்லாம் நாட்டுக்காக என்றார். ஆனால், இன்றைய அரசியல்வாதி, நாட்டு சொத்து எல்லாம் என சொத்து என்று சொல்கின்றனர். முதன் முதலில், மீனாட்சி அம்மன் கோயிலில் தலித் மக்கள் நுழைந்து தரிசனம் செய்ததற்கு முத்துராமலிங்கத் தேவர்தான் காரணம்.
மதுரை விமான நிலையத்திற்கு “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இன்டர்னேஷனல் ஏர்ப்போட்” என்று பெயர் வைக்க 2001ல் முடிவானது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த சரத் யாதவ், எல்லாவற்றையும் கிளியர் செய்தார். ஆனால், தமிழ்நாட்டில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வேண்டும் என்றார்கள். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் என்ன காரணம் சொன்னார் என்று தெரியவில்லை. அந்த முயற்சி தடைபட்டது.
இரண்டாவது முறையும் கடைசி நிமிடத்தில் வந்து, தேவர் பெயர் வைத்தால் தலித் மக்கள் போராட்டம் செய்வார்கள், வன்முறை ஆகும் என்று சிலர் சொல்ல, பிரதமர் அதை நிறுத்தி வைத்தார். இரண்டு நாள் முன்பு பிரதமர் மன்மோகனிடம் மதுரை ஏர்போர்ட்டுக்கு தேவர் பெயர் வைத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கோர்ட் மூலமாக நான் உத்தரவு வாங்கி வருவேன் என்று சொல்லியிக்கிறேன்.
தலித் சமுதாயம் முத்துராமலிங்கத் தேவருக்கு அவர் செய்த நல்ல பணிகளுக்காக ஏர்போர்ட்டுக்கு அவர் பெயர் வைக்க சப்போர்ட் செய்ய வேண்டும். முத்துராமலிங்கத்துக்கு பாரத ரத்னா கிடைக்க வேண்டும். அதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என் மனப்பான்மை தேவர் மாதிரிதான். அதனால் எனக்கு கஷ்டம் கிடையாது. அதனால் என்னை யாராவது சுப்ரமண்ய சுவாமி தேவர் என்று சொன்னால் எனக்கு அது பெருமையான விஷயம். கவுரவமாக நினைக்கிறேன்.” என்று சுப்ரமண்ய சுவாமி பேசியுள்ளார்.
சுப்ரமண்ய சுவாமியின் இந்தப் பேச்சு தென் மாவட்டங்களில் வன்முறையை தூண்டும் தன்மை பெற்றது.
சுப்ரமண்யன் சுவாமியோடு தேவர்களின் இந்த இணைப்பும் புதுப் பாசமும், ஒரு பெரிய சதித்திட்டத்தின் வெளிப்பாடோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
முத்துராமலிங்கம் தலித்துகளுக்கு செய்த நன்மைகளை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறும் சுப்ரமண்யன் சுவாமி, முதுகளத்தூர் கலவரத்துக்கு யார் காரணம், அதில் வீடிழந்த தலித்துகளின் நிலை என்ன, 18 தலித்துகள் பலியானதற்கு காரணம் என்ன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு நாள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தலித்துகளை அழைத்துச் சென்று விட்டு, ஒன்பது உயிர்களை கொல்வது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் ? முதுகளத்தூர் கலவரத்தின் பின்னணியில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார் என்பதை அன்றைய முதல்வர் பக்தவச்சலம், காங்கிரசாரின் அராஜகம் எல்லை மீறிவிட்டது; காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரில் இருந்துதான் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வேண்டும்’ என்று 10 ஜுலை 1957 அன்று முத்துராமலிங்கத் தேவர் பேசிய பேச்சை சுட்டிக் காட்டகிறார். முதுகுளத்தூர் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் “ராமநாதபுரம் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் செத்தவர்கள் 40 பேர் என்றும், அதில் 14 பேர்களில் 13 பேர் மறவர்கள் என்றும் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்றும் கலகங்களில் இருந்த 26 பேர்களில் 8 பேர் மறவர்கள் என்றும் 18 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. சுமார் 100 பேர் காயமடைந்திருப்பர். இக்கலகத்தில் கொளுத்தப்பட்ட வீடுகள் மொத்தம் 2,879 என்றும் இதில் 2,731 வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களது என்றும் 106 தேவர்களுடையது என்றும் 41 மற்ற வகுப்பினருக்கு சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 475 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என ‘விடுதலை’ நாளேடு 8.10.1957 அன்று ராமநாதபுரம் கலவரம் இழப்புகளின் விவரம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கலவரம் தலித்துகளின் மத்தியில் இன்றும் மாறாத ரணமாகவே உள்ளது. ஆகையால் தலித் மக்கள் முத்துராமலிங்கத் தேவரை என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
முத்துராமலிங்கத் தேவரின் ஒரே சாதனையாக எதைக் கருத முடியும் என்றால், தலித்துகளுக்கும் முக்குலத்தோருக்கும் இடையே தீராத பகையை ஏற்படுத்தினார் என்பதை மட்டுமே கூற முடியும். இப்படிப் பட்டவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கூறும் சுப்ரமண்ய சுவாமி, முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் எழுதிய “முதுகளத்தூர் கலவரம்” என்ற நூலை படித்துப் பார்க்க வேண்டும்.
