சவுக்கு : தலித் ஒருங்கிணைப்பு தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதை சாத்தியப் படுத்துமா, அல்லது தமிழ் தேசிய அரசியல் சாத்தியப் படுத்துமா ?
தமிழ்தேசிய அரசியல் என்பது தலித் வளையத்தை தாண்டியுள்ள ஜனநாயக சக்திகளையும் வென்றெடுப்பதற்கான அரசியலாகும். தலித்துகள் தலித்துகளுக்காக மட்டுமே குரல் கொடுத்தால், தலித்துகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுகிற போக்கு வலுவடைந்து விடும். ஏற்கனவே தலித்துகள் தனிமைப் பட்டுள்ளார்கள். இந்நிலையில் தலித்துகள், தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான போராட்டங்கள் என பரந்த அளவில் போராட்டங்களை நடத்தவில்லை என்றால் ஜனநாயக சக்திகளை அணி திரட்டவும் முடியாது; வென்றெடுக்கவும் முடியாது. அதாவது, தலித் அரசியலை புரிந்து அதனை ஏற்றுக் கொள்கிற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து முன் செல்ல வேண்டும். ஆகவேதான், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் தேசிய அரசியலையும், சாதி ஒழிப்பையும் இணையாக முன்னெடுத்துச் செல்கிறது.
சவுக்கு : புதிதாக தொடங்கிய கட்சிகள் தங்களின் வளர்ச்சியில் சந்திக்கும் பிரச்சினைகளை விட, உங்களைப் போன்ற தலித் கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைகள் சற்று அதிகமாகவே இருப்பதாக தோன்றுகிறது. தலித் கட்சிகள் வலுவான அரசியல் சக்தியாக காலூன்ற முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள் ?
திருமா : தலித் அடையாளமுள்ள கட்சிகள், தலித்துகளுக்காகவும் போராடுகிறது. பிற பிரச்சினைகளுக்காகவும் போராடுகிறது. மற்ற கட்சிகள் தலித் பிரச்சினைகளுக்காக போராட வேண்டியதில்லை என்று நினைக்கின்றன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தலித்துகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அது பிஜேபியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, திராவிடக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அதிலிருந்து உடைந்து சிதறி உருவான கட்சிகளாக இருந்தாலும் சரி, நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவாக இருந்தாலும் சரி. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், தலித் மக்களின் பிரச்சினைகளைப் பேசி சாதி இந்துக்களின் பகையை ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு என்ன நிலைமை என்றால், நாங்கள் பரமக்குடிக்காகவும் போராடுகிறோம், ஈழத் தமிழர்க ளுக்காகவும் போராடுகிறோம், முஸ்லீம்களுக்காகவும் போராடுகிறோம், கிறித்துவர்களுக்காகவும் போராடுகிறோம், மூவர் தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் போராடுகிறோம். இப்படி எல்லா களங்களிலும் நிற்கும் எமக்கு, கூடுதல் சுமை ஏற்படுகிறது.
மேலும், தலித் அல்லாதவர்கள் யார் கட்சி தொடங்கினாலும் அவர்கள் எங்கே எப்போது வேண்டுமானாலும் கிளை தொடங்க முடியும், சுதந்திரமாக சென்று பிரச்சாரம் செய்ய முடியும். எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் கருத்து சொல்ல முடியும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு சாதாரணமாக ஒரு ஊருக்குச் சென்று கொடியேற்றுவதே கூட யுத்தம் தான். பொதுப் பிரச்சினைகளை கையில் எடுத்தால் கூட அதுவும் பிரச்சினை தான். அண்மையில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நாங்கள் வத்தலகுண்டிலிருந்து கம்பம் வரை ஊர்திப் பயணம் மேற்கொண்டோம். கம்பத்தில் எங்கள் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு சாதியவாதிகள் கல்லால் அடித்தார்கள். அவர்களுக்காவும்தான் நாங்கள் முல்லைப் பெரியாறுக்காக போராடுகிறோம் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. நீ யார் இந்தப் பிரச்சினைக்காக குரல் கொடுக்க என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது. அதேபோல, அண்மையில் மன்னார்குடி அருகே, ஒரு தலித் பகுதியில் கொடியேற்றச் சென்றோம். கொடியேற்ற இருந்தது தலித் பகுதியாக இருந்தாலும், தலித் அல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு எங்கள் மீது கல்லெறிந்தனர். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்த போதும் அன்று எங்கள் மீது கல்லெறிந்தது திமுகவைச் சார்ந்த சாதியவாதிகள்தான்.
