ஜெயலலிதாவுக்கு வரலாறு காணாத வெற்றியை 2011 தேர்தலில் மக்கள் அளித்தார்கள். எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் கூட இத்தனை பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. அந்த வெற்றிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அணுகு முறையில் மாற்றம் தெரிந்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்த தெரிவித்தனர். அவர்கள் கருத்தில் ஓரளவுக்கு உண்மை இருந்தது என்று கருதும் அளவுக்கே இந்த ஆட்சி நடந்து வந்தது. சமச்சீர் கல்விமுறையை அமல்படுத்த மாட்டேன் என்று காட்டிய வறட்டுப் பிடிவாதம், தலித் மக்கள் மீதான பரமக்குடி வன்முறையை கையாண்ட விதம், ஆறு பேர் இறந்த பிறகும் அதை நியாயப் படுத்திய விதம் என்பது போன்ற குறைகளைத் தவிர, பெரிய அளவில் குற்றம் சுமத்தக் கூடிய அளவுக்கு குறைகள் காணப்படவில்லை.
திமுகவினர் மீது போடப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளையெல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு என்று திமுகவினர் வர்ணித்ததை மக்கள் ஏற்கவில்லை என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டின. திமுக பெருந்தலைகளான கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி போன்றவர்கள் கைது செய்யப் பட்டது, அவர்கள் சொந்த மாவட்டத்தில் கூட அனுதாப அலையை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. அழகிரி குடியிருக்கும் சத்ய சாய் நகரில் நடந்த வார்டு தேர்தலில், திமுக மூன்றாவது இடத்திற்கு போனதே இதற்கு சாட்சி.
அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் ஒதுக்கித் தள்ளி உதாசீனப் படுத்தி, சொந்த பலத்தில் அசுர வெற்றியைப் பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு, இந்த வெற்றி நிதானத்தையும், பக்குவத்தையும் தந்திருக்க வேண்டும். மக்களின் இந்த ஒட்டுமொத்த நம்பிக்கைக்கு ஏற்றார்ப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இது போன்ற எந்த நற்குணங்களும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை.
சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றிகள், ஜெயலலிதாவின் பழைய முகத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது. தமிழக அரசின் இன்றைய அறிவிப்பை பார்த்தால் இதுதான் தோன்றுகிறது. கருணாநிதி அரசால் கட்டப் பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை, குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2011-2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சென்னை டி.பி.ஐ. (Directorate of Public Instruction) வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான முடிவுகள் 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், இங்குபேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் ஆகியவை இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமையப்பெறும்.
ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமையவிருக்கும் டி.பி.ஐ. வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்திற்கு மிக அருகில் உள்ளதால் நவீன மைய நூலகத்தினை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
எனவே, சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அண்ணா நூற்றாண்டு நூலகம் டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பின், தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும். குழந்தைகளுக்கான இதுபோன்ற அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இதுவரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் நலனுக்கென இது போன்ற உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.“
வடிவேலு வின்னர் படத்தில் சொல்வது போல, “ஓபனிங் நல்லாத்தான் இருந்துச்சு. பினிஷிங் சரியில்லையே” என்பது போலத்தான் உள்ளது இந்த நடவடிக்கை.
கருணாநிதி அரசு செய்த ஒரு சில நல்ல காரியங்களில் இந்த நூலகம் கட்டியது ஒன்று. இந்த நூலகத்தின் சிறப்பு உலகத் தரம் வாய்ந்த அளவில் கட்டப் பட்டது மட்டுமல்லாமல், பல அரிய வகை நூல்களை ஒரே இடத்தில் பார்க்க முடியும் வசதியோடு இருப்பதுதான்.
இந்நூலகத்தின் தரைத் தளத்தில் பார்வையற்றோருக்காக 25 ஆயிரம் ப்ரெயிலி புத்தகங்களும், பேசும் புத்தகங்களும் வைக்கப் பட்டுள்ளன.
முதல் தளத்தில், குழந்தைகளுக்கான நூல்களும், கம்ப்யூட்டர் கேம்களும் வைக்கப் பட்டுள்ளன. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள். மூன்றாவது தளத்தில் புதினமல்லாத ஆங்கிலப் புத்தகங்கள். நான்காவது தளத்தில் பொருளாதாரம், சட்டம், கல்வி, இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் உள்ளன. ஐந்தாவது தளத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான புத்தகங்களும், மருத்துவம் தொடர்பான புத்தகங்களும் உள்ளன. ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், கால்நடை அறிவியல், மேலாண்மை, வேதிப்பொறியியல், கலை, வரலாறு, புவியியல், கவின்கலை, போன்ற புத்தகங்கள் உள்ளன.
ஏழாவது தளத்தில் அரிய வகை நூல்களும், ஓலைச் சுவடிகளும் வைக்கப் பட்டுள்ளன. இது போன்ற அறிவுக் கருவூலத்தை எங்காவது பார்க்க முடியுமா ? இந்த நூலகம் இருப்பதால் யாருக்காவது இடைஞ்சல் இருக்கிறது என்று சொல்ல முடியுமா ?
குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை என்பது அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு கட்ட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆட்சி வரவேற்கத் தக்கதே. அதற்காக கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா ?
குழந்தைகள் மருத்துவமனை கட்டுவதற்கு சென்னையில் அப்படி என்ன இடப்பற்றாக்குறை வந்து விட்டது ? கருணாநிதி கட்டிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தாரே…. அந்தக் கட்டிடத்தையே குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றினால்தான் என்ன ?
