இந்திய நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அலைகழிக்கப் படுவதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை பயன்படுத்தி நீதிமன்றத்தையும் ஏமாற்றி ஒரு பெரிய சொத்தை அபகரிக்கும் விபரீதம் மதுரையில் நடைபெற்றிருக்கிறது.
மதுரையில் மஹாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் என்ற ஒரு மில் இருந்தது. காலப்போக்கில் தொழிலை நடத்த முடியாமல், இந்த மில் கடன் தொல்லையில் சிக்குகிறது. முதன் முதலாக, இந்த மில்லுக்கு பஞ்சு சப்ளை செய்த கிருஷ்ணமராஜா என்பவர் 1982ம் ஆண்டில் மஹாலட்சுமி மில் பஞ்சு சப்ளை செய்ததற்கான தொகையை தரவில்லை. எனவே இந்த மில்லின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.
1982ல் சொத்துக்களை இணைக்கும் நீதிமன்ற உத்தரவு
அந்த மனுவின் படி, மஹாலட்சுமி மில் நிறுவனத்தார் பஞ்சு சப்டைள செய்தவருக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும், கொடுக்கத் தவறினால் அந்த சொத்துக்கள் ஜப்தி செய்யப் படும் எனவும் உத்தரவிடுகிறது.
இந்த உத்தரவுக்குப் பிறகும் இந்த மில் தொடர்ந்து நடைபெறுகிறது. பாங்க் ஆப் மதுரா, பஞ்சாப் நேஷனல் வங்கி, மற்றொரு கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் கடன் வாங்கி, இந்த மில்லை தொடர்ந்து நடத்த மில் முதலாளி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாமல், இறுதியாக 1996ல் மில் நிரந்தரமாக இழுத்து மூடப்படுகிறது. மில் தொழிலாளிகள் அனைவரும் வேலை இழக்கின்றனர். இந்த மில் வங்கியில் வாங்கிய கடன் தொகை போக, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி, விற்பனை வரி, என ஏகப்பட்ட கடனுக்கு ஆளாகியிருக்கிறது.
இப்படியே இந்த விவகாரம் போய்க் கொண்டிருந்த போது, மாருதி டெக்ஸ்டைல்சின் முதலாளி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் சுப்ரமணியன் என்பவர் களத்தில் இறங்குகிறார். இவர் மஹாலட்சுமி டெக்ஸ்டைல்சின் முதலாளியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அந்த ஒப்பந்தத்தின் படி, மஹாலட்சுமி மில்லுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் விற்றுக் கொடுத்து அதன் மூலம் வரும் வருவாயில் தொழிலாளருக்கு சேர வேண்டிய பாக்கி உட்பட அனைத்து கடன்களையும் அடைக்கிறேன் என்று ஒரு ஒப்பந்தம் போடுகிறார். என்னடா இவர் இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என்று ஆச்சர்யப்படாதீர்கள். பொறுமையாக படியுங்கள்.
இந்த நிலையில் சுப்ரமணியன் இந்த தொழிலாளிகள் பெரிய பிரச்சினை பண்ணுவார்கள், அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று, தொழிலாளிகளோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அந்த ஒப்பந்தத்தின் படி, மில்லின் சொத்துக்களை விற்று, அதில் வரும் வருவாயில், தொழிலாளிகளுக்கு சேர வேண்டிய தொகையை முதலில் செலுத்துவதாக ஒப்பந்தம் போடுகிறார். எப்படியாவது ஒரு வழியில் தங்களுக்கு வர வேண்டிய சம்பள பாக்கி வந்தால் போதும் என்ற மனநிலையில் தொழிலாளிகள் ஒப்புக் கொள்கின்றனர்.