கடந்த 10,15 ஆண்டுகளில் பல கல்வீச்சு நிகழ்வுகள் நடந்துள்ளன. திட்டக்குடியில் கொடியேற்றச் சென்ற போது கல்லெறிந்ததோடு மட்டுமல்லாமல் இரண்டுபேரை படுகொலையும் செய்து விட்டனர். சேத்தியாத்தோப்பு, வந்தவாசி, உசிலம்பட்டி, கம்பம் போன்ற பல பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சென்றபோதெல்லாம் கல்வீச்சு நடந்திருக்கிறது. மற்றும் அண்மையில் திருச்செந்தூர் அருகே முத்துக்குமார் சிலை திறக்கச் சென்ற போதும் இது போன்ற வன்முறைகளில் சாதியவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நெருக்கடி, தமிழகத்தில் தலித் அல்லாத தலைவர்கள் யாருக்கும் கிடையாது. ஆனால், தலித் தலைவராக இருப்பதனால் இந்தச் சிக்கல்களை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கிறது. அரசியல் ரீதியான வேறுபாடுகள் மற்ற கட்சிகளுக்கிடையே இருந்தாலும், இது போன்ற அடிப்படையான சிக்கல்களை அவர்கள் சந்திப்பதில்லை. எல்லா கட்சிக் கொடிகளும் ஒரு இடத்தில் இருந்தாலும், தலித்துகளின் கட்சிக் கொடியை அதே இடத்தில் ஏற்றுவதற்கு சில நேரங்களில் பெரிய யுத்தமே நடத்த வேண்டியிருக்கிறது. பல இடங்களில், விடுதலைச் சிறுத்தைகள் கொடி ஏற்றக் கூடாது என்பதற்காக, தங்கள் கட்சிக் கொடிகளைக் கூட அகற்றும் அளவுக்கு சாதி வெறி பரவிக் கிடக்கிறது. இது போன்ற சாதியச் சிக்கல்களையெல்லாம் எதிர் கொண்டுதான் நாங்கள் எல்லா தரப்பினருக்குமான போராட்டங்களையும் நடத்த வேண்டியிருக்கிறது.
சவுக்கு : பொதுமக்கள் மத்தியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரில் பலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் ஈடுபடுகிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றாலே அது கட்டப்பஞ்சாயத்து கட்சி என்பதான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
திருமா : இது முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன் கூடிய எங்களுக்கு எதிரான பிரச்சாரமாகும். தங்களுக்கிடையில் ஏற்படும் சின்னச் சின்ன சிக்கல்களை தீர்த்து வைக்கும் பொருட்டு பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்களை அணுகுவது இயல்பு. இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். வீட்டு வாடகை பிரச்சினை, கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத பிரச்சினை. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறோம் என்று ஏமாற்றும் பிரச்சினை இவை போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்காக காவல்துறையையும், பிற அதிகாரிகளையும் அணுகும் மக்கள், அங்கு தீர்வு கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் காரணத்தாலேயே அரசியல் கட்சியினரிடத்தில் புகார் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தங்களின் குறைகளை எடுத்து வரும் மக்களுக்குத் துணையாக செயல்படவேண்டியுள்ளது. இப்படி பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனாலேயே இதை கட்டப்பஞ்சாயத்து என்று சொல்லுகின்றனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்டப் பஞ்சாயத்துப்பேசி இத்தனை லட்சம் கொடு; இத்தனை கோடி கொடு என்று மிரட்டியதாக எங்காவது புகார் உண்டா ? குற்றச் சாட்டு உண்டா ? இதற்கான சான்று உண்டா ? கிடையவே கிடையாது! இவையெல்லாம் ஆதாரமில்லாத அவதூறுகள்!
நாங்கள் நன்கொடை கேட்கப் போனால் கூட அதிக பட்சம் 5 ஆயிரத்திற்கு மேல் கொடுத்ததில்லை. ஆனால் பெரிய அரசியல் கட்சிகள் ஒரு தொலைபேசி மூலமே பல கோடிகளை எளிதாக வசூல் செய்து விட முடிகிறது. நாங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நன்கொடை கேட்டு துண்டறிக்கை கொடுத்தாலே, விடுதலை சிறுத்தைகள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்று அவதூறு பரப்புகிறார்கள். இதை நான் வன்மையாக மறுக்கிறேன்.
சவுக்கு : சென்னையில் 25 வயது இளைஞர் திருநாவுக்கரசை சுட்டுக் கொன்று, காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு தற்போது இலங்கையில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவோடு விருந்துண்டதை உலகத் தமிழர்கள் ரசிக்கவில்லை. இதற்கு என்ன கூறுகிறீர்கள்.