சுப்ரமண்ய சுவாமியின் இந்தப் பேச்சு விஷமத்தனமானது. இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டக் கூடியது. இத்தனை நாள் தன்னை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாத சுப்ரமண்ய சுவாமி, தற்போது அடையாளப் படுத்திக் கொள்வதில் ஒரு பெரிய சதித் திட்டம் பின்னணியில் இருக்கக் கூடும். ஏற்கனவே எழுதியிருந்த கட்டுரையில், நடராஜனின் சதித் திட்டம் பற்றி விரிவாக எழுதியதையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சுவாமியின் ஆதரவை நடராஜன் கேட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது ஜனனதா கட்சிக்கு இரண்டு இடங்களைக் கேட்டு, அந்த இடங்கள் கொடுக்கப் படாத காரணத்தால் ஜெயலலிதா மீது சுப்ரமண்ய சுவாமி கடும் அதிருப்தியில் இருந்தார் என்ற செய்தியையும் புறந்தள்ள முடியாது. மேலும் சுவாமியின் வரலாற்றைப் பார்த்தால், 1990ல் திமுக ஆட்சியை கலைத்தது உட்பட, பிஜேபி ஆட்சியை கலைத்தது வரை, சகுனி வேலைகளைச் செய்வதில் வல்லவார்.
மேலும் அய்யர் என்றார் அடக்கமாக இருப்பார்கள், தேவர் என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள் என்ற சுப்ரமண்ய சுவாமியின் கூற்றும் முட்டாள்த்தனமானது. இந்த சாதியினர்தான் வீரமாக இருப்பார்கள் என்று பொதுமைப் படுத்துவது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல, விஷமத்தனமானது. ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் அய்யர்தானே ? தான் தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்ளும் சுப்ரமண்ய சுவாமி, எப்போதும் 25 துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வலம் வருவது ஏன் ? விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டு விட்டார்கள் என்று வாய் கிழிய பேசும் சுவாமி, அழிக்கப் பட்ட விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று எதற்காக கருப்புப் பூனைப் படைகளோடு சுற்றுகிறார். இவரது உயிருக்கு ஆபத்து என்றால் இவர் தானே சொந்தச் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். இந்த ‘வீரர்’ எதற்காக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் கருப்புப் பூனைப் படை வீரர்களை உடன் வைத்துக் கொள்கிறார் ?
ஜெயலலிதா மீதான பெங்களுர் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து, அவருக்கு எதிராக பெரிய சதித் திட்டம் தீட்டப் பட்டு வருவதாகவே தோன்றுகிறது. இந்தச் சதித்திட்டத்தில் சுப்ரமண்ய சுவாமி முக்கிய பங்கு வகித்து வருவதன் விளைவே, முக்குலத்தோரோடு இவர் காட்டும் நெருக்கம்.
ஜெயலலிதா இதை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சவுக்கு வாசகர்கள் பலர் எழுதியுள்ளது போல, வாக்குகள் விழுந்தது ஜெயலலிதாவுக்காகத் தான். வேறு யாருக்காகவும் அல்ல.