தற்போது இந்த விவகாரம் மீண்டும் விவாதத்துக்கு வந்திருக்கும் காரணம் எச்எஸ்பிசி வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் கணக்கு வைத்திருக்கும் 782 நபர்களின் பட்டியலை ப்ரான்சு நாட்டு அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்தப் பட்டியல் கடந்த ஆண்டே ஒப்படைக்கப் பட்டாலும், இதன் மீதான விசாரணை இந்த ஆண்டு ஜுலை மாதத்தில் தான் தொடங்கியது. ஜுலை மாதத்தில் தொடங்கிய விசாரணை தொடர்பாக 3 எம்பிக்கள் வருமான வரித்துறையால் சம்மன் செய்யப் பட்டிருக்கிறார்கள் என்ற காரணமே தற்போதைய விவாதத்தை தொடங்கியிருக்கிறது.
இது வரை நடந்த விசாரணையில் 397 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கு 30 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வரி செலுத்தாமல், கருப்புப் பணத்தை பதுக்கி வைப்பவர்கள் பெயரை வெளியிட முடியாது என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் தேசிய வங்கிகளில் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் தவறுபவர்கள் பெயர், விலாசம் மற்றும் புகைப்படத்தோடு வெளியிடுவதை பார்த்திருப்பீர்கள். அந்தக் கடன்கள் எல்லாம் அதிகபட்சம் ஒரு கோடிக்கு கீழே இருக்கும். அதிலேயும் பாரபட்சம் என்னவென்றால், பல கோடிகளை கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தத் தவறுபவர்கள் பெயரை இது போல வெளியிடுவதில்லை. ஒரு முறை 40 ஆயிரம் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தத் தவறிய அரசு ஊழியர் பெயரை வெளியிட்ட சம்பவங்களெல்லாம் நடந்திருக்கிறது.
ஆனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்பவர்களின் பெயர்களைக் கூட வெளியிடமாட்டார்களாம்.
2009ல் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சுவிட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் என்ற வங்கியில் அமெரிக்கர்கள் ஏராளமானோர் ரகசியக் கணக்கு வைத்திருக்கும் தகவல் வெளியாகிறது. இதையடுத்து அமெரிக்காவின் வருமான வரித் துறையான ஐஆர்எஸ் என்ற அமைப்பு யுபிஎஸ் என்ற வங்கியிடம், சுவிட்சர்லாந்தில் ரகசியக் கணக்கு வைத்திருப்போரின் விபரங்களை கேட்கிறது. அந்த வங்கி தர மறுக்கிறது.
உடனடியாக அமெரிக்கா, அந்த வங்கியின் அமெரிக்க கிளைகளை மூடுவோம் என்று பயமுறுத்துகிறது. இதையடுத்து அந்த வங்கி, ரகசிய கணக்கு வைத்திருக்கும் அத்தனை பேரின் விபரங்களை வெளியிட்டதோடு, 780 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தியது.
அமெரிக்கர்களை வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக யுபிஎஸ் வங்கியில் பணியாற்றிய இருவருக்கு சிறைத் தண்டனையும் கிடைத்தது.
கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலை வெளியிட மறுப்பதற்கு இந்தியா சொல்லும் காரணம், இரண்டு முறை வரி செலுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தை இந்தியா 77 நாடுகளோடு போட்டிருக்கிறது என்றும், அதனால் அந்த நாடுகளிடமிருந்து, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை பெற முடியாது என்றும் கூறுகிறது.
அதாவது, ஊரை அடித்து உலையில் போட்டு, கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை ஹவாலா வழியாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று பதுக்குபவர்களுக்கு வரி கிடையாதாம். ஆனால், ஒரு வாரம் மின் கட்டணம் செலுத்தவில்லை யென்றால் ப்யூசை பிடுங்கி விட்டு போவார்களாம். எப்படி இருக்கிறது ஜனநாயகம் ?
கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதில், திரைப்படத் துறையினர், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக ஈடுபடுகிறார்கள்.
இந்திய அரசியலில் அதிகாரம் செலுத்துவதில் இவர்கள் அத்தனை பேருக்கும் இருக்கும் கணிசமான பங்கினால், இவர்களால் நினைத்தது அத்தனையும் சாதிக்க முடிகிறது. ஜெயிக்க முடிகிறது.
ஆனால் இத்தனை ஆண்டுகாலம் கருப்புப் பணத்தைப் பற்றி பேச மறுத்த அரசாங்கம், இன்று வேறு வழியின்றி கருப்புப் பணத்தை பதுக்குபவர்களைப் பற்றி, குறைந்த பட்சம் விசாரணையையாவது தொடங்கியிருக்கிறதே என்பதே மகிழ்ச்சிதான். பதுக்கியவர்களின் பட்டியல், இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் வெளி வரும்.
இது போல அரசாங்கங்கள் வேறு வழியின்றி செயல்படுவதற்கான காரணம், விக்கிலீக்ஸ் போன்ற இணைய தளங்கள் தான். அரசாங்கங்களின், கள்ளப் பணத்தை பதுக்கும் பேர்விழிகளின் ரகசியங்களை அம்பலப்படுத்துவதில் விக்கிலீக்ஸ் போன்ற இணைய தளங்கள் முன்னணியில் இருப்பதால், பல அரசாங்கங்கள் வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்திற்கு ஆட்படுத்தப் படுகின்றன.
இது போன்ற நெருக்கடிகளை இந்திய அரசாங்கத்தின் மீது தொடர்ந்து ஊடகங்கள் செலுத்தினால் மட்டுமே, ஆமையை விட மோசமான இந்திய அரசை நகர்த்த முடியும்.