திருமா : (கோபத்துடன்) இது முட்டாள் தனமான கேள்வி மட்டுமல்ல. விஷமத்தனமான கேள்வியும் கூட. இந்த அவதூறுகளை திட்டமிட்டே சிலர் பரப்புகின்றனர். டக்ளஸ் தேவானந்தோவோடு அப்படி யாருமே விருந்து சாப்பிடவில்லை. நாங்கள் அங்கே தங்கியிருந்த 3 நாட்களும், எங்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்தது அமைச்சர் ஆறுமுகத் தொண்டைமான் தான். அவர் மலையகத்தமிழர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு கட்சியின் தலைவர்.
நாங்கள் வன்னியில் முள்வேலி முகாமை பார்வையிட்ட பின்னர், ”நமக்கு யாழ்பாணத்தில் தான் மதிய உணவு. அங்கே டக்ளஸ் தேவானந்தா உணவு ஏற்பாடு செய்துள்ளார்” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார். நான் உடனே எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு அங்கே இருந்த அத்தனை பேரும் சாட்சி. டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்திருக்கும் உணவு நமக்கு தேவையில்லை. நாம் கொழும்பு திரும்பியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன். அதற்கு டி.ஆர்.பாலுவும் உடனே ஒப்புக்கொண்டார்.
நாங்கள் யாழ்ப்பாணம் சென்று இறங்கியதும் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்களும் எங்களை வரவேற்றனர். தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் வரவேற்க காத்திருந்த மக்களைச் சந்தித்தோம். அங்கிருந்து யாழ் நூலகம் சென்றோம். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, மேடையில் டி.ஆர்.பாலுவின் வலது பக்கத்தில் கனிமொழியும், கனிமொழியின் வலது பக்கத்தில் நானும் அமர்ந்தோம். டி.ஆர்.பாலுவுக்கு இடது பக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அமர்ந்திருந்தார். அப்போது நான் அவரை பார்க்கக் கூட இல்லை. சிறிது நேரத்திற்கு பின் டி.ஆர்.பாலு ஒரு அறிவிப்பு செய்வதற்காக எழுந்து ஓரமாக இருந்த ஒலி பெருக்கியின் முன்பு சென்று விட்டார். உடனே, டி.ஆர்.பாலு அமர்ந்திருந்த நாற்காலியில் டக்ளஸ் தேவானந்தா வந்து அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் கனிமொழியும் எழுந்து ஒலி பெருக்கியின் அருகே போனதும் அவர் அமர்ந்திருந்த இடத்தில் டக்ளஸ் தள்ளி வந்து அமர்ந்து கொண்டார். அப்படித்தான் அவர் என் அருகில் வந்து அமர நேர்ந்தது. என் அருகே உட்கார்ந்ததும் என்னிடம் அவர் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால் “என் மேல் உங்களுக்கு வருத்தம் இருக்கலாம், கோபம் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் தீவிர புலி ஆதரவாளர்.” என்பதே. அதற்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. மேலும், “இன்று மாலை நான் கொழும்பு வந்தால் உங்களை சந்திக்க முடியுமா ?” என்றும் கேட்டார். நான் கொழும்பில் என்ன நிகழ்ச்சிகள் உள்ளன என்பது எனக்கு தெரியாது; நீங்கள் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்கள் என்று சொன்னேன் பிறகு அவர் அவருடைய இடத்துக்கு சென்று விட்டார். டி.ஆர்.பாலுவும் கனிமொழியும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டார்கள். இதுதான் நடந்தது. தேவானந்தாவோடு நாங்கள் தேநீரும் குடிக்கவில்லை, உணவும் உண்ணவில்லை. ஆனால் இந்த உண்மை தெரிந்திருந்தும் சில விஷமிகள், வேண்டுமென்றே, அவதூறு பரப்புகிறார்கள்.
சவுக்கு : இது போன்ற பிரச்சாரங்களை உங்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடுவதில் இலங்கைத் தூதரகத்தின் பங்கு இருப்பதாக நினைக்கிறீர்களா ?
திருமா : (கோபத்துடன்) தமிழ்நாட்டில் உள்ள தமிழனே இந்த அவதூறான பிரச்சாரத்தை செய்யும் போது, நம் எதிரிகளைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும் ? தமிழ் ஈழத்தைப் பற்றி பேசும் தமிழ்நாட்டு தமிழர்கள் இந்த பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே பரப்புகிறார்கள். ஈழத் தமிழருக்காக நான் குரல் கொடுப்பதை விரும்பாத கும்பல் தான் இதைப் பேசுகிறது.
தொடரும்