மாநில அரசின் வணிக வரித்துறை, சுப்ரமணியம் தொழிலாளிகளோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறது. தங்களுக்கு வரவேண்டிய வரிபாக்கியை முதலில் செலுத்த வேண்டும் என்று கோருகிறது.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் ஒரு உத்தரவிடுகிறது. அந்த உத்தரவின் படி, சுப்ரமணியன் என்ற பவர் ஏஜென்ட், 8 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் 20 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கு 4 வாரத்துக்கு பிறகு மற்றொரு 20 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப் படும் தொகை தொழிலாளர்களுக்கு சென்று சேர வேண்டும். இது முடிந்த பிறகு வணிக வரித்துறை தங்களுக்கு சேர வேண்டிய பாக்கியை சுப்ரமணியோடு பேச்சுவார்த்தை நடத்தி வசூல் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. சுப்ரமணியின் சம்மதத்தோடே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
ஆனால் சுப்ரமணி உறுதி மொழி கொடுத்தது போல பணத்தை செலுத்தவில்லை. இதற்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் உயர்நிதிமன்றத்துக்கு வந்த போது, நீதியரசர் சந்துரு, சுப்ரமணியன் என்பவரின் நோக்கத்தை நன்றாக புரிந்து கொண்டு, சுப்ரமணியன் ஒரு கார்ப்பரேட் ப்ரோக்கர், அவர் மஹாலட்சுமி மில்லின் முதலாளியோடு செய்து கொண்ட ஒப்பந்தமே சந்தேகத்திற்கிடமானது என்று பதிவு செய்து, வங்கிகள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கு நடுவே பஞ்சு சப்ளை செய்தவர் தொடுத்த வழக்கில், மஹாலட்சுமி டெக்ஸ்டைல்சின் சொத்து தொடர்ந்து 2000ம் ஆண்டு முதல் ஏலத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் ஒருவருமே ஏலத்தில் எடுக்கவில்லை. காரணம் நீதிமன்றம் நிர்ணயித்த தொகை மிக அதிகமாக இருந்ததே. 2000ம் ஆண்டில் 50 லட்சம் என்று நீதிமன்றம் குறைந்த பட்ச தொகையை நிர்ணயித்தது. இந்த தொகை அதிகம் என்பது மட்டுமல்ல, மஹாலட்சுமி மில் ஏகப்பட்ட சிக்கலில் இருக்கும்போது எதற்காக சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒருவரும் முன் வரவில்லை.
இந்த நிலையில் மஹாலட்சுமி மில்லுக்கு இருக்கும் சிக்கல்களைப் பற்றி எதுவும் தெரியாத சென்னையைச் சேர்ந்த பீட்டர் என்பவர், ஆகஸ்ட் 2008ல் மொத்த சொத்துக்களையும் ஏலம் எடுக்கிறார். இவர் ஏலம் எடுத்த தொகை 25 லட்சம். பீட்டர் ஏலம் எடுத்து விட்டார் என்ற விபரம் தெரிந்ததும் சுப்ரமணி ஆட்களை அனுப்பி மிரட்டுகிறார். மரியாதையாக நிலத்தை விட்டு விட்டு ஓடி விடு. இல்லையென்றால், உன்னை காலி செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். பீட்டரும் செல்வாக்கு உள்ள நபர் என்பதால், நிலத்தை விட முடியாது. ஆனதை பார்த்துக் கொள் என்று சொல்லி விடுகிறார்.
நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்து, நிலம் பீட்டர் கைக்கு வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகி விடுகிறது. 2010ல் நீதிமன்றமே, பீட்டர் பெயருக்கு நிலத்தை மாற்றி உத்தரவிடுகிறது.
பீட்டர் பெயருக்கு சொத்துக்களை மாற்றிய நீதிமன்ற உத்தரவு
இந்த உத்தரவுகளை பெற்றுக் கொண்டு, மஹாலட்சுமி மில்லுக்கு சென்று, நிலத்தை பார்வையிட சென்ற பீட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மஹாலட்சுமி மில் உள்ளே இருந்த நூற்பாலை இயந்திரங்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன. சுப்ரமண்யம், தொழிலாளிகளுக்கு தருவதற்கான பணம் என்று சில செக்குகளை கொடுத்து, அத்தனை தளவாடங்களையும் இரவோடு இரவாக விற்றிருக்கிறார் என்பது தெரிய வந்தது. செய்வதறியாத பீட்டர், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதற்கு எப்ஐஆர் பதிவு செய்யப் படுகிறது.
சுப்ரமண்யம் மீது பதியப் பட்ட எப்ஐஆர்
இந்த விவகாரமும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டு, நீதிமன்றம் இதை ஆய்வு செய்வதற்கு ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கிறது. அந்த ஆணையர் அனைத்து விபரங்களையும் ஆய்வு செய்து, சுப்ரமணியன் மஹாலட்சுமி மில்லின் அனைத்து தளவாடங்களையும் திருடி விற்று விட்டார் என்று அறிக்கை அளித்திருந்தார்.
வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை
2010ல் நிலம் மற்றும் மில் பீட்டர் கைக்கு வந்ததை அறிந்த சுப்ரமண்யம், ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை காத்திருந்து, பீட்டர் நீதிமன்ற ஊழியர்கள் உதவியோடு நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் ஒன்றை தயார் செய்கிறார். அந்த புகாரை மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க் விசாரிக்கிறார். விசாரணை செய்ததில், சுப்ரமண்யத்தின் தில்லு முல்லுகள் அம்பலமாகிறது. அம்பலமானதும், அந்தப் புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் படவில்லை.
ஆனால், தந்திரமான சுப்ரமணியம், மதுரை நடுவர் நீதிமன்றத்தை அணுகி, தன்னுடைய புகார் பதிவு செய்யப் படவில்லை என்று தொடுத்த வழக்கில் நீதிமன்றம் எப்ஐஆர் பதிவு செய்யும் படி உத்தரவிடுகிறது.
பீட்டர் மற்றும் நீதிமன்ற ஊயிர்கள் மேல் பதியப்பபட்ட எப்ஐஆர்
நீதிமன்றமே பீட்டர் பெயருக்கு நிலத்தை மாற்றி உத்தரவிட்ட ஒரு நிலத்தை அபகரிப்பு செய்து கொண்டதாக பீட்டர் பெயரில் எப்ஐஆர் பதிவு செய்யப் படுகிறது. பீட்டர் மட்டுமல்ல, அப்பாவிகளான நீதிமன்ற ஊழியர்கள் இளங்கோ, தம்பிதுரை ஆகியோர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப் படுகிறது. 55 வயதான தம்பிதுரை இந்த வழக்கு காரணமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
நில அபகரிப்பு என்ற பெயரில் பொய்யான புகாரை கொடுத்து, அதன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகியபோது எவ்வித ஆய்வும் செய்யாமல், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் அளித்த உத்தரவு, இரண்டு அப்பாவி நீதிமன்ற ஊழியர்களின் வாழ்வில் விளையாடியுள்ளது. எங்களக்கு கொடுக்கப் பட்ட பணியை செய்ததற்கு இந்த தண்டனையா என்று அங்கலாய்க்கின்றனர் அந்த ஊழியர்கள்.
தற்போது மீதம் இருக்கும் நிலத்தை பீட்டர் விற்று விடப் போகிறாரோ என்ற அச்சத்தில், சுப்ரமணியம் இது போன்ற போலிப் புகாரை கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கின்றனர் பீட்டர் தரப்பில். இதற்கு பின்னணியாக இவர்கள் சொல்லும் காரணம்… ….
மதுரையில் மஹாலட்சுமி மில் இருக்கும் இடத்திற்கு அருகில், அக்ரினி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய வீடுகள் 500க்கும் மேற்பட்டவை உள்ளன. அந்த வீடுகளின் மதிப்பு இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு வீடு 50 லட்சத்துக்கு விலை போகிறது. அந்த அக்ரினி ரியல் எஸ்டேட் சார்பாகவே சுப்ரமணியன் இத்தனை தில்லு முல்லுகளையும் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது. அக்ரினி பில்டர்ஸ் சார்பாக பேசுவதாக அறிமுகப் படுத்திக் கொண்ட ஒரு நபர், 98421 41115 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து, இளங்கோ என்ற நீதிமன்ற ஊழியரை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தெரிகிறது.
சம்பந்தப் பட்ட மஹாலட்சுமி மில் இருந்த இடம்
சரி மற்ற கடன் நிலுவைகள் என்ன ஆனது ? மஹாலட்சுமி மில்லுக்கு சொந்தமான கொடைக்கானல் சொத்தையும், மதுரை சின்னச்சொக்கிக் குளத்தில் உள்ள சொத்தையும், விற்று, வணிக வரித்துறை, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் மதுராவை வாங்கிய ஐசிஐசிஐ வங்கி, தொழிலாளர் நல ஆணையம் ஆகியவை எடுத்துக் கொண்டன. மதுரையில் உள்ள அந்த நிலத்தின் சில பகுதிகளையும் எடுத்துக் கொண்டன.
தொழிலாளிகளுக்கு வர வேண்டிய சம்பள பாக்கி ? தொழிலாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைத்தானே கவிஞர் ஜீவா பாடி விட்டுப் போனார்….. “காலுக்குச் செருப்புமில்லை, கால்வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்குழைத்தோமடா தோழா” என்று.