மந்திரிகள் குடியிருப்பதற்காக சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் பல பங்களாக்கள் உள்ளனவே…. அந்த பங்களாக்களை இடித்து விட்டு, மந்திரிமார்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டிக் கொடுத்து விட்டு, அந்த இடத்தில் குழந்தைகள் மருத்துவமனை கட்டினால் என்ன ?
வீட்டு வசதித் துறையில் நடந்த ஊழல்கள் குறித்து சவுக்கு தளத்தில் விரிவாகவே எழுதப் பட்டிருக்கிறது. முறைகேடாக வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றுள்ள, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் என்று பல்வேறு தரப்பினர் சென்னை நகர் முழுக்க வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றுள்ளார்களே…..
சென்னை நெற்குன்றத்தில் உயர் உயர் அதிகாரிகள், அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கென்று, அடுக்கு மாடி வீடு ஒதுக்கும் திட்டத்தை கருணை வள்ளல் கருணாநிதி உருவாக்கினார். இதில் அயோக்கியத்தனம் என்னவென்றால், வருவாய் குறைந்த பிரிவினருக்கு நிர்ணயிக்கப் பட்ட விலையை விட, சதுர அடியின் விலை, இந்த உயர் உயர் அதிகாரிகளுக்கு குறைவு.
இந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டம், 17 ஏக்கர் நிலப்பரப்பில் உயர் உயர் அதிகாரிகளுக்காக கட்டப் படுகிறது. உயர் உயர் அதிகாரிகளுக்கான வீடு ஒரு சதுர அடி ரூபாய் 2442க்கும், சாதாரண அரசு ஊழியர்களுக்கான வீடு ஒரு சதுர அடி 2892 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்தது தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம்.
இதில் சிறப்பு என்னவென்றால், இந்த வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்றுள்ள 85 சதவிகித அதிகாரிகள் சொந்த வீடோ, அடுக்கு மாடியோ வைத்திருப்பவர்கள். இதுவும் தவிர, அரசுப் பணியில் இருக்கும் இந்த உயர் அதிகாரிகளுக்காக சென்னை நகரின் பல இடங்களில் வசதி வாய்ந்த அடுக்கு மாடி வீடு குடியிருப்புகளை அரசு கட்டியுள்ளது. தற்போது அதில்தான் இந்த அதிகாரிகள் குடியிருக்கிறார்கள். இந்த ஏழைப் பாழைகளுக்கு வீட்டு மனை கட்டுவதற்கு பதில், இந்த 17 ஏக்கர் நிலத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மருத்தவமனையைக் கட்டலாமே….. ?
ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சிகளையும், நடவடிக்கைகளையும் மக்கள் துளியும் மறக்கவில்லை. வளர்ப்பு மகன் திருமணம், தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மீது தாக்குதல், ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ப.சிதம்பரம் மீது தாக்குதல், வழக்கறிஞர் சண்முக சுந்தரத்துக்கு அரிவாள் வெட்டு, வழக்கறிஞர் விஜயனுக்கு அரிவாள் வெட்டு, டான்சி நிலத்தை சொந்தமாக வாங்கிக் கொண்டது, 2001 ஆட்சியில் கண்ணகி சிலை இடிப்பு, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல், ஒரு லட்சம் அரசு ஊழியரை வீட்டுக்கு அனுப்பியது, தலைமைச் செயலகம் கட்டுகிறேன் பேர்விழி என்று ராணி மேரிக் கல்லூரியை இடிக்க முனைந்தது என்று எந்த அராஜகங்களையும் மக்கள் மறக்கவில்லை.
இதையெல்லாம் மீறி 2011ல் மீண்டும் ஜெயலலிதாவுக்கு மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கினார்கள் என்றால், அது ஜெயலலிதா மீதான பாசம் அல்ல. கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சி அகல வேண்டுமே என்ற அச்சமே…
அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்ற உத்தரவிட்டிருப்பதன் நோக்கம், அது கருணாநிதி கட்டியது என்ற ஒரே நோக்கம் தானே தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது.
இதே ரீதியில் ஜெயலலிதா அவசியமில்லாத கட்டிடமாக ஜெயலலிதா கருதும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தையும் மாற்றுவதற்கு முனையக் கூடும். அப்படி மாற்றும் பட்சத்தில், அதை “உலகத் தரம் வாய்ந்த கால்நடை மருத்துவமனையாக” மாற்றலாம். அப்படி மாற்றினால் ஜெயலலிதாவுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்காமல், பூம் பூம் மாடுகள் போல தலையாட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு, அந்த மருத்தவமனையில் சிகிச்சை அளிக்கலாம்.
ஜெயலலிதாவுக்கு சவுக்கு ஒன்றே ஒன்றைத்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
இந்தக் குறளை ஜெயலலிதா மறந்திருக்க முடியாது. 1991-1996 ஜெயலலிதா ஆட்சியின் போது, விதிமுறைகளை மீறி கொடைக்கானலில் ஐந்து மாடி ஹோட்டல் கட்ட அனுமதி அளிப்பதற்காகவே, சட்டசபையில் சிறப்புச் சட்டத்தை ஜெயலலிதா இயற்றிய போது, அந்தச் சட்டத்தை ரத்து செய்த, ஜெயலலிதாவுக்கு நீதியரசர் சீனிவாசன் சொல்லியது. இந்தக் குறளை மட்டும் நீக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அரசு, உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியபோதும், உச்ச நீதிமன்றம் நீக்க மறுத்து விட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
1991 ஜெயலலிதா ஆட்சியையும், 2001 ஜெயலலிதா ஆட்சியையும் ஒப்பிடும் போது, ஜெயலலிதா மாறினால்தானே ஆச்சர்யம்.
இப்பவே கண்ணக் கட்டுதே…….. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ…….