அவர்கள் கைது செய்யப் படப் போவதே இல்லை. என்ன இது என்று ஆச்சர்யமாகப் பார்க்கிறீர்களா ? ஆம், நேற்று கேடி சகோதரர்கள் கைது செய்யப் படக் கூடாது என்று காலை முதல் பிற்பகல் வரை, கருணாநிதி குடும்பத்துக்கும், கேடி சகோதரர்கள் குடும்பத்துக்கும் ப்ரோக்கராக செயல்பட்டு வரும், தலைச் சிறந்த நெடுந்தொடர் நடிகை செல்வி ஏற்பாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றது. செல்வியின் கோரிக்கையின் பேரில், ,அகில இந்திய சாய் சமாஜ் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் என்பவர் இதை ஏற்பாடு செய்தார்.
இந்த விளக்கு பூஜையில், கேடி சகோதரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் திருஷ்டியை கழிக்கும் வகையிலும், அவர்கள் சிறை செல்லாமல் தடுக்கும் வகையிலும் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டன. சிறப்பு மந்திரங்கள் என்னவாக இருக்கும் ?
வேறு என்ன ? சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான “காதலில் விழுந்தேன்” படத்தில் வெளி வந்த ஹிட் பாடலான “அட்றார்றா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க“ என்ற மந்திரங்கள் காலை முதல், மாலை வரை ஓதப்பட்டிருக்கும்.
இந்த மந்திரங்களைக் கேட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் மனமிறங்கி, கேடி சகோதரர்களை சிறை செல்லாமல் காப்பாற்றுவார்கள் என்று நெடுந்தொடர் நடிகை செல்வி, பெரிய கேடியின் மனைவி காவேரி மற்றும் சின்னக் கேடியின் மனைவி ப்ரியா ஆகியோரும் உறுதியாக நம்புகிறார்கள்.
இவர்கள் பூஜை செய்து, அதைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் மனமிறங்கலாம். சுப்ரமண்ய சுவாமி கூட ஏதாவது ஒரு டீலில் செட்டில் ஆகலாம். இவர்கள் மீதான வழக்குப் பதிவை தாமதம் செய்து, இவர்கள் கைதையும் தாமதம் செய்து கொண்டிருக்கும், மத்திய புலனாய்வுத் துறையின் வழக்காடும் பிரிவு (Directorate of Prosecution)ன் தலைவர், அப்துல் அஜீஸ் மனமிறங்கலாம். அந்த அப்துல் அஜீஸை, தமிழக ஐபிஎஸ் அதிகாரி, முகம்மது ஷகீல் அக்தரை வைத்து, கேடி சகோதரர்கள் தங்கள் பக்கமாக வளைக்கலாம்.
ஆனால், இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கும் மூன்று தெய்வங்கள் மனமிறங்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. யார் அந்த மூன்று தெய்வங்கள் என்று கேட்கிறீர்களா ? 2ஜி வழக்கில் இன்று வரை பல உண்மைகளை வெளிக் கொணர்வதில் முன்னணியில் இருக்கும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கங்குலி மற்றும் சிங்வி தான் அந்த மூன்று தெய்வங்கள்.
இந்த விளக்கு பூஜை இந்த மூன்று தெய்வங்களின் மனதை இறங்கச் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதனால், கேடி சகோதரர்களின் கைதுக்காக அது வரை காத்திருங்கள்.