சவுக்கில் ஏற்கனவே கனிமொழி மீதும் சரத்குமார் மீதும் நம்பிக்கை மோசடிக்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 409 பொருந்தாது என்பது குறித்து, புரிய வேண்டியவருக்கு புரிந்து விட்டது என்ற கட்டுரையில் விரிவாக எழுதப் பட்டிருந்தது. தற்போது, இந்த 409 பிரிவு கனிமொழிக்கும் சேர்க்கப் பட்டுள்ளது. ராசா நம்பிக்கை மோசடி செய்ய கனிமொழி, சரத்குமார் மற்றும் மற்ற குற்றவாளிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சிபிஐ குற்றச் சாட்டுகள் சொல்கின்றன.
நம்பிக்கை மோசடி என்ற பிரிவு கனிமொழிக்கு பொருந்தாது என்பது சிபிஐக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் இந்தப் பிரிவு சேர்க்கப் பட்டுள்ளது, 2ஜி வழக்கில் சிலர் மட்டும் பலிகடா ஆக்கப் படுகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஒரு பொறுப்பை வகிக்கும் பொது ஊழியரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஒரு சொத்தை, நம்பிக்கை மோசடி செய்தால் அவர் நம்பிக்கை துரோகம் என்ற குற்றத்தை இழைத்தவராகிறார் என்ற குற்றச் சாட்டு, மற்ற அனைவரையும் விட ப.சிதம்பரத்துக்கும் மன்மோகன் சிங்குக்கும் சரிவர பொருந்துமே. கனிமொழி மற்றும் சரத்குமாருக்காவது கூட்டுச் சதியோடு சேர்ந்த நம்பிக்கை மோசடி என்று வருகிறது. மன்மோகன் சிங்குக்கும், ப.சிதம்பரத்துக்கும் நேரடியாக நம்பிக்கை மோசடி பிரிவு பொருந்தும்.
ராசா எப்படி தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் என்ற சொத்துக்கு துரோகம் இழைத்தாரோ, அதே போல, இந்த நாட்டின் நிதிக்கு பொறுப்பான ப.சிதம்பரம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்று சொல்ல முடியும் அல்லவா ?
மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பை வகித்தார். பிரதமர் பொறுப்பை வகித்ததன் மூலம் அவர் அனைத்து அமைச்சரவைகளுக்கும் பொறுப்பானவர் ஆகிறார். அந்த வகையில், ஸ்பெக்ட்ரம் மற்றும் நாட்டின் நிதி ஆகிய இரண்டுக்கும் நம்பிக்கை மோசடி செய்த வகையில் மன்மோகன் சிங்குக்கும் 409 பொருந்துமே.
அடுத்தபடியாக சிபிஐ, ஷாகீத் பல்வா, கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், சரத் குமார், ஆசிப் பல்வா, ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 193 சேர்த்துள்ளது. பிரிவு 193 என்பது, தவறான ஆவணங்களையோ, சாட்சிகளையோ தயார் செய்ததற்காக சேர்க்கப் படும் பிரிவு. இது எதற்காக என்றால், கலைஞர் டிவிக்காக கொடுக்கப் பட்ட 200 கோடி பணத்தை கடன் என்பது போல ஆவணங்களை தயார் செய்ததற்காக என்று சிபிஐ குறிப்பிடுகிறது.
கலைஞர் டிவிக்கு வழங்கப் பட்ட 200 கோடியை கடனாக நிரூபிக்க இவர்கள் முனைந்தார்கள் என்பதற்காக இவர்களுக்கு 193 பிரிவு என்றால், இந்தப் பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பித் தருவதற்காக, கலைஞர் டிவிக்கு விளம்பர அட்வான்ஸ் என்ற போர்வையில் பணம் கொடுத்து கடனை திருப்பிச் செலுத்தியதாக போலிக் கணக்குகளை தயாரித்த செட்டிநாடு சிமென்ட்ஸ் எம்ஏஎம்.ராமசாமியும், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும் அல்லவா குற்றவாளிகள் ? அவர்களை ஏன் சேர்க்கவில்லை ?
ரிலையன்ஸ் நிறுவன நிர்வாகிகள் பல மாதங்களாக சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் 2ஜி விவகாரத்தில் எடுத்த முடிவுகள் அனில் அம்பானிக்கு தெரியாமல் எடுக்கப் பட்டிருக்காது என்பது சிபிஐக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே தெரியும். ஆனால் அனில் அம்பானி ஆனந்தமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் நிறுவன நிர்வாகிகள் சிறையில் வாடிக் கொண்டு, 409 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப் பட்டு நிற்கிறார்கள்.
ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களைப் போலவே சட்டவிரோதமாக லைசென்ஸ் பெற்ற ஒரு சில மாதங்களிலேயே ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ என்ற நிறுவனத்துக்கு தன் பங்குகளை பத்து மடங்கு விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தது டாடா நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, நீரா ராடியாவோடு ராசா அமைச்சராவது குறித்து உரையாடுவதும் வெளியாகியது. ரத்தன் டாடா, கருணாநிதியின் துணைவிக்கு பல கோடி மதிப்புள்ள வோல்டாஸ் நிலத்தை பரிசளித்தது எதற்காக என்பது ஊருக்கே தெரியும். ராசாவின் தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஸ்கேனிங் கருவியை ரத்தன் டாடா எதற்காக அன்பளிப்பாக வழங்கினார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவில் உள்ள மற்ற எந்த நிறுவனத்தையும் விட்டு விட்டு, சென்னையில் கனிமொழி இயக்குநராக உள்ள தமிழ் மையத்துக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை கொடுக்க ரத்தன் டாடா ஏன் முடிவெடுத்தார் என்பதும் வெளிப்படையான ரகசியமே. அப்படி இருக்கும் போது, ரத்தன் டாடாவையும், டாடா டெலிகாம் நிறுவனத்தையும் இது வரை ஏன் சிபிஐ விசாரிக்கவில்லை.
கனிமொழி மற்றும் சரத்குமார் மீதான குற்றச் சாட்டு கலைஞர் டிவிக்காக 200 கோடியை லஞ்சமாக பெற்றார்கள் என்பது. ஸ்பெக்ட்ரம் வழங்காமல் வேண்டுமென்றே கோப்பை நிறுத்தி வைத்து, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டி, அவரை அனந்தகிருஷ்ணனுக்கு விற்பனை செய்ய வைத்து, அதற்கு பிரதிபலனாக, வியாபாரமே தொடங்காத சன் டைரெக்ட் என்ற நிறுவனத்தில் 700 கோடி ரூபாயும், சவுத் ஏஷியன் எப்.எம் என்ற நிறுவனத்தில் 125 கோடி ரூபாயும் முதலீடு என்ற போர்வையில் லஞ்சமாக பெற்ற கேடி சகோதரர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்வதற்கு கூட சிபிஐ இத்தனை தயக்கம் காட்டுகிறதே ஏன் ? அவர்கள் வீட்டில் சோதனை நடத்துவது, முதல் நாள் இரவே தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால், கேடி சகோதரர்களுக்கு தெரிந்திருக்காதா ? இத்தனை தாமதாக எப்ஐஆர் பதிவு செய்து, (அதுவும் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு) இது வரை அவர்களை கைது செய்யாமல் பவனி வருவதற்கு அனுமதித்திருக்கிறதே… இது எந்த விதத்தில் நியாயம் ?
2ஜி வழக்கில் சம்பந்தப் பட்ட அனைவருமே தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் அது நியாயமான முறையில், சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மை தவறாமல் நடக்க வேண்டும். இதனால் தாமதமாக ஆனாலும் சரி. ஆனால், இந்த ஊழலில் மூளைகளாக செயல்பட்டவர்களை கண்டும் காணாமல் விட்டு விட்டு, கைகளாகவும், கால்களாகவும் செயல்படுபவர்களை மாதக்கணக்கில் சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லாமல், பொருந்தாத சட்டப் பிரிவுகளை உள்நோக்கத்தோடு சேர்த்திருக்கும் சிபிஐயின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது.
தற்போது சிறையில் இருக்கும் இவர்கள் அத்தனை பேரும் ஜாமீனில் விடுதலை செய்ய்ப பட வேண்டும். இவர்கள் சாட்சிகளை கலைப்பார்கள் என்றால், அவர்கள் கலைக்காமல் பார்த்துக் கொள்வது சிபிஐயின் பொறுப்பு. அப்படி முடியாது என்றால், அது சிபிஐயின் கையாலாகாத்தனத்தையே காட்டும்.
நீதியரசர் கிருஷ்ணைய்யர் சொன்ன Bail is Rule and Jail is exception என்பதை விசாரணை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மறந்து விடக் கூடாது. ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை ஜாமீனில் விட முடியாமல் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த 409 சேர்க்கப் பட்டிருக்குமோ என்று தற்போதே டெல்லி ஊடகங்களில் பேசப் படுகிறது.
காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக இப்போது மட்டுமல்ல, எப்போதுமே சிபிஐ செயல்பட்டுத்தான் வந்திருக்கிறது. அது அப்படிச் செயல்படுவதற்காக, ஆறு மாதங்களுக்கு மேல், யாரை விசாரணைக் கைதியாக வைத்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.